20.12.06

சூரியன் 155

ரவி தான் எழுதியிருந்த கடிதத்தை மீண்டும் ஒருமுறை உரக்க வாசித்தான். அவனெதிரில் அமர்ந்திருந்த மஞ்சு அவன் படித்து முடிக்கும் வரை பொறுமையுடன் காத்திருந்துவிட்டு, ‘நல்லாருக்கு ரவி. ஆனா..’ என்றாள் தயக்கத்துடன்.

‘அதாவது என்னுடைய வேண்டுகோளை எங்க மேனேஜ்மெண்ட் ஏத்துக்குவாங்களாங்கற சந்தேகம் ஒனக்கு, அதானே?’ என்றான் ரவி.

ஆமாம் என்று தலையை அசைத்துவிட்டு மேசையில் கிடந்த கடிதத்தை எடுத்து மீண்டும் ஒருமுறை தனக்குள்ளே வாசித்தாள்.

‘அவங்க ஏத்துக்குறாங்களோ இல்லையோ, நாம ஒரு ரிக்வெஸ்ட் போட்டு வைப்போம்னுதான நாராயணசாமி சார் சொன்னார்? அப்படியே செய்வோம்.. என்க்வயரிய ப்ரீப்போன் (prepone) பண்ணா நல்லது. இல்லன்னா நடக்கறப்ப நடக்கட்டும், என்ன சொல்றே?’

மஞ்சு அதற்கும் ஆமாம் என்று தலையை அசைத்தாள். ‘அதுவும் சரிதான். சீக்கிரமா இந்த என்க்வயரி நடந்துட்டா நல்லாருக்குமேன்னு நாந்தான் வக்கீல் அங்கிள்கிட்ட சஜ்ஜஸ்ட் பண்ணேன். சரிம்மா. எழுத்து மூலமா ஒரு ரிக்வெஸ்ட் டிராஃப்ட் பண்ணி கொண்டாங்க நான் பார்த்துட்டு சொல்றேன்னு சொன்னார். நீங்க எழுதுனதே நல்லாத்தான் இருக்கு. வாங்க, அங்கிள் கெளம்பிக்கிட்டு இருப்பாங்க. குடுத்துட்டு வந்துருவோம்.’ என்றவாறு எழுந்து நிற்க ரவியும் எழுந்து நின்றான்.

உணவு மேசையில் கிடந்த கடிதத்தை எடுத்துக்கொண்டு இருவரும் வாசற் கதவை வெறுமனே மூடிவிட்டு தங்களுடைய அடுத்த குடியிருப்பை அடைந்து அழைப்பு மணியை அழுத்தினர்.

கதவைத் திறந்த வழக்கறிஞர் நாராயணசாமி இருவரையும் புன்னகையுடன் வரவேற்றார்.

மஞ்சு தன் கரங்களிலிருந்த கடிதத்தை அவரிடம் நீட்ட, ‘என்னது ப்ரீப்போன்மெண்ட் ரிக்வெஸ்டா? குட்.. இரு கண்ணாடிய எடுத்துக்கிட்டு வந்துடறேன்..’ என்றவர் ரவியைப் பார்த்து சிரித்தார். ‘என்ன மிஸ்டர் ரவி.. ஒங்க பேங்க பத்திக்கூட இன்னைக்கி பேப்பர்ல வந்துருக்கே.. யாரோ சோமசுந்தரமாம் டைரக்டர் போர்ட்லருந்து ரிசைன் பண்ணிட்டாராமே.. தோ.. டீப்பாய்ல இருக்கு பாருங்க.. படிச்சிக்கிட்டிருங்க.. வரேன்.’

ரவி வியப்புடன் குறுமேசையில் விரித்து வைக்கப்பட்டிருந்த அன்றைய ஆங்கில தினத்தாளை எடுத்து படித்தான். இதுபோன்ற விஷயங்களில் அதிக தீவிரம் காட்டி வரும் அந்த நாளிதழை அவன் வாங்குவதில்லை.

நாராயணசாமி சிவப்பு மசியால் கட்டம் கட்டியிருந்த அந்த செய்தியைப் படித்தவன் அருகிலேயே வெளியாகியிருந்த மருத்துவர் சோமசுந்தரம் மற்றும் வங்கியின் புது சேர்மன் திரு மாதவனின் புகைப்படத்தையும் பார்த்தான்.

சோமசுந்தரத்தைப் பற்றியும் அவருடைய மருத்துவமனையைப் பற்றியும் ஏற்கனவே அவன் அறிந்திருந்ததுதான். அத்துடன் அவர் பாபு சுரேஷின் துணையுடன் வங்கியில் செய்திருந்த சில அத்துமீறல்களைப் பற்றியும் கேட்டிருக்கிறான். அதனுடன் ஒப்பிடுகையில் தன்னுடைய விதி மீறல்கள் ஒரு பொருட்டேயில்லை என்பதையும் அவன் அறிவான்.

ஆனால் என்ன செய்ய? எல்லாம் விதி என்ற கோணத்தில் சென்றது அவனுடைய எண்ணம்.

‘இது தாராளமா போறும் மிஸ்டர் ரவி. இத சைன் பண்ணி எங்கிட்ட குடுத்துருங்க. நானும் ஒரு ரிக்வெஸ்ட வச்சி ஒங்க என்க்வயரி ஆஃபீசருக்கு ஃபார்வேட் பண்ணிடறேன். ஆனா ஒன்னு. இன்னைக்கி பேப்பர்ல வந்துருக்கற நியூஸ் படிச்சா ஒங்க பேங்க் ஃபங்க்ஷன்ஸ்ல கொஞ்ச நாளைக்கு டிஸ்டர்பன்ஸ் வர்றதுக்கு சான்ஸ் இருக்குன்னு நினைக்கறேன். அதனால நம்ம ரிக்வெஸ்ட்ட எந்த அளவுக்கு கன்சிடர் பண்ணுவாங்கன்னு தெரியலை.. போட்டு பார்ப்போம். விழுந்தா மாங்கா.. இல்லன்னா கல்லு.. என்ன சொல்றீங்க?’ என்றார் நாராயணசாமி சிரித்தவாறு.

‘உண்மைதான் சார். எங்க பேங்க பத்தி இப்படியொரு ஸ்கேண்டல் பேப்பர்ல இதுவரைக்கும் வந்ததில்ல. அதுவும் புது சேர்மன் சார்ஜ் எடுத்துருக்கற தேதியில போர்ட்லருந்து ஒரு சீனியர் மெம்பர் ரிசைன் பண்ண வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டது ஒரு அன்ஃபார்ச்சுனேட் இன்சிடண்ட்தான். எங்க எச்.ஓ வுக்கு ஃபோன் பண்ணா தெரியும் இதுக்கு சேர்மன் எப்படி ரியாக்ட் பண்றாருன்னு. ஆனா இது அவருக்கு நேத்தே தெரிஞ்சிருக்கும் போலருக்கு.’ என்ற ரவி நாராயணசாமியைப் பார்த்தான். ‘ஆனா இது பெரிய அளவில ஃபங்க்ஷன பாதிக்கும்னு சொல்ல முடியாது சார். போர்ட் சாதாரணமா வெறும் பாலிசி டிசிஷன் மட்டுந்தான் எடுக்கும். மத்தபடி டெய்லி ஃபங்ஷன் எல்லாம் சேர்மன் கையிலதான். இப்ப வந்துருக்கறவர் ஏற்கனவே எங்க பேங்க்ல இருபது வருசத்துக்கு முன்னால இருந்தவர்தானே? அதனால பெரிசா எந்த பாதிப்பும் இருக்காதுன்னு நினைக்கிறேன்..’

நாராயணசாமி உண்மைதான் என்பதுபோல் தலையை அசைத்துவிட்டு எழுந்து நின்றார். ‘ஓக்கே மிஸ்டர் ரவி, மஞ்சு.. நான் இத அனுப்பிச்சுடறேன்.. நீங்க எதுக்கும் ஒங்க என்க்வயரி ஆஃபீசர கூப்ட்டு இந்த மாதிரி ஒரு ரிக்வெஸ்ட் வச்சிருக்கேன்னு சொல்லிருங்க. அவர் ஒங்க ரிக்வெஸ்ட் ஏத்துக்கிட்டா அடுத்த வாரமே வைக்கச் சொல்லுங்க. இல்லன்னா ப்ரஸ் பண்ணாதீங்க. மத்தத நா பாத்துக்கறேன். சாயந்தரம் பாக்கலாம்.’

ரவியும் மஞ்சுவும் எழுந்து நின்று நாராயணசாமிக்கும் அருகில் நின்றிருந்த அவருடைய மனைவிக்கும் நன்றி தெரிவித்துவிட்டு வாசலை நோக்கி நடந்தனர்.

****

சுந்தரலிங்கம் சேதுமாதவனின் இந்த எதிர்பாராத அழைப்புக்கும் சற்று முன்னர் ஃபிலிப் சுந்தரம் கேட்ட கேள்விக்கும் எதோ ஒற்றுமை இருக்கிறது என்று தான் நினைத்ததுதான் சரிதான் என்று நினைத்தவாறே சேதுமாதவனின் கேள்விக்கு எப்படி பதிலளிப்பதென யோசித்தார்.

‘என்ன சார்.. ஏதோ பலமா யோசிக்கறா மாதிரி இருக்கு?’ என்றார் சேதுமாதவன்.

சுந்தரலிங்கம் ஒன்றுமில்லை என்று தலையை அசைத்தார். ‘இல்ல சார். நா அந்த லெட்டர RBIலருந்து வந்த சமயத்துல பாத்ததுதான். அதுக்கப்புறம் நம்ம மூர்த்தி சார் அதுக்கு பதில் போட்டு போர்ட்ல எக்ஸ்ப்ளெய்ன் பண்ண வேண்டி வந்தப்போ ஒருதரம் பார்த்தது. அதுக்கப்புறம் பார்த்த ஞாபகம் இல்ல. ஆனா அது இப்போ மாதவன் கேபின்லருக்கற கப்போர்ட்லதான் இருக்கணும். ஏன் நீங்க சுபோத்கிட்டயே கேட்டுருக்கலாமே. அவருக்கு தெரிஞ்சிருக்கணுமே?’

சேதுமாதவன் அவரை எரித்துவிடுவது போல பார்த்தார். ராஸ்க்கல்ஸ் இவனும் அந்த ஃபிலிப்பும் சேர்ந்துக்கிட்டு நம்மள முட்டாளாக்க பாக்கறான்க. கொஞ்ச நேரத்துக்கு முன்னால நா கூப்ட்டப்போ ரெண்டு பேருமா ஒக்காந்து டிஸ்கஸ் பண்ணிக்கிட்டிருந்தது எனக்கு தெரியாதுன்னாடா நினைக்கறீங்க? இருங்க ஒங்க ரெண்டு பேருக்கும் வச்சிக்கறேன்.

இவனுங்க சொல்லித்தான் அந்த சுபோத்தும் ஆடறான்னு நினைக்கேன். அன்னைக்கி ஏர்போர்ட்ல என்னடான்னா இவனுங்க ரெண்டு பேரும் இருக்கறப்பவே மாதவன் வரலைன்னு சொல்றான். இவனுங்க ரெண்டு பேரும் நா இந்த லெட்டர கேட்டா எப்படி ஆக்ட் பண்ணணும்னு அவனுக்கு சொல்லி வச்சிருப்பானுங்க போல. அதான் அவன் அந்த ஆட்டம் ஆடறான்.. இப்ப இவன் என்னடான்னா அந்த லெட்டர பாத்தே ரொம்ப நாளாச்சிங்கறான். எல்லாம் நம்ம நேரம்.

சுந்தரலிங்கம் அமைதியுடன் தன் எதிரில் அமர்ந்திருப்பவரைப் பார்த்தான். அவருடைய மேசை முழுவதும் கோப்புகளும், பத்திரிகைகளும் ஒரு இஞ்ச் இடமில்லாமல் குவிந்திருப்பதைப் பார்த்தார்.

சேதுமாதவனின் செயல்பாட்டைப் பற்றி அவருடைய பிரத்தியேக அதிகாரிகளே தலைமையகம் முழுவதும் கிண்டலுடன் பேசிக்கொள்வதை அவரும் பலமுறை கேட்டிருக்கிறார்.

‘சார் பயங்கரமான ஃப்ராடு. மனுசன் நாம குடுக்கற ஃபைல்ஸ வீட்டுக்கு எடுத்துக்கிட்டு போயி பாக்கறேன் பேர்வழின்னுட்டு தொலைச்சிருவார். அப்புறம் ஒரு வாரம் கழிச்சி எங்கருந்தாவது மறுபடியும் கிடைக்கும். ஃபைல் கிடைச்சதும் முன் தேதி போட்டு கையெழுத்த போட்டு வெளிய அனுப்புவார். அதாவது நாம நோட்( Note)  ப்ரிப்பேர் பண்ண தேதிய வச்சி. பாக்கறவங்களுக்கு பாத்தியா ஈ.டி எவ்வளவு வேகமா செயல்படறார்னு தெரியணுமாம். மேலே சேர்மன் கிட்ட போனா ஏன் ஈ.டி உடனே கையெழுதுப்போட்டும் பத்து நாள் கழிச்சி எங்கிட்ட வருதுன்னு இவரோட பி.ஏ.வை போட்டு வறுத்தெடுத்துருவார். மானங் கெட்ட மனுசன்.. செய்யற வேலைக்கு ரெஸ்ப்பான்சிபிலிட்டி கூட எடுத்துக்க தெரியாம.. இவனெல்லாம் ஒரு ஈ.டி. இவங்கிட்ட வேல பாக்கற தலையெழுத்து நமக்கு..’

மனுசன் டேபிள பாத்தாலே தெரியல. இந்த ஆள் ஒர்க் பண்ற லட்சணம்? இவரோட ஸ்டாஃப் சொல்றது சரிதான் போலருக்கு. இன்னும் கொஞ்ச நேரம் இங்க ஒக்காந்திருந்தா பைத்தியம் புடிச்சாலும் புடிச்சிரும் என்று நினைத்தவாறு எழுந்து நின்றார் சுந்தரலிங்கம். ‘வேற ஒன்னும் இல்லையே சார்.. எனக்கு கொஞ்சம் அர்ஜண்ட் ஒர்க் இருக்கு.. If you don’t mind..’

சேதுமாதவன் அலட்சியத்துடன் அவரைப் பார்த்தார். ஆமா ---- புடுங்கற வேலை.. போய்யா போ.. நீ இல்லன்னா எனக்கு அந்த லெட்டர் கிடைக்காதா என்ன? அந்த சுபோத்த போடற போடுல கதறிக்கிட்டு எடுத்து வர மாட்டான்?

சரி என்ற உருமலுடன் சேது தலையை அசைக்க சுந்தரலிங்கம் வெளியேறி தன்னுடைய அறையை நோக்கி நடந்தவர் தன்னுடைய பிரத்தியேக அலுவலக அதிகாரிகள் அன்றைய செய்தித்தாளை விரித்து வைத்துக்கொண்டு தங்களுக்குள் தர்க்கம் செய்துக்கொண்டிருந்ததைக் கண்டும் காணாததுபோல் அவர்களைக் கடந்து சென்று அறைக்குள் நுழைந்தார்.

‘வேணுங்க இந்த டாக்டருக்கு. பழைய சேர்மன் போனதுக்கப்புறம் நீங்க அந்த சீட்ல இருந்தப்போ ஒங்கள என்ன பாடாபடுத்தினான்? இப்ப என்ன ஆச்சி பாத்தீங்கள்லே.. இப்பல்லாம் தெய்வம் நின்னு கொல்றதில்ல போலருக்கு.. அப்பப்போ கிடைச்சிருது.. இது மாதிரி அந்த சேதுவுக்கும் கிடைச்சா நல்லாருக்கும்.’ அன்று காலையில் பத்திரிகையைப் படித்தவாறு தன்னுடைய மனைவி அடித்த கமெண்ட்டை நினைத்து சிரித்துக்கொண்டார்.

****

மாணிக்கவேலின் துர்பாக்கிய நிலையைக் குறித்த யோசனையில் ழ்ந்திருந்த ஃபிலிப் சுந்தரம் தன்னுடைய இண்டர்காம் சிணுங்குவதை செவியுற்று எடுத்து, ‘ஹலோ.’ என்றார்.

‘சார் சேர்மன் ஒங்கள ஒரு நிமிஷம் வர முடியுமான்னு கேக்கறார் சார்.’

‘Yes Subodh.. I am on the way.’ என்று எழுந்து தன்னுடைய செல்ஃபோனை எடுத்துக்கொண்டு விரைந்தார்.

தொடரும்..

No comments: