13.12.06

சூரியன் 152

குளித்து முடித்து தலைமுடியைத் துடைத்தவாறு படுக்கையறைக்குள் நுழைந்த ஜோ தன்னுடைய செல் ஃபோன் சிணுங்குவதைக் கவனித்து ஓடிச் சென்று எடுத்தான்.

‘மிஸ்டர் ஜோ?’ என்று அதிகாரத்தனமானதொரு முரட்டுக் குரல்.  யாருடையது என்று குழம்பி, ‘யெஸ்?’ என்றான் தயக்கத்துடன்.

‘ஒங்களுக்கு மிஸ்டர் மாணிக்கவேல்ங்கறவரைத் தெரியுமா மிஸ்டர்?’

‘தெரியும்.. ஆனா நீங்க யாருன்னு...?’

‘சொல்றேன்.. நீங்க உடனே பொறப்பட்டு அவர் வீட்டுக்கு வாங்க.’

என்ன, ஏது என்று விசாரிக்க வாய்ப்பளிக்காமல் இணைப்பு துண்டிக்கப்பட ஒரு நொடி திகைத்து நின்ற ஜோ, அவசர, அவசரமாக தலையைத் துடைத்து உடை மாற்றிக்கொண்டு கிளம்பினான்.

இருப்பினும் புறப்படும் முன்பு தொலைப்பேசி செய்தால் என்ன என்று நினைத்து மாணிக்கவேலின் செல் ஃபோனுக்கு டயல் செய்தான்.

‘யெஸ்?’ சற்று முன் கேட்ட அதே முரட்டுக் குரல். ‘யாருங்க இது?’

ஜோ துண்டித்துவிடலாமா என்று யோசித்தான். ஆனால் அது சரியாகாது என்று நினைத்து, ‘நான் அவரோட அசிஸ்டெண்ட் ஜோ பேசறேன்.. Could I talk to him for a few minutes, please?’ என்றான்.

‘மிஸ்டர்.. நா ஒங்கள ஒடனே புறப்பட்டு வரச் சொன்னா எதுக்கு ஃபோன் பண்றீங்க.. மொதல்ல நா சொன்னத செய்ங்க.’

இணைப்பு துண்டிக்கப்பட்ட செல் ஃபோனையே பார்த்துக்கொண்டு நின்ற ஜோ, ‘என்னங்க.. யார் ஃபோன்ல?’ என்றவாறு வந்து நின்ற தன் மனைவியைப் பார்த்தான். எனக்கே யார்னு தெரியலையே என்று தனக்குள் நினைத்த ஜோ, ‘தெரியல அக்சீ.. நம்ம சார் வீட்லருந்துதான்.. ஆனா யாரோ சம்பந்தமில்லாத குரல்.. நா ஒடனே பொறப்பட்டு வரணுமாம்.. நா போய்ட்டு வந்துடறேன்.. பாப்பா இன்னைக்கி ஒரு நாள் ஸ்கூலுக்கு போவாட்டியும் பரவால்லை.. நா சார போய் பார்த்துட்டு அப்படியே ஆஃபீசுக்கு போறேன்.. ஏதாவது முக்கியம்னா ஒன்னெ கூப்டறேன்.. என்ன?’ என்றவாறு தன்னுடைய வாகனத்தை எடுத்துக்கொண்டு விரைந்தான்.

*******

‘சார்.. நம்ம மூர்த்தி சார் இருந்தப்ப ரிசர்வ் பேங்க்லருந்து ஒரு லெட்டர் வந்துதே, ஒங்களுக்கு ஞாபகம் இருக்கா?’

சுந்தரலிங்கம் குழப்பத்துடன் தன் முன் அமர்ந்திருந்த ஃபிலிப் சுந்தரத்தைப் பார்த்தார். ‘எந்த லெட்டர பத்தி கேக்கீங்க பிலிப்?’

‘சாரி, சார்.. அவசரத்துல எந்த லெட்டர்னு சொல்லாம விட்டுட்டேன்..’ என்ற ஃபிலிப் தொடர்ந்து, ‘போன ஆன்யுவல் இன்ஸ்பெக்ஷன் முடிஞ்சதும் நம்ம போர்ட்ல ஒரு ப்ரொஃபஷனல் ஆடிட்டரும், அட்வகேட்டும் இல்லேன்னு..’ என்றார்.

சுந்தரலிங்கம் ஒரு நொடி லோசனையில் ஆழ்ந்தார். அதுக்கென்ன இப்ப? எதுக்கு காலையில முதல் வேலையா இதப்பத்தி கேக்றார்? நேத்துதான் ஒருத்தர் வேற வழியில்லாம போர்ட்லருந்து வெளியா போயிருக்கார். இந்த சமயத்துல இதப்பத்தி கேக்கறீங்கன்னா புதுசா ஒருத்தர போர்ட்ல நுழைக்கறதுக்கா? அப்படீன்னா யார்? அந்த டாக்டரோட ஆளா? அவருக்கு பதிலா அவரோட அட்வகேட் இல்லன்னா ஆடிட்டர நுழைக்கப் பாக்கறாரா?

ஃபிலிப் சுந்தரம் பதிலளிக்காமல் அமர்ந்திருந்த சுந்தரலிங்கத்தைப் பார்த்தார். எதுக்கு இந்த மனுஷன் இவ்வளவு யோசிக்கறார்? என்னடா நமக்கு தெரியாம இவன் என்னவோ புதுசா ப்ளான் போடறானேன்னு நினைக்காரோ? ஏற்கனவே பாபு சுரேஷை எச்.ஆர் தலைவரா நம்மக்கிட்ட கேக்காமயே ரெக்கமெண்ட் பண்ணவராச்சேன்னு நினைக்காரோ? இருக்கும்.. எப்ப ஒரு விஷயத்துல சந்தேகம்னு வந்துருச்சோ அப்புறம் நாம என்ன கேட்டாலும் இவருக்கு சந்தேகம் வர்றது ஒன்னும் பெரிய விஷயமில்லையே..

‘என்ன சார் யோசிக்கீங்க?’ என்றார் தயக்கத்துடன்.

சுந்தரலிங்கம், ‘எதுக்கு கேக்கீங்கன்னு என்கிட்ட சொல்லலாம்னா..’ என்றார் தயக்கத்துடன்..

ஃபிலிப் வலிய ஒரு புன்முறுவலை வரவழைத்துக்கொண்டு, ‘என்ன சார் இப்படி கேட்டுட்டீங்க? ஒங்கக் கிட்ட சொல்றதுல எனக்கென்ன தயக்கம்?’ என்றார்.

அப்ப சொல்லுங்க.. ஏன் தயங்குறீங்க என்பதுபோல் அவரைப் பார்த்தார் சுந்தரலிங்கம்.

இவர்கிட்ட என்னன்னு சொல்றது? அதோட காப்பியொன்னு நாடாருக்கு வேணுமாம்னு சொல்ல முடியுமா என்ன? புது சேர்மன் கேட்டார்னும் சொல்ல முடியாது. நேரா இவரே அவர போய் கேட்டுட்டா.. வேற வினையே வேணாம்.. புது சேர்மன் வந்து ரெண்டாவது நாளே அவர் நம்மள பத்தி தப்பா நினைக்க சான்ஸ் இருக்கு..

இவர்கிட்ட வந்து கேக்க நினைச்சதே முட்டாத்தனம் போலருக்கு. இவர் ஏற்கனவே சொற்பக் காலம் சேர்மன் சீட்ல இருந்தவராச்சே இவருக்கு தெரிய வாய்ப்பிருக்குன்னு நினைச்சி வந்தது நம்ம முட்டாள்தனம் என்று மருகிக்கொண்டிருந்த ஃபிலிப்பை அந்த இக்கட்டிலிருந்த காப்பாற்றுவது போலவே சுந்தரலிங்கத்தின் இண்டர்காம் சிணுங்கியது.

அவர் எடுத்து, ‘யெஸ்?’ என பதிலளிக்க யாராயிருக்கும் என்று யோசித்தார் ஃபிலிப் சுந்தரம்.

‘அப்படியா? நீங்க ஒன்னு பண்ணுங்க.. ஈ.டியெ நானே வந்து பாக்கறேன்னு சொல்லுங்க.. அவர் இங்க வர வேணாம்..’

இணைப்பைத் துண்டித்துவிட்டு ஃபிலிப்பைப் பார்த்தார் சுந்தரலிங்கம். ‘என்ன சார்.. இன்னைக்கி காலைலயே வந்துட்டார் நம்ம ஈ.டி.?’ என்றார் புன்முறுவலுடன். ‘அதுவும் என்னைக்குமில்லாம என்னெ பாக்கறதுக்கு என் கேபினுக்கே வரட்டுமான்னுவேற கேக்காராம்? நீங்க கேக்கற லெட்டருக்கும் இதுக்கும் சம்பந்தமிருக்குமோ?’

அவர் குரலில் தொனித்த கேலியைக் கவனியாதவர்போல் எழுந்தார் ஃபிலிப். ‘இருக்காது சார்.. நீங்க போய் பார்த்துட்டு வாங்க.. நா அதுக்கப்புறம் வரேன்.’

அவர் மேற்கொண்டு கேள்வி கேட்குமுன் அவருடைய அறையிலிருந்து சென்றால் போதும் என்ற நினைப்புடன் ஃபிலிப் சுந்தரம் புறப்பட, ‘என்ன சார்.. நீ கேட்ட கேள்விக்கு பதில் வேண்டாமா?’ என்றார் சுந்தரலிங்கம்.

வாசலை நோக்கி கிளம்பிய ஃபிலிப் சற்று தயங்கி நின்றார்.

சுந்தரலிங்கம் தன்னுடைய இருக்கையிலேயே அமர்ந்தவாறு பதிலளித்தார். ‘அந்த லெட்டர் மட்டுமில்ல ஃபிலிப், ரிசர்வ் பேங்க் லெட்டர்ஸ் எல்லாமே சேர்மனோட பெர்சனல் கேபின்லருக்கற கப்போர்ட்லதான் இருக்கும். நா அந்த கப்போர்ட் கீஸ் எல்லாத்தையும் நேத்துதான் மாதவன் கிட்ட ஒப்படைச்சேன்.. நீங்க வேணும்னா அவர்கிட்டயே கேளங்களேன்.’

ஃபிலிப் திரும்பி அவரைப் பார்த்தார். ‘தாங்ஸ் சார்.. நீங்க சொன்னா மாதிரியே செய்றேன்.’

அவர் அறையிலிருந்து வெளியேறும்வரை காத்திருந்த சுந்தரலிங்கம், ‘என்னாச்சி இவருக்கு? நம்மக்கிட்டருந்த கான்ஃபிடென்ஸ் எல்லாம் ஒரே நாள்ல போயிருச்சா இவருக்கு? நேத்து காலைலருந்து இவர் நடந்துக்கற விதம் சரியாயில்லையே’ என்று நினைத்தவாறு ஒரு பெருமூச்சுடன் எழுந்து சேதுமாதவனின் அறையை நோக்கி விரைந்தார்.

****

‘சுபோத், நீங்க வந்ததும் ஒடனே கேபினுக்கு சார் வரச் சொன்னார்.’

அப்படியா என்பதுபோல் தன்னுடைய சக அதிகாரியைப் பார்த்த சுபோத் அன்றும் அதற்கு முந்தைய நாளும் வந்திருந்த கடிதங்கள் அடங்கிய கோப்புடன் மாதவனின் அறையை நோக்கி விரைந்தான்.

வங்கியின் முதல்வர் பார்வைக்கு வரும் கடிதங்களை முந்தைய முதல்வர் மூர்த்தி இருந்த சமயத்தில் அவருடைய பிரத்தியேக கோப்பில் வைத்து சமர்ப்பிப்பதுடன் சுபோத்தின் வேலை  முடிந்துவிடும். வங்கி சம்பந்தப்பட்ட அனைத்தும் அவருக்கு அத்துப்படி என்பதால் அவரே கடிதங்களைப் படித்து அதிலேயே என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை ஒரத்தில் சுருக்கமாகக் குறித்து சம்பந்தப்பட்ட இலாக்கா அதிகாரிகளின் பெயரையும் அதிலேயே குறித்து திருப்பியனுப்பி விடுவார்.

கடிதத்தை அனுப்பியவருக்கு பதில் அளிக்க வேண்டியிருந்தால் அவரே சம்பந்தப்பட்ட இலாக்கா அதிகாரியை அழைத்து அனுப்ப வேண்டிய பதிலை சுருக்கமாக கூறி பதிலை தயார் செய்து எடுத்து வருமாறு பணித்துவிடுவார். அதிலும் வங்கியின் கிளைகளைப் பற்றியோ அல்லது வட்டார அலுவலகங்களைப் பற்றியோ வந்த புகார்களுக்கு பதிலளிப்பதிலும் அதன் மீது நடவடிக்கை எடுப்பதிலும் மூர்த்தி சாருக்கு நிகர் எவருமில்லை என்று நினைப்பான் சுபோத். அந்த அளவுக்கு விரைந்து செயல்படுவார்.

அவருக்குப் பிறகு நான்கு மாதம் அப்பொறுப்பிலிருந்த சுந்தரலிங்கம் இருந்த காலத்தில் அவருக்கு வரும் கடிதங்களை இலாக்காவாரியாகப் பிரித்து தேவைப்பட்டால் சம்பந்தப்பட்ட இலாக்காவின் தலைவருடைய பார்வைக்கு அனுப்பி வைத்து அவர்களுடைய பதிலையும் சேகரித்து அதற்குப் பிறகுதான் அவருடைய பார்வைக்கு அனுப்பவேண்டும்.

சுந்தரலிங்கம் திறமையானவர்தான் என்றாலும் யாரையும், அவரைவிட வயதிலோ, அனுபவத்திலோ குறைந்தவர் என்றாலும், அதிகாரம் செய்து பழக்கமில்லாததுடன், எந்த விஷயத்திலும் உடனே ஒரு முடிவுக்கு வருவதில் தயக்கம் காட்டக் கூடியவர் என்பதாலும் அவருக்கு வரும் கடிதங்கள் மற்றும் புகார்கள் மீது அவராக எந்த முடிவுக்கு வரமுடியாமல் சம்பந்தப்பட்ட இலாக்கா அதிகாரிகள் பொறுப்பிலேயே விட்டுவிடுவார். போறாததற்கு ஈ.டி சேதுமாதவனும் தலையிட்டு முதல்வருக்கு வரும் கடிதங்கள் அனைத்தையும் இலாக்கா அதிகாரிகளுக்கு அனுப்புவதற்கு முன் தனக்கு அனுப்ப வேண்டும் என்று கட்டளையிட்டு.. போறும், போறும் என்று ஆகிவிடும் சுபோத்துக்கு..

தன்னுடைய கையிலிருந்த கோப்பை மீண்டும் ஒருமுறை பார்த்த சுபோத் இவர் எப்படியிருப்பாரோ என்று நினைத்தவாறே அவருடைய அறைக் கதவை லேசாக தட்டினான்.

********

ஜோ மாணிக்கவேலின் வீட்டை நெருங்கும்போதே வாசலில் நின்ற கூட்டத்தைப் பார்த்து ஒரு நொடி திகைத்துப் போனான்.

சற்று தொலைவில் நின்றிருந்த காவல்துறையினரின் ஜீப்பையும் அதனருகில் குழுமியிருந்த கூட்டத்தைக் கட்டுப்படுத்தியவாறு நின்றிருந்த காவல்துறை அதிகாரிகளையும் பார்த்த ஜோ வீட்டையடுத்திருந்த கடையொன்றில் தன்னுடைய வாகனத்தை நிறுத்திவிட்டு அவசர, அவசரமாக வீட்டை நெருங்கினான்.

குழுமியிருந்த கூட்டத்தை சிரமப்பட்டு விலக்கியவாறு நுழைய முயன்ற ஜோ தன்னைத் தடுத்து நிறுத்திய காவலரைப் பார்த்தான் எரிச்சலுடன். ‘சார்.. என் பேர் ஜோ.. நான் மாணிக்கவேல் சார் ஆஃபீஸ்ல வேலை செய்யறேன். ஒரு பத்து நிமிஷத்துக்கு முன்னால இங்கருந்துதான் யாரோ ஃபோன் பண்ணி வரச்சொன்னாங்க. ப்ளீஸ்..’

அவனை தடுத்த காவலர் தன்னுடைய வயர்லெஸ்சில் யாருடனோ தொடர்புகொண்டுவிட்டு அவனை வீட்டிற்குள் செல்ல அனுமதிக்க பரபரப்புடன் உள்ளே நுழைந்த ஜோ மாணிக்கவேல் தலையைக் குனிந்து ஒரு இருக்கையில் அமர்ந்திருக்க அவரை ஒரு காவல்துறை அதிகாரி விசாரித்துக்கொண்டிருப்பதைக் கவனித்தான்..

அவர்தான் தன்னை தொலைப்பேசியில் அழைத்திருக்க வேண்டும் என்று நினைத்தவன் நேரே அவரிடம் சென்று, ‘சார் நாந்தான் ஜோ.. I think you only called me on my mobile’ என்றான்.

அவனுடைய குரல் கேட்டு திரும்பிய காவல்துறை துணை ஆய்வாளர் அவனை மேலும் கீழும் பார்த்தார். ‘நாந்தான் வரச் சொன்னேன். இவர எவ்வளவு காலமா தெரியும் ஒங்களுக்கு?’

ஜோ குழப்பத்துடன் அவரையும் மாணிக்கவேலையும் மாறி, மாறி பார்த்தான். என்ன நடக்குது இங்க? ஹாலின் மறு கோடியில் ஒரு இருக்கையில் இரண்டு பெண் காவலர்களுக்கிடையில் அமர்ந்து முகத்தை மூடியாவறு அமர்ந்திருந்த மாணிக்கவேலின் மனைவியைப் பார்த்தான். சந்தோஷைக் காணவில்லை. மாணிக்கவேலின் தந்தை படுத்திருக்கும் அறைக் கதவுகள் ஒருக்கழித்து மூடப்பட்டிருந்ததைக் கவனித்தான். Something seriously wrong..

‘என்ன மிஸ்டர்.. என் கேள்விக்கு ரிப்ளை பண்ணாம என்ன அங்கயும் இங்கயும் பாக்கீங்க..?’

ஜோ குழப்பத்துடன் அவரைப் பார்த்தான். பிறகு ‘சார் இவர் நான் வேலை செய்யற பிராஞ்சோட  மேனேஜர் மட்டுமில்ல. என் கூடப் பிறக்காத சகோதரர் மாதிரி. இப்ப சொல்லுங்க.. என்ன நடந்தது? எதுக்கு இவர ஏதோ குற்றவாளி மாதிரி ட்ரீட் பண்ணிக்கிட்டிருக்கீங்க?’ என்றான் சற்று எரிச்சலுடன்.

சற்று நேரம் பதிலளிக்காமல் அவனை கேலியுடன் பார்த்த அதிகாரி, ‘இவர் அவரோட அப்பாவ கொலை செஞ்சிருக்கார்...’ என்றார் நிதானமாக.

ஜோ.. ஒரு நொடி பேச்சற்று நின்றான்.. பிறகு சுதாரித்துக்கொண்டு, ‘என்ன சார் சொல்றீங்க? அப்படீன்னு யார் உங்கக்கிட்ட சொன்னது?’

பதிலுக்கு அதிகாரி ராணியை நோக்கி சைகை செய்ய அப்போதும் தன்னை நிமிர்ந்து பார்க்க துணிவில்லாமல் தலையைக் குனிந்தவாறு அமர்ந்திருந்தவளைப் பார்த்தான் ஜோ..

தொடரும்..

5 comments:

siva gnanamji(#18100882083107547329) said...

மகள்
இப்போ தந்தை
போதாதற்கு
கொலைக்குற்றச்சாட்டு-
ஏன் இப்படி மாணிக்கவேலுவை
வறுக்கறீங்க?
நல்லவங்களுக்கு நிறையக் கஷ்டம் வரும்னு நிரூபிக்கவா?

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க ஜி!

ஏன் இப்படி மாணிக்கவேலுவை
வறுக்கறீங்க?
நல்லவங்களுக்கு நிறையக் கஷ்டம் வரும்னு நிரூபிக்கவா? //

உண்மையில் சொல்லப்போனால் மாணிக்கவேல் ஒரு உண்மைக் கதாபாத்திரம். எனக்குத் தெரிந்த ஒருவர் குடும்பத்தில் நடந்தவைகளை அப்படியே வடித்திருக்கிறேன். இதுதான் ஜி! நிதர்சனம்..

krishjapan said...

நானும் ஜி மாதிரி கேட்கலாம்னு பார்த்தா, நிஜ பாத்திரம்னுட்டீங்க...அதுவும் சரிதான். சமயத்தில, உண்மையில நடக்கறது, கதைகளில் வருவதை விட, மோசமாகவும், நம்பமுடியாத மாதிரியாகவும்தான் இருக்கு.

அவரது தந்தை இறப்பை/ கொலையை எதிர்பார்த்திருந்தேன்..ஆனால், கொலைப் பழியை எதிர்பார்க்கவில்லை.

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க கிருஷ்ணா,

சமயத்தில, உண்மையில நடக்கறது, கதைகளில் வருவதை விட, மோசமாகவும், நம்பமுடியாத மாதிரியாகவும்தான் இருக்கு. //

சரியா சொன்னீங்க..

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க அரவிந்தன்,

உண்மை சம்பவம் என்பது அதைவிட அதிர்ச்சியான விஷயம். //

உண்மைதான் அதை முதன் முதலில் நான் கேள்விப்பட்டபோது எனக்கும் இதே நிலைதான்.. என்ன செய்வது சிலருக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது என்று என் மனதில் எழுந்த கேள்விக்கு இப்போதும் விடை கிடைக்கவில்லை..