31.10.05

ஜாதகத்தில் பாதகம் (நகைச்சுவை நாடகம்) 2

காட்சி: 2

பத்மநாப சாஸ்திரிகள் - அப்பா
அம்பு என்கின்ற அம்புஜம் - பத்மநாப சாஸ்திரிகளின் மனைவி
நந்து - மகன்
பிந்து - மகள் (நந்துவின் தங்கை)
சிந்து - மருமகள் (நந்துவின் மனைவி)
கல்யாணத் தரகர்


(மாலை நேரம். சுவர் கடிகாரம் ஆறு முறை ஒலித்து அடங்குகிறது. அவசரம் அவசரமாக உள்ளே நுழையும் நந்து ஹாலில் டி.வி. பார்த்து கொண்டிருந்த தன் தாய் அம்புஜத்திடம் பேசுகிறான்.)

நந்து: அம்மா! அந்த புரோக்கர் மாமா வந்திண்டிருக்கார். நான் வீட்ல இல்லேன்னு சொல்லிடு. நான் மேலே பெட்ரூம்ல இருக்கேன். அந்த கழுத்தறுப்பு பிராமணன் போனதும் வரேன். (மாடியேறி ஓடுகிறான்)

அம்பு: (சிரிப்புடன்) அப்பனாட்டம் சரியான பயந்தாங்கொள்ளி.

பத்து: (மாடியிலிருந்து இறங்கி வருகிறார். கையில் வாக்கிங் ஸ்டிக்) ஏன்டி என் தலையை ஏன் உருட்டறே? நான்தான் பயந்தாங்கொள்ளி, ஒத்துக்கறேன். நீ உன் புள்ளய தைரிய சிகாமணியா வளர்த்திருக்க வேண்டியது தானே. அத விட்டுட்டு ...
உன் புள்ள எதுக்கு பிசாசைக் கண்டா மாதிரி ஓடறான்? ஏதாவது கடன்காரன் துரத்திக்கிட்டு வரானா? அந்த விஷயத்துல அவன் உன்னை மாதிரிதான். எங்கெல்லாம் கடன் கிடைக்குதுன்னு கேளு, புட்டு புட்டு வைப்பான். கடன் கார பய மவன். இப்படியே போனா மஞ்சக்கடுதாசி தான்.. நான் வாக்கிங் போயிட்டு வரேன். உனக்கெதாவது வாங்கணுமா?

(வாசல் வரை போனவர் வாசல் மணி ஒலிக்க, திரும்பி மனைவியைப் பார்க்கிறார்.)

பத்து: கடன்காரன் தான் போலிருக்குது. என்ன சொன்னான் உன் பிள்ளையாண்டான்? வீட்ல இல்லேன்னு சொல்ல சொல்லியிருப்பானே?

அம்பு: முதல்ல யாருன்னு பாருங்கோ. கொஞ்சம் விட்டா பேசிண்டே போவேளே? அந்த கல்யாணத் தரகாராயிருந்தா நந்து வீட்ல இல்லேன்னு சொல்லி அனுப்பி வைங்கோ.

(பத்மநாபன் கதவைத் திறக்கிறார். கல்யாணத் தரகர் அவரை ஒதுக்கித் தள்ளி விட்டு ஹாலில் நுழைகிறார்)

தரகர்: தள்ளுங்காணும். உங்க வீட்டு காலிங்பெல்லை அடிச்சே என் நடு விரல் தேஞ்சிடுச்சு. ஆத்துல நந்து இருக்கானா? இருக்கானா என்ன இருக்கானா? அதான் தெருக்கோடிலருந்து அவன் வீட்டுக்குள்ளாற ஓடுறத பாத்துட்டுதானே பின்னாலேயே ஓடி வரேன். கூப்பிடுங்கோ. மாடிக்கு ஓடிட்டானா?

(தரகர் மாடியேற முயல இடையில் புகுந்து மறிக்கிறார் பத்மநாபன்.)

பத்து: ஓய் எங்கே போறீர்? விட்டா அடுக்களை வரையிலும் போயிடுவீர் போல. நில்லும்யா. என்ன விஷயம், எதுக்கு நந்துவைத் தேடறீர்?

தரகர்: அதெல்லம் உம்மண்டை சொல்லப்படாது ஓய். அப்புறம் இந்த ஆம் ரெண்டுபட்டு போயிடும். எனக்கெதுக்கு அந்த பொல்லாப்பு? நீர் நந்துவைக் கூப்பிடும்.

(சிந்து சமையலறையிலிருந்து வெளியே வந்து தரகரைப் பார்த்துவிட்டு மீண்டும் உள்ளே செல்ல முயல்கிறாள். தரகர் துள்ளிக் கொண்டு அவள் பின்னே ஓடுகிறார். பத்மநாபன் தன் மனைவியைப் பார்த்து என்ன நடக்கிறது என்று சைகையால் பேசுகிறார். அம்புஜம் எனக்கென்ன தெரியும் என்று தலையை அசைக்கிறாள்)

தரகர்: ஏண்டிமா இது நோக்கே நல்லாருக்கா? நீயும் நந்துவும் சேர்ந்துண்டு இந்த ஏழை பிராமணனை இந்த பாடு படுத்தறேளே. நீ இந்தாத்துக்கு வரணும்னு எத்தனைப் பாடுபட்டிருக்கேன்? இப்படி அநியாயமா ஏமாத்தறேளே?

பத்து: ஓய் தரகரே இங்க வாரும். என்ன இது என்னென்னவோ பேத்தரீர்? எங்காத்து மருமக உம்மை ஏமாத்தறாளா? என்னய்யா சொல்றீர்?

தரகர்: உம்மாண்டை சொல்ல முடியாதுய்யா. நீர் நந்துவைக் கூப்பிடும். சொல்றேன்.

(மாடியைப் பார்த்தபடி உரத்த குரலில்)

நந்து, இன்னும் அஞ்சு எண்றதுக்குள்ளே நீ இறங்கி வரலைனா...(வலது கையை உயர்த்தியபடி) ஒண்ணு, ரெண்டு, மூணு...

(நந்து தட தடவென படிகட்டில் ஓடி வருகிறான். தரகரை அணுகி அவர் வாயைப் பொத்துகிறான்.)

நந்து: மாமா. என்னு இது சின்ன பசங்களாட்டமா, ஒண்ணு, ரெண்டுன்னுட்டு. டிரஸ் மாத்த போயிருந்தேன். வராமலேயா போயிடுவேன். இப்ப சொல்லுங்கோ. உங்களுக்கு என்ன வேணும்?

பத்து: நந்து என்னடாயிது? முதல்லே தரகரைப் பாத்துட்டு ஓடி ஓளிஞ்சே. இப்போ டிரஸ் சேஞ்ச் பண்ண போனேன்னு சொல்றே? என்ன பித்தலாட்டாம் இது?

நந்து: நீங்க சும்மா உங்க வேலைய பாத்துண்டு போங்கோ. இது எனக்கும் தரகர் மாமாவுக்கும் இடையில உள்ள ஒரு சின்ன மிஸ் அன்டர்ஸ்டான்டிங். நாங்களே தீத்துக்குறோம். நீங்க வேற இடையில புகுந்து குட்டைய குழப்பாதீங்கோ. என்ன மாமா சொல்றேள்?

தரகர்: அதானே. நீங்க எதுக்கு இதுலே மூக்கை நுழைக்கிறேள்? எங்கேயோ கிளம்பிண்டிருந்தேளே. போய்ட்டு வாங்கோ.

பத்து: எப்படியோ போங்கோ. நான் போறேன். அம்புஜம் நீயும் வரயா? அப்பிடியே பார்த்தசாரதி கோயில்ல இன்னைக்கி வாரியாரோட யாரோ சிஷ்யனாம், நல்லா பேசராராம், நம்ம நாராயணன், அதான்டி அந்த சொட்டத் தலையன் நம்பியோட மருமகன், சொன்னான். வாயேன். எட்டு மணிக்கெல்லாம் முடிஞ்சிரும்.

அம்பு: (டி.வியிலிருந்து கண்ணெடுக்காமல்) நீங்கோ போயிட்டு வாங்கோ நான் கோலங்களை மிஸ் பண்ணமுடியாது. இன்னைக்கு அபி எப்பிடி அந்த தாதாவை டீல் பண்றான்னு காமிப்பான்.

பத்து: (சலிப்புடன்) ஆமா, இந்த ஆத்துலருக்கறவாளை டீல் பண்றதுக்கே நோக்கு தெரியலை. அதுல சீரியல்ல இருக்கறவா எப்படி டீல் பண்றான்னு பாத்து என்ன ஆவப் போறது? நல்ல அம்மா, நல்ல குடும்பம். (மருகளைப் பார்த்து) ஏம்மா சிந்து நோக்கு கறி கா ஏதாச்சும் வேணுமா? லிஸ்ட் தந்தா போறாது, பணமும் தரணும். எங்கிட்ட தம்படி பைசா இல்லை.

(சமையல் கட்டிலிருந்து வெளியே வந்து தன் கணவனைப் பார்க்கிறாள். என்ன சொல்ல என்று சைகையால் பேசுகிறாள். நந்து தலையை வேண்டாம் என்று அசைக்கிறான். சிந்து தன் மாமனாரைப் பார்த்து வேண்டாம் என்று தலையை அசைக்கிறாள்)

பத்து: அடடா. டைலாக்கே இல்லாம பாலசந்தர் சினிமால வர்றா மாதிரின்னாயிருக்கு நீங்க ரெண்டு பேரும் பேசிக்கறது? கறி கா ஒண்ணும் வேணாம். அவ்வளவு தானே. அதுக்கு ஏன் நீ நந்துவைப் பாத்து டான்ஸ் ஆடறே?

சிந்து: (தன் மாமனாரைப் பார்த்து தன் முகத்தை சுளிக்கிறாள்) நான் வேணாம்னு தானே சாடை காண்பிச்சேன். நான் டான்ஸ் ஆடறேன்னு சொல்றேளே மாமா (கண்ணைக் கசக்குகிறாள்).

அம்பு: ஏன்னா? உங்களுக்கு எத்தனை சொல்லியிருக்கேன் அவாளுக்கிடையில நீங்க மூக்கை நீட்டாதீங்கோன்னு. விவஸ்தையேயில்லைன்னா. சித்தேயிருங்கோ, நானும் வரேன்.

(அம்புஜம் பரபரவென்று எழுந்து உள்ளே போகிறாள். சிறிது நேரத்தில் வெளியே வந்து கணவருடன் வாசல் வழியே வெளியேறுகிறார்கள்)

சிந்து: அப்பாடா, நிம்மதி. (தன் கணவனைப் கண்ணால் சாடை செய்கிறாள். நந்து உடனே அவளை நோக்கி ஓடுகிறான். இருவரும் தரகருக்கு கேளாவண்ணம் உரையாடுகிறார்கள்) ஏன்னா உங்களுக்கு ஏதாவது இருக்கா? தரகர் மாமாவை ஏன் இழுத்தடிக்கிறேள்? கொடுக்கறதா பிராமிஸ் பண்ணதை குடுத்துருங்களேன். இல்லாட்டி ஏதாவது ஏடாகூடமா செஞ்சி வைக்க போறார். (சரி, சரி என்று நந்து தலையாட்டிக் கொண்டு தரகரைப் பார்க்கிறாரன்.)

நந்து: மாமா நான் எவ்வளவு செய்யணும்னு சொல்றேள்?

தரகர்: நந்து நீ கல்யாணம் முடிஞ்சவுடனே கொடுத்திருந்தியானா அஞ்சாயிரத்தோட போயிருக்கும். நீ கொடுக்கலைன்னு மாத்திரமில்லை, என்னை பலமுறை அலைய வச்சிட்டே. அதனால வட்டி, என்னோட மனக் கஷ்டம் எல்லாம் சேத்து ஐயாயிரத்து ஐநூறு குடுத்திரு நான் சந்தோஷமா போயிடறேன். என்ன சொல்றே?

நந்து: ஏன் மாமா, இது ரொம்ப ஓவரா தெரியலை?

தரகர்: பேசிட்டேயிருந்தேனா மீட்டர் ஏறிண்டே போகும் சொல்லிட்டேன்.

நந்து: என்ன மாமா ஒரேயடியா எகிர்றேள்?

தரகர்: பின்ன என்னை என்ன பிச்சைக்காரன்னு நினைச்சியா? உனக்கு என் தந்திரத்தால கல்யாணமே நடந்துது. மறந்துட்டியா?

நந்து: ஐயோ மாமா, சத்தம் போடாதேள். பிந்து வர்ற நேரம்.

(அப்போது பிந்து உள்ளே நுழைகிறாள். பேயறைந்தால் போல் நந்துவும் சிந்துவும் விழிக்க இருவரையும் பார்த்து முறைக்கிறாள்)

பிந்து: என்னடா அண்ணா பிசாசை கிசாசைப் பாத்தியா, இப்பிடி பேய் முழி முழிக்கறே? (உரக்க சிரிக்கிறாள்)

சிந்து: (சுதாரித்துக்கொண்டு, பிந்துவை முறைக்கிறாள்) என்ன பிந்து அண்ணான்னு கொஞ்சம் கூட மரியாதையில்லாம, அதுவும் வேத்தாள் நிக்கறச்சே..

தரகர்: அம்மா சிந்து, நான் வேத்தாளில்லே, இந்த ஆத்தை பொறுத்தவரை. இவா ரெண்டு பேரையும் சிறிசுலேருந்தே நேக்கு பழக்கம். என்னடா நந்து? கேட்டுண்டேயிருக்கே. சொல்லேன்டா.

(நந்து தன் மனைவியைப் பார்த்து உள்ளே போ என்று சைகைக் காண்பிக்கிறான். சிந்து உள்ளே போகிறாள், மூவரையும் முறைத்து பார்த்தவண்ணம்.)

பிந்து: என்னடா அண்ணா, மன்னி பார்வையாலேயே என்னை எரிச்சிருவா போல. சொல்லி வை, நான் அதுக்கெல்லாம் அசர்ற ஆளில்லேன்னு. (தரகரைப் பார்க்கிறாள்) என்ன மாமா உங்களுக்கும் நந்துவுக்கும் ஏதாவது பிசினஸ்சா? அன்னைக்கி என்னடான்னா தெரு முனைல ரெண்டு பேரும் காரசாரமா பேசின்டிருந்தேள். இன்னைக்கி என்னன்னா வீட்ல யாருமில்லாத சமயத்துல அண்ணா-மன்னி கூட்டணியமைச்சு பேசிண்டிருக்கேள். அண்ணாவை நம்பாதீங்கோ, கவுத்துறுவான், சொல்லிட்டேன். (உள்ளே போகிறாள்.)

நந்து: (தரகரிடம்) மாமா நீங்க இப்ப போயிட்டு நாளைக்கு ஆபீஸ் பக்கம் வாங்களேன். நீங்க கேட்ட பணத்தைத் தந்துடறேன். கோவிச்சிக்காதீங்கோ. (உள்ளே போக முயற்சி செய்கிறான்)

தரகர்: பாத்தியா, சித்த நாழி முன்னாலதானே கேட்டேன். என்னைப் பைத்தியக்காரன்னு நினைச்சியான்னு. ஞாயிற்றுக்கிழமைல எந்த ஆபீஸ் திறந்து வச்சிருக்கான்.

நந்து: (பின் தலையில் அடித்துக் கொள்கிறான்) சாரி மாமா. நாளைக்குன்னா மண்டே மாமா. இப்போ கூட குடுத்திருவேன். பிந்துக்கு மூக்குல வேத்துரும், அவளுக்கு தெரிஞ்சிடுச்சின்னா வேற விணையே வேணாம். ப்ளீஸ் மாமா இதான் லாஸ்ட்.

தரகர்: (நந்துவுக்கு மிக அருகில் சென்று) பர்சுல எவ்வளவு வச்சிருக்கே? நூறு, இருநூறு.. அத இங்க தள்ளு, மீதியை ஆபீஸ்ல வந்து வாங்கிக்கறேன்.

(நந்து மாடியைப் பார்க்கிறான். பிறகு பர்ஸை எடுத்து ஐந்தாறு நூறு ரூபாய் நோட்டுகளை எடுத்து அதிலிருந்து இரண்டு நோட்டுகளை எடுக்க முயலுகிறான். தரகர் முழுவதையும் பிடித்துக் கொள்கிறார். நந்து விடாமல் அவர் கையைத் தன்னை நோக்கி இழுக்க இருவருக்கும் ஒரு மினி டக் ஆஃப் வார் நடக்கிறது. பிந்து கையில் டவலுடன் இறங்கி வருகிறாள் இதைப் பார்த்தவாறு..)

பிந்து: என்னடா அண்ணா? என்ன நடக்குது இங்கே? எதுக்கு மாமாவுக்கு பணம் குடுக்கறே? என்ன மாமா?

(நந்து கையை விலக்கிக் கொள்ள, முழு பணத்தையும் சட்டென்று தன் சட்டைப் பாக்கெட்டில் வைத்துக் கொள்கிறார். பிந்து இருவர் நடுவிலும் நின்று இருவரையும் மாறி மாறி பார்க்கிறாள்.)

தரகர்: நந்து, பிந்து (உள்ளே எட்டி பார்த்து) சிந்து நான் வரேன். (விட்டால் போதும் என்பதுபோல் விரைவாக வெளியேறுகிறார்)

(தரகர் போவதையே பார்த்துக் கொண்டிருக்கும் பிந்து அவர் போனதும் திரும்பி நந்துவைப் பார்க்கிறாள்)

பிந்து: இப்ப சொல்லு, எதுக்கு அவருக்கு பணம் குடுத்தே? அவர் கூட ஏதாவது பிசினஸ்சா? (கேலியுடன் சிரிக்கிறாள்) தரகர் கூட என்ன பிசினஸ் பண்ணமுடியும், தெரியாதா? நோக்கு இது தேவையா? மன்னிக்கு தெரியுமா, உன் பிசினஸ் விஷயம்? (உள்ளே திரும்பி, கையை குவித்து வாயில் வைத்துக்கொண்டு உரத்த குரலில் கூப்பிடுகிறாள்) மன்னி உங்க ஐடியா தானா இது?

நந்து: வேண்டாம் பிந்து, ஓவரா போகாதே. உன் வேலையைப் பாத்துண்டு போ (விரலை உயர்த்தி காண்பிக்கிறான்). எல்லாம் அப்பா குடுக்கற இடம். (சமையல் அறையை நோக்கி போகிறான்).

பிந்து: (அவன் பின்னாலேயே போகிறாள்) கோவிச்சிக்காதேடா அண்ணா சும்மா ஒரு தமாஷ¤க்குத்தானே சொன்னேன். இப்பிடி கோச்சுக்கறே? (டவலுடன் குளியறைக்குள் சென்று கதவை மூடிக் கொள்கிறாள்)

(நந்து சமையல் கட்டில் நிற்கும் தன் மனைவி சிந்துவிடம் நெருங்கி சென்று அவள் தோளில் கை வைத்து தன்னை நோக்கித் திருப்புகிறான்.)

நந்து: ஏய், என்னாச்சி ஏன் உன் கண் கலங்கியிருக்கு? (சிந்துவின் கண்ணீரைத் துடைத்து விடுகிறான்) சீ லுசு. பிந்து சொன்னதுக்காக வருத்தப் படறியா? அவளை நான் பாத்துக்கறேன். நீ கவலைப் படாதே.

சிந்து: (நந்துவிடமிருந்து விலகிக் கொள்கிறாள்) தள்ளி நில்லுங்கோ. இதையும் உங்க தங்கை பாத்துட்டு ஏதாச்சும் சொல்லப் போறா. இருந்தாலும் உங்காத்துல அவளுக்கு ரொம்பத்தான் எடம் கொடுத்திருக்கேள். எங்காத்துல நான் ஒரு வார்த்தைப் பேசப்படாது, அப்பா வாயில போட்டனாம்பார். (நந்துவை நெருங்கி வந்து குரலை இறக்கி பேசுகிறாள்) என்னண்ணா இந்த தரகர் ஏதாச்சும் ஏடா கூடமா செஞ்சி வைக்கப் போறார். அவருக்கு குடுக்கறத குடுத்து தொலைச்சிருங்கோ. (குளியலறையைத் திறந்துக் கொண்டு பிந்து வெளியே வருவதைக் பார்த்துவிட்டு நந்துவைப் பிடித்து வெளியே தள்ளுகிறாள்) போய் அந்த ஹால்ல உக்காருங்கோ. மாமி வர்றதுகுள்ளே சமையலை முடிக்கணும்.

பிந்து: (தலையை துடைத்தபடி சமையலறைக்குள் நுழைகிறாள்) மன்னி காப்பி கிடைக்குமா?

சிந்து: (முறைப்புடன்) ஏன், நீயே போட்டுக்கயேன். எனக்கு ராத்திரி டிபனை முடிக்கணும். இந்தாத்துல தான் ஓரோருத்தருக்கு ஓரோரு டிபன்.

பிந்து: என்ன மன்னி கோபமா? நானும் அண்ணாவும் இப்படிதான் ஒருத்தரை ஒருத்தர் அப்பப்போ கலாய்ச்சிப்போம். அது மாதிரிதான் இன்னைக்கும். அதெல்லாம் அவனும் பெரிசா எடுத்துக்க மாட்டான், நானும் அப்படித்தான். உங்களுக்கு பழக்கமில்லாததாலதான் நீங்க ஃபீல் பண்றேள். ஓ கே. உங்களுக்கு கஷ்டமாயிருந்தால் நானே காப்பி கலந்துக்கறேன். அந்த டிகாக்ஷனை மட்டும் எடுத்துக் குடுங்க. (பிந்து கையை நீட்டுகிறாள்)

சிந்து: (பிந்துவின் கையைத் தள்ளிவிடுகிறாள்) சரி, சரி, நீ போய் ஹால்ல உக்கார். நான் கலந்து கொண்டு வரேன். (பிந்துவைப் பார்த்து புன்னகைக்கிறாள்).

பிந்து: தாங்க்ஸ். (ஹாலுக்கு போகிறாள். நந்துக்கு நேர் எதிர் சோபாவில் அமர்ந்து டி.வி.யை ஆன் செய்கிறாள்.)

நந்து: பிந்து, நீ மன்னிங்கற ரெஸ்பெக்ட் நீ குடுக்க மாட்டேங்கறேன்னு சிந்து ஃபீல் பண்றா. புரிஞ்சுக்கோ.

பிந்து: (டி.வி.யிலிருந்து கண் எடுக்காமல் பதில் சொல்கிறாள்) ஓகே, ஓகே, நான் மன்னிக்கிட்டே சாரி சொல்லிட்டேன். அம்மா எங்கே?

நந்து: அப்பாக்கூட பார்த்தசாரதி கோயிலுக்கு போயிருக்கா. நைனோ க்ளாக் ஆவும்னு நெனக்கிறேன்.

பிந்து: (ஆச்சரியத்துடன் திரும்பி பார்க்கிறாள்) கோலங்களை விட்டுட்டு எப்படி போனா? ஆச்சரியமாயிருக்கே. (தொலைப் பேசி அடிக்கிறது. இருவரும் ஒருவரைப் பார்க்கின்றனர், ‘நீ எடு’ என்பது போல். சில நொடிகளுக்கு பிறகு, பிந்து எடுக்கிறாள்) ஹலோ, யாரு? ஒரு நிமிஷம். (ரிசீவரைப் பொத்திக்கொண்டு நந்துவைப் பார்க்கிறாள்) மன்னிக்குத்தான். கூப்பிடு. (ரிசீவரை பக்கத்து டேபிளில் வைத்து விட்டு சென்று சோபாவில் அமர்ந்து டி.வி. ஒலியைக் குறைக்கிறாள்)

நந்து: சிந்து உனக்கு ஃபோன். (உள்ளே திரும்பி உரக்க கத்துகிறான்.)

(சிந்து கையை சேலையில் துடைத்துக்கொண்டு வந்து ஃபோனை எடுக்கிறாள்.)

சிந்து: ஹலோ யாரு? ஹாய் அம்மா! எப்படியிருக்கே? நான் நல்லாயிருக்கேன்.

(பிந்து எழுந்து சமையலறைக்குள் போய் கலந்து வைத்திருந்த காப்பியை எடுத்துக் கொண்டு மாடியேறுகிறாள். சிந்து தொலைப்பேசியில் தொடர்ந்து பேசுகிறாள். நந்துவை அருகில் வரச் சொல்லி சிந்து சைகைக் காண்பிக்க நந்து எழுந்து அருகில் செல்கிறான்.)

நந்து: என்னவாம், என்ன சொல்றா?

சிந்து: (ரிசீவரை மூடிக் கொண்டு) எல்லாம் அந்த தரகர் விஷயம் தான். வீட்டுக்கு போன் பண்ணி காசு கேக்கறாராம். ஏதாவது பிரச்சினையான்னு அம்மா கேக்கறா. என்ன சொல்ல?

நந்து: (குரலை தாழ்த்தி பேசுகிறான்)பிரச்சினை ஒண்ணுமில்லைன்னு சொல்லு. காசு குடுக்க வேண்டாம். நான் மண்டே பாத்துக்கறேன். பிந்து வீட்ல இருக்கா, அப்புறமா பேசறேன் சொல்லிட்டு சட்டுன்னு வை. (மாடியை பார்க்கிறான்.)

No comments: