21.12.05

அப்பா ஒரு ஹிட்லர் - 10

குறும்பாய் பேசுவதிலும் கைதேர்ந்தவள் என்பதால் பள்ளியில் தோழிகளுக்கு பஞ்சமே இல்லை.

அவளுடைய பள்ளி பெண்கள் பள்ளி. ‘ஏய் நம்ம மூனு பேர் மட்டும் கோ-எட்டுல இருந்தா நம்ம கலருக்கும், அழகுக்கும் எவ்ளோ பாய் ஃப்ரெண்ட்ஸ் கிடைச்சிருப்பாங்க தெரியுமா’ என்பார்கள் அவளுடைய நெருங்கிய தோழிகள் சூசனும் (சென்னையில் பிறந்து வளர்ந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த பெண்), காத்தரீனாவும் (ஆங்கிலோ இந்திய குடும்பத்தை சார்ந்தவள்).

சூசன் போனமாசம்தானே அம்மா சொல்றா மாதிரி பெரிய மனுஷியானா? ஆனா ஒரு வாரத்திலேயே ஸ்கூலுக்கு வந்திட்டாளே. அப்புறம் அந்த காத்தரீன் கூட அப்படித்தான சொன்னா? அவங்க ஒன்னும் இந்த மாதிரி தீட்டு, வீட்டுக்குள்ள வரக்கூடாதுன்னுல்லாம் சொல்லலையே.

இந்த அம்மா மட்டும் என்னத்துக்கு இப்படி பண்றாங்க? இப்ப தாத்தா வீட்டுக்கு இதை ஏன் போன் பண்ணி சொல்லணும்? அப்பாவுக்கு தெரியுமோ, தெரியாதோ தெரியலையே? அப்பா சாயந்திரம் வந்ததும் சத்தம் போடுவாரோ?

அடுக்களை அலமாரியில் வைக்கப்பட்டிருந்த சாமி படங்களின் முன்னால் போய் நின்றாள். எல்லா கடவுளையும் பார்த்து பொதுவாய் ஒரு கும்பிடு போட்டாள். தட்டில் இருந்த திருநீற்றை எடுத்து நெற்றியில் பூசிக்கொண்டாள்.

அப்பா ஒருநாளும் சாமி படங்களுக்கு முன் நின்று வேண்டிக்கொண்டதை அவள் பார்த்ததே இல்லை. கோவிலுக்கு சென்றாலும் அவன் வெளியிலேயே நின்றுக்கொள்வான். அம்மா கொண்டுவந்த பிரசாத தட்டிலிருக்கும் திருநீறு அல்லது குங்குமத்தை மட்டும் எடுத்து சும்மா பேருக்கு முடியில் தடவிக்கொள்வான். நெற்றியில் இட்டு அவள் பார்த்ததே இல்லை.

அம்மாவும் இதுவரை ‘ஏங்க இப்படி?’ என்று கேட்டதே இல்லை. ‘உங்கப்பாவ புரிஞ்சிக்கறது ரொம்ப கஷ்டம்டி. ஏங்க சாமிமேல உங்களுக்கு நம்பிக்கையில்லன்னு கேட்டோம்னு வச்சிக்க. அதுக்கு பெரிசா குதர்க்கம் பேசி அப்புறம் சாமி குத்தம் ஆயிருமோன்னு பயந்துதான் நான் கேக்கறதேயில்லை. எதுக்கு வம்பு?’ என்பாள் அம்மா. ‘அப்பா ஒரு மிஸ்டரி’ என்று நினைத்துக்கொள்வாள் மீனா.

அடுக்களையிலிருந்த காலை பலகாரத்தை தட்டில் வைத்து சாப்பிட்டு முடித்தாள். அம்மா சொன்ன முட்டை நினைவுக்கு வரவே ஸ்டவ்விலிருந்த பாத்திரத்தில் இருந்த வெது வெதுப்பான நீரில் கிடந்த இரண்டு முட்டைகளையும் எடுத்து தரையில் லேசாய் தட்டி லாகவமாய் ஓட்டை நீக்கி, சாப்பிட்டாள். வீனாவை நினைத்துக்கொண்டாள். எதுவானாலும் அவளுடன் பகிர்ந்துக் கொள்ளாமல் சாப்பிடவே மாட்டாள். ‘பாவம் வீனா. ஸ்கூல்ல இருந்தாலும் அவ வீட்டையேத் தான் நினைச்சிக்கிட்டிருப்பா.’ என்று நினைத்தாள்.

சாப்பிட்டு முடித்து தட்டை வெளியே வாளியில் இருந்த நீரில் கழுவி அடுக்களை அலமாரியில் வைத்தாள். முன் அறைக்குச் சென்று மதன் தயாரித்து வைத்திருந்த வினாத்தாள்களையும், அறிவியல் புத்தகத்தையும் எடுத்துக்கொண்டு மீண்டும் படுக்கையறைக்குச் சென்று கட்டிலில் அமர்ந்து படிக்கத் துவங்கினாள்.

சற்று நேரம் கழித்து ‘அம்மா! என்னா, வூட்ல யாரும் இல்ல போலக்கீது?’ என்று குரல் வரவே எட்டிப் பார்த்தாள். வேலைக்காரி.

‘அம்மா வீட்ல இல்ல பார்வதிக்கா. அப்புறமா வாங்களேன்.’ என்றாள்.

‘இன்னா மீனா. நீ ஸ்கூலுக்கு போல?’

‘இல்ல, எனக்கு ஜுரம்.’

‘ஜுரமா? பார்றா. ஜுரம்கறெ? புச்சா சட்டை பாவாடை யெல்லாம் போட்டுக்கினு, என்னைக்கில்லாம மூஞ்சில மஞ்சள பூசிக்கினு..’ என்றவள் சந்தோஷத்துடன் இரண்டு முட்டைக் கண்களையும் விரித்து.. ‘ஏய் நிஜமா சொல்லு. ஜுரமா இல்ல.. பெரிய மனுஷியாயிட்டியா?’ கையை தலைக்கு மேலே உயர்த்தி விஷமத்துடன் கேட்டவளைப் பார்த்து வியந்து போய் நின்றாள் மீனா. இவங்களுக்கு எப்படி தெரிஞ்சிது?

‘சரி, சரி. நீ பயந்துக்காத.. நாம் அம்மா கிட்டவே கேட்டுக்கிறேன். நீ போய் மூலைல குந்து.. தீட்டு. நா அப்பால வாரன்.’

தடதடவென அவள் இறங்கி ஓட மீண்டும் போய் கண்ணாடியில் தன் பிம்பத்தைப் பார்த்தாள். ‘சே.. இந்த மஞ்சள கழுவினாலும் போகாது போலருக்கே. பார்வதியக்கா போயி எல்லார் கிட்டயும் தம்பட்டம் அடிக்க போறாங்க.. அப்பா சொன்னா மாதிரி அம்மா என்னெ எக்சிபிஷன் ஆக்கிருவாங்க போலருக்குதே..’ நினைத்த மாத்திரத்தில் அவளுடைய கண்கள் கலங்கி கன்னத்தில் வடிந்தது. துடைத்துக்கொண்டு கட்டிலில் அமர சென்றவள் என்ன நினைத்தாளோ திரும்பிச் சென்று மூலையில் சம்மணம் இட்டு அமர்ந்தாள்.

கண்கள் புத்தகத்தை மேய்ந்தாலும் மனம் அதில் பதியாமல் எங்கெங்கோ சென்றது. கண்கள் தூக்க கலக்கத்தில் மூட சிறிது நேரத்தில் அப்படியே தரையில் படுத்து உறங்கிப் போனாள்.

**

காய்கறி மார்க்கெட்டில் இருந்து திரும்பி வந்த பத்மா வாசிலிலேயே அக்கம்பக்கத்து பெண்கள் கூடி நிற்பதைப் பார்த்து ஒரு நொடி திகைத்து நின்றாள். பிறகு வேக வேகமாக ஓடி வந்து, ‘என்ன எல்லாரும் கூடி நிக்கறீங்க? என் பொண்ணுக்கு ஏதாச்சும் ஆயிருச்சா?’ என்றாள் கண்களில் துளிர்த்து நின்ற கண்ணீருடன்.

எல்லோரும் சிரித்தனர். பத்மாவுக்கு போன உயிர் திரும்பி வந்தது. ‘ஏன் வூட்டுக்காரம்மா.. நீ சொல்லாக்காட்டி எங்களுக்கு திரியாமயே போயிரும்னா நெனச்சே.. அதான் பார்வதி இப்போ எல்லார்கிட்டயும் சொல்லிருச்சே.. இப்போ என்னா பண்ணுவே? அய்யே.. இதுல என்னா ரகச்சியம் இருக்குன்னு மறைச்சே..’ என்றாள் ஒருத்தி.

வேறொருத்தி, ‘அய்யே இன்னா நீ வெவரம் புரியாத ஆளாருக்கே.. அதான் அந்தம்மாவோட வூட்டுக்கார அய்யாத்தான் கடுவம் பூனையாச்சே.. இந்தம்மா இன்னா பண்ணும்? அதான் சைலண்டா இருந்துக்குச்சி.. இன்னாம்மா மீனாம்மா.. நான் சொல்றதுல தப்பேதாச்சும் கீது?’ என்றாள் பத்மாவைப் பார்த்து.

பத்மாவுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் ஒரு சிறு புன்னகையுடன் ஆமாம், இல்லை என்பதுபோல் தலையசைத்துவிட்டு அவர்களை விலக்கிக்கொண்டு மாடிக்குச் செல்லும் படிகளில் வேக வேகமாக ஏறினாள். விட்டால் போதும் என்றிருந்தது. ‘அந்த மனுஷன் சாயந்திரம் வரட்டும்.’ என்று நினைத்துக் கொண்டாள்.

‘இன்றைக்கு ராத்திரி எந்நேரமானாலும் புறப்பட்டு நாளை காலைல நா, அம்மா, உன் மூத்த அண்ணன் மூனு பேரும் தாய் மாமன் சீரோட வந்துர்றோம்மா. நீ ஒன்னுத்துக்கும் கவலப் படாதே. பாப்பாவ பத்திரமா பாத்துக்க. சடங்குக்கு நாள் குறிச்சதுக்கப்புறம் சாதி சனத்துக்கெல்லாம் சொல்லிரலாம், என்ன?’ என்று அவளுடைய தந்தை கூறியதைக் கேட்டதும் பொங்கி வந்த சந்தோஷம் வீட்டை அடைந்ததும் இந்த மனுஷன் என்ன சொல்வாரோ தெரியலையே என்ற நினைப்பில் கலவரமானது.

பதட்டத்துடன் தாழ்வாரத்திலிருந்த வாளியிலிருந்த நீரை காலில் கவிழ்த்துக்கொண்டு அடுக்களைக்குள் நுழைந்து கையிலிருந்த துணிப்பையை சுவரில் சாய்த்து வைத்துவிட்டு படுக்கையறையை எட்டிப்பார்த்தாள்.

தரையில் காலை மடக்கியவாறு அமர்ந்த நிலையிலேயே தரையில் கிடந்த மகளைப் பார்த்ததும் பதறிப்போய், ‘ஏய் என்னாச்சிடி? மூச்சி பேச்சில்லாமல் கெடக்கறே?’ என்றவாறே நெருங்க தூக்கம் கலைந்து எழுந்த மீனா ஒன்றும் புரியாமல் கன்னத்தில் வழிந்தோடும் கண்ணீருடன் தன் முன்னே அமர்ந்திருந்த தாயைப் பார்த்தாள். பிறகு எரிச்சலுடன், ‘என்னம்மா நீங்க?ராத்திரியெல்லாம் தூங்காம அசதியா இருந்திச்சேன்னு அப்படியே படுத்தேன். அதுக்குள்ள கலாட்டா பண்ணி.. சீ போங்கம்மா!’

பத்மாவுக்கு நிம்மதி பெருமூச்சு விட்டாள். வயித்துல பால வார்த்தியே முருகா என்றவாறு சாமி படங்களின் முன் போய்நின்று கன்னத்தில் போட்டுக்கொண்டாள். ‘சாமி, இந்த மனுஷனுக்கு நல்ல புத்தி கொடுப்பா. சாயந்திரம் வந்து ஒரு தகராறும் பண்ணக்கூடாதே சாமி. நான் உன்னத்தான் நம்பியிருக்கேன் பிள்ளையாரப்பா.’


மீனா தன் தாயையே பார்த்தாள். சாமி படத்துக்கு முன்னால அம்மா என்ன பண்றாங்க? கேர் ஃப்ரீ வாங்கிட்டு வரச் சொன்னோமே? வாங்கிட்டு வந்தாங்களா? இல்ல மறந்துட்டாங்களா? எழுந்து அடுக்களையில் வைத்திருந்த பையைத் திறந்து கவிழ்த்தாள். வெளியே வந்து விழுந்த குட்டி நண்டுகள் நாலா புறமும் ஓட ‘ஐயோ அம்மா’ என்று அலறியவாறு பாவாடையைத் தூக்கிக்கொண்டு இங்கும் அங்கும் தாவினாள்.

சாமி படங்களின் முன் கண்மூடி நின்றிருந்த பத்மா மீனாவின் அலறலைக் கேட்டு பதறிப்போய் அவளைப் பார்த்தாள். பிறகு கவிழ்ந்திருந்த பையையும் குறுகுறுவென்று அடுக்களைக்குள் இங்கும் அங்குமாய் ஓடும் நண்டுகளையும் பார்த்தாள். தாழ்வாரத்தில் இறங்கி நின்றுக்கொண்டு பயத்துடன் நண்டுகளையே பார்த்துக்கொண்டிருந்த தன் மகளையும் பார்த்தாள்.

சிரிப்பும், எரிச்சலும் ஒரே நேரத்தில் வந்தது. குனிந்து நாலாபுறமும் ஓடிய நண்டுகளை ஒவ்வொன்றாகப் பிடித்து கால்களை ஒடித்து ஒரு பாத்திரத்தில் போட்டு மூடினாள்.

கவிழ்ந்துக் கிடந்த பையை நிமிர்த்தி இறைந்து கிடந்த காய்கறிகளை அள்ளி பைக்குள் மீண்டும் போட்டுவிட்டு தாழ்வாரத்தில் நின்றுக்கொண்டு தன்னையே பார்த்துக்கொண்டிருந்த தன் மகளை நெருங்கினாள். ‘ஏய் உன்னை மூலைலதானே உக்கார வச்சேன். வா உக்காரு. ஊர்லருந்து வர்ற நேரத்துல நீ இங்கயும் அங்கயும் ஓடறத யாராவது பார்த்தா அவ்வளவுதான் என் மண்டைதான் உருளும். சொல்றத கேளு. வா. உக்காரு. சின்ன நண்டு சூப்பு இந்த நேரத்துல ரொம்ப நல்லதாம். அதான் வாங்கிட்டு வந்தேன். இன்னும் ஒரு மணி நேரத்துல ரெடியாயிரும். அதுவரைக்கும் பேசாம உக்காந்திரு.’

மீனாவுக்கு எரிச்சல் தாங்க முடியாமல் தன் தாயைப் பார்த்தாள். ‘அம்மா நான் கேர் ஃப்ரீ வாங்கிட்டு வரச்சொன்னேனே. மறந்துட்டீங்களா? இந்த துணியெல்லாம் எனக்கு சரி வராதுமா ப்ளீஸ்மா. பார்வதியக்கா வந்ததும் வாங்கிட்டு வரச்சொல்லுங்கம்மா.’

பத்மா ஆச்சரியத்துடன் தன் மகளையே பார்த்தாள். பாரேன், இந்த காலத்து குட்டிகள! நமக்கெல்லாம் அந்த காலத்துல இது வந்தப்போ பயந்து, நடுங்கி, வெளியில வரதுக்கே வெக்கப்பட்டுகிட்டு.. இதுங்க என்னடான்னா.. கேர்ஃப்ரீ, வேர்ஃப்ரீன்னுக்கிட்டு.. ஊம், காலம் கெட்டுக்கிடக்குடா சாமி.. சரி, சரி. இவ சொல்றதும் சரிதான். பார்வதி வரட்டும்..

தொடரும்..

4 comments:

துளசி கோபால் said...

இந்தக் காலத்துப் பொண்கள் நிஜமாவே விவரம் தெரிஞ்சதுங்கதான்.
அப்படித்தான் இருக்கவும் வேணும். இல்லாட்டா.....
அவ்ளோதான்.

G.Ragavan said...

ஜோசப் சார். திரும்ப வந்துட்டீங்களா! கிரேட்.

இந்த சீரு செனத்தியெல்லாம் இருக்குறது இருக்கட்டும். இதெல்லாம் பெரிசு படுத்தக்கூடாதுங்கறது என்னுடைய எண்ணம். காதும் காதும் வெச்சாப்புல அந்தப் பொண்ணுக்கு எந்த உளவியல் துன்பமும் இல்லாமச் செய்யனும். ஊரு கூட்டி சடங்கு சுத்தி....ம்ம்ம்ம்ம்ம்.....நாட் குட். மக்கள் இந்த விஷயத்துல மாறனும்.

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க ஸ்டார் துளசி, நன்றி.

நான் இந்த காலத்து பொண்ணுங்கன்னு எழுதனது 1980 பெண்கள பற்றி.

இப்போ 2005லயும் கிராமங்கள் ஏன் சென்னை போன்ற பெருநகரங்களிலும் இது போன்ற மஞ்சள் நீராட்டு விழாக்கள் கோலாகலமாக நடக்கின்றனவே.

பெண்கள் செலக்டிவா மாறுவதுதான் நடக்கிறது.

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க ராகவன், நன்றி.

நான் துளசி மேடத்திற்கு கொடுத்த பதிலை படியுங்கள்.

இந்த நாவலின் உட்கருத்து இந்த அலங்கோலம்தான்.