27.12.06

சூரியன் 158

மைதிலி புறப்பட்டு ரெடியாகியும் காலையிலிருந்து இருந்த இருக்கையிலேயே பிடிவாதமாக அமர்ந்துக்கொண்டு படித்த பத்திரிகையையே படிப்பது போல் பாவனை செய்துக்கொண்டிருந்த தன் தந்தையைப் பார்த்தாள்.

அவருடைய பார்வை பத்திரிகையில் இருந்தாலும் அவருடைய எண்ணம் முழுவதும் தன் மீதே இருக்கும் என்பதை அவளால் ஊகிக்க முடிந்தது.

அவரை இப்படியே விட்டால் சரிவராது என்ற தீர்மானத்துடன், ‘ஏம்ப்பா இன்னும் எத்தன நாழிதான் அந்த பேப்பரையே பார்த்துண்டிருப்பே. இப்ப நீ எழுந்து எங்கூட டாக்டர பாக்க வரப்போறியா இல்லையா?’ என்றாள் எரிச்சலுடன்.

பட்டாபி அப்போதும் அவளை சட்டை செய்யாமல் அமர்ந்திருக்க சமையலறையிலிருந்து ஹாலுக்கு வந்து அவரைப் பார்த்தாள் ஜானகி. ‘இருந்தாலும் ஒங்களுக்கு இத்தன வீம்பு ஆகாதுன்னா. அவ யாரு? ஒங்க பொண்ணுதான? ஒங்களுக்கு இருக்கற அதே அளவு வீம்புதான அவளுக்கும் இருக்கும்?’

பட்டாபி அப்போதும் மசியவில்லை.

‘சரிம்மா.. நா மாத்தரம் போய்ட்டு வரேன். அவர் எப்போ சொல்றாரோ அன்னைக்கி எனக்கும் டிக்கட் புக் பண்ணிடறேன். நா மாத்தரம் அவனோட சென்னைக்கி போயி நாம தங்கறதுக்கு நல்ல வீடா பாத்து அரேஞ் பண்ணிட்டு வந்து ஒங்க ரெண்டு பேரையும் அழைச்சிண்டு போறேன்.’ என்றவாறு மைதிலி வாசலை நோக்கி நடந்தாள் தன்னுடைய தந்தை எப்படியும் தன்னை தடுத்து நிறுத்துவார் என்ற நினைப்பில்.

அவள் நினைத்ததுபோலவே நடந்தது.

‘ஏய்.. என்ன நீ அவ பாட்டுக்கு எதையோ சொல்லிட்டு போறா.. நீயும் பாத்துண்டு நிக்கறே? அவள நிறுத்துடி’

ஜானகி எனக்கென்ன வந்தது என்பதுபோல தோளைக் குலுக்கிக் கொண்டு சமையலறைக்குள் புகுந்துக்கொண்டாள். எப்படியும் பட்டாபி எழுந்து மைதிலியை தடுத்து நிறுத்துவார் என்பது அவளுக்கு தெரியும்.

அவள் நினைத்ததுபோலவே நடந்தது.

‘ஏய் மைதிலி வாசல கடக்காதே, சொல்லிட்டேன்.’ என்றவாறு எழுந்தார் பட்டாபி.

மைதிலி நின்றாள். ஆனால் தன் தந்தையை நோக்கி திரும்பாமல் பேசினாள். ‘ஏன்? என்ன செஞ்சிருவேள்? அதயும்தான் சொல்லுங்களேன்?’

பட்டாபி பொங்கிவந்த கோபத்தை அடக்க முடியாமல் தடுமாறுவதை அவளால் உணர முடிந்தது. அவளையுமறியாமல் அவளுடைய உதடுகள் புன்னகையில் வளைந்தன. அப்பா இப்படித்தான். பாசத்தை மனதுக்குள் வைத்துக்கொண்டு வெளியில் வேஷம் போடுவார். இவரைப்பற்றி தெரியாதாக்கும்?

பட்டாபி கோபத்துடன் சமையலறையைப் பார்த்தார். ‘ஏய் ஜானகி.. சொல்லி வை ஒம் பொண்ணுக்கிட்ட.. இந்த பட்டாபி மானஸ்தன்.. என் பேச்செ கேட்காம வாசப்படி தாண்டினா திருப்பி வரப்படாது.. நீயே சொல்லு ஒம் பொண்ணுக்கிட்ட.’

சமையல்கட்டிலிருந்து குரல் மட்டும் வந்தது. ‘ஏன் அதையும் நீங்களே சொல்லிருங்களேன். எனக்கேன் பொல்லாப்பு?’

மைதிலிக்கு சிரிப்பு வந்தது. இருவரும் இப்படி ஷேடோ பாக்ஸிங் செய்வது புதிதல்லவே. இறுதியில் தன் வழிக்கு இவர்கள் வரத்தானே வேண்டும் என்ற நினைப்பில் நின்ற இடத்திலேயே நின்றாள்.

பட்டாபி தன் கையிலிருந்த பத்திரிகையை தன் இருக்கையில் வீசியெறிந்துவிட்டு மைதிலியின் முதுகைப் பார்த்தார். ‘நா இப்ப என்ன செய்யணும்? நீ சொன்னதும் எனக்கு இங்க இருக்கற எல்லாத்தையும் விட்டுட்டு ஒன் பின்னால ஓடி வரணும்? அதான? அது மட்டும் நடக்காது, சொல்லிட்டேன்.. ஒனக்கு அவந்தான வேணும்? நீ போ.. எங்கள கூப்பிடாத? சொல்லிட்டேன்.’

மைதிலி புன்னகையுடன் திரும்பி தன் தந்தையைப் பார்த்தாள். பேசாமல் இருந்தவர் பேசிவிட்டாரே.. இனி கவிழ்த்துவிடலாம் என்று நினைத்தாள். ‘என்னப்பா இப்படி பேசறே? நா என்னைக்கி நீ சொல்றத கேக்காம இருந்திருக்கேன். மெடிசின் படிக்கணும் ஆசைப்பட்டேன்.. எங்கிட்ட காசில்லன்னுட்டே.. யாருக்கும் பிடிக்காத எக்கனாமிக்ச படிச்சேன்.. படிச்சி முடிச்சி ரெண்டு வருசம் ஒப்புக்குப்பெறாத வேலையெல்லாம் செஞ்சேன்.. விடப்போறேன், விடப்போறேன்னு ஒங்கிட்ட சொன்னேன்.. கேக்கலை.. பொம்மனாட்டிக்கு எந்த வேலையான்னா என்னன்னே.. அதுக்காகவே முதல் தடவையா ஒன்னெ எதிர்த்துக்கிட்டு இருந்த வேலைய விட்டுட்டு எம்.எஸ்.டபிள்யூ செஞ்சேன்.. எனக்கு மனசுக்கு பிடிச்ச சோஷியல் சர்வீஸ் வேல கெடச்சது.. அதுலதான் சீனிய மீட் பண்ணேன். என் கொணத்துக்கு சாலஞ்சா இருந்தான்.. ஃப்ரெண்ட்ஷிப்புன்னு நினைச்சித்தாம்ப்பா பழகிட்டிருந்தேன்.. ஆனா இப்ப பாக்க வர்ற மாப்பிள்ளைக்கிட்ட என்னெ பத்தி விளக்கமா சொல்ற அளவுக்கு வந்திருச்சின்னு நீயும் நினைக்கறே, அம்மாவும் நினைக்கறா. இந்த அளவுக்கு நீங்களே தப்பா நினைக்கறப்போ நா சீனிய தவிர வேற யார கல்யாணம் பண்ணாலும் நிம்மதியா இருக்க முடியாதுப்பா.. அத புரிஞ்சிக்கோ..’ பேச்சின் இடையில் உணர்ச்சி மிகுதியால் குரல் நடுங்கியபோதும் அழுவதில்லை என்ற தீர்மானத்துடன் பேசி முடித்தாள் மைதிலி.

பட்டாபி எப்படி மறுத்துப் பேசுவதென தெரியாமல் சமையல்கட்டின் வாசலில் நின்றவாறு தன்னையே பார்த்துக்கொண்டிருந்த தன் மனைவியைப் பார்த்தார். ‘என்னடி நீயும் பாத்துக்கிட்டு பேசாம நிக்கறே? இவ புரிஞ்சிதான் பேசறாளா.. இவ கொழந்தை ஒன்னுமில்லையேடி, வயசு இருபத்தியேழாறதே? இவள விட ரெண்டு வயசு சின்னவனெ கட்டிக்கிட்டு.. என்னடி இது? நடக்கற கதையா இது?’

‘ஏன்னா முடியாதுங்கறேள்? அவ தான் பிடிவாதமா நிக்கறாளே? நல்லதும் கெட்டதும் அறியாத வயாசான்னா இது? நாம சரின்னு சம்மதிச்சா நமக்குத்தான்னா நல்லது. இருக்கறது ஒன்னேயொன்னு.. அதும்பாட்டுக்கு சென்னைக்கி போறேன்னு போய்ட்டா ஒங்க மூஞ்ச நானும் எம் மூஞ்ச நீங்களும் பாத்துண்டு ஒக்காந்திருக்கவா? ஆத்திரப்படாம யோசிங்கோ.. பேசாம சட்டைய மாட்டிண்டு அவ கூட போங்கோ..’

இனிமேலும் நின்று வார்த்தையை வளர்த்தால் வம்பு என்று நினைத்தாளோ என்னவோ சமையலறைக்குள் மீண்டும் ஜானகி புகுந்துக்கொள்ள என்ன செய்வதென தெரியாமல் திரும்பி தன் மகளைப் பார்த்தார் பட்டாபி.

கலங்கிய கண்களுடன் தன்னைப் பார்த்த தன் தந்தையை நெருங்கி பாசத்துடன் அவருடைய கரங்களைப் பற்றினாள் மைதிலி. ‘ஒன்னோட வலி எனக்குப் புரியறாப்பல என்னோட வலியையும் புரிஞ்சிக்கோப்பா.. எனக்கும் சீனிக்கும் நடுவுலருக்கற சுத்தமான அன்பை ஒன்னையும் அம்மாவையும் தவிர வேற யாராலப்பா புரிஞ்சிக்க முடியும்?’

பட்டாபி  செய்வதறியாது தன் மகளையே பார்த்தார். ‘நா என்ன செய்யணுங்கறே?’ என்றார் நடுங்கும் குரலில்.

மைதிலி தன் தந்தையின் கண்களை ஆழமாகப் பார்த்தாள். ‘என்னெ நம்புப்பா.. நல்லா யோசிச்சித்தான் இந்த டிசிஷன் எடுத்துருக்கேன்.. Just believe me and let me do what I want to do.. ப்ளீஸ்ப்பா..’

பட்டாபி சற்று நேரம் தன் மகளுடைய கண்களையே பார்த்தவாறு நின்றிருந்தார். இறுதியில் சரி என்பதுபோல் மெதுவாக தலையை அசைத்தார், ‘சரி.. நீ போய் ராஜகோபாலன கேட்டுட்டு வா.. அப்பா வரலை..’

தன் கரங்களைப் பற்றியிருந்த தன் மகளின் கரத்தை விலக்கிவிட்டு தன் அறையை நோக்கி அவர் நடக்க அவரையே பார்த்தவாறு நின்றிருந்தாள் மைதிலி.

*****

ஜோ வழக்கறிஞர் சபரியுடன் காவல்நிலையத்தினுள் நுழைந்ததும்  மாணிக்கவேல் தலையைக் குனிந்தவாறு சுவர் ஓரத்தில் கிடந்த ஒரு மரபெஞ்சில் அமர்ந்திருப்பதைப் பார்த்துவிட்டு அவரை நோக்கி விரைந்தான்.

‘சார்.. என்னாச்சி.. ஏன் இப்படி ஒக்காந்திருக்கீங்க?’

அவனுடைய குரலைக் கேட்டு நிமிர்ந்த மாணிக்கவேல் ஜோவையும் அவனுடன் நின்றிருந்த வழக்கறிஞரையும் மாறி, மாறி பார்த்தார். ‘I am now beyond redemption Joe..’ என்றார்.

அவருடைய பேச்சின் உள்ளர்த்தம் புரியாமல் ஜோ திரும்பி சபரியைப் பார்க்க அவரும் குழப்பத்துடன் மாணிக்கவேலைப் பார்த்தார்.

‘யார் சார் நீங்க? நீங்க பாட்டுக்கு வந்தீங்க. இங்க நிக்கற யார்கிட்டயும் பெர்மிஷன் கேக்காம நேரா போய் ஒரு அக்யூஸ்ட் கிட்ட பேசிக்கிட்டிருக்கீங்க?’ என்ற முரட்டுக் குரலைக் கேட்டு திரும்பிய சபரி தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, ‘ஒங்க இன்ஸ்பெக்டர பாக்கணும்..’ என்றார்.

‘அய்யா வெளிய போயிருக்காங்க.. அவர் வர்றவரைக்கும் நீங்க அந்த சேர்ல ஒக்காருங்க. அய்யா வந்து சரிங்கற வரைக்கும் இவர் கிட்ட நீங்க எதுவும் பேச முடியாது, சொல்லிட்டேன்.. போங்க போய் ஒக்காருங்க.’  

ஜோ கோபத்துடன் பதில் பேச முனைய சபரி அவனுடைய கரத்தைப் பற்றி அமைதியாக இருங்கள் என சைகைக் காட்டினார். பிறகு மாணிக்கவேலைப் பார்த்து, ‘நீங்க ஏதாச்சும் ஸ்டேட்மெண்ட் குடுத்தீங்களா?’ என்றார்.

அவர் இல்லையென தலையை அசைத்தார். ‘என்னை இங்க கொண்டு வந்த அடுத்த நிமிஷமே அவருக்கு ஒரு ஃபோன் வந்தது சார். பேசி முடிச்சிட்டு எங்கிட்ட வந்து ஒங்க ஒய்ஃப் ஜீப்லருந்து குதிச்சி தப்பியோட முயற்சி செஞ்சிருக்காங்க. ஆனா எதிர்ல வந்த ஒரு பஸ்சுல அடிபட்டுட்டாங்களாம்.. ஆஸ்பத்திரிக்கி கொண்டு போயிருக்காங்களாம். நான் போய் பார்த்துட்டு வந்துடறேன்னு சொல்லிட்டு போய்ட்டார். போய் ஒரு மணி நேரமாவுது..’

சபரியும் ஜோவும் அதிர்ச்சியில் உறைந்துபோய் நிற்க அவர்களருகில் நின்றிருந்த காவலர் அவர்களை, ‘ஏன் சார் ஒருதரம் சொன்னா கேக்க மாட்டீங்களா? போய் ஒக்காருங்க சார்.’ என்று விரட்டினார்.

‘வாங்க மிஸ்டர் ஜோ. விஷயம் சிக்கலாகும் போலருக்கு. நான் சார்கிட்ட ஃபோன் செஞ்சி பேசிட்டு வரேன். நீங்க வந்து ஒக்காருங்க.’ என்றவாறு சபரி காவல்நிலையத்தை விட்டு வெளியேறினார்.

ஜோ என்ன செய்வதென விளங்காமல் குழப்பத்துடன் காவலர் காட்டிய மர இருக்கையை நோக்கி நகர்ந்தான்.

தொடரும்

No comments: