14.12.06

சூரியன் 153

விடியற்காலையிலேயே விழிப்பு வந்தும் எழுதிருக்க மனமில்லாமல் படுக்கையிலேயே உழன்றுக்கொண்டிருந்தாள் மைதிலி.

முந்தைய நாள் இரவில் நடந்தவைகள் மனதில் கிடந்து சங்கடப்படுத்தின.

எதுக்கு அவ்வளவு கோபம் வந்துது எனக்கு? நிதானமா ஹேண்டில் பண்ண வேண்டிய விஷயத்த தேவையில்லாம கோபப்பட்டு, என்ன செய்ய முடியும் இவங்களாலங்கற திமிர் நம்மையுமறியாம நமக்குள்ள ஐருக்கோ? இல்ல.. பயமா? Attack is the best form of defenseங்கறா மாதிரி நாம அவ்வளவு கோபப்படலன்னா அப்பாவையும் அம்மாவையும் நம்ம வழிக்கு கொண்டு வர முடியாதோ?

தலைக்கு மேலே ஓய்வில்லாமல் ஓடிக்கொண்டிருந்த மின்விசிறியைப் பார்த்தவாறு படுத்திருந்தாள். மூனு ப்ளேட்ஸ் இருந்தும் சுத்தறப்போ ஒன்னுமே இல்லாதமாதிரி தெரியுதே? வாழ்க்கையும் இப்படித்தான் போலருக்கு. போற வேகத்துல சுற்றம், பந்தம், பாசம், பச்சாதாபம் எதுவுமே இல்லாத மாதிரி போயிருமோ..

நாம இப்ப எடுத்திருக்கற முடிவு சரியானதுதானா? சீனிய நமக்கு உண்மையிலயே முழுசா தெரியுமா? அவன் மேல நமக்கு இருக்கறது உண்மையிலேயே காதல்தானா? இல்ல வெறும் பச்சாதபமா? அவனால ஆம்பளையா, லட்சணமா ஒரு வேலைய தேடிக்கிட்டு.. ஒரு பொறுப்புள்ள புருஷனா.. Can he discharge his duties as a responsible husband?

அப்பா சொன்னாரே.. ஒன்னைய பத்திய விஷயத்தையெல்லாம் அவா கிட்ட சொல்லிருக்கேன்னுட்டு.. என் விஷயமா? அப்படீன்னா? எம் பொண்ணு சீனிவாசன்னு ஒரு பையனோட சேந்துக்கிட்டு ஊரெல்லாம் சுத்திருந்தாலும் அவ ஒன்னும் கெட்டுப்போயிரலன்னுட்டா? என்ன அக்கிரமம்? ஒரு ஆணுக்கும் பொண்ணுக்கு நடுவில காதல், காமம்கறத தவிர வேற ஒன்னும் இருக்க முடியாதா என்ன?

ஊர் பேசறது இருக்கட்டும். பெத்த அம்மா, அப்பாவே அப்படியொன்னு இருக்குன்னுட்டு அவங்களா நினைச்சிக்கிட்டு பொண் பாக்க வர்றவா கிட்ட மட்டும் அப்படியெல்லாம் இல்லேன்னு சொல்றது எந்த விதத்துல நியாயம்? ஜெயகாந்தன் சொல்றா மாதிரி இது ஒரு பம்மாத்து விஷயமில்ல?

இதுக்காகவே நாம சீனியத்தான் கட்டிக்குவேங்கறதுல பிடிச்சி நிக்கணும்.. அவனோட சேர்ந்து வாழணும்னு நமக்குள்ளயே ஒரு முடிவுக்கு வந்துட்டா போறும்.. அப்புறம் அது ஒரு பெரிய, கஷ்டமான விஷயமாவே தெரியாதுன்னு படுது.. Yes! It should be possible.. Or we should make it possible..

‘ஏய்.. மைதிலி.. இன்னுமா தூங்கிக்கிட்டிருக்கே.. இன்னைக்கி ஆஃபீசுக்கு போறியா இல்லையா?’

அம்மா!

அம்மா எப்பவுமே இப்படித்தான். அவகிட்ட எத்தன சண்டை போட்டாலும் சரி.. அடுத்த நிமிஷமே மறந்துட்டு வந்து ஈஷிப்பா.. ஆனா அப்பா அப்படியில்லை.. அவர் மேல எந்த தப்புமிலாம யாராச்சும் கோச்சுண்டா.. அவாளே வந்து பேசறவரைக்கும் மூஞ்ச தூக்கி வச்சுண்டு..

‘ஏய்.. ஒன்னெத்தான்.. இன்னைக்கி ஆஃபீசுக்கு போறியா இல்லையா? அதச்சொல்லு..’

மைதிலி போர்வையை ஒதுக்கிவிட்டு எழுந்து நின்றாள். கைகள் இரண்டையும் தலைக்கு மேலே தூக்கி நெட்டி முறித்தவாறு ஒரு நொடி யோசித்தாள். ஆஃபீசுக்கு போணுமா? வீட்டுல இருந்து அப்பாவோட பேசி.. வேணும்னா டாக்டர் அங்கிளையும் வரச்சொல்லி.. இந்த விஷயத்துல ஒரு முடிவுக்கு வந்தா என்ன?

ஆஃபீஸ் போயி பெருசா என்ன பண்ணப் போறோம்? அப்பாவ முழுசா சம்மதிக்க வைக்காம ஆஃபீஸ் போறதுல அர்த்தமில்ல..

அறைக்கதவைத் திறந்துக்கொண்டு ஹாலுக்குள் நுழைந்தாள். தன் தாயைப் பார்த்து சிநேகத்துடன் புன்னகைத்தாள். ஜானகியும் பதிலுக்கு புன்னகைத்துவிட்டு ஹாலில் அமர்ந்து பேப்பரில் மூழ்கியிருந்த பட்டாபியை நோக்கி கண்ணால் சாடை செய்தாள் அவர்கிட்டயும் பேசுடி என்பதுபோல்..

பேசறேன் என்று பதிலுக்கு உதட்டையசைத்த மைதிலி, ‘நா இன்னைக்கி ஆஃபீசுக்கு போலம்மா.. நம்ம டாக்டர் அங்கிளயும் போய் பாக்கணும்.. சீனி எப்ப மெட்றாசுக்கு போமுடியுங்கறத பத்தி கேக்கணும்.. சாப்பாடு வேணாம்.. டிஃபன் மட்டும் பண்ணிடு.. நா குளிச்சிட்டு வரேன்..’ என்றவாறு தன் தந்தையைப் பார்த்தாள். ‘நீங்களும் எங்கூட க்ளினிக் வரைக்கும் வர முடியுமாப்பா?’

பட்டாபி அவளைப் பொருட்படுத்தாமல் அன்றைய ஹிண்டு நாளிதழில் தன்னுடைய முகத்தைப் புதைத்துக்கொண்டார். மைதிலி தன் தாயைப் பார்த்து உதட்டை சுளித்துவிட்டு ஹாலின் ஒரு கோடியிலிருந்த குளியலறையை நோக்கி நடந்தாள்.

அவள் குளியலறைக்குள் சென்று மறையும்வரைக் காத்திருந்த ஜானகி, ‘ஏன்னா.. அவதான் நேத்தைக்கி நடந்தத மறந்துட்டு வந்து பேசறாளே நீங்களும் செத்த இறங்கி வந்தாத்தான் என்னவாம்?’ என்றாள்.

பட்டாபி அப்போதும் பதிலளிக்காமல் நாளிதழைப் படிப்பதிலேயே குறியாயிருக்க, ‘எப்படியோ போங்க.. ஒங்கள மாதிரிதான ஒங்க பொண்ணும் இருப்போ.. ஒங்க ரெண்டு பேர் நடுவுலயும் மாட்டிண்டு நாந்தான் அல்லாடறேன்..’ என்று புலம்பியவாறு சமையலறையை நோக்கி நடந்தாள் ஜானகி.

*********

மாணிக்கவேல் தன் தந்தையை எந்த அளவுக்கு நேசித்திருந்தார் என்பது ஜோவுக்கு நன்றாக தெரியும்.

‘ரெண்டு தையல் மிஷின வச்சிக்கிட்டு எங்கப்பாவும் அம்மாவும் காலையிலருந்து ராத்திரிவரைக்கும் ஓய்வில்லாம ஒழைச்சதுனாலதான் நாங்கல்லாம் இந்த அளவுக்கு வர முடிஞ்சது தெரியுமா ஜோ? அப்பா பட்ட ஒவ்வொரு கஷ்டமும் எனக்கு நல்லாவே தெரியும். அந்த கஷ்டத்துலயும் நாங்கல்லாம் நல்ல படிச்சி பெரிய வேலைக்கும் போகணும்னு ஆசைப்பட்டார். எங்க எல்லாரையுமே படிக்க வச்சிரணும், நம்மளமாதிரி இந்த தையல் வேலைக்கு வந்து கஷ்டப்படக்கூடாதுங்கறதுல அப்பாவும் சரி அம்மாவும் சரி ரொம்பவே பிடிவாதமா இருந்தாங்க. ஆனா அவங்க மட்டும் நினைச்சா போறாதுல்ல ஜோ.. அண்ணன்க நினைப்பெல்லாம் வேறயாவுல்ல இருந்துது? என்னையும் அப்பா ஸ்கூல் முடிச்சதும் படிக்கத்தான் சொன்னாங்க.. ஆனா எனக்கும் கீழ ரெண்டு பேர் இருந்தான்களே.. அவனுங்களும் படிக்கணும்.. அதுக்கு அப்பாவால செலவழிக்க முடியுமான்னு நினைச்சிப் பார்த்தேன். இல்லப்பா நா ஒரு வேலையில சேர்ந்துக்கிட்டு அப்புறமா படிச்சிக்கறேன்னு சொல்லித்தான் அப்பாவுக்கு தெரிஞ்ச ஒரு போஸ்ட் மாஸ்டர புடிச்சி.. சார்ட்டிங் க்ளார்க்கா சேர்ந்து அப்புறம் போஸ்ட்டல் டெலிவரி மேனா மாறி.. அது வழியா நம்ம பேங்க்ல சேர்ந்து.. நானாவே படிச்சி.. இன்னைக்கி நானும் முன்னுக்கு வந்து என் தம்பிகளையும் காலேஜ் படிக்க வச்சிருக்கேன்னா.. அதுக்கு பின்னால இருக்கற அப்பாவோட efforts.. அது கொஞ்சநஞ்சமில்ல ஜோ.. I owe him my entire life.. அப்பாவோட கடைசி காலம் சந்தோஷமா இருக்கணும்.. அப்பா அவங்க வயசுல அனுபவிக்க முடியாம போனதையெல்லாம் நா செஞ்சி குடுக்கணும்..’

எத்தனை முறை, சலிக்காமல் இதையே திரும்பத் திரும்ப நம்மிடம் கூறியிருப்பார்? அப்பா, அப்பா, அப்பா என்று சதாகாலமும் பாடிக்கொண்டிருந்தவரா இப்படியொரு காரியத்தை செய்திருப்பார்? நிச்சயம் இருக்காது..

ஜோ யோசனையுடன் ஹாலின் மறுகோடியில் அமர்ந்திருந்த ராணியைப் பார்த்தான். அன்னைக்கி வந்தனா மேடம் மயங்கி விழுந்ததுக்கும் இவங்கதான் காரணம்னு சாரே சொன்ன மாதிரி இருந்துதே..

‘சார்.. நா அவங்கக் கிட்ட கொஞ்சம் தனியா பேச முடியுமா?’

‘எதுக்கு சார்?’

‘எனக்கென்னமோ அவங்க குழப்பத்துல இருக்காங்கன்னு தோனுது, அதான் அப்படி ஒங்கக்கிட்ட கம்ப்ளெய்ன் செஞ்சிருக்காங்க.’

காவல்துறை அதிகாரி எரிச்சலுடன் தன்னைப் பார்ப்பது தெரிந்தும் அதை கண்டுகொள்ளாமல் ராணியை நோக்கி ஜோ முன்னேற, ‘மிஸ்டர், உங்கள் இங்க வரச்சொன்னது அவங்க சொன்னது சரியா தப்பான்னு விசாரிக்க இல்ல.. இவரோட சன் மயக்க நிலையில அந்த ரூம்ல இருக்கார். நாந்தான் அவருக்கு தூக்க மருந்து ஊசி போட்டேன் இவரே ஒத்துக்கிட்டார். மேடம் இங்க தனியா இருக்க மாட்டேன்னு சொன்னதால இவர் சொல்லி ஒங்கள வரவச்சேன். நீங்க அவர பாருங்க நாங்க இவர கூட்டிக்கிட்டுப் போய் விசாரிக்கிறோம்.’ என்றவாறு அவனைத் தடுத்து நிறுத்தினார் அவர்.

ஜோ திடுக்கிட்டு அவரைப் பார்த்தான். ‘என்ன சொல்றீங்க சார். இவர கூப்பிட்டுக்கிட்டு போறீங்களா, எங்க?’

ஆய்வாளர் பதிலளிக்காமல் தன்னருகில் நின்றிருந்த காவலரைப் பார்த்தார். ‘என்னய்யா பாத்துக்கிட்டிருக்கீங்க? இவர கூட்டிக்கிட்டுப் போய் ஜீப்புல ஏத்துங்க..’ பிறகு திரும்பி ராணியையும் அவளுடன் நின்றிருந்த பெண் காவலரையும் பார்த்தார். ‘நீங்க ரெண்டு பேரும் இந்தம்மா எங்க போணும்னு சொல்றாங்களோ அங்க கூட்டிக்கிட்டு போய் விட்டுருங்க. ஆனா அவங்க கைப்பட ஒரு ஸ்டேட்மெண்ட் எழுதி வாங்கிட்டு வந்துருங்க.. ஊம்.. கெளம்புங்க..’

மாணிக்கவேல் மறுபேச்சு பேசாமல் எழுந்து நின்றார். ஜோ பதறியவாறு, ‘சார்’ என்றவாறு அவரை நெருங்க நின்று அவனைப் பார்த்தார். ‘Don’t worry Joe.. நீங்க சந்தோஷோடவே இருக்கணும்னு இல்ல.. அவன் எழுந்துக்கறது எப்படியும் ரெண்டு மணி நேரம் ஆவும். நீங்க ஆஃபீஸ் போய் சாவிய ஹேண்டோவர் செஞ்சிட்டு வந்து அவன பாருங்க. முழிச்சிருந்தா அவனையும் கூட்டிக்கிட்டு ஸ்டேஷனுக்கு வாங்க.. பாக்கலாம்..’

ஜோ சரி சார் என்பதுபோல் தலையை அசைக்க மாணிக்கவேல் திரும்பி தன் மனைவியை ஒருமுறை பார்த்துவிட்டு வாசலை நோக்கி நடந்தார்.

அவரைத் தொடர்ந்து காவல்துறை ஆய்வாளரும், காவலர்களும் வெளியேறினர். ராணியும் பெண் காவலர்களுடன் அவன் நிற்பதைப் பொருட்படுத்தாமல் தலையைக் குனிந்தவாறு வெளியேற வெறிச்சோடிப் போன ஹாலைப் பார்த்தவாறு நின்றிருந்தான் ஜோ.

தொடரும்..

2 comments:

siva gnanamji(#18100882083107547329) said...

சந்தோஷ் சுயநிலை பெற்றால்தான்
போலிசுக்கு உண்மை புரியும்

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க ஜி!

சந்தோஷ் சுயநிலை பெற்றால்தான்
போலிசுக்கு உண்மை புரியும் //

அப்படித்தான் நானும் நினைக்கிறேன்:)