11.8.09

தாத்தா போறும்.. (சிறுகதை)



வீட்டுவாசலில் வேன் வந்து நின்றதிலிருந்தே பரபரப்பானாள் மனோ.

'சுரேஷ் வேன் வந்துருச்சி. நீங்க கீழ போயில் வேன் பக்கத்துலயே நில்லுங்க. கன்னாபின்னான்னு அடுக்கி ஃபர்னிச்சர்ஸ ஒடச்சிறாம பாத்துக்குங்க. நா இங்க பாத்துக்கறேன். மேக்சிமம் அரை மணி நேரத்துல லோட் பண்ணி முடிச்சாத்தான் நல்ல நேரம் முடியறதுக்குள்ள நாம அங்க போயி சேர முடியும்.'

'சரி' என்று மட்டும் கூறிவிட்டு படியிறங்கி வாசலுக்கு சென்றான் சுரேஷ்.

கடந்த ஒரு வாரமாகவே தனிக்குடித்தனம் செல்வதில் உறுதியாயிருந்தாள் மனோ. சுரேஷ் எத்தனை எடுத்துக் கூறியும் அவள் மசிவதாயில்லை.

சுரேஷ் தன் பெற்றோருக்கு ஒரே பிள்ளை. அவனுடைய தந்தை மனோகரன் ஒரு ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் என்பதால் சற்று கண்டிப்பானவர்.

மனோ சற்று வசதிப்படைத்த குடும்பத்திலிருந்து வந்ததுடன் அவளும் தன் பெற்றோருக்கு ஒரே வாரிசு என்பதால் சுதந்திரத்துடன் வளர்ந்தவள். இன்றைய தலைமுறைக்கே உரித்தான நள்ளிரவில் உறங்கி காலை எட்டு மணிக்கு மேல் எழுவது, விடுமுறை நாட்களிலும் தோழிகளுடன் ஊர் சுற்றுவது, காசை தண்ணீராக செலவழிப்பது என அவளுக்கு இல்லாத 'நல்ல' பழக்கங்களே இல்லை எனலாம்.

இளம் வயதில் தாய் சொல்லே மந்திரம் என்று பிள்ளையாக இருந்த சுரேஷ் திருமணத்திற்குப் பிறகு  தாரம் சொல்லே மந்திரம் என்னும் அளவுக்கு மாறிப் போயிருந்தான். இளைய பருவத்தில் குழந்தைகளை சுயமாக சிந்திக்க அனுமதிக்காத பெற்றோர்களுக்கு முதிர்ந்த வயதில் கிடைக்கும் தண்டனைதான் சுரேஷின் பெற்றோருக்கும் இப்போது கிடைத்தது.

நிறைய தாய்மார்களுக்கு 'என் பிள்ளை நான் சொன்னா தட்டவே மாட்டான்' என்று பீற்றிக்கொள்வதில் பயங்கர பெருமை.. ஆனால் அத்தகைய ஆண் திருமணமானதும் தங்களுடைய மனைவியின் சொல்லையும் தட்டவே மாட்டான் என்பதை அவர்கள் புரிந்துக்கொள்வதில்லை.

சுரேஷின் தந்தை ஒய்வு பெற்றதிலிருந்தே 'என்னால முன்னே மாதிரி ஃப்ரீயா இருக்க முடியலைங்க. பாபுவும் இப்பல்லாம் எதுக்கெடுத்தாலும் தாத்தா, தாத்தான்னு அவர் சொல்றதத்தான் கேக்கறானே தவிர என்னெ சட்டை பண்றதே இல்லை. நாம தனியா போயிரலாம். நா சொன்னா அப்பா ஒரு ஃப்ளாட்ட நமக்காக வாங்கி குடுத்துருவார். நீங்க மட்டும் சரின்னு சொன்னா போறும்.' என்று நச்சரிக்க துவங்கியிருந்தாள்.

'கொஞ்சம் பொறுத்துக்கயேன்.. நாம ரெண்டு பேரும் காலைல போனா ராத்திரிதான் வறோம். நம்மளவிட பாபு கூட ஜாஸ்தி டைம் ஸ்பெண்ட் பண்றது அப்பாதான... அதான் தாத்தா, தாத்தான்னு ஒட்டிக்கறான். அதுவும் ஒரு வகையில நமக்கு நல்லதுதான?'

'இல்லைங்க... எனக்கென்னமோ ஒங்கப்பா அவனெ நம்மகிட்டருந்து பிரிச்சிருவாரோன்னு தோனுது. அத நா அலவ் பண்றதா இல்ல. நா ஏற்கனவே அப்பாகிட்ட சொல்லியாச்சி. அப்பா ஃப்ளாட்ட ரெடி பண்ணிட்டார். நல்ல நாள் பார்த்து வேன் வரைக்கும் ரெடி பண்ணிட்டேன்னு நேத்துதான் அப்பா ஆஃபீசுக்கு ஃபோன் பண்ணார். வர்ற புதன் கிழமை நாள் நல்லாருக்காம். காலையிலயே வேன் வந்துரும். நாம ஷிப்ட் பண்றோம்...'

சாதாரணமாக தினமும் மனோகரன் காலையில் ஆறு மணிக்கு வாக் போவதற்கு இறங்கினால் நண்பர்களையெல்லாம் சந்தித்துவிட்டு திரும்பி வர இரண்டு மணி நேரம் ஆகிவிடும். கனகம் ஒரு ஆஸ்துமா நோயாளி என்பதால் குளிர்காலத்தில் காலை எட்டு மணிக்கு முன் எழமாட்டாள்.

'மாமா வாக் போய்ட்டு திரும்பி வர்றதுக்குள்ள திங்சையெல்லாம் பேக் பண்ணி வண்டில ஏத்திட்டா அவங்களால ஒன்னும் பண்ண முடியாது...' என்பது மனோவின் ஐடியா. இந்த ஐடியாவில்  சுரேஷுக்கு அவ்வளவாக சம்மதம் இல்லையென்றாலும் மனோவை எதிர்த்து பேசும் தைரியம் அவனுக்கு இல்லை.

வேன் வந்தாயிற்று. சாமான்களை ஏற்றுவதில் சுரேஷ் மும்முரமாக இருந்தான். ஆனால் மனோவின் திட்டம் முழுமையாக நிறைவேறுவதற்கு முன் என்றும் இல்லாத வழக்கமாக மனோகரன் வாக் சென்ற அரை மணி நேரத்திலேயே திரும்பி வந்தார்.

வீட்டு வாசலில் வேன் நிற்பதையும் அதில் வீட்டு சாமான்கள் ஏற்றப்படுவதையும் கண்ட மனோகரன் முந்தைய தினம் இரவு தன் நண்பன் தன்னிடம் கூறியது சரிதான் என்று உணர்ந்துக்கொண்டார். ஆயினும் மனோகரிடம் ஒன்றும் கேட்காமல் வீட்டுக்குள் நுழைந்து அன்றைய செய்தித்தாளை கையில் எடுத்துக்கொண்டு வழக்கமாக தான் அமரும் ஈசிச் சேரில் அமர்ந்தார். வீட்டிற்குள் நுழைய தைரியமில்லாத சுரேஷ் தன் செல்ஃபோன் வழியாக மாடியிலிருந்த மனோவை அழைத்து, 'மனோ அப்பா திரும்பி வந்துட்டார். இதுவரைக்கும் எங்கிட்ட ஒன்னும் கேக்கல. இப்ப என்ன பண்ணப் போற?' என்றான்.

'எல்லாம் நா பாத்துக்கறேன். நீங்க போயி ஒங்கப்பா ரூம்ல தூங்கிக்கிட்டிருக்கற பாபுவ எழுப்பி ட்றெஸ் பண்ணுங்க. இன்னிக்கி அவன் ஸ்கூலுக்கு போகாட்டியும் பரவால்லை.'

இதென்னடா புதுப் பிரச்சினை என்று நினைத்தான் சுரேஷ். 'நம்ம ப்ளான்ல பாபுவை மறந்துப்போனோமே... அவன் எப்படி ரியாக்ட் பண்ணுவானோன்னு ப்ரெடிக்ட் பண்ண முடியாதே' என்ற எண்ணத்துடன் ஹாலில் அமர்ந்திருந்த தன் தந்தையைக் கடந்து அவருடைய படுக்கையறைக்குள் நுழைந்தான். பாபு அவன் நினைத்திருந்ததற்கு மாறாக எழுந்து ஸ்கூல் யூனிஃபார்முடன் எதையோ மும்முரமாக படித்துக்கொண்டிருந்தான்.

சுரேஷ் அறைக்குள் நுழைந்ததை கண்டவுடன் 'என்னப்பா அதிசயமா இங்க வந்து நிக்கறே... டெய்லி நா ஸ்கூலுக்கு போனதுக்கப்புறந்தானே அம்மாவும் நீயும் எழுந்திரிப்பீங்க?' என்றான் சற்று நக்கலாக.

'டேய் அதிகப்பிரசங்கி. இன்னைக்கி நீ ஸ்கூலுக்கு போக வேணாம். யூனிஃபார்ம கழட்டிட்டு வேற டிரஸ் போட்டுக்கோ... தாத்தா, பாட்டிக்கிட்டு சொல்லிட்டு கிளம்பு.' என்றான் சுரேஷ் எரிச்சலுடன்.

'என்னது, ஸ்கூலுக்கு போவேணாமா? என்னப்பா விளையாடறியா இன்னைக்கி என்ன டே தெரியுமா?'

'என்ன டேவாயிருந்தா என்னடா... போக வேணாம்னு சொல்லிட்டேன் இல்ல. அம்மா டென்ஷனாகறதுக்குள்ள டிரெஸ் சேஞ்ச் பண்ணிக்கிட்டு கிளம்பு.'

'எங்க?'

'நாம வேற வீட்டுக்கு போகப் போறோம்.'

'நாமன்னா?'

'நீ, நான், அம்மா...'

'அப்ப தாத்தா, பாட்டி?'

'அதான் இந்த வீடு இருக்கே?'

'ஓ! அதான் விஷயமா? இரு தாத்தாக்கிட்ட கேட்டுட்டு வரேன்.' என்றவாறு எழுந்த பாபு 'தள்ளிக்க..' என்று வழியில் நின்றிருந்த தந்தையை ஒரு கையால் விலக்கிவிட்டு ஹாலுக்குள் நுழைந்து செய்தித்தாளில் மூழ்கியிருந்த மனோகரின் அருகில் வந்து நின்றான். 'தாத்தா நா இன்னைக்கி ஸ்கூலுக்கு போவேணாமாம். நேத்து நாம ப்ரிப்பேர் பண்ணதெல்லாம் வேஸ்ட்'

மனோகரன் தன் பேரனைப் பார்த்தார். 'இன்னைக்கி என்ன டேன்னு ஒங்கப்பாக்கிட்ட சொல்றதுதான?' என்றார்.

'கேட்டேன் தாத்தா... என்ன டேவாயிருந்தா என்னடா... அதான் போக வேணாம்னு சொன்னேனேங்கறார்.'

'அப்ப போகாத'

பாபு கோபத்துடன் அவரைப் பார்த்தான். 'என்ன தாத்தா வெளையாடறியா? ஹாஃப் இயர்லி எக்ஸாமுக்கு யாராச்சும் ஏதாவது சாக்கு சொல்லி லீவ் போட்டீங்க... அடுத்த வருசமும் இதே க்ளாஸ்தான்னு டீச்சர் சொன்னாங்கன்னு நேத்துதான் ஒங்கிட்ட சொன்னேன்.'

'அத ஒங்கப்பன் கிட்ட சொல்லு. அவனுக்கு நீ என்ன க்ளாஸ் படிக்கறயான்னு தெரியுமோ என்னவோ?'

'எதுக்கு தேவையில்லாம அவன்கிட்ட எதையாச்சும் சொல்லி கன்ப்யூஸ் பண்றீங்க மாமா?'

கோபத்துடன் தன் எதிரில் வந்து நின்ற மருமகளை பார்த்தார் மனோகர். பிறகு திரும்பி தன் பேரனை பார்த்தார். 'பைடா பாபு... சமர்த்தா ஸ்கூலுக்கு லீவ் போட்டுட்டு இவங்களோட போ.... என்னால ஒன்னும் செய்ய முடியாது..'

'டேய் கிளம்புடா..' என்றவாறு தன் மகனை நெருங்கினாள் மனோ...

பாபு இரண்டடி பின்னால் நகர்ந்தான். 'முடியாதும்மா... நா எங்கயும் வரலை... நா இங்கயே இருந்துக்கறேன்.'

மனோ திகைப்புடன் சுரேஷைப் பார்த்தாள். 'நா சொன்னப்போ நம்ப மாட்டேன்னீங்களே இப்ப பாருங்க...'

'என்னப்பா இதெல்லாம்?' என்றான் சுரேஷ் எரிச்சலுடன்..

'அதான் நானும் கேக்கேன்... என்ன இதெல்லாம்? நீ தனியா போறேன்னு சொன்னா நா சம்மதிக்க மாட்டேனு நினைச்சி சொல்லாம இருந்தியா?' என்றார் மனோகர்

'அவர ஏன் கேக்கீங்க... நாந்தான் சொல்ல வேணாம்னு சொன்னேன்.'

மனோகர் திரும்பி தன் மருமகளைப் பார்த்தார். 'ரொம்ப தாங்ஸ்ம்மா... தாராளமா போய்ட்டு வாங்க...நா தடுக்கல... பாபு வரேன்னு சொன்னா அவனையும் கூப்டுக்கிட்டு போங்க... ஆனா ஒரு கண்டிஷன்... அவனெ கம்பெல் பண்ணி தூக்கிகிட்டு போகக்கூடாது..'

'ஏன்? எதையாவது சொல்லி அவனெ ப்ரெய்ன்வாஷ் பண்ணி வச்சிருக்கீங்களா?'

மனோகர் வேதனையுடன் சிரித்தார். 'அத பாபு கிட்டயே கேளேன்.'

மனோ தன் மகனை நெருங்கி அவன் முகத்தை பற்றினாள். 'டேய் பாபு அம்மா சொன்னா செய்வே இல்ல...'

பாபு அவளுடைய கரத்தை தட்டிவிட்டான். 'நான் வரலை... இன்னைக்கி ஸ்கூலுக்கு போகாம இருக்க முடியாது.'

'ஏண்டா.. இன்னைக்கி என்ன அப்படி விசேஷம்..'

பாபு கோபத்துடன் தன் தாயைப் பார்த்தான். 'இதாம்மா உங்கிட்ட பிரச்சினை... இன்னைக்கி என்ன விசேஷம்னு கேட்டீயே... அதாலதான் சொல்றேன்... நா வரலை... நா இங்கயே இருந்துக்கறேன்...

மனோ எரிச்சலுடன் 'என்னடா பெரிய மனுசன் மாதிரி பேசறே... சொல்லித்தான் தொலையேன்... இன்னைக்கி என்ன?'

'எனக்கு இப்ப ஹாஃப் இயர்லி எக்ஸாம் நடக்குது... மண்டேலருந்து.. இன்னைக்கி மாத்ஸ்... நேத்து ராத்திரி பத்து மணி வரைக்கும் தாத்தா எல்லா சம்சையும் போட்டு காட்டுனார்...  நாளைக்கி எக்ஸாம்ல செண்டம் கண்டிப்பா கிடைக்கும்டான்னு சொன்னார்.. நீ என்னடான்னா இன்னைக்கி என்னான்னு கேக்கறே..'

'ஆமா... பெரிய ஐ.ஏ.எஸ் படிக்கறே... அடுத்த வருசம் இந்த ஸ்கூல்லயே படிக்கப் போறதில்ல... எல்லாம் காச குடுத்தா ஹாஃப் இயர்லி இல்ல ஃபைனல்லயே பாஸ்சுன்னு எழுதிக் குடுத்துருவாங்க... நீ கிளம்பு...'

'எனக்கு வேற ஸ்கூலும் வேணாம்.. வேற வீடும் வேணாம்... எனக்கு  தாத்தாவையும் ஃப்ரெண்ட்சையும் விட்டுட்டு வர முடியாது... நீ வேணும்னா நீ போ....'

இதுவரை மவுனமாக வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த சுரேஷ் தன் தந்தையை நெருங்கி 'நீங்க சொன்னா அவன் கேப்பான்... சொல்லுங்கப்பா.'

'நீ மொதல்ல தாத்தா சொல்றது கேளு... அதுக்கப்புறம் நீ சொல்றத நா கேக்கறேன்.' என்ற பாபுவை மனோகரே அதிர்ந்துபோய் பார்த்தார்.

'பாபு அப்படியெல்லாம் அப்பாக்கிட்ட பேசாத... தப்பு...' என்றார்.

மனோ உரக்க சிரித்தாள். 'அடடா... செய்யிறதையும் செஞ்சிட்டு ஒன்னும் தெரியாத மாதிரி நடிக்கறத பாரு... சுரேஷ் இப்படி பேசிக்கிட்டிருந்தா சரி வராது... நீங்க அவன தூக்கிக்கிட்டு போயி வேன்ல ஒக்காருங்க... சாமான் ஏத்துன வரைக்கும் போறும்... மீதிய அப்புறமா வேன் வந்து ஏத்திக்கட்டும்... நீங்க கெளம்புங்க..'

சுரேஷ் தன் தந்தையைப் பார்த்தான். 'அப்பா ப்ளீஸ்... Don't make this difficult.... அவன்கிட்ட சொல்லுங்களேன்.'

மனோகர் தன் மகனை வேதனையுடன் பார்த்தார். 'நா அவன் கிட்ட சொல்லணும்னு நீ ஏண்டா எதிர்பார்க்கறே... என்னால மட்டும் அவன விட்டுட்டு இருக்க முடியும்னு நினைக்கறியா? இல்ல... ஒங்கம்மாவால உன்னெ விட்டு பிரிஞ்சி இருக்க முடியும்னு நினைக்கறியா? எங்களுக்கு ஒன்னெ விட்டா யார்றா இருக்கா? இங்க ஒனக்கு என்ன பிரச்சினை?'

சுரேஷ் பதிலளிக்காமல் திரும்பி தன் மனைவியைப் பார்த்தான்.

மனோகர் தன் மகனின் முகத்தைப் பற்றி தன் வசம் திருப்பினார். 'எதுக்குடா அவள பாக்கறே? இங்க இருக்கறதுல ஒனக்கு ஏதாச்சும் பிரச்சினை இருக்கா? என் முகத்த பார்த்து சொல்லு..'

சுரேஷ் பதிலளிக்காமல் தலைகுனிந்தான்.

வாசலில் பாபுவின் பள்ளி வேன் வந்து நின்றது... பாபு யார் அனுமதிக்கும் காத்திராமல் வாசலை நோக்கி ஓடினான். 'தாத்தா பை... திரும்பி வர்றப்ப நீதான் வரணும்... சரியா?'

சுரேஷ் அதிர்ந்துபோய் அப்படியே நின்றான். மனோ சுதாரித்துக்கொண்டு பாபுவின் பின்னால் ஓடினாள். ஆனால் பாபு வேகமாக ஓடிச் சென்று வேனில் ஏறிக்கொள்ள அது புறப்பட்டுச் சென்றது.

மனோ அதே வேகத்தில் ஹாலுக்கு திரும்பி, 'இப்ப உங்களுக்கு திருப்திதானே... ஆனாலும் ஒங்க ப்ளான் சக்சஸ் ஆகாது மாமா.. நானும் இவரும் வேன்ல போறோம்... சாய்ந்தரம் இவர் போயி அவனெ ஸ்கூல்லருந்து கூப்டுக்கிட்டு வந்துருவார்... அப்ப என்ன பண்றீங்கன்னு பார்ப்போம்...' என்று இறைந்தாள். 'சுரேஷ் கிளம்புங்க...'

'என்னடா சொல்றா... எங்க கிளம்புறீங்க?'

சுரேஷ் சட்டென்று திரும்பி குரல் வந்த திசையைப் பார்த்தான்... கனகம் மேல் மூச்சு வாங்க நடக்க முடியாமல் தள்ளாடியவாறு தன் அறையை விட்டு வெளியே வர மனோகர் பதற்றத்துடன் அவளை நோக்கி சென்றார். 'ஒன்னெ யாரு வரச் சொன்னா... இன்னம் ஒரு அரை மணி நேரம் படுக்கையிலயே கிடக்கறதுதான... போ... படு... நா காப்பி போட்டு கொண்டு வரேன்...'

கனகம் அவருடைய கையை தட்டிவிட்டாள். 'சுரேஷ் சொல்லுடா.... எங்க கிளம்புறீங்க?'

'அவங்க தனியா போறாங்களாம்..' என்றார் மனோகர்.. 'நீ போ... நீ சொல்லி ஒன்னும் அவன் ஐடியாவ மாத்திக்கப் போறதில்லை.... ஒரு மகன் இருந்தான்.. இப்ப இல்லைன்னு நினைச்சுக்க...'

'என்னங்க சொல்றீங்க... அப்ப பாபு? அவனெ பாக்காம எப்படீங்க இருப்பீங்க?' உணர்ச்சி பெருக்கீட்டால் மூச்சுவிட முடியாமல் தடுமாறிய தன் மனைவியை கைத்தாங்கலாக அழைத்துச் சென்று படுக்கையில் கிடத்தி அறைக்கதவை சாத்தினார்.

சுரேஷ் செய்வதறியாது நின்றான்...

'என்ன மசமசன்னு நிக்கிறீங்க... கிளம்புங்க...' என்றவாறு தன் அருகில் வந்து நின்ற தன் மனைவியை பார்த்தான்...

'ஐ ஆம் சாரி மனோ... நா வரலை...'

'அப்ப ஏத்துன சாமான்...'

'எறக்கி வைக்க சொல்லு....'

திகைத்து நின்ற தன் மனைவியை பொருட்படுத்தாமல் தன் தாயின் அறை கதவை தட்டினான் சுரேஷ்... 'நீ டென்ஷனாகதம்மா... நா எங்கயும் போகலை....'

***********

இன்றைய இன்ஸ்பிரேஷன்

2 comments:

வல்லிசிம்ஹன் said...

கொஞ்சம் கற்பனைக்கு
மீறிய நடவடிக்கை. இருந்தாலும் நல்லா இருக்கு.
அம்மா சொன்ன பேச்சைக் கேட்டவன்,
மனைவி பேச்சைக் கேட்கிறான் என்ற வரி சூப்பர் ரியாலிஸ்டிக்.

TBR. JOSPEH said...

வாங்க வல்லிசிம்ஹன்,

கொஞ்சம் கற்பனைக்கு
மீறிய நடவடிக்கை. //

Exaggerationனு சொல்றீங்க. இருக்கலாம். ஆனா நடக்காம இல்லை.

உங்களுடைய கருத்துக்கு நன்றி