3.10.05

புதுவாழ்வு (சிறுகதை)

(பதிவுகள் மின்சஞ்சிகை செப்.05 இதழில் வெளியானது)

அந்த அலுவலகத்திற்குள் சாந்தி நுழையும்பொழுதே ஒரு இனிமையான, அமைதியான சூழலை உள்ளுக்குள் உணர்ந்தாள்.

இப்போது அவளுக்கு இந்த இரண்டு அனுபவங்களும்தான் தேவைப்பட்டன. அமைதி. அதனால் கிடைக்கும் இனிமையான சந்தோஷம். உள்ளுக்குள் அமைதி.. ஒரு இன்பமான, சுகமான உணர்வு. மரத்துப்போன தன்னுடைய இதயத்தினுள் ஒரு இன்ப ஊற்று சுரக்காதா என்று எத்தனை மாதங்களாக ஏங்கியிருக்கிறாள்? தன் திருமண வாழ்வில் ஏற்பட்டுள்ள தடுமாற்றத்திற்கு இந்த அலுவலகத்தில் தீர்வு கிடைக்கப்போகிறதா?

‘மாரேஜ் ரிசர்ச் பியூரோ’. இங்கே திருமண வாழ்க்கையை ராய்ச்சி செய்கிறார்களா? திருமணம் என்பது இரு மனங்களின் சங்கமம் என்றுதானே கேள்விப்பட்டிருக்கிறோம்.. அதில் இவர்கள் எதை ராய்ச்சி செய்கிறார்கள்? மனித மனங்களையா? அல்லது மேல்வாரியான ண், பெண் ஜோடி பொருத்தத்தையா? ஒரு வெற்றிகரமான திருமண வாழ்க்கைக்கு இந்த உடல்ரீதியான அல்லது மனரீதியான ஜோடிப் பொருத்தம் எந்த அளவுக்கு அவசியம்?

அப்படி பார்க்கப் போனால் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் எந்த அளவிலும் பொருத்தமில்லையே.. அப்பா படித்து முடித்த பட்டங்களே அவருடைய பெயருக்கு பின்னால் இரண்டு முழ நீளத்துக்கு இருந்தது. ஒரு மிகப்பெரிய எம்.என்.சியின் எச்.ர் - மனிதவள மேம்பாட்டு ராய்ச்சி குழுவின் தலைவர் பதவி. அம்மா வெறும் எட்டாம் கிளாஸ். பாஸா, பெயிலா? அப்பா அடிக்கடி அம்மாவை சீண்ட பயன்படுத்தும் டெக்னிக் இது.
ஆனாலும் அவர்களிடையே எத்தனை அந்நியோன்னியம், நெருக்கம் இருந்தது! அப்பா இறந்த வெகு சில நாட்களிலேயே அம்மாவும் மரித்துப் போனாளே! ‘அப்பாவைப் பிரிந்து என்னால ஒரு நாள், ஏன் ஒரு நிமிஷம் கூட இந்த உலகத்துல இருக்க முடியாது’ன்னு தனித்திருந்த ஒருசில நாட்களிலும் அழுதுக்கொண்டே இருந்தார்களே! அதுதான் தாம்பத்தியமா?
சாந்திக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து அவளுடைய அப்பா, அம்மாவுக்கிடையே ஒருமுறைக் கூட அபிப்பிராய வித்தியாசம் ஏற்பட்டு அதனால் சச்சரவோ, சண்டையோ வீட்டில் நடந்து பார்த்ததேயில்லை. அப்பா அத்தனை படித்திருந்தும், அத்தனை வசதிகளும், அந்தஸ்த்தும், அதிகாரமும் கொண்ட பதவியில் இருந்தும் வீட்டிற்கு வந்தவுடன் அம்மாவுடன் சமையலறையில் தரையிலமர்ந்து அவளுடைய சமையல் வேலைகளில் பங்கு போட்டுக்கொண்டு செய்யும் பாங்கு..
‘யாருக்கு கிடைக்கும்டி இந்த மாதிரி புருஷன்! சுவாமி வரம் குடுக்கணும்டி..! நா ஒண்ணும் படிக்காத பட்டிக்காடு.. இருந்தாலும் என்னை அவரோட எல்லா ஆபீஸ் பார்ட்டிகளுக்கும் கூட்டிக்கிட்டு போயி இவங்கதான் என்னோட எச்.ர் ஹெட்டுன்னு பெருமையா அறிமுகப்படுத்துவாரு. னா அப்பல்லாம் அவரோட நண்பர்களுடைய முகத்துல தெரியர குழப்பத்தையும் ஒருவிதமான ஆச்சரியத்தையும் பாக்குறப்போ ஐயோ என்னால இவரோட அந்தஸ்த்தே கீழே இறங்கிப்போறதேன்னு தோணும்.. வீட்டுக்கு வந்ததும் ஏங்க உங்க பார்ட்டிக்கெல்லாம் என்னைக் கூட்டிக்கிட்டு போறீங்க, நீங்க என்னை அறிமுகம் படுத்தினவுடனே அவங்க பார்க்கற பார்வையில நான் கூனிக்குறுகி போறேங்கன்னு சொல்வேன்.
அதுக்கு அவரு ‘போடி பைத்தியம். அவனுங்களுக்கெல்லாம் என்னைப் பார்த்தா பயம்டி.. என்னோட அறிவுல.. என்னோட திறமையில.. எப்படி இவனால மட்டும் ஒரு டென்ஷனும், பரபரப்பும் இல்லாம எல்லா விஷயத்திலும் எப்பவும் சரியான முடிவை அதுவும் இவ்வளவு சீக்கிரமா எடுக்க முடியுதுன்னு ச்சரியம், பொறாமை! அப்படின்னு சொல்லுவார்.
நானும் எப்படிங்க உங்களால அது முடியுதும்பேன். அப்போல்லாம் உங்கப்பா என்ன சொல்வார் தெரியுமா சாந்தி? எல்லாம் உன்னைப் பார்த்து கத்துக்கறதுதான்ம்பார். என்னது? என்னைப் பார்த்தாம்பேன். அதுக்கு அவர் சிரிச்சிக்கிட்டே சொல்வார்.. நான் டெய்லி வீட்டுக்கு வந்திட்டேன்னா நான் உன்னையேதானே சுத்தி சுத்தி வரேன். நீ வீட்ல சம்பளம் வாங்காம செய்றதைத்தான் நான் சம்பளத்தை வாங்கிக்கிட்டு அங்க செய்றேன். என்ன விளங்கலையா? நீ வீட்டு விஷயத்துல என்னைக் கேட்டு ஏதாச்சும் செய்திருக்கியா? இந்த வீட்ல என்ன நடக்கறது.. சாந்தி என்ன சாப்பிடறா, என்ன உடுத்தறா, அவளுக்கு என்னைக்கி, என்ன பரீட்சை.. வீட்ல என்ன சாமான் இருக்கு, என்ன சாமான், எப்போ வாங்கணும், எவ்வளவு வாங்கணும், இப்படி கரெக்டா என்னோட எந்தவித உதவியும் இல்லாம நான் மாசா மாசம் வீட்டு செலவுக்குன்னு குடுக்கற தொகையிலேயே நீ செஞ்சி முடிக்கறயே அதெல்லாம் நீ எந்த ஸ்கூல்ல படிச்சே..? வெறுமனே உங்க வீட்ல நடக்கறத பார்த்து பார்த்து படிச்சிக்கிட்டதுதானே..
நான் ·பீஸ்லருந்து வரும்போது நான் என்ன மனநிலையில வரேன்னு புரிஞ்சிக்கிட்டு அதுக்கேத்த மாதிரி இத்தனை வருஷமா நடந்துக்கறியே இது எப்படி உன்னால முடியுது? அதத்தான் நான் ·பீஸ்ல ஏதாவது ஒரு பிரச்சினை வந்தா நினைச்சிப்பேன். சட்டுன்னு பிரச்சினைக்கு தீர்வு மனசுல வந்துடும். அத இவனுங்கல்லாம் பார்த்து ச்சரியப்படுவானுங்க. அதனாலத்தானேடி காலங்காலமா சொல்லிக்கிட்டு வராங்க, பெஞ்சாதி அமைவதெல்லாம் கடவுளோட ப்ராப்தம்னு.. நீதான் எனக்கு குரு.. நீ வீட்ல என்ன செய்யறயோ அதையேத்தான் நான் ·பீஸ்ல செய்யறேன்.. இதுக்கு எனக்கு பேரு, புகழ்.. எல்லாம் வெறும் பம்மாத்து வேலைதான்.. விட்டுத்தள்ளு’ன்னு பெரிசா நீட்டி பேசுவார்.. எனக்கு அத கேக்கும்போது அழுகையே வந்துடும்..
‘அம்மா இதை சொல்லும்போது நானே அழுதிருக்கேனே..’ இப்போது நினைத்துக்கொள்ளும்போதே சாந்தியின் கண்கள் அவளையுமறியாமல் கலங்கி குளமாயின.. சுற்றிலும் பார்த்துவிட்டு கண்களைத் துடைத்துகொண்டாள்.
இப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்தவர்கள் தன்னுடை திருமண விஷயத்தில் மட்டும் எப்படி தவறிப்போனார்கள்? முப்பது வயதுவரை திருமணமே வேண்டாம் என்று இருந்தவளை ஏன் நிர்ப்பந்தித்து ஒரு பாந்தமில்லாத பந்தத்தை ஏற்படுத்திக் கொடுத்தார்கள்? எல்லாவற்றுக்கும் அம்மாத்தான் காரணம். அவளுடைய திருமண பேச்சை அம்மா கடைசி முறையாக எடுத்தபோது அவள் ‘என்னை இப்படியே விட்டுறேம்மா’ன்னு கெஞ்சினாள். அப்பாவும் ‘அவளோட முடிவுக்கே அவளை விட்டுவிடேன்..’ என்றுதான் சொன்னார்.
ஆனால் அம்மா பிடிவாதமாக சொன்னாள். “நீங்க சொன்னத இதுவரை எந்த விஷயத்திலும் நான் தட்டிப் பேசினதில்லைங்க. ஏன்னா நீங்க எப்பவுமே சரியாத்தான் செஞ்சிருக்கீங்க, பேசியிருக்கீங்க.. னா சாந்தியோட படிப்பு விஷயத்திலும் சரி, இப்போ அவ கல்யாண விஷயத்துலயும் சரி உங்க முடிவுக்கு நான் ஒத்துக்க மாட்டேன்கறேன்னா அதுக்கு காரணம் இருக்குங்க.. நமக்கு இருக்கறதே ஒரே பொண்ணு. நம்ம காலத்துக்கப்புறம் அவ தன்னந்தனியா நிக்கணுமா? யோசிச்சிப் பாருங்க.. நீங்களும் சரி, நானும் சரி, நம்ம வீட்டுக்கு ஒரே பிள்ளைங்க.. நாமளே நம்ம அப்பா, அம்மா சாவுக்கப்புறம் தனியா நின்னோமே.. அப்ப நான் எவ்வளவு மனசு கஷ்டப்பட்டு அழுதிருக்கேன் தெரியுமா..? எனக்கு நீங்களும் சாந்தியும் இருந்தீங்க.. அவளுக்கு இப்ப நாம இருக்கோம்.. நமக்கப்புறம் அவளுக்கு..?”
அம்மாவின் வாதத்திலிருந்த நியாயத்தை உணர்ந்த அப்பா.. ‘அம்மா சொல்றா மாதிரி கேளுடா, ப்ளீஸ்’ என்று சாந்தியின் தலை முடியைக் கோதியவாறே கேட்டபோது தவிர்க்கவியலாமல் ஒத்துக்கொண்டதன் விளைவு...
சாந்தி தன் வாழ்க்கையின் முன்மாதிரியாக தன் தந்தையைத்தான் வைத்திருந்தாள். அவர் சென்ற பாதையிலேயே போக விருப்பப்பட்டு பட்டப் படிப்பு முடிந்தவுடன் மனிதவளம், மனிதஉறவு என்ற பிரிவுகளில் ராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் பெற்றாள். அவள் விருப்பம் போலவே சென்னையிலேயே பிரசித்திப்பெற்ற கனரக தொழிற்சாலை ஒன்றில் எச்.ர் துணைத்தலைவராக வேலை கிடைத்தது. அப்போது அவளுக்கு வயது 28.
தன்னுடைய வாழ்வின் லட்சியம் நிறைவேறிய திருப்தியில் தன்னுடைய அலுவலக வேலைகளை அனுபவித்து செய்ததன் விளைவு மிக விரைவிலேயே அவள் எல்லோருடைய கவனத்தையும் கவர்ந்தாள். தொழிற்சங்கத் தலைவர்களை அவள் கையாண்ட விதம், தொழிற்சாலையில் ஊழியர்களுக்கிடையே அவ்வப்போது ஏற்படும் சில்லறைப் பிரச்சினைகள் பெரிதாய் உருவெடுக்கும் முன்பே தானாகத் தலையிட்டு தீர்வு கண்ட பாங்கு அவளை இரண்டு வருடங்களிலேயே தலைவர் அந்தஸ்த்துக்கு உயர்த்தியதோடு கம்பெனியின் போர்டில் ஒரு அங்கத்தினர் கவுரவத்தையும் பெற்றுத் தந்தது.
“அட் 30 யூ ஹேவ் பிகம் அ போர்ட் மெம்பர்? வாவ்.. அப்பாவுக்கு உன்னைப் பார்த்தா பெருமையா இருக்குடா.” என்று அப்பா முகம் நிறைய சிரிப்புடன் அவளைப் பாராட்டிய போது பெருமையாயிருந்தது..
ஆனால் அம்மா அவளுடைய பதவி உயர்வைப் பற்றி அறிந்தும் ஒன்றும் பேசாமல் இருந்தது அவளுக்கு வருத்தம்தான். “ஏம்மா உங்களுக்கு சந்தோஷமில்லையா?” என்றாள் ஒருநாள்.
அம்மா அமைதியாக சாந்தியைப் பார்த்தாள். “சாந்தி, நான் சந்தோஷப்படணும்னா நான் சொல்றதை நீ செய்யணும்.”
சாந்திக்கு அம்மா என்ன சொல்ல வருகிறாள் என்று தெரிந்திருந்தும்,
“சொல்லுங்கம்மா என்ன செய்யணும்?” என்றாள்.
“நீ கல்யாணம் பண்ணிக்கணும்.. அப்பத்தான் உன் வாழ்க்கைல ஒரு அர்த்தமிருக்கும்.. சந்தோஷமிருக்கும். செய்வியா?”
“ஏம்மா அப்படி சொல்றீங்க? நான் இப்போ சந்தோஷமாத்தானே இருக்கேன்..”
“இல்லடி.. நான் சொல்ற சந்தோஷம் வேறே.. இப்ப நீ சந்தோஷம்னு சொல்றது சாயந்திரம் அஞ்சு மணியோட முடிஞ்சிப்போற சந்தோஷம். நீ மத்தவங்களோட பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கிம்போது கிடைக்கற சந்தோஷம் தற்காலிகமானது.. னா நான் சொல்ற சந்தோஷம் வேற. எனக்குன்னு நீ, உங்கப்பா இருக்கறாமாதிரி உனக்கும், ஒரு புருஷன், ஒரு குழந்தைன்னு ஒரு குடும்பம் வேணும்.. அந்த சந்தோஷம்தான் நிரந்தரம்.. உனக்கு கம்பெனியில கிடைக்கற சந்தோஷத்தைப் பகிர்ந்துக்கறதுக்கு வீட்ல ஆள் வேணுமேடி.. நீ ஒத்த ளா நின்னா என்ன பிரயோசனம்..?”
“அதுக்குதான் அப்பாவும் நீங்களும் இருக்கீங்களே!”
“எங்க காலத்துக்கப்புறம்?”
“அம்மா உனக்கு அம்பது வயசுதான் குது.. இதுக்குள்ள ஏம்மா..? உங்க ரெண்டு பேருக்கும் ஒண்ணும் வராது... எனக்கு கல்யாணம், குழந்தைன்னு ஒண்ணும் வேண்டாம்மா.. எனக்கு இப்படி இருக்கறதுதான் பிடிச்சிருக்கு.. என்னைக் கட்டாயப்படுத்தாதே..”
அம்மா கேட்கவில்லை.. அப்பாவும் சிறிது நேர வாக்குவாதத்துக்குப் பிறகு அம்மாவுடன் சேர்ந்துக்கொண்டு அவளைக் கட்டாயபபடுத்த ரம்பித்தபோது அவளால் ஒன்றும் செய்ய முடியவில்லை...
சங்கருக்கும் அவளுக்கும் திருமணம் முடிந்து முதல் இரண்டு, மூன்று மாதங்கள் அவர்கள் வாழ்க்கை சீராகத்தான் சென்றுக்கொண்டிருந்தது..
சங்கர் பொருளாதரத்தில் டாக்டர் பட்டம் பெற்று சென்னைக் கல்லூரி ஒன்றில் விரிவுரையாளராக இருந்தான்...
‘ஆசிரியர்கள் வெளியிலும் சரி, வீட்டிலும் சரி சிரியர் மனநிலையில்தான் இருப்பாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன். உங்க வீட்ல எப்படி?’ என்று அவளுடன் பணிபுரிந்த சக அதிகாரி வேடிக்கையாக ஒருநாள் கேட்டபோது அவள் ‘அப்படி ஒண்ணுமில்லையே..’ என்று சிரித்தவாறு பதிலளித்தாலும்.. அந்த கேள்வி எத்தனை சத்தியமானது என்று நாட்கள் செல்ல, செல்ல சாந்தி உணரலானாள்..
சங்கர் தான் எடுக்கும் முடிவில் உறுதியாய் நின்று தன் கணவன் சொல்வதைத் தட்டாமல் கேட்கும் மனைவியாய் சாந்தி இருக்கவேண்டும் என்று நினைத்தான்...
அலுவலகத்தில் சக அதிகாரிகளையும் கம்பெனி சேர்மனையும் மிகவும் கவர்ந்த அவளுடைய அபிரிதமான அறிவாற்றல், முடிவெடுக்கும் திறன் சங்கரின் முன்னே ஒன்றுமில்லாமல் அடிபட்டுப்போனது. முக்கியமான விஷயங்களிலும் கூட அவளைக் கலக்காமல் முடிவெடுக்க ரம்பித்தபோது அவளால் சகித்துக் கொள்ள முடியாமல் போனது..
திருமணம் ஆன முதல் நாளே ‘நமக்கு இப்போதைக்கு குழந்தை வேண்டாம்னு நான் முடிவு பண்ணிட்டேன் சாந்தி. ஒரு அஞ்சு வருஷம் போகட்டும்.’ என்றான். அவன் குரலில் இருந்த அந்த உறுதி அவளுடைய ஒப்புதல் முக்கியமில்லை என்பதுபோல் இருந்தது.
அவளுக்கு குழந்தைகள் என்றால் அவ்வளவு ஒன்றும் விருப்பமில்லைதான்.. ஏன், இந்த திருமணத்தையே அம்மாவின் கட்டாயத்தில்தான் செய்துக்கொண்டாள்.. இருந்தாலும்.. திருமணம் என்றாகிவிட்ட பிறகு.. குழந்தை என்பது ஒரு முக்கியமான அம்சம்தானே.. அதற்கு தம்பதிகளிருவரும் சேர்ந்து முடிவெடுக்கவேண்டும் என்றுகூட சங்கருக்கு தோன்றவில்லையே.. இருந்தாலும் திருமணமான முதல் நாளே சர்ச்சை வேண்டாம் என்று
அவனுடைய முடிவை மோதிப்பதுபோல் மெளனமாயிருந்துவிட்டாள்.
வேறொரு நாள், ‘சாந்தி நாம எல்லா சனி, ஞாயிறும் உங்கப்பா, அம்மாவைப் பார்க்கப் போக வேண்டாம்னு டிசைட் பண்ணியிருக்கேன். மாசம் ஒருமுறைப் போனாப் போறும்.’ என்றான்.
அந்த முடிவுக்கும் எதிர்ப்பு சொல்லாமல் மெளனமாய் சம்மதித்தாள். அப்பாக்கிட்ட தொலைப்பேசியில் தினம்தோறும்தான் பேசிக்கொள்கிறோமே என்ற நினைப்பில். அம்மா நேரிலேயே அதிகம் பேசமாட்டாள்.. சாந்தியும் சங்கரும் வார இறுதி நாட்களில் செல்லும்போதுகூட மருமகனின் முன்னால் வர வெட்கப்பட்டுக்கொண்டு சமையலறையிலேயே இருப்பாள். சாந்தியாய் போய் சமையல் வேலையில் உதவி செய்யும் சாக்கில் பேச்சுக்கொடுத்தாலும்.. ‘நீ போய் மாப்பிள்ளைக்கிட்டே பேசிக்கிட்டிரு போ.. நான் பார்த்துக்கறேன்..’ என்று விரட்டி விடுவாள்.
ஆனால் சங்கர் மட்டும் தினந்தோறும் கல்லூரி விட்டதும் தன் தாய், தந்தையரைப் போய் பார்த்துவிட்டுதான் வீட்டுக்கு வருகிறான் என்று அறிந்தபோது அவனுடைய இரட்டை வேடத்தை நினைத்து கொதித்துப்போனாள்.
ஒரு நாள் திடீரென்று காலையில் ‘நீ தினந்தோறும் ராத்திரி எட்டு மணிக்கு மேல் வர்றதை இனி குறைச்சிக்கணும் சாந்தி.. நான் று மணிக்கெல்லாம் வந்துட்டு உனக்காகக் காத்திட்டிருக்க முடியாது.. அதான் இன்னைக்கி உங்க சேர்மன்கிட்ட ·போன் பண்ணி சொல்லிட்டேன்.. அவரும் என்னோட ரிக்வெஸ்ட் நியாயமானதுதான்னு ஒத்துக்கிட்டார். உன்கிட்டே பேசறேன்னு சொன்னார்.’ என்றான்.
தூக்கிவாரிப் போட்டது அவளுக்கு. என்ன அக்கிரமம் இது? ‘என் மனைவியை சீக்கிரம் வீட்டுக்கு விட்டுருங்க’ன்னு இவரு சேர்மன்கிட்ட பேசினாரா? அவளுக்கு கோபம், கோபமாய் வந்தது.. ‘உங்க பதவிக்கு நேரம், காலம் என்றெல்லாம் நிர்ணயிக்க முடியாது சாந்தி.. நீங்க எந்த நேரத்திலும் அப்ரோச்சபிளாயிருக்கணும்.. உங்க உதவி எந்த நேரத்திலும் தேவைப்படலாம்.. அது நடுராத்திரியாயிருந்தாலும்..’ அவள் போர்ட் மெம்பராக உயர்த்தப்பட்டபோது சேர்மன் சொன்ன வார்த்தைகள் இவை.. அப்படியிருக்க.. சங்கர் செய்த சிறுபிள்ளைத்தனத்தால்.. சே! அலுப்பாயிருந்தது அவளுக்கு. இன்றைக்கு சேர்மனை சந்திக்கும்போது சங்கரின் முடிவில் தனக்கு எந்த உடன்பாடும் இல்லை என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும் என்று தீர்மானித்தாள்.
இருந்தாலும் காலை நேரத்தில் சங்கரை எதிர்த்துப் பேசி நேரத்தை வீணடிக்க விரும்பாமல் மெளனமாய் புறப்பட்டுப் போனாள்..
அலுவலகம் சென்றடைந்ததும் சேர்மன் வந்துவிட்டாரா என்று விசாரித்துக்கொண்டு அவரைச் சென்று பார்த்தாள். னால் அவரோ சங்கரின் வேண்டுகோளில் எந்த குறையையும் காணாமல்.. ‘என்ன சாந்தி, திருமணத்துக்கப்புறமும் தினமும் எட்டு மணிக்கு மேல வீட்டுக்கு போனா எப்படி? எனக்கு இது முன்னமே தெரிஞ்சிருந்தா தடுத்திருப்பேன்.. நீங்க இனிமே ஆறு மணிக்கெல்லாம் சீட்டை விட்டு எழுந்திருச்சிரணும்.. கையிலதான் செல்·போன் இருக்கே? யூ கேன் கீப் இன் டச் வித் யுவர் பியூப்பில் ஹியர்..’ என்று மிகச் சாதாரணமாக பிரச்சினையை முடித்துவிட்டார். ஆனாலும் சாந்தி வழக்கம்போல் தன் அலுவலக பணிகளையெல்லாம் முடிக்காமல் வீட்டுக்கு கிளம்புவதில்லை என்பதில் உறுதியாயிருந்தாள்.
இப்படி கடந்த இரண்டு ண்டுகளில் சங்கர் எடுத்த ஒவ்வொரு முடிவுக்கும் அவள் இஷ்டமிருந்தாலும் இல்லாவிட்டாலும் மெளனமாய் இருந்ததன் விளைவு...
சென்ற மாதம் ஒரு நாள் இரவு அடுத்த நாள் நடக்கவிருந்த மீட்டிங் ஒன்றிற்கு சாந்தி மும்முரமாய் தயாரித்துக்கொண்டிருந்தபோது...
சென்னைப் புறநகரில் உருவாகவிருந்த அடுக்கு மாடி வீடுகளில் ஒன்றிற்கு முன்பதிவு செய்துவிட்டு வந்ததை மிகச்சாதாரணமாக அவளிடம் கூறியபோது அவனை வியப்புடன் பார்த்தாள் சாந்தி..
“என்னங்க இது நீங்க பாட்டுக்கு வீட்டுக்கு அட்வான்ஸ் கட்டிட்டு வந்து நிக்கறீங்க? வீடு எனக்கு பிடிக்க வேண்டாமா? அதுவும் இருபது கிலோமீட்டருக்கு தள்ளியிருக்கற இடத்துக்கு குடிபோறதுக்கு நமக்கென்ன அவசரம்? இப்படிப்பட்ட விஷயங்களுக்குக் கூட நீங்களா முடிவெடுக்கறது எப்படி நியாயம்? என்னை ஒரு வார்த்தைக் கேட்க வேணாமா?” குரலில் கோபம் ஒரு துளியுமில்லாமல் அவள் கேட்டும் அதைக்கேட்டதும் தாம் தூம் என்று குதிக்க ரம்பித்தான் சங்கர்.
“இங்க பார் சாந்தி.. எங்க வீட்லயே நான் ஒரு முடிவெடுத்தா அதுக்கு எங்க அப்பா உட்பட எல்லாரும் ஏன், எதுக்குன்னு கேட்காம சரின்னு சொல்லிருவாங்க.. நீ என்ன கேள்விமேல கேள்வியா கேக்கறே?”
“இருக்கலாங்க.. நானும் இந்த இரண்டு வருஷமா நீங்க எடுத்த எல்லா முடிவுக்கும் சம்மதிச்சித்தானே போயிருக்கேன். னா இது அப்படிப்பட்ட விஷயமில்லேங்க.. ஏன்னா அந்த வீட்ல வந்து குடியிருக்கப் போறது நான்.. தினமும் போய்வர நாற்பது கிலோமீட்டர்.. என்னால முடியாது.. எனக்கு எப்ப வேலை முடியும், எப்ப கிளம்பி வர முடியும்கறதே டெய்லி முடிவு பண்ண முடியாத வேலை என்னோடது.. இதுல ·பீஸ் முடிஞ்சி இருபது கிலோ மீட்டர் காரை ஓட்டிக்கிட்டு வரமுடியும்னு எனக்கு தோணலை..”
“ஏன், ஒரு டிரைவரை வச்சிக்கிட்டா போச்சு.. இது ஒரு பிரச்சினையே இல்லை.. நாம நாளைக்கே அங்கே போகப்போறதில்லை.. கட்டட வேலை முடியவே எப்படியும் ஒரு வருஷத்துக்குமேல யிரும்..”
“சரி.. அதிருக்கட்டும்.. பணத்துக்கு என்ன செய்வீங்க?”
“லோன் போட வேண்டியதுதான்..”
சங்கரின் குரலில் தொனித்த அலட்சியம் சாதாரணமாய் கோபப்படாத சாந்தியையும் எரிச்சலடையச் செய்தது..
“எங்க லோன் போடுவீங்க?”
“அதான் இப்ப எந்த பேங்க்ல வேணும்னாலும் தராங்களே.. அதெல்லாம் உனக்கெதுக்கு? நான் பார்த்துக்கறேன்.. நான் சொன்ன இடத்துல நீ வந்து கையெழுத்து போட்டாப் போறும். என்னோட சம்பளத்துக்கு மட்டும் அவ்வளவு பெரிய தொகை கிடைக்காதாம்.. அதனாலத்தான் உங்கிட்ட வந்து சொல்ல வேண்டிய கட்டாயம்”
“அதுசரி, இல்லன்னா இப்பக்கூட சொல்லியிருக்க மாட்டீங்க. அப்படித்தானே? எனக்கு எல்லா டீடெய்ல்சும் வேணும்.. எவ்வளவு லோன் வேணும்..? எத்தனை வருஷத்துல அடைக்கணும்..? என்ன வட்டி விகிதம்..? மாசம் எவ்வளவு அடைக்கணும்..? எல்லாம் தெரியணும்.. அப்பத்தான் இப்ப அது தேவையா இல்லையான்னு என்னால முடிவு பண்ணமுடியும். ஐ நீட் டு நோ ல் தி டிடெய்ல்ஸ்..”
சங்கர் அவளைத் திரும்பி எரித்து விடுவது போல் பார்த்தான். “ஹூ இன் தி ஹெல் டு யூ திங்க் யூ ஆர்? இது என்ன உங்க கம்பெனி போர்ட் மீட்டிங்னு நினைச்சியா? இத்தனைக் கேள்வி கேக்கறே..? அதிருக்கட்டும்.. ஒரு விஷயத்தை இப்பவே க்ளியர் பண்ணிடறேன். இந்த வீட்ல நான் தான் முடிவெடுப்பேன்.. எல்லா விஷயத்துக்கும் உன்னைக் கன்சல்ட் பண்ணிட்டுத்தான் முடிவெடுக்கணும்னா நீ நான் காலேஜ்லருந்து வரும்போது வீட்ல இருக்கணும்.. வாரத்துல ஒருநாள் மட்டும் புருஷன்கூட பேசறதுக்கு டைம் ஒதுக்க முடியறவளோட கலந்துபேசி முடிவெடுக்கணும்னா ஒவ்வொரு விஷயத்துக்கும் ஒரு வாரம் காத்துக்கிட்டிருக்கணும்.. அது என்னால முடியாது.. நான் உங்கப்பாக்கிட்ட பேசிக்கறேன்..”
சட்டென்று கிளம்பி வந்த கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் சீறினாள் சாந்தி. “இதுக்கெதுக்கு அப்பாக்கிட்ட பேசணும்கறீங்க? அவருக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?”
ஏளனத்துடன் தன்னைப் பார்த்த சங்கரை வெறுப்புடன் திருப்பி முறைத்தாள் சாந்தி. “எதுக்கு இந்த கேலிப் பார்வை..? இங்க பாருங்க சங்கர்.. நானும் ஒரு விஷயத்தைத் தெளிவா சொல்லிடறேன்.. இது நம்ம ரெண்டு பேர் மட்டும் கலந்து பேசி முடிவெடுக்க வேண்டிய விஷயம்.. சரி நான் இறங்கி வரேன்.. அடுத்த ஞாயிற்றுக்கிழமை நாம ரெண்டு பேரும் போய் அந்த இடத்தைப் பார்ப்போம்.. பிடிச்சிருந்தா மேல்கொண்டு என்ன செய்றதுன்னு முடிவு பண்ணுவோம்.. இல்லன்னா விட்டுருவோம்..”
உரக்க சிரித்தான் சங்கர்.. “விட்டுடறதா? அப்ப அட்வான்ஸா குடுத்த ரெண்டு லட்சத்தை யார் குடுக்கறது..? அட்வான்ஸா வாங்குன பணத்தையெல்லாம் பில்டர் திருப்பித் தரமாட்டான் மேடம்.. உங்களுக்கு அவ்வளவுதான் உலக விவரம்.. அதுனாலதான் உங்க கிட்ட கலந்துக்கலை..”
சாந்தி மேலே பேசமுடியாமல் அவனையே பார்த்தாள். ‘என்ன தைரியம் இந்த மனுஷனுக்கு..? ரெண்டு லட்சம் பணத்தை தன்னிடம் கலந்தாலோசிக்காமல் கொடுத்துவிட்டு வந்து... வெறும் சம்பிரதாயத்துக்காக தன்னிடம் அறிவிக்கும் இவனிடம் இனியும் தர்க்கிப்பதில் ஒன்றும் பயனில்லை என்பதால் தானும் அவனுடைய முடிவுக்கு ஒத்துபோவதைத் தவிர வேறு வழியில்லை என்று புரிந்துக்கொண்ட சாந்தி தன்னுடயை கையொப்பம் பெற அவன் வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்று மெளனமாகிப்போனாள்.
இப்படி கடந்த இரண்டு வருடங்களில் எல்லா விஷயத்திலும் அவளை உதாசீனப்படுத்தி அதில் மகிழ்ச்சியடைவதில் குறியாயிருந்த சங்கரோடு இனியும் இணைந்து வாழ்வது முடியுமா என்று நினைத்து தன் தந்தையிடம் கலந்தாலோசித்தால் தனக்கு ஒரு தெளிவு கிடைக்கும் என்ற முடிவுடன் அவளுடைய வீட்டுக்கு தொலைப்பேசியில் தொடர்பு கொண்டபோதுதான் தெரிந்தது அவளுடைய தந்தை உடல் நலம் குன்றி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மூன்று நாளாயிருந்த விஷயம்.....
“என்னம்மா சொல்றீங்க? ஏன் எனக்கு உடனே விஷயத்தைச் சொல்லலே? நீங்க தனியா எப்படி சமாளிச்சீங்க? அப்பாக்கிட்ட ·போன் வராம இருக்கும்போதே நினைச்சேன், ஏதோ பிரச்சினைன்னு.. வெளியூருக்கு போனாகூட எங்கிட்ட சொல்லாம போகமாட்டாரேன்னு.. நினைச்சேன். நானாவது கூப்பிட்டிருக்கலாம்.. ஏம்மா உங்களுக்குத்தான் என் செல் நம்பர் தெரியுமிலே.. நீங்களாவது என்னைக் கூப்பிட்டிருக்கக் கூடாது?”
“மாப்பிள்ளைக்கிட்டே சொன்னேனே சாந்தி.. உன்கிட்டே சொல்லிட்டேன்.. நீ கம்பெனியிலிருந்து வீட்டுக்கு வரும்போதே ராத்திரி ரொம்ப நேரம் யிடறது.. வாரக்கடைசியிலே ரெண்டு பேரும் சேர்ந்து வரோம்னு சொன்னாரேன்னுதான் நான் தனியா உன்னைக் கூப்பிடலை..”
அதிர்ந்து போனாள் சாந்தி.. அந்த வீடு வாங்கும் விஷயத்தில் அவள் மீது என்னதான் கோபம் இருந்தாலும்.. சே என்ன மனுஷன் இவர்..? பாவம் அம்மா. தனியாய் என்ன பாடுபட்டிருப்பாள்..?
சாந்தி ·போனை வைத்துவிட்டு கிளம்பி மருத்துவமனனக்குச் சென்றாள். அன்று இரவு தன் தாய் எத்தனை வற்புறுத்தியும் வீட்டுக்கு செல்லவோ அல்லது தொலைப்பேசியில் சங்கருக்கு விவரம் தெரிவிக்கவோ மறுத்துவிட்டாள்..
சிகிச்சைப் பலனளிக்காமல் இரண்டொரு நாட்களிலேயே மருத்துவமனையிலேயே தந்தை மரிக்க.. தன் கணவனின் பிரிவைத் தாங்கமுடியாமல் தவித்த தன் தாயின் அருகிலேயே இருக்க முடிவு செய்து தன் அலுவலகத்திற்கு தொலைப்பேசி மூலம் விடுப்புக்கு சொன்னவள் சங்கருக்கு தன் முடிவை அறிவிக்க மறுத்துவிட்டாள் சாந்தி..
சங்கரும் தன் மாமனாரின் இறுதி சடங்குகளில் மூன்றாம் மனிதனனப் போல் தன் தாய், தந்தையோடு வந்து கலந்துக்கொண்டுவிட்டு சென்றவன் சாந்தியைத் தொலைப்பேசியில் கூட ஆறுதல் சொல்லாமலிருந்துவிட்டான்..
சாந்தி எத்தனை வற்புறுத்தியும் தன் கணவனின் நினைவாகவே உண்ணவோ, குடிக்கவோ மறுத்த அவளுடைய தாயும் சில தினங்களிலேயே மரித்துப்போக அவளுடைய இறுதி சடங்குகள் முடிந்து ஒருமாதமாகியும் தன் பெற்றோரின் வீட்டிலேயே தங்கியிருந்து தன் அலுவலகத்திற்கு போய் வர ரம்பித்தாள்.
சங்கரும் தன் பெற்றோர் வற்புறுத்தியும் அவளைச் சென்று காணவோ, தொலைப்பேசியில் கூப்பிடவோ மறுத்துவிட்டான்.
“டு யூ ஹேவ் அப்பாயிண்ட்மெண்ட் வித் சம் வொன் ஹியர்..?”
திடுக்கிட்டு நிமிர்ந்த சாந்தி தன்னெதிரே நின்றவளைக் குழப்பத்துடன் பார்த்தாள்..
“யெஸ்.. என்ன கேட்டீங்க?”
“இங்க யார்கிட்டயாவது அப்பாயிண்ட்மெண்ட் வாங்கியிருக்கீங்களான்னு..”
“ஆமாம்.. டாக்டர் பிரபுதாஸ்.. பட் ஐயாம் வெய்ட்டிங் ·பார் மை ஹஸ்பெண்ட்.. அப்பாயிண்ட்மெண்ட் நாலு மணிக்குத்தான்..”
“ஓகே.. சார் ·ப்ரீயாத்தான் இருக்காங்க.. நீங்க வேணும்னா.. உங்க ஹஸ்பெண்ட் வரும்வரை.. அவர்கிட்ட பேசிக்கிட்டிருக்கலாம்..”
“யெஸ்.. தாங்க் யூ. எனக்கும் அவர்கிட்ட தனியா பேசினா நல்லதுன்னு நினைச்சேன். மிஸ்டர் சங்கர் - என் ஹஸ்பெண்ட் - வந்தார்னா வெய்ட் பண்ண சொல்லிட்டு எனக்கு இன்·பார்ம் பண்ணுங்க. ப்ளீஸ்..”
“சரி மேடம்.. நீங்க போங்க.. ரைட்ல நாலாவது ரூம். ஆல் தி பெஸ்ட்.”
“தாங்க்ஸ்..” என்ற புன்னகையுடன் எழுந்து டாக்டர் பிரபுவின் அறையை நோக்கிச் சென்றாள் சாந்தி. டாக்டர் பிரபு சாந்தியின் கம்பெனி சேர்மனின் நெருங்கிய நண்பர்..
சாந்தியின் பெற்றோர் மரணசடங்குகளுக்கு சென்றிருந்த சமயம் அவளுக்கும் சங்கருக்கும் இடையே உள்ள பிளவைக் கேள்விப்பட்ட சேர்மன் அவள் அலுவலகம் மீண்டும் வந்து சேர்ந்து ஒருசில நாட்களுக்குப் பிறகு அவளைக் கூப்பிட்டு “நீங்க ரெண்டு பேரம் என் நண்பர் டாக்டர் பிரபுவைப் பார்த்து பேசுங்க சாந்தி. ஏதாவது சொலுஷன் கிடைக்கலாம். ப்ளீஸ் ட்ரை.” என்றார்.
அலுவலகத்தில் பிறருடைய பிரச்சினைகளுக்கெல்லாம் தீர்வு காணுவதில் திறம்படைத்தவள் எனப் பெயர் எடுத்திருந்த சாந்திக்கு தன் சொந்த பிரச்சினைக்கு தீர்வுகாண பிறரையணுக நேர்ந்ததை நினைத்து இது தேவையா என எண்ணிப் பார்த்தாள். இருந்தாலும் சேர்மனின் அறிவுரையை உதாசீனப்படுத்த மனமில்லாமல் டாக்டர் பிரபுதாசிடம் தொலைப்பேசியில் முதலில் பேசிப்பார்க்கலாம் என தீர்மானித்தாள்.
தொலைப்பேசியில் அவர் அவளிடம் உரையாடிய பாங்கு, அவளுடைய கடந்த இரண்டாண்டு திருமண வாழ்க்கையின் சாராம்சத்தைத் தொலைப்பேசியிலேயே சிறு, சிறு கேள்விகளின் மூலம் கிரகித்துக்கொண்ட அவருடைய திறமை அவளை வெகுவாய் கவர்ந்தது..
“நீங்க தனியா வந்து என்னோட பேசறதுக்கு எந்தவித தடையுமில்லை.. பட் மிஸ்டர் சங்கரையும் உங்களோட கூட்டிக்கிட்டு வரமுடியும்னா..” என்றவரின் யோசனையைத் தட்டிக்கழிக்க முடியாமல் “ஐ வில் ட்ரை டாக்டர்..” என்றாள்.
இருந்தாலும் அன்றிரவு முழுவதும் சங்கரை எப்படி ·போனில் கூப்பிடுவது என்று யோசித்து, யோசித்து சோர்ந்துபோய் அடுத்த நாள் அவனுடைய கல்லூரிக்கு தொலைப்பேசியில் அழைத்து விஷயத்தை மெள்ள கூறினாள்..
அவளுடைய அதிர்ஷ்டம், அவள் கூறியதை முழுவதும் ஒன்றும் பேசாமல் கேட்ட சங்கர் “சரி, வரேன்.” என்று சுருக்கமாய் பதிலளித்துவிட்டு விலாசத்தைக் குறித்துக்கொண்டான்.
***
“ஃபீல் ஃப்ரீ சாந்தி..”

சாந்தி எதிர்பார்த்திருந்ததை விட இளமையாயிருந்தார் டாக்டர் பிரபுதாஸ். தன்னைவிட இரண்டோ, மூன்றோ வயதே அதிகமிருக்கும் என அனுமானித்த சாந்தி சிறு புன்முறுவலுடன், “தாங்க் யூ டாக்டர்.” என்றாள்.
“சங்கர் வர சம்மதிச்சாரா? இஸ் ஹி கமிங் டுடே..?”
“யெஸ் டாக்டர். ஹி ஈஸ் கமிங்.. அட்லீஸ்ட் அப்படித்தான் ·போனில் சொன்னார்.”
பிரபுதாஸ் அவளைப் பார்த்து புருவத்தை உயர்த்தினார். “அப்படீன்னா..? நீங்க ஒரே வீட்லதானே இருக்கீங்க?
அவளையுமறியாமல் தலையைக் குனிந்துக்கொண்டாள் சாந்தி. “இல்லை.” என்றாள் மெல்லியக் குரலில்.
“ஐ ஸீ..”
அவருடைய குரலில் தொனித்த தயக்கமும் அதன் பிறகு அவர்களுக்கிடையில் சில நிமிடங்கள் நீடித்த மெளனத்தின் பாரமும் சாந்தியை வெகுவாய் பாதித்தன.
தானும் ஹ்யூமன் ரிலேஷன்ஷிப்பில் டாக்டர் பட்டம் பெற்றவள்தான்.. மனித உறவுகளின் புனிதத்தை அறிந்தவள்தான் என்பதை தன்னைவிட அதிக அனுபவமில்லாத இந்த லோசகருக்கு புரிய வைக்கவேண்டும் என்ற தீர்மானத்துடன் தன் விசிட்டிங் கார்ட் ஒன்றை தன் கைப்பையிலிருந்து எடுத்து நீட்டினாள்.
வியப்புடன் அதை வாங்கிய பிரபுதாஸ் அவளைப் பார்த்து புன்னகைத்தார்.
“என்னைத் தப்பா நினைச்சுக்காதீங்க சாந்தி.. உங்களைப் பற்றி உங்க சேர்மன் ரொம்பவும் தெளிவா என்கிட்ட சொல்லியிருக்கார்.. உங்க படிப்பு, திறமை, உங்க கம்பெனியோட இண்டஸ்ட்ரியல் ரிலேஷன்ஷிப் நீங்க வந்ததுக்கப்புறம் எவ்வளவு முன்னேறியிருக்கு அப்படீன்னு நிறைய சொல்லியிருக்கார்.. இட் மே பி ட்ரூ. ஆனா அதே சமயம்.. நாம ஒன்னை மறந்திடறோம்.. நாம பிறரோட உணர்வு சம்பந்தப்பட்ட விஷயங்களைப் பற்றி விவாதிக்கும்பொழுது நம்முடையை சொந்த உணர்ச்சிகளுக்கு இடம் குடுக்கறது இல்லை.. அறிவு பூர்வமா மட்டுமே யோசிக்கறோம். அதனாலத்தான் நமக்கு முன்னால இருக்கற பிரச்சினைகளை ஒரு சம்மந்தமில்லாத மூன்றாம் மனிதரா நின்று இரு தரப்பினருடைய வாத பிரதிவாதங்களைக் கேட்டு நம்மால முடிவெடுக்க முடியுது. நம்ம முடிவு எதுவாயிருந்தாலும் அது நம்மளோட சொந்த வாழ்க்கையை பாதிக்கப் போறதில்லை.. நான் சொல்றது சரிதானே..”
சாந்தி அவருடைய வாதத்திலிருந்த நிதர்சனமான உண்மையைப் புரிந்துக்கொண்டு ‘நீங்கள் சொல்வது சரிதான்’ என்பதுபோல் தலையை அசைத்தாள்.
“எந்த மருத்துவருமே அவருடைய நோய்க்கு அவரே மருத்துவம் பார்த்துக்கறதில்லை இல்லையா?”
பிரபுதாசின் இந்த கேள்விக்கும் ‘ஆமாம்’ என்பதுபோல் தலையை அசைத்தாள் சாந்தி.
“அதனால நீங்க உங்க திருமண விஷயமா பேச இங்க வந்தது தப்பேயில்லை.. இதை நீங்க முழுசா ஒத்துக்கணும். இரண்டாவது.. நான் உங்களை விட அவ்வளவு வயசானவனில்லை.. அதனால் அதிக அனுபவமுமில்லாதவன் என்பதும் உண்மைதான்.. னால் நான் முன்பு சொன்னதுபோல் உங்க பிரச்சினையைப் பொறுத்தவரை நான் மூன்றாவது மனுஷன்.. நான் உங்க விஷயத்துல சஜ்ஜஸ்ட பண்ணப்போற எந்த முடிவும் என்னை பெர்சனலா பாதிக்கப் போறதில்லை.. சரிதானே?”
“ஆமாம்.”
“அதனால.. எனக்கு சமமா நீங்க மனித உறவுகளைப் பற்றி படிச்சி டாக்டர் பட்டம் வாங்கியிருந்தாலும் நான் உங்களைவிட ஒரு மேலான நிலையிலிருந்து உங்க பிரச்சினையைப் பார்க்க முடியும்னு நினைக்கறேன்.. என்ன சொல்றீங்க?”
“சரிதான் டாக்டர். நீங்க என்னைத் தவறா புரிஞ்சிக்கிட்டீங்களோன்னு நினைக்கறேன்.. நீங்க இந்த விஷயத்தைப் பற்றி அறிவுரை சொல்றதுக்கு தகுதியில்லாதவர்னு நான் ஒரு நிமிஷம் கூட நினைச்சதில்லை. அப்படி நினைச்சிருந்தா நான் வந்தேயிருக்கமாட்டேனே..”
பிரபுதாஸ் சாந்தியை கூர்ந்து பார்த்தார். “நான் வெளிப்படையா உங்களை ஒண்ணு கேக்கலாமா?” என்றார்.
“கேளுங்க டாக்டர்..”
“உங்க சேர்மன் சொன்னாரேங்கற ஒரே காரணத்துக்காகத்தான் நீங்க என்னை அன்றைக்கு ·போன்ல கூப்பிட்டு பேசனீங்க.. நான் சொல்றது சரிதானே..?”
அதிர்ந்துபோய் தன்னைப் பார்த்த சாந்தியைப் பார்த்து மெலிதாய் புன்னகைத்தார் பிரபுதாஸ்.
“ஆனா எப்படியோ என்னோட பேச்சால் கவரப்பட்டு.. சரி என்னதான் சொல்றார்னு பார்ப்போமேன்னு இங்க வந்திருக்கீங்க... அதுவும் சரிதானே..”
சாந்திக்கு என்ன மறுமொழி சொல்வதென்று தெரியாமல் வாயடைத்துப்போய் அமர்ந்திருந்தாள். அதெப்படி இவரால் இத்தனைச் சரியாய் தன் மனதிலிருப்பதைக் கூற முடிகிறது? அவளையுமறியாமல் அவளுடைய மனசினுள் பிரபுதாசைப் பற்றிய மதிப்பு உயர்ந்தது..
“இப்ப சொல்லுங்க..”
ஒன்றும் புரியாமல் அவரையே பார்த்தாள் சாந்தி.. “என்ன டாக்டர்..?”
“நீங்க ஒரே வீட்ல இல்லையான்னு கேட்டேனே?”
சாந்தி ‘இல்லை’ என்று தலையசைத்தாள்.
“எவ்வளவு நாளாச்சி, நீங்களிருவரும் பிரிந்து?”
“அப்படியெல்லாம் இல்லை டாக்டர்” என்ற சாந்தி தன் தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டதிலிருந்து தன் தாயின் மரணம்வரை நடந்தவற்றைச் சுருக்கமாய் கூறினாள்.
அவள் கூறி முடிக்கும்வரை அமைதியாய் கேட்ட பிரபுதாஸ் “உங்களுடைய வேதனையைப் புரிஞ்சிக்காம நான் பேசிட்டேன்னு நினைக்கறேன். ஐ யாம் ரியலி சாரி.. இந்த சூழ்நிலையில நீங்க எடுத்த முடிவுல தப்பேயில்லைன்னுதான் நான் நினனக்கறேன்.”
இண்டர்காம் ஒலிக்க எடுத்துபேசிய பிரபுதாஸ், “உங்க கணவர் வந்திருக்கிறாராம்.. உள்ளே அனுப்பட்டுமான்னு என் பி.ஏ. கேக்கறாங்க.. நீங்க என்ன சொல்றீங்க...? என்றார்.
“வரச்சொல்லுங்க டாக்டர்..”
பிரபுதாஸ் உடனே எழுந்து அறைக்கதவைத் திறந்துகொண்டு வெளியேறி வரவேற்பறைக்கு சென்று சங்கரை ஒரு புன்னகையுடன் வரவேற்று தன் அறைக்கு அழைத்துச் சென்றார்.
சாந்தி எழுந்து நின்று சங்கரைப் பார்த்து மெலிதாய் புன்னகைத்து, “எப்படி இருக்கீங்க?” என்றாள்.
“இருக்கேன். நீ எப்படியிருக்கே?” என்றவாறு அமர்ந்த சங்கர்.. பிரபுதாசைப் பார்த்து புன்னகைத்தான். “டாக்டர் நாம ரெண்டு பேரும் ஒரு செமினார்ல மீட் பண்ணியிருக்கோம்.. யூனிவர்சிட்டியில...”
பிரபுதாஸ் பதிலுக்கு புன்னகைத்தார். “யெஸ்.. அதான் உங்க முகத்தை எங்கேயோ பார்த்த ஞாபகம் இருந்தது.. யூ ர் ரைட்..”
கடந்த இரண்டு மூன்று வாரங்களில் மிகவும் இளைத்து ஆளே மாறிப் போயிருந்த சங்கரைப் பார்த்து தன்னையும் அறியாமல் கவலையடைந்தாள் சாந்தி..
“சொல்லுங்க சங்கர்.. காலேஜ்ல இப்பல்லாம் மாணவர்களைக் கண்ட்ரோல் பண்றது ரொம்ப கஷ்டம்னு கேள்விப்படறேன். சொன்னா நம்ப மாட்டீங்க.. இந்த மாரேஜ் ரிசர்ச் பியூரோவில நாங்க அதிகமா சந்திக்கறது காலேஜ் ஸ்டூடண்ட்ஸ் இருக்கற குடும்பங்கள்ல அன்றாடம் நடக்கற பிரச்சினையைத்தான்.. பிள்ளைகள் மேல ஏற்படுத்திக்கற அளவுக்கதிகமான பொசசிவ்னஸ் சில பெற்றோர்களுடைய திருமணப் பந்தத்தையே பாதிக்கற அளவுக்குப் போயிடுது.. இப்படியே போனா மேலை நாடுகளில் நடக்கறா மாதிரியான பேரண்ட்ஸ்-சில்ட்ரன் கவுன்ஸிலிங் நம்ம நாட்டிலும் ஒரு அத்தியாவசிய தேவையாயிடும்னு நினைக்கறேன்..”
சங்கர் ஒரு வறண்ட புன்னகையுடன் சாந்தியைப் பார்த்தான். “எங்களுக்கு இன்னும் குழந்தையே பிறக்கலை.. அதுக்குள்ள..”
சங்கரின் இத்தகைய பதிலை எதிர்பார்க்காத பிரபுதாஸ் இருவரையும் மாறி மாறி பார்த்தார்..
சிறிது நேரம் யாரும் எதுவும் பேசாமல் ஒரு கனத்த மெளனம் அந்த அறையை க்கிரமித்துக்கொண்டது..
“எங்களுக்குள்ள என்ன பிரச்சினைன்னு நீங்க நினைக்கறீங்க பிரபு? என் மனைவி இதுவரைக்கும் உங்க கிட்ட சொன்னதிலிருந்து.. நீங்க ஏதாவது முடிவுக்கு வந்தீருப்பீங்களே.. அதனால கேக்கறேன்..”
சங்கரின் கேள்வியின் பின்னாலிருந்த மறைமுகக் குற்றச்சாட்டை உணர்ந்தும் அதை வெளியே காட்டிக்கொள்ளாமல், “உங்க மனைவி என்ன சொல்லியிருப்பாங்கறது இருக்கட்டும். நீங்களே சொல்லுங்களேன் சங்கர்.. உங்களுக்குள்ள என்ன பிரச்சினை?”
ஒருவித அலட்சியத்துடன் தன் தோள்களைக் குலுக்கிய சங்கர் “என்னைப் பொறுத்தவரை ஒரு பிரச்சினையுமில்லை. சாந்திக்கு விரோதமில்லைன்னா இப்பவே வீட்டுக்கு கூட்டிக்கிட்டு போய் குடும்பம் நடத்த தயார்.. நானா அவங்களை வெளியே போகச் சொல்லலை..”
‘பிரச்சினை அவ்வளவு எளிதானதா?’ என்பதுபோல் அவனையே பார்த்தார் பிரபுதாஸ். சங்கரைப் போன்ற பலரை தன் அனுபவத்தில் பார்த்திருக்கிறார் அவர். எல்லா பிரச்சினைகளுக்கும் காரணகர்த்தாவாயிருந்துக்கொண்டு ‘எனக்கொன்றும் பிரச்சினையில்லை’ என்று சர்வசாதாரணமாய் எல்லார் மேலும் குற்றம் சுமத்துவார்கள் இவரைப் போன்றவர்கள்.
இருந்தாலும் இதற்கு சாந்தியின் பதிலென்ன என்பதுபோல் அவளைப் பார்த்தார் பிரபு.
“நீங்க என்ன சொல்றீங்க சாந்தி?”
இருவரையும் ஒருமுறை பார்த்த சாந்தி, “நான் என்ன நினைக்கறேங்கறது இருக்கட்டும். சங்கர் சொன்னதைப் பற்றி நீங்க என்ன நினைக்கறீங்க டாக்டர்? பிரச்சினை அவ்வளவு எளிதானதுன்னு நீங்க நினைக்கறீங்களா...?”
சட்டென்று கோபத்துடன் எழுந்து நின்றான் சங்கர். “மிஸ்டர் பிரபு.. இந்த கவுன்சிலிங் விஷயத்துலல்லாம் எனக்கு நம்பிக்கையில்லை.. இருந்தாலும் முயற்சி செய்து பார்க்கலாமேன்னுதான் வந்தேன். இப்பவும் சொல்றேன். என்னைப் பொறுத்தவரை எந்த பிரச்சினையுமில்லை..”
அவனுடைய திடீர் எதிர்ப்பை எதிர்பார்க்காமல் அதிர்ந்துபோய் அமர்ந்திருந்த பிரபுதாசைப் பொருட்படுத்தாமல் சங்கர் சாந்தியை நோக்கி திரும்பினான்.
“என்னோட ஒத்துப்போக முடியும்னு எப்ப உனக்குத் தோணுதோ அப்போ நீ வீட்டுக்கு வந்தா போறும்.. ஆனா அதுக்குன்னு வருஷ கணக்கா காத்திருக்க முடியாது.. ரெண்டு வாரம்.. இல்லன்னா ஒரு மாசம் பார்ப்பேன்.. அப்புறம்.. நான் என்ன முடிவெடுப்பேன்னு உனக்குத் தெரியும்னு நினைக்கறேன்.. சாரி மிஸ்டர் பிரபு..”
சங்கரின் இத்தகைய நடத்தையை முற்றிலும் எதிர்பார்க்காத பிரபு கதவைத் திறந்துக்கொண்டு வெளியேறும் அவனை தடுத்து நிறுத்தக்கூடத் தோணாமல் அமர்ந்திருந்தான்..
சாந்தியோ இருந்த இடத்தைவிட்டு அசையாமல் அமைதியாய் ‘இதை நான் எதிர்பார்த்ததுதான்’ என்பதைப்போல் அமர்ந்திருந்தாள்..
“என்னை மன்னிச்சிருங்க சாந்தி.. இதை நான் எதிர்பார்க்கலை.. கண்டிப்பாய் ஒரு கல்லூரி பேராசிரியரிடமிருந்து இத்தகைய குழந்தைத்தனமான நடத்தையை முற்றிலுமாய் நான் எதிர்பார்க்கவில்லை...”
“இனியும் இந்த கவுன்சிலிங்கைத் தொடரணுமா டாக்டர்?”
சாந்தியின் குரலிலிருந்த கேலியைக் கண்டுக்கொள்ளாதவர்போல் அவளைப் பார்த்தார் பிரபுதாஸ்.. “நீங்க நினைக்கறது சரிதான் சாந்தி.. என்னுடைய கவுன்சிலிங் உங்களுக்கு இப்போதைக்கு தேவையில்லைன்னு நினைக்கறேன். னாலும் ஒரு க்யூரியாசிட்டியில கேக்கறேன். இதுக்கு என்ன தீர்வுன்னு நீங்க நினைக்கறீங்க?”
ஒரு வறண்ட புன்னகையுடன் அவரைப் பார்த்த சாந்தி தன் கைப்பையுடன் எழுந்து நின்றாள். “இந்த திருமணப் பந்தம் தொடர்கிறதும் தொடராததும் உன் கையிலதானிருக்கு சொல்லாம சொல்லிட்டு போயிட்டார் சங்கர். நான் என்ன முடிவு பண்ணப்போறேன்னு இப்ப என்னால எதுவும் சொல்ல முடியலை.. ரெண்டு மூணு நாளைக்கு இதைப்பத்தி யோசிக்கப் போறேன்.. எனக்கு சொந்தம்னு சொல்லிக்கறதுக்கு சங்கரோட குடும்பத்தை விட்டா யாருமில்லை.. சோ.. இதுக்கு நான் தான் தனியா முடிவெடுக்கணும்.. தாங்க்ஸ் ·பார் யுவர் ஹெல்ப் டாக்டர்.. எங்க சேர்மன்கிட்ட இன்றைக்கு நடந்ததைப் பற்றி விவரமா சொல்லவேண்டாம்னு மாத்திரம் உங்களைக் கேட்டுக்கறேன். ப்ளீஸ்”
“ஐ அண்டர்ஸ்டாண்ட். என்னுடைய உதவி தேவைப்பட்டா..” என்ற பிரபுதாசைப் பார்த்து “கண்டிப்பா கூப்பிடறேன் டாக்டர்..” என்று கூறிவிட்டு கதவைத்திறந்துக் கொண்டு வெளியேறி நடந்தாள் சாந்தி...
*********
தன் அலுவலக வாகனத்தில் ஏறி சாந்தி தன்னுடைய வீட்டை வந்தடைந்தபோது இருட்ட ஆரம்பித்திருந்தது...
வழியெல்லாம் யோசித்தும் எந்த முடிவுக்கும் வர முடியாமல் குழப்பத்துடன் வந்து இறங்கிய சாந்தி தன் வீட்டு வாசலில் தன் மாமனாரின் வாகனம் நிற்பதைப் பார்த்தாள்.
“வாம்மா சாந்தி.. உனக்காகத்தான் காத்துக்கிட்டிருக்கேன்..” என்ற மாமனாரைப் புன்னகையுடன் பார்த்தாள் சாந்தி.. “வாங்க மாமா.. ·போன் பண்ணி சொல்லியிருந்தீங்கன்னா.. சீக்கிரம் புறப்பட்டு வந்திருப்பேனே.. வாங்க..”
“எப்படீம்மா உன்னால வரமுடியும்? உன்னைத்தான் அவன் அங்கேயே விட்டுட்டு ஓடி வந்துட்டானே..”
சட்டென்று திரும்பி தன் மாமனாரைப் பார்த்த சாந்தியின் கண்கள் அவளையுமறியாமல் கலங்கியது.. “மாமா உங்களுக்கு...”
அவர் ‘ஆமாம்’ என்பதுபோல் தலையை அசைத்தார்.. “எனக்கு எல்லாம் தெரியும்மா.. சங்கர் அங்க வர்றதுக்கு முன்னால வீட்டுக்கு வந்தான். நீ கூப்பிட்ட விஷயத்தை என்கிட்ட சொன்னான். நான் போய் அவளை ஒன்னும் சொல்லாம கூட்டிக்கிட்டு வந்து குடும்பம் நடத்துடான்னு சொன்னேன். சரின்னு சொல்லிட்டு போனான். நானும் கூட வந்திருக்கணும்.. எல்லாம் சரியாயிரும்னு நினைச்சேன். கொஞ்ச நேரத்துக்கு முன்னால திரும்பி வந்து ‘நான் அவசரப்பட்டு பேசிட்டேன். அவ வரமாட்டான்னு தோணுதுப்பா.. நீங்க போய் அவகிட்ட பேசுங்கப்பான்னு கலங்கிப்போய் நிக்கறான். அதான் நான் வந்தேன்மா..”
‘நான் என்ன சொல்லணும்னு நினைக்கறீங்க?’ என்பதுபோல் பார்த்துவிட்டு மெளனமாய் அவர்முன் அமர்ந்திருந்தாள் சாந்தி..
“உன்னோட அப்பாவையும் அம்மாவையும் இழந்துட்டு நிக்கற இந்த நேரத்துல அவன் இப்படி நடந்துக்கறதுக்காக நான் ரொம்ப வெக்கப்படறேன் சாந்தி.. அவனை நீதான்மா ஒரு மனுஷனா மாத்தணும்..
ஒரே பிள்ளையாச்சேன்னு அவன் எடுக்கற முடிவுக்கெல்லாம் நானும் உன் மாமியும் கட்டுப்பட்டு இருந்ததுதான் தப்பா போயிருச்சி.. எல்லாம் தனக்குத்தான் தெரியும்னு நினைக்கறான். அவன் வீட்டுக்காக குடுக்கணும்னு ரெண்டு லட்சம் கேட்டு வந்தப்போ அவன் உன்னோட சம்மதத்தோடத்தான் செய்றான்னு நினைச்சேன்.. எங்க காலத்துக்கப்புறம் இந்த வீடே உன்னோடதுதானேடா எதுக்குடா உங்களுக்குன்னு தனியா ஒரு வீடுன்னு எவ்வளவோ தடுத்துப் பார்த்தேன். அவன் கேக்கலை.. ஆனா ஒண்ணு மட்டும் சொல்றேன்மா.. உன்னைப் பிரிஞ்சி அவனால ஒரு மனுஷனா இருக்க முடியும்னு தோணலை சாந்தி.. தயவுசெய்து இதைப் புரிஞ்சிக்கிட்டு அவனுக்கு ஒரு புதுவாழ்வு குடும்மா.. நான் வரேன்..”
தன்னுடைய பதிலுக்கு காத்திராமல் எழுந்து விடுவிடுவென்று வெளியேறிய தன் மாமனாரின் கார் சென்று மறையும்வரைப் பார்த்துக்கொண்டிருந்த சாந்தி ஒரு நீண்ட பெருமூச்சுடன் வாசற்கதவை மூடிவிட்டு ஹாலிலிருந்த தன் பெற்றோரின் புகைப்படத்தின் முன்னே சென்று நின்றாள். கடந்த மாதம் தன்னுடன் இருந்த இருவரும் இப்போது..
மிகவும் தனியாய் விடப்பட்டதைப்போல் உணர்ந்த சாந்தி மனம் உடைந்து குலுங்கி, குலுங்கி அழுதாள்..
சிறிது நேரத்திற்குப்பிறகு சுவரிலிருந்த தன் பெற்றோரின் புகைப்படத்தை மீண்டும் பார்த்தாள்..

‘மருமகனை மன்னிச்சி ஏத்துக்கோயேன் சாந்தி’ என்று தன்னை நோக்கி தன் தாய் கெஞ்சுவதைப்போல் உணர்ந்த சாந்தி, கலங்கிய கண்களுடன், “உனக்காக செய்றேம்மா.. தனக்கு எந்தவிதத்திலும் பொருத்தமில்லை என்று உன்னை உதாசீனப்படுத்தாம உன்னுடைய உணர்வுகளுக்கு மதிப்புக் குடுத்து ‘நீதான் என் குரு’ன்னு உன்னை மதிச்சி நடத்துனாரே அப்பா அவருக்காக செய்றேம்மா.. அப்பா என்ன செஞ்சாலும் அது சரியாத்தான் இருக்கும்னு நீ அவருக்கு பணிஞ்சு போவியே.. அதேப்போல.. நானும் நடந்துக்கறேம்மா..” என்றாள்.
அதே சமயம் ஹாலிலிருந்த தொலைப்பேசி ஒலிக்க விரைந்து சென்று எடுத்து சிறிது நேரம் கேட்டுவிட்டு.. “சரிங்க..ஆனா இப்ப வேணாம். காலைல நானே ஏழுமணிக்கெல்லாம் அங்கே இருப்பேன்.. குட்நைட்..” என்று பதிலளித்துவிட்டு தெளிந்த மனத்துடன் தன் படுக்கையறைக்கு சென்று படுக்கையில் விழுந்தவள் சில நொடிகளிலேயே கனவுகளில்லாத உறக்கத்தில்ஆழ்ந்துபோனாள்.
***********




















3 comments:

rnatesan said...

கதை ரொம்ப நல்லாதான் இருக்கு ஆனால் சுருக்கமா கொடுத்தா நிறையப் படிக்கலாம்.நன்றி!

rnatesan said...

கதை ரொம்ப நல்லாதான் இருக்கு ஆனால் சுருக்கமா கொடுத்தா நிறையப் படிக்கலாம்.நன்றி!

rnatesan said...

கதை ரொம்ப நல்லாதான் இருக்கு ஆனால் சுருக்கமா கொடுத்தா நிறையப் படிக்கலாம்.நன்றி!