19.9.06

சூரியன் 124

கல்லறைக்குச் சென்று திரும்பிய மாணிக்கவேல் நேரே தன்னுடைய தந்தையின் அறைக்குச் சென்றார்.

மனமும் உடலும் சோர்ந்து போய் ஒரு உயிரற்ற உடலைப் போல் கட்டிலில் கிடந்த தன் தந்தையை பார்த்து வேதனையுடன் என்ன செய்வதென தெரியாமல் சிலையாய் நின்றார்.

‘என்னப்பா தூக்கம் வரமாட்டேங்குதா? இஞ்செக்ஷன் போட்டுட்டுத்தானே போனேன்?’

அரைதூக்கத்திலிருந்த ஆறுமுகச்சாமிக்கு தன் மகனின் குரல் கேட்டும் கண் விழித்து அவனுடைய வேதனை ததும்பிய முகத்தைப் பார்க்க விரும்பாமல் உறங்குவதுபோல் பாவனை செய்தார்.

மாணிக்கவேலுக்கு புரிந்தது. இனிமேலும் அங்கு நின்று அவரை தொந்தரவு செய்ய விருப்பமில்லாமல் வாசலை நோக்கி மெள்ள நகர்ந்தார்.

‘ஒங்கூட பொறந்தவனுங்கல்லாம் போய்ட்டானுவளாடா?’

சட்டென்று நின்று திரும்பி தன் தந்தையைப் பார்த்தார். ‘கல்லறையிலிருந்து வந்ததுமே எல்லாரும் கெளம்பி போயாச்சிப்பா. அவங்க வந்ததே நான் எதிர்பார்க்காதது. இதுல இன்னும் ஒரு வாரம் இருந்து பத்தாம் நாள் சடங்கு முடிஞ்சதும் போங்கன்னு எப்படி சொல்றதுன்னு நானும் ஒன்னும் சொல்லல.’

பதிலுக்கு கட்டிலிலிருந்து ஒரு நீண்ட பெருமூச்சு மட்டுமே வந்தது. தனக்கு முதுகுப்புறத்தைக் காட்டியவாறு திரும்பிப் படுத்த தன் தந்தையைப் பார்த்தவாறு சற்று நேரம் நின்றிருந்த மாணிக்கவேல், ‘ஒங்களுக்கு குடிக்க ஏதாச்சும் கொண்டு வரவாப்பா?’ என்றார் மிருதுவாக.

சில நொடிகள் வரை பதில் வராமலிருக்கவே திரும்பி வாசலை நோக்கி நகர்ந்தார். அவர் வாசலை நெருங்கவும் கையில் சூடான பாலுடன் ராணி அறைக்குள் நுழையவும் சரியாக இருந்தது.

எதிரில் வந்தவள் மேல் மோதாமல் சட்டென்று ஒதுங்கி நின்று தன் மனைவியை வியப்புடன் பார்த்தார். ‘யாருக்கு? அப்பாவுக்கா?’

ராணி அவரைப் பார்ப்பதை தவிர்த்து தன் மாமனாரைப் பார்த்தாள். ‘ஆமாங்க. மாமா காலையிலருந்து ஒன்னும் சாப்பிடலையே. அதான்.. நீங்க போங்க. நான் ஹார்லிக்ஸ் கலந்து குடுத்துட்டு வரேன். ஃபாதரும் மதரும் ஒங்கக் கிட்ட சொல்லிட்டு போலாம்னு நிக்காங்க.’ என்றவாறு தன் மாமனாரின் கட்டிலை நோக்கி நகர்ந்த மனைவியைப் பார்த்தவாறே அறையை விட்டு வெளியேறி கூடத்தில் நின்றிருந்த பாதிரியாரையும் கன்னியர் மடத் தலைவியையும் நெருங்கினார்.

‘ராணியோட மாற்றம் எங்களுக்கு ரொம்பவும் திருப்தியாருக்கு மாணிக்கம். நீங்க என்ன நினைக்கிறீங்க?’

மாணிக்கவேல் பதிலளிக்காமல் அருகில் நின்றிருந்த தன் மகனைப் பார்த்தார். அவருக்கென்னவோ ராணியின் திடீர் மனமாற்றத்தில் அவ்வளவாக நம்பிக்கை இல்லை. அவளுடைய நடத்தை செயற்கையாகவே தோன்றியது. இருப்பினும் தன் மகனுக்காக அதை நம்பத் தயாராக இருந்தார். ‘நீ என்ன சொல்றே?’ என்பதுபோல் இருந்தது அவருடைய பார்வை.

‘ஆமாப்பா.. ஃபாதர் சொன்னா மாதிரி அம்மா இனி தாத்தாவ நல்லாவே பாத்துப்பாங்க. கமலியோட மரணம் அவங்கள மாத்திரிச்சிப்பா. அம்மா இங்க நம்மளோடயே இருக்கட்டும்பா..’

சரி என்பதுபோல் தலையை அசைத்த மாணிக்க வேல் பாதிரியாரின் கரங்களைப் பற்றி, ‘தாங்க்யூ ஃபாதர். நீங்க வந்திருந்தது எனக்கும் அப்பாவுக்கும் ரொம்ப ஆறுதலாருந்தது.’ என்றார். பிறகு கன்னியர் மடத் தலைவியையும் உடன் நின்றிருந்த கன்னியர்களையும் பார்த்தார். ‘ரொம்ப தாங்க்ஸ் மதர். நீங்க சொன்ன அறிவுரைதான் ராணிய மாத்திருச்சின்னு நினைக்கேன். தாங்க் யூ ஃபார் ஆல் யுவர் ப்ரேயர்ஸ்.. கமலியோட ஆத்மா சாந்தியடைய ப்ரே பண்ணுங்க...’

பாதிரியாரும் கன்னியர்களும் விடைபெற்றுக் கொண்டு செல்ல சந்தோஷ் வாசல்வரை சென்று வழியனுப்பிவிட்டு வந்தான்.

அவன் திரும்பி வரும் வரை காத்திருந்த மாணிக்கவேல் அவன் வந்ததும், ‘என் கூட வா’ என்றவாறு அவனை அழைத்துக் கொண்டு தன்னுடைய அறைக்குள் நுழைந்து கதவைச் சாத்தி தாளிட்டார்.

வியப்புடன் தன்னைப் பார்த்த மகனை தன் கட்டிலுக்கருகில் கிடந்த இருக்கையில் அமரும்படி சைகைக் காட்டினார்.

‘என்ன டாட்.. எதுக்கு கதவ மூடுனீங்க? என்ன விஷயம்?’

‘சொல்றேன்.’ என்றவாறு கட்டிலில் அமர்ந்தார் மாணிக்கவேல். ‘ஒங்கம்மாவ பத்தித்தான்.’

சந்தோஷ் குழப்பத்துடன் அவரைப் பார்த்தான். ‘என்னப்பா அம்மாவுக்கென்ன? நீங்க அவங்கள இன்னும் நம்பல.. இல்லே?’

மாணிக்கவேல் ஆமாம் என்று தலையை அசைத்தார். ‘You are right Santhosh. I am unable to believe that she could change so fast. In one night! I can’t believe that!’

சந்தோஷ¤க்கும் அந்த குழப்பம் இல்லாமல் இல்லை. ராணியின் நடத்தையில் ஏதோ ஒரு நாடகத்தனம் இருப்பதுபோல் அவனுக்கும் தோன்றத்தான் செய்தது. ஆயினும் அவள் மாறாவிட்டாலும் அவளைத் தன் தாயாய் ஏற்றுக்கொண்டு மன்னித்துவிட அவன் தயாராக இருந்தான்.

‘என்ன டாட் நீங்க? நம்ம மாறினாத்தான் இங்க இருக்க முடியுங்கற நினைப்பும் அம்மாவ மாத்தியிருக்கலாமில்லே.. நீங்க சொன்னா மாதிரி அம்மா மாறலன்னாலும் நா அவங்கள அப்படியே ஏத்துக்க தயாரா இருக்கேன். அவங்க இங்க இருக்கறது தாத்தாவுக்கும் நல்லதுதானேப்பா.. அவங்கள பாத்துக்கறதுக்கும் ஒரு ஆள் வேணுமே?’

‘தாத்தாவ பாத்துக்கறதுக்கும் ஒரு ள் வேணுமே?’ அந்த வார்த்தைகளிலிருந்த irony அவரை சிந்திக்க வைத்தது. அதுக்குத்தான நான் அவள இங்க வச்சிக்கறதுக்கு தயங்கறேன்? இவன் இப்ப இருக்கற மனநிலையில நான் என்ன சொன்னாலும் புரிஞ்சிக்க போறதில்லை. ரெண்டு மூனு நாள் போகட்டும், பார்ப்போம் என்ற முடிவுடன் தன் மகனைப் பார்த்தார்.

‘சரி சந்தோஷ்.. அம்மா இருக்கட்டும்.. அவ மாறினாளோ இல்லையோ நீ சொல்றா மாதிரி தாத்தாவ பாத்துக்கறதுக்கும் ஒரு ஆள் வேணுமே..’ என்றார்.

தன்னுடைய பதிலில் மகிழ்வடைந்த தன் மகனைப் பார்த்தார். ‘ஆனா அவ தாத்தாவ எப்படி பார்த்துக்கறாங்கறத நீயும் கவனிச்சிக்கணும்.. என்ன?’

சந்தோஷ் வியப்புடன் அவரைப் பார்த்தான். ‘என்னப்பா மீன் பன்றீங்க? What do you think that she would do to him?’

மாணிக்கவேல் கட்டிலில் இருந்து எழுந்து தன் மகனை நெருங்கி அவனுடைய தோளில் கை வைத்தார். ‘ஒங்கம்மா என்ன வேணும்னாலும் செய்வா சந்தோஷ்.. If only I know what she is up to..!’

சந்தோஷ் அப்போதும் விளங்காமல் தன் தந்தையை நிமிர்ந்து பார்க்க திறந்திருந்த ஜன்னலுக்கு அருகில் கையில் காலி தம்ளருடன் நின்றிருந்த ராணியின் உதடுகளில் ஒரு வக்கிரப் புன்னகை தவழ்ந்தது. ‘இருங்க வச்சிக்கறேன்..’ என்றவாறு அவள் சமையல்கட்டை நோக்கி நகர அறைக் கதவை திறந்துக்கொண்டு வெளியே வந்த மாணிக்கவேல் தன் மனைவி செல்வதைப் பார்த்தவாறு நின்றிருந்தார்.

*******

‘சொல்லுங்க நான் செல்விதான் பேசறேன்.’

செல்வம் தன் மனைவியின் குரலில் இருந்த அலட்சியத்தை உணராமல் இல்லை. இருப்பினும் கோபப்படாமல், ‘மாமா, மாமி நல்லபடியா வந்து சேந்தாங்களா? நீ ஸ்டேஷனுக்கு போனியா?’

‘அது சரி.. எங்களப் பத்தியெல்லாம் ஒங்களுக்கு ஞாபகம் இருக்கா என்ன? ஆச்சரியமாருக்கு?’

‘ஏய் எதுக்கு அப்படி சொல்றே?’

‘பின்னே.. இப்ப நேரம் என்ன? காலையில வந்து சேர்ந்தவங்களப் பத்தி கேக்கணும்னா நீங்க மெட்றாசுக்கு போய் சேர்ந்ததுமில்ல கேட்டிருக்கணும்..? நீங்க பாட்டுக்கு சாவகாசமா சாயந்திரம் நாலு மணிக்கி கூப்ட்டா.. நா வேற என்ன சொல்றது? சரி எதுக்கு கூப்ட்டிங்க? இன்னும் நாலு நாள் இருக்கணும் போலருக்குன்னு சொல்லத்தான?’

செல்வத்துக்கு கோபம் பொங்கி வந்தாலும் செல்வியின் சமயோசிதமான கேள்வியைக் கேட்டதும் வியப்படையாமல் இருக்க முடியவில்லை. அதெப்படி எப்பவும் நான் மனசுல என்ன நினைக்கிறேன்னு கரெக்டா அப்படியே சொல்றா  என்று தோன்றியது. ‘ஆமாம். அதுக்கும்தான் கூப்டேன்.. வச்சிடறேன்.’ எதிர்முனையிலிருந்து பதில் வருவதற்குள் இணைப்பைத் துண்டித்துவிட்டு தன் எதிரில் அமர்ந்திருந்த ராசம்மாளைப் பார்த்தான்.

‘எதுக்கு இப்ப சட்டுன்னு டிஸ்கனெக்ட் பண்ணே? நீ செல்விக்கு இப்படி பயப்படுவேன்னு நா நெனச்சிக்கூட பாக்கல செல்வம். அவ பதிலுக்கு எதுக்கு இன்னும் நாலு நா தங்கணும்னு கேப்பான்னுதான கட் பண்ணே?’

ஆமாம் என்று தலையை அசைத்தான் செல்வம்.

‘ஏன்? சொல்ல வேண்டியதுதான? எதுக்கு பயப்படறே?’

செல்வம் தயக்கத்துடன் அவளுடைய பார்வையைத் தவிர்த்து தன் எதிரிலிரிருந்த கோப்பை படிப்பதுபோல் பாவனை செய்தான்.

ராசம்மாள் எழுந்து சாலையை நோக்கியிருந்த ஜன்னலை நெருங்கி அவனுக்கு முதுகைக் காட்டிக்கொண்டு நின்றாள். ‘இங்க பார் செல்வம்.. நா அவருக்கெதிரா நடத்தப்போற போராட்டத்துல எனக்கு தளபதியா நிக்கப் போறது நீதான். அதுக்கு செல்வி சம்மதிக்கணும். அதுக்கு நீ இப்படி நடந்துக்கிட்டா சரிவராது. இப்ப நீ செஞ்ச முட்டாள்தனமான காரியத்துக்கப்புறம் நா எப்படி செல்விக்கிட்ட பேசறது? நா சொல்ல வேண்டியத நீயே பக்குவமா அவ கிட்ட சொல்றத விட்டுட்டு..’

‘சாரி ராசி.. செல்வியோட வாய்க்கு பயந்துதான்..’

ராசம்மாள் திரும்பி அவனைப் பார்த்தாள். அவளையுமறியாமல் அவளுடைய உதடுகளில் புன்னகை தவழ்ந்தது. இவன் மட்டும் தனக்கு கணவனாக வந்திருந்தால் தன்னுடைய வாழ்க்கையில் இப்படியொரு புயல் வீசியிருக்காதே என்று நினைத்தாள்...

தொடரும்..




1 comment:

siva gnanamji(#18100882083107547329) said...

"நாய் வாலை நிமிர்த்தி வைக்க
நான் ஆனமட்டும் ஆனமட்டும்
பாடுபட்டேன்......"
['நவக்கிரகம்' திரைப்படப் பாடல்]