9.10.05
அம்மா அப்படித்தான்!
இன்று காலையில் படுக்கையிலிருந்து எழும்பொழுதே அம்மாவுக்கு மூடு சரியில்லை என்பதை என்னை எழுப்பிய தோரணையிலிருந்தே என்னால் உணர்ந்துக்கொள்ள முடிந்தது.
பாவம் அம்மா. அவளைக் குறை சொல்வதில் எந்த பயனுமில்லை. அம்மா அப்படித்தான். எந்த நேரத்தில் என்ன மூடிலிருப்பாள் என்பதை என்னாலோ அல்லது என்னைவிட ஐந்து வயது மூத்த என் அண்ணாவோலோ புரிந்துக்கொள்ளவே முடிந்ததில்லை. அவ்வளவு ஏன், திருமணம் முடிந்து அம்மாவோடு கடந்த இருபத்தைந்து ண்டுகள் குடித்தனம் நடத்தி முடித்திருந்த அப்பாவேலேயே அம்மாவைப் புரிந்துக்கொள்ள முடியவில்லையென்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்!
அம்மா அப்படித்தான். அவள் உலகமே தனி. அம்மா ஒரு ‘டே ட்ரீமர்’. சில நாட்களில் அம்மா காலையிலிருந்தே படு ஜாலியான மூடில் இருப்பாள், வேறு சில நாட்களில் அதற்கு நேர் எதிராய் படு மோசமான மூடில்.. இப்படி எப்போதும் எக்ஸ்ட்ரீம் மூட் ஸ்விங்கில் அம்மா இருப்பதை எங்களால் மட்டுமே அட்ஜஸ்ட் பண்ணிக்கமுடியும் என்று அம்மாவின் குடும்பத்தாரே, அதாவது அம்மாவோட அண்ணா, அக்கா போன்றவர்கள் எங்களுடைய பொறுமைக்கு ஒரு சர்டி·பிகேட்டே கொடுத்திருக்கிறார்கள்.
சரி, இன்றைய விஷயத்துக்கு வருவோம். அம்மா இன்றைக்கு மூட் அவுட்டான விஷயம் காலையில் எழுந்திருக்கும்போதே அப்பாவும் புரிந்துக்கொண்டிருக்க வேண்டுமென்பது அப்பா எட்டு மணிக்கு முன்பே கடைக்கு (அப்பா டவுணில் ஃபாஷன் ஸ்டோர் வைத்திருக்கிறார்) கிளம்பி போயிருப்பதிலிருந்து நானும் அண்ணாவும் தெரிந்துக்கொண்டோம்.
“ஏண்டி உனக்கு எத்தனை முறை சொல்லியிருக்கேன், நான் வந்து எழுப்பும்வரைத் தூங்காதேன்னு. எழுந்து போய் பல்லை விளக்கிட்டு வா. வயசுதான் பதினைந்தைத் தாண்டிருச்சி. இன்னும் நேரத்துக்கு எழுந்திருக்க தெரியலை.”
இந்த பதினைந்து வருடங்களில் அம்மா வந்து எழுப்பாமல் நான் படுக்கையிலிருந்து எழுந்ததேயில்லை. இது அம்மாவுக்கும் தெரியும், எனக்கும் தெரியும். அம்மா முகத்துல விழித்தால்தான் எனக்கு ஒரு திருப்தி, சந்தோஷம்னு நானே அம்மாக்கிட்ட சொல்லியிருக்கிறேன். அம்மாவுக்கு மூடவுட் குற அன்றைக்குத்தான் இப்படி சொல்லி எழுப்புவா. மத்த நாளைல ‘ஏ பொண்ணே, நேரமாச்சி. எழுந்திரு.. காப்பி ரெடியாயிருக்கு எழுந்து குடி’ன்னு செல்லமா தலையில ஒரு குட்டு விட்டுட்டு படுக்கை கிட்டேயே நிப்பா. நான் எழுந்து கண்ணைத் திறந்து அம்மாவோட சிரிச்ச முகத்தைப் பார்த்து ‘ஹாய் அம்மா. குட் மார்னிங்’னு சொன்னதும் பதிலுக்கு சிரிச்சிட்டு (அம்மா சிரிக்கும்போது நீங்க பார்க்கணும், சூப்பரா இருப்பா. ‘இப்படியே சிரிச்சிக்கிட்டேயிரும்மா’ன்னு சொல்லணும்னு தோணும்.) என் பாப் தலைமுடியை விளையாட்டுக்கு கலைச்சி விட்டுட்டு போவா. அன்னைக்கி முழுசும் ஜாலியா பொழுது போயிடும்.
இன்னைக்கி மாதிரி சில நாள் மூடவுட் ஆயிட்டான்னா அவ்வளவுதான். காலைலயிருந்தே அம்மா காரணமில்லாம திட்ட ஆரம்பிச்சிடுவா. காப்பி, டிபன், மதியம் சாப்பாடுன்னு ஒண்ணும் சரியா பண்ணமாட்டா.
அப்பா, அம்மாவோட மூட் அனுசரிச்சி நடந்துக்குவார். அம்மா மேல அப்பாவுக்கிருக்கற ஒரு சிம்பதிதான் இதுக்கு காரணம். ஆனா அண்ணாவுக்கு மட்டும் இது புரியவே புரியாது. அந்த நாளா பார்த்து அவனும் வீம்பு பண்ணுவான். ‘அப்பாவுக்குதான் விதி , மனைவியை அட்ஜஸ்ட் பண்ணனும், எனக்கென்ன?’ என்று வாதிப்பான்.
நான் ‘அப்படியில்லேடா அண்ணா. அம்மா பாவம்தானே. ஒரு மாசத்துல இப்படி ஒரு நாளோ ரெண்டு நாளோதானே. அட்ஜஸ்ட் பண்ணேன்’னு சொன்னா, ‘போடி, நான் இந்த வருஷம் கடைசிவரைத்தான் பார்ப்பேன். ·பைனல் இயர் என்ஜினியரிங் முடிச்சிட்டா எனக்கு காம்பஸ்லேயே வேலைக் கிடைச்சிடும். அப்புறமென்ன? உங்களுக்கெல்லாம் டாட்டா காண்பிச்சிட்டு போயிக்கிட்டேயிருப்பேன்’னு சவுடாலா பேசுவான்.
அவன் அப்படி பேசும்போது வருத்தமாத்தானிருக்கும். ‘சரிதான் போயேன். யார் வேண்டாங்கறா’ன்னு சொல்லத் தோணும். ஆனா சொல்லமாட்டேன். இவனும் அம்மா மாதிரிதான். அப்பப்ப மூடவுட் ஆயிடுவான். நான் அப்பா மாதிரி. ஈசியா அப்செட் ஆகமாட்டேன். அதுமாத்திரமில்லை. மூடவுட் ஆன அம்மாவையும் அண்ணாவையும் சமாளிக்கவும் கடந்த மூணு வருஷத்துல நல்லா படிச்சிக்கிட்டேன்.
‘நீ பயங்கரமான ஆளுடா. உன் மாமியாரால உனக்கு ஒரு பிரச்சினையும் இருக்காது பாரேன்’னு அப்பாகூட கிண்டல் பண்ணுவார்.
பாத்ரூமிலிருந்து வெளியே வந்து நேரா கிச்சன் பக்கம் போய் பார்த்தா அம்மா கிச்சன் சிங்க்கில் கைகளை ஊன்றிக்கொண்டு ஜன்னல் வழியே வெளியே பார்த்துக்கொண்டிருந்தாள். மெதுவே போய் அவளை டிஸ்டர்ப் பண்ணாமல் எட்டிப் பார்த்தேன். வெளியே யாருமில்லை. அம்மாவோ நான் வந்து பின்னால் நிற்பதைக்கூட உணராமல் பார்த்துக்கொண்டேயிருந்தாள்.
அம்மா உடலால் மட்டும்தான் கிச்சனிலிருந்தாள் என்பதும் மனதால் அவள் வேறு ஏதோ உலகத்திலிருந்தாள் என்பதும் “அம்மா இன்னைக்கி காபி, டிபன் ஒண்ணும் வேணாம்மா. நான் ஸ்கூல் காண்டீன்லயே சாப்பிட்டுக்கறேன். நீ டயர்டாயிருக்கே. போய் படுத்து ரெஸ்ட் எடு.” என்ற என் குரல் கேட்டதும் திடுக்கிட்டு திரும்பி என்னை மலங்க மலங்க பார்த்து விழித்ததிலிருந்தே என்னால் புரிந்துக்கொள்ள முடிந்தது.
“எ.. என்ன சொன்னே?” என்று அம்மா என்னைப் பார்த்து விஷயம் புரியாமல் கேட்ட தொணியும், தோரணையும் அவள்மேல் எனக்கிருந்த அன்பு - அது அன்பா, பரிதாப உணர்ச்சியா? எனக்கு சொல்லத் தெரியவில்லை - அதிகமானது. அவளை அப்படியே வாரியணைத்துக்கொண்டு மடியில் கிடத்தி ஆதரவாய் ...
“என்னடி சொன்னே? கேக்கறேன்ல? வாய தெறந்து சொல்லேன்..?”
அம்மாவுக்கு இனி நான் என்ன சொன்னாலும் புரியாது. “ஓண்ணுமில்லேம்மா. எனக்கு இன்றைக்கு ஸ்பெஷல் க்ளாஸ் இருக்கு. நான் வர லேட்டாகும். நான் போய்ட்டு வாரேன்.”
அம்மா என் பின்னாலேயே ஓடி வந்தாள். “ஏய் திமிர் பிடிச்ச கழுதை. நான் கேட்டுட்டேயிருக்கேன். நீ செவிடி மாதிரி போயிட்டேயிருக்கே.”
அண்ணா மாடிப்படியிறங்கி வருவதைப் பார்த்தேன். ‘என்னை எப்படியாவது காப்பாத்தேன்’ னு கண்ணாலேயெ கெஞ்சினேன். அவன் வேண்டுமென்றே என்னைப் பார்க்காதது போல் பார்வையைத் தவிர்த்துக்கொண்டு தன் பைக் சாவியை ஸ்டைலாய் சுழற்றிக்கொண்டு வாசலை நோக்கி நடக்க ரம்பித்தான். அவனுடைய அந்த செயல் அம்மாவை உசுப்பிவிட்டது. என்னை மறந்துவிட்டாள்.
“டேய் நில்லுடா. நான் இங்க ஒருத்தி கத்திக்கிட்டிருக்கேன். நீ பாட்டுக்கு போறே. நான் சமைச்சி வச்சிருக்கறத யார் சாப்பிடறது? ”
அண்ணா அதைக் காதில் வாங்காதவன்போல் நாலே எட்டில் வாசலையடைந்து கதவைத் திறந்துக்கொண்டு ஓடிப்போய் பைக்கை ஸ்டார்ட் செய்துக்கொண்டு போயேவிட்டான்!
அவன் பின்னாலேயே ஓடி அவன் பைக்கிலேறி போவதை ஒன்றும் செய்யமுடியாமல் பார்த்துக்கொண்டிருந்துவிட்டு திரும்பிய அம்மா என்னைப் பார்த்த பார்வையில் நான் உண்மையில் அப்படியே எரிந்து பஸ்பமாயிருக்கவேண்டும். அப்படியாகாமல் நான் இன்னும் இருப்பதற்கு என்னுடைய முழுமையாய் டெவலவ் செய்யப்பட்ட இம்யூனிட்டி சிஸ்டம்தான் காரணம்.
“என்னடி முழிச்சிக்கிட்டு நிக்கறே? நீயும் தொலைஞ்சி போ! சமைச்சதையெல்லாம் போற வழியிலே குப்பைல கொட்டிட்டு போய்த்தொலை.”
என்னுடைய பதிலைப் பற்றி கவலைப் படாமல் அம்மா விறுவிறுவென்று தன் படுக்கையறைக்குள் போய் கதவைச் சாத்திக்கொண்டாள்.
வீட்டு வாசற்கதவு விரிந்து திறந்துகிடந்தது. வாசற்கதவையும் படுக்கையறைக் கதவையும் மாறி மாறி பார்த்த நான் இப்போது என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்றேன்.
அம்மா வந்து வாசற்கதவை மூடிக்கொண்டால்தான் நான் பள்ளிக்கு புறப்பட்டு போக இயலும். இப்போதுள்ள மூடில் அம்மாவைக் கூப்பிடுவது எந்தளவுக்கு பலனளிக்கும் என்பதில் குழம்பி நின்றேன்.
அம்மாதான் தினமும் என்னை வாசல்வரை வந்து வழியனுப்பிவிட்டு கேட்டை மூடிக்கொண்டு திரும்புவாள். கேட்டையாவது நானே மூடிவிட்டு போய்விடலாம். வாசற்கதவை அப்படியே விட்டு விட்டு எப்படி போவது?
என் பிரச்சினையைத் தீர்த்து வைக்கும் விதமாக ஹாலிலிருந்து தொலைப்பேசியடித்தது. அம்மா வந்து எடுக்கட்டும் என காத்திருந்தேன். அம்மா வெளியே வந்தாள். ·போன் ஸ்டாண்ட் வரை போனவள் ரிசீவரையெடுத்து ஒன்றும் பேசாமல் அருகிலிருந்த டீப்பாயில் வைத்துவிட்டு என்னைப் பார்த்தாள். இதுதான் சமயம்..
“அம்மா வந்து என்ன அனுப்பிச்சிட்டு கதவை மூடிக்கயேன். எனக்கு ஸ்கூலுக்கு நேரமாச்சு. ப்ளீஸ்மா.”
அம்மா என்ன நினைத்தாளோ.. “சரி, சரி வந்துதொலை கதவை மூடிக்கறேன்.”
அம்மா வாசற்கதவை நோக்கி செல்ல நான் டைனிங் டேபிளின் மீது தயாராய் வைத்திருந்த ஸ்கூல்பையை எடுத்துக்கொண்டு அவள் பின்னாலேயே ஓடினேன். ·போனில் யாராயிருக்கும்? யாராயிருந்தால் நமக்கென்ன?
நான் டாட்டா காண்பித்துவிட்டு போர்டிகோவிலிருந்த சைக்கிளை எடுத்துக்கொண்டு கிளம்பி போவதையே பார்த்துக்கொண்டு அம்மா நிற்பதை என்னால் உணரமுடிந்தது.
அம்மாவின் இப்போதைய மனநிலை இப்படியே தொடரவேண்டுமென்பதில்லை. அம்மாவின் மனநிலை ஒரு அன்பிரடிக்டபிள் இன்சிடெண்ட் என்று அண்ணா எப்போதும் சொல்வான். எத்தனை நாள் அம்மா மூடவுட் நிலையில் இருப்பாள் என்றோ எப்போது மாறுவாள் என்றோ எங்களால் இதுவரை ப்ரடிக்ட் செய்ய முடிந்ததில்லை.
மாலையில் வீடு திரும்புவதற்குள் அம்மா சகஜ நிலைக்கு திரும்பிவிடுவாள் என்ற நம்பிக்கையில் பாதையில் கவனத்தை செலுத்தலானேன்.
***********
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment