31.10.05

ஜாதகத்தில் பாதகம் (நகைச்சுவை நாடகம்)

நம்முடைய திருமணங்களில் மனப் பொருத்தம், குணப் பொருத்தம் என்பதை விட
ஜாதகப் பொருத்தத்திற்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஜாதகத்தில் இருக்கிற ஒவ்வொரு தோஷத்திற்கும் ஏதாவது விளைவுகளை கற்பித்துக்கொண்டு எத்தனையோ திருமணங்கள் தள்ளிப்போவதை கண்கூடாகக் கண்டிருக்கிறேன்.

ஆனால் இன்றைய தலைமுறையினர் இவற்றுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்பதை யதார்த்தமாக, நகைச்சுவைக் கலந்து ஆராய முற்பட்டிருக்கிறேன். இது முழுமுழுக்க என் கற்பனை.

இச்சம்பவம் ஒரு பிராமணக்குடும்பத்தில் நடப்பதாய் எழுதப்பட்டிருந்தாலும் இது அந்த சமூகத்தினரையோ அல்லது வேறு யாரையுமோ குறி வைத்து எழுதப்பட்டதல்ல (இதை போலி டோண்டுவுக்கு கூறிக்கொள்கிறேன்) என்பதை தெரியப்படுத்திக்கொள்கிறேன்.

ஒரு ஐந்தாறு பதிவுகளுக்கு இந்நாடகம் தொடரும்.

(காட்சி -1)

பாத்திரங்கள்:

பத்து என்கின்ற பத்மநாப சாஸ்திரிகள் - அப்பா
நந்து என்கின்ற நந்த கோபாலன் - மகன்
பிந்து என்கின்ற பிந்துளா - மகள் (நந்துவின் தங்கை)
சிந்து என்கின்ற சிந்துபைரவி - புது மருமகள் (நந்துவின் மனைவி)

(வீட்டின் முன் ஹாலில் அமர்ந்து நந்து ஹிந்து ஆங்கில தினத்தாளை வாசித்துக் கொண்டிருக்க அவனுடைய புது மனைவி சிந்து குளித்து முடித்த தலையுடன் ஆவி பறக்கும் காபியுடன் வந்து காபி டபராவைக் நந்துவிடம் கொடுக்கிறாள். ஹாலில் உள்ள நிலைக்கடிகாரத்தில் மணி எட்டு அடிக்கிறது.)

சிந்து: இந்தாங்கோ காப்பி. சீக்கிரம் குடிச்சிட்டு மசமசன்னு நிக்காம குளிச்சிட்டு வாங்கோ. உங்களோட தங்கை போய் பாத்ரூமுல நுழைஞ்சிட்டாள்னா அவ்வளவுதான். என்ன முறைக்கிறேள்? நான் தப்பா ஒண்ணும் சொல்லிடலையே.

நந்து: சீ சீ. நீ என்ன சொன்னாலும் கரெக்டாதான்டி சொல்வே. உன்னைப் போய் முறைப்பேனா? உனக்கு பின்னால நிக்கறாளே என் தங்கை, அவளைத்தான் முறைச்சிப் பார்த்தேன்.

(திடுக்கிட்டு திரும்பிய சிந்து தன் பின்னால் நின்றிருந்த பிந்துவின் மேல் மோத, பிந்து துள்ளிக் குதித்து பின் வாங்க, மாடியிலிருந்து அந்த கூட்டுக் குடும்ப தலைவர் பத்நாப சாஸ்திரிகள் இறங்கி வருகிறார்.)

பத்து: என்ன பிந்து மன்னிக் கூட காலங்கார்த்தாலயே போட்டியா? யம்மா சிந்து, நேக்கு காப்பி உண்டா. இல்லே எங்காத்துக்காரி எழுந்துக்கற வரைக்கும் காத்திருக்கணுமா?

பிந்து: அதெல்லாம் இருக்கட்டும். என்ன மன்னி காலங்கார்த்தாலேயே என்னை வம்புக்கு இழுக்கறேள்? ஆத்துல நுழைஞ்சி முழுசா ஒரு மாசம் கூட ஆகலை. அதுக்குள்ள இங்க இருக்கறவங்களைப் பத்தி அவங்களுக்கு பின்னால கமெண்டா..

சிந்து: நான் உன் முன்னாலதானே நிக்கறேன். பின்னால பேசறேன்கறே?

(நந்து சிரிக்கிறான். பிந்து முறைக்கிறாள். பத்து முழிக்கிறார், விஷயம் புரியாமல்.)

பிந்து: என்ன ஜோக்கா? நல்லால்லை மன்னி சொல்லிட்டேன். டேய் அண்ணா, உன் ஆத்துக்காரிக் கிட்டே சொல்லிவை, என் கிட்டே மோத வேண்டாம்னு.

(பிந்து தோளில் டவலுடன் பாத்ரூம் நோக்கி போகிறாள்)

(பத்மநாபன் இறங்கி வந்து நந்து அமர்ந்திருந்த சோபாவில் முன்னாலிருந்த டீப்பாயில் அமர்ந்து நந்து படித்துக் கொண்டிருந்த பேப்பரின் பின்னாலிருந்த செய்தியை பெருங்குரலில் வாசிக்கிறார்.)

பத்து: “லாலு பிரசாத் இன்ட்ரடுயூசஸ் எர்த்தன் கப்ஸ் இன் Trains.” இது தேவையா, இல்லை தேவையாங்கறேன்! குடிச்சி முடிச்ச கப்பை பிளாட்பாரத்திலயே போட்டு வச்சிருவன்கள். போர வர்றவன்லாம் அதை மிதிச்சி காலை கிழிச்சிக்கிறதுக்கா? விவஸ்தைக் கெட்ட ஆளுங்கப்பா இந்த பொலிடிஷியன்ஸ். அதிலும் இந்த லாலு இருக்காரே..”

நந்து: அப்பா உங்களாண்டை எத்தனைத் தடவைச் சொல்லியிருக்கேன், ஒரு ஆள் பேப்பரைப் படிச்சிண்டிருக்கச்சே பின்னாலிருந்து படிக்காதேள்ன்னு. நீங்க சரியான...

பத்து: கம்ப்ளீட் பண்ணேன்டா. லூஸ்னு தானே சொல்ல போறே? சொல்லு. லூசு, டைட்டு.. என்ன வேணும்னாலும் சொல்லு. மனுஷன் ரிட்டையர்ட் ஆயிட்டா ஆத்துல ஒரு ரெஸ்பெக்ட்டும் கிடைக்காதுன்னு பிரஸ்டீஜ் பத்மநாபனே சொல்லியிருக்கார். நாப்பது வருஷம், அரசாங்க ஆபீஸ்லே குப்பையைக் கொட்டி ரிட்டையர்ட் ஆன இந்த பிட்சாத் ஹெட்கிளார்க் பத்மநாப சாஸ்திரிகள் எம்மாத்திரம்?

(மேலே தொடர்ந்து பத்திரிகையை வாசிப்பதில் குறியாயிருந்த தந்தையிடம் முழு பத்திரிகையையும் நீட்டுகிறான் நந்து)

நந்து: இந்தாங்கோ, நீங்களே படியுங்கோ. நான் ஆபீஸ்ல படிச்சிக்கிறேன். சிந்து என் பேன்ட், ஷர்ட் அயர்ன் பண்ணி வாங்கி வச்சிருக்கியா? நான் ஷேவ் பண்ணிட்டு வரேன். பிந்து வெளியே வந்ததும் கூப்பிடு.

(மாடியேறி போகிறான். சிந்து காலி டபராவை எடுத்துக் கொண்டு கிச்சன் பக்கம் போகிறாள்)

பத்து: (பேப்பரைப் பார்த்தவாறு முனுமுனுக்கிறார்) ஆமா, ஆபீஸ்ல பேப்பர் படிக்கறதைத் தவிர வேற என்ன பண்றேள்? (சிந்துவைப் பார்த்து) என்ன சிந்து, காப்பி கேட்டேனே கிடைக்குமா?

(மாடியேறிக்கொண்டிருந்த நந்து மாடிப் படியில் நின்று தன் தந்தையைத் திரும்பி பார்க்கிறான்)

நந்து: என்ன முனகுறேள்?

பத்து: (திடுக்கிட்டு தலையைத் தூக்கி நந்துவைப் பார்க்கிறார்) நோக்கு கேட்டுடுத்தா? இருந்தாலும் பாம்பு காதுடா நோக்கு. நான் முனகுனது சரிதானே.

நந்து: என்ன சரி? நீங்க முப்பது வருஷமா ஆபீஸ்ல செய்ததை சொல்றேளா? காலங்கார்த்தால... பேப்பரைப் படிக்கறத விட்டுட்டு வம்படிக்காதேள்.. (போகிறான்)

பத்து: சரிடாப்பா.. சிந்து காப்பி கேட்டேனே?

சிந்து: (சலிப்புடன்) இதோ கொண்டு வரேன்.

பத்து: ஹூம். இப்பவே சலிச்சுக்கறா. இன்னும் ரெண்டு மாசம் போனா என்ன செய்வாளோ? ஈஸ்வரா.. (செய்தித் தாளை விரித்து முகத்தை மறைத்துக் கொண்டு வாசிக்கிறார்)

சிந்து: (திரும்பிப் பார்த்து) நான் என்ன சொல்லிட்டேன்? காபி கேட்டேள். இதோ கொண்டு வரேன்னுதானே சொன்னேன்?

பத்து: (பேப்பரை விலக்காமல்) நான் உன்னை ஒண்ணும் சொல்லலையே.

சிந்து: அதானே பார்த்தேன். (உள்ளே போகிறாள்)

(தொடரும்)

4 comments:

Anonymous said...

நல்ல முயற்சி சார்.

வாழ்த்துக்கள்.

ஒரே சமயத்தில் இரண்டு தொடர் பதிவுகளா?

உங்களுக்கு இதுக்கெல்லாம் எப்படி நேரம் கிடைக்கிறது?

இரண்டுமே நல்ல வரவேற்பை பெரவேண்டும் என வாழ்த்துகிறேன்.

டிபிஆர்.ஜோசப் said...

நன்றி சம்பத்,

நேரம் என்பது மனதில் இருக்கிறது. நேரம் இருக்கா என்றால் இருக்கிறது, இல்லை என்றால் இல்லை!

நம் கையில்தான் இருக்கிறது எல்லாம்.

டிபிஆர்.ஜோசப் said...

நன்றி Jsri,


பதிவில் இடுவதற்கு முன் எங்கள் சென்னைக் கிளையில் பணிபுரியும் என் பிராமின் நண்பரிடம் கொடுத்து வாசிக்கச் சொன்னேன்.

'டி.பி.ஆர். சார் நீங்க எந்த உலகத்துல இருக்கீங்க? இப்டியெல்லாம் யார் பேசறா இப்ப? இருந்தாலும் டி.வி. சீரியல்லா வராமாதிரி லாங்க்வேஜ்ல எழுதினாத்தான் ஒரு ஆத்தன்டிசிட்டி இருக்கும். அப்படியே இருக்கட்டும் போட்ருங்க'என்றார்.

'மன்னி' திருத்திவிடுகிறேன்.

சீக்கிரமே மேட்டருக்கு வந்துவிடுகிறேன்.

நன்றி.

Anonymous said...

ரொம்ப நன்னா இருக்கு ஜோசப் சார்.

தொடரின் அடுத்த பாகத்தை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

If you maintain the same temp it would be big hit on the blogs.

Congrats!