5.4.07

சூரியன் 189

நேற்றைய இரவிலிருந்து சற்று முன் மாதவனின் தொலைபேசி அழைப்பு வரும்வரை நடந்தவைகளில் மூழ்கியிருந்த ஃபிலிப் சுந்தரம் சட்டென்று நினைவுக்கு வந்தவராய் எழுந்து தன்னுடைய செல்பேசியில் வந்திருந்த அழைப்புகளின் பட்டியலிலிருந்த ஒரு எண்ணைத் தேடிப்பிடித்து டயல் செய்தார்.

எதிர்முனையில் சற்று நேரம் மணி ஒலித்துக்கொண்டேயிருக்க துண்டித்துவிடலாமா என்று அவர் நினைத்த நேரத்தில், 'யார் வேணுங்க?' என்ற ஒரு இளம் பெண்ணுடைய குரல் கேட்க நாம்தான் தவறான எண்ணுக்கு டயல் செய்துவிட்டோமோ என்று நினைத்தார்.

'நான் ஃபிலிப் சுந்தரம் பேசறேன். இது மிஸ்டர் ஜோவோட வீடுதானே?' என்றார் தயக்கத்துடன்.

'சார் நீங்களா? நான் அவரோட வய்ஃப் பேசறேன்.. அவங்க குளிச்சிக்கிட்டு இருக்காங்க.. அவங்க வந்ததும் கூப்டச் சொல்லட்டுமா?' என்று பதற்றத்துடன் குரல் வந்தது.

'சரிம்மா.. சொல்லுங்க..' என்றவாறு துண்டித்துவிட்டு சுவரிலிருந்த கடிகாரத்தைப் பார்த்தார். மணி எட்டைக் கடந்திருந்தது. இன்னும் அரைமணியில் அலுவலகத்திலிருந்து தன்னை அழைத்துச் செல்ல வாகனம் வந்துடும். குளிச்சிட்டு புறப்பட வேண்டியதுதான். ப்ரேக் ஃபாஸ்ட் ஆஃபீஸ்ல போயி பாத்துக்கலாம்.

குளிக்கும் சமயத்தில் ஜோ அழைக்க வாய்ப்புள்ளதே என்று நினைத்தவர் தன் செல்பேசியை கையில் எடுத்துக்கொண்டு குளியலறையை நோக்கி நடந்தார்.

******

'என்னங்க ஒங்க சிஜிஎம் கூப்ட்டார். நீங்க குளிச்சிட்டு வந்ததும் கூப்ட சொல்றேன்னு சொன்னேன். இந்தாங்க கூப்டுங்க..' என்றாள் ஜோவின் மனைவி அக்சீலியா.

தலையைத் துவட்டியவாறே ஹாலுக்குள் நுழைந்த ஜோ தன் மனைவியிடமிருந்த செல்பேசியை வாங்கி யார் என்று பார்த்தான். ஃபிலிப் சார்!

'சரி.. பேசலாம். நீ போய் காப்பிய கொண்டா.'

'என்னங்க குளிக்கறதுக்கு முன்னாலத்தான குடிச்சீங்க?'

ஜிவ்வென்று எரிந்த கண்களை அழுந்த துடைத்தவாறே தன் மனைவியைப் பார்த்தான் ஜோ. 'ராத்திரியெல்லாம் தூக்கமில்லாம தலைய விண்ணுங்குது அக்சீ.. அதான் கேக்கேன்.. சீக்கிரம் போய் கொண்டா'

முந்தைய நாள் இரவு அவன் வீடு திரும்பியபோது நள்ளிரவைக் கடந்திருந்தது.

மாணிக்கவேல் தன் தந்தையின் உடலுடன் சென்னை பொதுமருத்துவமனையிலிருந்து வந்து சேர்ந்தபோது அன்று முழுவதும் நடந்தவைகளில் உடலும் மனதும் சோர்ந்து போயிருந்த அவரைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது அவனுக்கு.

ஆனாலும் தன்னுடைய துக்கத்தை வெளிக்காட்டாமல் நடக்கவிருந்தவைகளைக் குறித்து அத்தனை தெளிவாக அவரால் எப்படி சிந்திக்க முடிந்தது என்று இப்போதும் நினைத்து மலைத்துப்போனான்.

மாணிக்கவேல் வந்து இறங்கிய அடுத்த சில மணித்துளிகளிலேயே இன்னுமொரு வேனில் கமலியின் இறுதிச் சடங்கில் பங்குபெற்ற பாதிரியாரும், கோவில் ஊழியர்களும், கன்னியர்களும் வந்து சேர ஜோ அவர்களுடன் சேர்ந்து இரு உடல்களையும் இறக்கி ஹாலில் முந்தைய தினம் கமலியின் உடலைக் கிடத்தியிருந்த அதே மேசையில் ராணியையும், அதற்கு சற்றுத் தள்ளி இந்து முறைப்படி மாணிக்கவேலின் தந்தையின் சடலத்தை ஒரு வெள்ளைத் துணியை தரையில் விரித்து அதன் மேல கிடத்தினான்.

அவனுடைய மனைவி தனியாக காத்திருப்பாளே என்ற நினைப்பில், 'இனியும் நீங்க இங்க வெய்ட் பண்ணணுமா ஜோ. அங்க ஒங்க வொய்ஃப் தனியா இருப்பாங்களே.. தம்பிங்க ரெண்டு பேருக்கும் ஃபோன் செஞ்சிருக்கேன்... அவங்க வந்ததும் மேல ஆகவேண்டியத பாத்துக்குவாங்க.. நீங்க போய்ட்டு காலைல வாங்களேன்.' என்று மாணிக்கவேல் வற்புறுத்தியபோதும் சென்னையில் வசித்த அவருடைய இளைய சகோதரர்கள் இருவரும் குடும்பத்துடன் வரும் வரையும் இருந்துவிட்டே புறப்பட்டான் ஜோ.

ஆவி பறக்கும் காப்பி தம்ளருடன் சமையலறையிலிருந்து வெளியே வந்த அக்சீலியா, 'இந்தாங்க கொஞ்சம் ஏலக்காய தட்டி போட்டுருக்கேன்.' என்றவாறே தம்ளரை அவனிடம் நீட்ட முந்தைய இரவில் நடந்தவைகளில் மூழ்கிப்போயிருந்த ஜோ திடுக்கிட்டு தன் முன்னே நின்ற தன் மனைவியைப் பார்த்தான்.

'என்னங்க.. ஏதோ யோசனையிலருக்கீங்க போலருக்கு.. மாணிக்கம் சார பத்தியா?' என்றாள் அக்சீலியா.

'ஆமா அக்சீ.. சாருக்கு வந்த மாதிரி சோதனையெல்லாம் நமக்கு வந்திருந்தா நாம எப்படி ரியாக்ட் பண்ணியிருப்போம்னு நினைச்சி பாத்தேன்.. ஒரே வீட்டுக்குள்ள இரண்டு டெட் பாடீஸ்.... ரெண்டு பேருக்குமே சார விட்டா யாருமில்லை. சாரோட தம்பிங்க ரெண்டுபேரும் வந்தாங்கன்னுதான் பேரு.. ரெண்டு குடும்பமுமே வந்ததும் முதல்ல செஞ்சது என்ன தெரியுமா? யார் எந்த பெட்ரூம எடுத்துக்கறதுன்னுதான்... சார் மட்டுமில்லன்னா இவங்க ரெண்டு பேருமே இந்த நிலமைக்கு வந்துருக்க முடியாது. ஆனா அவங்க யாருக்குமே சாரோட இழப்புல பெரிசா எந்தவித வருத்தமும் இருக்கா மாதிரி தெரியல. மேடத்தோட கார்டியன் மதர் மட்டுந்தான் துக்கம் தாங்க முடியாம மேடத்தோட சடலத்துக்கு பக்கத்துலயே ஒக்காந்து அழுதுக்கிட்டு இருந்தாங்க. அப்புறம் அந்த ஃபாதர். 'என்ன மன்னிச்சிருங்க மாணிக்கம்னு' திருப்பி திருப்பி சொல்லிக்கிட்டேயிருந்தார். ஆனா சாருக்கு யாரோட ஆறுதலும் தேவையிருக்கல.. அவருக்கு இப்ப இருக்கற கவலையெல்லாம் சந்தோஷ் எப்படியிருக்கான்னு தெரிஞ்சிக்கறதுதான். அப்பாவோட பாடியோட வீட்டுக்கு வந்து சேர்ந்ததுமே சார் செஞ்ச முதல் வேலை சந்தோஷ் அட்மிட்டாயிருந்த கிளினிக் டாக்டர கூப்ட்டதுதான். ஆனா பாவம் அவன் அட்மிட் பண்ணப்போ இருந்த அதே கண்டிஷன்லதான் இருக்கானாம். அவன் வீட்ல இல்லேங்கறத கூட நா சொல்லித்தான் சாரோட பிரதர்சுக்கே தெரிஞ்சதுன்னா பாரேன்... எந்த அளவுக்கு அவங்க சார பத்தியும் அவரோட குடும்பத்த பத்தியும் கவலைப்படறாங்கன்னு இதுலருந்தே தெரியல? என்ன சொந்தமோ என்ன பந்தமோ போ... நமக்கிருக்கற கவல கூட அவங்களுக்கு இருக்காது போலருக்கு... இங்க இருக்கற இவங்களே இப்படின்னா ஊர்ல இருக்கறவங்களப்பத்தி என்ன சொல்றது? அவங்க இன்னைக்கி சாயந்தரத்துக்குள்ள வந்தா உண்டு.. இல்லன்னா அவங்க வராமயே கூட சார் ஃப்யூனரல் நடத்திருவார் போலருக்கு.. அந்த அளவுக்கு வெறுத்து போயிருக்கார்.' என்ற ஜோ தொடர்ந்து, 'பலகாரம் சாப்பிடற மூடுல நா இல்ல அக்சீ... ட்ரெஸ் பண்ணிக்கிட்டு கெளம்பறேன்.. நீ வீட்ட பூட்டிக்கோ.' என்றவாறு படுக்கையறையை நோக்கி நகர்ந்தான்.

'சிஜிஎம் சாருக்கு ஃபோன் பண்ணுங்களேன். அப்புறம் நாந்தான் சொல்லலன்னு நினைச்சிக்க போறார்.'

சட்டென்று நினைவுக்கு வந்தவனாய் ஜோ திரும்பி ஹால் சோபாவிலிருந்த தன் செல்பேசியை நோக்கிச் சென்றான். 'நல்ல வேளை ரிமைண்ட் பண்ணே.' என்றவாறு ஃபிலிப் சுந்தரத்தின் எண்ணை டயல் செய்ய துவங்கினான்.

*****

முந்தைய நாள் இரவு முழுவதும் அழுது வீங்கிய கன்னங்களுடன் படுக்கையில் படுத்து கிடந்தாள் மைதிலி.

'டீ மைதிலி! மணி எட்டாயிருச்சே.. எழுந்து வெளில வாயேன்.. உள்ளவே எத்தன நேரம்தான் அடஞ்சி கெடக்கப் போற? எழுந்து வா.. எல்லாருமா பேசி ஏதாச்சும் டிசைட் பண்லாம்.'

என்னத்த பேசி என்ன பலனிருக்க போறது? அப்பா அவனெ மறந்துரும்பார். அம்மா? புருசன பாக்கறதா இல்ல பொண்ண பாக்கறதான்னு கெடந்து அல்லாடுவா? ஒரு பொண்ணோட மனசு பொண்ணுக்குத்தான தெரியும்னு சொல்வா.. ஆனா நடக்கறதென்ன? என்னைக்கி என்னெ அம்மா புரிஞ்சிருக்கா இப்ப புரிஞ்சிக்கறதுக்கு?

அப்பாவுக்கு அவரோட ஒலகம்தான் முக்கியம். சாதி, குலம் கோத்திரம்னுட்டு... இருக்கறது twentyfirst centuryயில.. தாமசிக்கறது மெட்ரோ சிட்டியில.. ஆனா பேச்சு? பழங்காலத்துல.. என்ன சாதியோ என்ன கொலமோ.. யாருக்கு வேணும்? Outdated thoughts and idelogies... எதுவுமே வேணாம்னுட்டு போய்ட்டாத்தான் என்ன.. ஒன்னுமே நடக்காத மாதிரி எழுந்து குளிச்சி டிபன் பாக்ச தூக்கிட்டு ஆஃபீசுக்கு போய்ட்டு வரேன்னுட்டு போய் அப்படியே எங்காச்சும் போய்ட்டா என்ன?

என்னெ ஏமாத்தி நேத்தைக்கி கார்ல தூக்கி போட்டுக்கிட்டு வந்த அப்பாக்கு இதான் சரியான ரிப்ளை..

சட்டென்று மனதுக்குள் துளிர்த்த யோசனையில் உற்சாகமடைந்து துள்ளிக் குதித்தவாறு எழுந்து தன்னுடைய திட்டத்தை செயல்படுத்துவதில் தீவிரமானாள் மைதிலி..

தொடரும்..

2 comments:

siva gnanamji(#18100882083107547329) said...

//முந்தைய தினம் கமலியைக் கிடத்தியிருந்த அதே மேசையில் ராணியை....//

கமலி காலமான அடுத்த நாளா
இக்கொடுமைகள் சம்பவித்தன?

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க ஜி!

கமலி காலமான அடுத்த நாளா
இக்கொடுமைகள் சம்பவித்தன?/

காலமான நாளுக்கு அடுத்த அடுத்த நாள் அல்ல. அடக்கம் செய்யப்பட்டதற்கு அடுத்த நாள்.