காட்சி: 3
பாத்திரங்கள்: பிந்து
பிந்து ((மாடியில் தன் அறையிலிருந்த டெலிபோன் எக்ஸ்டென்ஷனில் இந்த சம்பாஷணையை ஒட்டுக்கேட்கிறாள்)
(தொலைப் பேசியில் சிந்துவின் குரல்) அவர் பாத்துக்கறேங்கறார். காசு ஒண்ணும் குடுக்க வேணாமாம். வீட்ல பிந்து இருக்கறதுனால இந்த விஷயத்தை இப்ப பேசவேணாம். நான் அப்புறம் வெளியே போறச்சே கூப்பிடறேன். வச்சிடறேன். (தொலைப் பேசியை வைக்கிறாள்)
பிந்து: (சிந்து பேசிமுடித்தவுடன் போனை வைக்கிறாள். தனக்குள் பேசிக்கொள்கிறாள்) என்ன நடக்குது இங்கே? இந்த தரகருக்கும் மன்னி குடும்பத்துக்கும் இடையிலே ஏதோ இருக்கு. என்னவாயிருக்கும்? கண்டுபிடிக்கணுமே? பிடிக்கிறேன், பிந்துவா, கொக்கா?
காட்சி: 4
பத்மநாப சாஸ்திரிகள்
அம்புஜம்
நந்து,
சிந்து,
பிந்து,
மாதுஎன்கிற மாதவன்
(பிந்து மாடியிலிருந்து இறங்கி வருகிறாள். நந்துவைக் காணாமல் வீட்டினுள் திரும்பி உரக்க குரலில்..)
பிந்து: அண்ணா, எங்கேயிருக்கே?
நந்து: (சமையல்கட்டிலிருந்து வருகிறான்.கையில் துணிப் பை) என்ன பிந்து, ஏன் இப்படி என் பேரை ஏலம் போடுறே? நானும் சிந்துவும் கறி கா வாங்க போறோம். அரை மணியாவும். அம்மா வந்தா சொல்லிரு. (உள்ளே திரும்பி) சிந்து சீக்கிரம் வா நாழியாறது பார்.
பிந்து: ஆமா தெரியாமத்தான் கேக்கறேன். அப்பாதானே நம்மாத்துல இதுநாள் வரைக்கும் கறி கா வாங்கியாருவார். இதென்ன புதுசா நீங்க ரெண்டுபேரும் போறேள்? தம்பதி சமேதரா வெளியே போணும்னு தோணிச்சினா போகவேண்டியத்தானே? அதெதுக்கு கறி கா வாங்கணும்னு ஒரு சாக்கு?
நந்து: இங்க பார் பிந்து, அநாவசியமா எங்க விஷயத்துல தலையிடாதே. உன் வேலையைப் பாரு. அப்பா வந்தா நா சொல்லிக்கறேன். நீ வா சிந்து. இவளுக்கு வேற வேலையில்லே. (இரண்டு பேரும் போகிறார்கள்.)
பிந்து: ஹ¤ம்.. போங்க, போங்க. நீங்க போற விஷயம் நேக்கு நீங்க சொல்லாட்டா தெரியாதா என்ன? பாத்துக்கறேன்.
(வாசல் கதவு மணியடிக்கும் ஒலி கேட்கின்றது. பிந்து சுவர்க் கடிகாரத்தைப் பார்க்கிறாள். மணி 7.40)
பிந்து: (தனக்குள்) அப்பா, அம்மா வர டைமாகுமே, யாராயிருக்கும்? (உரத்த குரலில்) யெஸ், கமிங். சித்த இருங்கோ. வந்துட்டேன்.
(வாசல் கதவைத் திறந்து திடுக்கிட்டு பின் வாங்குகிறாள்)
பிந்து: ஏய் மாது? இங்கே எங்கே வந்தே? நல்ல வேளை வீட்ல யாருமில்லே. இல்லேன்னா.. சரி, சரி உள்ளாற வா.
(உள்ளே நுழைந்த மாது என்கின்ற மாதவன் வீட்டை சுற்றி பார்வையை அலைய விடுகிறான்)
மாது: வாவ்! சூப்பரா இருக்கு பிந்து. இவ்வளவு வசதியானவாளா நீங்க? குட்..
பிந்து: (அவன் பின்னந்தலையில் தட்டி) ஏய், லூஸ் மாதுன்னு உங்காத்துல கூப்பிடுறது சரியாத்தானிருக்கு. சொல்லாம, கொள்ளாம வீட்டுக்கு வர்றது, வீட்டை பாத்துட்டு அசடாட்டம் ‘நீ இவ்வளவு வசதியானவளா’ ன்னு ஒரு கேள்வி. சரி, உக்காரு, என்ன சாப்பிடறே?
மாது: (ஆசையுடன்) சாப்பாடெல்லாம் போடுவேளா?
பிந்து: (தலையில் அடித்துக் கொள்கிறாள்) சரியான சாப்பாட்டு ராமன். என்ன குடிக்கறேன்னு கேட்டுருக்கணும். சொல்லு, காப்பியா, நீராகாரம் போறுமா? கூல் டிரிங்க்ஸ்லாம் எங்காத்துல கிடைக்காது.
மாது: ஏதோ ஒண்ணு. சீக்கிரம் குடுங்கோ. அத்தோட முறுக்கு, சீடை, வீட்ல பண்ணது ஏதாச்சும் இருந்தா குடுங்களேன். நேக்கு பசிக்கறது.
பிந்து: அதெல்லாம் ஒண்ணுமில்லை. பண்டிகை சீசன்னா இருக்கும். இந்த சமயத்துல வீட்ல ஒண்ணுமிருக்காது. இரு பாக்கறேன். நீ பேசாம அந்த சோபாவில உக்காரு. அண்ணா ஊர்ல இல்லயா? எங்க ஆளையே காணோம்?
மாது: யாரு, லட்சுமண் அண்ணாவா? (தோளை உயர்த்தி நாக்கைக் கடித்துக் கொள்கிறான்)
(பிந்து திரும்பிப் பார்த்து முறைக்கிறாள்)
பிந்து: ஏய், என்ன கொழுப்பா?
மாது: (உரக்க சிரிக்கிறான்) பின்னே, நீங்க ஒழுங்கா பாஸ்கர் அண்ணா எங்கேன்னு கேக்கறதானே?
பிந்து: (சமையல் கட்டிலிருந்து காப்பியுடன் திரும்பி வந்து, காப்பி டபராவை மாதுவிடம் கொடுத்துவிட்டு அவனெதிரில் அமர்கிறாள்) இப்ப சொல்லு, பாஸ்கர் எங்கே? டூர்ல எங்கேயாவது போயிருக்காரா?
மாது: அதெல்லாம் ஒண்ணுமில்லை ஸ்வர்ணா கல்யாண விஷயமா தஞ்சாவூர் வரை போயிருக்கான். இன்னைக்கி ராத்திரிக்குள்ள வந்துருவான். ஏன், உங்ககிட்ட சொல்லலையா? (காப்பியை உறிஞ்சி குடிக்கும் சப்தம் கேட்டு பிந்து முகம் சுழிக்கிறாள்)
(மாது கையிலிருந்த காப்பி டபராவை நழுவ விட காப்பி தரையில் கொட்டுகிறது. பிந்து துள்ளி எழுந்து சமையலறைக்குள் ஓடுகிறாள். சிறிது நேரத்தில் திரும்பி வந்து காப்பி விழுந்த இடத்தில் தண்ணீர் தெளித்து துடைக்கிறாள்)
பிந்து: (சலிப்புடன்) பாத்து குடிக்கபடாதா மாது? நீ என்ன குழந்தையா?
மாது: சாரி ... நான் உங்களை எப்படி கூப்பிடறது? மன்னின்னு கூப்பிடலாமா. நீங்க பாஸ்கர் அண்ணாவைத்தானே கல்யாணம் பண்ணிக்க போறேள்?
பிந்து: ஏய், என்ன ஏதேதோ பேசறே?
மாது: ஏன் உங்களுக்கு பிடிக்கலையா?
பிந்து: எது?
மாது: பாஸ்கர் அண்ணாவை?
பிந்து: பிடிச்சிருக்கு.
மாது: அப்புறமென்ன?
பிந்து: அது போறுமா? ஜாதகம், நட்சத்திர பொறுத்தமெல்லாம் பார்க்க வேண்டாமா? ஏன் உங்காத்துல இதப்பத்தி ஏதாவது பேசறாளா?
மாது: இல்லே, ஸ்வர்ணா கல்யாணம் முடிஞ்ச கையோட பாஸ்கர் அண்ணா கல்யாணத்தையும் முடிச்சிரலாம்னு தரகர் அப்பா கிட்டே சொல்லிண்டிருந்தார். ஸ்வர்ணா கல்யாணம் அநேகமா இன்னும் ஒரு மாசத்துல முடிஞ்சிருமாம். அதான்.. கேட்டேன். சரி.. நான் வரேன். அண்ணாவைப் பாத்தா நான் இங்கே வந்தேன்னு சொல்லிடாதேங்கோ. வைவான்.
பிந்து: சரி, சரி நான் சொல்லலை. பாஸ்கர் வந்ததும் எனக்கு ஃபோன் பண்ண சொல்லு.
(மாது வெளியேற நந்துவும் சிந்துவும் உள்ளே நுழைகிறார்கள்)
நந்து: யார் பிந்து அது? சரியான லூஸ் மாதிரி தெரியறது.ஆள் வர்றது கூட தெரியாம இடிச்சிண்டே போறான்!
பிந்து: அவன் எங்க ஆபீஸ்ல வேலை செய்யற என் கொல்லீகோட தம்பி. நாளைக்கு அவ ஆபீஸ¤க்கு லீவாம் அதான் வந்து சொல்லிட்டு போறான்.
சிந்து: ஏன் அவா ஆத்துல ஃபோன் இல்லையா. இந்த காலத்துல ஃபோன் இல்லாம கூட இருப்பாளா என்ன?
பிந்து: என்ன மன்னி இன்வெஸ்டிகேட்டிங் ஜர்னலிஸ்ட் மாதிரி கேள்வியெல்லாம் கேக்கறேள்?
நந்து: அவ சும்மாதானே கேட்டா? நீ ஏன் கோபிக்கறே? அதுவுமல்லாம அவ கேட்டதுல என்ன தப்பு? அவ உன் மன்னியாக்கும்? தாய் ஸ்தானம்னு சொல்லுவா, தெரியுமில்லே?
பிந்து: (குரலில் நக்கலுடன்) ஓ, தெரியுமே!
சிந்து: என்ன பிந்து, கேலி பண்றாப்பல இருக்கு?
பிந்து: அப்படி உங்களுக்கு தெரிஞ்சா நா என்ன பண்றது? (டிவியை ஆன் செய்ய சன் டிவியின் மெட்டி ஒலி டைட்டில் பாடல் ஒலிக்கிறது) சரி, சரி. டைம் நைன் ஆயிருச்சி, அம்மா இப்போ வந்துருவா, டிபன் ரெடியா?
நந்து: ரொம்ப அதிகாரம் பண்ணாதே. இப்பத்தானே வந்திருக்கா? அம்மா வரட்டும், எல்லாம் சேர்ந்தே சாப்பிடலாம்.
பிந்து: எனக்கொன்னும் பசிக்கலை. அம்மா வந்தா பசி பசின்னு நிப்பா. அதுக்குத்தான் சொன்னேன். நான் என்ன இந்தாத்து மருமகளா என்ன அதிகாரம் பண்ண?
சிந்து: பாத்தீங்களாண்ணா இவ பேசறத? நான் என்னைக்கி அதிகாரம் பண்ணேன்?
நந்து: சரி, சரி. நீ பிரச்சினையை வளர்க்காத. போய் சமையல் வேலையைப் பாரு, அம்மா வந்துருவா. ஏய், பிந்து நீ பேசாம டி.வி பாரு. நான் போய் குளிக்கணும். அந்த தரகர் மாமா வந்து குளிக்க விடாம பண்ணிட்டார். (சட்டையைக் கழற்றியவாறு மாடிப் படிகளில் ஏறுகிறான்)
பிந்து: அண்ணா, நீ வெளியே போனதும் தரகர் போன் பண்ணினார். நான் எடுத்ததும் வச்சிட்டார்.
நந்து: (திடுக்கிட்டு திரும்பி படிகளில் இறங்கி பிந்துவின் அருகில் வந்து) ஏய் என்ன சொல்றே?
(சிந்து சமையலறை வாசலில் நின்றவாறு அவர்கள் பேசுவதைக் கேட்பதை பிந்து பார்க்கிறாள். முகத்தில் குறும்பாய் ஒரு புன்னகையுடன் நந்துவை பார்க்கிறாள்)
பிந்து: என்னண்ணா பேயறைஞ்சா மாதிரி உங்க ரெண்டு பேர் முகமும் மாறிப்போச்சு! சும்மாதான் சொன்னேன்!
(நந்து கோபத்துடன் அடிக்க கையை ஓங்குகிறான். பத்மநாப சாஸ்திரிகளும் அம்புஜமும் உள்ளே நுழைகிறார்கள். )
பத்து: ஏய், நந்து, என்ன இது? உனக்கு யாரு அவளை அடிக்க அதிகாரம் குடுத்தா?
(பிந்து சோபாவில் இருந்தவாறு அழுகிறாள். அம்புஜம் அவளை சமாதானப் படுத்துகிறாள்.)
பிந்து: நான் சும்மா விளையாட்டுக்கு தரகர் போன் பண்ணான்னு சொன்னேன்மா. அதுக்கு போய் அண்ணா அடிக்க வரான்.
அம்பு: (நந்துவைப் பார்த்து) ஏன் நீ எங்கே போயிருந்தே? போன் அடிச்சா நீ எடுக்க வேண்டியதுதானே?
பிந்து: நீ இந்த பக்கம் போனதும், அண்ணாவும் மண்ணியும் கறி கா வாங்கணும்னு போயிட்டு சித்த முன்னாடிதான் வந்தாம்மா.
பத்து: என்னது, கறி கா வாங்க வெளியே போனாளா? நா கேட்டப்போ வேணாம்னு சிந்து சொன்னாளே. ஏம்மா சிந்து நீ தானே சொன்னே?
நந்து: (கோபத்துடன்)ஆமா அதுக்கென்ன இப்போ. நான்தான் நம்ம ரெண்டு பேரும் அப்புறமா வெளியே போறப்போ வாங்கலாம்னு சொன்னேன்.
அம்பு: சரி, சரி. அதுக்கென்ன இப்போ? சிந்து நீ போ. டிபன் ரெடியானா டைனிங் டேபிள்ல எடுத்து வை. இங்கே பாருங்கோண்ணா, இனிமே அவர் பேசறார், இவர் பேசறார்னு என்னை கூப்பிடாதீங்கோ. அவர் நண்ணாத்தான் பேசறார். ஆனா அவர் பேசறத யார் கேக்கவிட்டா. அதுவும் உங்க ஃபிரெண்டு இருக்காரே.. அவர் பேரென்னது.. ஹாங்! அந்த சுந்தரம். அவாத்து மாமி நம்ம சிந்துவைப் பத்தியே கேட்டுண்டிருந்தாளே, ஏன்? அவா கேக்கற கேள்விக்கெல்லாம் பதில் சொல்லி மாளலை.
பத்து: அப்படியென்ன கேட்டுட்டா நீ பதில் சொல்ல முடியாம?
அம்பு: ஒண்ணுமில்லேண்ணா..
பத்து: (சிரித்தவாறு) ஒண்ணுமில்லையா, அப்புறமென்ன?
அம்பு: (எரிச்சலுடன்) நீங்க வேறண்ணா, பேச விடாம, குறுக்கே குறுக்கே நக்கல் பண்ணிண்டு..
பத்து: சரி, சொல்லு.
அம்பு: உங்காத்து மாட்டு பொண்ணோட ஜாதகமும் உங்க பையனோட ஜாதகம் நன்னா பொருந்தியிருந்திச்சான்னு ரெண்டு மூணு தரம் கேட்டுட்டா. அவ ஏன் அப்படி கேட்டான்னுதான் நேக்கு புரியலை. ஏண்ணா, நீங்க என்ன நினைக்கிறேள்?
பத்து: அவ சாதாரணமாதான் கேட்டிருப்பள். விட்டுத் தள்ளு.
(நந்துவும் சிந்துவும் ஒருவரையொருவர் பதற்றத்துடன் பார்த்துக் கொள்வதை பிந்து பார்த்துவிடுகிறாள். ‘இதில் ஏதோ மர்மம் இருக்கிறது’ என்று தனக்குள் முனுமுனுக்கிறாள்)
அம்பு: (பிந்துவைப் பார்த்து) நீ என்னடி முனுமுனுக்கிறே?
பிந்து: ஒண்ணுமில்லேம்மா. நீ போய் சாப்பிடு. அப்பா என்ன பாக்கறே? சாப்பிடலை?
பத்து: இல்லே.. உன் முகத்துல ஏதோ விஷமமா யோசிக்கறா மாதிரி தெரியுதே! அதான் நீ எதையோ மறைக்கிறயோன்னு சந்தேகமாயிருக்கு.
அம்பு: ஆமா நீங்க பெரிய துப்பறியும் சாம்பு. சும்மாயிருங்கோ. நாளைக்கு எங்கண்ணா, மன்னியெல்லாம் வராளே, மறந்துட்டேளா. காலைல ஸ்டேஷன் போண்டாமா. என்னடா நந்து நீயும் போறேல்ல?
நந்து: சரிம்மா.
அம்பு: என்னடா சுரத்தேயில்லாம சொல்றே. என்னாச்சி ஏன் ஒரு மாதிரியிருக்கே. ஏதாவது பிரச்சினையா?
பிந்து: அம்மா நீ போனப்புறம் மன்னியாத்துலருந்து ஃபோன் வந்துது.
அம்பு: என்னவாம் நந்து, அவாத்துல ஏதாவது பிரச்சினையா?
நந்து: (பிந்துவைப் பார்த்து முறைக்கிறான்) அதெல்லாம் ஒண்ணுமில்லேம்மா. அம்மா, இந்த பிந்துவைக் கொஞ்சம் கண்டிச்சு வை, சிந்துவை மன்னிங்கற மரியாதையில்லாம கிண்டலடிக்கறா.
அம்பு: (பிந்துவை கேலியுடன் பார்க்கிறாள்) என்ன பிந்து இது, நீ என்ன குழந்தையாட்டம் பிஹேவ் பண்றே. போ மன்னிக்கு ஹெல்ப் பண்ணு. இன்னும் ஒரு வருஷமோ, ரெண்டு வருஷமோ. ஆத்துல இருக்கற வரைக்கும் ஜாலியா இருந்துட்டு போகாம, மன்னிகிட்டே எதுக்கு வம்புக்கு போறே?
நந்து: (பொய் கலக்கத்துடன்) இன்னும் ரெண்டு வருஷமா? என்னம்மா சொல்றே? அவளுக்கு இப்பவே ஏழரைக் கழுதை வயசாயிருச்சு.
பிந்து: பாத்தியாம்மா, இவன் சொல்றதை! நான் எப்ப ஒழிஞ்சி போவேன்னு காத்திண்டிருக்கான். நான் அவ்வளவு ஈசியா போயிடமாட்டேன்டா அண்ணா. அந்த தரகர் விஷயம் என்னன்னு நான் கண்டுபிடிக்க வேணாம்?
பத்து: ஏய், அதென்ன தரகர் விஷயம்? எனக்கு தெரியாம..
நந்து: (அவசரத்துடன் குறுக்கிடுகிறான்) அதெல்லாம் ஒண்ணுமில்லேப்பா. தரகர் மாமா கைமாத்தா கொஞ்சம் பணம் கேட்டார், அத குடுக்கறச்சே இவ பாத்துட்டா.. அதான் இவளா எதை எதையோ கற்பனை பண்ணின்டு .. பிந்து நான் உன் மேல கோபப்பட்டதுக்காக சாரி கேட்டுக்கறேன். அத மனசுல வச்சுக்கிட்டு எதையாவது சொல்லி குட்டைய குழப்பாதே.
(பிந்து அவன் பேசுவதை பொருட்படுத்தாமல் மாடியேறி தன் அறைக்கு போகிறாள்)
அம்பு: ஏய் பிந்து, சாப்பிடலை?
பிந்து: (திரும்பி பார்க்காமல்) நேக்கு பசிக்கலை. நீ சாப்பிட்டு படு. எனக்கு பசிச்சா அப்புறமா ஒரு கிளாஸ் பால் சாப்பிட்டுக்கறேன். குட் நைட் டாட்.
(பத்நாபனும், அம்புஜமும் டைனிங் டேபிளில் அமர சிந்து பரிமாறுகிறாள்.)
(தொடரும்)
No comments:
Post a Comment