29.12.05

அப்பா ஒரு ஹிட்லர் - 13

ஒன்றுக்கும் விடை கிடைக்காமல் குழம்பிப் போய் தன் இருக்கையில் சாய்ந்து அமர்ந்து கண்களை மூடினான் மதன்.

***

அதிகாலையில் பேருந்து நிலையத்தில் வந்திறங்கிய பத்மாவின் பெற்றோரும் மூத்த சகோதரனும் வீடு வந்து சேர்ந்த போது முன் அறைக் கதவு திறந்து கிடக்க மதன் அறையிலிருந்த சாய்வு நாற்காலியில் உறங்கிக்கொண்டிருந்ததைக் கண்டு திகைத்துபோய் ஒருவரையொருவர் பார்த்தனர்.

மதன் சாதாரணமாக உறங்கச் செல்வதற்கு முன் அறைக்கதவை மட்டுமல்லாமல் ஜன்னல் கதவுகளையும் அடைத்து தாளிடுவது வழக்கம் என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும். ‘ஏண்டி பத்மா, நீயாவது மாப்பிள்ளைக் கிட்ட சொல்லக்கூடாது? இப்படி எல்லா கதவையும் சாத்திக்கிட்டு தூங்கினா சுத்த காத்து எப்படி ரூம்புக்குள்ளாற வரும்? உங்க ரெண்டு பேரையும் விடு.. வளர்ற பிள்ளைங்களையும் இந்த மாதிரி போட்டு அடைச்சி.. நம்ம வீட்ல இப்படியா வளர்த்தோம் உங்கள? என்னடி குடும்பம் நடத்தறீங்க.. படிச்சி பட்டம் வாங்கி என்ன பிரயோசனம்? இந்த மாதிரி விஷயங்கள பாக்க வேணாம்? கேட்டா நான் சொன்னா அவர் கேட்டாத்தானம்மான்னு புலம்புவே.. இப்படியே அவருக்கு பயந்து, பயந்து எத்தன வருஷத்துக்குத்தான் சாவப் போறியோ போ.’ என்று சென்ற முறை வந்தபோது தான் கூறி வருத்தப்பட்டதை நினைத்துப் பார்த்தாள் பத்மாவின் தாயார் மரகதம் .

‘என்னங்க இது, ஒரு நாளும் இல்லாம மாப்பிள்ளை இப்படி எல்லாத்தையும் திறந்து வச்சிட்டு.. அதுவும் சேர்லயே சாஞ்சி தூங்கறாங்க? வாங்க, பத்மாவையும் பிள்ளைங்களையும் பாப்போம்.’ என்றவாறு அவள் தன் கணவனுக்கு முன்னே சென்று அவர்களுடைய அறை திறந்து கிடப்பதையும், பத்மாவும் பிள்ளைகளும் கட்டிலில் அல்லாமல் நிலத்தில் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்துக்கொண்டு உறங்குவதையும் பார்த்து திகைத்து நின்றாள்.

பதற்றத்துடன் முதலில் அறைக்குள் நுழைந்து, ‘ஏய் பத்மா, எழுந்திரு..’ என்று தன் மகளை பிடித்து உலுக்கினாள்.

பதறி எழுந்த பத்மா தன் முன் நிற்கும் தாயை கட்டிப் பிடித்து அழ, சப்தம் கேட்டு எழுந்த மீனா தன் தாயையும் ஊரிலிருந்து வந்தவர்களையும் தூக்கக் கலக்கத்தோடு ஒரு நிமிடம் பார்த்தாள்.

‘என்ன இது எல்லா கதவும் திறந்து கிடக்கு? மாப்பிள்ள சேர்லயே சாஞ்சிக்கிட்டு தூங்கறாங்க. நீங்க என்னடான்னா கட்டில்ல படுக்காம தரையில கிடக்கறீங்க? என்னாச்சிடீ? அது சரி மீனாவ எதுக்கு வீட்டுக்குள்ளாற விட்ட? ஏண்டி, தீட்டாச்சே இது கூடவா ஒரு பொம்பளைக்கு தெரியாது?’ படபடவென பொரிந்த தன் தாயையும், தன் தந்தை மற்றும் சகோதரனையும் கலக்கத்துடன் பார்த்தாள் பத்மா. ‘இவங்க கிட்ட என்னன்னு சொல்றது? வீட்ல நேத்து நடந்த விஷய்த்த அப்படியே சொன்னா அண்ணன் கோவத்துல என்ன செய்வாங்கன்னே சொல்ல முடியாது. அப்பாவுக்கு ப்ரஷர்.. உங்க மருமகன் என்னை கைநீட்டி அடிச்சிட்டார்ப்பா என்று சொன்னால் டென்ஷனாயிருவாங்க. சரி, இப்போதைக்கு எதையாவது சொல்லி சமாளிப்போம். மீனா அப்பா எழுந்து அம்மா, அப்பாகிட்ட எப்படி நடந்துக்கறாங்கறத பொறுத்து சொல்லிக்கலாம்.’ என்ற முடிவுடன் தன் தாயை பார்த்தாள்.. ‘ஒன்னுமில்லம்மா.. மீனாவுக்கு ஒடியாடி வேலை செஞ்சதுல களைப்பா இருந்திச்சி.. அதான்..’

மாணிக்கம் அவளை இடைமறித்தான். ‘அப்ப ஏன் உன் மூஞ்சிம் பிள்ளைங்க மூஞ்சிம் அழுதா மாதிரி தெரியிது? ராத்திரி முச்சூடும் அழுது அழுது முகமெல்லாம் ஊதி போயிருக்கு? ஒன்னுமில்லேன்னு கதை விடறியா? சொல்லு என்னாச்சி?’

பத்மாவின் தந்தை தன் மகனின் தோள் மேல் கைவைத்து, ‘டேய், மாணிக்கம் வந்த இடத்துல அநாவசியமா பிரச்சினை பண்ணாத.. நீ எழுந்து போய் முகத்த அலம்பிக்கிட்டு வாம்மா, போ..’ என்றவர் தன் மனைவியைப் பார்த்தார். ‘மரகதம் நீ மீனாவ கூட்டிக்கிட்டு போயி வராந்தா மூலைய சுத்தம் பண்ணி துணி மாத்தி உக்கார வை..’

பத்மா அவசர அவசரமாக எழுந்து அறை வாசலில் நின்று முன் அறைவாசலை பார்த்தாள். மதன் இன்னும் எழுந்திருக்கவில்லையா அல்லது எழுந்தும் இங்கு நடப்பதைப் பார்த்துவிட்டு தன் அறைக்குள்ளேயே முடங்கி கிடக்கிறானா? சரி, அதை பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்து குளியலறைக்குள் சென்று முகத்தை கழுவி அழுந்த துடைத்தாள்.

பிறகு அடுக்களைக்குள் காப்பி, பலகார வேலையில் மும்முரமானாள்.

பத்மாவின் தந்தைக்கு தன் மகள் கூறியதில் சந்தேகம் இருந்தது. முந்தைய நாள் இரவில் கணவன் மனைவிக்குள் ஏதோ பெரிய வாக்குவாதம் நடந்திருக்கிறது. அதை தங்களிடம் இருந்து மறைக்கிறாள் என்று நினைத்தார். இத்தனை களேபரத்திற்கு நடுவிலும் தன்னை மறந்து உறங்கும் வீனாவைப் பார்த்தார். அவரையுமறியாமல் அவருடைய உதடுகளில் புன்னகை பூத்தது.

அவருக்கு பத்மாவின் இரண்டு குழந்தைகள் மீதும் உயிர். மாதத்திற்கு ஒரு முறையாவது ஏதாவது சாக்கு வைத்துக்கொண்டு வந்துவிடுவார். தன் மகன்கள் வழியில் பேத்தி ஒன்றுகூட அமையவில்லையே என்ற ஏக்கத்தில் இருந்தவர் தன் மகள் மூலமாக கிடைத்த இரண்டு பேத்திமார்களையும் தன் செல்வமாக நினைத்தார்.

அதிலும் கடைக்குட்டி வீனா என்றால் கொள்ளைப் பிரியம். அவள் பிறந்தவுடந்தான் நான் வணிகத்தில் எதிர்ப்பாராத முன்னேற்றம் அடைந்தேன் என்று பார்ப்பவர்களிடத்திலெல்லாம் சொல்லி மகிழ்வார். அதில் தன்னுடைய மூன்று மருமகள்களுக்கும் வருத்தம் என்று தெரிந்தாலும் அதைப்பற்றியெல்லாம் கவலையே படமாட்டார்.

அதிலும் இரண்டு பேத்திமார்களும் கான்வெண்ட் ஆங்கிலத்தில் தங்களுக்குள் உரையாடிக்கொள்வதைப் பார்க்கும்போதெல்லாம் பூரித்துப் போவார். ஒவ்வொருமுறை ஊருக்கு வரும்போதெல்லாம் இருவருக்கும் ஏதாவது ஒரு ஆபரணத்தை செய்துகொண்டு வந்து அவர்களை அணிவித்து அழகு பார்ப்பார். மதனுக்கு இதில் துளியும் விருப்பம் இருக்காது. அவர் வந்து போனதும் பத்மாவுக்கு அர்ச்சனை நிச்சயம் உண்டு. ‘ஏண்டி அவர்தான் பாசத்துல கண்ண மூடிக்கிட்டு இப்படி பண்றார்னா நீயும் பல்ல இளிச்சிக்கிட்டு வாங்கி, வாங்கி வச்சிக்கறே? ஊர்ல மூனு பசங்களுக்கும் பேரப்பிள்ளைங்க இருக்கில்ல? அவங்கல்லாம் என்ன நினைப்பாங்க நம்மளப்பத்தி?’ என்பான். பத்மா ‘இவுகளுக்கு பைத்தியம் முத்தித்தான் போயிருக்கு. வீட்டுக்கு வர லட்சுமிய யாராவது வேண்டாம்பாங்களா?’ என்று தனக்குள் நினைத்துக்கொண்டு வாயே திறக்கமாட்டாள்.

இப்போதும் அவருடைய காலடியில் தன்னை மறந்து உறங்கிக்கொண்டிருந்த தன் பேத்தியை பார்த்ததும் அவரையுமறியாமல் உணர்ச்சிவசப்பட்டார். ‘பாவம் புள்ள, ராத்திரியெல்லாம் தரையிலேயே கெடந்தில்ல ஒறங்கியிருக்கு? கட்டில்ல எடுத்து போடுவம்.’ என்ற முனகலுடன் குனிந்து வீனாவை இரண்டு கைகளிலும் அள்ளி கட்டிலில் கிடத்தினார்.

சட்டென்று கண் விழித்த வீனா அவரைக் கண்டதும் கட்டிப்பிடித்துக்கொண்டு அழ ஆரம்பித்தாள். ‘தாத்தா, நேத்து இங்க என்ன நடந்திச்சி தெரியுமா?..’

அடுக்களையில் வேலையாயிருந்த பத்மா வீனாவின் குரல் கேட்டு கையிலிருந்த பாத்திரத்தை அப்படியே போட்டுவிட்டு படுக்கையறைக்குள் ஓடி சென்று வீனாவின் வாயைப் பொத்தினாள், ‘ஏய். வாயை மூடிக்கிட்டு இரு. அப்பா நீங்க போங்கப்பா. இவளுக்கு வேற வேல இல்ல.. இப்படித்தான் எதையாவது சொல்லி வீட்டுக்குள்ள குளப்பம் பண்ணுவா..’

பத்மாவின் தந்தை இருவரையும் மாறி, மாறி பார்த்தார். பிறகு ஒன்றும் பேசாமல் வாசலை நோக்கி திரும்பினார். வாசலை அடைத்துக்கொண்டு கடுங்கோபத்துடன் நின்ற மகனைப் பார்த்தார். அவனை நோக்கி ‘என்ன?’ என்பதுபோல் புருவத்தை உயர்த்தினார்.

மாணிக்கத்திற்கு கோபம் தலைக்கேறியது. ‘என்னப்பா, ஒன்னுமே நடக்காதமாதிரி என்னைப் பாத்து என்னங்கறீங்க?’ என்றவாறு உள்ளே நுழைந்து வீனாவை நெருங்கி, ‘சொல்லும்மா நேத்து என்ன நடந்திச்சி? நீ சொல்லு. அம்மாவ பாக்காத. மாமா இருக்கேன்ல? சொல்லு வீனா என்ன நடந்திச்சி?’ என்றான்.

பத்மா குறுக்கிட்டாள். ‘நான் சொல்றேன்னே.. நான் நேத்தக்கி அவங்கக்கிட்ட ரொம்ப மரியாதையில்லாம பேசிட்டேன். அடிக்க கை ஓங்கிட்டாங்க.. ஆனா அடிக்கலை.. பிள்ளைங்க ரெண்டும் இடையில வந்து தடுத்திருச்சிங்க.. அதான் நேத்து வீட்ல யாருமே சாப்டாம கொள்ளாம படுத்துட்டோம். அதாம்பா நடந்தது.. அவங்க எழுந்திரிச்சதும் நீங்களே கேளுங்க..’

‘இல்ல மாமா. அம்மா பொய் சொல்றாங்க. அப்பா, 'உங்கம்மா, அப்பாவுக்கெல்லாம் ஏண்டி போன் பண்ணி வரச்சொன்னே'ன்னு கேட்டு அடிச்சாங்க மாமா. கீழ் வீட்டு ஆளுங்கல்லாம் வந்து கேட்டப்போ கூட நீங்கல்லாம் உங்க வேலைய பாத்துக்கிட்டு போங்கன்னு விரட்டிட்டு அம்மாவ கழுத்த பிடிச்சி வெளியே தள்ளி உன்ன இன்னையோட தல முழுகிட்டேன் எங்கயாவது தொலிஞ்சி போடி, பிள்ளைங்க ரெண்டு பேரைமட்டும் நான் விட மாட்டேன்னு சொல்லிட்டாங்க மாமா.’ அதற்கு மேல் பேசமுடியாமல் வீனா தன் தாய்மாமனைக் கட்டிப்பிடித்து அழலானாள்.

கோபத்தின் உச்சிக்கு சென்ற மாணிக்கம் சிறிது நேரம் என்ன செய்வதென தெரியாமல் அறையை சுற்றிலும் பார்த்தான். பிறகு அடுக்களைக்குள் ஓடி மூலையில் கிடந்த அடுப்பெறியும் விறகில் ஒன்றை கையிலெடுத்துக்கொண்டு வெளியே வந்தான்.

தாழ்வாரத்தின் கிழக்கு மூலையை கழுவி, சுத்தம் செய்து, மீனாவை குளிப்பாட்டி, உடை மாற்றி ஒரு மரப்பலகையின் மேல் அமர்த்திய மரகதம் வீனாவின் குரல் கேட்டு படுக்கையறையை நோக்கி ஓடிச்சென்றாள். கையில் கட்டையுடன் கோபத்துடன் நின்ற தன் மகனைப் பிடித்து நிறுத்தினாள்.

‘டேய், உனக்கென்ன கிறுக்கா பிடிச்சிருக்கு? கையில கட்டையோட யார அடிக்கறதுக்கு ஓடறே? என்னங்க நீங்களும் பாத்துக்கிட்டு நிக்கறீங்க? இவன் கோபத்துல போயி ஒன்னுகிடக்க ஒன்னு செஞ்சிட்டான்னா.. என்ன பண்றது?’

பத்மாவின் தந்தை நடந்தவற்றையெல்லாம் பார்த்துவிட்டு என்ன செய்வதென தெரியாமல் லேசாய் தலைசுற்றுவதுபோல் உணரவே மெளனமாய் கட்டிலில் அமர்ந்தார்.

பத்மா, மரகதம் இருவரும் அவரையே பதற்றத்துடன் பார்த்தனர். ‘அப்பா என்னப்பா, என்ன செய்யிதுப்பா..’ அடி வயிற்றிலிருந்து கதறிய பத்மாவின் குரல் கேட்டு அதுவரை விழித்தெழுந்து தன் அறைக்குள்ளேயே முடங்கிக்கிடந்த மதனும், தாழ்வார மூலையில் அமர்த்தி வைக்கப்பட்டிருந்த மீனாவும் எழுந்து ஓடிவந்தனர்..

தொடரும்

9 comments:

துளசி கோபால் said...

என்ன களேபரம். பாவம் வயசான மனுஷர். ஹார்ட் அட்டாக் வந்துறப்போகுது. பத்திரம்..

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க துளசி,

தினமும் நூறு பேருக்கு மேல படிக்கறாங்க. ஆனா பின்னூட்டம் போடறது நீங்க மட்டும்தான்.

உங்களுக்கு என்ன கைமாறு செய்யப்போறேன்னு நினைச்சா..

ரொம்ப நன்றிங்க.. ஹும், ஹும் (துக்கம் தாளாமல் விம்மல்..)

dondu(#11168674346665545885) said...

"ரொம்ப நன்றிங்க.. ஹும், ஹும் (துக்கம் தாளாமல் விம்மல்..)"

இப்படியெல்லாம் லொள்ளு கூட பண்ணத் தெரியுமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

டிபிஆர்.ஜோசப் said...

Naan kooda thinamum padikiren.

தெரியும் புதுவை. மிக்க நன்றி.

டிபிஆர்.ஜோசப் said...

டோண்டு சார்.. என்ன சார் நீங்க உண்மையிலேயே ஃபீல் பண்ணி எழுதினத போயி லொள்ளுன்னுட்டீங்க. மறுபடியும் விம்மி காட்டவா? அது உண்மையான விம்மல் சார்.

நான் தஞ்சாவூர், மதுரை கிளைகள்ல வேலை செஞ்சப்போ அடிக்கடி, குறைந்தது மாதம் ஒருமுறை கோவை வட்டார அலுவலகத்துக்கு செல்வது வழக்கும். அந்த பழக்கமோ என்னவோ கோவை லொள்ளு தன்னால வந்து ஒட்டிக்கொண்டது :-)

G.Ragavan said...

// தினமும் நூறு பேருக்கு மேல படிக்கறாங்க. ஆனா பின்னூட்டம் போடறது நீங்க மட்டும்தான்.

உங்களுக்கு என்ன கைமாறு செய்யப்போறேன்னு நினைச்சா.. //

என்னை மறந்ததேன் ஜோசப் சார் ஜோசப் சார் ஜோசப் சார்

நாலு நாளு லீவு அதான்.....

ஐயோ! அடுத்து என்னாகுமோ தெரியலையே! சண்டை கிண்டை போடாம கூடிப் பேசி ஒரு முடிவுக்கு வாங்கய்யா.....நல்ல நாளும் அதுவுமா..சண்டையெல்லாம் ஒன்னும் வேண்டாம். சமாதானமாப் போங்க.

டிபிஆர்.ஜோசப் said...

அடடா என்ன ராகவன் ஆளையே காணோமேன்னு பார்த்துக்கிட்டே இருந்தேன் வந்துட்டீங்க. உங்களுக்கு நூறு வயசு ராகவன்.

நினைச்சேன் நீங்க ஊர்ல இல்லேன்னு. உங்கள போயி மறப்பேனா ராகவன்.

நீங்க இல்லாதப்போ துளசிதானே தனியாளா இருந்து சமாளிச்சாங்க.. அவங்க மட்டுமில்லேன்னா பின்னூட்டமே வாங்காத ஒரே பதிவுன்னு தமிழ்மணத்துல அவார்டு கூட குடுத்தாலும் குடுத்திருப்பாங்க.. அதான் என்னையுமறியாம அழுகாச்சியா வந்துது. அதான் நீங்க வந்தீட்டீங்களே.. இனி கவலையில்லை..

மதனுக்கும் சரி, மாணிக்கத்துக்கும் சரி சண்டை போடாம இருக்க முடியாது.. பாக்கலாம், என்ன நடக்குதுன்னு..

G.Ragavan said...

// அடடா என்ன ராகவன் ஆளையே காணோமேன்னு பார்த்துக்கிட்டே இருந்தேன் வந்துட்டீங்க. உங்களுக்கு நூறு வயசு ராகவன். //

நூறு வயசா! சரி. நீங்க குடுக்குறீங்க. எனக்கு ஒரு கனவு இருக்கு. அந்தக் கனவு கொஞ்சம் பெரிய கனவு அது நிறைவேறி நூறு வயசு வரைக்கும் அதில் ஆக்டிவ்வா இருக்கனுமுன்னும் ஆசி குடுங்க.

// நினைச்சேன் நீங்க ஊர்ல இல்லேன்னு. உங்கள போயி மறப்பேனா ராகவன். //
அதான பாத்தேன். நேத்து காலைல கூட பிரவுசிங் செண்டர் போயி அத்தியாயம் வந்திருக்கான்னு பாத்தேன். கண்டு பிடிக்க முடியல. இன்னைக்கு வந்து பாத்தா ரெண்டு பதிவு. :-)

// நீங்க இல்லாதப்போ துளசிதானே தனியாளா இருந்து சமாளிச்சாங்க.. அவங்க மட்டுமில்லேன்னா பின்னூட்டமே வாங்காத ஒரே பதிவுன்னு தமிழ்மணத்துல அவார்டு கூட குடுத்தாலும் குடுத்திருப்பாங்க.. அதான் என்னையுமறியாம அழுகாச்சியா வந்துது. அதான் நீங்க வந்தீட்டீங்களே.. இனி கவலையில்லை..//

டீச்சர் ரேஞ்சே வேற ஜோசப் சார். அவங்க பெரிய தில்லாலங்கடி.

// மதனுக்கும் சரி, மாணிக்கத்துக்கும் சரி சண்டை போடாம இருக்க முடியாது.. பாக்கலாம், என்ன நடக்குதுன்னு.. //

கருத்து மோதலை முறையாகச் செய்ய வேண்டும். அந்தப் பக்குவம் யாருக்குமில்லை. அடுத்தவர் வாயை அடைத்தால் வெற்றி என்று நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள் இந்த மதனும் மாணிக்கமும். சரி. நடப்பது நடந்தே தீரும்.

டிபிஆர்.ஜோசப் said...

அந்தக் கனவு கொஞ்சம் பெரிய கனவு அது நிறைவேறி நூறு வயசு வரைக்கும் அதில் ஆக்டிவ்வா இருக்கனுமுன்னும் ஆசி குடுங்க.//

கண்டிப்பா ராகவன்.. பிடிங்க ஆசியை.. நல்லா ஆரோக்கிய்மா.. நிறைய பதிவுங்கள எழுதி.. பெரிய எழுத்தாளரா ஆகி.. நல்லா இருங்க..

நடப்பது நடந்தே தீரும். //

ரொம்ப கரெக்ட்.. கதையில மட்டுமில்ல நம்ம எல்லார் வாழ்க்கையிலும்தான்.

விட்டதுக்கெல்லாம் சேர்த்து இன்னைக்கி பின்னூட்டமா போட்டு தள்ளிட்டீங்க.. நன்றி ராகவன் :-))


டீச்சர் ரேஞ்சே வேற ஜோசப் சார். அவங்க பெரிய தில்லாலங்கடி.//
நாளைக்கு காலைல துளசி படிச்சிட்டு அதென்ன ராகவன் தில்லாலங்கடின்னு சண்டைக்கி வராம இருந்தா சரி.