8.12.06

சூரியன் 150

‘டேய்.. செல்வம்.. என்ன நீ.. இன்னும் கெளம்பாம இருக்கே?’ என்றவாறு வீட்டிற்குள் நுழைந்த நாடாரைப் பார்த்தான் செல்வம்.

‘கெளம்பிக்கிட்டேருக்கேன்மாமா... ராத்திரி கடைசி வண்டிக்குத்தான் டிக்கட் இருந்தது. அதான்.. எப்படியும் பத்து மணிக்குள்ள போய் சேர்ந்துருமே..’

சமையலறைக்குள் வேலையாயிருந்த ராசாத்தியம்மாள் எட்டி தன் கணவரைப் பார்த்தாள். ‘இப்ப எதுக்கு அவனெ ஊருக்கு அனுப்பறீங்க.. இன்னைக்கி காலைலதான வந்தான்?’

நாடார்  சமையலறையை நோக்கி பார்த்தார். ‘ஏய்.. ஒன் வேலை சோலிய மட்டும் பாரு.. நா ஏதாவது செஞ்சா அதுக்கு ஒரு காரணம் இருக்குன்னு தெரியுமில்ல?’

‘ஆமாம்.. பெரிய காரணம் இருக்கும்..’ என்றவாறு ராசாத்தியம்மாள் முனுமுனுத்தது காதில் விழுந்தும் அதை பொருட்படுத்தாமல் சோஃபாவில் அமர்ந்து ஹாலையொட்டியிருந்த அறையில் அமர்ந்து  கணினியில் மும்முரமாய் இருந்த தன் மகளைப் பார்த்தார். ‘என்னத்த தாயி இவ்வளவு மும்முரமா.. அப்பன் வந்ததக் கூட சட்டெ பண்ணாம?’

ராசம்மாள் திரும்பி தன் தந்தையைப் பார்த்தாள். பிறகு பதிலளிக்காமல் தன் பணியைத் தொடர்ந்தாள்.

நாடார் தன் மருமகனைப் பார்த்தார். ‘என்னடா?’ என்பதுபோல் புருவத்தை உயர்த்தினார்.

செல்வம் சிரித்தான். ‘ராசிக்கு அவ பெயர் பிடிக்கலையாம்.. பட்டிக்காடு மாதிரி இருக்காம். அதான் ராசி, இல்லன்னா ராஜின்னு சுருக்கிரப் போறாளாம். அதுக்கு நம்ம மோகன் சார் ஒரு அப்ளிக்கேஷன் குடுத்தார். அதத்தான் ராசி.. கம்ப்யூட்டர்ல ஏத்தி அடிச்சிக்கிட்டிருக்கா.

நாடார் வாய்விட்டுச் சிரித்தார். ‘என்னம்மா இது விபரீத ஆசையாருக்கு.. பேர்ல என்ன இருக்கு.. பைத்தியக்காரப் புள்ள.. ஏண்டா இதுக்கு நீயும் ஒத்து ஊதறியாக்கும்?’

செல்வம் இல்லையென்று தலையை அசைத்துவிட்டு எழுந்து நின்றான். ‘மாமா.. நா கெளம்பறேன்.. நீங்க வந்ததும் சொல்லிக்கிட்டு கெளம்பலாம்னுதான் இருந்தேன்.. நா போய்ட்டு ரெண்டு, மூனு நாளைல வந்துடறேன்.. செல்வி நா சொன்னத கேட்டு எங்கூடவே பொறப்பட்டு வந்தா சரி.. இல்லையா நா மட்டும் பொறப்பட்டு வந்துருவேன்..’

புன்னகையுடன் தன் மருமகனைப் பார்த்துக்கொண்டிருந்த நாடார் சீரியசானார். ‘டேய்.. எடுத்தேன் கவுத்தேன்னு எதையாவது செஞ்சிட்டு வந்து நிக்காத.. அதுக்கெதுக்கு ஊருக்கு போறே.. இங்கருந்தே போன்ல பேசிரவேண்டியதுதான? முட்டாப் பய.. நின்னு நிதானமா எடுத்துச் சொல்றத விட்டுட்டு ரெண்டு நாளைல வரானாம்.’ என்றவர் எழுந்து தன் மருமகனின் தோள்களில் கைகளை வைத்தவாறு தொடர்ந்தார். ‘இங்க பார்றா.. நீ குடும்பத்தோட இங்க வர்றதுதான் முக்கியம்.. இனியும் நீ அங்கயும் நா இங்கயுமா இருக்க முடியும்னு எனக்கு தோனல.. அதனால செல்விய மட்டும் இதுக்கு சம்மதிக்க வச்சா போறாது.. அவ அப்பன், ஆத்தாளையும் சம்மதிக்க வைக்கணும்.. அதுக்குத்தான் ஒன்னெ நேரா அனுப்பறேன்.. செல்விய பத்தி எனக்கு தெரியும்.. வாயடிச்சாலும் புத்திசாலிப் பொண்ணு.. அவ அப்பன்? அவன் ஒரு வாயில்லா பூச்சி.. சரின்னும் சொல்லமாட்டான்.. முடியாதுன்னும் சொல்ல மாட்டான்.. அவ ஆத்தா அப்படியில்ல.. பணத்தாச புடிச்சவ.. அதனால.. எடுத்தோம் கவுத்தோம்னு பேசிராத.. அவ ஆத்தா இல்லாத நேரத்துல நீ ஒம் பொஞ்சாதி கூட பேசு.. நிதானமா சொன்னா ஏத்துக்குவா.. ஆரம்பத்துல முரண்டு பிடிச்சாக் கூட நீ பொறுமையா இருக்கணும்.. ஒன்னால முடியலையா எனக்கு ஃபோன் பண்ணு.. நானும் பொறப்பட்டு வாரன்.. நா சொன்னா அந்த பொண்ணு கேக்கும்.. என்ன சொல்றே? ஒன் குடும்பத்த பிரிச்சி இங்க ஒன்னும் ஆயி பிரயோசனம் இல்லடா.. அத புரிஞ்சிக்கோ..’

செல்வம் தலையைக் குனிந்தவாறு, ‘சரி மாமா.. புரிஞ்சிது.. நா கெளம்பறேன்.’ என்று பதிலளித்துவிட்டு சமையலறையிலிருந்த ராசாத்தியம்மாளிடம் கூறிக்கொண்டு புறப்பட்டான். ராசம்மாள் எழுந்து அவனுடன் வாசல்வரை சென்று வழியனுப்பிவிட்டு அவனை ஏற்றிச் சென்ற வாகனம் கேட்டைக் கடக்குவரை பார்த்துக்கொண்டே நின்றாள்.

‘இவன் ஏதாச்சும் அவசரப்பட்டு செஞ்சிராம இருக்கணும்..’ என்ற தன் தந்தையைப் பார்த்தாள்.

‘அப்படியொன்னும் நடக்காதுப்பா.. நா ஃபோன்ல பேசினப்பவே செல்வி சம்மதிச்சா மாதிரிதான் எனக்கு பட்டுது.. நீங்க வாங்க..’ என்றவாறு அவள் வீட்டிற்குள் திரும்ப நாடார் அவளைத் தொடர்ந்தார்.

ஹாலிலிருந்த சோபா ஒன்றில் அமர்ந்த ராசம்மாள் தன் தந்தையைப் பார்த்தாள். ‘அவசரமா மோகன் அங்கிள பாக்கணும்னு கெளம்பி போனீங்களேப்பா.. என்ன ஆச்சி?’

நாடார் பதிலளிக்காமல் சமையலறையைப் பார்த்தார். ‘ஏய்.. என்னமோ கல்யாண விருந்து சமைக்கறமாதிரி அங்கனயே நிக்கே..  பசி வயித்த கிள்ளுது.. சாப்பாட்ட எடுத்து வை..’ என்றவர் தன் மகளைப் பார்த்தார். ‘நீ என்னம்மா கேட்டே?’

‘மோகன் அங்கிள பாத்தீங்களா? என்ன சொன்னாங்க? அந்த சேட்ட பாத்தாங்களாமா?’

நாடார் கால்களை மடக்கி சோபாவில் சாய்ந்து அமர்ந்தார். ‘பாக்காம இருப்பாரா? பாத்து எல்லாம் பேசி முடிச்சாச்சு.. நல்ல வேள நா காலையிலயே தம்பிக் கிட்ட சொல்லி வச்சிருந்தேன்.. இல்லன்னா..’

ராசம்மாள் வியப்புடன் தன் தந்தையைப் பார்த்தாள். ‘என்னப்பா சொல்றீங்க?’

‘ஆமாம்மா.. ஒம் புருசனும் ஒம் மாமனும் இடையில பூந்து குட்டைய கெளப்ப பாத்திருக்கானுக.. நல்ல வேளை.. அந்த சேட்டு மசியல..’

‘மாமாவா? அவரும் இங்கயா இருக்கார்?’

‘ஆமா, ஆமா.. நா நேத்தைக்கி சாயங்கால அவன் வீட்டுல போயி சத்தம் போட்டேன்லே.. அதான் பய ரோசத்தோட நாம கெளம்பி வந்தா மாதிரி ப்ளசர போட்டுக்கிட்டு வந்துருக்கான். அவன் ஒரு வக்கீலையும், ஆடிட்டரையும் வச்சிருக்கான்லே.. அந்த கிறுக்குப் பயல்க பேச்சைக் கேட்டு ஒம் புருசன் செஞ்ச மடத்தனந்தான் நம்ம கம்பெனி சேர வித்ததும் நம்ம பேங்க்ல போயி அந்த லெட்டர குடுத்ததும்.. நல்ல வேளயா அந்த பேங்க் மேனேஜர் கொஞ்சம் காசுக்கு அலையற பயலா போய்ட்டான். அது நம்ம ஆடிட்டருக்கு தெரிஞ்சிருக்கு..  குடுக்க வேண்டியது குடுத்து ஒம் புருசன் குடுத்த லெட்டர் வந்ததாவே மனுசன் காட்டிக்கிறல.. நாம ஒம் புருசனையும், மாமனையும் கம்பெனியிலருந்து தூக்கறதா குடுத்த லெட்டர வாங்கிக்கிட்டு அந்த பயலுக மேக்கொண்டு ஒன்னும் செய்ய முடியாத படி செஞ்சிட்டார்.. அந்த சேட்டு.. நம்ம கம்பெனி சேர நமக்கே விக்கறதுக்கு மேல காசு கேட்டுருக்கான்.. ஆனா நம்ம மோகன் தம்பி.. அத நீங்க வாங்குனாலும் அத எங்க கம்பெனி போர்ட் ரிஜிஸ்த்தர் பண்ணிக்க முடியாது.. ஏன்னா இது பிரைவேட் லிமிடட் கம்பெனின்னு ஒரு மிரட்டு மிரட்டியிருக்கார். சேட்டுக்கு மேல யோசிக்கறதுக்கு டைம் குடுக்காம அவன் கேட்டதுக்கு மேலயே குடுத்து ஒரே அமுக்கா அமுக்கிட்டாரு.. அந்த சேர் பத்திரமெல்லாம் இப்ப அவர் கையிலதான்.. களவாணிப் பயலுகம்மா அந்த ரெண்டு பேரும்.. இனிமேலும் வாலாட்டுனாலும் வாலாட்டுவானுங்க.. அதான்.. ஹைகோர்ட்ல ஒரு காவியத்தோ என்னவோ பைல் பண்ணி வச்சிரலாம்னு மோகன் தம்பி சொல்லிச்சி.. சரி.. என்னத்தையோ செய்யிங்க.. பிரச்சினை வராம இருந்தாச் சரின்னு சொல்லிட்டு வந்தேன்.. இனி அவர் பாடு அந்த பயலுவ பாடு..’

சமையலறையிலிருந்தவாறே நாடார் கூறியதைக் கேட்டுக்கொண்டிருந்த ராசாத்தியம்மாளுக்கு விவரம் முழுவதுமாய் புரியவில்லையென்றாலும், ‘இதெல்லாம் தேவைதான்.. புருசன் பொஞ்சாதி சண்டைக்கு நடுவுல வக்கீலு நொளஞ்சா உருப்பட்டாப்பலதான்.. என்னமோ போங்க..’ என்று முனுமுனுத்தவாறு தயாரான உணவை ஹாலின் கோடியிலிருந்த உணவு மேசையில் பரப்பலானாள்..
‘அது கெடக்கும்மா.. நா அந்த டாக்டர் பய போர்ட்லருந்து வெளிய போனான்னு சொன்னேன் இல்லே..?’ என்றார் நாடார் தன் மகளைப் பார்த்து.

‘அதான் சாயந்திரம் சொன்னீங்களேப்பா, அதுக்கென்ன?’

நாடார் சிரித்தார். ‘நான் அந்த பய எடத்துல நம்ம மோகன் தம்பிய நொளச்சிரலாம்னு பேசிக்கிட்டிருக்கேன், மூக்குல வேர்த்தாப்பல  அந்த பய ஃபோன் போட்டு.. எம் பொண்ணெ அந்த எடத்துக்கு கோப்ட் பண்ணணுங்கறான்?’

ராசம்மாள் வியப்புடன் தன் தந்தையைப் பார்த்தாள். ‘யார்.. பூர்ணிமாவா?’

நாடார் கேலியுடன் சிரித்தார். ‘ஆமாம்மா.. ஒனக்கு பிரசவம் பார்த்துச்சே.. அதே பொண்ணுதான்..’

ராசம்மாள் அவரை முறைத்தாள். ‘அதுக்கெதுக்குப்பா நீங்க கேலியா சிரிக்கீங்க?’

நாடார் மேலும் உரக்கச் சிரித்தார். ‘பார்றா.. இதுக்கு வர்ற கோபத்தே? ஏன் ஒனக்கு புடிச்ச பொண்ணுன்னா?’

‘அதெல்லாம் இல்லை.. அவங்களுக்கு இருக்கற படிப்புக்கும், திறமைக்கும் அவங்கப்பாவ விட நல்லாவே பெர்ஃபார்ம் பண்ணுவாங்க..’

நாடார் சிரிப்புடன் தன் மகளைப் பார்த்தார். ‘ஏய்.. ஏது.. விட்டா என்னையும் விடன்னு சொல்லிருவ போலருக்கு?’

ராசம்மாள் பொய்க் கோபத்துடன் தன் தந்தையைப் பார்த்தாள். ‘ஏன்.. அதுவும் உண்மைதான்..’

நாடார் சிரித்தார். பிறகு எழுந்து நின்றார். ‘அம்மா போதும்மா.. விட்டா நீயும் அந்த பொண்ண மாதிரியே ஒங்க எடத்துல நா இருக்கறம்ப்பான்னு சொல்லாம இருந்தாச் சரி.. நா போயி குளிச்சிப் போட்டு வாரேன்.. சாப்புடுவோம்..’ என்றவாறு அவர் மாடிப்படிகளில் ஏற.. ‘அதானே.. இதுவும் நல்ல யோசனையாவுல்ல இருக்கு?’ என்ற நினைத்தவாறு அவரைப் பார்த்தாள் ராசம்மாள்.

********

மைதிலி வீடு வந்து சேர்ந்தபோது இரவு எட்டைக் கடந்திருந்தது.

அவள் தினமும் இந்நேரத்தில் வருவது வழக்கம்தான் என்றாலும் அவள் வீட்டில் நுழைந்ததுமே, ‘எங்கடி போயிருந்தே? இன்னைக்கி ஆஃபீசுக்கும் போலியாமே நீ?’ என்றாள் அவளுடைய தாய் ஜானகி.

‘சரி.. சரி.. ஆரம்பிச்சிராத.. அவ போய் கை கால் அலம்பிண்டு வரட்டும்.. நிதானமா பேசுவோம்..’ என்றவாறு தன் மகளைப் பார்த்தார் பட்டாபி. ‘நீ போய்ட்டு வாம்மா, ஒங்கிட்ட கொஞ்சம் பேசணும்.’  

மைதிலி இருவரையும் மாறி, மாறி பார்த்தாள். கையிலிருந்த ஹெல்மெட்டை அருகிலிருந்த மேசையில் வைத்துவிட்டு தன் தந்தையினருகில் அமர்ந்தாள். ‘எனக்கும் ஒங்க ரெண்டு பேர்  கிட்டயும் ஒரு விஷயம் பேசணும்..’ என்றவாறு தன் தாயைப் பார்த்தாள்.. ‘நீயும் ஒக்காரும்மா..’

பட்டாபி தன் மனைவியைப் பார்த்தார். என்னவாருக்கும் என்பதுபோல் புருவங்களை உயர்த்தினார். எனக்கென்ன தெரியும் என்பதுபோல் ஜானகி உதட்டைப் பிதுக்கியவாறு தன் மகளைப் பார்த்தாள். ‘என்னடீ சொல்றே?’ என்றாள்.

‘சரி.. அதிருக்கட்டும்.. நீங்க ரெண்டு பேரும் என்ன சொல்ல வந்தேள்.. அதச் சொல்லுங்கோ..’ என்றாள் மைதிலி.

பட்டாபி ‘நீயே சொல்லு’ என்பதுபோல் தன் மனைவியைப் பார்த்தார்.

‘சரி.. சொல்றேன்.. ஒனக்கு காப்பி ஏதாச்சும் வேணுமா?’ என்றாள் ஜானகி.

‘தாங்ஸ்மா.. கொண்டாயேன்.. இன்னைக்கி என்னமோ பயங்கர டிராஃபிக்.. சயான்லருந்து வீட்டுக்கு வர்றதுக்கே ஒரு மணி நேரம் ஆயிருக்குன்னா பாத்துக்கயேன்..’ என்றாள் மைதிலி.

ஜானகி சமையலறையிலிருந்து கையில் காப்பியுடன் வந்து மைதிலியிடம் கொடுத்துவிட்டு சுவரில் சாய்ந்து நின்றவாறு அவளைப் பார்த்தாள். ‘வேற ஒரு நல்ல எடம் வந்திருக்கு.’ என்றாள்.

மைதிலி பருகிக் கொண்டிருந்த ஒரு வாய் காப்பியுடன் நிறுத்திவிட்டு தன் பெற்றோரைப் பார்த்தாள். ‘என்னம்மா சொல்றே.. நேத்து ஒருத்தர் வந்துபோயி இன்னும் முழுசா ஒரு நா கூட ஆவலை.. அதுக்குள்ளேயே.. என்னெ நீ என்னன்னு நினைச்சிக்கிட்டிருக்கே.. டெய்லியொரு எக்சிபிஷன் காட்டறதுக்கு?’ என்றாள் கோபத்துடன்.

பட்டாபி அவளை சமாதானப்படுத்தும் நோக்கத்துடன் அவளுடைய கரங்களைப் பற்றினார். ‘இல்லம்மா.. இவா கிட்ட ஒன்னெ பத்தி எல்லாத்தையும் சொல்லியாச்சு.. அவாளும் சரின்னு ஒத்துண்டுட்டா..’

அவர் கூறி முடிப்பதற்குள் கோபத்துடன் குறுக்கிட்டாள் மைதிலி. ‘என்னப்பா சொல்றேள்.. என்னைய பத்தி எல்லாத்தையும் சொல்லியாச்சுன்னா? அதுக்கென்ன அர்த்தம்?’

பட்டாபி ஆயாசத்துடன் தன் மனைவியைப் பார்த்தார்.. என்னடி நீ பார்த்துண்டு நிக்கறே என்பதுபோல்..

‘மைதிலி புரியாத மாதிரி பேசாத.. அப்பா என்ன சொல்ல வறார்னு நோக்கு தெரியாதாக்கும்..?’ என்றாள் ஜானகி.

மைதிலி தன் கரங்களைப் பற்றியிருந்த தன் தந்தையின் கைகளை விலக்கிவிட்டுவிட்டு எழுந்து நின்றாள். ‘சரி.. நீங்க சொல்ல வந்தத சொல்லிட்டேள்.. இப்ப நா சொல்ல வந்தத சொல்லிடறேன்..’

பட்டாபியும், ஜானகியும் அச்சத்துடன் அவளைப் பார்ப்பதைப் பொருட்படுத்தாமல், ‘நானும் சீனியும் மேரேஜ் செஞ்சிக்கறதா டிசைட் செஞ்சிருக்கோம்.. அவன் கூடவே சென்னைக்கு போயிடறதாவும் முடிவு பண்ணிருக்கேன்.. ஒங்களையும் கூட்டிக்கிட்டு..’ என்ற மைதிலி தன்னுடைய அறைக்குள் சென்று கதவைத் தாளிட திகைத்துப் போய் நின்றனர் பெற்றோர் இருவரும்.

*****

மாணிக்கவேல் வாகனத்தை போர்ட்டிக்கோவில் நிறுத்திவிட்டு இறங்கியபோது வீடு இருளில் மூழ்கியிருந்ததைப் பார்த்து, ‘எங்க போய்ட்டான் இந்த சந்தோஷ்..  ஒரு லைட்டையும் போடாம? வாசக்கதவும் திறந்து கெடக்கு?’ என்று நினைத்தவாறு திறந்துகிடந்த வாசற்கதவைத் தள்ளிக்கொண்டு நுழைந்தார்.

தரைதளத்தில் ஹாலின் கோடியிலிருந்து தன்னுடைய மனைவியின் அறையில் மட்டும் விளக்கெரிவது தெரிந்தது. எப்போதும் ஜீரோ வோல்ட் பல்பாவது எரிந்துக்கொண்டிருக்கும் தன்னுடைய தந்தையின் அறையும் இருளில் மூழ்கியிருக்க பதற்றத்துடன் அந்த அறையை நோக்கி நடந்தார்.

வாசல் கதவு வெளியில் தாளிட்டுக் கிடக்க திகைத்துப் போய் திறந்துக்கொண்டு உள்ளே நுழைந்தவர் தன் தந்தையின் கட்டிலைப் பார்த்து, ‘ஐயோ மோசம் போய்ட்டமே..’ என்றவாறு அப்படியே சரிந்து அமர்ந்தார்..

அறையின் ஒரு கோடியில் குத்திட்டு அமர்ந்திருந்த சந்தோஷ்.. பேந்த, பேந்த விழித்துக்கொண்டு.. தன் தந்தையைக் கண்டதும்.. உதடுகள் துடிக்க, வார்த்தைகள் வராமல்..

தொடரும்..

4 comments:

siva gnanamji(#18100882083107547329) said...

சூரியன் 150 வது பதிவு-ஜமாய்ங்க!

சந்தோஷ் பேந்தப் பேந்த விழிப்பதில்,
ஏதொ கைமீறிபோனது புரிகின்றது.

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க ஜி!

சந்தோஷ் பேந்தப் பேந்த விழிப்பதில்,
ஏதொ கைமீறிபோனது புரிகின்றது. //

????????? சொல்றேன்..

150வது பதிவ படிச்சிட்டும் ஒன்னுமே சொல்லாம போறவங்கள என்ன சொல்றது?

சோகத்தின் உச்சியில்:((

Meenapriya said...

Enna sir,

serial madhiri friday suspensa

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க மீனாப்ரியா,

serial madhiri friday suspensa //

ஆக்சுவலா இது நேற்று வந்திருக்க வேண்டியது பதிவு.. அதனால thursday suspenseனு வச்சிக்கலாம்:)