“அம்மாவை இந்த நடு ராத்திரியில எங்கடி அனுப்ப சொல்றே?”
“அதெல்லாம் எனக்கு தெரியாது. அவங்க போய்தான் ஆகணும்.”
“அதான் எங்க?”
“எனக்கு தெரியாது.”
கோபத்துடன் திரும்பி முதுகைக் காட்டிக்கொண்டு படுத்த மனைவியைப் பார்த்து பல்லைக் கடித்தான் ராகவன்.
கட்டிலிலிருந்து இறங்கி அறையை விட்டு வெளியேறி ஹாலிலிருந்த சோபாவில் அமர்ந்தான்.
ஹாலின் மூலையிலிருந்த தன் தாயின் படுக்கையறையில் விளக்கு எரிந்துக்கொண்டிருப்பதைப் பார்த்தான். ‘அம்மாவுக்கு கேட்டிருக்குமோ?’
எழுந்து சென்று கதவை லேசாக தட்டினான்.
‘யாரு ராகவனா? வாப்பா.. முளிச்சிக்கிட்டுதான் இருக்கேன். உள்ளே வா..”
கதவைத் திறந்துக்கொண்டு உள்ளே போய் படுக்கையின் மேல் அமர்ந்தான்.
“என்னப்பா ஏதாவது பிரச்சினையா? செல்விக்கு நான் இங்கெருந்து போகணும். அதானே?”
ராகவன் ஒன்றும் பேசாமல் தலை குனிந்து அமர்ந்திருந்தான்.
“நீ ஒண்ணும் கவலைப் படாதே ராகவ். இது போன ரெண்டு வருஷமா நடக்கறதுதானே. நான் அவ கிட்ட அட்ஜஸ்ட் பண்ணிக்கறேன். நீ டென்ஷனாயி உன் உடம்பைக் கெடுத்துக்காதே..”
தன் தாயின் குரலிலிருந்த வேதனையை அவனால் புரிந்துக்கொள்ள முடிந்தது. தன் கையாலாகாத்தனத்தை நினைத்து வெட்கப்பட்டான்.
அவனைப் பிடிவாதமாய் காதலித்து திருமணம் புரிந்துகொண்டவள் செல்வி. ஒரு பெட்ரோல் பங்க், ஒரு பெரிய ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் என சென்னையிலிருந்த பரம்பரைப் பணக்காரர்களில் ஒருவரின் ஒரே மகள். வரிசையாய் நான்கு ஆண் பிள்ளைகளுக்குப் பிறகு பிறந்தவள் என்பதால் வீட்டின் செல்ல மகள்.
ராகவன் தன் பெற்றோருக்கு ஒரே பிள்ளை. அவனுடைய பெற்றோர் இருவருமே அந்த காலத்து பட்டதாரிகள். ஆசிரியர்களாயிருந்து ஓய்வு பெற்றவர்கள். அவனுடைய தந்தை இறந்த பிறகு ஊரிலிருந்த வீட்டை விற்றுவிட்டு தாயை அழைத்து வந்து தன்னுடனே சென்னையில் தங்க வைத்தான்.
செல்வியின் பிடிவாதக் குணம் அவளுடைய குடும்பத்தினரை வேண்டா வெறுப்புடன் அவர்களுடைய காதலை அங்கீகரிக்க வைத்தது. ராகவனுடைய தாயாருக்கும் இந்த திருமணத்தில் விருப்பமில்லை. ஆனால் செல்வி ராகவனுடைய தாயிடம் அன்பாய் பேசி தங்கள் திருமணத்திற்கு சம்மதிக்க வைத்தாள்.
திருமணம் முடிந்து வீட்டோடு மாப்பிள்ளையாய் இருக்க வேண்டும் என்று நிபந்தனையை செல்வியின் தந்தை முன் வைத்தபோதுதான் பிரச்சினை எழுந்தது. ராகவன் தன் தாயைவிட்டு தன்னால் பிரிந்திருக்க முடியாது என்பதில் தீவிரமாயிருக்கவே செல்வியின் தந்தை தன் மகளுக்கென்று சென்னையிலேயே ஒரு பிரம்மாண்டமான பங்களாவை வாங்கி அதில் அவர்களைக் குடிவைத்தார்.
செல்வி திருமணமான முதலில் தன் மாமியாரிடம் பாசமாய்தான் இருந்தாள். அவளுடைய விருப்பத்திற்கு மாறாக ராகவனோ அல்லது அவனுடைய தாயோ ஒன்றும் பேசாதவரை அவள் ஒரு நல்ல மனைவியாகவும் மருமகளாகவும் இருந்தாள்.
தனக்கு குழந்தை பிறக்க வாய்ப்பேயில்லை என்று அறிந்தபோது தன் சகோதரர்களுடைய குழந்தைகளில் ஒன்றை தத்தெடுத்து வளர்க்க அவள் ஆசைப்பட்டபோது மீண்டும் பிரச்சினை முளைத்தது. ராகவன் அனாதை குழந்தைகளில் ஒன்றை தத்தெடுத்து வளர்க்கலாமே என்று முதல் முறையாக அவளுடைய விருப்பத்திற்கு மாறாக பரிந்துரைத்த நாள் முதல் செல்வி அடியோடு மாறிப்போனாள்.
தன்னுடைய விருப்பம் நிறைவேறாமல் போனதற்கு தன் மாமியார்தான் காரணம் என்று நினைத்த செல்வி அன்று முதல் அவளை வெறுக்க ஆரம்பித்தாள். கடந்த சில மாதங்களாகவே அவளுக்கும் ராகவனுக்கும் இடையே நடைபெற்றுக்கொண்டிருந்த பனிப்போரின் இறுதிக்கட்டம்தான் இன்று நள்ளிரவில் நடந்து முடிந்திருந்தது.
தன் தாய் இங்கு இருக்க செல்வி இனி சம்மதிக்கப் போவதில்லை என்று அவன் உணர்ந்திருந்தாலும் தன் தாயிடம் இதை எப்படி சொல்லிப் புரியவைப்பது என்றுதான் தடுமாறினான் ராகவன்.
“என்ன ராகவ் யோசிக்கறே? இன்னைக்கு வேறு ஏதாவதும் பிரச்சினையா?”
யோசனையில் மூழ்கியிருந்த ராகவன் தன் தாயின் குரல் கேட்டு நிமிர்ந்து பார்த்தான்.
“என்னம்மா கேட்டீங்க?”
“இல்ல. வேற ஏதாவது புது பிரச்சினையான்னு...”
எப்படி சொல்வது என்ற யோசனையுடன் தன் தாயையே பார்த்துக்கொண்டிருந்தான் ராகவன்.
“என்ன ராகவ்? ஏதானாலும் பரவாயில்லை. சொல்லு. நான் இப்போ எதுக்கும் தயாராயிருக்கேன். நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமாயிருக்கணும். அதுதான் எனக்கு முக்கியம்.”
“அம்மா.. நீங்க..”
மேலே தொடர முடியாமல் தடுமாறும் தன் மகனை நெருங்கி அவனுடைய தோளைப் பிடித்து தன் பக்கம் திருப்பிய அவனுடைய தாய், கலங்கிய கண்களுடன் நின்ற தன் மகனின் கோலத்தைக் கண்டு நிலைக்குலைந்து போனாள்.
“என்னடா ராகவ் சின்ன பிள்ளையாட்டம்? சின்ன வயசுல உங்கப்பாகிட்டருந்து படிச்ச தைரியத்தையெல்லாம் மறந்துட்டியா? என்ன சொல்ல வந்தியோ அதை சொல்லி முடி.. நான் என்ன நினைப்பேன்னு கவலையே படாதே..”
“உங்களை எங்கயாவது கொண்டு விடச்சொல்றாம்மா. அதுவும் இப்பவே.. நான் உங்கள இந்த நடுராத்திரியிலே எங்க கொண்டு விடுவேன்..?”
சிறிது நேரம் தன்னையே பார்த்துக்கொண்டிருந்த தன் தாய் ஒரு தீர்மானத்திற்கு வந்தவள்போல் சுவர் அலமாரியைத் திறந்து தன் கைப்பெட்டியை எடுத்து கட்டிலின் மேல் வைக்க, பதறிப்போய் அவளை நோக்கி விரைந்து சென்று பெட்டியைப் பிடுங்கி தூர எறிந்தான் ராகவன்.
“என்னம்மா நீங்க? அவ தான் பைத்தியம் பிடிச்சவ மாதிரி சொல்றான்னா நீங்களும் பெட்டியை எடுத்துக்கிட்டு கிளம்புறீங்க? இந்த நடுராத்திரியில எங்க போறதா உத்தேசம்? நீங்க படுங்க.. காலைல அவ கிட்ட பேசி இதுக்கு ஒரு முடிவு எடுக்கலாம்.. உங்க கிட்ட இந்த அர்த்த ராத்திரியில இதப்பத்தி பேச வந்ததே தப்பு. நீங்க படுங்க. நான் லைட்டை அணைச்சிட்டு போறேன்.”
தன் பதிலுக்கு காத்திராமல் அறையை விட்டு வெளியேறிய மகனையே பார்த்தவாறு நின்ற அவனுடைய தாய் படுக்கையில் படுத்து நெடுநேரம் உறக்கம் வராமல் விழித்துக்கொண்டிருந்தாள்.
தன் தாயின் அறையை விட்டு வெளியேறிய ராகவன் தன் படுக்கையறைக்குச் செல்ல விருப்பமில்லாமல் ஹாலிலிருந்த சோபாவிலேயே படுத்து கண்களை மூடினான். அசதியும் கவலையும் பாரமாய் அழுத்த அப்படியே உறங்கிப்போனான்.
****
“ஐயா.. என்னங்கய்யா இங்கன கிடந்து உறங்கறீங்க? முன் வாசல் கதவு வேற திறந்து கிடக்கு?”
வேலையாளின் குரல் கேட்டு பதறியெழுந்த ராகவன் எதிரேயிருந்த சுவர்க்கடிகாரத்தைப் பார்த்தான். மணி காலை 6.30.
“நீங்க வரும்போது கதவு திறந்துதான் இருந்துதா?” என்றான் வேலையாளைப் பார்த்து.
“ஆமாங்கய்யா. கேட்டும் சும்மாதான் சார்த்தியிருந்திச்சு.”
“அப்படியா? வாட்ச்மேன் எங்க போனார்?”
“தெரியலங்கய்யா. நான் வரும்போது அவனைக் காணல.”
“சரி. நீங்க போய் காபி போட்டுக் கொண்டு வாங்க.. நான் என்னன்னு பார்க்கறேன்.”
ராகவன் எழுந்து தன் தாயின் படுக்கையறையை நோக்கி சென்றான். கதவு லேசாய் திறந்திருக்கவே தள்ளிக்கொண்டு உள்ளே புகுந்து காலியாய் கிடந்த படுக்கையைப் பார்த்தவன் திடுக்கிட்டு சுவர் அலமாரியைத் திறந்து பார்த்தான்.
காலியாயிருந்தது. நேற்று இரவு அவன் வீசியெறிந்த அவனுடைய தாயின் பெட்டியையும் காணவில்லை.
என்ன செய்வதென்று புரியாமல் அறையை சுற்றும் முற்றும் பார்த்தான். சுவரோரத்தில் இருந்த மேசையின் மேல் விரித்து வைக்கப்பட்டிருந்த சென்னைத் தொலைப்பேசி டைரக்டரியைப் பார்த்துவிட்டு விரைந்து சென்று அதைக் கையில் எடுத்தான்.
சென்னையிலிருந்த ஒரு முதியோர் இல்லத்தின் தொலைப்பேசி எண் அடிக்கோடிட்டிருப்பதைப் பார்த்தான். மனச்சோர்வுடன் அருகிலிருந்த இருக்கையிலமர்ந்து யோசனையில் ஆழ்ந்தான்.
ராகவனும் செல்வியும் நெருங்கிப் பழகுவதை அறிந்தவுடனே அவனுடைய தாய் ராகவனை அந்த பந்தத்திலிருந்து விடுவிக்க வெகுவாய் முயற்சி செய்தாள். “இங்க பார் ராகவ், செல்வியோட குடும்ப அந்தஸ்த்து நம்மோட அந்தஸ்த்தோட ஒரு நாளும் ஒத்துப் போகாது. அவ வளர்ந்த விதமே வேற. அதுமட்டுமில்ல ராகவ். பணம் அதிகமா இருக்கறவங்க மனசிருக்கே அது விசாலமாயிருக்காது. சுருக்கமா சொல்லணும்னா நம்மள போல நடுத்தர குடும்பத்தினரோட மனசு உலகளவுனா பணக்காரர்களோட மனசு கையளவுதான். அவங்களோட உணர்வுகளுக்கு கொடுக்கற முக்கியத்துவம் மற்றவங்களோட உணர்வுகளுக்கு குடுக்கமாட்டாங்க.. இதை புரிஞ்சிக்கிட்டு நடந்துக்கோ. அவ்வளுவுதான் சொல்லுவேன்.”
அம்மா எத்தனைச் சரியாய் சொன்னாங்க? நான் தான் புத்திக் கெட்டுப்போய்..
இருந்தும் தன் தாய் தனக்காக மாத்திரமே கடந்த ஓராண்டாக இத்தனை அவமானங்களையும் தாங்கிக்கொண்டிருந்திருக்கிறாள் என்பது இப்போது அவனுக்கு புரிந்தது. இனியும் இந்த வீட்டில் இருந்தால் அது தன் மகனுடைய நிம்மதியையே குலைத்துவிடும் என்றறிந்துதான் தான் எத்தனைத் தடுத்தும் கேளாமல் கிளம்பி சென்றிருக்கிறாள். இனி தான் எத்தனை முயன்றாலும் இந்த வீட்டிலிருக்கும் வரை தன் தாய் தன்னிடம் திரும்பி வரப்போவதில்லை என்று நினைத்தவன் ஒரு முடிவுடன் எழுந்து அறையை விட்டு வெளியே வந்தான்.
“ஐயா காப்பி..” என்று எதிர்கொண்ட வேலையாளைப் பார்த்தான். “டைனிங் டேபிள்ல வச்சிட்டு செல்வி எழுந்துட்டாளான்னு பாருங்க. ”
“நான் இங்கதான் இருக்கேன்.” சமையலறையிலிருந்து கையில் காப்பிக் கோப்பையுடன் வெளியேறி டைனிங் டேபிளை நோக்கி சென்ற தன் மனைவியைத் தொடர்ந்து சென்று அவளுக்கெதிரே அமர்ந்தான்.
ஹாலில் நின்றுக்கொண்டிருந்த வேலையாளைப் பார்த்தான். “மாடசாமி நீங்க வாட்ச்மேன் வர்ற வரைக்கும் கேட்ல இருங்க. அவர் வந்ததும் உள்ள வர சொல்லுங்க.”
“சரிங்கய்யா..” என்று வாசல் நோக்கிச் சென்ற வேலையாளை நிறுத்தினாள் செல்வி.
“மாடசாமி.. வாட்ச்மேன் எங்க போனான்?”
“தெரியலீங்கம்மா. காலைல நான் வந்தப்போ கேட் திறந்திருந்திச்சிம்மா. வாட்ச்மேனையும் காணலே..”
“அப்படியா? இடியட். கேட்டைத் திறந்து வச்சிட்டு காலங்கார்த்தால எங்க போய் தொலைஞ்சான்? வரட்டும், பேசிக்கறேன்.” கோபத்துடன் இரைந்த தன் மனைவியைப் பொருட்படுத்தாமல் வேலையாளைப் பார்த்து, “நீங்க போங்க. நான் கூப்பிடும்போது வந்தா போதும்.” என்றான் ராகவன்.
“இவன் கேட்ல போய் நின்னுக்கிட்டா சமையல் வேலையை யார் பார்க்கறது? நான் ப்ரேக்ஃபாஸ்ட் சாப்ட்டுட்டு எங்க வீட்டுக்கு போகணும்.”
என்ன செய்வதென்று குழம்பி நின்ற வேலையாளைப் பார்த்து, “நீங்க போங்க மாடச்சாமி..” என்ற ராகவன் தன் மனைவியைப் பார்த்தான். “லெட் ஹிம் கோ. ஐ வாண்ட் டு டாக் டு யூ.”
மாடச்சாமி தயக்கத்துடன் நின்று செல்வியைப் பார்த்தான். “நான் போகட்டுங்களா..?”
எரிந்து விழுந்தாள் செல்வி. “போய் தொலைய்யா. அதான் எஜமான் சொல்லிட்டார்ல..?”
அவளுடைய கோபத்தை சிறிதும் பொருட்படுத்தாமல் கோப்பையிலிருந்த காப்பியை நிதானமாக குடித்து முடித்துவிட்டு அவளைப் பார்த்தான்.
“என்ன பேசணும்? இல்ல, இனி என்ன பேசறதுக்கு இருக்கு? அதான் நேத்து ராத்திரியே ஸ்ட்ரிக்டா சொல்லிட்டேன்ல? உங்கம்மா இங்க இருக்கக் கூடாது.. அத செஞ்சிட்டு வந்து எங்கிட்ட பேசுங்க.. எனக்கு வேலையிருக்கு..” டைனிங் டேபிளைவிட்டு எழ முயன்றவளை சைகைக் காண்பித்து நிறுத்தினான் ராகவன்.
“என்ன?” எரிந்து விழுந்த தன் மனைவியைப் பார்த்தான் பதட்டப் படாமல்.
“அம்மா காலைல நான் எழுந்திருக்கறதுக்கு முன்னாலயே கிளம்பி போயிட்டாங்க..” என்றான் அமைதியாய்.
சிறிது நேரம் திகைப்புடன் அவனையே பார்த்த செல்வி ஒரு ஏளனப் புன்னைகயுடன் “சந்தோஷம்.. இப்பவாவது உறைச்சிதே..” என்றாள்.
“எங்கேன்னு கேளேன்..?”
“அது எனக்கு தேவையில்லாத விஷயம்..”
“சேத்துப்பட்டுலருக்கற.. அதாவது உங்க வீட்டுக்கு பக்கத்துல இருக்கற முதியோர் இல்லத்துக்கு போயிருக்காங்க... வாட்ச்மேனையும் துணைக்கு கூட்டிக்கிட்டு..”
“வாட்.. அங்கேயா..?” அதிர்ச்சியுடன் தன்னைப் பார்த்த தன் மனைவியைப் பார்த்து ஏளனத்துடன் புன்னகைத்தான் ராகவன். “ஏன் அவங்க தான் இன்னாருடைய சம்மந்தின்னு சொல்லிருவாங்களேன்னு பயமாயிருக்கா?”
“பின்னே.. உங்கம்மா வேணும்னே செஞ்சாலும் செய்வாங்க.. இது அப்பாவுக்கு தெரிஞ்சா.. அவமானத்துல செத்தே போயிருவார்..”
“ஐ பிட்டி ஹிம்..”
“என்னது? எங்கப்பான்னா உங்களுக்கு அவ்வளவு கேவலமாயிருக்கா..?”
“எனக்கு உங்கப்பா மேல இருக்கற மரியாதையில ஒரு துளிக்கூட குறைஞ்சு போகலை. ஏன்னா உன்னுடைய இந்த முடிவுக்கு அவர் நிச்சயமா காரணமாயிருக்க முடியாது.. உன்னை மாதிரி மகளுக்கு அப்பாவாயிட்டாரேன்னுதான் ஐ பிட்டி ஹிம்னு சொன்னேன். பட் டோண்ட் ஒர்றி. அம்மாவை அங்க விட்டு வைக்கறதா ஐடியா இல்லை.”
“பின்னே? திருப்பி இங்க கூட்டிக்கிட்டு வரணும் நினைச்சீங்கன்னா அதை இப்பவே மறந்துடுங்க. என் விருப்பத்துக்கு எதிரா இருக்கறவங்க யாரும் இந்த வீட்ல இருக்கக்கூடாது. அதான் என்னுடைய முடிவு. அது யாராயிருந்தாலும்..”
ராகவன் எழுந்து நின்றான். “ஐ அக்செப்ட் யுவர் ஸ்டாண்ட். அதான் நானும் வெளியே போறதா முடிவு பண்ணிட்டேன். வீட்டை விட்டு மட்டும் தான் இப்போ போறேன். உன் முடிவுல நீ தீர்மானமா இருக்கற பட்சத்துல உன் வாழ்க்கைய விட்டே போகவும் தயங்க மாட்டேன்.. உனக்கு ஒரு வாரம் டைம் தர்றேன். உன் கிட்டருந்து தகவல் வரலைன்னா என்னுடைய விவாகரத்து நோட்டீஸ் உன்னைத் தேடி வரும். குட் பை ஃபார் நவ்..”
தான் காதலித்த நாள் முதல் இதுநாள் வரை தன்னை எதிர்த்துப் பேசாத தன் கணவனா இது என்று மலைத்துப்போய் அவன் வெளியேறுவதைப் பார்த்தவாறு நின்றாள் செல்வி.
**********
2 comments:
மாமியார் மருமகள் உறவில் விரிசல் வருவதற்குக் காரணம் மருமகளாய்த்தானிருக்க வேண்டும் என்பது நியதி இல்லை.
பெரும்பாலான மாமியார்கள் (சில மாமனார்களும்தான்) வீட்டுக்கு வந்த மருமகளை எத்தனைக் காலமானாலும் வேற்று மனுஷியாகவே நினைப்பதுதான் இப்பிரச்சினையின் மூலாதாரம்.
கண்மூடித்தனமான தாய்ப்பாசம் பல சமயங்களில் ஆண்களின் கண்களை மறைத்துவிடுகிறது.
அன்பின் ஆழம் காரணமாக Possessiveness அதிகமாய்போய் தன் மகன் தனக்கு மட்டும்தான் என்று மகனுக்கு திருமணம் செய்து வைத்தப் பிறகும் மாமியார்கள் நினைக்கக்கூடாது.
இப்பிரச்சினை சம்பந்தமாக வெளியிடப்படும் கருத்துக்கள் பெரும்பாலும் எழுதியவர் மருமகளா, மாமியாரா என்பதைப் பொறுத்தே அமைந்திருக்கின்றன!
நீங்கள் யாரென்று தெரியாத பட்சத்தில் உங்கள் கருத்தை ஆமோதிப்பதா இல்லை மாறுபடுவதா என்று தெரியவில்லை.
இருப்பினும் உங்கள் கருத்தை எழுதிவிட்டீர்கள். அதற்கு நன்றி.
இதுவரை சுமார் 100 நண்பர்கள் இப்பதிவைப் படித்திருக்கிறார்கள்.
ஆயினும் தங்கள் கருத்தை வெளிப்படையாக நீங்கள் மட்டும் தான் எழுதியிருக்கிறீர்கள்.
Post a Comment