அடுத்த குடியிருப்பிலிருந்து அவர் வருவதற்குள் தன்னுடைய வரவேற்பறையையாவது சீர்செய்யலாம் என்ற நினைப்புடன் ரவி முகத்தை அலம்பிக்கொண்டு வேகமாக செயல்பட்டான்.
ஆனால் அவனுடைய துரதிர்ஷ்டம் பாதி வேலையிலேயே வாசலில் அழைப்பு மணி ஓசை கேட்க, ‘கமிங்’ என்று உரத்தல் குரலில் பதிலளித்துவிட்டு சோபாவில் கிடந்த பழைய துணிமனிகளை அப்படியே கையில் அள்ளிக்கொண்டுபோய் கட்டிலில் வீசியெறிந்துவிட்டு படுக்கையறைக் கதவை ஓங்கி அடைத்துவிட்டு ஓடிச் சென்று வாசற்கதவைத் திறந்தான்.
‘வாங்க சார்..’ என்றான் வாசலில் நின்றிருந்தவரிடம். பெயர் தெரியாததால் சார் என்பதோடு நிறுத்திக்கொண்டான். பெயரை எப்படி கேட்பது.. சரி பேச்சு வாக்கில் கேட்டுக்கொள்ளலாம் என்று நினைத்தான்.
‘என்ன சார்.. வீட்ல நீங்க மட்டும்தான் போலருக்கு? பேச்சலர் ரூம் மாதிரி இருக்கு வீடு.. ஊம்.. பரவால்லை. நா வரேன்னதும் ஒங்களால முடிஞ்ச அளவுக்கு சரிபண்ண முயற்சி செஞ்சிருக்கீங்க.. குட்.. நானும் ஒரு காலத்துல அப்படித்தான் இருந்தேன்..’ என்றவாறு சோபாவில் சென்று அமர்ந்தவர் தன் எதிரே நிற்கும் ரவியிடம், ‘அட ஒக்காருங்க சார். ஒக்காந்து சுருக்கமா என்ன கேக்கணுமோ கேளுங்க.. மிஞ்சிப்போனா ஒரு அரை மணி நேரம்.. மாமி எழுந்துக்கறதுக்குள்ள போயிரணும். இல்லன்னா இன்னைக்கி முழுசும் பேசியே கொன்னுருவா . என்ன பண்ண சொல்றேள்.. கோர்ட்ல அட்வகேட் நாராயணசாமின்னா பயப்படுவா.. பேசியே ஜட்ஜ கவுத்துருவாறேம்பா.. ஆனா வீட்ல பொம்மனாட்டிங்க நம்மள கொல்றதவிடவா?’ என்று உரக்கச் சிரித்தார்.
அப்பாடா. ஒருவழியா இவரோட பேர தெரிஞ்சிக்கிட்டாச்சு என்று நினைத்தான் ரவி. ஆனா மனுஷன் நம்மள பேச விடமாட்டார் போலருக்கே என்றும் நினைத்தான்.
‘சொல்லுங்கோ.. என்ன விஷயம்.. பார்த்தாக்கா ரொம்ப டல்லாருக்கறா மாதிரியிருக்கேள்.. எதுவானாலும் சொல்லுங்கோ.. என்னால என்ன முடியுமோ செய்யறேன்.’
ரவி தன் ஸ்டடி மேசையிலிருந்த கோப்பைக் கொண்டு வந்து அவரிடம் கொடுத்தான்.
அடுத்த ஐந்து நிமிடம் நாராயணசாமி கோப்பை படிப்பதில் ஆழ்ந்துபோக ரவி சமையலறைக்குள் நுழைந்து இரண்டு கோப்பை தேநீர் தயாரித்து கொண்டு வந்தான்.
கோப்பைப் படித்துவிட்டு மூடிய நாராயணசாமி ஒரு நீண்ட பெருமூச்சுடன் அவனைப் பார்த்தார். ‘இம்புட்டு நடந்து முடிஞ்சிருக்கு... சரி அதிருக்கட்டும்.. ஒங்களுக்கும் ஒங்க ஒய்ஃப் மஞ்சுவுக்கும் இடையில ஏதாச்சும் பிரச்சினை இருக்கா மிஸ்டர் ரவி?’
ரவி என்ன சொல்வதென தெரியாமல் அமர்ந்திருந்தான்.
‘என் ஒய்ஃப் சொல்லித்தான் நேக்கே தெரியும். சரி.. அத அப்புறம் பார்த்துக்கலாம். இப்ப சொல்லுங்கோ.. இதுல நான் என்ன பண்ணனும் நீங்க நினைக்கறேள்?’
‘எங்க பேங்க்ல என்க்வயரி ஆர்டர் பண்ணியிருக்காங்க. மொதல்ல அதுல நான் இன்னசொண்ட்டுன்னு ப்ரூவ் பண்ணனும்..’
‘சரி. உங்க நோக்கம் புரியுது. மேலே சொல்லுங்கோ.’
ரவி சோபாவில் கிடந்த கோப்பை எடுத்து பிரித்தான். ‘இந்த என்க்வயரி ஆர்டர்ல லிஸ்ட் பண்ணிருக்கற எல்லா மேனேஜ்மெண்ட் எக்சிபிட்சோட காப்பீசும் எனக்கு கிடைக்கணும்.. அதுக்குத்தான் ஒங்க உதவி வேணும்..’
நாராயணசாமி வியப்புடன் அவனைப் பார்த்தார். ‘என்ன மிஸ்டர் ரவி.. நீங்க இன்னமும் உங்க பேங்கோட ஆஃபீசர்தானே.. நீங்களே உங்க என்க்வயரி ஆஃபீசருக்கு பெட்டிஷன் பண்ண வேண்டியதுதானே.. இதுல வெளியாள் எதுக்கு?’
ரவி அவரைப் பார்த்தான். ‘அதுக்கில்ல சார். என்னால கேக்க முடியும். ஆனா நா என்க்வயரிக்கு ரெண்டு நாளைக்கு முன்னாலதான் அந்த பிராஞ்சுக்குள்ளவே போமுடியும். அதுவுமில்லாம என்ன என்க்வயரில என்னெ டிஃபெண்ட் பண்ண ஒருத்தர் வேணும்.. அது ஒரு லாயரா இருந்தா நல்லதுன்னு நா நினைக்கிறேன். அதான் உங்கள கன்சல்ட் பண்ணலாம்னு...’
நாராயணசாமி பதில் பேசாமல் அவனையே சிறிது நேரம் பார்த்தார்..
‘அப்படியா? I see..’ என்றவாறு எழுந்து நின்றவரை அதிர்ச்சியுடன் பார்த்தான் ரவி..
‘என்ன சார்.. ஏதானும் பிரச்சினையா?’
நாராயணசாமி அவனை மீண்டும் உன்னிப்பாக பார்த்தார். ‘மிஸ்டர் ரவி.. உங்க பேங்க்ல அப்படியொரு சிஸ்டம் இருக்கா? Can a lawyer like me defend you in your domestic enquiry?’
ரவி ஆமாம் என்பதுபோல் தலையை அசைத்தான். ‘இருக்கு சார். நானே ரெண்டு மூனு என்க்வயரீசை நடத்தியிருக்கேன். மேனேஜ்மெண்ட் சைடுலருந்து எங்க பேங்க்லருக்கற லா ஆஃபீசர்ஸ்தான் ஆர்க்யூ பண்ணுவாங்க.. அதனால the Bank would allow the charge sheeted officers to hire a lawyer to defend them..’
நாராயணசாமி சரியென்பதுபோல் தலையை அசைத்தார். ‘அப்படீன்னா சரி.. இந்த ஃபைல நா எடுத்துக்கிட்டு போறேன். நீங்க ஒன்னு பண்ணுங்கோ.. நேரா போயி உங்க தலைமுடிய வெட்டிட்டு க்ளீனா ஷேவ் பண்ணிட்டு மறுபடியும் பழைய ஹேண்ட்சம் ரவியா வாங்கோ.. ஒரு பதினோரு மணிக்கு நம்ம ஃப்ளாட்ல மீட் பண்ணலாம்.’
ரவிக்கு சட்டென்று கோபம் வந்தது. இவன் யார் நம்மள ஆர்டர் பண்ண என்று நினைத்தான்.
நாராயணசாமி அவனுடைய உள் மனதை அறிந்தவர்போல் புன்னகை செய்தார். பிறகு, முகத்தை சீரியசாக வைத்துக்கொண்டு பேசினார்.
‘இங்க பாருங்க மிஸ்டர் ரவி. உங்களுக்கு இப்ப நடந்திருக்கறத மாதிரி பல பிரச்சினைகளை நாங்க டெய்லி சந்திச்சிக்கிட்டிருக்கோம். அதுக்காகத்தான் நீங்க இந்த கோலத்துல இருக்கீங்கன்னா.. I won’t accept that. இந்த மாதிரி பிரச்சினைகளை எதிர்த்து போராடணும்னா மனசுல மொதல்ல நம்பிக்கை வேணும். அத வெளியில மத்தவங்களுக்கு தெரியறாமாதிரி காமிக்கவும் வேணும். நம்ம தோல்விய மத்தவங்கக்கிட்ட நாமளே காமிச்சிக்கக்கூடாது. எம்மடியில கனமிருந்தாத்தான நா பயப்படணும்? நா சுத்தமாத்தான் இருக்கேன். ஒன்னால என்ன ஒன்னும் பண்ணிர முடியாதுரான்னு எதுத்து நிக்கணும்.. அதுக்கு நீங்க இப்ப இருக்கற கோலத்த மாத்தணும்.. அதனாலத்தான் சொல்றேன்..’
ரவிக்கு தான் அவசரப்பட்டுவிட்டோமே என்று தோன்றியது. அவர் கூறியதிலிருந்த நியாயத்தைப் பார்க்காமல் மீண்டும் பழையபடியே சிந்திக்க ஆரம்பித்துவிட்டோமே..
‘சாரி சார். நீங்க சொல்றது சரிதான்.’
நாராயணசாமி திருப்தியுடன் புன்னகைத்தார். ‘குட்.. இத நீங்க புரிஞ்சிக்கிட்டாலே பாதி பிரச்சினை சால்வானா மாதிரிதான். எங்க வீட்டு மாமி ஞாயித்துக்கிழமையானா அவ அம்மா வீட்டுக்கு போயிருவா.. பத்து பத்தரைக்கு போனா திரும்பிவர சாயந்திரம் ஆயிரும். அவ இல்லன்னாத்தான் நம்மால நிம்மதியா டிஸ்கஸ் பண்ண முடியும். நீங்க பதினோரு மணிக்கு வந்துருங்க.. ஒரு ஒன்னவர்ல முடிச்சிரலாம். புறப்படறதுக்கு முன்னால ஃபோன்ல ஒரு டிங்க்கிள் குடுங்க.. நா வரேன்.’ என்றவாறு புறப்பட்டவரை வாசல்வரை சென்று வழியனுப்பிவிட்டு குளியல¨றையை நோக்கி நடந்தான்.
*****
‘நல்ல ஐடியா சந்தோஷ். நான் உடனே எங்க பேங்க் டிராவல் ஏஜண்டுக்கு ஃபோன் பண்றேன். நமக்கு எப்படியும் இன்னைக்கி ஒரு ரெண்டு மூனு கார், வேன்லாம் வேணும். நல்ல வேளை ஞாபகப்படுத்தினே. நீ போய் தாத்தாவுக்கு ரெண்டு நாளைக்கு வேண்டிய வேட்டி, சட்டைன்னு எல்லாத்தையும் எடுத்து ஒரு சின்ன பேக்ல வை.. நான் டாக்சிய கூப்டறேன்.’
இருவரும் எழுந்து அறையை விட்டு வெளியேறவும் வாசலில் அவருக்கும் ராணிக்கும் திருமணம் செய்துவைத்த பாதிரியாரும், கன்னியர் மடத் தலைவியும் ஒரு வேனில் வந்து இறங்கவும் சரியாக இருந்தது..
மாணிக்க வேல் வாசலுக்கு விரைந்துசென்று இருவரையும் வரவேற்றார். சந்தோஷ் தன்னுடைய தாயார் இருந்த அறைக்கதவைத் திறந்துக்கொண்டு உள்ளே நுழைந்தான். அறையின் மூலையில் தரையில் தலைவிரிக் கோலமாய் நிலைக்குத்தி நின்ற பார்வையுடன் அமர்ந்திருந்த ராணியைப் பார்த்து திடுக்கிட்டான்.
அருகே சென்று அமர்ந்தான் அவளுடைய கரத்தைத் தொட்டான், ‘அம்மா என்னம்மா இது? இங்க என்னெ பாருங்கம்மா..’
பதில் இல்லாமல் போகவே, ‘அம்மா நம்ம ஸ்டீஃபன் ஃபாதரும், மத்தீனம்மா மதரும் வந்துருக்காங்க.. வந்து பாருங்கம்மா..’ என்றவாறு ராணியின் கரங்களுக்கடியில் கைவைத்து தூக்கினான். ஆனாலும் ராணி பிடிவாதமாய் எழுந்திருக்க மறுக்கவே அவளை விட்டுவிட்டு அறையை விட்டு வெளியே வந்தான்.
கமலியின் சடலத்திற்குமுன்பு கண்களை மூடியவாறு நின்றுக்கொண்டிருந்த பாதிரியாரையும், கன்னியர் மடத்தலைவியையும் அவர்களுடன் வந்திருந்த உபதேசியார், மற்றும் வேறு சில கன்னியர்களையும் அமைதியுடன் பார்த்தான்.
‘Where is Rani my son?’ என்று தன்னை நோக்கி வினவிய பாதிரியாரைப் பார்த்த சந்தோஷ் தன் தாயின் அறையை நோக்கி சைகைக் காண்பித்தான்.
ஸ்டீஃபன் பாதிரியார் தன்னருகில் நின்றிருந்த கன்னியர் மடத்தலைவியைப் பார்த்தார். ‘நீங்க போயி ராணிகிட்ட பேசி வெளிய கொண்டுவாங்க மதர்.. அவ இப்ப இருக்கற நிலையில உங்களாலத்தான் அவள பாசிஃபை பண்ண முடியும்னு நினைக்கிறேன்.’
பிறகு, திரும்பி தன்னுடன் வந்திருந்த கோவில் உபதேசியாரைப் பார்த்தார். ‘ஸ்தனிஸ், நம்ம கோவில்லருந்து கொண்டு வந்த மெழுகுவர்த்தி ஸ்டாண்ட நாலு மூலையிலும் வச்சி கொளுத்துங்க.. மாணிக்கம், பெட்டி எப்ப வரும்னு கேளுப்பா.. சந்தோஷ் குடிக்க ஏதாச்சும் தாயேன்.. இந்த விஷயத்த கேட்டதுலருந்து ஒன்னும் சாப்டாம ஒடம்பு தள்ளாடுதுப்பா..’ என்றார் நடுங்கும் குரலில்..
தொடரும்...
No comments:
Post a Comment