22.6.06

சூரியன் 96

பொழுது விடியும் முன்பே எழுந்து தன் தந்தைக்கு சுடச்சுட ஹார்லிக்ஸ் கலந்து கொடுத்துவிட்டு நாற்பத்தைந்து நிமிட நடை சென்றுவிட்டு வருவதுதான் மாணிக்க வேலின் அன்றாட பழக்கம். நேற்று வரை அவருடய இந்த பழக்கத்தில் மாற்றம் இருந்ததில்லை..

படுக்கையில் விழுந்தவுடனே ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றுவிடும் மிகச்சில புண்ணியாவான்களில் அவரும் ஒருவர்.

‘அதானே.. ஒலகமே இடிஞ்சி விழுந்தாலும் ஒங்கள தூக்கத்துலருந்து எழுப்பிர முடியாதே.. ஒங்கப்பாதான ஒங்க ஒலகமே.. ராத்திரி பத்து மணிக்கு ஒரு தம்ளர் பால அவருக்கு கொண்டு குடுத்துட்டா ஒங்களுக்கு தூக்கம் வந்துரும்.. பொஞ்சாதி, புள்ளைங்கள பத்தி கவலைப்பட ஒங்களுக்கு எங்க நேரமிருக்குது?’ என்று அண்டை வீடுகளில் இருப்பவர்களெல்லாரும் கேட்கும் வண்ணம்  அடிவயிற்றிலிருந்து கூச்சலிடும் அவருடைய மனைவி ராணியின் குரல் அவருடைய உறக்கத்திற்கு எந்த அளவிலும் பங்கம் விளைவித்ததே இல்லை.

இரவு பத்து, பத்தரை மணிக்கு அறைக்குள் நுழைந்து கதவை அடைத்துவிட்டால் அவருடைய நாள் முடிவுக்கு வந்துவிடும்.. ராணி எத்தனை முறை கோபத்துடன் அறைக்கதவை தட்டி ஓசை எழுப்பினாலும் அவர் அதைக் கண்டுகொள்ளவே மாட்டார்..

அலுவலகத்திலோ அல்லது வீட்டிலோ நடக்கும் எந்த பிரச்சினையும் அவருடைய உறக்கத்தை இன்றுவரை தடைசெய்ததே இல்லை.

ஆனால், நேற்று இரவு அவருக்கேற்பட்ட அந்த பேரிழப்பு..

அவருடைய தந்தைக்கு தினமும் கொடுக்கும் தூக்க மாத்திரையில் இரண்டை இட்டுக்கொண்டும் உறக்கம் வராமல் இரவு முழுவதும்..

‘சித்தப்பாவ கூட்டிக்கிட்டு போ.. மதர் அனுப்பினா கூட்டிக்கிட்டு வா.. ’

நேற்று இரவு படுக்கைக்கு திரும்பும் முன் தன் மகனை அனுப்பி வைத்தது நினைவுக்கு வந்தது..

தன்னுடைய அந்த முடிவு தன்னுடைய வாழ்க்கையில் தான் எதிர்நோக்கியிருந்த நிம்மதியை குலைத்துவிடுமோ என்று இப்போது நினைத்துப் பார்த்தார்.

‘ஆனா ஒன்னோட இந்த முடிவு நம்ம சந்தோஷ¤க்கு சந்தோஷத்த குடுக்கும்னா அதனால வர எல்லா பிரச்சினைகளையும் தாங்கிக்கற சக்திய கடவுள் ஒனக்கு கொடுப்பாரு மாணிக்கம்.. கவலைப்படாம போய் தூங்கு போ.. மடத்துலருந்து திரும்பி வரும்போது நிச்சயமா ராணி பழைய ராணியா இருக்க மாட்டா.. நீ வேணா பாரு..’

அப்பா எவ்வளவு நல்லவர்? இந்த வயசுலயும் இத்தனை எதிர்பார்ப்புகளோட எப்படி அவரால இருக்க முடியுது?

படுக்கையிலிருந்து மெள்ள எழுந்து மேசையிலிருந்த சிறிய ரேடியம் டைம் பீசைப் பார்த்தார்.

மணி 4.45!

அப்பாவுக்கு ஹார்லிக்ஸ் கொடுக்க வேண்டும் என்பது நினைவுக்கு வர எழுந்து அறையை விட்டு வெளியேறி சமையலறையை நோக்கி நடந்தார்.

வழியில் இருந்த ராணியின் அறையை எட்டிப்பார்த்தார். அவள் அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்தது தெரிந்தது. சந்தோஷ் சென்று அழைத்ததுமே புறப்பட்டு வந்துவிட்டாள் போலிருக்கிறது என்று நினைத்தவாறே அந்த அறைக்கு நேர் எதிரிலிருந்த தன்னுடைய மகனின் அறையை பார்த்தார்.

கதவுக்கடியிலிருந்து வந்த மெல்லிய ஒளி அவனும் விழித்துக்கொண்டிருந்தான் என்பதை உணர்த்தியது. நிமிர்ந்து மாடியைப் பார்த்தார். மாடியிலிருந்த இரண்டு படுக்கையறைக் கதவுகளும் அடைக்கப்பட்டிருந்தன.

முந்தைய நாள் இரவு தன்னுடைய சகோதரர்கள் நடந்துக்கொண்ட விதத்தை நினைத்துப் பார்த்தார். ஒரு பெருமூச்சுடன் சமையலறைக்குள் நுழைந்து அடுத்த சில நிமிடங்களில் தயாரித்த ஹார்லிக்சுடன் தன் தந்தையின் படுக்கையறைக்குள் நுழைந்து குழல் விளக்கின் ஸ்விட்சை தேடிப்பிடித்தார்..

‘லைட்ட போடாதப்பா.. இங்க வா.. வந்து ஒக்கார்..’

திடுக்கிட்டு படுக்கையை நோக்கிய மாணிக்க வேல்.. ‘என்னப்பா முளிச்சிக்கிட்டுத்தான் இருக்கீங்களா?’ என்றார்.

‘ஆமா..’

மாணிக்கம் கையிலிருந்த ஃப்ளாஸ்க்கை படுக்கையையொட்டியிருந்த குறு மேசையில் வைத்துவிட்டு அருகே இருந்த இருக்கையிலமர்ந்தார். ஆறுமுகச்சாமி உறக்கம் வராத சமயங்களில் அவராகவே எழுந்து அமர்ந்துக்கொள்ள ஏதுவாக ஒரு இருக்கை அவருடைய படுக்கைக்கு அருகிலேயே இடப்பட்டிருந்தது.

‘என்னப்பா ராத்திரி தூங்கினீங்களா?’

‘எங்கப்பா?’

‘ஏம்ப்பா.. கமலியவே நினைச்சிக்கிட்டீருந்தீங்களா?’

‘எப்படா சாவு வரும், எப்படா சாவு வரும்னு இங்க ஒருத்தன் காத்திருக்கிட்டிருக்கேன்.. என்னைய விட்டுட்டு அநியாயமா அந்த பிஞ்ச கொண்டு போனத நினைக்கும்போது தூக்கம் எங்கப்பா வருது?’

படுக்கையறை விளக்கின் மெல்லிய ஒளியில் நிழலாக படுக்கையில் கிடந்த தன் தந்தையைப் பார்த்தார் மாணிக்க வேல். நெஞ்சு வலித்தது..

இந்த வயதில் இவருக்கு இப்படியொரு தண்டனை தேவைதானா என்று தோன்றியது..

‘சாவு இன்னைக்கு வருமா நாளைக்கு வருமான்னு காத்துக்கிட்டிருக்கறத விட ஒரு தண்டன வேற இருக்காப்பா மாணிக்கம்? நான் என்ன பாவம் செஞ்சேனோ இப்படி மாசக் கணக்கா, வருச கணக்கா காத்துக்கிட்டிருக்கேன்.. வாழ்க்கைய போலத்தான் மரணம்னு சொல்றது எவ்வளவு சரியா இருக்குப்பா.’

‘எதுக்குப்பா இப்படி சொல்றீங்க? ஒங்க வாழ்க்கையில அப்படி என்னத்தப்பா செஞ்சிருக்க போறீங்க, தண்டனை அனுபவிக்கறதுக்கு?’

‘இல்லடா.. ஒங்கம்மாவ எடுத்துக்கோ.. ஒன்னா ரெண்டா.. மூனு வருசம்.. படுக்கையில படுத்து.. படாத பாடெல்லாம் பட்டு.. மூனு மருமகள்ங்க இருந்தும்.. அவ என்ன பாவம் பண்ணா அந்த அளவுக்கு அவஸ்த பட்டுட்டு போறதுக்கு.. அதே மாதிரி நிலமை எனக்கும் வந்துருமோன்னுதாண்டா நா பயப்படறேன்..’

இருட்டில் தட்டுத் தடவி தன் கைகளைப் பற்றிய தன்னுடைய தந்தையின் கரத்தை தன்னுடைய கைகளில் பொதிந்துக்கொண்டு நேரம் போவதே தெரியாமல் அப்படியே அமர்ந்திருந்தார் மாணிக்கவேல்..

*******

முந்தைய நாள் இரவில் ஏற்றிக்கொண்ட போதை கலைவேனா என்று அடம்பிடிக்க விடியற்காலையிலேயே வாசலில் இருந்த அழைப்பு மணி அலற எழுந்து நிற்கமுடியாமல் மீண்டும் படுக்கையிலேயே விழுந்தான் ராசேந்திரன்.

வாசலில் மணி விடாமல் அலறவே எழுந்து இடுப்பில் நிற்க மறுத்த லுங்கியை ஒரு கையில் பிடித்தவாறே தட்டுத்தடுமாறி படிகளில் இறங்கி வாசற்கதவைத் திறக்க எதிரில் கோபத்துடன் நின்றிருந்த ரத்தினவேல் அவனை தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்து ஹாலிலிருந்த சோபாவில் அமர்ந்தார்.

எதிரே டீப்பாயை சுற்றிலும் சிதறிக்கிடந்த காலி மதுக்குப்பிகள் அவருடைய ஆத்திரத்தைக் கிளற.. ‘எலேய் குடிகாரப் பய மவனே.. நீ குடிச்சிக்கிட்டே இரு.. ஒரு காரியத்தையும் உருப்படியா செய்யாத..’ என்று இரைந்தார்.

வாசலில் போர்ட்டிக்கோவில் நின்ற தூசி படிந்த அம்பாசிடர் காரை அருவெறுப்புடன் பார்த்த ராசேந்திரன், ‘சே.. எத்தன தடவை சொன்னாலும் இந்த டப்பா வண்டிய விடமாட்டாரே.. இவரும்.. இவர் வண்டியும்.. இவருக்குன்னு ஏத்தா மாதிர் ஒரு ஹைதர் காலத்து வண்டி, ஒரு வயசான டிரைவர்.. திருந்தவே மாட்டார்..’ என்று முனுமுனுத்தவாறே வாசற்கதவை மூடிவிட்டு திரும்பி தன் தந்தையைப் பார்த்தான்.

‘என்னப்பா சொன்னீங்க?’

‘ஊம்.. கேள்வியாலே கேக்கே.. ராத்திரி முழுசும் அந்த லொட லொட வண்டியில தூக்கம் இல்லாம வந்து வாசல்ல நின்னு பெல்ல அடிச்சா தொரைக்கு மேலருந்து எறங்கி வந்து கதவ திறக்க எவ்வளவு நேரம்லே.. நிதானத்துல இருந்தாத்தானே.. வெளக்கு வச்சாப் போறும்.. கூட்டாளிப் பயல்வளோட சேர்ந்து பாட்டில் பாட்டிலா ஊத்திக்கறது.. அப்புறம் எங்கலே நிதானத்தோடருக்கறது?’

ராசேந்திரனுக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தாலும் கோபப்படுவதால் எந்த பயனும் இருக்கப் போவதில்லை என்று தெரிந்து மவுனமாக தன் அறைக்கு திரும்ப படிகளில் காலை வைத்தான்..

‘எலே என்ன நா பேசிக்கிட்டேருக்கேன்.. நீம்பாட்டுக்கு படியில ஏறுறே?’

ராசேந்திரன் நின்று திரும்பி தன் தந்தையைப் பார்த்தான். ‘இப்ப என்ன மணி தெரியுமில்லே.. நா தூங்கணும்.. நீங்களும் போய் படுங்க.. பத்து மணிக்கு மேல பேசிக்கலாம்..’

அவன் மீண்டும் படிகளில் ஏற ரத்தினவேல் தன் மேல் துண்டை எடுத்து அவனை நோக்கி வீசினார்.

‘எலேய் என்ன கொளுப்புருந்தா இப்படி பேசுவே.. என்ன ஆச்சோ ஏதாச்சோன்னு ப்ளசர போட்டுக்கிட்டு ஓடியாந்துருக்கேன்.. தொரைக்கு தூங்கணுமாமில்லே.. இது வரைக்கும் இப்படி குடிச்சிப்பிட்டு பொளுது விடிஞ்சது கூட தெரியாம தூங்கி, தூங்கித்தானம்லே.. எல்லாத்தையும் கோட்டை விட்டுட்டு நிக்கே.. இனியும் தூங்கணுமாக்கும்?’

தன் தந்தையின் கோபத்தை சிறிதும் பொருட்படுத்தாமல் காலடியில் வந்து விழுந்த துண்டை கையில் பிடித்துக்கொண்டு படிகளில் ஏறிய ராசேந்திரன் படுக்கையறைக்குள் நுழைந்து கதவை அடைத்துக்கொள்ள செய்வதறியாது திகைத்துப்போய் அமர்ந்திருந்தார் ரத்தினவேல்..

தொடரும்..
  

2 comments:

siva gnanamji(#18100882083107547329) said...

மாணிக்கவேலின் தந்தை;
ராசேந்திரனின் தந்தை ரத்தினவேலு.
தந்தை என்பவர் எப்படி இருக்க வேண்டும் என்பதை விளக்கும் இரு கதாபாத்திரங்கள்

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க ஜி!

ஆமாம்.

முன்னவர் எப்படி இருக்க வேண்டுமென்று..

பின்னவர் எப்படி இருக்கக்கூடாதென்று..

பிள்ளைகளும் அப்படித்தானே..