6.10.05

பிராயச்சித்தம் (சிறுகதை)

அலுங்காமல், குலுங்காமல் வந்து நின்ற சொகுசு காரில் இருந்து இறங்கி, சுற்றும் முற்றும் பார்த்தான் சுந்தர். மல்லிகாவைக் காணாமல் ஒரு நிமிடம் முகம் சுருங்கிக் கோபப் பட்டான்.

சுந்தர் பரம சாதுதான். யாரிடமும் அநாவசியமாய் கோபம் கொள்வதில்லை. ஆனால் இன்று அப்படியா? எத்தனை முறை படித்து, படித்து சொல்லியிருந்தான்? வாட்சை பார்த்தான். காலை மணி 8.00 என்றது ரோல்க்ஸ். கோடை வெயிலின் தாக்கம், வியர்த்து கொட்டியது.

ஒருவேளை வீட்டிலிருந்து இறங்கும் போது அவளுடைய அண்ணாவிடம் அகப்பட்டுக் கொண்டிருப்பாளோ? அவள் அண்ணா ஒரு சரியான முரடன். அவனுக்கு பயந்துதான் யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்துக்கொள்வது என்று சுந்தரும் மல்லிகாவும் தீர்மானித்தார்கள்.

‘இப்போது என்ன செய்வது?’ மொபைலை எடுத்து அவளுடைய மொபல் நம்பரை தேடினான். கால் பட்டனை அழுத்தலாமா, வேண்டாமா? ஒரு நிமிடம் யோசித்தான். தூரத்தில் ஒரு பெண் வேக, வேகமாய் ஓடி வருவதை பார்த்தான். மல்லிகாதான். வரட்டும். காரில் ஏறி அமர்ந்தான். ஏசியை ஆன் செய்தான். காத்திருந்தான்.

இடது புறக் கதவைத் திறந்து மல்லிகா உட்கார்ந்து கதவை மூடவும் எஞ்சினை முடுக்கி, ஏசியை சீண்டி, ஆக்ஸ்லிரேட் செய்ய கார் சீறி முன்னேறியது.

"ஓடி வந்த களைப்பு இப்பவும் தீரலை, இல்லே?" என்றான், ரோட்டில் கண் வைத்தவாறு.

வலதுபுறம் திரும்பி ஒரு நிமிடம் அவனை நிதானமாய் பார்த்தாள் மல்லிகா. இவனை நம்பி எந்த தைரியத்தில் வீட்டில் எல்லாரையும் உதறி விட்டு வந்தோம்? நாம் செய்றது சரிதானா?

இவனை எவ்வளவு நாளா தெரியும்? ஒரு வருடம்? இல்லை, அவ்வளவு கூட கவில்லை. பின்னே எதை நம்பி, வீட்ல எல்லாரையும் விட்டுட்டு.. இவன் பின்னால...

அம்மா என்ன செய்றாளோ! அண்ணாவும் ஊர்ல இல்ல. சே! பாவம் அம்மா. தனியா என்ன செய்வா? காலங்கார்த்தால ஒரு வயசுக்கு வந்த பொண்ண வீட்லருந்து காணோம்னா! சாயந்திரம்னா பரவாயில்லை. ஆபீஸ்ல வேலையிருக்காம், லேட்டா வரேன்னு போன் பண்ணான்னு சொல்லி கொஞ்ச நேரம் சமாளிப்பா.

அண்ணா வர இன்னும் ரெண்டு நாள் இருக்கு. திரும்பி கொண்டு விட்டுடேன்னு கேக்கலாமா? இவன் சொன்னாலும் கேப்பானா? ஒரு வேளை, ஒரு நாலு நாள் கழிச்சி ஓடி போலாம்னு இவன்கிட்ட சொன்னா கேப்பானா? கேட்டுத்தான் பார்ப்போமே. மல்லிகா திரும்பி அவனைப் பார்த்தாள்.

மனம் மீண்டும் சலனமடைந்தது. பாக்க ராஜாவாட்டம், அச்சா அப்படியே அவன் அப்பா சாயல். அதே உயரம், நிறம், பரந்த தோள்கள், கருகருவென்ற தலை முடி. சினிமா ஹீரோ மாதிரி. தன்னையும், அவனையும் இணைத்து ஒருமுறை கற்பனைக் கண்ணாடியில் பார்த்துக் கொண்டாள். அவளுக்கே பிடிக்கவில்லை.

எங்கிட்ட என்னத்த பாத்துட்டு, இவன்.....

பாவம். இவனும் எல்லாத்தையும் விட்டுட்டுத்தானே வந்திருக்கான். நாமளாவது ஓட்டு வீடு, ஒண்டு குடித்தனம்னு... என்னத்த பெரிசா விட்டுட்டு வந்திட்டோம்?

ஆனா, இவன்? பங்களா, கார்... காரா இது? கப்பல்...

"என்ன மல்லி... என்ன யோசிக்கிறே? தப்பு பண்ணிட்டோம்னா?"

இல்லை என்று தலை அசைத்தாள்.

"பின்னே?"

"அம்மாவ நினைச்சாத்தான் பாவமாயிருக்கு.. அண்ணாவும் ஊர்ல இல்ல.."

"கவலைப் படாத.. ரெண்டு நாள் தான்.."

"என்ன சொல்றீங்க?" கலக்கமாயிருந்தது அவளுக்கு. ரெண்டு நாளா?

அடப்பாவி ! ரெண்டு நாளைக்கு அப்புறம் விட்டுட்டு போயிடுவானா?

"பின்னே..?"

"புரியலே"

ரோட்டிலிருந்து பார்வையை எடுக்காமல் அவன் பேசினான். "எனக்கும் ஒரு குடும்பம் இருக்குன்னு மறந்துட்டியா?"

"அதனால?" என்றாள் குழப்பத்திலிருந்து மீளாமல்.

"நாம இப்போ நேரா திருநீர் மலை போறோம். கோயில்ல வச்சு நம்மோட ஆபீஸ் ஸ்டாஃப் ரெண்டு பேர் சாட்சியோட மாலையை மாத்திக்கிறோம். அப்புறம் நம்ம ஆஃபீஸ் கெஸ்ட் ஹவுஸ். அங்க நைட் ஸ்டே. நாளைக்கு மெட்ராஸ் ரிட்டர்ன். இங்க இருக்கிற ரெஜிஸ்ட்ரார் ஆஃபீஸ்ல நம்ம மேரேஜ் ரெஜிஸ்ட்ரேக்ஷன். ஏற்கனவே ரிஜிஸ்ட்ரேஷனுக்கு அப்ளை பண்ணி பார்மாலிட்டியையெல்லாம் முடிச்சி வச்சிருக்கேன்" திரும்பி அவளை ஒருமுறைப் பார்த்துவிட்டு தொடர்ந்தான்.

"அப்புறம் நேரா நம்ம வீடு. நம்ம முடிவை ஏத்துக்கிட்டா ஓகே. இல்லன்னா... நாம தனியா போயிறலாம்.  என் எம்பிஏ படிப்புக்கு நிச்சயம் ஒரு வேலை கிடைச்சிரும்.  நீ என்ன சொல்றே?"

திடீரென்று வந்த கேள்வியை எதிர்பாராதவளாய் திரும்பி அவனைப் பார்த்துவிட்டு ஒரு நிமிடம் மெளனமானாள் மல்லிகா.

இவனை எந்த அளவுக்கு நம்புவது...? மாலை மாற்றினால் போதுமா? கெஸ்ட் ஹவுஸ் சமாச்சாரம்...அதை எப்படி அவாய்ட் செய்வது?

"என்ன மல்லி? ஏதாவது தப்பா சொல்லிட்டேனா? வேற ஏதாவது ப்ளான் இருக்கா?" அவன் குரலில் எரிச்சல் தொனிப்பதுபோல் அவளுக்குத் தோன்றியது.

கார் சென்னை எல்லையைத் தாண்டுவதைப் பார்க்க முடிந்தது. மல்லிகா குழம்பினாள். ஒடிப்போய்த்தான் வாழ்க்கையை அமைத்துக் கொள்வது என்று தீர்மானித்தபோது இருந்த தெளிவு இப்போது தன்னிடம் இல்லாததை உணர்ந்தாள். பெண்ணுக்குத்தான் இந்த குழப்பம்.. இவனுக்கென்ன.. மாலைய மாத்திட்டா ஆச்சி... அப்புறம் பர்ஸ்ட் நைட்டுன்னு நெனப்பு ஓடுது. ஆனா எனக்கு?

அவனோட வீட்டுல ஒத்துப்பாங்களான்னே தெரியலே. சப்போஸ் அவங்க போடி வெளியேன்னுட்டா. இவனுக்கு தனியா நின்னு வாழ்க்கையில போராடுற தைரியம் இருக்குமா? சே! இப்போ இதபத்தியெல்லாம் யோசிச்சி என்ன யூஸ்? கண்ண மூடிட்டு இறங்கியாச்சி. மூழ்கிடுவோமான்னு இப்போ நெனச்சி என்ன ஆவ போவுது?

"அதில்ல சுந்தர்..." அவனை ஒரு முறைப் பார்த்துவிட்டு திரும்பி ரோட்டை பார்த்தபடி தொடர்ந்தாள். "நேரா உங்க வீட்டுக்கு போவோம். அவங்களைச் சம்மதிக்க வைக்கமுடியும்னு நினைக்கிறேன். சம்மதிச்சா சரி, இல்லன்னா பிரிஞ்சிடுவோம். நான் எங்க வீட்டுக்கு போறேன், நீங்க உங்க வீட்டுக்கு.."
பதற்றமாய் பிரேக் போட்டு காரை சாலையோரம் நிறுத்தினான் சுந்தர்.

"வாட் டூ யூ மீன்"

"ஏன்? நான் இப்படி சொல்வேன்னு எதிர்பார்க்கலையா?"

"கண்டிப்பா. உனக்கு எங்க அப்பாவ பத்தி தெரியாதா மல்லி?"

"தெரியும். அதனாலதான் சொல்றேன். நாம நேரா உங்க வீட்டுக்கு போறோம். காரைத் திருப்புங்க"

அவள் சொல்வதற்காகவே காத்திருந்தவன் போல் காரைச் சென்னையை நோக்கி திருப்பினான் சுந்தர்.

இதை எதிர்பார்க்காத மல்லிகா அதிர்ச்சியுடன் அவனைத் திரும்பி பார்த்தாள் .

மெலிதான புன்னகையுடன் டிரைவ் செய்துக்கொண்டே பேசினான் சுந்தர். "நீ இப்படித்தான் சொல்வேன்னு அப்பா நேற்று சொன்னப்பக்கூட நான் நம்பல."

அதிர்ச்சியுடன் லேசாய் பக்கவாட்டில் சாய்ந்து, அவன் கையைப் பிடித்து
"என்ன சொல்றீங்க?" என்றாள் மல்லிகா.

"ஏய் கேர்ஃபுல். மெட்றாஸ் டிரா·பிக். இந்த நேரத்தில க்ஸிடன்ட் பண்ணிராத. அப்புறம் ராசியில்லாத பொண்ணுன்னு சொல்லிடுவாங்க.”

"ஓ, சாரி" கையை உடனே எடுத்து விட்டாள் மல்லிகா.

அவன் தொடர்ந்தான், "நாம ரெண்டு பேரும் நெருங்கிப் பழக ஆரம்பிச்ச நாள்லருந்தே அப்பா நம்மளைப் பார்த்துக்கிட்டே இருந்திருக்கார். நீ நம்ம ஆபீஸ்ல சேர்ந்த நாள் உனக்கு ஞாபகம் இருக்கா? உங்க அப்பாவோட மரணத்துக்கு தான்தான் காரணம்னு ரொம்ப நாள் சொல்லிக்கிட்டே இருந்தாங்க அப்பா. அதுக்கு பிராயச்சித்தம் செய்யணும்னு அவங்க நினைச்சதோட விளைவுதான் உன்னோட வேலை. நீ ஆஃபீஸ்ல சேர்ந்த முதல் நாளே அப்பாவுக்கு உன்னை பிடிச்சி போச்சி. அதனாலதான் ஐன்டர்வ்யூன்னு ஒரு ·பார்மாலிட்டிக்காகக்கூட நடத்துல. அப்பாயிட்மென்ட் ஆர்டர் அடிக்க சொல்லி நீ வந்தவுடனே நேரா உன் கையில கொடுத்தார். சாவு வீட்ல வச்சி அப்பா நஷ்ட ஈடா பணம் கொடுக்க முயற்சி பண்ணப்போ உங்க அண்ணன் கோபத்தோட ரியாக்ட் செஞ்சத நீ மறந்திறுக்க மாட்டேன்னு நினைக்கிறேன். உங்க அண்ணாவுக்கு அப்பா மேல இருந்த கோபம் இப்போ போயிருக்கும் இல்லே?"

இதென்ன புது குழப்பம்? நம்ம அப்பா சாவுக்கு சுந்தரோட அப்பாதான் காரணமா? எப்படி? எப்படி ரியாக்ட் செய்வது என்று தெரியாமல் மல்லிகா குழம்பினாள்.

"ஏய், என்னாச்சி?" அவளுடைய மெளனத்தின் அர்த்தம் விளங்காமல் சுந்தர் அவளைத் தொட்டு உலுக்கினான்.

"நீங்க என்ன சொல்றீங்கன்னே எனக்கு புரியலே சுந்தர். அப்பா இறந்த செய்தியையே என்னால அன்னைக்கி ஜீரணம் பண்ணமுடியாம குழம்பி போயிருந்தேன். அப்பாவை யாரோ அடையாளம் தெரியாத கும்பல் கொலை செஞ்சிட்டதுன்னுதான் அண்ணாவோட நண்பர் ஒருத்தர் யார்கிட்டயோ சொல்லிக்கிட்டிருந்ததைக் கேட்டதா ஞாபகம். ஆனா அதுக்கு அப்புறம் அண்ணாவோ இல்லை அம்மாவோ இது நாள் வரை அப்பாவோட கொலைக்கு காரணம் நீங்களோ உங்க அப்பாவோன்னு சொன்னதே இல்லை."

சுந்தருக்கு தலையைச் சுற்றி¢யது. சே! இவளுக்கு எதுவுமே தெரியாது போலிருக்கே. நான் போய் இப்ப எதுக்கு இத சொல்லணும்? ஹெள ஸ்டுப்பிட்! மனதுக்குள் தன்னையே திட்டிக்கொண்டான்.

"சாரி மல்லி. உனக்கு எல்லாம் தெரியும்னு நெச்சேன். ஓகே, லெட் அஸ் ஃபர்கெட் இட். வீட்டுக்கு போறதுக்கு முன்னால உனக்கு ஏதாவது சாப்பிடணுமா?" எப்படியாவது பேச்சை மாற்றி அவளைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று நினைத்தான் சுந்தர்.

மல்லிகாவோ ஒன்றும் பேசாமல் மெளனம் சாதித்தாள்.

சிறிது நேரம் இரண்டு பேரும் அவரவர் சிந்தனையில் மூழ்கி போனார்கள்.

இதை ஒன்றும் பொருட்படுத்தாதது போல் சென்னை நகர காலை நேர டிரா·பிக் துரிதமாய் தன் போக்கில் இயங்கிக் கொண்டிருந்தது.

சுந்தரும் அமைதியாய்போன மல்லிகாவை அவள் போக்கில் விட்டுவிட்டு டிரைவ் செய்வதில் குறியாயிருந்தான்.

மல்லிகாவின் சிந்தனை பின்னோக்கி ஓடியது.

****
அப்போது அவள் பி.எஸ்.சி இறுதியாண்டு. ஒரு நாள் கல்லூரிக்கு புறப்பட்டுக்கொண்டிருந்தபோது அப்பாவுக்கும் அண்ணாவுக்கும் பலத்த வாக்குவாதம் நடந்து கொண்டிருந்தது.

அம்மாவைக் கண் சாடையால் ‘என்ன விஷயம்?’ என்றாள் மல்லிகா.

‘ஒன்றுமில்லை’ என்று தலையை அசைத்த அம்மா, ஓசை எழுப்பாமல் "நீ போ" என்றாள்.

ஆனால் அப்பா அவளை விடவில்லை.

"நீயே சொல்லுமா. மொதலாளி ஒரு முக்கியமான பொறுப்பை என்னை நம்பி கொடுத்திருக்கார். உங்களுக்கு எதுக்குப்பா இந்த வம்புங்கிறான் உங்க அண்ணன்."

ஒன்றும் புரியாமல், "என்ன பொறுப்புப்பா?" என்றாள் மல்லிகா.

"மல்லி நீ காலேஜுக்கு போடி, நேரமாவுது." என்ற அம்மா அப்பாவிடம், "ஏங்க, உங்க கம்பெனி விஷயத்தில அவளை ஏன் இழுக்கிறீங்க?" என்றாள் தன் கணவரிடம்.

"ஆமாம். நீ போம்மா." என்றான் அண்ணா.

கைக்கடியாரத்தைப் பார்த்தாள் மல்லிகா. பஸ்ஸைப் பிடிக்க இன்னும் 15 நிமிடம்தான் இருந்தது. "சாரிப்பா. எனக்கு நேரமாச்சி. சாயங்காலம் பார்க்கலாம். என்ன விஷயமா இருந்தாலும் அண்ணாவுக்கு பிடிக்காத விஷயத்த செய்யாதீங்கப்பா. ப்ளீஸ்." அதுதான் அப்பாவை அவள் கடைசியாக பார்த்தது.

அன்று மாலை சுமார் 4.00 மணிக்கு காலேஜ் விட்டு புறப்பட்டுக் கொண்டிருந்தபோது 'எங்கேயும் போகாம நேரே வீட்டுக்கு வா' என வீட்டிலிருந்து ·போன் வர அலறியடித்துக் கொண்டு ஆட்டோ பிடித்து ஓடி வந்தவளை வரவேற்றது அவளுடைய தந்தையின் உயிரற்ற சடலம். என்ன, ஏது என்று விசாரிக்க முடியாமல் வீடு முழுக்க அப்பாவின் அலுவலக சக ஊழியர்கள், அப்பா மற்றும் அண்ணாவின் நண்பர்கள், அக்கம்பக்கத்தார்கள், உறவினர்கள் என வீடு முழுக்க கூட்டம்.

அண்ணா யாருடனோ உரத்தக் குரலில் சப்தம் போடுவதும், வீட்டை விட்டு வெளியே போக சொல்வதும் அவள் காதில் விழுந்தாலும் அதிலெல்லாம் கவனம் செலுத்த முடியாமல் அப்பாவை இழந்த சோகம் அவளைக் கட்டிப் போட்டுவிட்டது.

அதன் பிறகு அப்பாவின் மரணத்தின் பிண்ணனியைப் பற்றி அம்மாவோ அண்ணாவோ பேசி கேட்டதேயில்லை.

பிறகு பி.எஸ்.ஸி ரிசல்ட் வந்து அவள் மேற்கொண்டு என்ன செய்வது என்று சிந்தித்துக் கொண்டிருந்தபோதுதான் அம்மா சொன்னாள். "அப்பா ஆபீசில் உனக்கு ஒரு வேலை தருவதாக மொதலாளி மகன் சுந்தர் போன வாரம் வந்து சொல்லிட்டுப் போயிருக்கார். ஆனா உன் அண்ணாதான் அந்த கம்பெனிக்கு போகக் கூடாதுன்னு பிடிவாதம் பிடிக்கிறான். நீயே கேளு."

அவள் அண்ணாவை பார்த்தாள், "ஏண்ணா, ஏன் வேண்டாங்கிறே?"

அண்ணா அம்மாவை முறைத்துப் பார்த்து விட்டு அவளைப் பார்த்து தலையை அசைத்தான். "ஒண்ணுமில்லை மல்லிகா. அம்மா எதையாவது சொல்லிக்கிட்டே இருப்பா. நீ மேல் கொண்டு படிம்மா. இப்ப என்ன வேலைக்கு அவசரம்?"

"இல்லேண்ணா. மேலே எம்.எஸ்.சி பண்ணிட்டு என்ன பண்ணப் போறேன்? நான் அப்பா ·பிஸ்லேயே ஜாயின் பண்றேன். நம்ம குடும்பத்துக்கும் உதவுமே."

"ஆமாண்டா. மல்லிகா சொல்றது தான் சரி. அவ கல்யாணத்துக்குன்னு நம்ம என்ன சேர்த்திருக்கோம்? ஒரு ரெண்டு வருஷம் வேலை பார்த்தான்னா அவ சம்பளத்தை அப்படியே சேர்த்து வச்சு அவ கல்யாணத்தை முடிச்சிரலாமே. மொதலாளி கொண்டு வந்த பணத்தையும் வேணான்னுட்டே." என்றாள் அம்மா. "இங்க பாருடா, யார், யாருக்கு என்ன நடக்கும்னு பகவான் எழுதி வச்சிருக்காரோ அதுப்படிதான் நடக்கும். உங்க அப்பாவுக்கும் அப்படித்தான் நடந்ததுன்னு வச்சிக்கோயேன். நீ படிச்சி, படிச்சி சொல்லியும் கேக்காம மொதலாளிக்கு விசுவாசமா பரிஞ்சிக்கிட்டு போனார். இப்படி ஆவும்னு யார் எதிர்பார்த்தா? போகட்டும் விடு. கடவுள் நம்மளையும் கைவிட்டுடலையே. பேசாம மல்லிகாவை உங்க அப்பா ·பிசுக்கே போகவிடு."

"எப்படியோ போங்க. என்னைக்கி நான் சொல்றதை நீங்களோ, அப்பாவோ கேட்டிருக்கீங்க?" அண்ணா கோபத்துடன் வெளியேறிய போது திகைத்துப் போனாள் மல்லிகா.

"நீ என்னம்மா சொல்றே? நான் ஏன் அப்பா ஆஃபிசுக்கு வேலைக்கு போகக் கூடாதுன்னு அண்ணா கோபப்படுறான்?" என்று அவள் கேட்டபோது அம்மா பேச்சை மாற்றி மழுப்பியது இப்போது நினைவுக்கு வந்தது.

அப்பாவின் சாவில் சுந்தருக்கும் அவனோட கம்பெனிக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கணும். வேலைக்கு சேர்ந்த புதியதில் அவளை எல்லோரும் பச்சாதபத்தோடு பார்த்ததும் அன்பு காட்டியதும் அளவுக்கு மீறிய செயலாக அவளுக்குத் தோன்றியதுண்டு. அலுவலகத்தில் உள்ள சக ஊழியர்களுடன் நெருங்கி பழகவிடாமல் சுந்தரின் பி.ஏ. என்ற அந்தஸ்த்தைக் கொடுத்து தனி அறையில் உக்கார்த்தி வைத்ததுக்கும் ஏதாவது உள் நோக்கம் இருந்திருக்குமோ என்று இப்போது அவளுக்குத் தோன்றியது. ஆனால் இந்நாள் வரை - அவள் வேலையில் சேர்ந்து ஏறக்குறைய ஒரு வருடம் ஆயிற்று - யாரும் அவளிடம் அவள் தந்தையின் மரணத்தைப் பற்றி பேசியதேயில்லை.

"ஏய் மல்லி! என்னாச்சி!" சுந்தரின் குரல் கேட்டு திடுக்கிட்டு அவனைத் திரும்பி பார்த்தாள்.

அவள் கண்களில் கண்ட கலக்கத்தைப் பார்த்த சுந்தரும் கலங்கினான். அவளுக்கு இதுவரைத் தெரியாத அவளுடைய தந்தையின் மரணத்தைப் பற்றி தான் கூறியது எத்தனை முட்டாள்தனம் என்று தன்னையே நொந்துக் கொண்டான். மல்லிகாவின் ரியாக்ஷனை தன் தந்தையிடம் எப்படி சொல்வது என்று சிந்திக்கத் தொடங்கினான்.

மல்லிகாவின் அப்பாவை அவனுக்கு சிறு வயதில் இருந்தே தெரியும். அவனுடைய குழந்தைப் பருவ முதல் குடும்பத்தில் ஓருவராய், எல்லா நல்லது, கெட்டதுகளிலும் கலந்துக் கொண்ட அவரை அவனால் எப்படி மறக்கமுடியும்? அவனுடைய தந்தையும் அவரை ஒரு தொழிலாளியாக நினைத்து நடத்தியதேயில்லை. எல்லா முக்கியமான விஷயங்களிலும் - வீட்டு விஷயமானாலும் ஆஃபீஸ் விஷயமானாலும் - அவரைக் கலந்தாலோசிக்காமல் அப்பாவோ அவனோ முடிவு எடுத்ததேயில்லை.

அலுவலகத்தைப் பற்றி மட்டுமல்லாமல், அப்பாவின் சொத்து, வரவு செலவு என எல்லா விஷயங்களும் அவருக்கு அத்துப்படி. கம்பெனி துவங்கியபோது  ஒரு சாதாரண குமாஸ்தாவாக சேர்ந்தவர் கம்பெனியோடு தானும் வளர்ந்து அதன்  பொதுமேலாளர் என உயர்ந்திருந்தார் அவர்.

கம்பெனியின் அசுர வளர்ச்சிக்கு ஈடுகொடுக்கவும் எதிர்கால வளர்ச்சிக்கு ஏதுவாகவும் ·பாக்டரியை விரிவாக்க புற நகர் சென்னையில் 15 ஏக்கர் விவசாய நிலம் குறைந்த விலையில் வருகிறது என்று ஒரு 'ப்ரப்போசலை' போர்டில் வைத்து பல எதிர்ப்புகளைச் சமாளித்து - முக்கியமாய் அந்த யூனியன் லீடரை - புதிய இடத்திற்குப் போவதால் தொழிலாளர்களுக்கு எந்த சிரமமும் ஏற்படாது என்று சமாதானப்படுத்தி, வாங்க உதவியதை அவனால் எப்படி மறக்க முடியும்?

அவருடைய துரதிர்ஷ்டம் அந்த இடமே அவருடைய மரணத்துக்கும் காரணமாகிவிடும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

ஆவடியில் இருந்த அந்த இடத்தை தங்களுடைய கம்பெனியின் அசெம்ப்ளி யூனிட்டுக்கென்று புதிதாக ஒரு ஒர்க் ஷாப்பை அமைப்பதற்காக வாங்கியிருந்தார்கள். ஆனால் அந்த இடத்துக்கு சொந்தக்காரன் தாய்பத்திரத்தின் மீது ஏற்கனவே கடன் வாங்கியிருந்ததை சரியாக கவனிக்காமல் அப்பா வாங்கியிருந்தார் என்பது பிறகுதான் தெரிந்தது. தன்னிடம் இருந்து வாங்கியிருந்த கடனை அடைக்காமல் சொத்தை விற்க முயல்வதை கேள்விப்பட்ட கடன் கொடுத்தவர் இரவோடு இரவாக நிலத்தை சுற்றி வேலியடித்துவிட்டதை கேள்விபட்டபோது நான் போய் பேசி முடிக்கிறேன் என்று சென்ற மகாதேவனை அடியாட்களை வைத்து  தாக்க அவர் அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

அன்றைய தினம் நடந்தவற்றை இப்போது நினைத்தாலும் அவனுக்கு கலக்கமாயிருந்தது. செய்தி கேட்டு வண்டியை எடுத்துக்கொண்டு அவனும் அவனுடைய தந்தையும் ஓடினர். ஆனால் அவர்கள் சென்றடைவதற்கு முன்பே மகாதேவன் இறந்துபோயிருந்தார். உடம்பெல்லாம் வெட்டுக்காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் அவர் கிடந்த அந்தக் காட்சியை தன்னாலேயே கற்பனை செய்ய முடியவில்லையே, மல்லிகாவிடம் எப்படி சொல்வது? அதனால்தானோ என்னவோ அவள் வீட்டிலேயே அவளிடமிருந்து இந்த விஷயத்தை மறைத்திருக்கிறார்கள். அது மட்டும் அவளுக்குத் தெரிந்திருந்தால் அவள், அவனை காதலித்திருந்திருப்பாளா என்ன?

கார் தன் வீட்டை நெருங்கிக் கொண்டிருப்பதை உணர்ந்த சுந்தர் மல்லிகாவை ஓரக் கண்ணால் பார்த்தான். அவளைப் பார்க்கவே பாவமாயிருந்தது அவனுக்கு. என்ன சொல்லி அவளைப் புரியவைக்க போகிறான்? அவள் கம்பெனியில் சேர்ந்து ஒரு வருடம் ஆகியும் அவர்கள் இருவரும் நெருங்க பழகி மூன்று மாதம் கூட ஆகவில்லை.

"மல்லி" என்றான் மெதுவாக.

"ம்?" அவளுடைய குரல் வெகுவாய் நடுங்கியதை அவனால் உணர முடிந்தது.

"என்ன யோசிக்கிறே?"

"என்னை எங்க வீட்டிலக் கொண்டு விட்டுடுங்களேன், ப்ளீஸ்." அவள் குரல் உடைந்தது அழுவதைப் பார்க்க பாவமாயிருந்தது.

சுந்தர் வண்டியை ரோட்டோரமாய் நிறுத்தி எஞ்சினை ஆஃப் செய்தான். அவள் அழுது ஓயட்டும் என்றுக் காத்திருந்தான்.

மல்லிகா முகத்தைத் துடைத்துக் கொண்டு அவனைப் பார்த்தாள்.

"அண்ணா இந்த கல்யாணத்துக்கு கண்டிப்பா ஒத்துக்கமாட்டான், சுந்தர். முதல்ல எதிர்த்தாலும் கொஞ்ச நாள் போனா சம்மதிச்சிருவான்னு நெனச்சித்தான் நான் இதுக்கு சம்மதிச்சேன். ஆனா, இப்போ நீங்க சொல்றதை வச்சிப் பாக்கும் போது அந்த நம்பிக்கையும் சுத்தமா போயிடுச்சி. அது மாத்திரமில்லை, நாம நெருங்கிப் பழகி மூணு மாசமாகியும் ஒரு முறைக் கூட நீங்க இதைப் பத்தி எங்கிட்ட பேசவேயில்லைன்னு நினைக்கும்போது என்னால தாங்க முடியலை. ஒரு வேளை உங்களுக்கு என் மீது இருக்கிற காதல்கூட ஒருவித பச்சாதபத்தால எற்பட்ட உணர்வோன்னு இப்ப தோனுது. உங்க குடும்பம் செய்த தப்புக்கு பிராயச்சித்தமாத்தான் என்னை நீங்க திருமணம் செய்துக்க தீர்மானம் செய்திருக்கீங்கன்னு நினைக்கிறேன். இந்த சூழ்நிலையில நாம....." அவள் குரல் முற்றிலுமாக உடைந்து மீண்டும் அழத் துவங்கினாள்.

சுந்தர் ஒன்றும் பேசாமல் சிறிது நேரம் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான். நெஞ்சு கனத்து அவன் கண்களில் நீர் துளித்தது.

மெளனமாய் காரை ஸ்டார்ட் செய்து அவள் வீட்டை நோக்கி வண்டியைத் திருப்பினான். வீடு வந்து சேரும்வரை இருவரும் பேசாமல் அவரவர் நினைவுகளில் மூழ்கிப் போயினர்.

கார் அவள் வீட்டின் தெரு முனையை நெருங்கியபோதே இறங்கிக் கொண்டு அவனை ஒரு முறைப் பார்த்து மெலிதாய் புன்னகைத்துவிட்டு இறங்கி விடுவிடுவென நடந்து போனாள் மல்லிகா தன் தாயிடம் என்ன சொல்வது என்று யோசித்தவாறு.

அவள் இறங்கி செல்வதை அதிக நேரம் காண சக்தியில்லாதவனாய் காரை தன் வீட்டை நோக்கித் திருப்பினான் சுந்தர்.

அவளை இனி கண்டிப்பாய் பார்க்கப் போவதில்லை என்று அவனால் உணர முடிந்தது.

***
அடுத்த நாள் காலை....

"ஏய், உனக்கென்ன பைத்தியமா? ஏன் நல்ல வேலையை விடப்போறேங்கறே" என்றும் இரையும் தாயிடம் "நா மேல படிக்கப் போறேம்மா" என்றாள் மல்லிகா.

'என்னாச்சு இவளுக்கு, நேத்திலேர்ந்து...' என்று தன் தாய் தன்னையே சந்தேகத்தோடு பார்ப்பதை அவளால் உணர முடிந்தது.

**********************


















2 comments:

Muthu said...

hi,
interesting story..keep it up..visit my site thank you

டிபிஆர்.ஜோசப் said...

நன்றி முத்து!

உங்கள் பதிவைப் பார்த்துவிட்டு எழுதுகிறேன்.