15.12.06

சூரியன் 154

ஃபிலிப் சுந்தரத்தின் நடத்தை விசித்திரமாகத் தோன்றினாலும் அதைப் பெரிதுபடுத்துவதில் பயனில்லை என்று உணர்ந்தார் சுந்தரலிங்கம்.

புதிய சேர்மன் வந்து பதவியேற்க சம்மதித்துவிட்டார் என்று கேள்விப்பட்டதுமே இனியும் நாம் இவ்வங்கியில் நீடிப்பது உசிதமாயிருக்காது என்று நினைத்தவர் அவர். மாதவன் வந்து பொறுப்பேற்றதுமே தம்மை வங்கியின் உயர் அதிகாரிகளுக்கென வழக்கத்திலிருந்த விருப்ப ஓய்வு திட்டத்தின் கீழ் தன்னை விடுவிக்க வேண்டுமென்று அவரிடம் தன்னுடைய கோரிக்கையை வைக்கலாம் என்றுதான் கருதியிருந்தார். அது முடியாதென்கிற பட்சத்தில் தன்னுடைய பதவியை ராஜிநாமா செய்யவும் தயாராயிருந்தார்.

‘மிஞ்சிப்போனா ஒங்க சர்வீஸ் இன்னும் பதினஞ்சு மாசந்தானப்பா.. பேசாம ரிசைன் பண்ணிட்டு சாயந்தர நேரத்துல ஒங்க சபா வேலைய பாத்துக்கிட்டு இருந்தா போறாது? போறாததுக்கு ஊர்ல கோயில் கட்டித்தரேன்னு ஒரு பெரிய வேலைய தலைமேல போட்டுக்கிட்டிருக்கீங்க. பேசாம நாங்க சொல்றத கேளுங்க.. வேலைய விட்டுட்டு கோயில் வேல முடியற வரைக்கும் அம்மாவும் நீங்களுமா ஊர்ல போய் இருங்க.. அதுக்கே எப்படியும் ஒரு வருசம் ஆயிரும் போலருக்கு..’ என்று அவருடைய ஒரே மகள் வைதேகி அறிவுறுத்தியபோது அப்படியே செய்துவிட வேண்டியதுதான் என்று தீர்மானித்தார் சுந்தரலிங்கம்.

அவருடைய மனைவி கனகாவுக்கும் அதே எண்ணம்தான் இருக்கும் என்று அவர் நினைத்ததுபோலவேதான் இருந்தது. ‘ஆமாங்க. பேசாம வைதேகி சொல்றாப்பல செஞ்சிருங்க. இனி ஒங்களுக்கு என்ன இருக்கு? சேர்மன் சேர்லயே ஒக்காந்தாச்சு. இப்ப மறுபடியும் அந்த சி.ஜி.எம் சேர்ல ஒக்காந்து வேல செய்யணுமாக்கும்? போறாததுக்கு அந்த சேது வேற.. அவன் பொஞ்சாதிக்கு பயந்தே எங்க க்ளப் பக்கம் கூட போறதில்ல. அந்த ஃபிலிப்புக்குத்தான் வேற வேலையில்ல.. மாடு மாதிரி ஒளச்சிக்கிட்டு பேங்கே கதின்னு கெடக்கார். பேசாம விட்டுட்டு வாங்க.. ஊர் பக்கம் போயிருவோம். எனக்கும் முடியலங்க..’

சனிக்கிழமையிலருந்து நடக்கறதையெல்லாம் பாக்கறப்ப விட்டுட்டு போயிரலாம்னுதான் தோனுது.. ஆனா மாதவன் வந்து கால வச்சதுமே நா போறேன்னு நின்னா நல்லாருக்காதே.. பாப்போம்.. இன்னும் ஒரு மாசம்.. அதுக்கும் மேல இருக்க முடியாதபடி இருந்திச்சின்னா.. போயிர வேண்டியதுதான்..

அவருடைய சிந்தனையை கலைப்பதுபோல் அவருடைய இண்டர்காம் இணைப்பு அலற எடுத்து எதிர்முனையில் குரலைக் கேட்டதும், ‘இதோ அங்கதான் கிளம்பிக்கிட்டிருக்கேன் மிஸ்டர் சேது.. I am on the way.. One sec..’ என்று பதிலளித்துவிட்டு அவரை மேற்கொண்டு பேசவிடாமல் துண்டித்துவிட்டு.. ‘இவர் வேற.. அப்படியென்ன தலைபோற விஷயமோ தெரியல..’என்று முனகியவாறு எழுந்து வாசலை நோக்கி நடந்தார்.

******

மாதவன் சுபோத் தன் முன் வைத்த கடிதங்கள் அடங்கிய தடித்த கோப்பை மேலோட்டமாகப் பார்த்துவிட்டு, ‘Tell me Subodh. What is the practice here? Do I have to go through all these letters?’ என்றார்.

என்னடா இவர் இப்படி கேக்கார்? இவரும் சுந்தரலிங்கம் சார் போலத்தானா? என்று ஒரு நொடி சோர்ந்துபோனான் சுபோத். பிறகு இந்த விஷயத்தில் முந்தைய சேர்மன் மூர்த்தி செய்தவற்றை சுருக்கமாக விளக்கினான்.

அவன் முடிக்கும்வரை பொறுமையுடன் கேட்ட மாதவன் இறுதியில், ‘I see.. OK.. leave the file with me then.. I’ll call you when I am finished.’ என்றார் ஒரு மெல்லிய புன்னகையுடன்.

சுபோத் விட்டால் போதும் என்ற நினைப்பில் வெளியேறுவதற்கு முயல, ‘One second Subodh.’ என்ற மாதவனின் குரல் கேட்டு நின்று அவரைப் பார்த்தான். ‘Yes Sir?’

‘Are you being harassed by Mr.Sethu for the Airport incident?’

சுபோத் சட்டென்று தலையை அசைத்தான். ‘No Sir..’ நாம் ஏதாவது ஒன்று சொல்லப் போக இவர் அவரை அழைத்து கேட்டு.. அதனால் நமக்கு ஏதாவது புதுசா பிரச்சினை வந்துட்டா?

மாதவன் லேசான புன்னகையுடன்.. ‘நீங்க சொல்ல தயங்கறது தெரியுது.. I understand.. Don’t worry.. I have something in my mind.. You may go..’ என்று அவனை அனுப்பிவிட்டு கோப்பைத் திறந்து அதில் மூழ்கினார்.

****

சுந்தரலிங்கத்தின் அறையிலிருந்து தன்னுடைய அறைக்கு திரும்பிய ஃபிலிப் சுந்தரம் மேற்கொண்டு என்ன செய்வதென சிந்திக்கலானார்.

அவருடைய மேசையிலிருந்த கோப்புகளை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு நாடார் மீண்டும் தொலைபேசியில் தன்னை அழைப்பதற்குள் இக்கடித விஷயத்தில் ஏதாவது செய்ய வேண்டும், இல்லையேல் அவர் மீண்டும் தன்மீது கோபப்பட வாய்ப்பிருக்கிறது என்று நினைத்தார்.

ஆனால் என்ன செய்யவேண்டும் என்பது விளங்காமல் தடுமாறிய வண்ணம் அமர்ந்திருந்தார். சட்டென்று ஒரு யோசனை தோன்ற இண்டர்காமை எடுத்து வங்கியின் மத்திய ஆய்வு இலாக்கா தலைவரை அழைத்தார்.

எதிர் முனையில் எடுக்கப்பட்டதும், ‘மிஸ்டர் கோபி.. லாஸ்ட் இயர் RBI Inspection ஃபைல ஒரு பியூன் கிட்ட குடுத்து விடுங்க.. சீக்கிரம்.’ என்று கூறிவிட்டு அவர் ஏன், எதற்கு என்று கேள்விகள் கேட்க வாய்ப்பளிக்காமல் இணைப்பைத் துண்டித்தார். தேவையில்லாமல் உண்மைக்கு புறம்பாக எதுவும் கூறவேண்டாமே என்பதும் ஒரு காரணம்.

சாதாரணமாகவே ஒரு உண்மையான கிறித்துவ வாழ்க்கையை வாழ்ந்துக்கொண்டிருப்பவர் ஃபிலிப் சுந்தரம். ஆலயத்தில் வழிபாட்டிற்கிடையில் பாதிரியார் பிரசங்கிப்பவற்றை தன்னுடைய அன்றாட வாழ்வில் கடைபிடிக்க வேண்டியது தன்னுடைய கடமை என்பதில் குறியாயிருந்தவர் அவர்.

மனைவியைப் பிரிந்து ஆரம்பகாலத்தில் அவர் மனநிம்மதியில்லாமல் தவித்தபோது அவருக்கு நிம்மதியை அளித்தது தேவாலயப் பணிகள்தான். பங்குப் பேரவையின் தலைவர் பதவியை அவராகத் தேடிச் செல்லாவிட்டாலும் அது அவரைத் தேடி வந்தபோது அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு தேவாலயப் பணிகளில் தன்னை தீவிரமாக ஈடுபடுத்திக்கொண்டவர் அவர்.

எந்த ஒரு சூழலிலும் உண்மைக்குப் புறம்பாக பேசுவதோ, செய்வதோ இல்லையென்று தனக்குள் கற்பித்துக்கொண்டவருக்கு அதைக் கடைபிடிக்க இயலாமற்போன சமயங்களில் வேதனையடைந்ததும் உண்டு. சற்று முன்னர் சுந்தரலிங்கத்திடம்  உண்மையை மறைக்க நேர்ந்ததில் அவருக்கு வருத்தம்தான். ஆனாலும் சந்தர்ப்பமும் சூழலும் தன்னை இப்படியொரு இக்கட்டான நிலைக்கு ஆளாக்கிவிட்டதே என்று நினைத்தார்.

அவருடைய சிந்தனையைக் கலைப்பதுபோல் அவருடைய செல் ஃபோன் சிணுங்க யாரென பார்த்தார். திரையில் தெரிந்த தொலைப்பேசி எண் பரிச்சயமில்லாதிருக்கவே, ‘ஹலோ.. ஃபிலிப் ஹியர்.’ என்றார்.

‘Sorry to disturb you Sir.. I am Joe here.. Asst Manager to Mr. Manickavel.. Can I talk to you now Sir?’

ஜோ? சட்டென்று நினைவுக்கு வராமல் தடுமாறியவர்.. மாணிக்கவேலின் துணை மேலாளர் என்ற வார்த்தையைக் கேட்டதும் நினைவுக்கு வந்தவராய், ‘என்ன மிஸ்டர் ஜோ சொல்லுங்க? எப்படியிருக்கார் ஒங்க மேனேஜர்?’ என்றார்.

அடுத்த சில நிமிடங்களில் வாயடைத்துப்போய் அமர்ந்திருந்தவர் ‘என்ன சொல்றீங்க? இது எப்ப நடந்தது?’ என்றார் மெல்லிய குரலில்.

எதிர் முனையிலிருந்து வந்த விளக்கத்தைக் கேட்டவர் இறுதியில் ‘இப்போ என்ன பண்றதுன்னு தெரியாமத்தான் ஒங்கள கூப்ட்டேன் சார்..’ என்று பதில் வந்ததும் எப்படி பதிலளிப்பதென தெரியாமல் தடுமாறிப் போனார்.

அவருடைய அந்த மவுனத்தை தவறாகப் புரிந்துக்கொண்டு எதிர்முனையிலிருந்து , ‘நா ஒங்கள டிஸ்டர்ப் செஞ்சிருந்தா சாரி சார்..’ என்ற பதில் வரவே பதற்றத்துடன், ‘நோ, நோ.. நாட் அட் ஆல்.. நா என்ன செய்யலாம்னு யோசிச்சிக்கிட்டிருக்கேன். Just give me some time .. I will call you back on this number..’ என்று பதிலளித்துவிட்டு இணைப்பைத் துண்டித்துவிட்டு யோசனையில் ழ்ந்தார்.

நல்லவங்களா இருக்கறதே தப்பு போலருக்கே. தன் அறைவாசலுக்கு மேலே பொருத்தப்பட்டிருந்த ஏசு கிறிஸ்துவின் உருவப் படத்தை நோக்கினார். தான் காட்டிக் கொடுக்கப்படுவதற்கு முன்பு ஜெத்சமெனி தோட்டத்தில் 'என் தகப்பனே உமக்கு சித்தமானால் இத்துன்பக்கலம் என்னைவிட்டு அகலட்டும்' என்று பிரார்த்திக்கும் கோலத்தில் இருந்தவரையே பார்த்தவாறு அமர்ந்திருந்தார். ஏன் கர்த்தரே இந்த மனிதருக்கு  இப்படியொரு சோதனை? உயிருக்குயிராய் நேசித்த தன் தகப்பனையே கொன்ற பழி இவர் மீதா?

மாணிக்கவேலுவை அவருக்கு அவ்வளவாக பரிச்சயமில்லாவிடினும் வந்தனாவிடம் பேசிய நேரங்களிலெல்லாம் அவரைப் பற்றி கூறக் கேட்டு நாளடைவில் அவரைக் காணாமலே அவரை மிகவும் பிடித்துப்போனது. அதன் பிறகு ஒரு திறப்பு விழாவில் அவரை நேரில் சந்திக்க நேர்ந்தபோது தான் கேள்விப்பட்டதிலிருந்து உருவகித்திருந்ததைப் போலவே அவர் இருந்தபோது தன்னையுமறியாமல் தன் மனதில் தோன்றிய மகிழ்ச்சி இப்போதும் நினைவிலிருந்தது.

அடிமட்டத்திலிருந்து தன்னுடைய சுய முயற்சியால் உயர்ந்த மனிதர் என்பதாலும் அவரை சுந்தரத்திற்கு மிகவும் பிடித்திருந்தது. ‘He is gem of a person Sir.. அப்படியொரு மனுசன் நம்மளோட வேலை செய்யறதே நம்ம பாக்கியம்னுகூட சொல்லலாம்.’ என்று வந்தனா தன்னிடம் கூறியிருந்ததை நினைவு கூர்ந்தார்.

அப்படியொரு நல்ல மனிதருக்கா இந்த சோதனை? என்ன கடவுள், என்ன நம்பிக்கை என்ற சலிப்பு தன் மனதில் தோன்ற அடுத்த நொடியே அதை விலக்கினார். கர்த்தருடைய ஒவ்வொரு செயலுக்குப் பின்னாலும் நியாயமான காரணம் இருக்கும் என்பதை அவர் சிறுவயதுமுதலே அறிந்திருந்ததுதான். 'We have no right to question the wisdom of our Lord my son.. Remember this and leave you in his safe hands..' மரண படுக்கையில் அவர் செவியுற்ற அவருடைய தந்தையின் வார்த்தைகள்..

அவருடைய வாழ்க்கையில் அவர் சந்திக்க நேர்ந்த சோதனைகளுக்கெல்லாம் அவர் இந்த வார்த்தைகளை நினைத்துத்தான் சமாதானம் அடைந்திருக்கிறார்.

மாணிக்கவேலின் வாழ்க்கையில் தற்போது நடந்திருக்கும் சம்பவங்களுக்கு பின்னாலும் ஏதாவது ஒரு நியாயமான காரணம் இருக்கும்.. அதை நம்மால்தான் உணர்ந்துக்கொள்ள முடியவில்லை என்று ஓடியது சிந்தனை..

அதிருக்கட்டும்.. இப்போது உடனே ஏதாவது செய்தாக வேண்டும்.  
தன்னுடைய தேவாலய நண்பர் ஒருவருடைய பெயர் சட்டென்று  நினைவுக்கு வர அவருடைய தொலைப்பேசி எண்ணை செல் ஃபோனில் தேடிப்பிடித்து டயல் செய்தார். எதிர் முனையில் எடுக்கப்பட்டதும், ‘டேவிட்?’ என்றார்.

‘சார் ஒரு க்ளையண்டோட பேசிக்கிட்டிருக்கார் சார். ஏதாவது அர்ஜெண்டா இருந்தா எங்கிட்ட சொல்லுங்க.’ என்று அவருடைய ஜூனியர் வழக்கறிஞர் கூற தான் சொல்ல வந்ததை கடகடவென கூறினார்.

அவர் கூறியவற்றை குறித்துக்கொண்டு, ‘கவலைப்படாதீங்க சார். நான் உடனே சார் கிட்ட சொல்லி என்ன செய்யணுமோ அதச் செய்யச் சொல்றேன். திருப்பி ஒங்கள கூப்பிடவும் சொல்றேன் சார்.’ என்று வந்த பதிலில் திருப்தியடைந்தவர் நன்றி தெரிவித்துவிட்டு உடனே, ஜோவை அழைத்தார்.

‘மிஸ்டர் ஜோ நான் என் ஃப்ரெண்ட கூப்ட்டு என்ன செய்யணுமோ அத செய்ய சொல்லியிருக்கேன். நீங்க இந்த நம்பருக்கு கூப்பிட்டு அவர் கேக்கற டீட்டெய்ல்ஸ் எல்லாம் குடுத்துருங்க. நீங்க வேணும்னா அஃபிஷியல் கெப்பாசிட்டியில ஒரு கார எடுத்துக்கிட்டு அவர கூட்டிக்கிட்டு போங்க. He should be able to arrange the bail.. unless something serious crops up..’

‘ரொம்ப தாங்ஸ் சார்.’ என்ற ஜோ ஏதோ சொல்ல வந்து தயங்குவது தெரியவே, ‘என்ன மிஸ்டர் ஜோ.. வேற ஏதும் சொல்லணுமா? தயங்காம சொல்லுங்க’ என்றார்.

அடுத்த சில நொடிகள் மவுனமாக கேட்டுவிட்டு, ‘இப்ப என்ன பண்ணணும்.. அதச் சொல்லுங்க.’ என்றார்.

எதிர்முனையிலிருந்து வந்த வேண்டுகோளை எந்த அளவுக்கு தம்மால் நிவர்த்தி செய்ய முடியும் என்று தோன்றாமல் சில நொடிகள் சிந்திக்கலானார். பிறகு, ‘சந்தோஷ வந்தனா மேடம் வீட்ல அவங்கக்கூட வச்சிக்கறதுல அவங்களுக்கு ப்ராப்ளம் இருக்காதுன்னு தெரியும்.. ஆனா இப்ப அவங்க இருக்கற சூழ்நிலையில இத எப்படி அவங்கக் கிட்ட சொல்லி.. ஓக்கே மிஸ்டர் ஜோ.. Let me talk to her first.. நீங்க கவலைப்படாதீங்க.. முதல்ல அவர ஜாமீன்ல எடுக்க பாருங்க.. அது முடியாதப் பட்சத்துல சந்தோஷ எங்க விடலாம்னு யோசிக்கலாம்.. Keep me posted of the developments..’ என்று இணைப்பைத் துண்டித்துவிட்டு ஒரு நீண்ட பெருமூச்சுடன் தன் முன்னே இருந்த பிரச்சினையில் கவனத்தைத் திருப்பினார்.

தொடரும்..

4 comments:

krishjapan said...

பிரச்சினை மேல பிரச்சினை, போதுமடா சாமி...

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க கிருஷ்ணா,

பிரச்சினை மேல பிரச்சினை, போதுமடா சாமி... //

இது யார் பாடற பாட்டு சுந்தரலிங்கமா இல்ல ஃபிலிப் சுந்தரமா:)

siva gnanamji(#18100882083107547329) said...

I.P.C 302 என்பதால் உடனடியாக
ஜாமீன் கிடைப்பது இயலாது.......
ஒருவேளை சந்தோஷ் சுயநிலைக்கு வந்து நடந்த உண்மயைச் சொன்னாலும் கூட.......

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க ஜி!

நீங்க பொருளாதாரத்தில் பேராசிரியர் என்றல்லவா நினைத்திருந்தேன்.. சட்டமும் படிச்சிருப்பீங்க போலருக்கே?

டேஞ்சரான ஆசாமிதான்..

பார்ப்போம்:)