21.10.05

விடியலை நோக்கி...

தூத்துக்குடியில் இருந்து சென்னை நோக்கி புறப்பட்ட அந்த இரவு நேர விரைவு பேருந்தில் அவளைத் தவிர இரண்டோ, மூன்றோ பெண்களே இருந்தனர்.

அவளுக்கு அடுத்த சீட்டில் யாரும் இல்லாததால் ஏற்கனவே உறங்கிவிட்டிருந்த குழந்தையை அதில் கிடத்தினாள். கலைந்திருந்த சேலையையும் தலை முடியையும் சரி செய்துக் கொண்டு அருகில் இருந்த தண்ணீர் பாட்டிலைத் திறந்து குடித்தாள்.

பஸ் புறப்பட இன்னும் பத்தோ, இருபதோ நிமிடங்கள் இருக்கும் என்று நினைத்தவள், இறங்கி போய் ஏதாவது சாப்பிட வாங்கலாம் என்று எழ முயன்ற போது சரவணன் அவசர, அவசரமாய் ஓடி வருவது தெரிந்து மீண்டும் அமர்ந்துக் கொண்டாள். அவன் பார்வையில் தான் பட்டுவிடக் கூடாது என்ற முனைப்போடு தலையை சன்னலைவிடக் கீழே தாழ்த்திக் கொண்டாள்.

போதும். கடந்த இரண்டு வருடமாய் வாழ்ந்த போலி வாழ்க்கையை இனியும் தொடர அவள் தயாராயில்லை. சரவணனைக் குற்றம் சொல்வதில் ஒரு பயனும் இல்லை. அவன் ஒரு வாயில்லாப் பூச்சி. அம்மாப் பிள்ளை. அம்மா பேச்சுக்கு மறுபேச்சு பேசத் தெரியாத சாது. அப்படி ஒரு தாய்க்கு இப்படி ஒரு பிள்ளையா என்று பல முறை அவள் வியந்ததுண்டு.

அவனுடைய தாயின் வக்கிரப் புத்தியை அவன் புரிந்துக் கொண்டதேயில்லை. அல்லது புரியாதது போல் நடித்தானோ!

கல்யாணம் முடிந்து, பிறந்து வளர்ந்த சென்னையை விட்டு தூத்துக்குடி மாதிரி ஒரு பட்டிக்காட்டுக்கு வாழ வந்ததே ஒரு பெரிய முட்டாள்தனம். எல்லாவற்றிற்கும் அண்ணாவும் எப்படியாவது இந்தச் சனியன் ஒழிந்துப் போனால் போதுமென்று கொஞ்ச நாளாகவே கருவிக் கொண்டிருந்த அண்ணியும்தான் காரணம். இப்போது வருத்தப்பட்டு என்ன பலன்?

மாப்பிள்ளை வீட்டாரின் விலாசம் தெரிந்தவுடனே நமக்குப் புரிந்திருக்க வேண்டும். நம். 09, குறுக்குத் தெரு, மட்டக்கடை! இடத்தின் பெயரும் தன் கணவரின் கோழைத்தனமும், மாமியாரின் குணாதியசமும் ... .. என்ன பொருத்தமான சேர்க்கை!

குறுக்குப் புத்தியும் மட்டமான சிந்தனைகளும்!

போதும். அவளுக்கு இப்போது நினைத்தாலும் நம்ப முடியவில்லை. தன்னால் எப்படி இரண்டு வருடங்கள் பொறுத்துக் கொள்ள முடிந்தது என்று!

ஓட்டுனர் வண்டியில் ஏறி புறப்பட தயாராவதை உணர்ந்தவள் தலையை லேசாகத் தூக்கி சரவணன் போய்விட்டானா என்று பார்த்தாள். ஒவ்வொரு பஸ்சாக ஏறி இறங்கிக் கொண்டிருந்தவன் தன் பஸ்சை நோக்கி வருவதைப் பார்த்துப் பதறிப்போய் குழந்தையைக் கிடத்தியிருந்த சீட்டில் தலையை வைத்துப் படுத்துக் கொண்டாள்.

சரவணன் பஸ்சில் ஏறும் முன்பு வண்டியை எடுக்க வேண்டுமே கடவுளே என்று மனதிற்குள்ளேயே பிரார்த்தித்தாள். கடவுள் அவள் பிரார்த்தனையைக் கேட்டிருக்கவேண்டும். சரவணன் வண்டியை நெருங்கவும், ஓட்டுனர் பஸ்சை நகர்த்தவும் சரியாயிருந்தது.

‘அப்பாடா’ என்ற நிம்மதிப் பெருமூச்சுடன் அவள் தலைநிமிர்ந்தாள், பஸ் இன்னும் நிலையத்தை விட்டு வெளியேறவில்லை என்பதை உணராதவளாய். அவள் தலையை நிமிரவும் சரவணன் அவளைப் பார்த்துவிட்டான். ‘சரோ, சரோ’ என்று பெரும் குரல் எழுப்பியவாறு வண்டியின் பின்னே ஓடிவர ஆரம்பித்தான். வண்டியில் இருந்த எல்லோரும் அவனைத் திரும்பிப் பார்க்க, அவன் ஓடி வந்து அவள் இருந்த இருக்கையின் சன்னலருகே வந்து அவளைக் கெஞ்ச ஆரம்பித்தான், “சரோ, போகாத. ப்ளீஸ், நான் சொல்றதக் கேளு. வண்டியை விட்டு இறங்கு”.

வண்டியிலிருந்த எல்லோரும் அவளைத் திரும்பி பார்க்க, அவளுக்கு மானம் போனது. ‘புத்திக் கெட்ட மணுஷன். வீட்டில வாங்குன மாதம் போறாதுன்னு இங்க வேற வந்து.. சே!’ என்று மனதிற்குள் அவனை சபிக்கத் துவங்கினாள்.

சரவணன் ஓடி வருவதை எட்டிப் பார்த்த ஓட்டுனரும் வண்டியை நிறுத்த அவன் ஓடி வந்து முன்பக்கக் கதவைத் திறக்க முயற்சித்தான். “என்ன சார் பிரச்சினை? யார் நீங்க?” என்றான் நடத்துனர் கதவைத் திறக்காமல்.

“சார், நான் அதோ உக்காந்திருக்கற லேடியோட புருஷன். வீட்ல கொஞ்சம் பிரச்சினை. அவங்க வீட்ல யாருமில்லாத நேரம் பார்த்து கிளம்பி வந்துட்டாங்க. தயவு செய்து அவங்களை கொஞ்சம் இறக்கிவிட்ருங்க.”

அவன் கெஞ்சுவதைப் பார்த்த நடத்துனர் அவள் பக்கம் திரும்பி, “என்னம்மா, இரங்கிக்கிறீங்களா?” என்றார்.

முதலில் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்த சரோஜா “இல்லீங்க, நான் இரங்கலை. நீங்க வண்டியை எடுங்க” என்றாள் தீர்மானமாக.

சரவணன் அவள் இருந்த ஜன்னலருகே வந்து கெஞ்ச ஆரம்பித்தான். “சரோ ப்ளீஸ், பிரச்சினை பண்ணாம இறங்கி வா. வீட்லப் போய் பேசிக்கலாம்”

அவள் கோபத்துடன் ‘முடியாது’ என்று தலையை அசைத்து ஓட்டுனரிடம், “சார் நீங்க வண்டியை எடுங்க. நான் இரங்கறதாயில்லை” என்றாள்.

இருவரையும் மாறி, மாறிப் பார்த்த ஓட்டுனர் வண்டியை மெல்ல எடுத்தான். வண்டியிலுள்ள எல்லோரும் தன்னையே பார்ப்பதை சட்டை செய்யாமல் விழித்தெழுந்து அழும் குழந்தையை சமாதானப் படுத்தலானாள். வண்டியின் வேகம் கூடுவதை கவனித்த சரவணன் சலிப்புடன் நின்று விட்டான்.

வண்டியில் இருந்த பயணிகளும் நடந்து முடிந்த நாடகத்தை அசை போட்டவாறு அவரவர் சிந்தனையில் ஆழ்ந்துப் போயினர்.

********

பஸ் முன்னோக்கி ஓட அவளுடைய எண்ணங்கள் பின்னோக்கி ஓடத் தொடங்கின.

அவள் முதல் முதலாய் தன் மாமியார் வீட்டு வாசலை மிதித்த நாளை நினைத்துப் பார்த்தாள். நல்ல நாள், நல்ல நேரம் எல்லாம் பார்த்து அவளை மாமியார் வீட்டுக்கு குடி புக அனுப்பி வைத்த அண்ணன் குடிபுகுந்த வீட்டாரின் பூர்வீகத்தை விசாரிக்காமல் விட்டதுதான் அவளுடைய துரதிஷ்டம்.

அண்ணாவுக்கு திடீரென்று உடல் சுகமில்லாமல் போனதால் அவளைப் புகுந்த வீட்டில் கொண்டுவிட அம்மாவும் அண்ணியும் மட்டும் தான் அவளுடன் வந்தார்கள். புதுமணத் தம்பதியர் வீட்டு வாசலில் வந்து இறங்கியவுடனே தன் சுயரூபத்தைக் காட்ட ஆரம்பித்தனர் அவளுடைய கணவர் குடும்பத்தார். கல்யாணத்தின்போது அவர்கள் குடும்பத்தாரை சரியாகக் கவனிக்கவில்லையாம். அவள் கூட வந்த அம்மாவையும் அண்ணியையும் மட்டு மரியாதையில்லாமல் ஆளுக்கொரு பக்கம் பொரிந்துத் தள்ள ஆரம்பித்தனர்.

அம்மா ஒரு பாவம். வாழ்க்கையில் எந்தவித இன்பத்தையும் அனுபவிக்காதவள். பேருக்கு ஒரு கணவன். ஒரு வேலையும் செய்யத் துப்பில்லாத, முழுச் சோம்பேறியான, ஒரு கவலையும் இல்லாத மனிதன்.

சரோஜாவின் தாத்தா தான் அவர்களுக்கு எல்லாமாக இருந்தார். அவருடைய உதவியுடன் அண்ணாவும் அவளும் பத்தாவது வரை படிக்க முடிந்தது. அண்ணாவோட அதிர்ஷ்டம் படித்தவுடனே நல்ல வேலை கிடைத்தது. அவர்களுடைய வீட்டில் செழிப்பும் வந்தது. அவளையும் அம்மாவையும் அவன் நன்றாகக் கவனித்துக் கொண்டான். அப்பாவைக் கண்டாலே அவனுக்குப் பிடிக்காது. அவனுடைய உதாசீனத்தை சகிக்க முடியாமல் ஒரு நாள் அவர் வீட்டை விட்டே போய்விட்டார். அம்மா அவரைக் கண்டுப் பிடிக்க பலவாறு முயன்று பார்த்தாள். ஒன்றும் பலனளிக்காமல் போகவே சோர்ந்துப் போய் விட்டாள். அன்றிலிருந்து அம்மா அதிர்ந்து ஒரு வார்த்தைப் பேசி அவள் கேட்டதில்லை. கணவன்தான் இருந்தும் இல்லாமல் போய்விட்டானே பிறகு இந்த பொட்டும் பூவும் எதற்கு என்று தானே தனக்கு விதவைக் கோலத்தைக் கொடுத்துக் கொண்டாள். சரோஜா எத்தனைச் சொல்லியும் கேட்கவில்லை.

அண்ணா அலுவலகத்தில் தன்னுடன் வேலைப் பார்த்த ஒரு பெண்ணைத் திருமணம் செய்துக் கொள்ளப் போகிறேன் என்று வந்து நின்ற போதும் ‘சரோ இருக்கிறாளேடா. அவளுடைய கல்யாணத்தை முடிச்சிட்டு போறாதா’ என்று சொல்லிப் பார்த்தாள். ஆனால் அவன் கேட்காமல் ஒரு நாள் மாலையும் கழுத்துமாய் அண்ணியுடன் வந்து நின்றபோது அவள் ஒன்றும் எதிர்த்துப் பேசவில்லை.

சாதுவாய் வந்த அண்ணி மூன்றே மாதத்தில் அவளை ஒரு வேலைக்காரி ஸ்தானத்தில் கொண்டு நிறுத்தியபோதோ அல்லது அதைத் தட்டிக் கேட்கத் துணிவில்லாமல் அம்மாவை ‘அனுசரித்துப் போயேம்மா’ என்று அண்ணா சொன்ன போதோ அவள் ஒன்றும் கவலைப்படவில்லை. சரோஜாவிடம் ‘நீ ஒண்ணும் கவலைப் படாதேடி. வேற வீட்டுக்கு போகவேண்டிய பொண்ணு. அண்ணியைப் பகைச்சுக்காதே. அவ தயவில்லாட்டி உனக்கு ஒண்ணும் செய்ய மாட்டான் ஒங்க அண்ணன்’ என்று அவள் வாயையும் கட்டிப்போட்ட சாதுவான, மிருதுவான பூ போன்றவள் அவளுடைய அம்மா.

அவளைப் போய் ‘ஏம்மா, உனக்கு அறிவிருக்கா? புதுசா கல்யாணமானப் பொண்ணை புகுந்த வீட்டுக்கு கூட்டி வந்து விட தாலியறுத்தவ நீ வந்திருக்கியே. தள்ளி நில்லு.’ என்று வார்த்தைகளை கொதிநீராய் வீசிய போதும் அவள் ஒன்றும் பேசவில்லை. முகம் சிவந்துப் போன தன் கையைப் பிடித்து ‘பொறுமையாயிரு’ என்று சாடைக் காட்டியதை இப்போது சரோஜா நினைத்துப் பார்த்தாள்.

அவள் வீட்டிலிருந்து கொண்டு வந்த சாமான்கள் போதாது என்றும் கட்டில், மெத்தை, பீரோ எல்லாம் தந்தால் தான் ஆயிற்று என்று அம்மாவை நச்சரித்ததையும் அவளுடையக் கணவன் ஒன்றும் சொல்லாமல் பார்த்துக் கொண்டிருந்ததையும் இப்போது நினைத்தாலும் அவளால் தாங்க முடியவில்லை. இத்தனை நடந்தும் ஒன்றும் நடக்காததுப் போல் பார்த்துக் கொண்டிருந்த அண்ணியிடம் ஒன்றும் கேட்கமுடியாமல் தன் கழுத்தில் கிடந்த மூன்று சவரன் சங்கிலியை அடுத்த நாளே விற்று அவர்கள் கேட்ட எல்லாவற்றையும் வாங்கிக் கொடுத்துவிட்டுத் தான் போனாள் அம்மா.

அத்தோடு அடங்கியதா அவர்களுடைய பேராசை? ஆடிச் சீர், தலைத் தீபாவளிச் சீர், தலைப்பிரவசம், காதுக் குத்து என தொட்டதுக்கெல்லாம் அவளைச் சித்திரவதைச் செய்ததையும் அவளால் மறக்கவா முடியும்?

தலைப் பிரவசத்துக்கு போன இடத்தில் அண்ணியின் குத்தல் பேச்சும் ‘போதும்மா, உனக்கு செய்ய இனிமே என்னால முடியாதும்மா’ என சொல்லாமல் சொன்ன அண்ணாவின் பார்வையும் அவளைக் கூணிக் குறுகச் செய்தாலும் வேறு வழியில்லாமல் பொறுத்துக் கொண்டாள். ‘என் கடமை எல்லாம் முடிந்து விட்டது இனி உன் பாடு உன் கணவர் வீட்டார் பாடு’ என்று ஒதுங்கிக் கொண்டான் அண்ணா அன்றோடு. மூன்று மாத கைக்குழந்தையுடன் அவள் மாமியார் வீட்டில் வந்து இறங்கியவுடன் அவளுக்கும் அம்மாவுக்கும் கிடைத்த வரவேற்பு! “ஏண்டி தரித்திரம் புடிச்சவளே. பொம்பிளைப் பிள்ளையைப் பெத்ததே பாவம். அதுல ஒரு குத்துமணி பவுண் கூட போடாம தூக்கிக்கிட்டு வந்துட்டியாக்கும்.”

கழுத்தில் இருந்த செயினைக் கழட்டி போன முறைக் கட்டில், பீரோ என்று வாங்கிப் போட்ட அம்மா இப்போது ஒன்றும் செய்ய இயலாமல் மெளனமாய் நின்றதும் அவளை வீட்டினுள் கூட ஏற்றாமல் அப்படியே ஊர் திரும்ப தன் மாமியார் நிற்பந்தித்ததையும்... எப்படி மறக்க முடியும்?

அன்று அம்மா மனம் கசிந்து கண்ணீர் விட்டபடி அவளிடமிருந்து விடைபெற்று சென்றதை நினைத்து அன்று தான் வெகுநேரம் அழுதும் அதை ஒரு பொருட்டாக மதிக்காத தன் கணவன் குடும்பத்தை இப்போது நினைத்தாலும் பழி வாங்க வேண்டும் என்ற ஆத்திரம் அடி வயிற்றிலிருந்து எழும்பி வந்தது.

அதற்குப் பிறகு எப்போதாவது வரும் அம்மாவின் கடிதம் என்பதோடு அம்மா, அண்ணா என்ற உறவுகள் நின்றுப் போயின.

அவளை என்ன செய்தாலும் தட்டிக் கேட்க ஆளில்லை என்பதை உணர்ந்துக் கொண்ட மாமியார் கொடுமையின் உச்சிக்கே போக ஆரம்பித்தாள்.

மாமியார் எத்தனைக் கேவலமாய் பேசினாலும், நடத்தினாலும் அதையெல்லாம் கண்டும் காணாதவனாக நடித்த கணவனை அவளும் முழுவதுமாய் புறக்கணிக்க துவங்கியபோதுதான் பிரச்சினைப் பூதாகரமாய் வெடித்தது.

“ஏய் நீ இல்லாட்டி என்னடி? ஏம் புள்ளக்கி ஜோடி சேர இந்த ஊர்ல பொம்பளயேயில்லன்னு நினைச்சியா? மவள, உன் கண் முன்னாடிய ஏம் புள்ளய இன்னொருத்தியோட இன்னும் ஒரு மாசத்துல சேர்த்து வைக்கல, என் பேரையே மாத்திக்கறேன்” என்று மாமியார் ஊர் கூட்டி சபதம் போட்டதுடன் நிற்காமல் பத்து நாளைக்குள்ளேயே அவளுடைய உறவுக்கார பெண் ஒருத்தியை வீட்டுக்குள் கொண்டு வந்து நிறுத்திய போதுதான் ‘இனியும் இங்கிருப்பதில் பயனில்லை’ என்று முடிவெடுத்தாள் சரோஜா.

அவள் படித்தது பத்தாவதுவரைத்தான் என்றாலும் சென்னையில் ஒரு வேலைக் கிடைக்காமலா போய்விடும்? அண்ணா வீட்டிலிருந்துக் கொண்டு அவமானப் பட்டுக் கொண்டிருக்கும் அம்மாவையும் துணைக்கு அழைத்துக் கொண்டு தனியாக இருக்க முடியாதா என்ன? போகத்தான் வேண்டும் என்று முடிவெடுத்தவள் கடைசி முறையாக ஒரு முறை தன் கணவனுடன் பேசிப் பார்ப்பதென முடிவெடுத்தாள்.

ஒரு நாள் மாமியாரில்லாத நேரத்தில் கணவனிடம், “இங்க பாருங்க, உங்க அம்மாவும் நானும் இந்த வீட்டில் இனி சேர்ந்து இருக்க முடியாது. நாம தனியா போயிடலாம். நீங்க உங்க அம்மாவுக்கு என்ன குடுத்தாலும் நான் ஒண்ணும் கேட்க மாட்டேன். அவங்களுக்குக் குடுத்தது போக எனக்கு குடுக்கறத வச்சி நான் குடும்பம் நடத்திக்குவேன். என்ன சொல்றீங்க?” என்று நயமாக பேசினாள். பலனில்லை.

“அதெப்படி முடியும் சரோ? அம்மாவுக்கு என்னை விட்டா யார் இருக்கா? தனியா போற பேச்செல்லாம் வேண்டாம்.” என்று ஒரேப் பிடியாக மறுத்துவிட்டான்.

தன்னுடைய அம்மாவை எதிர்த்துக் கொண்டு அவனால் அந்த ஊரில் நிம்மதியாக குடும்பம் நடத்த முடியாது என்று அவன் அஞ்சுகிறான் என்பதைப் புரிந்துக் கொண்டவள் தான் பிரிந்து போவதுதான் இந்த நரகத்திலிருந்து தப்பிக்க ஒரே வழி என்று தீர்மானித்து அதற்கான சந்தர்ப்பத்தை நோக்கி காத்திருக்கலானாள்.

இன்றைக்குத்தான் அந்தச் சந்தர்ப்பம் கிடைத்தது. அவளுடைய மாமியார் கோவில்பட்டியில் உறவினர் திருமணம் என்று வீட்டில் அவள் கொண்டு வைத்திருந்த பெண்ணையும் கூட்டிக்கொண்டு காலையிலேயே புறப்பட்டாள். “ஊர்ல நடக்கற விஷயத்துக் கெல்லாம் உன்னையக் கூட்டிக் கிட்டு போய் இவளத் தான் என் பையனுக்குக் கட்டி வைக்கப் போறேன், முதல்ல கட்டி வச்ச சிறுக்கி ஒண்ணுத்துக்கும் துப்பில்லன்னு சொன்னாத்தான நாள ஒரு நாளைக்கி உங்க கல்யாணம் நடக்குறப்போ ஒரு பயலும் வந்து பிரச்சினைன்னு பண்ண மாட்டான்.” என்று புறப்படுகையில் வீட்டு வாசலில் நின்று ஊருக்கே கேட்குமாறு கூவிய போதும் ஒன்றும் பேசாமல் அவளுடைய கணவன் சைக்கிளில் ஏறி வேலைக்குச் சென்ற போதுதான் அவள் தீர்மானித்தாள் ‘இன்னைக்குத்தான் நாம புறப்பட்டுப் போகவேண்டிய நாள்’ என்று.

மாமியாரும் கணவனும் புறப்பட்டு போனதும் சமயலை முடித்து சாப்பிட்டாள். கணவனுக்கு மாலை மற்றும் இரவுக்கு வேண்டிய உணவைத் தயாரித்து மூடி வைத்தாள். பிரிந்து போகும்போது கூட தன் கணவனுடைய தேவைகளைப் பற்றி தான் கவலைப் படுவதை நினைத்துப் பார்த்தாள் வேதனையுடன். அவன் நல்லவன்தான். அவளை ஒரு முறைக் கூட அதிர்ந்து பேசியதேயில்லை என்பதையும் நினைத்துப் பார்த்தாள். ஆனால் எத்தனை நாளைக்குத்தான் தன் தாய்க்கு பயந்து கொண்டு தன் மனைவி, மகளுடைய தேவைகளைப் புறக்கணிப்பான்? மாமியார் ஒரு வயசுக்கு வந்த பெண்ணைத் தன் மனைவிக்கு போட்டியாக வீட்டில் கொண்டு வைத்தபோதாவது அவன் தன் தாயை எதிர்ப்பான் என்று எதிர்பார்த்தாள். அவனுடைய கோழைத்தனமான மெளனம் தன் தாயின் கேவலமான திட்டத்திற்கும் சம்மதம் என்பது போலிருந்தது. அதைத்தான் அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

சமையல் பாத்திரங்களை கழுவி சமையலறையில் அடுக்கி வைத்தாள். வீட்டைக் கூட்டி குப்பையை வெளியே கொட்டினாள். தன்னுடைய முடிவில், அதைச் செயல் படுத்த தான் போட்ட திட்டத்தில் ஏதாவது ஓட்டை இருக்கிறதாவென நிதானமாக அமர்ந்து யோசித்துப் பார்த்தாள்.

மாமியார் வீட்டுக்கு திரும்ப எப்படியும் இரவு 9.00 மணியாகிவிடும். தன் மகனிடம் தன்னை அழைக்க பஸ் ஸ்டான்டுக்கு வரவேண்டும் என்று அவள் காலையில் சொல்லிக் கொண்டிருந்ததை அவள் சமையலறையிலிருந்து கேட்டுக் கொண்டுதானிருந்தாள். கணவனுக்கு அன்று பகல் ஷிப்ட்தான் என்றாலும் சிறிது நாளாகவே தன் தாயின் தொல்லை தாங்காமல் இரவு வெகு நேரம் கழித்து வீட்டிற்கு வருவதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தான்.

தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு இரண்டு முறை தன் கணவனோடு பஸ்சில் போயிருக்கிறாள். இரவு 7.00 மணிக்கு புறப்பட்டால் சென்னைக்கு காலை 8.00 மணிக்குள் போய் சேர்ந்துவிடும். அண்ணாவும் அண்ணியும் காலை 8.00 மணிக்கெல்லாம் புறப்பட்டு விடுவார்கள். குழந்தைகளும் அவர்கள் பின்னாலேயே பள்ளிக்கு புறப்பட்டு போய்விடுவார்கள். அம்மா மட்டும் தனியாக இருப்பாள். ஒரே நாளில் ஒரு சிறிய வீட்டை அடுத்த வீட்டில் குடியிருக்கும் புரோக்கர் மாமா உதவியுடன் வாடகைக்கு பிடித்துவிடலாம். அம்மாதான் முதலில் முரண்டு பிடிப்பாள். சமாளித்துக் கொள்ளலாம். அண்ணாவோ அண்ணியோ தன் விஷயத்தில் தலையிடமாட்டார்கள் என்று நினைத்தாள். அண்ணி சனியன் தலை விட்டது என்று கைகழுவி விடுவாள்.

கணவன் தன் தாய்க்கு தெரியாமல் அவள் கைச் செலவுக்கென்று கொடுத்த பணத்திலிருந்து சிறுக சிறுக சேர்த்து வைத்திருந்த பணத்தை கணக்குப் பார்த்தாள். ஐயாயிரம் இருந்தது. பஸ் டிக்கட்டிற்கு வேண்டிய பணத்தை ஹான்ட்பேக்கில் வைத்துக் கொண்டு மீதியை துணிமணி வைக்கும் பெட்டியில் அடியில் வைத்தாள். அதுதான் அவளுடைய எதிர்கால வாழ்க்கைப் பயணத்திற்கு மூலதனம். இரண்டு வாரத்திற்குள் ஒரு வேலை கிடைத்துவிடும். கிடைத்துவிட வேண்டும். அண்ணா, அண்ணி, கணவன் என்று யாருடைய தயவுமில்லாமல் வாழ்ந்துக் காட்ட வேண்டும்.

தன்னுடைய துணிமணிகளை தன் வீட்டிலிருந்து கொண்டு வந்த சூட்கேசுக்குள் அடுக்கி வைத்தாள். தன் கணவனுடைய வீட்டிலுள்ள பொருட்கள் ஒன்றையும் எடுக்கக்கூடாது என்பதில் வெகு கவனமாயிருந்தாள். இல்லையென்றால் பாவிகள் திருட்டுப் பட்டம் கட்டவும் தயங்கமாட்டார்கள் என்பதை அவள் புரிந்து வைத்திருந்தாள்.

குழந்தையைக் குளிப்பாட்டி அவளுக்கு வேண்டிய உணவு, உடைகள் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டாள். மணியைப் பார்த்தாள். மதியம் 3.00 மணி. குழந்தை நன்றாக உறங்கிக் கொண்டிருந்தாள். இன்னும் மூன்று மணி நேரம் இருக்கிறது. 6.00 மணிக்கு புறப்பட்டால் போதும். டிக்கட் எடுத்துக் கொண்டு பஸ்சில் ஏறும் வரை யார் கண்ணிலும் படக்கூடாது. பிடிபட்டால் தன் கதி அதோகதிதான் என்று அவளுக்குத் தெரியும். ஓடுகாலி என்ற பட்டத்துடன் வீட்டிற்குள்ளேயே போட்டு பூட்டிவிடவும் தயங்க மாட்டாள் தன் மாமியார் என்பதும் அவளுக்குத் தெரியும். ஒவ்வொரு மணித்துளியும் ஒரு நாள் போவது போல் தோன்றியது.

ஆறு மணி அடித்ததும் பரபரப்பானாள். வீட்டைப் பூட்டினாள். சாவியை பக்கத்து வீட்டில் கொடுக்க முடியாது. நல்ல வேளை, அவளிருந்தது ஒரு தனி வீடு. சுற்றிலும் நிறைய வீடுகள் இருந்தாலும் அவளுடைய மாமியாரின் குணம் மிகவும் பிரபலமானதால் யாரும் தலையிடமாட்டார்கள். கடவுளை வேண்டிக் கொண்டு வீட்டு சாவியை கதவிற்குக் கீழே நிலைப் படி இடுக்கில் சொருகி வைத்தாள். அவள் கணவனிடம் தனி சாவியிருந்ததால் அவனுக்கு அது தேவைப் படாது. அவன்தான் முதலில் வருவான். வீட்டைத் திறந்ததும் நிலைப்படியில் இருந்து விழும் சாவியைப் பார்ப்பான். பிரச்சினையைப் புரிந்துக் கொண்டு அவன் அவள் பின்னால் வருவதற்குள் அவளுடைய பஸ் புறப்பட்டுவிடவேண்டும்.

பெட்டியை ஒரு கையிலும் குழந்தையை ஒரு கையிலும் தூக்கிக் கொண்டு தெரு முனையிலுள்ள ஆட்டோ ஸ்டான்டை நோக்கி வேகமாய் நடந்தாள். நல்ல காலம், ஆட்டோவில் ஏறும் வரை யாரும் பார்க்கவில்லை.

பழைய பேருந்து நிறுத்தம் வந்ததும் இறங்கி புதிய பேருந்து நிறுத்ததிற்கு செல்லும் பஸ்சில் ஏறி பெண்கள் சீட்டில் இடமிருந்தும் கம்பியைப் பிடித்துக் கொண்டு நின்றுக் கொண்டாள். சீட்டில் அமர்ந்தால் யாராவது பார்த்துவிடுவார்களோ என்ற அச்சம்.

நல்ல வேளை, வண்டியிலும் கூட்டம் நிறைந்து வழிந்ததால் ‘வெளியிலிருந்து யாரும் நம்மளைப் பார்க்கமுடியாது’ என்று நிம்மதி அடைந்தாள். புதிய பேருந்து நிறுத்தம் வெகு அருகில்தானிருந்தது. பத்து நிமிட ஓட்டத்துக்குப் பிறகு வண்டி நின்றவுடன் கூட்டத்தோடு கூட்டமாய் இறங்கி பெட்டியை எடுத்த்க் கொண்டு தூத்துக்குடி பேருந்து நிற்கும் நிலைக்குச் சென்று சீட்டைப் பெற்றுக் கொண்டாள். அவளுடைய வண்டி வரும்வரை யார் கண்ணிலும் படாமல் பதட்டத்துடன் அவதிப்பட்டதையும், வண்டி புறப்பட இன்னும் சிறிது நேரம் தாமதித்திருந்தாலும் தான் அகப்பட்டுக் கொண்டிருப்போம் என்பதையும் இப்போது நினைத்தாலும் அவள் உடல் நடுங்கியது.

***

வண்டி மதுரையைக் கடந்துவிட்டதை உணர்ந்தவள், இனி யாரும் தன்னை வந்து பிடிக்க முடியாது என்ற நிம்மதி பெருமூச்சுடன் இருக்கையில் சாய்ந்து கண்ணயர்ந்தாள்.

அந்த தூத்துக்குடி டு சென்னை பேருந்து ‘நானிருக்கிறேன். உன்னைப் பத்திரமாய் நான் கொண்டு சேர்க்கிறேன், கவலைப்படாதே’ என்பது போல் வேகமாய் முன்னேறியது...

விடியலை நோக்கி.

**********************************

2 comments:

Anonymous said...

You should have not mentioned tuticorin as "Pattikaadu"

டிபிஆர்.ஜோசப் said...

தூத்துக்குடி பட்டிக்காடு என்பது கண்டிப்பாய் என்னுடைய கருத்தல்ல.

நானே அங்கு நான்கு வருடங்கள் என்னுடைய வங்கிக் கிளையில் மேலாளராக பணியாற்றி இருக்கிறேன்.

ஆனால் சென்னை போன்ற பெரு நகரமொன்றில் பிறந்து வளர்ந்த ஒரு இளம் பெண்ணின் பார்வையில் தூத்துக்குடி ஒரு பட்டிக்காடாய் தோன்றியிருக்கலாமே. அது சரியா, தவறா என்று பார்த்து பயன் இல்லை.