21.12.06

சூரியன் 156

ஃபிலிப் சுந்தரம் பரிந்துரைத்த வழக்கறிஞரின் அலுவலகம் வந்தடையும்வரை அவர் என்னவெல்லாம் கேட்பார் என்ற ஆலோசனையில் ஆழ்ந்திருந்த ஜோ வாகனத்திலிருந்து இறங்கி வாசலில் இருந்த சிப்பந்தியிடன் தன்னை அறிமுகம் செய்துக்கொண்டு தான் சந்திக்க வந்தவரின் பெயரைக் கூறினான்.

‘சபரி சாரா சார்? ஒரு நிமிசம் இருங்க கேட்டு சொல்றேன்.’ என்றவாற் அலுவலகத்திற்குள் சென்று அடுத்த சில நொடிகளில் திரும்பி வந்தவன், ‘போங்க சார்.’ என ஜோ படபடப்புடன் அவன் காண்பித்த அறையை அடைந்து அந்த சிறிய அறையில் நடுநாயகமாக அமைந்திருந்த மேசையின் பின்னால் அமர்ந்திருந்த சுமார் நாற்பது வயது மதிக்கத்தக்க வழக்கறிஞர் முன்னால் நின்றான்.

‘ஒக்காருங்க மிஸ்டர் ஜோ. ஃபிலிப் சார் சொன்னார். சீனியருக்கு இன்னைக்கி கோர்ட்ல ஒரு முக்கியமான வாய்தா இருக்கு. அதனால நீங்க டீல் பண்ணுங்க.. நா சாயந்தரம் வந்து பாத்துக்கறேன்னு சொல்லிட்டார். சொல்லுங்க.. என்ன நடந்தது?’

ஜோ வரும் வழியில் தனக்குள் ஒத்திகைப் பார்த்திருந்தபடியே மாணிக்கவேலின் வீட்டிற்குள் நுழைந்ததிலிருந்து ஃபிலிப் சுந்தரத்தை அழைத்தது வரை ஒன்றுவிடாமல் கூறி முடித்தான்.

அவன் கூறி முடிக்கும்வரை பொறுமையுடன் கேட்டு ஒரு மஞ்சள் நிற பதிவேட்டில் குறித்துக்கொண்ட வழக்கறிஞர் தன்னுடைய இருக்கையில் சாய்ந்து அமர்ந்தார்.

‘ஓக்கே மிஸ்டர் ஜோ. இப்ப நா கேக்கற கேள்விக்கு ஒங்களுக்கு தெரிஞ்ச வரைக்கும் பதில் சொல்லுங்க. தெரியலன்னா தெரியாதுன்னு சொல்லிருங்க. தவறான தகவல் மட்டும் தயவு செஞ்சி சொல்லாதீங்க. சரியா?’

ஜோ சரி என்று தலையை அசைத்தான்.

‘அந்த எஸ்.ஐ என்ன சொன்னார்? மிஸ்டர் மாணிக்கவேலை அரஸ்ட் பண்றேன்னு சொன்னாரா? இல்ல வெறும் என்க்வயரிக்கு கூட்டிக்கிட்டு போறேன்னு சொன்னாரா?’

ஜோ சில நொடிகள் யோசித்தான். காவல்துறை அதிகாரி தன்னிடம்  கைது என்ற சொல்லை உபயோகித்ததாக நினைவில்லை என்று பதிலளித்தான்.

‘குட்.. அப்போ வெறும் என்க்வயரிக்குத்தான் கூட்டிக்கிட்டு போயிருப்பார்.’

‘சார் அப்படியே அரெஸ்ட் பண்ணணும்னாலும் வாரண்ட் எதுவும் வேணாமா?’

சபரி ‘தேவையில்லை’ என்றார். ‘மிஸ்டர் ஜோ.. குற்றத்துல cognisable, non cognizableனு ரெண்டு வகை இருக்கு. Murder is a congnizable offence. அதுக்கு வாரண்ட் இல்லாமலே அரெஸ்ட் பண்றதுக்கு ஒரு காவல்துறை அதிகாரிக்கு பவர் இருக்கு. ஆனா ஒங்கள இன்ன சார்ஜுக்காக அரெஸ்ட் பண்றேன்னு அக்யூஸ்ட் கிட்ட சொல்லணும். ஆனா இவர் அரெஸ்ட்ங்கற வார்த்தைய சொல்லலேங்கறீங்க. அதனாலதான் என்க்வயரிக்காகத்தான் கூட்டிக்கிட்டு போயிருப்பார்னு நினைக்கேன்.’

ஜோ தயக்கத்துடன் அவரைப் பார்த்தான். ‘சார் நா அங்க இருக்கறப்போ அப்படி சொல்லலதான். ஆனா மாணிக்கம் சார்கிட்ட சொல்லியிருப்பாரோ என்னவோ. அப்படியே இருந்தாலும் இப்ப அவர பெய்ல எடுக்க முடியாதா சார்?’

சபரி முடியாது என்பதுபோல் தலையை அசைத்தார். ‘மர்டர் சார்ஜ்ல அரெஸ்ட் பண்ணியிருந்தா ஸ்டேஷன்லருந்து பெய்ல் எடுக்க முடியாது. அவர அரெஸ்ட் பண்ணியிருந்தா இருப்பத்தி நாலு மணி நேரத்துல ஒரு மஜிஸ்ட்ரேட் முன்னால ஆஜர் செஞ்சியாவணும். அங்க இவர் ஒரு ரெஸ்பான்சிபிளான பேங்க் மேனேஜர். அதனால பெய்ல விடணும்னு வாதாடலாம். ஆனா இதுக்கு நேரடி சாட்சி அதாவது eye witness அவரோட மனைவிங்கறதுனால சாட்சிய கலைக்கறதுக்கு வாய்ப்பிருக்குன்னு சொல்லி போலீஸ் சைட்லருந்து வாதாட வாய்ப்பிருக்கு.’

ஜோ என்னடா இது சோதனை என்பதுபோல் அவரைப் பார்த்தான்.

சபரி புன்னகையுடன் அவனைப் பார்த்தார். ‘Don’t worry Mr. Joe..’ என்றவாறு தன் முன்னாலிருந்த குறிப்பேட்டைப் பார்த்தார். ‘நீங்க அவரோட சன் சந்தோஷப் பத்தி என்னமோ சொன்னீங்களே? அது என்னது? கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க?’

‘சந்தோஷ் நான் பார்த்தப்போ அவனோட ரூம்ல நல்ல தூக்கத்துல இருந்தான் சார். மாணிக்கம் சார் போகும்போது அவன் எழுந்திருக்கறதுக்கு எப்படியும் ரெண்டு மணி நேரம் ஆவும்னு சொன்னார். அதனால நா வீட்ட பூட்டிக்கிட்டு ஆஃபீசுக்கு போயி என் கஸ்டடியிலருந்த சாவியையும் மாணிக்கம் சார் சாவியையும் எனக்கு அடுத்தபடியா இருந்த ஆஃபீசர் கிட்ட குடுத்துட்டு லீவு சொல்லிட்டு ஃபிலிப் சார கூப்ட்டு சொன்னேன். அப்புறம் திரும்பி வீட்டுக்கு போனேன். சந்தோஷ் திறந்த கண்ணோட சீலிங்கையே பாத்தாப்பல கிடக்கறத பாத்தேன். நா கிட்ட போயி நின்னதுக்கப்புறமும் அவன் என்னெ அடையாளமே கண்டுபிடிக்கல சார். சீலிங்கையோ பாத்துக்கிட்டு இருந்தான். எனக்கு என்ன பண்றதுன்னு தெரியாம மாணிக்கம் சார் ரூமுல போயி அங்கருந்த டெலிஃபோன் டைரக்டரியில இருந்த டாக்டர கூப்ட்டு நடந்த விவரத்த சொன்னேன். அவர் பதறிப்போயி கார போட்டுக்கிட்டு ஓடி வந்து பார்த்தார். சந்தோஷ் நாடிய புடிச்சி பார்த்தார். கண்ணுல டார்ச் அடிச்சி பாத்துட்டு Something serious has happened to him.. I will admit in my hospital.. ஒரு வாரத்துக்கு என் அப்சர்வேஷன்ல் இருக்கட்டும். அப்புறம் என்ன பண்ணணும்னு டிசைட் பண்லாம்னு சொல்லிட்டு அவர் கார்லயே கூட்டிக்கிட்டு போய்ட்டார். அவரும் எங்க சாரும் க்ளோஸ் ஃபிரண்ட்ஸ்ங்கறதுனால நானும் சரின்னு சம்மதிச்சேன்.’

அவன் கூறியதைக் கேட்டுவிட்டு ‘I see’ என்ற வழக்கறிஞர் தன் பதிவேட்டில் ‘சந்தோஷ்’ என்று எழுதியிருந்ததை பெருக்கல் குறியால் அடிப்பதைப் பார்த்தான்.

‘He must have seen the incident. அதிர்ச்சியில நிதானம் தவறிட்டார்னு நினைக்கேன்.  அவரோட எவிடென்ஸ் யூஸ் ஃபுல்லா இருக்கும்னு நினைச்சேன்.. It’s ok..’

‘ஆமா சார்.. நானும் அப்படித்தான் நினைச்சேன்.. நிச்சயமா மாணிக்கம் சார் இப்படியொரு காரியத்த செஞ்சிருக்கவே மாட்டார் சார்.’

‘எப்படி அவ்வளவு உறுதியா சொல்றீங்க? புகார் செஞ்சிருக்கறது அவருடைய மனைவியாச்சே? அவங்க எதுக்காக பொய் சொல்லணும்?’

‘அதான் சார் எனக்கும் புரியமாட்டேங்குது. எதுக்கு மேடம் இப்படியொரு பொய்ய சொல்லணும்?’

சபரி அனுதாபத்துடன் தன்னைப் பார்ப்பதை உணர்ந்த ஜோ, ‘சார்.. என்னுடைய யூகத்த சொல்றேன். அது சரியா இருக்குமான்னு தெரியலை.’ என்றான் தயக்கத்துடன்.

‘சும்மா சொல்லுங்க.’

‘ஒருவேளை ராணி மேடமே இத செஞ்சிட்டு பழிய சார் மேல போட்டிருக்கலாமில்லையா?’

சபரி புன்னகைத்தார். ‘இருக்கலாம்.’

‘ஒருவேளை அத சந்தோஷ் பார்த்து அந்த அதிர்ச்சியிலதான் அவனுக்கு அப்படி யிருக்கலாம்.’

‘ஆனா சந்தோஷ¤க்கு அது மயக்க மருந்தோ, தூக்க மருந்தோ.. ஊசி மூலமா ஏத்துனதே நாந்தான்னு மாணிக்கம் போலீசுக்கிட்டயே ஒத்துக்கிட்டாரே. அத எத்தன மணிக்கு குடுத்துருப்பாருன்னு சுமாரா ஒரு கெஸ் பண்ணத்தான் முடியுமே தவிர எந்த டாக்டராலும் சரியா சொல்ல முடியுமான்னு சந்தேகம்தான்.’

ஜோ சட்டென்று பிரகாசமானான். ‘சார் ஒரு ஐடியா. இப்பவே சந்தோஷ கொண்டு போன டாக்டர கூப்ட்டு கேட்டா என்ன? அவன் மயக்கத்துலருந்து தெளிஞ்சி அரை மணி நேரம் கூட ஆகலையே?’

சபரி, ‘அதுவும் சரிதான். He may be able to find out.. சரி அது ஒரு வழி. இப்ப நீங்க முதல்ல கேட்ட கேள்விக்கு வரேன். மிஸ்டர் மாணிக்கத்தோட மனைவி இத செஞ்சிருக்க முடியும்னு நீங்க நினைக்கறீங்க, இல்லையா?’

ஜோ தயங்கினான். ‘அது என்னுடைய யூகம் மட்டும்தான் சார்.’

‘யூகத்துக்கும் ஒரு அடிப்படை வேணுமில்ல?’

ஜோ தன்னுடைய மூடத்தனத்தை நினைத்து வருந்தினான். தேவையில்லாம ஒளறி கொட்டிட்டோமோ என்று நினைத்தான்.

‘சொல்ல வேண்டாம்னா கேக்கல மிஸ்டர் ஜோ. மிஸ்டர் மாணிக்கத்த காப்பாத்தறதுக்கு ஒதவுமேன்னே கேட்டேன்.’

ஜோ மேலும் தயங்கினான்.

‘ஏதோ சொல்ல வரீங்க. ஆனா வேணுமான்னு யோசிக்கறீங்க. அப்படித்தானே?’

‘ஆமாம் சார்.’ என்றான் ஜோ. ‘சாருக்கும் மேடத்துக்கும் இடையில பிரச்சினை இருந்ததுங்கறத எங்க ஆஃபீஸ் பியூன் வழியா கேட்டிருக்கேன். அவர்தான் சாரோட வீட்டுக்கு அடிக்கடி போவார். மேடத்துக்கு சாரோட அப்பாவ வீட்ல வச்சிக்கிட்டிருக்கறதுக்கு இஷ்டம் இல்லேன்னு..’

சபரி புன்னகையுடன் அவனைப் பார்த்தார். ‘எந்த மருமகளுக்குத்தான் மாமனார பிடிச்சிருக்கு? அதுக்குன்னு கொலை பண்ற அளவுக்கு போயிருவாங்களா என்ன? அதுவும் தோளுக்கு மேல வளர்ந்த மகன் வீட்ல இருக்கற சமயத்துல?’

ஜோ பிரகாசமானான். ‘சார் இந்த லாஜிக் சாருக்கும் பொருந்துமே?’

‘ஒத்துக்கறேன். ஆனா மிஸ்டர் மாணிக்கம் சந்தோஷ¤க்கு மயக்க மருந்த குடுக்க வேண்டிய அவசியம் என்னன்னு போலீஸ் தரப்புலருந்து கேட்டா என்ன சொல்வீங்க?’

ஜோ தடுமாறினான். அதானே? சார் எதுக்காக அத செய்யணும்?

சபரி எழுந்து, ‘இதுக்கு பதில் தெரியணும்னா மிஸ்டர் மாணிக்கத்த பார்த்து பேசிணும். வாங்க ஸ்டேஷனுக்கு போய்ட்டு வரலாம்.’ என்றவாறு வாசலை நோக்கி நடந்தார்.

ஜோ குழப்பத்துடன் எழுந்து அவரைப் பின் தொடர்ந்தான்.

தொடரும்..

2 comments:

siva gnanamji(#18100882083107547329) said...

ஜோ மட்டுமா குழப்பத்துடன்
பிந்தொடர்ந்தார்?
இப்போ இதைப் படித்துக்கொண்டிருப்பவர்களும்தான்.

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க ஜி!

இப்போ இதைப் படித்துக்கொண்டிருப்பவர்களும்தான். //

மாணிக்கவேல சந்திச்சா முடிச்சவிழ்ந்துரும்னு நினைக்கேன்.