29.9.06

சூரியன் 127

தன்னுடைய மடிக் கணினியில் தான் தயாரித்து வைத்திருந்த குறு அறிக்கையை (Brief Report) உரக்க வாசித்தான் ரவி பிரபாகர்.

எதிரில் அமர்ந்திருந்த மஞ்சு அவன் வாசித்து முடிக்கும் வரை பொறுமையுடன் காத்திருந்தாள்.

அவன் நடந்தவற்றை விவரித்த விதம், தான் செய்தது தவறுதான் என்றாலும் அதை எந்தவித உள்நோக்கத்துடனும் செய்யவில்லை என்பதை நாசுக்காக, அதே சமயம் தெளிவாக கூறியிருந்த பாங்கு.. மஞ்சுவிற்கு பிடித்திருந்தது..

ரவி வாசித்து முடித்ததும் உண்மையான மகிழ்ச்சி முகத்தில் தெரிய அவனுடைய கரங்களைப் பற்றி குலுக்கினாள். ‘ரொம்ப நல்லாருக்கு ரவி.. அரை மணி நேரத்துக்குள்ள எவ்வளவு அழகா தயாரிச்சிட்டீங்க.. You are really superb Ravi.. I am proud of you..’

இதை எதிர்பாராத ரவி வெட்கத்துடன் அவளைப் பார்த்தான். ‘ஏய் உண்மையாவா சொல்றே.. இல்ல வஞ்சகப் புகழ்ச்சியா?’

மஞ்சு பொய்க்கோபத்துடன் அவனை அடிக்க கை ஓங்கினாள்.. ‘சீ.. இதான வேண்டாங்கறது.. நா எதுக்கு வஞ்சகப் புகழ்ச்சியா பேசணும்.. I really mean it.. You deserve a free and frank enquiry Ravi.. பக்கத்துவீட்டு மாமா வந்ததும் நான் இதத்தான் அவர்கிட்ட கேக்கப் போறேன்.. அவர் இந்த விஷயத்துல பயங்கர கில்லாடின்னு மாமி பல தடவ சொல்லியிருக்காங்க.. அதனாலதான் நான் மாமாவ கெஞ்சி, கூத்தாடி இதுக்கு சம்மதிக்க வச்சேன்..’

அவளுடைய குரலிலிருந்த உண்மையான, அப்பழுக்கில்லாத கரிசனம் அவனுடைய கண்களை குளமாக்கியது.. இப்படியொரு வைரம் என் பக்கத்துல இருந்திருக்கு.. கண்டுக்காம.. இடியட்டாட்டம் இவள ட்ரீட் பண்ணிருக்கேனே.. How stupid!

‘என்ன ரவி என்னையே பாக்கீங்க? பாராட்டறதாருந்தா பாராட்டிருங்க..’ என்றாள் மஞ்சு கேலியுடன்..

ரவி மேசையின் குறுக்கே கரங்கள நீட்டி அவளுடைய இரண்டு கரங்களையும் பாசத்துடன் பற்றினான்... ‘உண்மையா சொல்றேன் மஞ்சு.. இனி எனக்கு என்ன ஆனாலும் ஒன்னெ மட்டும் இழக்கவே மாட்டேன்.. I was a fool to ignore you for once.. I won’t do that again.. Promise..’

மஞ்சு பதற்றத்துடன் அவனைப் பார்த்தாள்.. ‘ஏய்.. என்ன இது சின்ன பிள்ளையாட்டம்? இப்ப அதுவா முக்கியம்? நாம கொண்டு வந்த எல்லா டாக்குமெண்ட்ஸையும் கரெக்டா லிஸ்ட பண்ணிருக்கமான்னு பாக்க வேணாம்? நீங்க எழுதியிருக்கற ரிப்போர்ட்ல இருக்கறா மாதிரியே கோர்வையா டாக்குமெண்ட்சையும் அரேஞ் பண்ண வேணாமா? நீங்க அதப்பாருங்க.. நா சமையல பாக்கறேன்.. சோறு மட்டும்தான் ரெடியாருக்கு.. You carry on.. அரை மணியில சாப்பாடு ரெடியாயிரும்.. இப்பவே மணி மூனாயிருச்சி..’

இருக்கையிலிருந்து எழுந்து சமையலறையை நோக்கிச் சென்ற தன் மனைவியையே பாசத்துடன் பார்த்துக்கொண்டிருந்துவிட்டு, ‘ஏய் மஞ்சு முதல்ல எனக்கு காப்பி போட்டு குடு.. அப்பத்தான் சுருசுருப்பா வேலையாவும்..’ என்றான்.

சமையலறை வாசலில் நின்று திரும்பி அவனைப் பார்த்த மஞ்சு சிரித்தாள்.. ‘ஐஸ் வைக்கும்போதே நெனச்சேன்.. இதோ கொண்டு வரேன்.. நீங்க உங்க வேலைய கண்டினியூ பண்ணுங்க..’

அவள் தலை மறைந்ததும் தன் எதிரிலிருந்த அனைத்து ஆவணங்களையும் அதன் மேல் குறித்திருந்த எண்கள் படி வரிசைப் படுத்தி தான் தயாரித்திருந்த அறிக்கையினுடன் ஒப்பிடத் துவங்கினான்..

அடுத்த அரை மணியில் நேரம் போவதே தெரியாமல் அவனுடைய வேலையில் மூழ்கிப்போக சமையலறையில் பம்பரமாய் சுழன்று பகலுணவு வேலையை முடித்தாள் மஞ்சு..

***

‘மாப்பிள்ளை எதுக்கு மெட்றாஸ்ல இன்னும் நாலு நாளைக்கு தங்கணுமாம்.. கேட்டியா?’

சமையலறையில் வேலையாய் இருந்த செல்வி அங்கிருந்தே பதிலளித்தாள். ‘வேறென்ன? எல்லாம் அந்த ராசம்மா வேலைதான்.. அவங்களுக்கும் அவங்க புருசனுக்கும் ஒத்து போலையாம்.. விவாகரத்து செஞ்சிக்கப் போறாங்களாம்.. அதுக்கு வக்கீல பார்த்து ஏதோ ஏற்பாடு பண்ணணுமாம்.. அதான்..’

செல்வியின் தாயார் ரத்தினம்மாள் நிமிர்ந்து சமையலறையைப் பார்த்தாள். ‘அதுக்கு மாப்பிள்ளை எதுக்கு?’

செல்வி புன்னகையுடன் சமையல்கட்டிலிருந்து வெளியேறி தன் தாயைப் பார்த்தாள். ‘ஒருவேளை இவர கட்டிக்கலாம்னு ப்ளானோ என்னவோ..’ என்றாள் கேலியுடன்.

ரத்தினம்மாள் பதற்றத்துடன் தன் மகளைப் பார்த்தாள். ‘ஏய் என்ன ஒளர்றே? ரொம்ப சாவகாசமா சொல்றே?’

செல்வி வாய்விட்டு சிரித்தாள்.. ‘ச்சீ.. சும்மா சொன்னேம்மா.. அந்த அளவுக்கு விட்டுருவேனா?’

‘நல்ல வேடிக்கைடி.. இது வேடிக்கையான விஷயமா? சரி.. அதிருக்கட்டும்.. உண்மைய சொல்லு.. மாப்பிள்ளை இன்னும் அந்த பொண்ணையே நினைச்சிக்கிட்டிருக்காரா என்ன? ஒங்கிட்ட நல்லபடியாத்தான நடந்துக்கறார்?’

செல்வி தன் தாயருகில் வந்து அமர்ந்தாள். ‘அம்மா இவர் எப்படியோ அந்த ராசி அக்கா அந்த மாதிரி பெண் இல்ல.. அவங்க ரேஞ்சே தனி.. செல்வம் அத்தாந்தான் அவங்கள விரும்புனாரே தவிர அவங்க இவர விரும்பினதே இல்லையாம்.. அதுவுமில்லாம சிலுவை மாணிக்கம் மாமா ரொம்பவும் நல்லவர்மா.. அவர் நிச்சயமா இப்படியெல்லாம் நடக்க விடவே மாட்டார்.. ஒனக்கு தெரியுமா அத்தான் இங்க நடத்தற கடை என் பேர்லதான் மாமா ரிஜிஸ்தர் பண்ணி குடுத்தார்.. அந்த நன்றி எனக்கு எப்பவுமே இருக்கு.. இவர் எத்தன நாள் அங்கருந்தாலும் நீங்க நினைக்கறா மாதிரி ஒன்னுமே நடக்காது.. ராசியக்கா புருஷன் இருக்காரே அவரும் சரி அவரோட அப்பாவும் சரி.. சரியான ஃப்ராடுங்க.. அந்த ஆளோட ராசியக்கா ஒரு வருசம் குடும்பம் நடத்துனதே ஆச்சரியம்தான்..’

ரத்தினம்மாள் வியப்புடன் தன் மகளைப் பார்த்தாள். ‘என்னடி சொல்றே.. ஏன், எதுக்கு அப்படி சொல்றே?’

செல்வி குரலை இறக்கி, ‘அந்தாளுக்கு சினிமா நடிகைங்க சவகாசமெல்லாம் இருக்காம்.. தொடர்ந்து மாசக் கணக்கா அவளுக பின்னாலயே சுத்திக்கிட்டிருப்பாராம்.. வீட்டுக்கே வரமாட்டாராம்..’

ரத்தினம்மாளின் முகம் அருவருப்புடன் சுருங்கியது.. ‘ச்சீ.. உண்மையாவா?’

செல்வி எழுந்து சமையலறையை நோக்கி நடந்தாள். ‘ஆமாம்மா.. ராசியக்காவா இருக்கப் போயி பொருத்துக்கிட்டு இருந்திருக்காங்க.. நானாருந்தா...’

‘நீயாருந்தா?’

‘அந்தாளயும் அந்த சிறுக்கியையும் ஒரே வெட்டா வெட்டிப்போட்டுருப்பேன்..’

‘வெட்டிட்டு ஜெயிலுக்கு போயிருப்பியாக்கும்.. போடி இவளே.. வேலையப் பாரு..’

சற்று நேரம் இருவரும் அவரவர் நினைவுகளில் மூழ்கிப் போக அந்த இடம் அமைதியாய் போனது..

அதைக் கலைப்பதுபோல் தொலைப்பேசி ஒலிக்க கைவேலையை அப்படியே போட்டுவிட்டு ஓடி எடுத்தாள் செல்வி..

‘செல்வி நா ராசம்மா பேசறேன்..’

வியப்புடன் ஒலிவாங்கியை பொத்திக்கொண்டு தன் தாயைப் பார்த்தாள், ‘அம்மா ராசியக்கா..’ என்று வாயை அசைத்தாள்.

‘சொல்லுங்கக்கா.. ஒங்களுக்கு நூறாயுசு.. சொல்லுங்க..’

‘நூறாயுசா.. எனக்கா.. அப்ப என்னெ பத்தி  சித்தியும் நீயும் ஏதோ பேசிக்கிட்டிருந்திருக்கீங்க.. சொல்லு என்ன பேசிக்கிட்டிருந்தீங்க?’

செல்வி வாய்விட்டு சிரித்தாள்.. ‘இல்லக்கா.. சும்மாத்தான்.. செல்வம் அத்தான் கொஞ்ச நேரத்துக்கு முன்னால கூப்ட்டு ஊருக்கு வர்றதுக்கு இன்னும் நாலஞ்சி நாள் ஆகும்னு சொன்னாங்க.. அதப்பத்தித்தான் பேசிக்கிட்டிருந்தோம்.. நீங்க சொல்லுங்க..’

எதிர் முனையில் எப்படி சொல்வதென தயக்கத்தில் ராசம்மாள் சில விநாடிகள் தயங்க, ‘என்னக்கா சத்தத்தையே காணோம்.. ஏதாவது சீரியசான விஷயமா.. எப்படி சொல்றதுன்னு யோசிக்கறாப்பல இருக்கு?’

ராசம்மாளின் சிரிப்பொலி தொலைப்பேசி வழியாக செல்வியின் செவிகளை நிறைத்தது.. ‘ஏய் செல்வி இருந்தாலும் நீ பயங்கரமான ஆள்தான்.. என் வேலைய ஈசியாக்கிட்டே.. நா இப்ப சொல்றத கவனமா கேட்டுட்டு.. யோசிச்சி ஒன் முடிவ சொல்லு.. என்ன?’

செல்வி திரும்பி தன் தாயைப் பார்த்தாள்.. ‘என்னவாம்?’ என்ற கேள்விக்கு தெரியவில்லை என்று உதட்டைப் பிதுக்கிவிட்டு.. ‘என்ன விஷயமாருந்தாலும் தயங்காம சொல்லுங்கக்கா..’ என்றாள்.

அடுத்த சிலநிமிடங்கள் ராசம்மாள் சொல்வதை தடை செய்யாமல் கேட்டுக் கொண்டு நிற்க ரத்தினம்மாள் விவரம் புரியாமல் எழுந்து சென்று தன் மகளுக்கருகில் நின்று ஒட்டுக் கேட்க முயன்றாள்..

‘என்ன நா சொன்னது விளங்கிச்சா.. இந்த நேரத்துல நீயும் செல்வமும் எங்கூடவே இருந்தா நல்லதுன்னு நினைக்கேன்.. நம்ம கம்பெனியில ராசேந்திரன் இருந்த இடத்துல செல்வம் இருக்கணும்னு அப்பாவுக்கும் நினைக்கார். ஒன் பேர்லருக்கற கடைய இப்ப என்ன மார்க்கெட் நிலவரமோ அந்த வெல குடுத்து நம்ம கம்பெனி வாங்கிக்கிரும். நீ அந்த பணத்த நம்ம கம்பெனியில இன்வெஸ்ட் பண்றதானா பண்ணலாம்.. இல்ல வேறெங்கயாவது பேங்க்ல போட்டு வச்சிக்கறதானாலும் வச்சிக்கலாம்.. ஒன்னோட படிப்புக்கு ஏத்த பொசிஷனா நானே நம்ம கம்பெனியில ஒனக்கு போட்டு தாரன்.. இப்ப ஏதும் சொல்ல வேணாம்.. ஆற அமர யோசிச்சி சித்திக்கிட்டயும் டிஸ்கஸ் பண்ணிட்டு சொல்லு.. என்ன? நா வச்சிடறேன்..’

செல்வி அமைதியாகிப் போன ஒலிவாங்கியையே சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்துவிட்டு அதை அதன் இடத்தில் வைத்துவிட்டு தன் தாயைப் பார்த்தாள்.

‘என்னடி.. என்ன அப்படி மலைச்சிப் போயி நிக்கறே.. என்னவாம்?’

‘ஒன்னுமில்லம்மா.. என்னெ கொஞ்சம் யோசிக்க விடுங்க.. அப்புறமா சொல்றேன்.. இப்ப வேலைய பார்ப்போம்..’ என்றவாறு செல்வி சமையலறையை நோக்கி செல்ல ரத்தினம்மாள் என்னாச்சி இவளுக்கு என்று அவளையே பார்த்தாள்..

தொடரும்..


4 comments:

krishjapan said...

குறிப்பிட்ட காலத்துக்குள் சூரியன் 128-ஐ தராமைக்கு ஏன் துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கக் கூடாது என விளக்கம் அளிக்கக் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

siva gnanamji(#18100882083107547329) said...

அதே! அதே!
திங்கள் போச்சு; செவ்வாய் வந்தாச்சு

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க கிருஷ்ணா,

நேத்து போடாதத சொல்றீங்களா? நேத்தைக்கு லீவாச்சிங்களே.. இன்னைக்கி வந்துரும்..

போறுமா விளக்கம்.. இல்ல இன்னும் ஏதாவது டூப் விடணுமா:)

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க ஜி!

திங்கள் ஹாலிடேவா இருக்கும் பட்சத்தில் அடுத்துவரும் வேலை நாளில் வெளிவரும் என்று உங்கள் வழியாக எல்லோருக்கும் கூறிக்கொள்கிறேன்:)