ஆங்கிலத்தில் Madras Credit Corporation Ltd., அல்லது MCC என்று சுருக்கமாக அழைக்கப்பட்டு சென்னையில் இயங்கிவந்த அந்த தனியார் நிதிநிறுவனம் சென்னை மற்றும் தமிழ்நாட்டில் பல கிளைகளைக் கொண்டிருந்தது.
சென்னை அண்ணாசாலையிலிருந்த அதன் தலைமையகத்தில் அதன் இயக்குனர்களின் அவசர கூட்டம் (Emergency Board Meeting) நடைபெற்றுக்கொண்டிருந்தது.
கூட்டத்தை தலைமையேற்று நடத்திய நிறுவனத்தின் சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குனர் பதவியிலிருந்த முத்தையா செட்டியாருடைய முகத்தில் கவலையின் ரேகைகள் நன்றாகவே தெரிந்தன. ஏறத்தாழ நூறாண்டு காலமாக அவருடைய மூதாதையர் நடத்திவந்த நிறுவனத்தை அவர் பொறுப்பேற்று நடத்த ஆரம்பித்த கடந்த இருபதாண்டு காலத்தில் இப்படியொரு நெருக்கடியை அவர் சந்தித்ததேயில்லை.
தனக்கு முன்னே நீள் வட்ட வடிவ மேசையில் அமர்ந்திருந்த தன்னுடைய இயக்குனர்களை ஒருமுறை பார்த்தார். இயக்குனர்களில் ஒருவரும் அவருடைய வலதுகரம் என அழைக்கப்பட்ட சென்னையில் மிக பிரபலமான சார்ட்டர்ட் அக்கவுண்டண்ட் நிறுவனத்தின் தலைமை பாகஸ்தரான வேணுகோபாலைத் தவிர மற்றவர்கள் எல்லோரும் பதற்றத்துடன் அவரையே பார்ப்பது தெரிந்தது.
அவர்களுள் ஒருவர் தனக்கு முன்னாலிருந்த நிறுவனத்தின் நிதியறிக்கையை எடுத்து மேசையில் கோபத்துடன் வீசியெறிந்தார். ‘இதென்ன சார் அக்கிரமமா இருக்கு. எல்லா மாசமும் போர்ட் மீட்டிங்குன்னு பேருக்கு நடத்திக்கிட்டிருக்கீங்க. ஒரு மீட்டிங்குல கூட நம்ம கம்பெனி இவ்வளவு மோசமான நிலமையிலருக்குன்னு டிஸ்கஸ் பண்ணவேயில்லை. இப்ப திடுதிடுப்புன்னு வந்து நம்மளால ஜனங்களோட ஃபிக்ஸட் டெப்பாசிட்டக் கூட திருப்பித் தராத நிலமையிலருக்கோம்னு சொன்னா என்ன அர்த்தம் சார்? நீங்க கம்பெனிய நடத்துன லட்சணத்துல எங்களால வெளியில தலகாட்ட முடியல.. இன்னைக்கி கம்பெனி நிலவரத்தப்பத்தி முழுசையும் தெரிஞ்சிக்காம இந்த மீட்டிங்லருந்து போகப்போறதில்லை சார். எவ்வளவு நேரமானாலும் சரி.’
முத்தையா தன்னருகில் அமர்ந்திருந்த நிறுவனத்தின் பொது மேலாளரை பார்த்தார். அவர் தனக்கு முன்னாலிருந்த கோப்பை விரித்து தன்னுடைய வெள்ளெழுத்து கண்ணாடியை அணிந்துக்கொண்டு படித்துவிட்டு தன் முன் அமர்ந்தவர்களை பார்த்தார். பிறகு கோப்பிலிருந்து வாசிக்க ஆரம்பித்தார்.
‘நம்ம கம்பெனியில பொது மக்களோட ஃபிக்ஸட் டெப்பாசிட் ரூ.175 கோடி இருக்கு. அதுல இந்த வருசம் திருப்பிக் கொடுக்க வேண்டிய தொகை ரூ.32 கோடி. இதுல ஓவ்வொரு மாசமும் திருப்பிக் கொடுக்க வேண்டியது ஆவரேஜா ரெண்டுலருந்து ரெண்டரை கோடி இருக்கும்.. போன வருசம் செப்டம்பர் மாதத்துலருந்து ரீப்பே பண்றத சஸ்பெண்ட் பண்ணியிருக்கோம்.’
‘சஸ்பெண்ட் செஞ்சிருக்கீங்களா? யார கேட்டுக்கிட்டு செஞ்சீங்க? இத எப்படி எங்கக்கிட்ட கேக்காம செஞ்சீங்க, சேர்மன்?’
சேர்மன் முத்தையா குறுக்கிட்டு பேசிய இயக்குனரைப் பார்த்தார். அவர் ஒருத்தர்தான் இந்த நிறுவனத்திலிருந்து எந்த சலுகையையோ கடனையோ பெறாத நபர். அரசு பதவியில் நாற்பதாண்டுகாலம் பணிபுரிந்திருந்தாலும் எந்த சிக்கலிலும் சிக்காமல் ஓய்வு பெற்றிருந்தவர். அவருடைய பெயர் தனது நிறுவனத்திற்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுக்குமே என்ற எண்ணத்தில்தான் அவரை தானே முன்மொழிந்து இயக்குனராக்கியதை நினைத்துப் பார்த்தார்.
‘நீங்க அந்த மீட்டிங்குக்கு வரலை சார். மகள பாக்கணும்னு ஊருக்கு போயிருந்தீங்க.’ என்றார் பொறுமையாக.
‘சரி சார். ஒத்துக்கறேன். ஆனாலும் அந்த போர்ட் மீட்டிங்கோட மினிட்ஸ எனக்கு அனுப்பியிருப்பீங்க இல்லே.. ஆனா அப்படியொரு மினிட்ஸ வாசிச்ச ஞாபகமே எனக்கு இல்லையே?’
உண்மைதான். அப்படியொரு டிஸ்கஷன் இயக்குனர் கூட்டத்தில் நடந்திருந்தால்தானே மினிட்சில் வருவதற்கு? ஆனால் இதை எப்படி அவருக்கு கூறி புரியவைப்பதென தெரியாமல் ‘சார் உங்களுக்கு அந்த மினிட்ஸ தரச்சொல்றேன். இப்ப மீட்டிங்க கண்டினியூ பண்ணலாம்.’ என்று சொல்லி சமாளித்தார்.
அவர் சம்மதம் என்பதுபோல் வாளாவிருக்கவே முத்தையா தன் முன்னாலிருந்த குறிப்பேட்டில் எதையோ கிறுக்கி தன்னுடைய பொது மேலாளரை முன் வைத்தார்.
‘Don’t elaborate. Be brief’ என்ற அந்த கிறுக்கலை வாசித்த பொது மேலாளர் சங்கடத்துடன் தன்னுடைய முதல்வரைப் பார்த்தார். பிறகு, ‘பிரின்சிபல் தொகைய திருப்பிக்கொடுக்க ஆறு மாத கால கெடு வேண்டும் வட்டியை அடுத்த இரண்டு மாதங்களில் முழுவதுமாக கொடுத்துவிடுகிறோம் என்று கூறி எல்லா வாடிக்கையாளர்களுக்கும் தனிப்பட கடிதம் எழுதியிருக்கிறோம்.. ஆனால்..’ என்று தொடர்ந்தார்
‘அதையும் இப்ப குடுக்க முடியலைன்னு சொல்ல போறீங்களாக்கும். I am sorry Chairman.. I don’t want to continue in this Board. Please allow me to resign.. I am ashamed of this post..’ என்றவாறு சற்று முன் ஆட்சேபம் தெரிவித்த இயக்குனர் தன் இருக்கையை பின்னுக்கு தள்ளிக்கொண்டு எழுந்து நிற்க அவரை ஏளனத்துடன் பார்த்தார் ஆடிட்டர் வேணுகோபாலன்..
போய்யா.. என்னமோ நீ போய்ட்டா கம்பெனிய மூடிறப்போறா மாதிரி..
மேசையில் அமர்ந்திருந்த யாருமே அவரை தடுக்காத நிலையில் அவர் சில நிமிடங்கள் நேரம் காத்திருந்துவிட்டு அறையை விட்டு வெளியேற சேர்மன் எழுந்து அவரைப் பிந்தொடர்ந்து சென்றார்.
‘சார்.. அவசரப்பட்டு ரிசைன் செஞ்சிராதீங்க, ப்ளீஸ்.’ என்றார்.
‘இதுக்கப்புறமும் இந்த கம்பெனியில நான் தொடர்ந்து இருந்தா என் பெயர் கெட்டுப்போயிரும் சார். நாப்பது வருசமா இந்த பேருக்குத்தான அரசியல்வாதிங்களோட அவமானத்தையெல்லாம் பொருட்படுத்தாம என் வழியிலயே நான் போய்க்கிட்டிருந்தேன்.. இந்த வயசான காலத்துல எனக்கு இப்படியொரு நிலமை வேணுமா சார்.. என்னெ விட்டுருங்க..ஆனா போறதுக்கு முன்னால ஒன்னு சொல்றேன்.. இதுக்கு ஒங்க மகன் நேத்தாஜியும் ஒங்க மருமகனுந்தான் காரணம்.. ஹார்வர்ட்ல படிச்சிட்டு வந்தா போறுமா சார்.. அங்க பார்த்ததையெல்லாம் இங்கயும் வந்து செய்யணும்னு நினைச்சா அது நடக்குமா..எத்தன மீட்டிங்குல தலபாடா அடிச்சிக்கிட்டிருப்பேன்.. நீங்களுந்தான சார் அந்த ரெண்டு பசங்களோடயும் சேர்ந்துக்கிட்டு என்னெ அவாய்ட் செஞ்சீங்க? I am sorry.. My decision is final.. Goodbye..’
அவருடைய பதிலுக்கு காத்திராமல் விடுவிடுவென சென்றவரையே சில விநாடிகள் பார்த்துக்கொண்டு நின்றுவிட்டு ஒரு நீண்ட பெருமூச்சுடன் கூட்டம் நடந்த அறைக்கு திரும்பினார் முத்தையா..
‘என்ன சார்.. அந்தாள் போய்ட்டானா.. அந்தாள் சரியான பயந்தாங்கொள்ளி சார்.. பிரச்சினைன்னு வந்ததும் நழுவிட்டான்.. அவன் கெடக்கறான்..’ என்றார் வேணுகோபாலன்.
முத்தையா தன் இருக்கையில் அமர்ந்து எல்லோரையும் ஒருமுறை பார்த்தார்.. ‘அவர் கோபப்பட்டதுல எந்த தப்பும் இல்ல.. இப்படியொரு தீர்மானம் எடுக்கறதுக்கு முன்னால நிச்சயமா போர்ட் மீட்டிங்ல டிஸ்கஸ் செஞ்சிருக்கணும்.. செய்யலை.. அதுக்கு யார் காரணம்னு இப்ப பேசறதவிட இதுக்கப்புறம் என்ன செய்யணும்னு பேசறதுதான் சரி..’
‘சொல்லுங்க சார். அதுக்குத்தான இந்த மீட்டிங்க அவசரமா கூட்டுனீங்க..?’ என்றார் ஒரு இயக்குனர். அவர் நகரத்தில் இருந்த பெரிய நகைக்கடையின் முதலாளி. தன்னுடைய இயக்குனர் பதவியை பயன்படுத்தி சுமார் நான்கு கோடி கடனாக பெற்றுவிட்டு திருப்பி தராமல் காலந்தாழ்த்திக்கொண்டிருப்பவர்.
‘நமக்கு வரவேண்டிய மொத்த கடன் தொகையில போன ஆறுமாசமா காலாவதியாகி நிக்கற தொகையில பாதிய ரிக்கவர் செஞ்சாலே டிப்பாசிட்டர்சுக்கு அவங்க பணத்த திருப்பி குடுத்துற முடியும்.. அதுல நம்ம போர்ட் மெம்பர்ஸ் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள்ட்டருந்தே சுமார் பதினாறு கோடி நிலுவையில் நிற்கிறது.'
அறையிலிருந்த எல்லோரும் ஒருவரையொருவர் பார்த்தனர். ‘என்ன இவர் அடிமடியிலயே கை வைக்க பாக்காரு..’ என்றார் நகைக்கடை முதலாளி தன்னருகில் இருந்தவரிடம்.. ‘அதானே..’ என்றார் இரண்டு கோடியை திருப்பி தர வேண்டியிருந்த இரும்பு வியாபாரி..
‘சார்.. நீங்க நம்ம க்ரூப் கம்பெனிக்கு டைவர்ட் பணத்த முதல்ல திருப்பி கொண்டுவர பாருங்க.. அதுசரி.. எங்க ஒங்க மகனையும் மருமகனையும் காணோம்..?’ என்றார் வேணுகோபாலன்..
சேர்மன் சங்கடத்துடன் நெளிந்தார்.. ‘அவங்க ரெண்டு பேரையும் ரிக்கவரிக்கு அனுப்பியிருக்கேன்..’
‘அதுக்கு எதுக்கு சார் வெளியில போணும்.. ஒங்க ஃபெர்ட்டிலைசர் கம்பெனிக்கு டைவர்ட் செஞ்சீங்களே.. எவ்வளவு ஜி.எம் சார்..?’ என்றார் வேணுகோபாலன் விடாமல். அவருக்கு அவருடைய நண்பர் மருத்துவர் சோமசுந்தரத்திற்கு அவர் பரிந்துரைத்து பெற்றுக்கொடுத்த கடனை உடனே திருப்பி அடைக்க வேண்டியிருக்குமோ என்ற பயம்..
பொது மேலாளர் தன் முதல்வரைப் பார்த்தார். அவர் ‘சொல்லுங்க.. எல்லாருக்கும் தெரிஞ்சதுதானே..’ என்றார்.
‘கடந்த மார்ச் 31ம் தேதி நிலவரப்படி ரூ.225 கோடி’ என்றார் சுருக்கமாக.. யாரும் அவருக்கு முன்பிருந்த நிதியறிக்கையை பறித்து படிக்கமாட்டார்கள் என்ற தைரியம்.. அதனால்தான் ரூ.400 கோடியை ரூ.225 கோடி என்று படித்தார்..
ஆடிட்டர் வேணுகோபாலுக்கு அவர் கூறிய பொய் தெரிந்துதானிருந்தது. இருந்தாலும் மவுனமாக இருந்தார். இதை வைத்தே தன்னுடைய காரியத்தை நடத்திக்கொள்ள முடியுமே என்ற எண்ணம் அவருக்கு.
‘என்ன சார்.. இவ்வளவு பெரிய தொகைய டைவர்ட் பண்ணிட்டு எங்களோட சில்லறைக் கடன வசூலிக்கறதுல குறியாருக்கீங்க? மொதல்ல நீங்க ஒங்க கம்பெனிக்கு டைவர்ட் செஞ்சிருக்கற தொகையில அடுத்த ஒரு மாசத்துல இருபத்தஞ்சு பர்செண்ட்... ரூ.225 கோடியில இருபத்தஞ்சு பெர்சண்ட்னா சுமார் ரூ.50 கோடி. இப்போதைக்கு அத ரிக்கவர் செய்யணும்னு ரிச்லூஷன் பாஸ் செய்யறோம்.. அடுத்த மீட்டிங்குகுள்ள ரிக்கவர் செஞ்சிருக்கணும்.. அத வச்சி அசல கொஞ்சம், வட்டிய கொஞ்சம் எவ்வளவு பேருக்கு கொடுக்க முடியுமோ அவ்வளவு பேருக்கு கொடுத்துருங்க.. அடுத்த மாசத்துலருந்து ஒரு வருசத்துக்குள்ள நீங்க டைவர்ட் செஞ்சிருக்கற முழு தொகையையும் நம்ம கம்பெனிக்கு திருப்பி கொண்டுவந்திரணும்.. அதுக்கு நீங்க, ஒங்க மகன், மருமகன் மூனு பேரும் பொறுப்பு.. இது இந்த மீட்டிங்கோட ஒட்டு மொத்த கருத்து.. என்னய்யா சொல்றீங்க?’ என்றவாறு தன் சகாக்களைப் பார்த்தார் நகைக்கடை முதலாளி கே.ஆர்.தங்கவேலு..
இதுதான் சமயம் என்று சேர்மன் முத்தையாவைத் தவிர எல்லோரும் தலையை அசைக்க அதுவே அன்றைய கூட்டத்தின் முடிவானது..
இந்த முடிவு தன்னை எந்தவிதத்தில் பாதிக்கப் போகிறது என்பதை அறியாமல் அந்நிறுவனத்தின் சென்னை கிளைகளில் ஒன்றில் இரண்டு மணி நேரத்திற்கும் கூடுதலாக கால்கடுக்க நின்றிருந்தார் ஓய்வு பெற்ற சமயத்தில் கிடைத்த தொகையை முழுவதும் முதலீடு செய்திருந்த ஓய்வு பெற்ற அரசு அதிகாரி ரத்னசாமி.
தொடரும்..
பூர்ணிமா ராவ், சேவியர் பர்னாந்து, ரத்னசாமி, ஆடிட்டர் வேணுகோபாலன் மற்றும் MCC நிறுவனம் என்ற புது கதாபாத்திரங்களுடைய அறிமுகத்துடன் இத்தொடரின் முதல் பகுதி நிறைவுறுகிறது.
ஒவ்வொரு நிறுவனத்திலும் ஒரு புதிய தலைவருடைய பதவியேற்புடன் அந்நிறுவனத்தில் பணிபுரிபவர்களுடைய அலுவலக வாழ்க்கை மட்டுமல்ல அவர்களுடைய குடும்ப வாழ்க்கையும் கூட பாதிக்கப்படுவது சகஜம்.
இத்தொடரிலும் அப்படித்தான் நடக்கப்போகிறது.
சிலருடைய வாழ்க்கையில் முன்னேற்றமும் சிலருடைய வாழ்க்கையில் பின்னடைவும், சிலருக்கு வெற்றிகளும், சிலருக்கு தோல்விகளும், அதனால் ஏற்படுகிற மகிழ்ச்சி சிலருக்கு, துக்கம் சிலருக்கு..
பிரிந்திருந்தவர்கள் சேருவதும், சேர்ந்திருப்பவர்கள் பிரிவதும் இருக்கும்..
கதையின் ஓட்டத்தில் இன்னும் சில கதாபாத்திரங்கள் கூட சேர்க்கப்பட வாய்ப்பிருக்கிறது..
இத்தொடரை இதுவரை சுமார் 14000 வாசக நண்பர்கள் படித்திருக்கிறார்கள். அதாவது ஒரு எப்பிசோடுக்கு 140 வாசகர்கள் வீதம்..
கடந்த வாரத்தில் நான் எழுதி முடித்திருக்கும் கதை சுருக்கத்தின்படி இன்னும் சுமார் நூறு அத்தியாயங்கள் வரும் என்று நினைக்கிறேன்..
தொடர்ந்து ஆதரவு தரவேண்டுமென்று கேட்டுக்கொண்டு முதல் பாகத்தை நிறைவு செய்கிறேன்.
அடுத்த பதிவில் இதுவரை நடந்ததை சுருக்கமாக தருகிறேன்..
அன்புடன்,
ஜோசஃப்
8 comments:
வருக புதிய கதாபாத்திரங்களே வருக
உங்க சாதனைகளை அள்ளி அள்ளித் தருக!
வெற்றிகரமான்100 வது பதிவு,நாளை.
விழா ஏதும் உண்டா?கொண்ட்டாட்டமுண்டா?
குறைந்த பட்சம்,
"அய்யாசாமிக்குக் கல்யாணம்;
அவரவர் வீட்டிலே சாப்பாடு;
கொட்டு முழக்கு கோயிலிலே" என்ற மாதிரியாவது..........
வாங்க ஜி!
என்னடா இது வர்ற ஒரேயொரு விருந்தாளியையும் இன்னும் காணோமேன்னு வழிமேல விழிவைத்து காத்துக்கிட்டிருந்தேன்..
ஓய்வெடுத்து முடிச்சதும் வந்துட்டீங்க..
அய்யாசாமிக்குக் கல்யாணம்;
அவரவர் வீட்டிலே சாப்பாடு;
கொட்டு முழக்கு கோயிலிலே" //
சார்.. சூப்பரா சொல்றீங்க.. ஏன் நீங்களும் ஒரு கதை எழுதக்கூடாது..?
இப்பதானெ "தட்டுத் தடுமாறி.."
வந்திருக்கேன்...இனிமே தவழ்ந்து உருண்டு தளர்நடை பயின்று பிறகு ஒடலாம்
சார்,
சில குழந்தைங்க தவழாம நேரா நடக்கவே ஆரும்பிச்சிருங்க..
அதுமாதிரிதான் நீங்களும்..
சும்மா எழுதுங்க.. காசா, பணமா?
"அய்யாசாமிக்குக் கல்யாணம்;
அவரவர் வீட்டிலே சாப்பாடு;
கொட்டு முழக்கு கோயிலிலே"
வரும் ஜூலை இரண்டாம் தேதி உட்லேண்ட்ஸ் டிரைவ் இன்னில் அதற்கு ஒத்திகை நடை பெற உள்ளது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
வாங்க டோண்டு சார்,
வரும் ஜூலை இரண்டாம் தேதி உட்லேண்ட்ஸ் டிரைவ் இன்னில் அதற்கு ஒத்திகை நடை பெற உள்ளது.//
இதுக்கு பேர்தான டட்ச் ஸ்டைல்..?
ஜோசப் சார்,
அருமையான தொடர். பின்னூட்டம் இடாவிட்டாலும் எல்லா அத்தியாயங்களையும் தவறாமல் படித்து வருகிறேன். துறை தொடர்பான நிகழ்வுகளை ஆய்வு செய்து பாலகுமாரன் சில நாவல்கள் எழுதியுள்ளார். அதில் இல்லாத ஆழமான தகவல்களும் உள் அரசியல்களும் நிரம்பி, ஆர்தர் ஹீலியின் வரிசை நாவல்களின் தரத்துக்கு சூரியன் உயர்கிறது என்பது என்னுடைய கருத்து.
இதன் இரண்டாவது பாகம் இன்னும் சூடாகப் போகும் என்று காத்திருக்கிறேன். ஒரு வேண்டுகோள், இன்னும் புதிய பாத்திரங்களைச் சேர்க்காமல் இருந்தால் நல்லது .
அன்புடன்,
மா சிவகுமார்
வாங்க சிவகுமார்,
இன்னும் புதிய பாத்திரங்களைச் சேர்க்காமல் இருந்தால் நல்லது . //
வலுக்கட்டாயமாக சேர்க்கமாட்டேன். அப்படியே சேர்த்தாலும் இப்போதுள்ள பாத்திரங்களுக்கு துணையாகவோ வலு சேர்க்கும் விதமாகவோத்தான் இருக்கும்.
இருப்பினும் உங்களுடைய ஆலோசனைக்கு மிக்க நன்றி.
தொடர்ந்து படியுங்கள்..
Post a Comment