4.10.05

ஆபீஸ்ல காதல், வீட்டுல மோதல் (சிறுகதை)

(பதிவுகள் இதழில் வெளியானது)

‘மனோகர். எம்.ஏ., மானேஜர்’ என்ற போர்ட் பொருத்தப்பட்டிருந்த கதவைத் திறந்துகொண்டு வேகமாய் உள்ளே நுழைந்த குரியர் பையன் குமாரசாமி, மானேஜரும் அவருடைய பி.ஏ. காந்தமும் இருந்த கோலத்தைக் கண்டு மிரண்டுபோய் வேகமாய் வெளியே ஓடிவந்தான்.

அவன் ஓடி வருவதைப் பார்த்த பியூன் கந்தசாமி, “என்னய்யா பேயைக் கண்டாமாதிரி ஓடி வரே. என்ன விஷயம், மானேஜர் உள்ளே இல்லையா?” என்று நக்கலுடன் கேட்டான். மானேஜர் அறையில் ‘காந்தம்’ இருப்பதும் ‘காந்தத்தால் கவரப்பட்டு’ மானேஜர் சுயநினைவில்லாமல் இருப்பார் என்பதும் தெரிந்துதான் ‘குரியர்’ பையனை வேண்டுமென்றே உள்ளே அனுப்பினான்.

“என்னாய்யா இது அக்கிரமம்.” குமாரசாமிக்கு மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்கியது. “காலங்கார்த்தாலேயேவா. சே! நீங்கள்ளாம் இதை எப்படியா பார்த்துக்கிட்டிருக்கீங்க?”

“யோவ், நீ என்னத்த பார்த்துட்டு இப்ப கூவுறே? போய் ரூம் கதவைத் தட்டு. ரெண்டு பேரும் சுதாரிக்கிறதுக்கு டைம் குடுக்காம நீ உள்ளே போனா எப்பிடியா? இப்போ போய் கதவை தட்டு. போ. உன்னை உள்ளே கூப்பிடுவாங்க. உலகம் தெரியாத ஆளாருக்கியே?” கந்தசாமி ·ஆபீஸ் முழுவதும் கேட்கவேண்டுமென்று கத்திவிட்டு சிரித்தான். அங்கொன்றும் இங்கொன்றுமாக தலைகள் நிமிர்ந்து பார்த்தன. சிரித்துவிட்டு கவிழ்ந்துக்கொண்டன ‘இதெல்லாம் இங்கே சகஜமப்பா’ என்பதுபோல.

“கர்மம்டா சாமி.” தலையில் அடித்துக்கொண்டேபோய் மானேஜரின் காபின் கதவைத் தட்டினான் குமாரசாமி.. ஒரு நிமிடத்திற்கு பிறகு கதவை திறந்துக்கொண்டு வேகமாய் வந்த மிஸ். காந்தத்தை இடித்துவிடாமலிருக்க அவசரமாய் சைடில் நகர்ந்தவன் சுதாரித்துக்கொண்டு காபினுள் நுழைந்து கவரை மானேஜரிடம் நீட்டினான்.

“ஏன்யா, அங்கே வெளியே யாருமில்லாமத்தான் இந்த பிச்சாத்து கவரை உள்ளே தூக்கிக்கிட்டு வந்தியா. முக்கியமான ஒரு வேலையை முடிக்கவிடாம கெடுத்திட்டியே. ஸ்டுப்பிட்.” எரிந்து விழுந்து மானேஜரைப் பார்த்து முறைத்தான் குமாரசாமி.

“சார் யாரைப் பார்த்து ஸ்டுப்பிட்ங்கிறீங்க? வெளியே யார்கிட்டேயும் உங்க பர்ஸனல் கவரை குடுக்க முடியாது. அதான் உள்ளாற வந்தேன். அது சரி, ‘மனோகரம்மா’ பொம்பளை பேர் போட்டிருக்குது; நீங்க ஆம்பளையாயிருக்கீங்க. ஆம்பளைக்கு பொம்பளைப் பேரு வக்கிறத இப்பத்தான் பாக்கறேன்.”

“யோவ் என்னய்யா உளர்றே. மனோகரம்மாவா, இங்க கொண்டா” கவரை சட்டென்று மானேஜர் பிடுங்கி படிக்க ‘மனோகர் எம் ஏ’ என்று தன் பெயரையும் டிகிரியையும் இடைவெளியில்லாமல் அனுப்பியவர் எழுதியிருப்பதையும் அந்த பிரகஸ்பதி தன் மாமனார் என்பதையும் அறிந்துகொண்ட ‘மனோகர் எம். ஏ.’ எரிச்சலுடன் “யோவ் அது ‘மனோகர் எம்.ஏ’யா ‘மனோகரம்மா’ இல்ல. அது நான்தான். கவரைக் குடுத்துட்டு போ. சாவுக்கிராக்கி, வந்துட்டான்.” என்று கத்த குரியர் குமாரசாமி முறுக்கிக்கொண்டான்.

“சார். நான் வந்ததிலேருந்து பாக்கறேன். முதல்ல ‘ஸ்டுப்பிட்’ இப்போ சாவுக்கிராக்கியா? அனுப்பின முட்டாபயமவன் தப்பா எழுதுனா அவனைப் போயி திட்டுங்க. எதுக்கு சார் என் மேல பாய்றீங்க?”

மனோகருக்கு சிரிப்பு வந்தது. மாமனாருக்கு ‘முட்டாபயமவன்னு’ பட்டம். கரெக்ட். குரியர் குமாரசாமியைப் பார்த்து கையை நீட்டினான். “கையைக் குடுய்யா. கரெக்டா சொன்னே. இதை அனுப்பினவன் நீ சொன்னா மாதிரி ‘முட்டாப்பயமவன்’ தான்.”

தீயைத் தொட்டதைப் போல் துள்ளிக் குதித்து பின் வாங்கினான் குரியர் குமாரசாமி. “வேணாம் சார். உங்க கையைத் தொட்ட பாவம் காலங்கார்த்தால எனக்கு வேண்டாம். இன்னும் நான் நெறைய எடத்துக்கு போவோணும். இதுல ஒரு கையெழுத்த மட்டும் போடுங்க, போதும். நான் போறேன்.”

எரிச்சலுடன் அவன் நீட்டிய காகிதத்தில் கையெழுத்தைப் போட்டுவிட்டு அவன் அவசர அவசரமாய் வெளியேறுவதை பொருட்படுத்தாமல் கவரைக் கோபத்துடன் பிரித்தான். அவசரத்தில் கவருடன் சேர்த்து உள்ளேயிருந்த கடிதமும் கிழிய த்திரத்துடன் காலிங் பெல்லை அழுத்தினான்.

சிறிது நேரம் மெளனம். யாரும் வராமல் போகவே மீண்டும் ஒரு முறை அழுத்... “இதோ வந்துட்டேன் சார். கோச்சிக்காதீங்க. அந்த குரியர் பையன் ·ஆபீஸ் சீல் போடச் சொல்லி நின்னான்.. அதான்..” என்று இழுத்த கந்தசாமியை பார்த்து கத்தினான்.

“யோவ் என் பர்சனல் லெட்டருக்கு ஆபீஸ் சீல் எதுக்குய்யா? சரி ஒழிஞ்சி போகட்டும். நீ போய் இந்த லெட்டரை ஒட்டிக் கொண்டா. முட்டாத்தனமா கவரோட சேர்த்து லெட்டரையும் கிழிச்சிட்டேன்... சீக்கிரம்.”

“அதத்தான் தெனம் செய்றீங்களே..” என்ற முனகலுடன் லெட்டரை அள்ளிக்கொண்டு பியூன் ஓட மனோகர் கத்தினான் “யோவ் நீ என்ன முனகுறே.. தொலைச்சிறுவேன்.. சீக்கிரம் ஒட்டி கொண்டா..”

அவனையும் அறியாமல் வாய் நகத்தை கடிக்க ‘மாமனார் கிழம் என்ன எழுதியிருக்கும்?’ என்று யோசிக்கலானான். மாலா ஏதாவது போட்டுக் குடுத்திருப்பாளோ? இருக்கும். அவள் முறுக்கிக்கிட்டு போகும் போதே இப்படி ஏதாவது செய்வாள் என்று எதிர்பார்த்தான்.

போன வாரம் வரை மாலாவுக்கு மனோகரின் ஆபீஸ் லீலைகள் தெரியாமல் தானிருந்தது. எல்லாம் இந்த கந்தசாமியால் வந்தது. ஒரு வேளை வேண்டுமென்றே செய்தாலும் செய்திருப்பான். எமகாதகன். அவனைப் பகைத்துக் கொண்டால் ஆபத்து சார் என்று காந்தம் பலமுறை அவனை எச்சரித்திருக்கிறாள்.

போன ஞாயிற்றுக் கிழமை. ‘கல்கத்தாவிலிருந்து சேர்மன் வருகிறார், ஏர்போர்ட்டில் ரிசீவ் பண்ணி மகாலிபுரம் வரை கொண்டு போகவேண்டும்’ என்று மாலாவிடம் ‘ரீல்’ சுத்திவிட்டு காந்தத்துடன் ஜாலி டூர் போக ப்ளான் செய்து பிரபல த்ரீ ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் ‘மிஸ்டர் அன்ட் மிசர்ஸ் மனோகர்’ என்ற பெயரில் புக் செய்து அந்த விஷயத்தை காந்தத்திடம் இண்டர்காமில் கூறிக்கொண்டிருக்கும் சமயம் பார்த்து உள்ளே நுழைந்த கந்தசாமி கேட்டும் கேட்காதவன் போல் ·பைலை வைத்துவிட்டு போய்விட்டான்.

அவன் கேட்டிருக்க வாய்ப்பேயில்லை என்றுதான் மனோகர் நினைத்திருந்தான். ஞாயிற்றுக்கிழமை அவன் கிளம்பிப் போகும்வரை காத்திருந்துவிட்டு வேண்டுமென்றே ஒன்றும் தெரியாதவன் போல் வீட்டுக்கு வந்து வத்தி வைத்துவிட்டான் என்பதை அடுத்த நாள் காலை மாலா வீட்டை விட்டு வெளிநடப்பு செய்த போதுதான் அவனுக்கு தெரிந்தது!

போகட்டும், தன்னால் வந்துவிடுவாள் என்று நினைத்திருந்தான். இன்றோடு ஒரு வாரம் கிவிட்டது. சாப்பாட்டுக்கு வழியில்லாமல் அவன் திண்டாடட்டும் என்று வேலைக்காரியையும் நிறுத்திவிட்டு போயிருந்தாள் மாலா. அது மட்டுமா? பாதகி! பிரிட்ஜில் உள்ளதையும் காலி செய்து வேலைக்காரியிடமே கொடுத்தனுப்பியிருக்கிறாள் என்பதும் மாலை அவன் திரும்பி வந்தபோதுதான் தெரிந்தது. வாஷிங் மெஷின், டோஸ்டர், ஹீட்டர் எல்லாத்தையும் வேண்டுமென்றே வேலை செய்யாதபடி.. அரக்கி.. ஒரு வாரமாய் அவன் படும் பாடு அவனுக்குத்தான் தெரியும்...

‘லெட்டரை ஒட்ட இவ்வளவு நேரமா?’ எரிச்சலுடன் காலிங் பெல்லை அழுத்த யாரும் வராமல் போகவே கோபத்துடன் காபினை விட்டு வெளியே வந்தான்.
கந்தசாமி யாருடனோ கையை ஆட்டி பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு “யோவ் கந்தசாமி, அங்க என்ன பண்றே? நான் குடுத்த வேலை என்னாச்சி?” என்று கத்தினான்.

திடுக்கிட்டு திரும்பிய கந்தசாமி, “இதோ வந்துட்டேன் சார்.” என்று அவனை நோக்கி ஓடி வந்தான். “இந்தாங்க சார், உங்க லெட்டர். இந்த ஆள் உங்களை உடனே பாக்கணும்னு கலாட்டா பண்றான் சார். திருச்சிலருந்து வராறாம்.”

மனோகர் அவன் சொன்னதை காதில் வாங்கிக்கொள்ளாமல் கடிதத்தை வாங்கிக்கொண்டு தன் அறைக்கு திரும்ப, “மனோகர் சார். உங்க மாமனார் சொல்லித்தான் நான் வந்திருக்கேன்.” என்ற குரல் வந்த திசையை நோக்கி மனோகரோடு சேர்ந்து மொத்த ஆபீசும் திரும்பியது.

“வாங்க. யோவ் கந்தசாமி, ரெண்டு காபிக்கு சொல்லு.” கந்தசாமி காண்டீனை நோக்கி ஓட மனோகர் தன்னைக் காண வந்தவரை அழைத்துக் கொண்டு தன் அறைக்குள் நுழைந்தான்.

கையிலிருந்த லெட்டரை டேபிளில் போட்டுவிட்டு இருக்கையில் அமர்ந்தான்.
“சொல்லுங்க, என்ன விஷயம்?”

“சார், உங்க மாமனார் உங்க மேல ரொம்ப கோவமாயிருக்கார். மாலாம்மாதான் ஐயாவை கட்டு படுத்தி வச்சிருக்காங்க.”

“எதுக்கு?”

“என்ன சார் இப்படி கேக்கறீங்க?”

“இங்க பாருங்க... உங்க பேரு என்னன்னு சொன்னீங்க?”

“ஏகாம்பரம்”

“இங்க பாருங்க ஏகாம்பரம், மாலா இன்னும் வளரலை, ஐ மீன் மனசளவுல. யாரோ ஏதோ சொன்னாங்கன்னு கிளம்பி போயிட்டா. இங்க ·ஆபீஸ்ல நான் ரொம்ப ஸ்ட்ரிக்ட். அதனால எனக்கு வேண்டாதவன்னு நிறைய பேர் இருக்காங்க. அதுல எவனாச்சும் என்னைப் பத்தி வத்தி வச்சிருப்பான். அதையெல்லாம் நம்பி கட்டின புருஷனை சந்தேகப்பட ரம்பிச்சா... என்னால என்ன பண்ண முடியும், சொல்லுங்க?”

“நீங்க வந்து ஒரு முறை பேசினா மாலாம்மா வந்துடுவாங்கன்னு நினைக்கிறேன்.”

மனோகர் அவரையே சிறிது நேரம் பார்த்துவிட்டு பிறகு புன்னகையுடன், “எனக்கு வர்றதபத்தி ஆட்சேபனையில்லே. ஆனா அவ்வளவு தூரம் வந்துட்டு உங்க ஐயா ஏதும் விவகாரம் பண்ணா என்னால பொறுத்துக்கிட்டு இருக்க முடியாது. கல்யாணம் பண்ணி ரெண்டு வருஷம் கியும் ஒரு புருஷனுக்கு ஏத்த மணைவியா அவ இருக்கலே. அத அவகிட்ட சொல்லி புரிய வைக்க சொல்லுங்க.”

“சரி சார். நான் சொல்லி பாக்கறேன். ஆனாலும் நீங்க ஒருமுறை போன்லயாவது பேசுங்களேன்.”

“யார் கிட்ட?’

“மாலாம்மாகிட்ட பேசுனா போதும்.”

“உம், பாக்கலாம்.”

“அப்போ நான் வரேன் சார்.”

“சரி. இங்கே ·ஆபீஸ்லே யார் கிட்டேயும் பேச்சு குடுக்காதீங்க. எமகாதங்க, உங்களையே ப்ரெய்ன்வாஷ் பண்ணிடுவாங்க.”

“என்ன சார், என்ன பண்ணிடுவாங்க?”

மனோகருக்கு சிரிப்பு வந்தது. சரியான பட்டிக்காட்டான்.

“ஒன்னுமில்லை, நீங்க கிளம்புங்க.”

அவரை பாதுகாப்பாய் வாசல்வரை அழைத்துச் சென்று வழியனுப்பிவிட்டு வரும் வழியில் நிமிர்ந்து பார்த்துக்கொண்டிருந்த தலைகள் எல்லாம் சடசடவென கவிழ்வதைப் பார்த்தும் பாராததுபோல் தன் அறைக்குள் நுழைந்த மனோகர் மாமனாரிடமிருந்து வந்த கடிதத்தைப் பிரித்தான்.

கடிதத்தை மாலாதான் எழுதியிருந்தாள். நெருக்கமாய், இடைவெளியில்லாமல் இரண்டு பக்கத்துக்கு எழுதியிருந்த கடிதத்தை மேலோட்டமாய் வாசித்தவன் சுவாரசியமிழந்து அப்படியே மடித்து ப்ரீ·ப்கேசில் வைத்தான். அவனுக்கும் மாலாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டதே ஒரு எதிர்பாராமல் நடந்த விபத்து.

அப்போது அவன் திருச்சி கிளையில் அசிஸ்டென்ட் மானேஜராக வேலைக்கு சேர்ந்த புதிது. வேலையில் சேர்ந்து ஒரு மாதமிருக்கும். அவனுடைய வீட்டிலிருந்து வந்த கடிதத்தில் அம்மா தெரிந்தவர்கள் மூலமாக அவனுக்கு திரிச்சியில் ஒரு பெண் பார்த்திருப்பதாகவும் அவன் போய் பெண்ணைப் பார்த்துவிட்டு வரவேண்டுமென்றும் பெண்ணை அவனுக்கு பிடித்திருந்தால் அம்மா முறைப்படி வந்து பெண் கேட்பார்கள் என்றும் எழுதியிருந்தது.

கடிதம் வந்த நேரம் அலுவலகத்தில் அவனுடன் சக பதவியில் வேலைப் பார்க்கும் நண்பனும் இருக்கவே அவனுடைய கட்டாயத்துக்காக அந்த பெண்ணைப் போய் பார்க்கலாம் என்று முடிவெடுத்தான். தனியாய் போனால் நன்றாயிருக்காதென்று நண்பன், அவனுடைய மனைவி - மூன்று பேராய் போனால் அப சகுணம் என - அவளுடைய தங்கையையும் கூட்டிக் கொண்டு ஒரு நல்ல நாள் பொழுதில் அம்மா எழுதியிருந்த அட்ரஸைத் தேடி புறப்பட்டான்.

பெண் வீட்டாரின் அட்ரஸைத் தேடி கண்டுபிடிப்பதற்குள் இருட்டி விட, “நல்ல நேரம் போயிருச்சுங்க இனிமே போனா அவங்க என்ன நினைப்பாங்களோ. திரும்பி போய் நாளைக்கு வரலாங்களா?” என்று நண்பனின் மனைவி தயங்கினாள்.

கடவுள்தான் நண்பனின் மனைவி வழியாக அவனுக்கு அறிவுறுத்தியிருக்க வேண்டும். ஆனால் விதி யாரை விட்டது? “அதெல்லாம் பரவாயில்லீங்க. நீங்க வாங்க பாத்துட்டே போயிரலாம்.” என்று அவன் பெண் வீட்டாரின் கதவைத் தட்ட உள்ளிருந்து நாய் குலைத்தது.

சிறிது நேரம் நால்வரும் என்ன செய்வதென்று தெரியாமல் குழம்ப, கதவைத் திறந்துக் கொண்டு வந்த பெரியவர், “யார் நீங்க? என்ன வேணும்?” என்றார். அவர் அவர்களைப் பார்த்த விதமே மனோகருக்கு பிடிக்காமல், “சாரி தப்பான வீட்டுக்கு வந்துட்டோம்னு நினைக்கிறேன்.” என்று பின்வாங்கினான்.

அவனுடைய எண்ணத்தைப் புரிந்துக் கொள்ளாத நண்பன், “இல்ல மனோகர் அட்ரஸ் சரிதான். சார் இது 28/5 ம் நம்பர் தானே.” என்றான்.

“ஆமாம். உங்களுக்கு யாரைப் பார்க்கணும்?”

“இங்க மிஸ்டர். ராமனாதன்னு...”

“நான் தான். ஆனா நீங்க யாருன்னு தெரியலையே..”

“சார் இவர் பேர் மனோகர். இவரோட தாயார் இங்க மாலான்னு ஒரு பெண் இருப்பதாக ...”

“ஆமா அவ என் பொண் தான். அவளை நீங்க எதுக்கு பார்க்கணும்?”

வாசலிலேயே நிற்க வைத்து விசாரித்துக் கொண்டிருப்பது பிடிக்காமல் மனோகர் தன் நண்பனை பார்த்தான், “வாங்க சோமு போகலாம். நான் அம்மாக்கிட்டே சொல்லிடறேன் இந்த சம்மந்தம் வேண்டாம்னு.., சார் நாங்க வரோம், உங்க உபசரணைக்கு ரொம்ப நன்றி.”

சோமுவுக்கும் அந்த வயாதானவரின் நடத்தைப் பிடிக்காமல் போகவே மனோகரைப் பார்த்து தலை அசைத்தான், ‘போகலாம்’ என்பது போல்.

நால்வரும் திரும்பிப் போக முயற்சிக்க, “யார் கிட்டே பேசிக்கிட்டிருக்கீங்க? என்ன வேணுமாம்?” என்ற குரலுடன் ஒரு வயதான அம்மா வர - பெரிசின் மனைவியாயிருக்க வேண்டும் -கூடவே ஒரு இளம் பெண்ணும் வருவதைப் பார்த்தனர்.

மனோகரின் துரதிரஷ்டம் அழகான வட்ட முகத்துடன் கூடிய அந்த இளம் பெண்ணைப் பார்த்தவுடனே பிடித்துவிட்டது. உடனே அவளைப் பார்த்து, “நீங்கதான் மாலாவா?” என்றான்.

“ஆமா, நீங்க யாரு?” அவனுடைய கேள்விக்கு பதில் வயதான அம்மாவிடமிருந்து வந்தது.

“நாங்க உங்க மகளைத்தான் பார்க்க வந்தோம். இடையில இந்த பெரியவர்...” என்று அவன் இழுத்தான்.

“அப்போ உள்ளே வாங்க. என்னங்க அவங்கள உள்ளே கூட்டிட்டு வாங்க. மாலா நீ உள்ளே போ. என்ன விஷயம்னு கேட்டுட்டு உன்னைக் கூப்பிடறேன்.” பட படவென்று கட்டளையிட்ட தோரணையே அந்த வீட்டின் ஆதிக்கக்கர்த்தா யாரென்று காட்டியது.

தன் வருங்கால மாமனாரின் வரவேற்பை எதிர்பார்க்காமல் நால்வரையும் முந்திக் கொண்டு மனோகர் உள்ளே செல்ல அவனுடன் கூட வந்த மூவரும் ஒருவரையொருவர் பார்த்து புன்னகைத்தவாறு அவனைத் தொடர்ந்து வீட்டினுள் சென்றனர்.

வெளியேயிருந்து பார்த்ததை விட வீடு விசாலமாயிருந்தது. மனோகர் நம்முடைய அந்தஸ்த்துக்கு இது தேவைதானா என்று ஒரு கணம் யோசித்தான். னாலும் அந்த வட்ட முகம், ஜொலிக்கும் கண்கள், பொன் நிறம் .. அவனை கட்டிப் போட்டிருந்தது.

“உக்காருங்க. சொல்லுங்க, என்ன விஷயமா என் மகளைப் பார்க்க வந்தீங்க?” வருங்கால மாமியாரையும் வெகுவாய் பிடித்துப் போக, தான் வந்த விஷயத்தையும், தன்னைப் பற்றியும், தன் தாய் மற்றும் தன் வேலையைப் பற்றியும் சுருக்கமாக சொல்லி முடித்தான்.

சிறிது நேர மெளனத்துக்குப் பிறகு, “விசாலம், இப்போ மாலாவுக்கு கல்யாணம் பண்ணப் போறமா, என்ன?” அவனுடைய மாமனார் பேசியதைக் கேட்காதது போல் மனோகரைப் பார்த்து பாசத்துடன் புன்னகைத்த மாலாவின் தாயார், “இவர் சொல்றதை நீங்க தப்பா எடுத்துக்காதீங்க. உங்களை எனக்கு பிடிச்சிருக்கு தம்பி. உங்க கம்பெனியைப் பத்தியும் கேள்விப் பட்டிருக்கேன். நீங்க ஒரு நல்ல நாளா பார்த்து உங்க தாயாரைக் கூட்டிக்கிட்டு வாங்க. இன்னைக்கி வந்தா மாதிரி இல்லாம, முன் கூட்டி போன் பண்ணிட்டு வந்தீங்கனா நல்லாயிருக்கும். அதுக்கு முன்னாடி உங்க ஜாதகத்தைக் அனுப்பி வைங்க.” என்றார்.

“சரிங்க, ரொம்ப நன்றி. மனோகர் போலாமா?” என சோமு எழுந்திருக்க மாலாவை மீண்டும் ஒரு முறை பார்க்க முடியுமா என்று வீட்டினுள் கண்ணை செலுத்தினான். குறிப்பால் உணர்ந்தவர் போல், “மாலா ஒரு நிமிஷம் இங்கே வந்து போ.” மகளைக் கூப்பிட்ட அவனுடைய வருங்கால மாமியாரை ரொம்பவே பிடித்துப் போனது மனோகருக்கு.

அதன் பிறகு அவன் தாயுடன் அவளுடைய அண்ணா மற்றும் அவருடைய குடும்பம் என ஒரு பெரிய கும்பலோடு மீண்டும் சம்பிரதாயமாக பார்த்து எல்லோருக்கும் பிடித்து போக ஒரு சுபமுகூர்த்தத்தில் மனோகர்-மாலா திருமணம் வெகு சிறப்பாக முடிந்தது.

மனைவி அமைந்த யோகம் அவனுடைய கம்பெனி புதிதாய் சென்னையில் ஒரு கிளையைத் திறந்து அவனை மேனேஜராக்கி அனுப்பி வைத்தது.

முதலில் அவன் தனியாய் சென்னைக்கு சென்று மனைவியுடன் குடிபுக எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டு மாலாவைக் கூட்டி வர திருச்சிக்கு சென்றபோதுதான் பிரச்சினை ஆரம்பித்தது.

பிறந்து வளர்ந்த திருச்சியை விட்டு வரமாட்டேன் மாலா பிடிவாதம் பிடிக்க அதற்கு அவனுடைய மாமனாரும் துணை போனார். மாமியாரும் தன் மகளை விட்டு பிரிய மனமில்லாமல், “மாப்பிள்ளை கொஞ்ச நாளைக்கு அவ இங்கேயே இருக்கட்டுமே. உங்க வேலை உள்ளூர் வேலைன்னு நெனச்சுத்தான் என் பொண்ணை உங்களுக்கு குடுத்தேன்.” என தயங்க.. மனோகர் கோபப்பட்டான். “அப்போ மாலாவை அனுப்ப முடியாதுன்னு சொல்றீங்களா?”

மாமியார் படபடப்புடன் மறுத்தார், “ அப்படியில்லே மாப்பிள்ளே, நான் அப்படி சொல்ல வரலை. கொஞ்ச நாளைக்கு இருக்கட்டுமேன்னுதான்.”

“எத்தனை நாளைக்கு.. இல்ல மாசமா?” “நீங்க உங்க ·பீஸ் திறக்கற வேலைல மும்முரமாயிருப்பீங்களே, அதான் நான் ஒரு மூணு மாசம் அம்மாக்கூட இருந்துட்டு வரேனே..” மாலா கொஞ்சினாள்.

“இங்க பாரு மாலா இந்த சமயத்துல தான் நீ என் கூட இருக்கணும். நான் அங்கே, இங்கேன்னு ஒடி களைச்சு ராத்திரி வீட்டுக்கு வரும்போது மனைவின்னு நீ வீட்டில இருந்தா எவ்வளவு நல்லாயிருக்கும்? அத விட்டுட்டு...”

மாலா அவன் சொல்வதிலுள்ள நியாயத்தைக் கேட்டு குழம்பி நிற்க அவனுடைய மாமனார் இடையில் புகுந்தார்.

“இங்க பாருங்க மாப்பிள்ளை, நீங்க வேலை செஞ்சிதான் என் மக குப்பையைக் கொட்டணும்னு இல்ல. உங்க வேலையை விட்டுட்டு இங்கேயே இருந்துடுங்க. நம்ம பிசினஸைப் பார்த்தாலே போதும்.”

அவன் கோபத்தின் உச்சிக்கே போய் , “எது, உங்க துணிக்கடை பிசினஸையா? நான் ஒரு எம்.பி.ஏ. அதனுடைய மதிப்பு தெரியுமா உங்களுக்கு?” என்று கத்தினான்.

“எதுக்கு மாப்பிள்ளைக் கோபப்படறீங்க? நீங்க உங்க வேலையை ஒண்ணும் விட வேண்டாம். மாலா ஒரு மாசம் எங்களோட இருக்கட்டும். அதுக்கப்புறம் நானே அவளை உங்கக்கிட்ட கொண்டு விடறேன்.” மாமியாரின் முகத்திலிருந்த வேதனையைத் தள்ளிவிட முடியாமல் மனோகர் சென்னைக்கு தனியே திரும்பினான்.

காந்தத்தை முதன்முதலில் வேலைக்கான நேர்காணலில் கண்ட போதே அவனுக்கு பிடித்துப் போனது. தன் கம்பெனியின் எம்.டி. அவளுக்கு ‘க்வாலி·பிகேஷன் போறாது போலிருக்கே’ என்று தயங்கியபோது அவன் முந்திக்கொண்டு, “சார். அவங்களுக்கு நல்ல கம்யூனிகேஷன் ஸ்கில் இருக்கு. நம்ம கம்பெனி கஸ்டமர்ஸ் கிட்ட பேசி சமாளிக்க அது ரொம்ப உதவும்னு நெனக்கிறேன்.” என்றான்.

“தென் இட் இஸ் ஓகே. நாளைக்கே அப்பாயின்ட் பண்ணுங்க. று மாசம் ப்ரொபேஷன். அதுக்கப்புறம் பாத்துக்கிட்டு கன்·பர்ம் செய்யலாம். மத்தபடி ·பீஸ் ஸ்டா·ப் எல்லாம் நம்ம மத்த கிளைகள்லேயிருந்து டிரான்ஸ்·பர் பண்ணிரலாம். மும்பை எச்.ர். ஹெட் கூட இன்டராக்ட் பண்ணி அரேஞ்ச் பண்ணிருங்க. ஒரு று மாசம் கழிச்சி லோக்கல் அப்பாயின்ட்மென்ட் பாத்துக்கலாம். ஆல் தி பெஸ்ட்.”

‘நாளைக்கென்ன இன்னைக்கே அப்பாயின்ட் பண்ணிரலாம்’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு எம்.டி யை வழியனுப்பிவைத்த மறு நிமிடமே காந்தத்தை வேலையில் நியமித்தான். தனக்கு இன்னும் திருமணமாகவில்லை என்று ஒரு பொய்யையும் சொல்லி வைத்தான்.

அலுவலகம் முழுவதுமாய் செயல்பட மூன்று மாதத்துக்கு மேல் எடுத்தது. இடைபட்ட அந்த காலமே ‘மோஸ்ட் எலிஜிபிள் பேச்சலர்’ என்று நினைத்து அவனை ‘பி.ஏ.’ சந்திரகாந்தம் தன்னுடைய ‘காந்த’ பவரால் தன்பால் ஈர்த்துக்கொள்ள போதுமாயிருந்தது.

தங்குத்தடையில்லாமல் நடந்துக் கொண்டிருந்த அவனுடைய லீலைகள் கழுகுக் கண்ணன் - பியூன் கந்தசாமிக்கு காந்தம் வைத்த பெயர் - கந்தசாமி வந்து சேர்ந்தபின் கொஞ்சம் தடைபட்டதென்னவோ உண்மைதான்.

கோயம்புத்தூர் கிளையிலிருந்து மாற்றலாகி மனைவி மற்றும் குழந்தைகளை விட்டு பிரிய வேண்டிய சூழ்நிலையை உண்டாக்கிய மனோகரை ஆரம்பமுதலே அவனுக்கு கட்டோடு பிடிக்காமல் போனது.

‘மானேஜருக்கு கல்யாணம் ஆயிருச்சுங்க. மனைவி திருச்சியிலிருந்து வர மறுத்ததால் தான் அவரு தனியாய் இருக்கிறார். மற்றபடி நீங்க நெனைக்கிறது போல அவர் பிரம்மச்சாரியில்லீங்க’ என்று சென்னைக்கு வந்த ஒரே வாரத்தில் புலனாய்வு செய்து காந்தத்திடம் போட்டு கெ(¡)டுத்தான்.

‘சார். நீங்க என்னை ஏமாத்திட்டீங்க. நான் போலீஸ்ல ‘கம்ப்ளெயின்’ பண்ண போறேன்’ என்று காந்தம் பயமுறுத்தவே மிரண்டுபோன மனோகர் ‘இங்க பார் காந்தம். நான் பொய் சொன்னது தப்பு தான். னா உன் மேல இருந்த காதல்தான் அப்படி சொல்ல வச்சிது. நீ ஒண்ணும் கவலைப் படாதே, மாலா அவ வீட்டை விட்டு வர்றதா தெரியலை. இன்னும் ஒரு மாசம், அவளை டைவர்ஸ் பண்ணிடறேன். அப்புறமென்ன, நமக்கு லைன் க்ளியராயிரும். கந்தசாமி பேச்சை நம்பாதே. அவன் சரியான ·ப்ராட். அதுக்குதானே அவனை கோயம்புத்துர்லருந்து விரட்டியடிச்சிருக்காங்க. ஒரு ஐந்தாறு மாசம் பொறுத்துக்க, அவனையும் தூக்கியடிச்சிர்றேன்.’ என்று விட்ட கதையை அவள் நம்பாவிட்டாலும் அவனைப் பகைத்துக்கொண்டால் தன்னுடைய வேலைக்கே உலை வைத்து விடுவான் என்ற பயத்தில் அவனை அனுசரித்து போக தீர்மானித்தாள். னாலும் அவனை விட்டு சற்று ஒதுங்கியே இருந்தாள்.

கந்தசாமி அதோடு நின்று விடவில்லை. மனோகரின் மாமனார் வீட்டு விலாசத்தை எப்படியோ கண்டுபிடித்து அவன் ஆபீசில் நடத்தும் லீலைகளை சூசகமாய் எழுதிப் போட அலறியடித்துக் கொண்டு ஓடி வந்தாள் மாலா.

மாலாவின் வருகை மனோகரின் நடவடிக்கைகளில் தற்காலிக மாற்றத்தை ஏற்படுத்தினாலும், மாலா அவனை அறவே நம்ப மறுத்தாள். தான் அவனை நம்பி மோசம் போய்விட்டதாகவும், அவன் சென்னை வேலையை விட்டு விட்டு திருச்சிக்கே தன்னோடு திரும்பிவிட வேண்டும் என்று நச்சரிக்க துவங்கினாள்.

அவளுடைய நச்சரிப்பைத் தவிர்க்க நேரத்துக்கு வீட்டுக்கு திரும்புவதை நிறுத்திக் கொண்டான். மனோகர்-மாலா உறவில் ஏற்பட்ட விரிசல் மனோகர்-காந்தம் தொடர்பு மீண்டும் துளிர்க்க துவங்கியது.

கணவனின் அலட்சியம் மாலாவை ஆரம்பத்தில் பாதிக்கவில்லையென்றாலும் நாளாக நாளாக அவளுடைய நடவடிக்கைகளில் மாற்றத்தை ஏற்படுத்தியது. கணவன் வரும் வரை சாப்பிடாமல் காத்திருப்பவள் பின்பு அவனுடைய உணவை டைனிங் டேபிளில் எடுத்து வைத்து விட்டு உறங்க ரம்பித்தாள். பிறகு அதையும் நிறுத்தினாள். நேரம் கழித்து வந்தால் பட்டினிதான் என்ற சூழ்நிலை வந்தால் கணவன் நேரத்திற்கு வர ரம்பிப்பான் என்று நினைத்தாள். ஆனால் அவனோ வெளியே சாப்பிட்டு விட்டு இன்னும் நேரம் கழித்து வர ஆரம்பித்தான்.

ஞாயிற்றுக்கிழமைகளிலும் வீட்டில் தங்குவதைக் குறைத்துக் கொண்டு தன் பி.ஏ. காந்தத்துடன் ஊர் சுற்ற ரம்பித்தான். ·பீஸ் பியூன் கந்தசாமி வழியாக தன் கணவரின் ·பீஸ் லீலைகளை அவ்வப்போது கேட்டு அறிந்தவள் அவர்கள் இருவரும் தனியாய் ஹோட்டலில் தங்க ரம்பித்ததை அறிந்ததும் இனி பொறுத்து பயனில்லை என்று தீர்மானித்து தனியாக தாய் வீடு திரும்புவது என்று முடிவெடுத்து திருச்சிக்கு தொலைபேசி செய்து தெரிவித்தாள். தாய் முதலில் எதிர்த்தாலும் தந்தை குறுக்கிட்டு ‘நான் நம்ம மானேஜரை அனுப்பறேன். புறப்பட்டு வந்துடுமா’ என அனுமதி அளிக்க, போவதற்கு முன் வேலைக்காரியை நிறுத்தினாள். கணவனுக்கு அதிகபட்சம் அசெளகரியங்களை ஏற்படுத்த வேண்டும் என்று நினைத்தவளாய் பிரிட்ஜ், டோஸ்டர், ஓவன், பாத்ரூம் ஹீட்டர் என எல்லாவற்றையும் கெடுத்துவைத்தாள்.

அடுத்த நாள், மனோகர் ·பீசுக்கு புறப்பட்டு போனதும் திருச்சியிலிருந்து வந்த மானேஜருடன் புறப்பட்டு போனாள்.

இன்றோடு ஒருவாரம் ஆகிவிட்டது.

பழைய நினைவுகளில் மூழ்கியிருந்த மனோகர் டேபிளிலிருந்த இன்டர்காம் அலற திடுக்கிட்டு எடுத்து ‘ஹலோ’ என்றான்.

“நான் தாங்க மாலா பேசறேன்.” ஊரிலிருந்து வந்தவர் தொலைபேசியிலேயே விஷயத்தை விவரித்திருக்க வேண்டும் என்று ஊகித்தான்.

“சொல்லு.”

“என்ன முடிவெடுத்திருக்கீங்க?”

“எதைப் பத்தி?”

“என்ன நீங்க? என் லெட்டரைப் படிக்கலையா?”

“முழுசும் படிக்கலை. நீ சொல்லு, என்னன்னு முடிவெடுக்கணும்?”

“உங்களுக்கு நான் வேணும்னா உங்க வேலையை விட்டுடணும். என்ன சொல்றீங்க?”

“விட்டுட்டு? உங்க அப்பா துணிக்கடையில வந்து உக்கார சொல்றியா? அது மட்டும் நடக்காது.”

“உங்களுக்கு பிடிக்கலைனா அது வேண்டாம். உங்க கம்பெனியில பண்றமாதிரியே டீலர்ஷிப் எடுத்து நீங்க தனியா செய்யலாம்னு அப்பா சொல்றார்.”

“நான் யோசிச்சி சொல்றேன்.”

“சரி. இனியும் ஒரு விஷயமிருக்கு.”

“சொல்லு.”

“அத்தையும் நம்ம கூட வந்து இருக்கேன்னு சொல்றாங்க.”

மனோகர் திடுக்கிட்டு போனான், “யாரு? அம்மாவா?”

“ஆமாம்.”

“அவங்களுக்கெப்படி தெரியும் நீ அங்கே இருக்கறது?”

“அம்மாவும் அப்பாவும் நேத்து அங்க போயிருந்தாங்க. நான் தடுத்தும் அவங்க கேக்கலை.”

சிறிது நேரம் மனோகர் ஒன்றும் பேசாமலிருக்கவே, “அத்தை அநேகமா உங்கள இன்னைக்கு கூப்பிடுவாங்க. நல்ல முடிவா எடுங்க. நான் வச்சிடறேன்.”

தொலைப் பேசியை வைத்து விட்டு இருக்கையில் அமர்ந்தவன் ‘இப்போது என்ன செய்யலாம்’ என ஆலோசிக்கலானான்.

கதவைத் திறந்துக் கொண்டு பி.ஏ. உள்ளே வருவது தெரிந்தது. அவளுடன் பேசிக்கொண்டிருக்கும் போது அம்மாவிடமிருந்து ·போன் வந்தால் பிரச்சினையாகிவிடுமே என்ற எண்ணத்தில் “என்ன?” என்றான் எரிச்சலுடன்.
“நான் இப்போ உன் கிட்ட பேசறே மூடுல இல்ல காந்தம். சாரி.”

“நீங்க பேச வேண்டாம் சார். எனக்கு கொஞ்சம் பணம் வேணும். அத மட்டும் கொடுத்துடுங்க நான் போயிடறேன்.”

பொங்கி வந்த கோபத்தைக் கட்டுபடுத்திக் கொண்ட மனோகர், “பணமா? போன வாரந்தானே பத்தாயிரம் கொடுத்தேன்.” என்றான் பொறுமையுடன்.

“சரிதான். நான் இல்லேங்கலையே. இன்னைக்கு ஐம்பதாயிரம் வேணும். தங்கைக்கு ஒரு வேலை கிடைச்சிருக்கு. அதுக்கு டெப்பாசிட் கேக்கறாங்க. அதான் .. உங்களை விட்டா எனக்கு வேற யாரு இருக்கா? ”

“இங்க பார் காந்தம். எங்கிட்ட சுத்தமா பணம் இல்லை. அடுத்த வாரம் பாக்கலாம். இப்போ என்னைத் தனியா விடு.” எப்படியாவது அவள் அங்கிருந்து போனால் போதும் என்றிருந்தது.

“சரி. இப்போ போறேன். அடுத்த வாரம் வரை தான் பார்ப்பேன். அப்பவும் சாக்கு போக்கு சொன்னீங்கனா, நான் சும்மாயிருக்க மாட்டேன். அப்புறம் வீணா வருத்தப்பட வேண்டியிருக்கும். சொல்லிட்டேன்.”

அவளுடைய குரலில் இருந்த மிரட்டல் தொணி அவனைச் சிந்திக்க வைத்தது. இவளுடைய சிநேகம் தன்னை ஆபத்திற்கே அழைத்துச் செல்லும் என்பதை அப்போதுதான் முதன் முதலாக உணர்ந்தான்.

தொலைபேசி அடிக்கவே எடுத்தான். அம்மாவின் குரல்.

“டேய் மனோ எப்படியிருக்கே? ஏன் ரொம்ப நாளா ·போனும் செய்யலை, லெட்டரும் போடலை?”

“ஒண்ணுமில்லேம்மா. கொஞ்சம் வேலையாயிருந்துட்டேன்.”

“போதும், போதும் நீ வேலை செஞ்சது. எல்லாம் கேள்விப் பட்டேன். உங்கப்பாருக்கு பிள்ளையாடா நீ? அந்த மனுஷன் பேரையே கெடுத்திட்டியே!” தன் தாயின் அழுகைக்குரலை நினைவு தெரிந்து நாள் முதல் கேட்டிராத மனோகர் என்ன சொல்வது என்று தெரியாமல் தடுமாறினான்.

“ஒண்ணும் சொல்ல முடியலையில்லே? மாமா நாளைக்கு புறப்பட்டு அங்கன வருவாரு. நீ மூட்டை முடிச்சையெல்லாம் கட்டிக்கிட்டு அவர் கூடவே திருச்சிக்கு வந்து சேரோணும். இதுக்கு நீ ஒத்துக்கலைன்றால் உங்கம்மாவோட சாவு செய்தி தான் வரும். நான் வச்சிடறேன்.”

சட்டென்று துண்டிக்கப் பட்ட தொலைபேசியை கையிலேயே பிடித்துக் கொண்டு பிரமைப் பிடித்தவன் போல் உட்கார்ந்திருந்தான் மனோகர் நேரம் போனதே தெரியாமல்.

“சார் நாங்க எல்லோரும் கிளம்புட்டுங்களா? மணி எட்டாகுது” என்று குரல் கேட்டு நிமிர்ந்தவன் தன் முன் பவ்யத்துடன் நிற்கும் கந்தசாமியைப் பார்த்தான்.

எல்லாம் இவனால் வந்தது. இருந்தாலும் கோபப்பட்டு பயனில்லை. “நீங்க போங்க. எங்கிட்ட சாவியிருக்கு.” என்று அனுப்பி வைத்துவிட்டு தன் முன்னாலிருந்த கம்ப்யூட்டரில் தன்னுடைய ராஜுனாமா கடிதத்தை தயாரிக்கத் தொடங்கினான்.
******************
















2 comments:

டிபிஆர்.ஜோசப் said...
This comment has been removed by a blog administrator.
டிபிஆர்.ஜோசப் said...

என் பெயரை உபயோகித்து என்னுடைய கதையை யாரோ குறும்பு செய்திருக்கிறார்கள். என் அலுவலக நண்பர்களாய்த்தான் இருக்கவேண்டும்.


வீட்டில் என் வீட்டுக்காரி பார்த்திருந்தால் என் கதி அதோகதிதான்!



அதனால்தான் நீக்கிவிட்டேன்.