22.10.05

இறுதி நாள் (சிறுகதை)

சாலையோர உணவகத்தில் பகலுணவருந்திய சுவை நாவிலிருந்து இன்னும் மாறாத நிலையில் அடுத்த வேளை உணவிற்கு கவலைப்பட ஆரம்பித்தார் அந்த எழுபது வயதிலும் நடை தளராத வாலிபர்.

அந்த சந்தையிலிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட கடைகளில் அந்த ‘வாலிபரை’ அறியாதவர் எவருமில்லை. அவருடைய உண்மையான பெயர் யாருக்கும் தெரியாதென்பதால் எல்லோரும் அவரை ‘பெரியவரே’ என்றுதான் அழைப்பது வழக்கம். அப்போதெல்லாம் ‘இங்க பார், எம்பேரு ‘ராஜப்பார்ட் ரங்கசாமி’; ‘பெரியவருல்லே’ புரிஞ்சுதா?’ என்று பொய்க்கோபத்துடன் கையை ஓங்கிக்கொண்டு அடிக்க வருகையில் பொய்பயத்துடன் சிறுவர் முதல் பெரியவர் வரை ஓடி தப்பிப்பது வழக்கம்.

‘ராஜப்பார்ட் ரங்கசாமி’ உண்மையிலேயே நல்லதொரு நாடக நடிகாராயிருந்திருக்க வேண்டும். இந்த எழுபது வயதிலும் அவர் குரலெடுத்து பாடினால் அவரைச் சுற்றி ஒரு கூட்டமே கூடிவிடும். 1950 களில் பிரபலாமாயிருந்த நாடக, சினிமா நடிகர்களின் வசனங்களைப் பேசி, பாடி, நடித்து, ஒரு குட்டி நாடகத்தையே நடத்திவிடுவார், வாரச்சந்தை நாட்களில்.

வாரத்தில் ஒரு நாள் பரபரப்பாகிவிடும் அந்த சந்தைநாளில் இத்தகைய குட்டி நாடகங்கள் நடத்தி அதைக் காண வருபவர்கள் மூலமாக கிடைக்கும் சொற்ப வருமானத்திலேயே அடுத்து வரும் ஏழு நாட்களையும் ஓட்டிவிடுவாரேயொழிய யாரிடத்திலும் தானம் கேட்டு தொல்லை செய்யமாட்டார்.

இரவில் அவர் படுப்பதற்கு வசதியாக தன் கடையின் முன்பு ஒரு கட்டிலையும் பழைய துணிகளாலான படுக்கையையும் ஏற்படுத்தி கொடுத்திருந்தான் மாணிக்கவேல். அவரைப் பார்க்கும் போதெல்லாம் யாருமில்லா அனாதையாய் கிராமத்தில் மரித்த தன் தாய்வழி தாத்தாவின் நினைவு அவனுக்கு வரும்.

மாணிக்கவேலுக்கும் சொந்தம் என்று சொல்லிக்கொள்ள யாருமில்லாததால் அவரைத் தன்னுடனே வந்து தங்கிக்கொள்ள பலமுறைக் கேட்டிருக்கிறான். அப்போதெல்லாம், “வேண்டாம்டா மாணிக்கம், உனக்குன்னு சொந்தம்னு யாராவது வரும்போ என்னை என்ன செய்வே? மறுபடியும் நான் இதே எடத்துக்கு தானே திரும்பனும்? நா இப்பிடியே இருந்துட்டு போறேன். என்னை உட்டுடு.” என்று அவர் மறுத்தாலும் இன்றும் கடையை மூடுகின்ற நேரத்தில் அவரைப் பார்த்து “வந்துடுங்க தாத்தா, பனி வேற கொட்டுதே.” என்றான்.

அவன் சொல்வது சரிதான் என்பதுபோல் தலையை அசைத்தவர் அவனைப் பார்த்து சோகமாய் புன்னகைத்தார். “நீயும் இதே கேள்வியை எத்தனை முறைதான் கேப்பே, நானும் அதே பதிலை எத்தனை முறைதான் சொல்வேன்? இன்னைக்கென்னவோ உன்னோட வந்தா என்னான்னு தோணுதுறா. வா போலாம்.”

எதிர்பாராமல் வந்த அந்த அவருடைய சம்மதம் அவனை பரபரப்பாக்கியது. “இதோ ஒரு நிமிஷம் தாத்தா.” என்றவன் சரசரவென பலகைகளை எடுத்து அடுக்கி தன் கடையை மூடி பூட்டினான். பக்கத்திலிருந்த கடையினுள் எட்டிப் பார்த்து, “அண்ணே, ‘ராஜபார்ட்’ தாத்தாவை நான் எங்க வீட்டுக்கு கூட்டிக்கிட்டு போறேன். நீங்க கடைய மூடும் போது வெளிலைட்டை போட்டுட்டு போங்கண்ணே. அப்பத்தான் இங்க களவாணிப் பயலுக யாராச்சும் வந்தாலும் வெளீல நிக்கற தாணாக்காரவுகளுக்கு தெரியும்.” என்று வேண்டுகோள் விடுத்தான்.

“அட, என்னாடா மாய்மாலம் பண்ணே, ராஜபார்ட் இன்னைக்கி ஒத்துக்கிச்சு? நீ கூட்டிக்கிட்டு போ, எவன் இங்கன வந்து களவாடப் போறான்? இன்னைக்கி ஒரு நாளைக்கு அதுக்கு நல்ல சாப்பாடு வாங்கி குடுடா, முடிஞ்சா ஒரு ரவுண்டு கலக்கல் வாங்கி ஊத்து.” பக்கத்து கடையிலிருந்து குரல் மட்டும் வந்தது.

“சரிண்ணே. வாங்க தாத்தா.”

தினமும் வீடு திரும்பும் வழியிலேயே சாலையோரத்திலிருந்த கடையில் இரவு உணவை முடித்துக் கொண்டு, பஸ் பிடித்து வீடு செல்வது அவனுடைய வழக்கம். ஆனால் இன்று அப்படி செய்யாமல் “இதெல்லாம் எதுக்குடா மாணிக்கம்?” என்றவரின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் ஆட்டோ பிடித்து டவுணிலுள்ள பெரிய ஓட்டலில் இரண்டு பிரியாணி பாக்கெட்டும், அருகிலிருந்த ஒயின் ஷாப்பில் ஒசத்தியான சரக்கில் ஒரு பாதி குப்பியையும் வாங்கிக்கொண்டு வீடு சேர்ந்தான்.

இருவரும் கை, கால் கழுவிக்கொண்டு உணவருந்தியபோது உணர்ச்சி மேலிட்டு அவன் கைகளைப் பிடித்துக்கொண்டு கண்கலங்கிய ராஜபார்ட்டைப் பார்த்து சிரித்தான் மாணிக்கம்.

“இதெல்லாம் சாப்பிட்டு எம்புட்டு நாளாவுது? இப்பெல்லாம் எனக்கு சாதா சாப்பாடே சீரணமாரதில்லேடா. இதுலே சாராயம் வேற. என்னவோ போ, உன் ஆசையை கெடுப்பானே, ஊத்து கொஞ்சமா..”

“சும்மா குடிங்க தாத்தா, என்னைக்கோ ஒரு நாளைக்கு தானே. தெனைக்கிமா பண்ணப்போறோம்?”

வயதின் மூப்போ, சரக்கின் காரமோ இரண்டு ரவுண்டிலேயே நிலைதடுமாறி பழைய நினைவுகளில் மூழ்கி குலுங்கி, குலுங்கி அழ ஆரம்பித்த ராஜபார்ட்டை சமாதானம் செய்து உறங்க செய்துவிட்டு, இடத்தைச் சுத்தம் செய்து அவன் படுக்கையை விரித்து ‘அப்பனே சாமி, இந்த தாத்தாவுக்கு நிம்மதியைக் குடுப்பா’ என்ற போதையுடன் கூடிய முனகலுடன் மாணிக்கவேல் படுக்கையில் விழவும் அருகிலிருந்த பூங்கா மணிகூண்டில் பன்னிரண்டு முறை மணியடிக்கவும் சரியாயிருந்தது.

உண்ட உணவும் குடித்த சரக்கும் படுத்தமாத்திரலேயே அயர்ந்து உறங்கிப் போனதுமல்லாமல் தினமும் ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து குளித்துமுடித்து முதல் பஸ்ஸிலேயே புறப்பட்டுவிடும் அவன் அன்று காலைவெயில் முகத்தில் படும் வரை எழுந்திருக்கவில்லை.

“டேய் மாணிக்கம், என்னாச்சி இன்னைக்கி? உடம்பு கிடம்பு சரியில்லையா.” என்ற பக்கத்து வீட்டு பாட்டியின் குரல் கேட்டு வாரிச்சுருட்டிக்கொண்டு எழுந்தவன் பக்கத்திலிருந்த படுக்கை காலியாயிருந்ததைப் பார்த்து திடுக்கிட்டான். “பாட்டி இங்கன ஒரு வயசானவரு படுத்து கிடந்தாரே பாத்தீங்களா?”

“யாரு, ராத்திரி உங்கூட வந்த ஆளா? அதோ அங்க கக்கூஸ¤க்கிட்ட விழுந்து கிடக்கிறானே! வயசாயிருச்சேன்னு கொஞ்சம் கூட விவஸ்தையில்லாமே தண்ணியடிச்சிட்டு.. எங்கருந்துடா புடிச்சிக்கினு வந்தே? போய் பாரு. எழுப்பி கூட்டிக்கினு போ. இனிமே அந்தாள இங்கன கூட்டிக்கிட்டு வராதே சொல்லிப்புட்டேன்.”

“என்னாது, என்னாத்தா சொல்றே? அவிரு ரொம்ப நல்லவராச்சே!” என்றவாறு பதறிப்போய் ஓடிப் போய் அந்த காலனியின் பொதுக்கழிவறையை நெருங்கி அங்கு குழுமியிருந்த சிறு கூட்டத்தை விலக்கிக் கொண்டு புகுந்தான்.

அங்கே அவன் கண்ட காட்சி அவனை என்னவோ செய்ய “ஐயோ தாத்தா அநியாயமா உங்கள கொன்னுட்டேனே” என்று குரலெடுத்து அழுதான்.

இவனுக்கென்று யாருமில்லையென்று இதுவரைத் தங்களிடம் கூறி வந்தவன் இந்த கிழத்தை எங்கிருந்து பிடித்தான் என்று சுற்றிலும் கூடியிருந்தவர் அவனை வேடிக்கைப் பார்க்க, ‘என்னுடைய கடைசி நாளை சந்தோஷமாக்குனதுக்கு உனக்கு ரொம்ப நன்றிடா மாணிக்கம்’ என்று அவனைப் பார்த்து சிரிப்பதுபோல் இருந்தது அவருடைய விரிந்து திறந்திருந்த உதடுகள்.

*****************

No comments: