8.12.05

அப்பா ஒரு ஹிட்லர்! - 2

(இக்குறு நாவலில் விவரிக்கப்படும் சம்பவங்கள் நடந்த காலத்தில் தொலைக்காட்சி, கைத்தொலைப்பேசி, FM வானொலி இத்யாதி, இத்யாதிகள் இல்லை. ஏன், இப்போது Land Line எனப்படும் Good Old Telephoneம் பிரபலமடைந்திருக்கவில்லை!)
-:::-


மதன் குளித்து உடை மாற்றிக்கொண்டு முன் அறைக்குள் நுழைந்து ஜன்னல் ஓரம் இருந்த பிரம்பு நாற்காலியில் அமர்ந்து தன் இரு மகள்களையும் நோட்டம் விட்டான். இருவரும் மிகவும் சிரத்தையுடன் வாய்விட்டு சத்தம் வெளியே வராமல் படித்துக்கொண்டிருப்பதைப் பார்த்தவனின் உதடுகளில் அவனையுமறியாமல் ஒரு சிறு புன்னகை மலர்ந்தது.

இதுவும் மதனின் நியதிகளில் ஒன்று. ‘ஏய் மனசுக்குள்ள படிக்கிறேன்னுட்டு ஏமாத்தற வேலையெல்லாம் அப்பாவுக்கு பிடிக்காது. உதடுகள் அசையணும், ஆனா சத்தம் வெளிய வரக்கூடாது.’அவன் அப்படிக் கூறியதும் பிள்ளைகள் இருவரும் மதனைப் பார்த்து மிகவும் பணிவுடன் தலையசைப்பார்கள். மதன் அந்த பக்கம் நகர்ந்ததும் ஒருவர் ஒருவரைப் பார்த்து கண்ணடித்து வாயை மூடிக்கொண்டு சிரிப்பார்கள்!

வீனா இரண்டு கண்களிலும் தூக்கத்துடன் தடுமாறுவதைக் கண்டவன், ‘ஏய் என்ன அதுக்குள்ள தூக்கம் வருதா? திருட்டுக் கழுதை. அப்பா எங்க கேள்வி கேக்கப் போறேன்னு தூக்கம் வர்ற மாதிரி நடிக்கறியா? கொன்னுருவேன்.’ என்றான்.

திடுக்கிட்டு நிமிர்ந்த வீனா இமைகள் படபடக்க பயந்தவள்போல் தன் தந்தையைப் பார்த்தாள். ‘எ..என்னப்பா கேட்டீங்க?’

மீனாவுக்கு தெரியும் அவள் நடிக்கிறாள் என்று. அவள் தலையைக் குனிந்துகொண்டு சத்தம் வராமல் சிரிக்க, மதன் எழுந்து சென்று அவளுடைய உச்சந்தலையில் இன்னொரு ‘நங்’ வைக்க தலையைப் பிடித்துக்கொண்டு விட்ட இடத்திலிருந்து படிக்க ஆரம்பித்தாள்.

அறை வாசலில் காலடி ஓசை கேட்டு திரும்பினான் மதன். பத்மா தயங்கியவாறு நிற்பது தெரிந்தது. ‘என்ன?’ என்றான் எரிச்சலுடன்.

‘விவிதபாரதியில தேன்கிண்ணம் போடுவான்.’ என்றாள் பத்மா தயக்கத்துடன். ‘அந்த ரேடியோவை ஆன் பண்ணுங்களேன். நான் கிச்சன்லருந்துதான கேக்கப் போறன்?’

சுர்ரென்று வந்த கோபத்தை அடக்கிக்கொண்டு தன் மனைவியைப் பார்த்தான். ‘எட்டி, தேன் கிண்ணம், பேன் கிண்ணம்லாம் எத்தன மணிக்குன்னு தெரிஞ்சிருக்கில்ல? இந்த சின்ன குட்டி தலைய பாருன்னு எத்தனை தரம் சொல்றேன்.’ வீனாவின் தலையை கெட்டியாய் பிடித்து தன் மனைவியின் பக்கம் திருப்பினான். ‘அப்பா வலிக்குதுப்பா’ என்று சினுங்கும் மகளைப் பொருட்படுத்தாமல் தன் மனைவியிடம் சீறினான். ‘பார், உம் பொண்ணோட தலையை. பேனும், ஈருமா புழுத்துக்கிட்டு கிடக்கறத. எப்ப பார்த்தாலும் குரங்குமாதிரி தலையை சொறிஞ்சிக்கிட்டு. சனிக்கிழமை, ஞாயித்துக்கிழமையிலயாவது பாக்கலாமில்ல? இதெல்லாம் ஒரு ஆம்பளை பார்த்து சொல்லணுமாடி? கூறு கெட்டவளே. பாட்டு கேக்கறாளாம் பாட்டு. சரி போ, வச்சித் தொலைக்கறேன்.’

விட்டால் போதும் என்று அடுக்களைக்குள் பத்மா ஓடி ஒளிய, வெறுப்புடன் மர்ஃபி ரேடியோவில் விவிதபாரதி நிலையத்தை ட்யூன் செய்துவிட்டு திரும்பினான். வீனாவும், மீனாவும் ரேடியோ பேனலில் இருந்த மஞ்சள் நிற விளக்கு எரிய சத்தமே வராமல் பாட்டின் ஏற்ற இறக்கத்துக்கு இணங்க ஏறி இரங்கும் விளக்கு ஒளியையே ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருந்தனர்.

அடுக்களையில் பொருத்தப்பட்டிருந்த ஒலிபெருக்கியிலிருந்து எழுந்த பி.சுசீலாவின் இனிய குரல் செவிகளில் விழ புது உற்சாகம் பிறந்ததுபோல் இரவு உணவு வேலையில் மும்முரமானாள் பத்மா.

இதுவும் மதனின் பிரத்தியேக ஏற்பாடு. வானொலி பெட்டி முன் அறையிலிருந்த சுவர் அலமாரியில் வைக்கப்பட்டிருந்ததால் ‘அடுக்களையிலிருக்குற சமயத்தில பாட்டு கேட்கவே மாட்டேங்குதுங்க . ஏதாச்சும் வழி பண்ணுங்களேன்’ என்று பத்மா ஒரு நாள் அவனிடம் கெஞ்சினாள். ஆமா, ரொம்ப முக்கியம்! பாட்டு கேட்டாத்தான் மகாராணிக்கு சமையல் வேலை ஓடுமோ. நாங்கல்லாம் ஆஃபீஸ்ல பாட்டு கேட்டுக்கிட்டா வேலை செய்றோம்?’ என்று குதர்க்கம் பேசினாலும் அவனுக்கும் சாப்பிடும்போது ஒலிபரப்பாகும் செய்தி கேட்பதில்லை என்பது ஒரு குறையாகவே தெரிந்தது. எனவே ஒரு சிறிய ஒலிபெருக்கியை வாங்கி வந்து அடுக்களை சுவரில் பொருத்தினான்.

மதன் அலுவலகத்துக்கு புறப்பட்டதும் பத்மா வானொலிப்பெட்டியை முடுக்கிவிட்டுவிட்டு வானொலியில் ஒலிபரப்பாவதை, முக்கியமாக இலங்கை மற்றும் அப்போதுதான் துவக்கப்பட விவிதபாரதி தமிழ் நிலையங்களிலிருந்து ஒலிபரப்பாகும், அது என்ன நிகழ்ச்சியானாலும், கேட்டுக்கொண்டே சமையல் வேலை, துணி துவைப்பது, இத்யாதி வேலைகளை செய்வாள். அப்படி செய்தால்தான் வேலையில் ஒரு சுறுசுறுப்பு கிடைக்கும் என்பது அவளுடைய கண்டுபிடிப்பு! அதுமட்டுமல்ல, இரவு 8.00 மணிக்கு விவிதபாரதியில் தேன்கிண்ணம் நிகழ்ச்சியில்தான் புதிய பாடல்களை போடுவான். அந்த நேரம் பார்த்து அப்பாவும் பிள்ளைகளும் பாடப்புத்தகங்களுடன் போராடிக் கொண்டிருப்பார்கள். நல்ல பாடல்களை கேட்க முடியவில்லையே என்று தனக்குள்ளேயே புலம்புவதைத் தவிர வேறொன்றும் செய்யமுடியாது அவளால். ஆனால் இந்த புதிய ஏற்பாட்டுக்குப்பிறகு முன் அறையில் பிள்ளைகள் படித்துக்கொண்டிருந்தாலும் வானொலியின் சப்தத்தை முழுவதுமாக குறைத்தாலும் பத்மாவால் அடுக்களையிலிருந்தவாறு கேட்கமுடியும்!

‘அப்பாடா! கல்யாணம் பண்ணி இப்பத்தான் எங்க வீட்டுக்காரவுக நான் சொன்னத முதல் தடவையா செஞ்சிருக்காக’ என்று கீழ்வீட்டில் குடியிருந்தவர்களிடம் பெருமையடித்துக் கொள்வாள் பத்மா. அவர்களும் கழுத்தை நொடித்துக்கொண்டு, ‘ஆமாம் பத்மா. பாத்து, திருஷ்டி பட்டுறப்போவுது.’ என்பார்கள்

பத்மாவுக்கு சிறு வயதிலிருந்தே சினிமா என்றால் உயிர். பிறந்து வளர்ந்தது முழுவதும் மதுரையை அடுத்து இருந்த காரியாபட்டியில். ஊரிலிருந்த ஒரேயொரு ஒலைக் கொட்டகையில் வாரம் ஒருமுறை திரைப்படத்தை மாற்றிவிடுவான். பத்மா தன் தாயை நச்சரித்து அவ்வரங்கில் வெளியாகும் எல்லா திரைப்படங்களையும் பார்த்துவிடுவதில் பயங்கர சமர்த்து!

அதற்காகவே சென்னையில் வேலை பார்க்கும் மாப்பிள்ள என்றதும் ‘மாப்பிள்ளை கொஞ்சம் நிறத்தில் மட்டுதான்டி. சரின்னு சொல்லிட்டு அப்புறம் கமலகாசன் மாதிரி இல்ல, செமினி கணேசன் மாதிரி இல்லன்னு காலாடுனே கால ஒடச்சிப்போடுவேன் சாக்கிரத. நல்லா யோசிச்சி சொல்லு.’ என்று தந்தை மிரட்டியபோதும் ‘கலர்ல என்னப்பா இருக்கு’ என்று சம்மதித்தவள் பத்மா. அவளுக்கு ‘ஐய்யோ.. மதறாஸ்ல எத்தன தியேட்டர்ங்க இருக்கும்! தினத்துக்கு ஒரு படம் பாக்கலாமே.’ என்ற ரூட்டில்தான் எண்ணம் ஓடியது.

அது கலைந்து அவளுடைய கண்ணீரோடு சேர்ந்து கரைந்தோடிப்போகும் என்று அவளும் கனவிலும் நினைக்கவில்லை!

பிறந்து வளர்ந்த ஊரை விட்டு இதுவரை வெளியூர் எங்கும் சென்றிராத பத்மா சென்னையில் காலெடுத்து வைத்தபோது ஏதோ சொர்க்கபுரியில் வந்து இறங்கியதைப்போன்று உணர்ந்தாள். சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் வந்திறங்கியதுமே மதனின் நண்பர் ஒருவர் அவருடைய நாற்சக்கர வாகனத்தை கொண்டுவந்திருந்தார். அதை கண்டதுமே, ‘ஐ ப்ளசரு!’ என்று அவளுடைய மனம் துள்ளாட்டம் போட்டது. ‘இது நம்மளுதாங்க?’ என்றவளை எரித்துவிடுவதுபோல் பார்த்த மதன் ‘சே. போயும் போயும் இந்த பட்டிக்காட்டு மூஞ்சைப் பார்த்தா நான் ஏமாந்துபோனேன்?’ என்று உள்ளுக்குள் பொருமியது அந்த பேதைக்கு தெரிந்திருக்கவில்லை.

மதன் முதன் முதலாய் அவளைப் பெண் பார்க்க சென்றபோது நல்ல கலரில் தென்பட்ட அந்த அழகான, வட்ட முகத்தைப் பார்த்ததும் மயங்கிப்போய் அங்கேயே சரி என்று தலையாட்டினான். அவனுடைய குடும்பத்தில் இருந்த எல்லோருமே கலர் கொஞ்சம் மட்டுதான். ஏன் கருப்பு என்று கூட கூறலாம். ஆனாலும் மதனின் தாய் தன் பிள்ளைகளுக்கு சிவப்பாய் உள்ள பெண்களைத்தான் எடுக்க வேண்டும், அப்போதுதான் அடுத்த தலைமுறையிலாவது பிள்ளைகள் சிவப்பு கலரில் பளபளவென்று பிறக்கும் என்ற எண்ணம்!

மதனின் இரண்டு மூத்த சகோதரர்களுக்கும் அப்படித்தான் அமைந்தது. ஆனால் பிறந்த பிள்ளைகள் அப்பனைக் கொண்டுதான் பிறந்தன. இருப்பினும் மதன் விஷயத்திலாவது பிள்ளைகள் நல்ல கலராய் பிறக்காதா என்ற நப்பாசையில்தான் பத்மாவை முதலில் புகைப்படத்தில் பார்த்ததும் சரி என்று சம்மதித்து அவனையும் கூப்பிட்டுக்கொண்டு சென்றார்கள் பெண்ணைப் பார்க்க. பெண் கறுப்பு வெள்ளை புகைப்படத்தில் பார்த்ததை விட நல்ல கலராயிருக்கவே மதனும் உடனே சம்மதிக்க திருமணம் அடுத்த முகூர்த்தத்திலேயே சிம்பிளாய் நடந்தேறியது.

ஆனால் திருமணத் தினத்தன்றுதான் பத்மாவின் முழுக் குடும்பத்தையும் பார்த்த மதன் ‘சரியான பட்டிக்காட்டு குடும்பத்துல போய் மாட்டிக்கிட்டோமேடா’ என்று நொந்துபோனான். பத்மாவின் சகோதரர்கள் மூவரும் தங்கள் தந்தைக்கு சொந்தமானதும் காரியாப்பட்டியிலேயே மிகப் பெரியதுமான பலசரக்கு கடையை நிர்வகித்து வந்தார்கள். கணிசமான வருமானத்துடன் அவ்வூரிலேயே செழிப்பான குடும்பம்தான் என்றாலும் அதிக படிப்பு இல்லாததால் கரடுமுரடான தோற்றத்துடன் திருமண மண்டபத்தில் நின்ற அவர்களைக் கண்டு முகம் சுளித்தான் மதன்.

மதனுடைய முகம் போன போக்கைப் பார்த்த அவனுடைய அண்ணன் சுந்தரம் ‘டேய் பொண்ணோட அழக மத்தும் பார்த்து மயங்கிடாதே. குடும்பத்தையும் பார்றான்னு தலைப்பாடா அடிச்சிக்கிட்டேன். கேட்டியா? அனுபவி.’ என்று மனதுக்குள் சந்தோஷப்பட்டான். அவனுக்கு தன் மனைவியை விடவும் அழகாவும், வசதியான இடத்திலருந்தும் இவனுக்கு பெண் அமைந்துவிட்டதே என்ற பொறாமை!

அவனுக்கு அடுத்தவனான சங்கரலிங்கத்துக்கு மதனைப் பார்த்தாலே பிடிக்காது. ஏற்கனவே தன்னைவிட அதிகம் படித்து மத்திய அரசாங்க அதிகாரியாக வேலை செய்கிறானே என்று பொருமுவான். இருந்தாலும் தன்னைவிட அவன் கலரிலும், அழகிலும் கொஞ்சம் மட்டுதான் என்ற திருப்தியிருந்தது. பத்மாவின் கலரையும் அழகையும் பார்த்ததும் சே இவனுக்கு போய் இப்படி ஒரு பொண்ணா என்று நினைத்தான். தன் அருகில் நின்ற தன் மனைவியைப் பார்த்தான். அவளும் நல்ல கலர்தான். ஆனால் தன் அழகுக்கேற்ற ஜோடியில்லை என்று ‘லிங்க’த்துக்கு ஆரம்ப முதலே ஒரு ஆதங்கம். அது பத்மாவை பார்த்ததும் கொழுந்துவிட்டு எரிந்து இச்சம்பந்தத்தை எப்படியாவது நிறுத்திவிட தன் தாயிடம் பெண்ணோட அப்பா சரியில்லை, சகோதரர்கள் சரியில்லை. படிப்பறிவில்லாத குடும்பம், நம்ம மதனுக்கு ஒத்தே வராது என்றெல்லாம் முறையிட்டு பார்த்தான். அவன் தாயாரோ, ‘டேய் நம்ம மதனே ஒரு சரியான முசுடு. அவன் கோபத்துக்கு ஏத்தாமாதிரி சாதுவா இருக்கா இந்த பொண்ணு. உன் பெஞ்சாதி மாதிரியும் உங்க அண்ணி மாதிரியும் ஒரு மூர்க்க பொண்ண இவனுக்கு கட்டி வச்சா என்னாவறது? ரெண்டும் அடிச்சிக்கிட்டு சாவும், பேசாம இரு.’ என்ற அவனுடைய வாயை அடைத்து இத்திருமணத்தை நடத்தி வைத்தார்.

திருமணம் முடிந்த மறுநாளே மதனுடைய தாய் மற்றும் அவனுடைய சகோதரர்கள், அவர்களுடைய மனைவியர், குழந்தைகள் எல்லோரும் சென்னை புறப்பட்டு சென்றனர். மதன் தன் மனைவியுடன் அடுத்திருந்த கொடைக்கானலுக்கு தேன்நிலவு சென்று வரலாம் என்று திட்டமிட்டு தன் நண்பன் ஒருவன் மூலமாக இரண்டு தினங்களுக்கு அறைகளை ஏற்கனவே முன்பதிவு செய்திருந்தான்.

ஆனால் திருமணத்திற்கு அடுத்த நாள் தன் திட்டத்தை அறிவித்ததும் பத்மா பயந்து நடுங்கிக்கொண்டு ‘ஐயோ, நான் மாட்டேம்பா. உங்களோட தனியா வர்றதா? எனக்கு பயமாருக்கு. அப்பாக் கிட்ட முதல்ல கேளுங்க.’ என்று பின்வாங்கினாள்.

‘நாம ரெண்டு பேரும் ஹனிமூன் போறதுக்கு உங்கப்பாக்கிட்ட கேக்கணுமா? ஏய் மண்டு. நான் உன் புருஷன். என்கூட வர்றதுக்கு உனக்கென்ன பயம்?’ என்ற மதனை பார்த்து மிரண்ட பத்மா ஓடிப்போய் தன் தாயிடம் கூற அடுத்த சில நிமிடத்தில் வீடே ரெண்டு பட்டது. ஆளுக்காள் ஒன்று பேச பிறகு பத்மாவின் மூத்த சகோதரனும் அவனுடைய மனைவியும் மதன் - பத்மா ஜோடிக்கு பாதுகாப்பாக செல்வதென்று தீர்மானிக்க, மதனுக்கு அவமானகப் போனது. ஹனிமூனும் வேண்டாம் ஒரு மண்ணும் வேண்டாம் என்று பிடிவாதமாக மறுத்துவிட்டான்.

மதனுடைய பிடிவாத குணமும், சுர்ரென்று ஏறுகின்ற கோபமும் இரண்டாவது நாளே பத்மாவுக்கும் அவளுடைய குடும்பத்திற்கும் தெரியவர எல்லோர் முகத்திலும் ஒருவித பயம் வந்து அப்பிக்கொண்டது. ‘ஏய் பத்மா. உனக்கே ஒரு கூறும் கிடையாது. பார்த்து நடந்துக்கோடி. சம்பந்தியம்மாத்தான் கொஞ்சம் கர்வம் புடிச்சாமாதிரி இருந்தான்னு நினைச்சேன். மாப்பிள்ளையே அப்படித்தான் போலருக்கு. எப்படித்தான் அந்த வீட்ல போய் குப்பை கொட்டப்போறியோ தெரியலையே. முருகா, நீதாம்பா இந்த கூறுகெட்டவளுக்கு துணையா இருக்கணும்.’ என்று புலம்பிய தாயைப் பார்த்த பத்மாவுக்கு கதிகலங்கியது!

மதன் ஹனிமூன் ட்ரிப் ரத்தானதிலிருந்தே உடனே சென்னை கிளம்ப வேண்டுமென்பதில் குறியாயிருந்தான். மதனுடைய ஹனிமூன் திட்டம் அவனுடைய வீட்டிற்கு தெரிந்திருந்ததால் அதெல்லாம் முடிந்து திருமண தினத்திலிருந்து ஒரு வாரம் கழித்துத்தான் சென்னை திரும்புவேன் என்று தன் தாயிடம் முன்கூட்டியே கூறியிருந்தான். இப்போது இரண்டு நாள் முன்பாக புறப்பட்டு சென்றால் சென்னையில் ரயில்நிலையத்துக்கு வந்து அழைத்து செல்ல அவன் நண்பன் வழியாக ஏற்பாடு செய்திருந்த காரும் வராது! அவனுடைய வீட்டிற்கு ட்ரங்க் கால் போட்டு தெரிவிக்கலாம் என்றால் பத்மாவின் வீட்டிலோ தொலைப்பேசியும் இல்லை. டெலிகிராம் அடிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று நினைத்தவன் பத்மாவிடம் பக்கத்தில் டெலிகிராஃப் நிலையம் இருக்கிறதா என்று கேட்டான். அவள் அவன் என்ன கேட்கிறான் என்றே புரியாமல் மிரண்டுபோய் அவனை பார்த்தாள். ‘ நீங்க என்ன கேக்கறீங்கன்னே தெரியலையே. அப்படீன்னா?’

‘சரியா போச்சிடா. அன்னைக்கி உம் மூஞ்சி ஒன்னுதான் என் கண்ணுல பட்டுது போலருக்கே. உன்ன மாதிரி ஒரு ஜடத்த வச்சிக்கிட்டு நான் என்னத்த குடுத்தனம் பண்ணி, குழந்தைய பெத்து.. இப்படி என்ன புலம்ப வச்சிட்டியேடி..’ என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டு தன் முன்னே கண்கள் கலங்கியபடி நின்றவளைப் பார்த்தவன், ‘ஏய் நான் என்ன சொல்லிட்டேன். ஏன் கண் கலங்குறே?’ என்று தலையிலடித்துக் கொண்டான்.

கண்களில் துளிர்த்து நின்ற கண்ணீருடன் அவளுடைய அழகிய முகத்தைப் பார்த்ததும் மனம் இளகிப்போய் அவளுடைய முகத்தைத் துடைத்துவிட்டு தன்னோடு இறுக அணைத்துக்கொண்டான். ‘அடிக்கிற கைதான் அணைக்கும்னு இதத்தான் சொன்னாங்க போலிருக்கு’ என்று சிலிர்த்துப் போனாள் பத்மா!


தொடரும்

2 comments:

டிபிஆர்.ஜோசப் said...

சார் இவ்வளவு லேட்டா பதிஞ்சீங்கனா இது யார் கண்ணுலயும் படாது சார். இவ்வளவு சூப்பரா எழுதியும் நிறைய பேரோட பார்வையிலும் படணும்னா காலையிலேயே பதிஞ்சிரணும். நானே பகல் 12 மணியிலருந்து மணிக்கொருதரம் பார்த்துக்கிட்டே இருந்தேன். நாலு மணிக்கு மேலதான் பதிஞ்சீங்க போலருக்குது. இப்பத்தான் கேஷை க்ளோஸ் பண்ணிட்டு வரமுடிஞ்சது.

இந்த இரண்டாவது பதிவும் ரொம்ப நல்லா யதார்த்தமா இருந்தது சார். வெய்ட் பண்ணாலும் படிச்சி முடிச்சப்ப நல்லா திருப்தியா இருந்திச்சி.

G.Ragavan said...

அடுத்த பதிவையும் படிக்க வேண்டியிருக்கு. அதுனால அவசர அவசரமா + போட்டுட்டு அடுத்த பதிவுக்கு ஓடுறேன்.