1.12.06

சூரியன் 148

சேதுமாதவன் கூறி முடிக்கும்வரை பொறுமையுடன் காத்திருந்தார் விஸ்வநாதன்.

அவருக்கும் சேதுமாதவனுக்கும் இடையில் இருந்த உறவு ஒரு வழக்கறிஞர், கட்சிக்காரர் என்பதுடன் நின்றிருக்கவில்லை.

சேதுமாதவனின் அந்தரங்க விஷயங்கள், அவருடைய லீலைகள், அத்துமீறியச் செயல்கள் எல்லாமே அவருக்கு அத்துப்படி.

சேதுமாதவன் கைநீட்டி வாங்கியிருந்த தொகையின் அளவு மட்டுமே அவருக்கு இன்னமும் ரகசியமாக இருந்தது.

சேதுமாதவனுக்கு அரசியல் மற்றும் அரசாங்க அளவில் செல்வாக்கு இருப்பதன் பின்புலமே விஸ்வநாதன்தான். ஆட்சியில் எந்த மாற்றம் வந்தாலும் சேதுமாதவனுக்கு தேவைப்படும் காரியங்கள் அனைத்தையும் முடித்துக் கொடுக்க வேண்டிய வேலை அவருடையது.

அப்படித்தான் நேற்றும். அவருடைய அடியாட்கள் ஏதோ ஒரு வேலைக்கு சென்று காவல்துறையினரிடம் சிக்கிக்கொள்ள அவர்களை விடுவிப்பதுடன் சேதுமாதவக்கும் மேற்கொண்டு காவல்துறையிலேயே கண்டிப்புக்குப் பெயர்பெற்ற எஸ்.பி தனபாலிடமிருந்து எதுவும் பிரச்சினை வராமலிருக்க நிதித்திறை அமைச்சரின் அலுவலகத்திலிருந்து சம்பந்தப்பட்ட புகாரை ஒன்றுமில்லாமல் ஆக்க வைத்தார்.

‘இந்த அடியாள் சமாச்சாரமெல்லாம் நமக்கெதுக்கு சேது சார்.. நாம எதுலயும் நேரடியா தலையிடாம அதுக்குன்னே இங்கருக்கற தாதாங்க வழியா முடிச்சிரப் பாக்கணும்.. அவனுங்க ப்ரொபஷனல் சாமிங்க.. உயிர் போனாலும் வெஷயத்த வெளிய விட மாட்டானுங்க.. ஒங்க ஊர் ஆள்னு நீங்க வச்சிக்கிட்டிருக்கற இவனுங்க அப்படியில்ல.. கூலிய கொறச்சி குடுக்கலாமேன்னு நீங்க பாத்தா இப்படி வில்லங்கத்துலதான் ஒங்கள கொண்டு விட்டிருவான்க..’ என்று பலமுறை விஸ்வனாதன் கூறியிருந்தும் சேதுமாதவன் அவர் நினைத்ததையே செய்வது அவருக்கும் வருத்தம் தான்.. இருப்பினும் தனக்கு மாதா மாதம் கணிசமான தொகையை ஃபீசாக அள்ளிக் கொடுக்கும் வாடிக்கையாளராயிற்றே என்ற காரணத்துக்காகவும் எப்போது வந்தாலும் குடிநீராய் வழிந்தோடும் ஃபாரின் சரக்குக்காகவுமே விஸ்வனாதன் அவர் அழைத்தபோதெல்லாம் ஓடிவருகிறார்..

‘என்ன பண்றதுடி.. பொளப்பு நடக்கணுமில்ல.. அந்த கர்மத்த வாய்க்கிட்ட கொண்டு போறச்சே.. நாத்தம் கொடல புடுங்கத்தான் செய்யறது.. என்னெ என்ன பண்ண சொல்றே.. குடிச்சி போதையில இருக்கறப்பதாண்டி  அந்தாள்கிட்டருந்து கறக்க முடியறது.. அதுக்காச்சியும் பொறுத்துக்கணுமே.. குதிராட்டம் ரெண்ட நிக்க வச்சிருக்கியேடி.. ஒவ்வொன்னுத்துக்கும் குடுத்து கட்டித் தரணுமா வேண்டாமா.. அப்போ பொறுமையா நான் செய்யறத செய்ய விடு..’ என்பார் ‘எதுக்குன்னா இந்த நாய் பட்ட பொளப்பு பொளைக்கறேள்’ என்ற தன் மனைவியிடம்..

பாலக்காட்டிலிருந்து இந்த சென்னைக்கு குடியேறி ஐம்பது வருடங்களுக்கு மேலாகியும் இப்பவும் சொந்த ஊர் பக்கம் போய் செட்டிலாக முடியலையே என்ற ஆதங்கம் அவருடைய மனைவிக்கு இருப்பது விஸ்வனாதனும் உணராமல் இல்லை.. அவருக்கும் அதே எண்ணம் தான்.. ஆனால் பொண்ணுங்கள கட்டிக் குடுக்கணுமே.. ஊர் பக்கம் போனா என்ன கெடைக்கும்? ரெண்டு மூனு செட்டில்மெண்ட் கேசத்தவிர உருப்படியா என்ன கெடைக்கப் போறது? இந்த மாதிரி ஃப்ராடு பயல்கள் அங்க இருப்பான்களா என்ன?

‘எந்தா விஷ்வன் சாரே.. ஞான் பறஞ்சதொன்னும் கேட்டில்லே..’ என்ற சேதுமாதவன் குரல் அவரை நிஜ உலகுக்கு கொண்டுவர.. காவியேறிய பற்களுடன் ஒரு அசட்டு சிரிப்பை உதிர்த்தார் சென்னையில் அண்டர்க்ரவுண்ட் உலகின் பிரபல வழக்கறிஞர்களுள் ஒருவரான விஸ்வனாதன்.

‘கேக்காம என்ன.. பேஷாவே கேட்கறதே.. மறுபடியும் அந்த எஸ்.பி ஒங்களாண்டெ வாலாட்டறான்.. அதானே... நாளைக்கே நேரா மினிஸ்டராண்ட பேசிட்டா போறது.. அதுவும் சரி வரலையா.. அவருக்கும் ஒன்னு பொண்ணு இருக்குல்லையா.. ரெண்டு மெரட்டு மெரட்டிருவோம்.. அதுக்குன்னே இருக்கானே நம்ம சிந்தாதிரிப்பேட்டை ஆளு குள்ளபுள்ள? என்ன கொஞ்சம் ஜாஸ்தியா செலவாகும்.. அதனாலென்ன.. ஒங்களுக்கு பணத்த விட மனசுல நிம்மதிதானே முக்கியும்.. எந்தா.. ஞான் பறஞ்சது ஷரியானல்லோ..’

விஸ்வனாதன் கூறியது போதையிலும் சேதுமாதவனுக்கு நன்றாகவே விளங்கியது. சென்னையில் மிகவும் பிரபலமான போலீஸ் எஸ்.பிக்கே மிரட்டலா? அதுவும் வீட்டுல ரெண்டு பொண்ணுங்கள வச்சிக்கிட்டு.. சரி.. நமக்கென்ன.. இந்தாளு இத சாக்கா வச்சிக்கிட்டு எவ்வளவு கேப்பானோ என்ற ரீதியில் ஓடியது அவருடைய சிந்தனை..

‘எந்தெங்கிலும் ஆவட்டே விஷ்வன்.. எனிக்கி அயாள்டெடுத்திருந்து இனியும் பிர்ஸ்னம் வராம் பாடில்லா.. அது நோக்கியா மதி.. ஞான் எத்தறெ கொடுக்கண்டேன்னு பறஞ்சா மதி.. செக்காயிட்டு வேணோ.. இல்லே..’ (எவ்வளவு ஆனாலும் சரி. எனக்கு அந்த ஆள்கிட்டருந்து மறுபடியும் பிரச்சினை வராம பாத்துக்கிட்ட போறும்.. நான் எவ்வளவு குடுக்கணும்னு சொல்லுங்க..  செக்கா வேணுமா.. இல்லே..?)

விஸ்வனாதன் அவசரமாக குறுக்கிட்டார்.. ‘செக் எதுக்கு ஷாரே.. கேஷாயிட்டே கொடுத்துருங்கோ.. அந்த பசங்கக் கிட்ட கேஷ்தான்.. அதுவுமில்லாம நம்மள ட்ரேஸ் பண்ண முடியாது பாத்தீங்களா.. என்ன நாஞ்சொல்றது?’

விஸ்வனாதனுக்கு சாதாரணமாகவே பெருத்த குரல்.. அதுவும் இரண்டு மூன்று பெக்குகள் உள்ளே இறங்கிவிட்டால் கேட்கவே வேண்டாம்.. எட்டு ஊருக்கு கேட்கும் அவர் குரல்..

அவருடைய குரல் தெளிவாக கீழே ஹாலில் அமர்ந்திருந்த மாயாவுக்கும் திருவுக்கும் கேட்டது..

Parasites என்று மீண்டும் முனுமுனுத்தாள் மாயா.. பணம், பணம்னு புடுங்கி தின்னுதுங்க..

எந்த வழியில வருதோ அதே வழியிலதான மேடம் ஒங்க பணம் போவும் என்று முனுமுனுத்தான் திருநாவுக்கரசு..

********

முரளி அமைதியாக தன்னுடைய இருக்கையில் அமர்ந்திருந்தாலும் அவன் ஆழமாக எதையோ சிந்தித்துக்கொண்டிருப்பது தெரியவே அவனை தொந்தரவு செய்யாமல் அமர்ந்திருந்தான் அவனுடைய நெருங்கிய காம்ரேட் வாசகன், சங்க காரியதரிசி.

முரளி சற்று முன் சுபோத் தொலைபேசி வழியாக கூறியதை நினைத்துப் பார்த்தான்.

நந்தக்குமாரின் தொலைப்பேசி வந்தவுடனேயே இதில் தான் தலையிட்டு ஏதாவது செய்யவேண்டுமே என்று நினைத்துத்தான் அந்த பத்திரிகை நிரூபருடன் தொடர்புக்கொண்டு அந்த செய்தியின் நகலைப் பெற்று ஃபேக்ஸ் மூலம் சேர்மனுடைய காரியதரிசிக்கு அனுப்பி வைத்தான்.

அப்போதே தன்னுடைய பெயர் வெளியில் எப்படியும் வரும் என்று எதிர்பார்த்ததுதான்.. ஆனால் ஒரே நாளில் வந்துவிடும் என்று அவன் நினைக்கவில்லை.. அதுவும் ஃபிலிப் சுந்தரம் இதற்கு காரணமாயிருப்பார் என்று அவன் கனவிலும் நினைக்கவில்லை.

ஒருவேளை இது அந்த நாடார் வேலையாயிருக்குமோ.. இருக்கும்.. அவர்தான் ஃபிலிப் சுந்தரத்தை மிரட்டி இதை செய்ய வைத்திருப்பார்.

சரி.. நம்முடைய பெயர் வெளியில் வந்தாயிற்று.. மேற்கொண்டு என்ன செய்யலாம்? இது சேதுமாதவனுக்கு தெரிய வந்தால் நிச்சயம் இதையே சாக்காக வைத்துக்கொண்டு தன் மேல் பாய்வார் என்பது அவனுக்கு தெரிந்துதானிருந்தது. அவர் அந்த சோமசுந்தரத்தின் கையாள் என்றும் அவனுக்கு தெரியும்.

அவர்கள் இருவரும் வங்கியை சூரையாடிக்கொண்டிருந்ததை தாங்கிக்கொள்ள முடியாமல்தான் சோமசுந்தரத்தை இயக்குனர் குழுவிலிருந்து நீக்க வேண்டும் என்பதில் அவன் மட்டுமல்ல அவனுடைய சங்கமும் குறியாயிருந்தது. அந்த முயற்சியில் முதல் அடிதான் அவன் அன்று செய்தது.

சோமசுந்தரம் இயக்குனர்கள் குழுவிலிருந்து விலகினாலும் அவருடைய ஆட்களில் ஒருவர்தான் மீண்டும்  சேர்க்கப்படுவார் என்பதை அவனும் அறிந்திருந்தாலும் அவருடைய நேரடி கட்டுப்பாட்டுக்குள் வங்கியிலிருந்த சேதுமாதவனைப் போன்ற அதிகாரிகள் செயல்பட வேண்டியிருக்காதே..

இயக்குனர் குழுவில் இல்லாத சேதுமாதவன் வங்கியின் தலைமையலுவலகத்திற்கே முன்பு போல் அதிகார தோரணையுடன் நுழைய முடியாதல்லவா.. தற்போதைக்கு அதுபோதும் சேதுமாதவனின் பல்லைப் பிடுங்குவதற்கு என்று நினைத்தான் முரளி..

அதே சமயம் தான் வஞ்சிக்கப்பட்டுவிட்ட விஷயம் நிச்சயம் சேதுமாதவனால் தாங்கிக்கொள்ள முடியாது என்பதும் அவனுக்கு தெரியும். ஆனால் அவனுடன் அவர் நேரடியாக மோதவிடாமல் அவனுக்கு கேடயமாய் இருந்தது வங்கி ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் பதவி.

இருப்பினும் இதை சாதுரியமாக கையாளாவிட்டால் தனக்கு இதுவரை வந்த சிக்கல்களில் இது பெரியதாகிவிட வாய்ப்புள்ளது என்று அவனுக்கு தோன்றியது. இதை தற்போதைக்கு சமாளிக்க எதையாவது செய்ய வேண்டும்.. என்ன செய்யலாம்?

‘என்ன தலைவரே.. பயங்கரமான யோசனையில இருக்காப்பல தெரியுது?’

முரளி திடுக்கிட்டு நிமிர்ந்து தன் எதிரில் அமர்ந்த தன் சகாவைப் பார்த்தான். இவனிடம் இதை தற்போது கூறுவதால் சிக்கல் பெரிதாகவே வாய்ப்புள்ளது என்று நினைத்து, ‘ஒன்னுமில்ல வாசகன்.. நம்ம புது சேர்மன்கிட்ட நாளைக்கு ஒரு அப்பாய்ண்ட்மெண்ட் கேட்டா என்னன்னு தோனுது..’ என்றான்.

வாசகன் சட்டென்று பிரகாசமானான்.. ‘நல்ல ஐடியா தல.. பழைய சேர்மன் சார் ப்ராமிஸ் பண்ண அந்த டிரான்ஸ்ஃபர் பாலிசி, ப்ரொமோஷன் பாலிசி. எல்லாம் அப்படியே கெடப்புல கெடக்கே.. அத பத்தி பேச நமக்கு இதான் சான்ஸ்.. இடையில பூந்து அந்த ஈ.டி கெடுக்கறதுக்குள்ள நாம சேர்மன பாத்து பேசிரணும்.. இன்னும் ரெண்டு வாரத்துக்குள்ள ஒரு முடிவு சொல்லன்னா.. ஸ்ட்ரைக் பண்றத தவிர வேற வழியில்ல ஒரு குண்ட தூக்கி போடுவோம்.. என்ன தல?’

முரளி வியப்புடன்.. அட! இதுவும் நல்ல ஐடியாவா இருக்கே.. இந்த ஃபேக்ஸ் விஷயத்த ஆறப்போடறதுக்கு இதுவும் நல்ல வழிதான்.. இவன் வாயாலயே வந்தது எவ்வளவு நல்லதா போச்சி.. செஞ்சிர வேண்டியதுதான்..

‘சரி.. வாசகன் அப்படியே செஞ்சிரலாம். சேர்மனுக்கு ஒரு லெட்டர் டிராஃப்ட் பண்ணுங்க..’ என்று அவன் கூறவும் அவனுடைய செல்ஃபோன் சிணுங்கவும் சரியாயிருந்தது..

‘ஹலோ.. யார்..?’ என்றவன் வியப்புடன், ‘நீயா? என்ன விஷயம்..?’
என்றான்.

எதிர்முனையிலிருந்த கேட்ட விஷயம் அவனை ஒருமுறை தூக்கிவாரிப் போட, ‘என்ன சொல்றே.. என்னையா? ராஸ்க்கல்.. அந்த அளவுக்கு போய்ட்டானா?’ என்றான் கோபத்துடன்..

******

விஸ்வனாதன் கையோடு கொண்டுவந்திருந்த கைப்பை நிறைய கருப்புப் பணத்துடன் வெளியேற அவரை எழுந்து வழியனுப்பக் கூட திராணியில்லாமல் சோபாவில் சாய்ந்துக் கிடந்தார் சேதுமாதவன்.

விஸ்வனாதன் ஹாலில் இருந்த மாயாவை நோக்கி ஒரு கூழைக் கும்பிடு போட்டுவிட்டு வெளியேற அவள் கோபத்துடன் எழுந்து மாடிப் படிகளில் ஏறினாள்.

மாடிப்படிகளில் ஏறிவரும் சப்தம் கேட்டும் அது திருநாவுக்கரசாகத் தான் இருக்கும் என்று நினைத்த சேதுமாதவன் அப்படியே சோபாவில் அமர்ந்திருக்க மாயா கடைசிப் படியில் நின்று கைகளை இடுப்பில் வைத்தவாறு அவரைப் பார்க்க சேதுமாதவன் அலட்சியமாக, ‘எந்தாடி நோக்கன..’ என்றார்.

மாயா கோபத்துடன் பேச வாய் திறக்க சேதுமாதவனின் செல்ஃபோன் உச்ச ஸ்தாயியில் அலறியது. அவரோ போதையில் அதை எட்ட முடியாமல் தடுமாற மாயா உடனே அதை எடுத்து அணைக்க முயன்றாள்.. ஆனால் திரையில் தெரிந்த பெயர் அவளை ஒரு கணம் நிதானிக்க வைத்தது..

வெறுப்புடன் அதை சேதுமாதவனிடம் நீட்டினாள்.. ‘தோ.. சம்சாரிக்கி.. இது வேற ஒரு கள்ளனா.. நிங்கள்ட தோஸ்த்துகளானல்லோ.. சம்சாரிக்கி.. ஞான் பின்னெ வராம்..’ (இந்தாங்க பேசுங்க.. இவர் இன்னொரு திருடன்.. எல்லாம் ஒங்க நண்பர்கள்தானே.. பேசுங்க.. நான் அப்புறமா வரேன்) என்றவாறு திரும்பி படிகளில் இறங்க.. சேதுமாதன் கண்களைக் கசக்கிக்கொண்டு திரையைப் பார்த்தார்..

சோமசுந்தரம்!

இந்தாள் எதுக்கு இந்த நேரத்துல.. ‘ஷாரி சார்.. கொஞ்சம் வேலையாருந்துட்டேன்.. சொல்லுங்க..’ என்றார் குழறிய நாவைக் கட்டுப்படுத்தியவாறு..

எதிர் முனையிலிருந்து வந்த உத்தரவு அவரை சட்டென்று நிதானத்திற்கு கொண்டுவந்தது..

‘என்ன சார்.. RBI லெட்டரா.. எந்த லெட்டர்?’ என்றார் சோமசுந்தரம் சொல்ல வந்தது புரியாமல்..

எதிர் முனையில் சோமசுந்தரம் கடுப்புடன் அடுத்த சில நொடிகளில் தன் மனதில் இருந்ததை கூற சேதுமாதவனுடைய உதடுகள் ஒரு வக்கிர புன்னகையை உதிர்த்தன.. ‘எங்கிட்ட சொல்லிட்டீங்கல்லே சார்.. Done..’ என்றார் உற்சாகத்துடன்..

போதையின் உச்சத்தில் குரலை உயர்த்தி RBI லெட்டரா.. எந்த லெட்டர்? என்ற சேதுமாதவனின் வாசலில் திருநாவுக்கரசுக்கும் அவனுடன் நின்றிருந்த டிரைவருக்கும் கேட்க திரு.. தன் ஊர்க்காரனைப் பார்த்தான்.. 'டேய்.. அந்தாள் சொல்றது ஒனக்கு ஏதாச்சும் புரியுதா.. என்னமோ ஆர்பிஐ.. லெட்டராம்.. அதுல ஏதோ விஷயம் இருக்கும்னு நினைக்கேன்.. நாளைக்கு காலைல நீ ஆஃபீசுக்கு போனதும் நம்ம ஃபிலிப் சார் காதுல இப்ப கேட்டத போட்டு வச்சிரு.. என்ன.. மறந்துராதடா.. இரு.. அந்தாளு படுக்க போனதும் மீதி பாட்டில கொண்டு வந்து தரேன்.. ரெண்டு அடிச்சிட்டு போ..'  என்றான்..

கிடைக்கப் போகும் 'ரெண்டின்' ருசியில் நாக்கு ஊற 'சரின்னே.. நீங்க சொன்னத என்னைக்கி கேக்காம இருந்துருக்கேன்..' என்றான் டிரைவர் மகாலிங்கம்.

தொடரும்..

4 comments:

krishjapan said...

கதை விறுவிறுப்பா, போய்க் கொண்டிருக்கு. ஆனா, கதாசிரியர், இன்னும் கொஞ்ச நாள்ல பிஸியாயிடுவார், கிரிஸ்மஸ், புது வருட கொண்டாட்டங்கள்/பிரார்த்தனைகள்ல... என்னுலகத்த வேற, தினமும் போடணும். படியளக்கிற, வங்கிக்கும் உண்மையா வேல செய்யணும். என்ன பண்ணப் போறார்னு தெரியலயே...என்னுலகத்த புது வருஷத்தில தொடங்கறன்னு சொல்லிடுவாரோ..

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க கிருஷ்ணா,

ஆனா, கதாசிரியர், இன்னும் கொஞ்ச நாள்ல பிஸியாயிடுவார், கிரிஸ்மஸ், புது வருட கொண்டாட்டங்கள்/பிரார்த்தனைகள்ல...//

ச்சேச்சே அப்படியெல்லாம் ஒன்னுமில்லை.. அதுபாட்டுக்கு அது.. இது பாட்டுக்கு இது..

என்னுலகத்த வேற, தினமும் போடணும்.என்னுலகத்த புது வருஷத்தில தொடங்கறன்னு சொல்லிடுவாரோ..
//

இல்லை.. வருகின்ற வாரத்திலிருந்து திங்கள், செவ்வாய், புதன் தி.பா தொடரின் 2ம் பாகம்.வியாழன்,வெள்ளி, சனி சூரியன் தொடர்..

படியளக்கிற, வங்கிக்கும் உண்மையா வேல செய்யணும். //

வேலைக்குத்தான் முதல் Priority.. அதில் சந்தேகமேயில்லை. சென்னையில் இல்லாத சமயங்களில் எந்த தொடரும் வராது:)

என்ன பண்ணப் போறார்னு தெரியலயே...

மேறிகூறியவற்றைத்தான்:))

krishjapan said...

ஆஹா..அடுத்த வாரத்திலிருந்து, தினமும் சந்திக்கலாமோ...இம்முறை, சனியன்றும் சந்திப்பதில் கூடுதல் மகிழ்ச்சி.

என்ன ஒண்ணு, சார், புதன்கிழமைகள்லயும், சனிக்கிழமைகள்லயும், கூடுதல் சஸ்பென்ஸ் வெச்சிடுவார்...

டிபிஆர்.ஜோசப் said...

புதன்கிழமைகள்லயும், சனிக்கிழமைகள்லயும், கூடுதல் சஸ்பென்ஸ் வெச்சிடுவார்... //

அட! எனக்கு இந்த ஐடியா தோனலையே? அப்படியே செஞ்சிட்டா போச்சு:)