2.6.06

சூரியன் 88

‘காலைல எழுந்ததும் எங்கடி கிளம்பிட்ட?’

வாசலில் கிடந்த காலணிகளை அணிந்துக்கொண்டிருந்த மைதிலி நிமிர்ந்து தன் முன்னே நின்ற தாயைப் பார்த்தாள்.

‘ஒனக்கு இப்ப என்ன வேணும்..?’

‘என்னது, என்ன வேணுமா? வாரத்துல மொத நா அதுவுமா.. காலங்கார்த்தால கிளம்பிப் போறீயே அது எங்கன்னு தெரியணும். ஆஃபீசுக்குன்னா என்ன இன்னிக்கி இவ்வளவு சீக்கிரமா கிளம்பிட்டே?’

மைதிலி சலிப்புடன் தன் தந்தையைப் பார்த்தாள். அவருக்கு ஒலகமே இடிஞ்சி விழுந்தாலும் காலைல எழுந்ததும் ஹிந்து பேப்பரை முதல் பக்கத்துலருந்து கடைசி பக்கம் வரைக்கும் படிச்சி முடிச்சிரணும்..

ஒரு கையில் ஆவி பறக்கும் காப்பி.. இன்னொரு கைல பேப்பர்.. அத முடிச்சிட்டுத்தான் மறுவேலை..

‘அம்மா.. சீனிய நேத்து ராத்திரி அங்கிளோட க்ளினிக்கிலயே விட்டுட்டு வந்திருக்கேனே அத மறந்துட்டியா?’

ஜானகி புரிந்தது. இருப்பினும் வேண்டுமென்றே, ‘ஆமா அதுக்கென்ன இப்போ?’ என்றாள் எரிச்சலுடன்.

மைதிலிக்கும் எரிச்சல் வந்தது. ‘என்ன பேசற நீ? அவனெ கொண்டுபோய் ஆத்துல விடவேண்டாமா?’

‘ஏன் அவன் என்ன கொழந்தையா? அவனாவே ஒரு டாக்சியோ ஆட்டோவோ புடிச்சி போயிரமாட்டானா?’

‘அதெப்படிம்மா? அவன் வீட்ல எல்லாருமா சென்னைக்கு நேத்து பொறப்பட்டு போறச்சே இவன் மாத்தரம் எங்கிட்ட பேசணும்னுட்டு இங்கவே இருந்துட்டான். எங்கிட்ட பேசணும்னு ஆத்துக்கு ஃபோன் பண்ணப்போ அவன் எங்கருக்கான்னு தெரியாமயே அப்பா அவன்கிட்ட போயி என்னென்னமோ சொல்லி அவன் மயக்கம் போட்டு விழுந்து கால ஒடச்சிக்கிட்டான்..’

‘அதான் அவனுக்கு வைத்தியம் பார்த்தாச்சோன்னோ.. அப்புறமென்ன.. அவனுக்கு கால் சரியா வர வரைக்கும் அவனோடவே இருந்து சவரட்சணை பாக்கபோறியா என்ன?’ என்ற ஜானகி திரும்பி தரையில் அமர்ந்து தினத்தாளை விரித்து படித்துக்கொண்டிருந்த தன் கணவனைப் பார்த்தாள்.. அவர் எனக்கேதும் சம்பந்தமில்லையென்பதுபோல் அமர்ந்திருந்தது அவளுடைய கோபத்தை தூண்டியது. ‘ஏன்னா நா இங்க கத்திண்டுருக்கேன்.. ஒங்களுக்கு ஒங்க பேப்பர்தான் முக்கியமா போச்சா?’

பட்டாபி செய்தித்தாளிலிருந்து பார்வைய அகற்றாமல்.. ‘நீ சொன்னா மாத்தரம்.. அவ கேட்டுரப்போறாளாக்கும்.. காலங்கார்த்தால நீ அவகிட்ட மல்லுக்கு நிக்காம போய் சாப்பாடு பண்ற வழியப்பாரு.. நா சாப்ட்டுட்டு நேத்து வந்து போனாளே அவா என்ன சொன்னான்னு நம்ம தரகர் கிட்ட போய் கேட்டுட்டு வரணும்..’

'ஆமா அத வேற போய் கேக்கணுமாக்கும்.. நீங்க வேறன்னா..’

‘இங்க பார்மா.. நீயும் அப்பாவும் இந்த கல்யாண பேச்சையெல்லாம் கொஞ்ச நாளைக்கு மூட்ட கட்டி வையுங்கோ.. இனியொரு மாப்பிள்ளை முன்னால போயி சீவி சிங்காரிச்சி நிக்கறதுக்கு நா தயாரல்லை.. சொல்லிட்டேன்.. நா வரேன்.. இப்பவே நாழியாயிருச்சு..’

‘ஏய்.. ஏய் நில்லுடி..’ என்ற தன்னுடைய தாயின் கெஞ்சலை கேட்காததுபோல வாசலைத் தாண்டி படிகளில் இறங்கி சாலையில் சென்றுக்கொண்டிருந்த ஒரு ஆட்டோவை நிறுத்தி ஏறி பறந்தாள்..

***

‘ஒரு டூ, த்ரீ டேய்சுக்கு டாப்ளட்ஸ் குடுத்துருக்கேன் மைதிலி.. கால்லருக்ற ப்ளட் க்ளாட்ச கரைச்சிரும்.. அப்புறம் காலைல எழுந்தப்போ கொஞ்சம் பெய்ன் இருக்குன்னு சொன்னதுனால ரெண்டு நாளைக்கு பெய்ன் கில்லர்சும் குடுத்துருக்கேன்.. ஹேர் லைன் ஃப்ராக்சர்தான்.. ரெண்டு வார்த்துக்கு கட்டு பிரிக்கற வரைக்கும், ஸ்டெரய்ன் பண்ணி நடக்காம இருந்தா போறும்..’
என்ற மருத்துவரை நன்றியுடன் பார்த்தாள் மைதிலி.

‘ஓக்கே அங்கிள். நா இவன அழைச்சிண்டு போய் ஆத்துல விட்டுட்டு ஆஃபீசுக்கு போணும்.. நீங்க செஞ்ச உதவிக்கு ரொம்ப தாங்ஸ்.’

மருத்துவர் ராஜகோபாலன் தன் எதிரில் புன்னகையுடன் நின்றிருந்த மைதிலியைப் பார்த்தார். எப்படி இவளால் நேற்று நடந்தவைகளை அவ்வளவு எளிதாக மறந்துவிட்டு..

இந்த ஜெனரேஷன் இளைஞர்கள்தான் வாழ்க்கையை எவ்வளவு எளிதாக எடுத்துக்கொள்கிறார்கள்? ஒரு ஆண், ஒரு பெண்ணுடன் வெறும் நட்பாக மட்டுமே பழகமுடியுமா என்று கேட்டால் ஏன் முடியாது என்று எதிர் கேள்வி கேட்கிறார்கள்.

ஆனால் அதே இருவர் சில மாதங்கள் கழித்து திருமணம் என்று முடிவெடுப்பார்கள்.. என்ன நீங்க ரெண்டு பேரும் ஃப்ரெண்ட்சுன்னுதான நினைச்சிக்கிட்டிருந்தோம் திடீர்னு கல்யாணம்னு சொல்றீங்களேப்பா என்று கேட்டால்.. ஆமா ஃப்ரெண்ட்ஷிப்புன்னு ஆரம்பிச்சோம்.. ரெண்டு பேருக்கும் ஒருத்தரையொருத்தர் பிடிச்சி போச்சி.. ஏன், கல்யாணம் பண்ணிக்கிட்டா என்னென்னு தோணிச்சி.. பண்ணிக்கறோம்.. இதுல ஆச்சரியப்படறதுக்கு என்ன இருக்கு.. என்பார்கள் சர்வ சாதாரணமாக..

சரி நல்லாருங்கன்னு வாழ்த்தி முழுசா ஒரு வருசம் முடியறதுக்குள்ள எங்க ரெண்டு பேருக்கும் ஒத்துபோலை.. பிரியறதுன்னு தீர்மானிச்சிருக்கோம்னு போய் விவாகரத்து செய்யப்போறோம்னு ஏதோ சட்டை கலர் பிடிக்கலாங்கறப்பல ..

எல்லாமே எமோஷனலா, இம்பல்சிவா..

‘என்ன அங்கிள்.. என்னவோ யோசிக்கறாப்பலருக்கு?’ என்றாள் மைதிலி புன்னகையுடன். ‘நா சீனிய அழைச்சிண்டு போலாமா?’

ராஜகோபாலன் புன்னகையுடன், ‘சரி மைதிலி..’ என்றார். ‘ஆனா அதுக்கு முன்னால நா ஒன்னு கேட்டா தப்பா நெனச்சிக்க மாட்டியே..’

மைதிலிக்கு அவர் என்ன கேட்கப்போகிறார் என்பது புரிந்தாலும், ‘கேளுங்க அங்கிள்.’ என்றாள்.

‘நேத்தைக்கி பார்த்துட்டு போன மாப்பிள்ளையாத்துல ஒன்னெ பத்தி தப்பா நினைச்சிட்டாங்களேன்னு நோக்கு கொஞ்சம்கூட கவலை இல்லையா? எதுக்கு கேக்கறேன்னா...’

‘இல்லவே இல்லை அங்கிள்..’ என்று இடைமறித்தாள் மைதிலி.. ‘நா எதுக்கு மூனாம் மனுஷா என்ன நினைக்கறான்னெல்லாம் கவலைப்படணும்..? அவா யாரு? Why should I bother about what they think about me?’

‘என்ன மைதிலி இப்படி கேட்டுட்டே.. ஒங்கப்பாதான எம் பொண்ண வந்து பாருங்கோன்னு அவாள ஒங்காத்துக்கு கூப்ட்டுருந்தா? அவா ஆத்துல ஒன்னையும் அந்த பையனையும் சேத்து பாக்காமருந்திருந்து அவா சம்மதிச்சிருந்தா நாளைக்கு ஒம் மாப்பிள்ளையா வந்துருக்கவேண்டியவந்தானே அந்த பிள்ளையாண்டான்.. நீ என்ன மூனாம் மனுஷாங்கறே?’

மைதிலியின் முகத்தில் சலிப்பு தோன்றியது.. இந்த நேரத்தில் இந்த விவாதம் தேவைதானா?

இவாளுக்கெல்லாம் ஒரு பொண்ணுக்கு இருபத்திரண்டு, இருபத்திமூனு வயசாயிருச்சின்னா ஒடனே புடிச்சி கல்யாணம் செஞ்சி வச்சிரணும்.. இல்லன்னா தல வெடிச்சிரும்.. அப்புறம் ஒரு பொண்ணும் ஒரு ஆணும் பாத்து பேசிரக்கூடாது.. ஒடனே காதல் கத்தரிக்கான்னு கற்பன செஞ்சிக்க வேணிடியது.. அது மும்பைன்னாலும் சரி என்னா ஸ்ரீங்கம் மாதிரி ஒரு பட்டிக்காடுன்னாலும் சரி? எல்லாம் ஒன்னுதான்.. மும்பையிலயே பிறந்து வளர்ந்து இருபது இருபத்தஞ்சி வருசமா டாக்டர் தொழில் பண்ற இவரே இப்படீன்னா.. அம்மாவ சொல்லி என்ன பிரயோசனம்?

‘என்னை மைதிலி.. ஒன்னால பதில் சொல்ல முடியலெல்லே?’

மைதிலிஆயாசத்துடன் அவரைப் பார்த்தாள். இவருக்கு என்ன சொன்னாலும் விளங்கப்போவதில்லை.. சீனி வேற என்னடா இவள காணோமேன்னு நினைச்சிண்டிருப்பான்..

‘அங்கிள் நா சீனிய கொண்டு அவனோட த்துல விட்டுட்டு ஆஃபீஸ் போணும்.. ஒங்க கேள்விக்கு இன்னொரு நா சாவகாசமா பதில் சொல்றேனே.. ப்ளீஸ்..’

அதான.. பதில் சொல்ல முடியலைன்னா நைசா நழுவிருவீங்களே.. அதுலதான் ஒங்க ஜெனரேஷன் ஆளுங்க எக்ஸ்பர்ட்டாச்சே..

‘சரிம்மா..’ என்றார் ராஜகோபாலன்.

மைதிலி விட்டால் போதும் என்ற நினைப்புடன் சீனிவாசன் இருந்த அறையை நோக்கி விரைந்தாள். அவன் புறப்பட தயாராக மருத்துவமனையிலிருந்த ஒரு சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்தான்.

அவளைக் கண்டதுமே ஒரு சிறு குழந்தையின் மகிழ்ச்சி முகத்தில் தெரிய, ‘ஹை மைதிலி.. I am ready and raring to go’ என்றான்.

வாசலுக்கு வெளியே காத்திருந்த டாக்சி ஒன்றை க்ளினிக்குள் வரவழைத்த மைதிலி சீனிவாசனை லாவகமாய் பின்னிருக்கையில் அமர்த்திவிட்டு அவனருகில் ஏறி அமர வாகனம் வாசலைக் கடந்து காலை நேர போக்குவரத்தில் கலந்து விரைந்தது..

சிறிது தூரம் சென்றதும் சீனிவாசன் சட்டென்று, ‘Hey My! did you see my cell phone?’ என்றான்.

மைதிலி நினைவுக்கு வந்தவளாய்.. ‘நேத்தே கேக்கணும்னு நினைச்சேன்.. நீ விழுந்த எடத்துலதான் எங்கயோ மிஸ் பண்ணிட்டேன்னு நினைக்கறேன்.. போற வழியில தாதர்  போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளெய்ண்ட் குடுத்துரலாமா? அப்புறம் அத வேற யாராச்சும் எடுத்து ஏதாச்சும் இல்லீகல் ஆக்டுக்கு யூஸ் பண்ணிட்டா நீதான் மாட்டிப்பே?’ என்றாள்.

சீனிவாசன் வியப்புடன் அவனைப் பார்த்தான். ‘Yeah.. it is possible. But I don’t have the IMEI number of my mobile now. I remember having stored it in my laptop. Without that no use in registering the complaint..’

மைதிலி குழப்பத்துடன் அவனைப் பார்த்தாள்.. அவர்களுடைய வாகனம் சையான் சந்திப்பை நெருங்கிக்கொண்டிருந்தது தெரிந்தது..

‘என்ன நம்பர் அது சீனி? அதுக்கும் கம்ப்ளெய்ண்டுக்கும் என்ன சம்பந்தம்?’ என்றாள்.. ஆனாலும் இதை எங்கோ கேட்டிருந்த நினைவுக்கு அவளுக்கு..

சீனிவாசன் அவளைப் பார்த்து கேலியுடன் சிரித்தான். ‘Dial *#06# from your cell phone.’

மைதிலி தன்னுடைய கையிலிருந்த செல் ஃபோனை பார்த்தாள். ‘இதுலருந்தா?’

‘Yes. Dial..’

*#06# என்று முனுமுனுத்தவாறு டயல் செய்து முடித்ததும் ஒரு நீண்ட எண் வரிசை திரையில் தென்பட்டது..

‘Yeah.. that’s what your cell phone’s IMEI number. If you report this to your service provider.. they would immediately find out from which corner of the City the phone is being used.. without that.. no use..’ என்று உதட்டைப் பிதுக்கியவனையே பார்த்தாள் மைதிலி..


தொடரும்..

2 comments:

siva gnanamji(#18100882083107547329) said...

3/40 க்கு மேல் பதிவு போடுவீங்கன்னு
யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டாங்க
அதான் பின்னூட்டமே இல்லெ
நிகழ்காலத் தலைமுறை பற்றி நல்ல
மதிப்பீடு

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க ஜி!

நிகழ்காலத் தலைமுறை பற்றி நல்ல
மதிப்பீடு //

ஏன், நம்ம தலைமுறையைப் பற்றியும் கூறியிருந்தேனே.. அதுவும் சரிதானே:)