9.12.06

சூரியன் 151

சாதாரணமாக தினமும் காலையில் அலுவலக வளாகத்தில் நுழையும் முதல் வாகனம் ஃபிலிப் சுந்தரத்தினுடையதாகவே இருக்கும். அவரையடுத்து சுந்தரலிங்கம். அதற்குப் பிறகே சேதுமாதவன் வருவது வழக்கம். சேதுமாதவன் ஒருநாளும் அலுவலகத்திற்கு குறித்த நேரத்தில் வந்ததாக சரித்திரமே கிடையாது. இது வங்கியிலிருந்த அனைவருமே அறிந்திருந்ததுதான்.

ஆனால் அன்றோ ஃபிலிப் சுந்தரத்தின் வாகனம் வளாகத்திற்குள் நுழைந்தவுடன்  அவருடைய பார்வையில் முதலில் தெரிந்தது சேதுமாதவனின் வாகனம்தான்.

‘தலைபோகிற விஷயமா இல்லாட்டி இந்த நேரத்துல இவர் இங்க வர மாட்டாரே’ என்று எண்ணியவாறு வாகனத்திலிருந்து இறங்கி தன்னுடைய அறைக்கு விரைந்தார்.

அறையை சென்றடைந்ததும் தன்னுடைய கைப்பெட்டியை மேசையில் வைத்துவிட்டு அமர்ந்தவர் சட்டென்று நினைவுக்கு வந்தவராய் சேர்மன் மாதவனின் காரியதரிசியை இண்டர்காமில் அழைத்தார். அடித்துக்கொண்டே இருந்தது. ‘சாதாரணமா இந்த நேரத்துல வந்திருப்பாரே..’ என்று நினைத்தவாறு அறையை விட்டு வெளியேறி தன்னுடைய பிரத்தியேக அலுவலர்கள் அமர்ந்திருந்த அறைகளைப் பார்த்தார். ஒரேயொரு அதிகாரி மட்டும் அமர்ந்து கணினியில் எதையோ மும்முரமாக தேடிக்கொண்டிருப்பது தெரிந்தது.

அவரையழைத்து, ‘மேல போயி சேர்மன் பி.ஏ வந்துருக்காரான்னு பார்த்துட்டு வாங்க.. அவர் இருந்தா என் கேபினுக்கு வரச்சொல்லுங்க.’ என்று பணித்துவிட்டு தன் அறைக்கு திரும்பினார்.

சுபோத்துக்கு நாடார் கேட்டிருந்த கடிதம் எங்கிருக்கிறதென்று தெரிய வாய்ப்பிருக்கிறது. அது நாடாருக்கு எதற்கென்று முதலில் அவருக்கு விளங்காவிட்டாலும் ஆலோசித்து பார்த்தபோது அதன் முக்கியத்துவம் புரிந்தது.

நாடாருக்கும் சோமசுந்தரத்திற்கும் இடையில் நடந்துக்கொண்டிருந்த பனிப்போர் அவருக்கு மட்டுமல்ல வங்கியின் உயர் அதிகாரிகள் அனைவருக்குமே தெரிந்ததுதான். சோமசுந்தரத்திற்கு ஆதரவாக மூன்று, நான்கு இயக்குனர்கள் இருந்ததும் நாடாருக்கு ஆதரவாக நகரில் மிகப் பெரிய பாத்திரக் கடை வைத்திருந்த சிவசு எனப்படும் செட்டியார் மட்டுமே.

ஆகவே அந்த எண்ணிக்கையை கூட்டும் முயற்சியில் கடந்த ஆறு மாத காலமாகவே நாடார் இறங்கியிருந்தார் என்பதை ஃபிலிப் சுந்தரம் அறிந்திருந்தார்.

அவருடைய எண்ணத்திற்கு தகுந்தாற்போல் முந்தைய சேர்மனின் பதவிக் காலத்தில் வங்கியில் வருடாந்தர ஆய்வு நடத்த வந்திருந்த ரிசர்வ் வங்கி அதிகாரிகள் ஆய்வின் இறுதி நாளன்று வங்கியின் முதல்வர் மற்றும் மூத்த இயக்குனர்கள் முன்னிலையில் இயக்குனர் குழுவில் வழக்கறிஞர் மற்றும் ஆடிட்டர்கள் இல்லாத குறையைச் சுட்டிக்காட்டியதுமே நாடாருடைய முகத்தில் தோன்றி மறைந்த மகிழ்ச்சியை ஃபிலிப் சுந்தரம் கவனித்தார்.

ஆனால் நாடாருக்கும் சோமசுந்தரத்திற்கும் இடையில் இருந்த கருத்து வேறுபாட்டை ஏற்கனவே அறிந்து வைத்திருந்த வங்கியின் முதல்வர் இதனால் புதிதாக ஒரு பிரச்சினையை இயக்குனர் குழுவில் ஏற்படுத்த விரும்பாமல் ரிசர்வ் வங்கியின் கருத்தை நிறைவேற்ற முடியாத நிலையில் இருப்பதாக ரிசர்வ் வங்கிக்கு தெரிவித்துவிடும்படி தனக்கு உத்தரவிட்டதை நினைத்துப் பார்த்தார் ஃபிலிப்.

ஆனால் இயக்குனர் குழுவைக் கலந்தாலோசிக்காமல் அவர் அப்படி செய்தது குழுவிலிருந்த அனைவருக்குமே மனக்கசப்பை ஏற்படுத்தியது. வங்கியின் முதல்வர் தன்னுடைய அதிகார வரம்பை மீறிவிட்டார் என்றும் இனி அப்படியொரு சூழல் ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற ஒரு தீர்மானத்தை இயக்குனர் குழு அடுத்த போர்ட் கூட்டத்தில் குழுவினரின் ஒட்டுமொத்த ஆதரவுடன் முன்வைக்கவே தன்னுடைய முடிவுக்கு வருத்தம் கேட்க வேண்டிய நிலைக்கு ஆளானார் முதல்வர்.

அன்று முதலே அவர் எடுத்த ஒவ்வொரு முடிவிலும் இயக்குனர் குழு குற்றம் கண்டுபிடிக்க ஆரம்பிக்க நாளடைவில் மனம் வெறுத்துப்போய் தன்னுடைய பதவியை ராஜிநாமா செய்ய வேண்டிய சூழலுக்கு ஆளாகி.. யாரும் எதிர்பாராத நேரத்தில் தன்னுடைய முடிவை இயக்குனர் குழுவினருக்கு தெரிவிக்காமல் அவர் நேரடியாக ரிசர்வ் வங்கிக்கு அறிவித்துவிட்டு வெளியேற ரிசர்வ் வங்கியின் நேரடி கண்கானிப்பின் கீழ் வந்தது வங்கி.

ரிசர்வ் வங்கியின் பிரதிநிதியாக இயக்குனர் குழுவில் இருந்த சாம்பசிவத்தின் தலைமையில் இயக்குனர் குழுவின் மூத்த இயக்குனர்கள் அடங்கிய ஒரு குழுவை அமைத்து அடுத்த வங்கி முதல்வர் நியமிக்கப்படும் வரை வங்கியின் நிர்வாகத்தை அதனிடம் ஒப்படைத்தது.

வங்கியின் அடுத்த முதல்வரைத் தேர்ந்தெடுக்கும் நேரத்திலும் நாடாருக்கும் சோமசுந்தரத்திற்கும் இடையில் நடந்த இழுபறி போராட்டத்தில் சிக்கிக்கொண்டு எச்.ஆர் இலாக்காவின் தலைவர் என்ற முறையில் தான் அனுபவித்த இன்னல்களையும் இப்போது நினைத்துப் பார்த்தார் சுந்தரம்.

இந்த போராட்டத்தில் ரிசர்வ் வங்கியின் கடிதத்தைப் பற்றி நாடாரும் சரி சோமசுந்தரமும் சரி மறந்து போயிருந்தார்கள் போலிருக்கிறது. அதை மீண்டும் அவர்கள் இருவருடைய நினைவுக்குக் கொண்டுவருவதுபோல் அமைந்துவிட்டது யாருமே எதிர்பாராதிருந்த சோமசுந்தரத்தின் பதவி விலகல்..

ஆகவே ரிசர்வ் வங்கியின் இந்த கடிதத்தை வைத்துக்கொண்டு ஆதாயம் தேட இருவருமே முயல்வார்கள் என்று நினைத்தார் சுந்தரம்.

அதை தம்மால் தடுக்க முடியாதென்பதை அவர் உணர்ந்திருந்தாலும் சற்று தள்ளிப் போடவாவது முடியுமே என்று நின¨த்தார்.

அதற்கும் காரணமிருந்தது. இயக்குனர்கள் குழுவில் நகரத்தில் தொழில் நடத்தும் வழக்கறிஞர் ஒருவர் அங்கத்தினராக இருந்தால் வங்கியின் சட்ட ஆலோசகர்களின் பணியில் தலையிட்டு குற்றம் காண்பதில் குறியாயிருப்பார். அத்தகைய தலையீடு சில வழக்கறிஞர்கள் விஷயத்தில் தேவைதான் என்றாலும் பல மூத்த வழக்கறிஞர்கள் இதை ஏற்றுக்கொள்ள மறுக்க வாய்ப்புண்டு. அத்தகைய சூழலில் அவர்களுடைய திறமையுள்ள சேவை வங்கிக்கு கிடைக்காமல் போய்விட வாய்ப்புள்ளது.

அதுபோலவேதான் தொழில் நடத்தும் தணிக்கையாளர் விஷயத்திலும். ஒவ்வொரு வங்கிக்கும் மத்திய தணிக்கையாளர் என்று ஒருவரும் கிளைகளுக்கு என்று ஒருவருமாக பல தணிக்கையாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படுவதுண்டு. இயக்குனர் குழுவில் அங்கத்தினராக இருக்கும் தணிக்கையாளர் தன்னுடைய பதவியைப் பயன்படுத்தி அவர்களுடைய பணியில் தலையிட வாய்ப்புள்ளது. அதனால் சாதகத்தைவிடவும் பாதகமே விளைய வாய்ப்பு அதிகம் என்று நினைத்தனர் வங்கியின் உயர் அதிகாரிகள்.

‘சார்.. சுபோத் ஆஃபீஸ்ல இருக்கார்.ஆனா போன அரை மணி நேரமா அவர் சேதுமாதவன் கேபினுக்குள்ள இருக்காராம்.. ஈ.டி சார் வந்தவுடனே அவர கூப்ட்டு அனுப்புனாராம்.. என்ன, ஏதுன்னு யாருக்கும் தெரியல சார்..’

சுந்தரம் குழப்பத்துடன் தன் முன் நின்ற அதிகாரியைப் பார்த்தார். ‘என்ன சொல்றீங்க? சுபோத் ஈ.டி. கேபின்ல இருக்காரா?’ என்றவர் மேற்கொண்டு இவரிடம் விசாரிப்பதில் பயனில்லை என்று நினைத்து, ‘சுந்தரலிங்கம் சார் வந்துட்டாரான்னு பாருங்க.. அவங்க பி.ஏ.வ இண்டர்காம்ல கூப்ட்டு சார் ஃப்ரீயா இருக்காரான்னு கேட்டு சொல்லுங்க. அப்படியே சேர்மன் வந்துட்டாரான்னும் பாருங்க..க்விக்..’ என்று அவரை அனுப்பிவிட்டு சுந்தரலிங்கத்திடம் இதை சொல்வது உசிதம்தானா என்று சிந்திக்கலானார்.

*********

மாதவன் அலுவலகம் வரும் வழியெல்லாம் முந்தைய தின சந்திப்பில் காவல்துறை அதிகாரி தன்னிடம் கூறியதைப் பற்றி நினைத்துக்கொண்டிருந்தார்.

‘இந்த விஷயத்த யார்கிட்டயாவது பகிர்ந்துக்கணுமே.. அப்படி அந்த ஆஃபீசர் சொன்னது சரியாயிருந்தா பேங்க்ல வேற யாருக்காவது நிச்சயம் தெரிஞ்சிருக்கணும்.. அத எப்படி கன்ஃபர்ம் செஞ்சிக்கறது?’ என்று சிந்தித்தவர் வங்கி வளாகத்தில் அவருடைய வாகனம் நுழைந்ததும் ஃபிலிப் சுந்தரம்தான் இதற்கு ஏற்ற ஆள் என்று தீர்மானித்தார்.

ஆகவே அவர் தன்னுடைய அறையை அடைந்ததுமே இண்டர்காம் வழியாக தன்னுடைய காரியதரிசியை அழைத்தார்.

ஆனால் சுபோத்துக்கு பதிலாக அவருக்குக் கீழ் பணியாற்றும் ஒரு பெண் அதிகாரி தயங்கி, தயங்கி அவருடைய அறைக்குள் நுழைவதைக் கவனித்தார். ‘Yes?’ என்றார் சற்று எரிச்சலுடன்.. ‘Where is Mr.Subodh?’

அவருடைய எரிச்சல் தொனித்த கேள்வி அவ்வதிகாரியை சற்று நிலைகுலையச் செய்ததை உணர்ந்த மாதவன் புன்னகையுடன், ‘don’t be upset.. is Mr.Subodh in the office or not?’ என்றார்.

‘He is with E.D. Sir..’

மாதவனின் புருவங்கள் வியப்பில் வளைந்தன.

‘Should I call him from his cabin Sir.’

மாதவன் புன்னகையுடன் வேண்டாம் என்று தலையை அசைத்தார். ‘Ask him to come to my cabin when he returns.’

‘Yes Sir..’

அப்பெண் அதிகாரி அறைக் கதவை மிருதுவாக மூடியவாறு வெளியேற மாதவன் யோசனையில் ஆழ்ந்தார். ‘What does Sethu want from Subodh? ஒருவேளை ஞாயிற்றுக்கிழமை ஏர்ப்போர்ட்டில் நடந்ததைக் குறித்தாயிருக்குமோ? பாவம் சுபோத்.. நாம கேக்கப் போயிதான அவன் அந்த பொய்ய சொல்ல வேண்டி வந்தது? I should do something to rescue the poor chap..’

****

‘Hey! Look here.. I don’t want your explanation..’ என்று எரிந்து விழுந்தார் சேதுமாதவன். ‘I was told that the letter is in your custody. Is it true or not.. Yes or No?’

சுபோத்துக்கு இவர் எந்த கடிதத்தைப் பற்றி கேட்கிறார் என்றே சற்று நேரம் புரியவில்லை..  

ரிசர்வ் வங்கியிடமிருந்து தினம் ஒரு கடிதமாவது வருவதுண்டு. இவர் கேட்பதோ ஆறேழு மாதங்களுக்கு முன்பு வந்த கடிதத்தைப் பற்றி.

சாதாரணமாக ரிசர்வ் வங்கியிலிருந்து வங்கி முதல்வருக்கு எந்த கடிதம் வந்தாலும் சுபோத் அவருடைய பார்வைக்கு வைத்துவிடுவான். முந்தைய சேர்மன் கடிதங்களைப் படித்து அது எந்த இலாக்கா சம்பந்தப்பட்டது என்று அவரே தீர்மானித்து சம்பந்தப்பட்ட இலாக்கா தலைவரை அழைத்து அதைக் குறித்து விசாரிப்பார். பிறகு அவரே அதற்கு எப்படி பதிலளிக்கவேண்டும் என்று பரிந்துரைத்து உடனே பதிலை தயாரித்துக்கொண்டு வரவேண்டும் என்று உத்தரவிடுவார்.

அடுத்த அரை மணியில் பதிலைத் தயாரித்து அவருடைய மேசைக்கு எடுத்து வராவிட்டால் அவ்வளவுதான் சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு மண்டகப்படிதான்.. அந்த சந்தர்ப்பங்களில் சுபோத்துக்கும் டோஸ் விழுவதுண்டு..

பதில் தயாராகி வந்ததும் அவரே ஒப்பிட்டு தன்னுடைய பிரத்தியேக அலுவலக முத்திரையைத் தாங்கியிருக்கும் உரையில் இட்டு மூடிய பிறகே சுபோத்திடம் கொடுத்து, ‘It should be delivered at the RBI’s Chennai Office by hand.. Send a person immediately.’ என்று உத்தரவிடுவார். பதிலின் நகலை அப்போதே தன்னுடைய பிரத்தியேக சிப்பந்தியை அழைத்து தன் பொறுப்பில் இருந்த கோப்புகளில் file செய்துவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பார். அந்த கோப்புகளும் அவருடைய பொறுப்பில் இருந்த அலமாரியில் மட்டுமே வைக்கப்படும். அதன் சாவியையும் கூட சுபோத்திடம் கொடுத்ததில்லை. அவர் விடுப்பிலோ அல்லது அலுவலக விஷயமாக சுற்றுப் பயணம் சென்றாலோ ஃபிலிப் சுந்தரம் சாரிடம் மட்டுமே கொடுப்பார்.

இப்படியிருக்க இவர் கேட்கும் கடிதம் இப்போது எந்த கோப்பில் இருக்கிறதென்றே தெரியாத என்னிடம் கேட்டு என்ன பயன்? இதை இவரிடம் எப்படி எடுத்துரைப்பது என்று எண்ணி மாய்ந்துப் போனான் சுபோத்..

‘என்ன மேன்.. Don’t try to act too smart.. Go and search for that letter.. It should have come between May and June this year.. If I don’t get that letter in another half an hour you’ll have to face the consequence.. Do you understand? Go..’ என்று சேதுமாதவன் எரிந்து விழ அப்போதைக்கு தப்பித்தால் போதும் என்ற நிம்மதியில் அறை வாசலை நோக்கி விரைந்தவனை ‘Hey.. listen..’ என்று தடுத்து நிறுத்தினார். ‘No one should know that I asked for that letter. Is that clear?’

அவருடைய உத்தரவின் உட்பொருள் புரிந்ததோ இல்லையோ.. சரி என்று தலையை அசைத்துவிட்டு ஒரே பாய்ச்சலில் அறையை விட்டு வெளியேறினான் சுபோத்..

தொடரும்..

3 comments:

siva gnanamji(#18100882083107547329) said...

'சிரமறுத்தல் வேந்தனுக்குப் பொழுதுபோக்கு;
மற்றவர்க்கு உயிரின் வாதை!'

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க ஜி!

அதாவது அதிகாரத்துலருக்கறவனுக்கு அதிகாரத்துக்குட்பட்டவன துன்புறுத்துறதே பொழுதுபோக்காருக்குன்னு சொல்ல வரீங்க. சரிதானே? அதான நடக்கணும்? இல்லன்னா ரெண்டு பேருக்கும் என்ன வித்தியாசம்?

siva gnanamji(#18100882083107547329) said...

//இல்லேன்னா ரெண்டு பேருக்கும் என்ன வித்தியாசம்?// உங்க சகபணியாளர்களைக் கேட்கணும்