6.6.06

சூரியன் 90

சேதுமாதவன் இரவு எத்தனை மணிக்கு உறங்கச் சென்றாலும் அதிகாலையில் எழுந்துவிடுவது வழக்கம்.

முந்தைய நாள் இரவில் குடித்த மதுவின் சுவையையும் மணத்தையும் நாவிலிருந்து களைய எழுந்ததும் எலுமிச்சை இட்ட கட்டஞ்சாயா எனப்படும் பாலில்லாத டீ குடித்துவிட்டு அவர் குடியிருருந்த காலனியில் இருந்த ஜிம்மில் உடற்பயிற்சி என்ற பெயரில் அங்கு குழுமியிருக்கும் அவருடைய வயதொத்த பெரிய தலைகளுடன் ஊர்வம்பு பேசிவிட்டு வருவதும் அவருடைய அன்றாட செயல்களில் முக்கியமான ஒன்று.

அன்று ஜிம்மில் இருந்தவர்கள் பலரும், ‘என்னய்யா.. இன்னைக்கி ஒங்க புது பாஸ் வராரா? அவர்கூடவாவது ஒத்து போவீரா இல்ல ஃபைட்தானா?’ என்று அவரை கேலியுடன் வினவினர்.

சேதுமாதவனைப்பற்றி அவருடைய வங்கியிலிருந்தவர்களைக் காட்டிலும் அவருடைய காலனியிலிருந்தவர்களுக்கு நன்றாகவே தெரிந்திருந்தது. அவருடைய ஈகோவை குத்திக் கிளறி வேடிக்கைப் பார்ப்பதில் அவர்களுக்கு ஒரு தனி ஆனந்தம் இருந்தது.

அவருடைய காலனியில் வசித்தவர்களுள் பலரும் அவரைவிடவும் செல்வந்தர்களாகவும், பெரும் பதவிகளில் இருந்தவர்களாகவும் இருந்ததால் அவருடைய வெட்டி ஜம்பம் அவர்களிடம் பலித்ததில்லை.

தன்னுடைய பணபலம், செல்வாக்கு அக்குடியிருப்பில் செல்லாது என்பது சேதுமாதவனுக்கும் தெரியும். ஆகவே அவர்களுடைய வம்பு பேச்சு அவரை உள்ளூர கொதிக்க வைத்தாலும் மேலுக்கு சிரித்து மழுப்பிவிடுவார்.

‘ஒத்துப்போறதா நானா? நெவர்.. அவர் அந்த பதவியில நீடிச்சி நிக்கணும்னா அவர்தான் நம்மக்கிட்ட ஒத்துப் போணும்.. போன இருபது வருசத்துல எத்தன சேர்மன பாத்துருக்கேன்..?’

அவருடன் இருந்தவர்கள் ஒருவரையொருவர் பார்த்து விஷமத்துடன் சிரிக்க சேதுமாதவன் அதை கண்டும் காணாததுபோல் த்ரெட் மில் பயிற்சியில் மும்முரமாக இருந்தார்.

உடற்பயிற்சிகளை முடித்துக்கொண்டு சகாக்களிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு வீடு திரும்பும் வழியெல்லாம் அவர்கள் தன்னைக் குறித்து தங்களுக்குள் கிண்டலடித்துக்கொண்டிருப்பார்கள் என்ற நினைப்பே அவருடைய மனத்தில் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.. ‘தமிழம்மாரு..’ என்று கெட்ட வார்த்தையில் எல்லோரையும் ஒட்டுமொத்தமாக திட்டித் தீர்த்தார்.

சென்னையை தலைமையகமாகக் கொண்டிருந்த வங்கியில் முப்பது வருடங்களுக்கு மேலும் பணிபுரிந்தும், சென்னையில் கடந்த பதினைந்து வருடங்களுக்கும் மேல் வசித்தும் தமிழர்களைக் கண்டாலே அவருக்கு ஆகாது. தமிழர்களென்ன கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்களைத் தவிர வேறு எவரையும் அவருக்கு பிடிக்காதென்றால் மிகையாகாது.

‘ஒலகத்துல எந்த மூலைக்கு வேணும்னாலும் போய் பாருங்க. எங்க ஆளுங்க இல்லாத எடமே இருக்காது.. அந்த அளவுக்கு எங்களுக்கு டிமாண்ட் இருக்கு. இதுக்கு என்ன காரணம்னு நினைக்கறீங்க?’ என்பார் தனக்குக் கீழ் பணிபுரிந்த அதிகாரிகளிடம்.

‘வேறெதுக்கு நீங்கதான் ஜால்ரா அடிக்கறதுல கில்லாடியாச்சே.. கூட்டிக்குடுக்கறது, அடுத்துக்கெடுக்கறது..எல்லாம் ஒங்களுக்கு கைவந்த கலையாச்சே..’ என்று அவர்கள் முனுமுனுப்பது அவருக்கு தெரியாது..

அவர் தன்னுடைய சித்தாந்தத்தைத் தொடர்வார். ‘அதுக்கு எங்களுக்கு இருக்கற மூளைதான்யா காரணம்.. ஒங்கள மாதிரி நான் சொல்றத மட்டும் செய்யற ஆளுங்க இல்ல எங்காளுங்க.. அதுக்கும் மேல போயி அக்ரெசிவ்வா செய்வாங்க.. அதான் எங்களுக்கும் ஒங்களுக்கும் இருக்கற வித்தியாசம்..’

அதான் டிகிரியில ரெண்டு தடவ கோட் அடிச்சீராக்கும் என்று தங்களுக்குள் கூறிக்கொள்வர்  விவரம் தெரிந்த அதிகாரிகள்..

கேரளத்தைச் சாராதவர்கள் மீது அவருக்கிருந்த ஒருவிதமான காரணமில்லாத வெறுப்பு (aversion) அவருக்குக் கீழே பணியாற்றிய அதிகாரிகள் எல்லோருக்குமே தெரிந்திருந்ததால் அவரை விட்டு சற்று தள்ளியே இருந்துவிடுவர். ‘அவர் ஒரு கிறுக்கன்யா.. எதுக்கு தேவையில்லாம ஆர்க்யூ பண்ணி.. கோபத்துல என்ன பேசறதுன்னே அந்தாளுக்கு தெரியாது. அப்புறம் நாம ஒன்னு சொல்ல, அந்தாளு வேறொன்னு சொல்ல.. போறாததுக்கு வஞ்சம் வைக்கற கொணம் வேற இருக்கு.. எதுக்கு வம்பு..’ என்று ஒதுங்கி சென்றுவிடுவர்.

உடற்பயிற்சி நிலையத்திலிருந்து திரும்பி வந்ததும் மீண்டும் ஒரு சூடான சாயா அருந்துவது அவருடைய வழக்கம். அவருடைய சகல தேவைகளையும் குறிப்பறிந்து செய்வதில் திருநாவுக்கரசு சூரன். ‘எடோ தான் தமிழனல்லே.. ச்செலப்போ எனிக்கி சம்சயம் தோனாருண்டு.. தான் சரிக்கி ஒரு மலையாளியப்போலான காரியங்கள செய்யனெ..’ என்பார் அவனிடம்..

அவனோ.. ‘போய்யாங்.. நீயும்.. ஒம் மலையாளத்தான் புராணமும்..’ என்று முனுமுனுத்தவாறே ஒரு புன்னகையுடன் அகன்றுவிடுவான்..

அன்றும் அவர் ஜிம்மிலிருந்து திரும்பியதும் டீப்பாயின் மேலிருந்த வி பறக்கும் கறுப்பு டீயை உறிஞ்சி குடித்துவிட்டு, ‘மாயே..’ என்று இரைந்தார் மாடியை நோக்கி..

அவருடைய மனைவி மாயாதேவி பள்ளியெழவே எட்டு மணியாகிவிடும் என்பது தெரிந்ததுதான். பின் தூங்கி முன் எழுவாள் பத்தினிங்கறது கேரளத்தில் கிடையாது போலருக்கு என்று முனுமுனுப்பான் திரு..

தன்னுடைய குரலுக்கு மாடியிலிருந்து பதில் வராமல்போகவே கையிலிருந்த காலி கோப்பையை டீப்பாயின் மீது வைத்துவிட்டு தன்னுடைய அறையை நோக்கி மாடிப்படிகளில் ஏறலானார்.

‘ஐயா.. இன்னைக்கி சாப்பாடு பேக் பண்ணி அனுப்பனுமா?’ என்ற திருவை பார்க்காமலே ‘அதொன்னும் வேண்டடா. இந்நு புதிய சேர்மன் வருந்ந திவசமல்லே.. சேர்ந்நு கழிச்சோளாம்..’ என்று பதிலளித்துவிட்டு அணிந்திருந்த அரைக்கால் நிஜாரையும், டீ சர்ட்டையும் களைந்துவிட்டு இடுப்பில் கட்டிய இம்போர்ட்டட் துவாலையுடன் தன்னுடைய அல்ட்ரா மாடர்ன் குளியலறைக்குள் நுழைந்தார்.

‘கொளந்தைய விட மோசம்யா நீ..’ என்று முனகியவாறே அவர் களைந்து எறிந்துவிட்டு சென்ற ஆடைகளை பொறுக்கியெடுத்துக்கொண்டு கீழே இறங்கினான் திரு..

அவர் குளியலறையிலிருந்து வெளிவர குறைந்தது அரைமணி நேரமாகும் என்பது அவனுக்கு தெரியும். குளிக்க போன எடத்துலதான் திட்டம் போடுறேன் பேர்வழின்னு மணிக்கனக்கா கக்கூஸ் சீட் மேல ஒக்காந்துக்கிட்டு.. விவஸ்தை கெட்ட மனுஷன்யா....

சேதுமாதவனுக்கு காலைநேரத்தில்தான் பயங்கரமான, சூழ்ச்சிகரமான உத்திகளெல்லாம் திரண்டு எழும். அவற்றை டாய்லெட் சீட்டில் அமர்ந்தவாறே ஹேண்ட் ஹெல்ட் கணினியில் குறித்துக்கொள்வார்.. அன்றைய செய்தித்தாள்களில் உள்ள தலைப்புச் செய்திகளை படித்து முடிப்பதும் அங்குதான். மேலைநாட்டு சிகரெட் ஒன்று உதடுகளின் இடுக்கில் புகைந்துக்கொண்டிருக்க அன்றைக்கு அலுவலகத்தில் யாரை கவிழ்க்கலாம் என்று மூளையைக் குடைந்து குறிப்பெடுத்துக்கொள்வார்.

அன்றைய பிரத்தியேக சிந்தனை முழுவதும் அன்று பொறுப்பேற்கவிருந்த மாதவனைப் பற்றித்தான். ‘ராஸ்கல்.. நேத்தைக்கி என்னே அந்த இடியட்ஸ் முன்னால வச்சி எப்படி இன்ஸல்ட் பண்ணான்.. போடா மாக்கான்னுட்டு வந்துருக்கலாம்.. ஆனா என்ன பண்றது போர்ட்லருக்கற முட்டாளுங்க பழைய சேர்மன் கோச்சிக்கிட்டு போனதுலருந்தே அரண்டு போயிருக்கான்களே.. இந்த நேரத்துல மாதவன்கிட்ட மோதுனா நம்ம மேலயே பாய்ஞ்சாலும் பாய்வானுங்க. நின்னு நிதானமா ப்ளான் போடணும்.. இந்தாள் அவனோட ஃபுல் டேர்ம் (full term) வரைக்கும் நின்னுட்டான்னா நம்ம பாடு அவ்வளவுதான். நமக்கிருக்கறதோ ரெண்டு வருசம்தான். அடுத்த வருச கடைசிக்குள்ள இவனெ விரட்டிட்டு அந்த சேர்மன் சேர்ல ஒக்காரணும்.. அதுக்கு என்னல்லாம் செய்யணுமோ அத செய்யணும்.. ஆனா ஒருத்தனுக்கும் தெரியக்கூடாது. அது முக்கியம்.. .’

குளியலறையிலிருந்த ஸ்பீக்கர் தொலைபேசி ராகத்துடன் சினுங்க அத்துடன் இனைக்கப்பட்டிருந்த காலர் ஐடி திரையில் யாரென பார்த்தார். சுந்தரலிங்கம்!

இவன் எங்க இந்த நேரத்துல என்று முனுமுனுத்தவாறு, ‘ஹலோ சொல்லுங்க சார்.’ என்றார்.

‘சார், நம்ம சேர்மனுக்கு ரிச்ப்ஷன் லாபியில வச்சி சின்னதா ஒரு வரவேற்பு குடுக்கலாம்னு ப்ளான் பண்ணியிருக்கோம். சாட்டர்டே ஒங்கள சந்திச்சபோதுகூட சொன்னேன்னு நினைக்கிறேன்.’

ஆமா, ரொம்ப முக்கியம்.. காக்கா புடிக்காதீங்கடா.. ‘அப்படியா குட். எத்தன மணிக்கு ?’

‘ஒன்பதரை மணிக்கு வந்துருவேன்னு நேத்து ராத்திரி சொல்லியிருந்தார். நீங்களும் அந்த நேரத்துல இங்கருந்தா நல்லாருக்கும்னு நினைச்சேன். அதான் கூப்ட்டேன்..’

‘சரி சார். வந்துடறேன்.’ என்றவாறு இணைப்பைத் துண்டித்த சேதுமாதவன் எரிச்சலுடன் தன் கையில் வைத்திருந்த ஹேண்ட் ஹெல்ட் கணினியில் எழுத உபயோகிக்கும் எழுதுகோலை அறைக்கு குறுக்கே வீசியெறிந்தார்.. அதன் முனை சேதாரமானால் உபயோகம் இருக்காதே என்று எண்ணி பார்க்கும் மனநிலையில்கூட அவர் இருக்கவில்லை..

அடிவயிற்றில் பொறாமை தீயாக எரிந்தது. கணினியில் மணியைப் பார்த்தார்.. இன்னும் ஒரு மணி நேரமே இருந்தது.. எரிச்சலுடன் எழுந்து அடுத்த கால் மணி நேரத்தில் சவரம் செய்து, குளித்து முடித்து வெளியேறி உடை மாற்றிக்கொண்டு கீழே உணவறைக்குள் நுழைந்தார்.

ஆனை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பது போல அவருக்கு முன்னே சென்ற உயர்ரக செண்ட் வாசனை திருவை இழுக்க ‘என்னாச்சிறா இந்தாளுக்கு.. இவ்வளவு சீக்கிரம் வந்துட்டாரு..’ என்று முனுமுனுத்தவாறு.. ‘ஏய்யா.. சீக்கிரம்.. டோஸ்ட் ரெடியா.. கொண்டாங்க.. நீங்க டீ எடுத்துக்கிட்டி வாங்க..’ என்று சமையலறை கிழவரிடம் கூறியவாறு உணவு மேசையை நோக்கி விரைந்தான்..

அடிவயிற்றில் கொழுந்துவிட்டு எரிந்த பொறாமைத் தீ அவருடைய பசியை வெகுவாகக் குறைத்திருந்தது. ‘இதொன்னும் வேண்டாடா.. திரு.. தான் ச்சாயாவ மாத்தரம் கொடுக்கு.. டைம் ஆயி.. டிரைவர் வந்நோ..?’

நல்லவேளை  என்றைக்குமில்லாமல் அன்று அவருடைய அலுவலக டிரைவர் சீக்கிரமே வந்திருந்தான்..

‘ஆமாய்யா.. வந்துட்டார். போர்ட்டிக்கோவிலதான் வண்டி நிக்குது.. எப்ப வேணும்னாலும் பொறப்படலாம்..’

‘நன்னாயி.. சாயாவுங்கூடி வேணாம்.. நா ஆஃபீஸ்ல பாத்துக்கறேன்.. மாயா தாழ (கீழே) வந்நோ..’

திரு இல்லையென்று தலையையசைத்தான். சேதுமாதவன் கைக்கடிகாரத்தைப் பார்த்தார். ஒன்பதை நெருங்கிக்கொண்டிருந்தது. இப்போது கிளம்பினால்தான் அரை மணி நேரத்தில் அலுவலகம் சென்றடைய முடியும்..

கையில் பிடித்திருந்த விலையுயர்ந்த கைப்பெட்டியுடன் திரும்பி வாசலை நோக்கி நடந்தார்..

தொடரும்..


8 comments:

அருண்மொழி said...

என்ன சார் பக்கத்து மாநில மக்களை ஒரு பிடி பிடித்துவிட்டீர்கள். சொந்த அனுபவமா?

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க arunmoli,

அப்படியெல்லாம் இல்லீங்க..

இது முழுக்க முழுக்க கற்பனைக் கதைன்னு சொன்னாலும் யாரும் நம்பப் போறதில்லை..

நேத்து நாடாரப் பத்தி எழுதியிருந்தேனே அப்போ நாடார் மக்களை பிடிக்கவில்லை என்று அர்த்தமா என்ன..

என்னுடைய வாழ்க்கையில் நான் சந்தித்த பலதரப்பட்ட மனிதர்களிடத்தில் நான் கண்டவற்றைக் கொண்டுதான் என்னுடைய கதாபாத்திரங்களுடைய குணாதிசயங்களை உருவாக்குகிறேன்..

அதில் நல்லவர்களும் இருப்பார்கள் தீயவர்களும் இருப்பார்கள்..

அதுதானே நிதர்சனம்!

siva gnanamji(#18100882083107547329) said...

ஆஹா ஆட்டம் ஆரம்பமாகி விட்டது
டிஷ்யூம் டிஷ்யூம் இல்லேன்னாலும் 'நற நற', 'உஷ் உஷ்', 'ஹி ஹி','ஹா ஹா',
எல்லாம் நிறைய இருக்கும்
ஓர் இடத்தில்,சரியாக நினைத்தாலும்
கடுமையான பதப் பிரயோகம்

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க ஜி!

ஓர் இடத்தில்,சரியாக நினைத்தாலும்
கடுமையான பதப் பிரயோகம்..//

எந்த இடம்னு சொன்னா நல்லாருக்கும்.

ஆனா.. ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கும்போதே அவர் எப்படி சிந்திப்பார்.. செயல்படுவார் என்பதையும் நடுநிலையாக நின்று சிந்திக்க வேண்டியிருக்கிறது..

பிலிப் சுந்தரம், சுந்தரலிங்கம் மற்றும் மாணிக்கவேல் போன்றவர்கள் சிந்திப்பதுபோலவே சேதுமாதவன் சிந்திக்கமாட்டாரல்லவா? கெட்டவரை கெட்டவராகத்தானே சித்தரிக்க முடியும்? அவருடைய சிந்தனைகளும் தீயதாகத்தானே இருக்கும்?

அருண்மொழி said...

எப்படியோ சார் கடைசியில் தமிழ் சினிமா மாதிரி ஒரே episodeல் எல்லோரும் நல்லவர் ஆக மாறாமல் இருந்தால் சரி.

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க arunmoli,

எல்லோரும் நல்லவர் ஆக மாறாமல் இருந்தால் சரி.//

ஏன் இப்படி சொல்லிட்டீங்க?

என் குடும்பத்துலயே ஒருத்தர் இருந்தார் அரசு பணியில பெரிய அதிகாரியா இருந்து ஓய்வு பெற்றவர். பணியில் இருந்த சமயத்தில் எப்பவும் யாரை கவுக்கலாம், யாரை மாட்டிவிடலாம் என்று நினைத்துக்கொண்டிருப்பார். தன்னுடைய பதவியளித்த அதிகாரத்தை குடும்பத்தினரிடமும் காட்டுவார். யார் வீட்டு விசேஷத்துக்கும் வரமாட்டார். ஓய்வு பெற்று இரண்டு வருடங்கள் ஆகின்றன. சமீபத்தில் ஒரு குடும்ப விசேஷத்தில் அவரை சந்தித்தேன்.. அவரா இவர் என்று மாய்ந்துபோகும் அளவுக்கு அடியோறி மாறிப்போயிருந்தார்.

ஆக, எந்த மனிதனாலும் மாற முடியும்..

ஆனால் அதற்காக வலுக்கட்டாயமாக பாத்திரங்களை மாற்றி எல்லோருக்கும் சிரிக்க சுபம் என்று கார்ட் போட மாட்டேன்.. ஆனால் அதற்காக எல்லோருமே வில்லர்களாகவே இறுதிவரை இருப்பார்கள் என்றும் கூறமுடியாது..

சிலர் திருந்துவர்.. சிலருக்கு தர்ம அடி கிடைக்கும், ஏன் சிலருக்கு அதிகப்பட்ச தண்டனையும் கிடைக்கும்..

G.Ragavan said...

ஜோசப் சார். நீங்கள் சொல்வது மிகச் சரி. யாரும் மாற முடியும். நல்லவனாக இருந்து கெட்டவனாகவும். கெட்டவனாக இருந்து நல்லவனாகவும். மாறாமலும் இருக்கலாம். ஆனால் மாற்றம் வியப்பானதல்ல.

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க ராகவன்,

ஆனால் மாற்றம் வியப்பானதல்ல. //

கரெக்ட். அப்பத்தான் வாழ்க்கையிலும் ஒரு ஸ்வாரஸ்யம் இருக்கும்.