12.12.05

அப்பா ஒரு ஹிட்லர்! – 4

பத்மா சமையல் வேலையை முடித்து உணவு பாத்திரங்களை டைனிங் மேசையில் பரப்பிவிட்டு கைகளை புடவையில் துடைத்.. (ஏய், உன்கிட்ட எத்தனை தடவை சொல்லியிருக்கேன், கை துடைக்கறதுக்கு ஒரு சின்ன நாப்கினை இடுப்பில சொருகிக்கன்னு. ஏன்டி உனக்கு இந்த வேலைக்காரி மென்டாலிட்டி? கீழ குனிஞ்சி பார் உன் சேலைய! கைய துடைச்ச இடம் எவ்வளவு ஈரமா, அசிங்கமா, சை! உனக்கு எப்படி சொல்லித்தான் புரிய வைக்கிறதுன்னே தெரியலைடி.) மனசுக்குள் மதனின் குரல் கேட்க நாக்கைக் கடித்துக்கொண்டு கொடியில் கிடந்த டவலில் கைகளைத் துடைத்தவாறு முன் அறையை நோக்கி நடந்தாள்.

அறையை நெருங்கியவளின் கண்கள் வியப்புடன் விரிந்தன. கண்கள் சுவர்க்கடிகாரத்தைப் பார்த்தன. மணி 9.00. பிள்ளைகள் இருவரும் தாங்கள் படித்துக்கொண்டிருந்த புத்தகங்களின் மேலேயே கவிழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தார்கள். அறையில் நுழைந்து கணவனைப் பார்த்தாள். என்ன ச்சரியம்! மதனும் தன் சாய்வு நாற்காலியில் ழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தான்.

அது அவனுடைய பிரத்தியேக நாற்காலி. அதில் யாரும், பிள்ளைகளையும் சேர்த்து, அமரக்கூடாது. சாய்வு நாற்காலியின் முதுகில் அவனே தைத்து அணிந்திருந்த துணி உறை சற்றே சுருங்கியிருந்தாலும் மூவரையும் பார்த்து ‘ஏய் உண்மைய சொல்லுங்க? யார் அப்பா சேர்ல படுத்தது? என்பான். னால் மூத்தவள் மீனா படு கெட்டிக்காரி. பள்ளியிலிருந்து வந்தவுடன் அவளால் அந்த சாய்வு நாற்காலியில் ஒரு பத்து நிமிடம் அமராமல் இருக்க முடியாது. னால் மதன் கண்டுபிடிக்காமல் இருக்க துணி உறையின் நாடாவை சாமர்த்தியமாக அவிழ்த்து உறையை கழற்றி சுருங்காமல், பத்திரமாக படிக்கும் மேசையில் வைத்துவிட்டு அவளும் வீனாவும் அமர்ந்து சிறிதுநேரம் சாய்ந்து படுத்திருப்பர். பிறகு மீனா உறையை எடுத்து லாவகமாக, மதனால் கண்டுபிடிக்க முடியாதபடி மீண்டும் எடுத்து அணிவித்துவிடுவாள்! மதனும் திரும்பிவரும்போது சுருங்காத உறையைப் பார்த்துவிட்டு தன் பிள்ளைகளிடம், ‘குட். இப்படித்தான் ஒபீடியன்டா இருக்கணும். அப்பா சேர் அப்பாவுக்குத்தான். என்ன?’ என்பான். பிள்ளைகள் இருவரும் பத்மாவும் ஒருவர் ஒருவரையொருவர் பார்த்து கள்ளத்தனமாய் சிரித்துக் கொள்வார்கள். அந்த வீட்டில் மதனின் நியதிகளை முறியடிப்பதில் மூவருக்கும் ஒரு தனி சந்தோஷம்!

பத்மா, முதலில் வீனாவை அவளுடைய உறக்கம் கலையாமல் அள்ளிக்கொண்டுபோய் அவளுடைய படுக்கையறையில் கிடத்திவிட்டு திரும்பிச் சென்று மீனாவை முதுகில் தட்டி எழுப்பினாள். ‘ஏய் மீனா. என்ன குழந்தைமாதிரி நீயும் தூங்கிட்ட? சாப்பிட வேணாம்? எழுந்திருடி.’ அரைத்தூக்கத்தில் கண்களைத் திறக்காமல் தலையை உயர்த்தி அரைக்கண்ணால் பத்மாவைப் பார்த்த மீனா மீண்டும் தலையைக் கவிழ்த்து உறங்க ரம்பித்தாள். பத்மா தன் கணவனிடம் சென்று குழந்தையைப் போல் ழ்ந்து உறங்கிக்கொண்டிருந்தவனைப் பார்த்தாள். அவளையும் அறியாமல் அவளுடைய உதடுகளில் ஒரு புன்னகை தவழ்ந்தது.

அவள்மேல் எதற்கெடுத்தாலும் கோபப்பட்டாலும் மதன் தன்மேல் எத்தனை பாசம் வைத்திருப்பவன் என்பது அவளுக்குத் தெரியும். கோபம் இருக்கும் இடத்தில்தான் குணம் இருக்கும் என்பதை அவனிடம் உணர்பூர்வமாக அனுபவித்திருக்கிறாள் பத்மா.

மூத்தவள் மீனா வயிற்றில் இருக்கும்போது மாமியாரிடத்திலும் மதனுடைய இரண்டு மைனிமார்களிடத்திலும் அவள் கொடுமைகள் அனுபவித்தபோதெல்லாம்கூட மதனிடம் ஒன்றும் புகார் கூறியதில்லை. ஒரு ஞாயிற்றுக்கிழமை அவன் மாடியிலிருந்த தன் படுக்கையறையிலிருந்து இறங்கி வரும்போது நிறைமாத கர்ப்பிணியான பத்மா விசாலமான முன் ஹாலை தண்ணீர் வைத்து துடைத்துக்கொண்டிருப்பதைப் பார்த்தான்.

சுர்ரென்று எழுந்த கோபத்துடன் படிகளில் இறங்கி ஓடிச் சென்று பத்மாவின் கைகளிலிருந்த ‘மாப்பை’ பிடிங்கி எறிந்தான், ‘ஏய் என்ன இது, நீ ஏன் இந்த வேலையையெல்லாம் செய்யறே? வேலைக்காரி என்ன னா?’ என்று கத்தினான். பத்மா அவனுடைய கோபத்தைக் கண்டு மிரண்டு போய் அவனைப் பார்த்தாள்.

அவனுடைய சப்தத்தைக் கேட்டு உள் அறைகளில் ஒன்றிலிருந்து ஓடிவந்த அவனுடைய தாயார் பத்மாவைப் பார்த்து வாயில் கைவைத்து ‘சொல்லாதே’ என்பதுபோல் சைகைக் காட்ட பத்மாவின் பார்வை சென்ற திசையில் பார்த்த மதன் தன் தாயின் சைகையைப் பார்த்துவிட்டு பத்மாவின் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு தன் தாயை நெருங்கினான். கண்கள் இரண்டும் கோபத்தால் சிவக்க தன் தாயைப் பார்த்துக்கொண்டு சிறிது நேரம் பேச முடியாமல் தடுமாற அலர்மேல் அம்மாள் அவனை அலட்சியத்துடன் பார்த்துவிட்டு சென்று ஹாலிலிருந்த சோபாவில் அமர்ந்தாள்.

அடங்கா கோபத்துடன் அவளை நோக்கி திரும்பிய மதன், ‘என்ன நடக்குது இங்கே?’ என்றான். அவனுடைய குரலைக் கேட்டு ஹாலுக்கு வந்த மூத்த மருமகள்கள் இருவரும் கேலியுடன் மதனையும் இடுப்பில் சொருகிய சேலையுடன், தலைமுடி கலைந்து வேலைக்காரி கோலத்தில் நின்ற பத்மாவையும் பார்த்து முகத்தைத் திருப்பிக்கொண்டனர்.

தன் தாயையும், இரு மைனிமார்களையும் மாறி, மாறி பார்த்த மதன் திரும்பி தன் மனைவியைப் பார்த்தான். குனிந்து அவள் இடுப்பில் செருகியிருந்த சேலையை இழுத்துவிட்டு அவளுடைய தலைமுடியை சரி செய்தான். ‘பத்மா நீ மேல போய் குளிச்சிட்டு சேலைய மாத்து. நாம வெளிய போறோம்.’

பதில் ஒன்றும் பேசாமல் பத்மா அவனையே பார்க்க, ‘நான் சொல்றேன் இல்ல. போ. போய் குளி. நான் இவங்க கிட்ட கொஞ்சம் பேசணும். பேசிட்டு வரேன். நீ போ.’ என்று அவளுடைய தோள்களைப் பிடித்து மாடிப்படிவரை தள்ளிக்கொண்டு சென்றான். அவள் தயங்கி, தயங்கி மாடியேற, மதன் அடங்கா கோபத்துடன் தன் தாயை பார்த்தான்.

‘ஏம்மா, அவளுக்கு ஒன்பது மாசம் முடிஞ்சி பிரசவம் இன்னைக்கோ நாளைக்கோன்னு இருக்கற நேரத்துல வேலைக்காரி ஒரு நாள் வரலேங்கறதுக்காக நீங்க மூனு பேர் இருந்தும் அவள் இவ்வளவு பெரிய ஹால துடைக்க சொல்லிட்டு வேடிக்கைப் பார்த்துக்கிட்டு இருக்கீங்களா? அவ வீட்ல பிரசவத்துக்கு வீட்டுக்கு கூட்டிக்கிட்டு போறேன்னு சொன்னப்போ நான் எதுக்கு வேண்டாம்னு தடுத்தேன்? அந்த பட்டிக்காட்டுல சரியான ஸ்பத்திரி வசதி இருக்குமோ இருக்காதோன்னுதான். உங்க வீட்டு வேலைய செய்யறதுக்கில்ல. புரியுதா? ஏன் உன் மூத்த மருமகள்க இந்த வேலைய செய்ய மாட்டாங்களாம்மோ?’

அலர்மேல் அம்மாள் பதில் சொல்வதற்கு முன் மாடியிலிருந்து இறங்கி வந்து தன் மனைவியின் பக்கத்தில், இல்லை, பின்னால் நின்றுக்கொண்டிருந்த சங்கரலிங்கம் மதனைப் பார்த்து கேலியுடன் சிரித்தான். ‘டேய், வேலைக்காரி இன்னைக்கு மட்டும் வரலைடா. அவள நிறுத்தி மாசம் ஒன்னாச்சி. அது உனக்கெங்க தெரியபோவுது? உம் பொஞ்சாதிதான் இப்ப சம்பளம் இல்லாத வேலைக்காரி. நீ வீட்ல இருந்தாத்தானே. எப்ப பார்த்தாலும் ·பீசு, டூருன்னு சுத்திக்கிட்டிருக்கறவனுக்கு இதெல்லாம் எங்க தெரிய போவுது. சரி தெரியாமத்தான் கேக்கறேன். என் பெஞ்சாதிய இந்த வேலைய செய்ய சொல்றதுக்கு நீ யார்றா? அவதான் ·பீசுக்கு போறாள்ள? அப்புறம் வீட்டு வேலை எதுக்கு செய்யணும்? உம் பெஞ்சாதி வீட்லருக்கறவ. அவதான் செய்யணும். வீட்ல சும்மா உக்கார வச்சி யாரும் சோறு போட மாட்டாங்க.’

மதன் பொங்கி வந்த த்திரத்தை அடக்க மாட்டாமல் ஒன்றும் பேசாமல் அமர்ந்திருந்த தன் தாயைப் பார்த்தான். ‘என்னம்மா, சங்கர் சொல்றது உண்மையா? வேலைக்காரிய நிறுத்திட்டு பத்மாவைத்தான் அவ செஞ்சிக்கிட்டிருந்த வேலைய செய்ய சொல்றீங்களா?’

அலர்மேல் சங்கரைப் பார்த்து ‘சும்மா வாய வச்சிக்கிட்டு இரேன்டா.’ என்று சைகை செய்தாள். பிறகு மதனைப் பார்த்தாள். ‘இல்லடா. பத்மாத்தான் நான் சும்மாத்தான அத்தை இருக்கேன். வேலைக்காரி எதுக்குன்னா. அதான்.. நீ கவலைப்படாதே.. நாளைக்கே அவள மறுபடியும் வரச் சொல்றேன். நீ போ.’

மதன் த்திரம் இன்னும் அடங்காமல் ஹாலில் இருந்த நால்வரையும் மாறி, மாறிப் பார்த்தான். தன் தாயிடம் ‘அப்ப வேலைக்காரிக்கு குடுக்கறதா என்கிட்டருந்து போன மாசம் முதல் தேதி அன்னைக்கி தனியா 500 ருபா வாங்கினீங்களே, அது? பொய்யா? என் கிட்ட எதுவும் சொல்லக்கூடாதுன்னு பத்மாவை மிரட்டி வச்சிருக்கீங்க இல்ல?’ என்று கத்தினான். இடையில் மறித்து ‘அப்படி இல்லடா’ என்று சமாளித்த தன் தாயை நோக்கி கையை உயர்த்தி ‘போதும்மா. உங்க விளக்கம் ஒன்னும் வேணாம். நான் இன்னைக்கே வேற வீடு பார்த்துக்கறேன். போறும், நாம ஒன்னா இருந்த லட்சணம்.’

அதிர்ந்துபோய் அமர்ந்திருந்த தன் தாயையும், ஹாலிலிருந்த மற்ற மூவரையும் சட்டை செய்யாமல் தன் அறையை நோக்கி மாடிப்படி ஏறினான் மதன்.

தான் சொன்னால் கேட்கமாட்டான் என்று நினைத்த அலர்மேல் அம்மாள் தன் சம்பந்தியரை தந்தியடித்து வரவைத்தாள்

‘நிறைக் கர்பிணியா இருக்கும்போது வீடு மாறக்கூடாது மாப்பிள்ளை. எந்த வீட்லதான் பிரச்சினையில்லே? பத்மாவுக்கு அவ்வளவு விவரம் பத்தாது மாப்பிள்ளை. அவளால குழந்தைய வச்சிக்கிட்டு தனியா குடும்பம் நடத்த முடியாது. வீட்ல பெரியவங்க இருந்தாத்தான் நல்லது. உங்க அம்மா கூடவே இந்த வீட்லயே இருங்க. அப்பத்தான் எல்லாருக்கும் நல்லது. சொல்றத கேளுங்க.’ என்று பத்மாவின் பெற்றோர் வற்புறுத்தியும் மதன் கேட்கவில்லை. இரண்டொரு நாளில் தன் அலுவலகத்துக்கருகிலேயே வீடொன்றை பார்த்து குடியேறினான். புதுவீட்டிற்கு வந்திருந்த பத்மாவின் தாயார் பத்மாவின் பிரசவம் முடிந்து மூன்றுமாதம் வரை தங்கியிருந்து ஊர் திரும்பினாள். மதனின் வீட்டிலிருந்து அவனுடைய தாயாரைத் தவிர வேறு யாரும் பிறந்த குழந்தையை வந்து பார்க்காததால் சகோதரர்களுக்கிடையிலிருந்த அன்னியோன்யம் அரவே அற்றுப் போனது. இப்போதும் மதனுடைய தாயார் மட்டும் மாசத்தில் ஒரு முறையோ இரு முறையோ வந்து போவதுண்டு.

தன் தாயும், சகோதரர்களும் எத்தனை தடுத்தும் கேளாமல் அன்று தன்னை அழைத்துக்கொண்டு வந்து இதோ இந்த பதினைந்து வருடங்களில் தன் குழந்தைகளில் ஒருத்தியாய் தன்னை அன்பாலும், கண்டிப்பாலும் கட்டிப்போட்டவன் இவன் என்பதை நினைத்துப் பார்த்தபோது பத்மாவின் கண்கள் கலங்கி குளமானது.

அவளுடைய கண்களில் துளிர்த்து நின்ற கண்ணீர் துளிகள் சிதறி உறங்கிக் கொண்டிருந்த மதன் மேல் விழ உறக்கம் கலைந்து கண் விழித்த மதன் தன் முன்னால் கண்கள் கலங்கிய கோலத்தில் நின்ற பத்மாவைப் பார்த்து குழப்பத்துடன் எழுந்து நின்றான். ‘ஏய் லூசு, என்ன இது? எதுக்கு கண் கலங்கியிருக்குது?’

பத்மா பதிலேதும் கூறாமல் அவனைக் கட்டிப் பிடித்துக்கொண்டாள். மதனும் அவளை அணைத்துக்கொண்டு மேசையின் மேல் தலைவைத்து உறங்கிக்கொண்டிருந்த மீனாவைப் பார்த்தான். பிறகு சுவர்க்கடிகாரத்தைப் பார்த்தான். மணி 9.15!

தொடரும்

2 comments:

G.Ragavan said...

ஜோசப் சார். உண்மையச் சொல்லுங்க. மதன் நல்லவனா கெட்டவனா? அடுத்த பகுதி வரைக்கும் காத்திருக்கனுமே................

டிபிஆர்.ஜோசப் said...

Sorry Raghavan,

நேற்று நான் சீக்கிரமே அலுவலகத்தைவிட்டு இறங்கிவிட்டேன். அதனால்தான் உங்கள் பின்னூட்டத்துக்கு உடனே பதில் அளிக்க இயலவில்லை.

மதன் நான் என் வாழ்க்கையில் சந்தித்த பல ஆண்களின் கலவை. அவனுள் நானும் இருக்கிறேன். ஒருவேளை ஒரு எதிர்கால ஜி.ராகவனும் இருக்கலாம். அவன் நல்லதும் கெட்டதும் கலந்த கலவை. அவனுக்கும் பத்மாவுக்கும் இடையில் நடக்கும் ஊடல்கள், சல்லாபங்கள் நம்மில் நிறைய பேருடைய குடும்பங்களில் நடைபெறுவதுதான்.