'என்னப்பா நா சொல்லிக்கிட்டேயிருக்கேன் நீங்க ஒன்னும் ரெஸ்பாண்ட் பண்ணாம இருக்கீங்க?'
ராமனாதன் எரிச்சலுடன் தன் மகனைப் பார்த்தார். 'நா என்ன சொல்லணுங்கறே?'
'உங்களுக்கு இந்த வீட்ல நடக்கற விஷயத்துல ஏதாச்சும் அக்கறை இருக்கா இல்லையா?'
'இல்லாம என்ன?'
'அப்ப ஏதாச்சும் சொல்லுங்க.'
'என்னத்த சொல்ல சொல்றே? நீ ராணிய வீட்ட விட்டு போகச் சொன்னத சரின்னு சொல்ல சொல்றியா? இல்ல நேத்து அம்மாவும் புள்ளையுமா சேர்ந்து அவள தள்ளி வச்சிரலாம்னு முடிவு பண்ணீங்களே அத சரின்னு சொல்ல சொல்றியா?'
'அப்ப ரெண்டுமே தப்புன்னு சொல்றீங்களா?'
ராமனாதன் மவுனமாக இருந்தார்.
'என்னப்பா பதிலையே காணம்?'
'மவுனம் ஆமாங்கறதுக்கு அறிகுறி. நீ இதுவரைக்கும் செஞ்சது எல்லாமே தப்பு மட்டுமில்ல. முட்டாள்தனம், சிறுபிள்ளைத்தனம் இன்னும் என்னென்னவோ சொல்லலாம். ஆனா நீயும் ஒத்துக்க மாட்டே... ஒங்க அம்மாவும் ஒத்துக்க மாட்டா. அதான் வாயிருந்தும் ஊமையா இருக்கேன்.'
மணி தன் தந்தையை எரித்துவிடுவதுபோல் பார்த்தான்.
'என்னடா அப்படி பாக்கறே? சரி.. அத விடு. நா ஒன்னு கேக்கறேன். என்ன திடீர்னு ஒனக்கு கடவுள் மேல பக்தி?'
'என்ன உளர்றீங்க?'
'நா உளர்றனா? அந்த பொண்ண கல்யாணம் பண்றதுக்கு முன்னால நீ என்னைக்காவது கோயிலுக்கு போயிருக்கியாடா? நா அப்பா மாதிரி. கடவுள் எல்லாம் தேவை இருக்கறவங்களுக்கு மட்டுந்தான், எனக்கு எதுவும் தேவையில்ல. அதனால கோயிலுக்கு போயிதான் சாமி கும்புடணும்னு இல்லைன்னு ஒங்கம்மாக்கிட்ட லெக்சர் அடிப்பியே... இப்ப என்ன திடீர்னு..'
அவருடைய கேள்விக்கு எப்படி பதிலளிப்பது என தெரியாமல் மவுனமாக அமர்ந்திருந்தான் மணி.
'ஒன்னால பதில் சொல்ல முடியாதுடா... ஏன்னா நீ ஒரு முடவாதம் புடிச்சவன். அந்த பொண்ணு ஒரு கிறிஸ்துவ பொண்ணுன்னு தெரிஞ்சதுமே இது நமக்கு சரிவராதுன்னு சொன்னேன். அது மட்டுமில்லாம அது கான்வெண்ட் ஸ்கூல்ல படிச்சிட்டு நுனி நாக்குல இங்ககிலீஷ் பேசிக்கிட்டிருக்கற பொண்ணு. அவங்க குடும்பமும் அப்படித்தான். படிக்காத தற்குறிங்கறதால என்னையும் ஒங்கம்மாவையும் அவிங்க மதிக்கமாட்டாங்கன்னு நா சொன்னப்ப அவ என்னெ மதிச்சா போறும்னு எவ்வளவு திமிரா சொன்னே? இருந்தாலும் அந்த பொண்ணு நம்ம வீட்டுக்கு வந்த இந்த ஒரு வருசத்துல என்னைக்காவது என்னையும் ஒங்கம்மாவையும் மதிக்காம இருந்துருக்காளாடா? நமக்காக அவ சுத்த சைவமா கூட மாறிட்டாளேடா... சரி... அதையும் விடு... பூஜை ரூம் சுவர் தெரியாம ஊர்லருக்கற சாமி படத்தையெல்லாம் ஒங்கம்மா மாட்டி வச்சிருக்கா. ஆனா ஒரே ஒரு ஜீசஸ் படத்த ஒங்க ரூம்ல மாட்டிக்கறேங்கன்னு அந்த பொண்ணு சொன்னப்ப நீயும் ஒங்கம்மாவும் சேந்துக்கிட்டு என்ன குதி குதிச்சீங்க? அதையும் பெரிசு பண்ணாம விட்டுட்டு சகஜமா பழகிக்கிட்டிருந்த பொண்ணுதானடா அது? வீட்டுக்கு வந்த முதல் வாரமே ஒங்கம்மா அவள கோவிலுக்கு கூப்டப்போ 'சாரி மாமி மன்னிச்சிருங்க'ன்னு சொன்னத நீயும் கேட்டுக்கிட்டுத்தான இருந்தே? 'அவளுக்கு இஷ்டமில்லன்னா விட்டுருங்கம்மான்னு நீயுந்தான சொன்னே?' இப்ப திடீர்னு நம்ம சாமீ மேல நம்பிக்கையில்லாதக் கூட குடும்பம் நடத்தி பிரயோஜனம் இல்லேன்னு பல்டி அடிக்கறே? சாமியே இல்லைன்னு சொன்னவனுக்கு திடீர்னு என்னடா நம்ம சாமி, உங்க சாமின்னு....'
தந்தையின் சரமாரியான குற்றச்சாட்டை எதிர்பார்க்காத மணி வாயடைத்துப் போய் அமர்ந்திருந்தான்.
'இங்க பார்றா... காதலிச்சப்பவும் கல்யாணம் பண்ணிக்கறப்பவும் தெரியாத கடவுள் இப்ப ஏன் புதுசா வந்துருக்குன்னு நா கேக்கேன், ஆசை முப்பது நாள் மோகம் அறுபது நாள்... அவ கலரும், அழகும் ஒனக்கு புடிச்சிருந்தப்ப அவ யாரா இருந்தாலும் பரவால்லைன்னு தோனிச்சி. இப்ப அதையே ஒரு வருசமா அனுபவிச்சாச்சு இப்ப கழட்டி விட்டுட்டா என்னன்னு தோணுது...'
'உளறாதீங்கப்பா...'
'டேய் குரல ஒசத்தி கத்துனா நா சொல்றது இல்லேன்னு ஆயிருமா... நா சொல்றது பொய்யின்னு நீ நிரூபி.'
'எப்படி?'
'போயி அவளோட குடும்பம் நடத்து.'
'அது மட்டும் முடியாது.'
'அப்ப நா சொல்றது சரின்னு ஒத்துக்க.'
மணி எழுந்து நின்றான். 'இங்க பாருங்கப்பா... அம்மா ஊர்ல இல்லேங்கற தைரியத்துலதான இப்படியெல்லாம் லெக்சர் அடிக்கறீங்க? நாளைக்கு அவங்க ஊர்லருந்து வரட்டும், பேசிக்கலாம்.'
ராமனாதன் சிரித்தார். 'போடா முட்டாள். ஒங்கம்மாவுக்கு பயந்துக்கிட்டு நா வாய் மூடிக்கிட்டு இருக்கல... வீட்ல பிரச்சினை பண்ண் வேண்டாமேன்னுதான் பேசாம இருக்கேன். ஊர்லருக்கற நிறைய பொம்பளைங்க ஒங்கம்மா மாதிரிதான். ஆம்பிளைங்க வாய மூடிக்கிட்டு இருந்தா அவங்களுக்கு பயந்துக்கிட்டிருக்காங்கன்னு நினைக்கறாங்க. ஆனா குடும்பத்துல நிம்மதி இருக்கணும், குடும்பச் சண்டை சந்திக்கி வந்துறக்கூடாதுங்கற நல்ல எண்ணத்துலதான் ஆம்பிளைங்க பெரும்பாலும் சண்டித்தனம் பண்ற பொம்பிளைங்க சகிச்சிக்கிறாங்கறத புரிஞ்சிக்கறதுல்ல.. சரி ஒங்கம்மா எதுக்கு ஊருக்கு கிளம்பி போயிருக்கான்னு தெரியுமா?'
'எதுக்கு?'
'தெரிஞ்சிதான் கேக்கியா? இல்ல உண்மையிலயே ஒனக்கு தெரியாதா?'
'என்னப்பா கிண்டலா? எனக்கு உண்மையிலயே தெரியாது.'
'ஒனக்கு பொண்ணு பாக்கத்தான் போயிருக்கா.'
மணி அதிர்ச்சியுடன் அவரைப் பார்த்தான். 'என்னப்பா சொல்றீங்க? எனக்கு பொண்ணு பாக்கவா?'
'ஆமாடா... அதுமட்டுமில்ல... ஒனக்கு கல்யாணம் ஆனத ஊர்ல யாருக்கும் சொல்ல வேணாம்னு ஒங்கம்மா சொன்னது நினைவிருக்குல்ல?'
'ஆமா..'
'அது இதுக்குத்தான். என்னைக்கிருந்தாலும் எம்மவன் அந்த கிருஸ்துவ சிறுக்கிய விட்டுப்போட்டு வந்துருவான் நீங்க வேணும்னா பாருங்கன்னு நீ கல்யாணம் பண்ணிக்கிட்ட நாள்லருந்தே ஒங்கம்மா சொல்லிக்கிட்டேதான் இருந்தா... இப்ப அத நடத்திக்காட்டலாம்கற முடிவோட போயிருக்கா.'
மணி என்ன பதில் சொல்வதென தெரியாமல் அமர்ந்திருந்தான்.
'என்னடா பதிலையே காணம்?'
மணி தயக்கத்துடன் தன் தந்தையைப் பார்த்தான். 'இல்ல... ராணிய டைவர்ஸ் பண்ணாம இன்னொரு கல்யாணம் எப்படின்னு....'
'அடப்பாவி அதான் ஒன் தயக்கத்துக்கு காரணமா? அப்ப அந்த பொண்ண தள்ளி வைக்கறதுன்னே தீர்மானம் பண்ணிட்டியா?'
'என்னப்பா தள்ளி வைக்கறதுன்னு அசிங்கமா சொல்றீங்க? நா அவள விவாகரத்து பண்ணிறலாம்னுல்ல சொல்றேன்?'
'அதுக்கு கோர்ட்டுக்கு போணும்ல?'
'ஆமா...'
'அங்க என்ன காரணம்னு கேப்பாங்களே, என்ன சொல்லப் போற?'
தன் மனதிலுள்ளதை எப்படி சொல்வதென தெரியாமல் அவரை பார்த்தான்... சொன்னா இவர் எப்படி ரியாக்ட பண்ணுவாருன்னு தெரியலையே என்று யோசித்தான்.
'அவ கிறிஸ்ட்டினு நா ஹிந்து, ஒத்துவரலைன்னு சொன்னா கோர்ட்ல ஒத்துக்குவாங்களா? இல்ல நேத்து ஒங்கம்மா ஒரு யோசனை சொன்னாளே அதுமாதிரி சொல்லப் போறியா?'
மனுஷனுக்கு பாம்பு காது... நேத்து ராத்திரி நாம பேசிக்கிட்டிருந்ததையெல்லாம் ஒட்டுக்கேட்டுட்டு இப்ப ஒன்னும் தெரியாத மாதிரி கேள்விக் கேக்கறதப் பாரு... எல்லாம் அம்மா இல்லங்கற தைரியம்... 'அதான் கேட்டுட்டீங்க இல்ல. பிறகென்ன கேள்வி?'
ராமனாதன் எரிச்சலுடன் தன் மகனைப் பார்த்தார். 'டேய் நா கேட்ட கேள்விக்கு ஆமா இல்லைன்னு மட்டும் பதில் சொல்லு. ஒங்கம்மா சொன்னமாதிரிதான் சொல்லப் போறியா?'
'ஆமான்னுதான் வச்சிக்குங்களேன்.'
'ஒங்கூட ஒரு வருசமா குடும்பம் நடத்துன ஒரு பொண்ணெ நடத்த கெட்டவன்னு கூசாம ஒங்கம்மா சொல்லச் சொல்றா அதுக்கு நீயும் சரின்னு ஒத்துக்கறே. படிச்சவந்தானே நீ? வெக்கமாயில்ல? சரி... இப்ப நா சொல்றத கொஞ்சம் கேளு.. காலையில சித்த வெளிய போய்ட்டு வரேன்னு சொலிட்டு போனேனே எங்க போனேன்னு தெரியுமா?'
'ஆமா... கேட்டா அப்புறம் சொல்றேன்னு சொன்னீங்க? சரி நமக்கென்ன வந்துதுன்னு விட்டுட்டேன்...'
'இப்ப சொல்றேன்.. ராணி வீட்டுக்குத்தான் போயிருந்தேன்.'
மணி எரிந்து விழுந்தான். 'அங்க எதுக்கு போனீங்க? அம்மாவுக்கு தெரிஞ்சா என்ன ஆவும்னு தெரியுமா?'
ராமனாதன் சிரித்தார். 'ராணி முழுவாம இருக்காளாம். அர்ஜண்ட கொஞ்சம் வாங்க மாமான்னு அவதான் ஃபோன் பண்ணியிருந்தா.. அதான் போய் பார்த்துட்டு வந்தேன். இப்ப என்னப் பண்ணுவா ஒங்கம்மா?'
மணி அதிர்ந்துபோய் அமர்ந்திருந்தான். 'உண்மையாவா சொல்றீங்க?'
'ஏன் அதிர்ச்சியா இருக்கா? இன்னொன்னையும் கேளு.'
'என்ன?'
'சம்பந்தியம்மாவுக்கு ராணிய மறுபடியும் உங்கூட வாழவைக்க முடியுங்கற நம்பிக்கையில்லையாம். அதனால....'
'அதனால? நாங்களே டைவர்ஸ் பண்ணிருவோம்னு மிரட்டறாங்களா?'
'இல்லடா முட்டாள். கர்ப்பத்த கலைச்சிருன்னு ராணிய சம்பந்தியம்மா நிர்பந்திக்கிறாங்களாம். என்னால முடியாது நீங்க கொஞ்சம் அம்மாகிட்ட சொல்லுங்க மாமான்னு அழுவுது அந்த பொண்ணு. என்னைக்காவது நீ மனசு மாறி அவள ஏத்துப்பேன்னு அந்த பொண்ணு நினைச்சிக்கிட்டிருக்கு... நீ என்னடான்னா..'
'..........'
'என்னடா பதிலையே காணம்? அவ புள்ளைய பெத்து எடுக்கறவரைக்கும் விவாகரத்து கிடைக்காது, தெரியுமில்ல?'
மணி பரிதாபமாக தன் தந்தையைப் பார்த்தான்.
'என்னடா... அப்படி பார்த்தா என்ன அர்த்தம்?'
'இப்ப என்னப்பா பண்றது?'
'அப்படி கேளு... ஆனா நா சொல்றாப்பல நீ செய்யிறதா இருந்தா சொல்லு... இல்லன்னா அந்த பொண்ணு கர்ப்பத்த கலைக்கறத தவிர வேற வழியில்ல. என்ன சொல்றே?'
'..........'
'சரி... நீ சைலண்டா இருக்கறதே சரிங்கறா மாதிரிதான். இப்பவே கிளம்பு.'
'எங்க?'
'நா வீட்டுக்கு வர்ற வழியிலயே தரகர் ஒருத்தர பார்த்து சின்னதா ஒரு வீட்ட பேசி முடிச்சிட்டுத்தான் வந்தேன். சம்பந்தியம்மாக்கிட்ட கூட பேசி சம்மதம் வாங்கிட்டேன். ராணிக்குக் கூட விஷயம் தெரியாது.'
'அதெப்படிப்பா. அவ நாம கும்பிடற சாமிய ஏத்துக்கமாட்டா. அப்புறம் நான் மாத்தறம் எதுக்காம்?'
'டேய் அதுக்கு காரணம் இருக்கு. கிறிஸ்தவங்களுக்கு அவங்க கும்புடற கடவுள்தான் உண்மையான கடவுள்ங்கற நினைப்பு. அதனால மத்த தெய்வங்கள கும்புடக்கூடாது, அவங்க கோவில்களுக்கு போகக் கூடாதுன்னு நினைக்கறாங்க. ஆனா நாம அப்படியில்ல. எல்லா சாமியும் ஒன்னுதான்னு நினைக்கோம். அதனாலதான் நம்மளால எல்லா கோவிலுக்கும் போகவும் முடியுது, சாமிய கும்புடவும் முடியுது. இன்னைக்கி இந்துக்க பெரும்பாலானவங்க வாழற நம்ம நாட்டுல மத்த மதத்த சேர்ந்தவங்களும் நிம்மதியா வாழறாங்கன்னா அது இந்துக்களுடைய இந்த எல்லா தெய்வங்களையும் ஏத்துக்கற குணம்தாண்டா. அந்த குணம் ஊர்ல மட்டுமில்ல வீடுகள்லயும் இருக்கணும். நம்ம நாட்ல மனுஷங்கள பிரிக்கிறதே இந்த தெய்வ நம்பிக்கைதாண்டா. அதுக்காகத்தான் அப்படிப்பட்ட அந்த கடவுளே நமக்கு தேவையில்லைன்னு என்னெ மாதிரி சிலபேர் தூக்கி வீசிட்டோம். அதனாலதான் சொல்றேன் நீ ராணிய தள்ளி வைக்கறதுக்கு நீ கும்புடற சாமி மேல பழிய போடாத. அவ எந்த சாமிய கும்புடறாங்கறதுல்ல இப்ப முக்கியம் உங்கிட்ட அன்பா, அனுசரனையா நடந்துக்கறாளாங்கறதுதான் முக்கியம். அந்த விஷயத்துல ராணி ஒரு அப்பழுக்கில்லாத பொண்ணுடா. வாயும் வயிறுமா இருக்கற ஒரு பொண்ண தள்ளி வைக்கணும், விவாகரத்து பண்ணனும் நினைக்கறது பாவம்டா.'
'அதெல்லாம் சரிப்பா... ஆனா அம்மா வந்து ஏதாச்சும் பிரச்சினை பண்ணா?'
ராமனாதன் எரிச்சலுடன். ' ஒங்கம்மாவ நா பாத்துக்கறேன்.. ஒரு பேரனோ பேத்தியோ பொறந்துருச்சுன்னா ஒங்கம்மா அடங்கிருவா. நீ கொஞ்ச நாளைக்கி ஒங்கம்மாவ விட்டு பிரிஞ்சி இருக்கறதுதான் நல்லதுன்னு நா நினைக்கேன். நீ இருக்கற விட்டு விலாசம் கூட ஒங்கம்மாவுக்கு இப்போதைக்கி தெரிய வேணாம். ஒனக்கு இப்பத்தைக்கி என்னென்ன சாமான், செட்டு வேணுமோ எடுத்துக்கோ. நா போயி ஒரு வண்டிய புடிச்சாறன்.' என்று கூறிவிட்டு எழுந்து வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு தெருவில் இறங்கி நடக்க அவர் தெருக்கோடியில் சென்று மறையும் வரை வாசலில் நின்றிருந்த மணி தன் அறைக்குள் நுழைந்து அலமாரியில் இருந்த ஆடைகளை எடுத்து பெட்டியில் அடுக்க ஆரம்பித்தான்.
********
5 comments:
//'அதெல்லாம் சரிப்பா... ஆனா அம்மா வந்து ஏதாச்சும் பிரச்சினை பண்ணா?'
ராமனாதன் எரிச்சலுடன். ' ஒங்கம்மாவ நா பாத்துக்கறேன்..//
:)
எல்லாப் பிரச்சனையையும் பெண்களை காரணமாக வைத்துச் சொல்லனுமா ? என்று நினைத்தால் அது பல இடத்தில் உண்மையாகவும் இருப்பதையும் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும் போல !
எழுத்து நடை நன்று !
வாங்க கண்ணன்,
எல்லாப் பிரச்சனையையும் பெண்களை காரணமாக வைத்துச் சொல்லனுமா ?//
நீங்களே பதிலையும் சொல்லிட்டீங்க. ஆனா பெண்கள் மட்டுமே காரணம் என்றில்லை. அதிகம் பிரச்சினைகளுக்கு அவர்களும் ஒரு காரணம் என்பதும் உண்மைதானே.
யதார்த்தைத்தான் சொன்னேன் என்று நினைக்கிறேன்.
/*இன்னைக்கி இந்துக்க பெரும்பாலானவங்க வாழற நம்ம நாட்டுல மத்த மதத்த சேர்ந்தவங்களும் நிம்மதியா வாழறாங்கன்னா அது இந்துக்களுடைய இந்த எல்லா தெய்வங்களையும் ஏத்துக்கற குணம்தாண்டா.*/
100% உண்மை.
நல்ல கருத்தைத் தெளிவாகச் சொல் லும் கதை.
இனியும் எழுதுங்கள்.
பரமசிவம்,
kadavulinkadavul.blogspot.com
வாங்க பரமசிவம்,
நல்ல கருத்தைத் தெளிவாகச் சொல் லும் கதை.
இனியும் எழுதுங்கள்//
நன்றிங்க. என்னுடைய அனைத்து படைப்புகளுமே உண்மை நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டவைதான்.
Post a Comment