7.6.06

சூரியன் 91

சுந்தரலிங்கம் எவ்வளவு வேலையிருந்தாலும் இரவு பத்துமணிக்கு உறங்கச் சென்றுவிடுவது வழக்கம்.

அதேபோல் காலையிலும் சரியாக 4.30 மணிக்கு எழுந்துவிடுவார். இன்று நேற்றல்ல கடந்த பத்து வருடங்களாக..

காலையில் எழுந்ததும் காலைக் கடன்களை முடித்துக்கொண்டு நடக்க சென்றால் சரியாக ஒரு மணி நேரம் கழித்துத்தான் வீடு திரும்புவார். வழியிலேயே அன்றைய சமையலுக்கு வேண்டிய காய் கறிகளையும் வாங்கிக்கொண்டு வந்துவிடுவார்.

‘நீங்க ஒரு பேங்க் சி.ஜி.எம்ப்பா.. நீங்க போயி ரோட்டோரத்துலருக்கற கடையில காய்கறி வாங்க நிக்கணுமா? வேலைக்காரி லச்சுமிகிட்ட சொன்னா வாங்கிட்டு வரப்போறா?’ என்ற மகளிடம், ‘ஏம்மா, சி.ஜி.எம்னா கொம்பா முளைச்சிருக்கு? நம்ம வீட்டுக்கு வேண்டியத வாங்கறதுல என்ன ஈகோ வேண்டியிருக்கு? நாம பாத்து வாங்கறா மாதிரி வேலை செய்யறவங்க வாங்குவாங்களா என்ன? அம்மாவுக்கு முத்திப்போன காய்கறிகள சாப்பிட்டாத்தான் மூச்சு வாங்கும்னு ஒனக்கு தெரியாதா என்ன?’ என்பார்.

சுந்தரலிங்கத்தின் மனைவி கனகாவை திருமணம் செய்தபோதே அவருக்கு ஆஸ்துமா இருந்தது அவருக்கு தெரிந்துதானிருந்தது. கனகாவைப் பெண் பார்க்க சென்றபோது அந்த மெலிந்த தேகமும், வட்ட வடிவ குடும்பபாங்கான முகத்தைப் பார்த்ததுமே அவருக்கு பிடித்துப் போனது.

அவர் பெண்வீட்டாரிடமே தன்னுடைய சம்மதத்தை தெரிவித்துவிட அவருடன் சென்ற அவனுடைய பெற்றோர் அவரை முறைத்தனர். ‘முந்திரிக்கொட்டை, முந்திரிக்கொட்டை.. ஏண்டா அதான் நாங்க வந்திருக்கோமே, எங்களுக்கு தெரியாதா? நீ அவசரப்பட்டு பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டே.. இப்ப பார் இவ்வளவுதான் எங்களால முடியும்னு சட்டம் பேசறதே? அப்படியென்னடா அந்த பொண்ணுக்கிட்ட பார்த்தெ சடார்னு பிடிச்சிருக்குன்னு சொல்றதுக்கு?’ என்று சிடுசிடுத்த தன் தாயைப் பார்த்தார்.

‘அம்மா இதான் தெய்வ சங்கல்பங்கறது. நான் இங்க வர்ற வழியில ஒரு சிவன் கோயில பார்த்தேன்.. நாம வாசலை கடக்கறப்ப இதாண்டா நா ஒனக்கு பாத்து வச்சிருக்கற பொண்ணுன்னு ஏதோ ஒரு குரல் என் மனசுல கேட்டுதும்மா. அதான் பொண்ண பாத்ததுமே ஒத்துக்கிட்டேன்.. நீ ஏம்மா அவங்கக்கிட்ட இது வேணும், அது வேணும் கேக்கலாமான்னு பாக்கறே? ஒனக்கு என்னெ விட்டா யாரு இருக்கா.. தம்பியா, தங்கையா? ஒங்க ரெண்டு பேரையும் என்னால கடைசிவரைக்கும் சந்தோஷமா பாத்துக்க முடியாதுன்னா நினைக்கறே..’

‘ஆமாண்டா இப்ப இப்படித்தான் பேசுவே.. கல்யாணத்துக்கப்புறமும் இப்படியே இருப்பேன்னு என்ன நிச்சயம்? அதான் ரொக்கமா கொஞ்சம் கேக்கலாம்னு இருந்தேன்.. அதயும் கெடுத்துட்டே..’

சுந்தரலிங்கம் அப்போதுதான் குமாஸ்தா பதவியிலிருந்து அதிகாரியாக பதவி உயர்வு பெற்றிருந்தார். அவருடைய பிறந்து, வளர்ந்த ஊரான திருச்செந்தூரிலேயே போஸ்ட்டிங்கும் கிடைத்திருந்தது.

அவருடைய தந்தைக்கு தெரிந்த இடத்தில் தூத்துக்குடியில் ஒரு பெண் இருக்கிறது என்று கேள்விப்பட்டுத்தான் அவருடைய பெற்றோர் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் என ஒரு கூட்டமே ஒரு பஸ்சை வாடகைக்கு அமர்த்தி பெண் பார்க்க வந்திருந்தனர்.

பார்த்த மாத்திரத்திலேயே பெண்ணை அவருக்கு பிடித்துப்போக அடுத்த முகூர்த்தத்திலேயே திருச்செந்தூர் முருகன் கோவிலிலேயே திருமணமும் எந்தவித ஆடம்பரமும் இல்லாமல் முடிந்தது.

திருமணம் நடந்தது தை மாதம்.. திருமணம் நடந்த அன்று நல்ல குளிர்.. காலையிலிருந்து புகை, தூசி என்று அல்லல்பட்டதாலோ என்னவோ அன்று இரவே கனகாவுக்கு மூச்சுவிட முடியாமல் மூர்ச்சையாகி விழ திருமண வீடு கலவரமைடைந்தது.

ஆனால் சுந்தரலிங்கம் பதற்றமடையாமல் இருந்தார். அதிகாரி பயிற்சிக்காக அவருடைய வங்கியின் தலைமை அலுவலகம் இருந்த மும்பைக்கு சென்றிருந்த சமயத்தில் பயிற்சிக்கு வந்தவர்களை அருகிலிருந்த லோனாவாலாவுக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக அழைத்துச் சென்றிருந்தனர்.

அவருடன் ஒரே அறையில் தங்கிய அவருடைய வங்கியின் சென்னைக் கிளையில் பணிபுரிந்திருந்தவர் விடியற்காலையில் மூச்சு விடமுடியாமல்  தடுமாறியதைப் பார்த்து பயந்துபோய் மருத்துவரை அழைக்கவா என்று வினவ அவருடைய நண்பர் பதற்றப்படாமல் தன்னுடன் கொண்டுவந்திருந்த மாத்திரைகளில் இரண்டை போட்டுக்கொண்ட சிறிது நேரத்தில் குனமடைந்திருந்ததைப் பார்த்திருந்தார். பிறகுதான் தெரிந்தது அவருக்கு சிறுவயது முதலே ஆஸ்துமா இருந்தது என்று..

‘இது ஒரு ந்யூசன்ஸ்தான் சார். பெரிசா ஒன்னும் பாதிப்பு இருக்காது. என்ன, விண்டர் சீசனானா கொஞ்சம் ட்ரபிள் பண்ணும். அதுக்கு வேண்டிய மருந்து, மாத்திரைங்க மட்டும் கையிலருந்தா போறும்..’ என்று அடுத்த நாள் காலை நண்பர் கூறியதை நினைத்துப் பார்த்த சுந்தரலிங்கம், ‘இந்த மாதிரி நோயாளிப் பொண்ண எம்பையன் கழுத்துல கட்டிட்டீங்களே’ என்று பதற்றப்பட்ட தன் பெற்றோரை சமாதானப்படுத்தினார்.

‘என்னடா சொல்றே.. ஒன்னுமில்லையா? ஆம்பிளைன்னா பரவால்ல.. காலங்கார்த்தால எழுந்து சமையல் செஞ்சி புருசன வேலைக்கு அனுப்ப வேண்டிய பொண்ணு மூச்சுவிட முடியாம படுத்துக்கிடந்தா நல்லாவாடா இருக்கும்? ஒன்னுமில்லேங்கறே?’

சுந்தரலிங்கம் அப்போதும் பொறுமையுடன், ‘நா பாத்துக்கறேம்மா.. இத பெரிசு பண்ணாதீங்க. விட்டுறுங்க..’ என்றார்.

‘என்னமோ போ.. நீயாச்சி.. ஒம் பெஞ்சாதியாச்சி.. எலும்பும் தோலுமாருந்தப்பவே நினைச்சேன்.. பொண்ணுக்கு இப்படி ஏதாச்சும் இருக்கும்னு.. நீதான் பாக்காதத பாத்தா மாதிரி பொண்ண பாத்தவுடனே சரின்னுட்டே.. எப்படியோ போ.. இதுதான் ஒன் தலையெழுத்து போலருக்கு..’

அவனுடைய பெற்றோர் மட்டுமல்ல திருமணத்திற்கு குழுமியிருந்த அவனுடைய நண்பர்களும் உறவினர்களும் கூட அது அவருடைய தலையெழுத்து என்று நினைத்து அவருக்காக பரிதாபப்பட்டனர்.

ஆனால் அவர் அதை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை. திருமணமாகி முப்பது வருடங்கள் ஆகிவிட்டன.. கனகாவின் ஆஸ்துமாவோடு, ப்ளட் ஷ¤கர், ப்ளட் பிரஷர், மூட்டு வலி என வேறு சிலவும் சேர்ந்துக்கொண்டபோதும் அவர் கவலைப்படவில்லை.

அவரையும் தனக்கு பிறந்த மூத்த மகளாகவே நினைத்து கண்ணுங்கருத்துமாக பார்த்துக்கொண்டார். அவருக்காகவே மும்பையை தலைமையலுவலகமாகக்கொண்டிருந்த வங்கியில் டெப்புட்டி பொதுமேலாளராக (DGM) பணிபுரிந்துக்கொண்டிருந்த அவர் அங்கு தனக்கிருந்த பிரகாசமான எதிர்காலத்தையும் பொருட்படுத்தாமல் விலகி சென்னையிலிருந்த வங்கி ஒன்றில் ஒரு படி கீழே இறங்கி துணைப் பொதுமேலாளராக(AGM) சேர்ந்தார்.

இறைபக்தியும், நேர்மையும் அயரா உழைப்பும் அவரை அடுத்த பதினைந்து வருடங்களில் வங்கியின் CGM பதவிக்கு உயர்த்தியதுடன் வங்கியின் முதல்வர் பதவி விலகியதும் புதிய முதல்வர் அமர்த்தப்படும் வரை வங்கியின் தாற்காலிக முதல்வர் பதவியும் அவரைத் தேடிவந்தது.

இன்றுடன் அந்த பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது. புதிய முதல்வர் பதவியேற்கவிருக்கும் நாள்..

தன்னுடைய ஒரு மணி நேர நடையை முடித்துக்கொண்டு வீடு திரும்பிய சுந்தரலிங்கம் முதல் வேலையாக இஞ்சியை தோல் எடுத்து மிக்சியில் இட்டு அரைத்து அத்துடன் பாலைக் கலந்து சூடான கமகம காப்பி தயாரித்து இரண்டு கோப்பைகளில் ஊற்றி ஒரு கோப்பையை எடுத்துக்கொண்டு வரவேற்பு அறையையொட்டி இருந்த தன்னுடைய மனைவியின் படுக்கையறைக்குள் நுழைந்து கண் விழித்தும் மேல் மூச்சு வாங்க படுக்கை தலைமாட்டில் இரண்டு தலையணகளில் சாய்ந்து அமர்ந்திருந்த கனகாவின் அருகில் அமர்ந்தார்.

‘சூடா இத குடி, எல்லாம் சரியாயிரும்.’

பலஹீனமான புன்னகையுடன் அவரை நன்றியுடன் பார்த்தார் கனகா.. இந்த மாதிரி ஒரு புருசன குடுத்தியே முருகா.. ஒனக்கு எப்படிப்பா நன்றி சொல்றது?

கடந்த முப்பது வருடங்களில் ஒரேயொரு முறையாவது இவருக்கு என் மேல கோபம் வந்து ஏசிப்போட மாட்டாரான்னு காத்துக்கிட்டேருக்கேனே.. நடக்கலையே...

பதினஞ்சு வருசத்துக்கும் மேல தாம்பத்திய சுகத்தை மறந்து இப்படியொரு மனுசன் பெஞ்சாதிக்கு சேவகனா, ஒரு நல்ல நண்பனா.. இதுக்கு நான் தகுதியானவதானா..?

‘ச்சீ.. லூசு.. தாம்பத்திய சொகம் அவ்வளவு முக்கியமாடி..? என்னைக்காவது நான் சொல்றத எதுத்து நீ பேசியிருப்பியா..? இல்ல எனக்கு பிடிக்காத காரியத்த எதையாச்சிம் செய்திருப்பியா? நா எந்த மூடுல ஆஃபீஸ்லருந்து வந்தாலும் அதுக்கேத்தா மாதிரி நடந்துப்பியே.. அதுல ஒரு மனுசனுக்கு கிடைக்கற சந்தோசத்தவிடவாடி.. இந்த ஒடம்பு சொகம் தந்துரப்போவுது? நா பத்து வருசத்துக்கும் மேல ஊர் ஊரா சுத்தினபோதும் எம்பொண்ண அருமையா வளத்து ஆளாக்கிருக்கியே.. இதுக்கும் மேல என்னடி வேணும்?’ என்பார் சுந்தரலிங்கம் தன் இயலாமைய¨ நினைத்து அவள் கண்கலங்கி நின்றபோதெல்லாம்.

சூடான இஞ்சி கலந்த காப்பி உள்ளே இறங்கிய சற்று நேரத்திலெல்லாம் சகஜ நிலைக்கு வந்த கனகா மெள்ள எழுந்து அவரைப் பற்றிக்கொண்டு அறையை விட்டு வெளியே வந்தாள். ‘எல்லாம் நேத்து ராத்திரி நேரத்துல பீச்சில நின்னதுதான்னு நினைக்கிறேன். இப்ப பரவால்லைங்க.. இன்னைக்கி சேர்மன் சார்ஜ் எடுக்கற நாளாச்சே.. நீங்க பாட்டுக்கு என்னெ பாத்துக்கிட்டு நிக்கிறீங்க? போங்க.. போய் புறப்படற வழிய பாருங்க. நா இப்படியே லட்சுமி வர்ற வரைக்கும் சோஃபாவில கொஞ்சம் ஒக்காந்திருந்திருக்கேன். கொஞ்ச நேரம் ஃபேன் கீழ ஒக்காந்திருந்தா சரியாப் போயிரும்.. நீங்க போங்க.. மத்தியான சாப்பாடு வேண்டாமில்லே..’

சுந்தரலிங்கம் அனுதாபத்துடன் தன் மனைவியைப் பார்த்தார். ‘வெட வெடன்னு ஈறுகுச்சியாட்டம் இருக்காளேடா.. இதுல மூச்சு வாங்கறது வேற.. இவ என்னத்த புள்ளைய பெத்து, குடுத்தனம் நடத்தப்போறாளோ.. போ..’ என்று தன்னுடைய தாயை சலிப்படைய வைத்த கனகாவின் உடல்வாகுவா இது என்று நினைத்தார்.. ‘இருபத்தி மூனு வயசு பொண்ணு வெய்ட் 45.. என்னடி.. ஒங்க வீட்ல சாப்பாடே போட மாட்டாங்களா?’

‘உன் வெய்ட்ட ஒரு பத்து கிலோவாவது குறைன்னு எத்தன தரம் சொல்லியிருக்கேன்.. ஒடம்பு குறைஞ்சா இந்தமாதிரி மூச்சு வாங்கறப்போ கஷ்டமா இருக்காதில்லே..?’

கனகா நிமிர்ந்து தன் கணவனைப் பார்த்தாள். திருமணமானபோது பார்த்தாமாதிரியே இருக்கீங்களே.. ஒங்களால எப்படித்தான் ஒடம்ப அதே மாதிரி வச்சிக்க முடியுதோ..

‘என்னங்க நீங்க.. நானா இந்த ஒடம்பு வேணும்னு நிக்கேன்..? 90 கிலோன்னு மெஷின்ல பாக்கறப்பல்லாம் குறைக்கணும்னுதான் நினைக்கேன்.. கொறஞ்சாத்தானே..?’

சுந்தரலிங்கம் புன்னகையுடன் தன் மனைவியைப் பார்த்தார்.

‘என்னாங்க.. புறப்படாம என்னையவே பாத்துக்கிட்டு நிக்கறீங்க?’

‘சரி.. சரி.. இதோ புறப்பட்டுட்டேன்..’ என்றவாறு மாடியிலிருந்த அவருடைய அறையை நோக்கி நகர அவருடைய செல் ஃபோன் சிணுங்கியது.

அறிமுகமில்லாத தொலைப்பேசி எண்.. ‘யெஸ்.. சுந்தரம் ஹியர்.’ என்றார்.

‘சார்.. நான் சேர்மன் பி.ஏ. பேசறேன்..’

‘சொல்லுங்க.’

‘இன்னைக்கி லாபியில வச்சி சேர்மனுக்கு ஒரு சின்ன ரிசப்ஷன்.. H.O.விலருக்கற சீனியர் எக்ஸ்க்யூடிவ்ஸ் எல்லாம்..’

‘I know.. I am starting now. In another one hour I will be there. எம்.டிக்கு சொல்லிட்டீங்களா?’

எதிர்முனையில் தயக்கம் தெரிந்தது. ‘சார் நீங்களே கூப்ட்டு சொல்லிட்டா நல்லாருக்கும்.. நான் கூப்ட்டா ஒருவேளை நேத்து ஏர்ப்போர்ட்ல நடந்தத பத்தி கேட்டாலும் கேட்பார்..’

சுந்தரலிங்கத்திற்கு புரிந்தது.. ‘OK.. I will call him.. You go ahead..’ என்றவாறு இணைப்பைத் துண்டித்துவிட்டு சேதுமாதவனின் எண்ணை டயல் செய்தவாறு படிகளில் ஏறினார்..

தொடரும்..

4 comments:

G.Ragavan said...

சுந்தரலிங்கம் உண்மையான ஆண். முருகன் அவரயும் அவர் குடும்பத்தையும் நல்லபடியா வெச்சுக்கிரட்டும். வெச்சுக்கிருவார்.

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க ராகவன்,

சுந்தரலிங்கம் உண்மையான ஆண்//

உண்மைதான் ராகவன். நான் சந்தித்த ஒரு நண்பரின் பிம்பம்தான் இந்த சுந்தரம்..

மனைவி இறந்துவிட்டார். இப்போது அவர் மகளுடன் இருக்கிறார். நான் சந்தித்த நபர்களுள் இவர் ஒரு வைரம் என்று சொல்லும் அளவுக்கு நல்லவர்..

siva gnanamji(#18100882083107547329) said...

வைரங்கள் பூமிக்குள் புதைந்து கிடக்கின்றன;ஆனால் தடபுடா சப்தங்கள் எழுப்புகின்றன தகரங்கள்

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க ஜி!

வைரங்கள் பூமிக்குள் புதைந்து கிடக்கின்றன;ஆனால் தடபுடா சப்தங்கள் எழுப்புகின்றன தகரங்கள் //

அடடடா.. ரொம்ப நல்லாருக்கு உங்க பின்னூட்டம்..

நிலத்தில் புதைந்து கிடைக்கும் வைரம் வெளியிலும் ஜொலிக்கும்தானே..

நாப்பது தகர டப்பாக்கு ஒரு வைரம்னு இருக்கறதுனாலதானோ என்னவோ இந்த உலகம் இப்பவும் உருண்டுக்கிட்டு இருக்கு..