7.12.05

அப்பா ஒரு ஹிட்லர்! (குறு நாவல்)

‘ஏய் அப்பா வராங்க. வா, போய் நம்ம இடத்துல உக்காந்துக்கலாம்’ வீனா தன் தமக்கையை பார்த்து கத்தினாள்.

பத்மா அடுக்களையிலிருந்து எட்டி வாசலைப் பார்க்கவும் அவளுடைய கணவன் மதன் என்கின்ற மதனகாமராஜன் (‘எங்கப்பாவோட பேரை வச்சித்தான் கமல் அவரோட ஒரு படத்துல ஹீரோக்களுக்கு இந்த பேரை வச்சார் தெரியுமா? எங்கப்பாவோட பேருக்கு முன்னால மைக்கேல்னு ஒரு பேரை சேத்துக்கிட்டு நாலு வேஷத்துல வருவாரே அந்த படம்தான்டி’ இது வீனா தன் நண்பிகளிடம் விடும் பீத்தல்!) வீட்டிற்குள் நுழையவும் சரியாக இருந்தது.

பத்மா இடுப்பில் தூக்கி சொருகியிருந்த சேலையை இறக்காமல் தன் கணவனை நோக்கி செல்ல மதனுக்கு கோபம் உச்சந்தலைவரை ஏறியது. ‘ஏய் எருமை! உங்கிட்ட எத்தன தடவை சொல்லியிருக்கேன். ஆஃபீஸ்லருந்து வர்றப்ப வேலைக்காரி கோலத்துல வந்து நிக்காதேன்னு. போடி உள்ள. என் ஃப்ரெண்ட்ஸ் யாரையாவது கூட்டிக்கிட்டு வந்திருந்தேன்னா என்னாவறது? கர்மம், கர்மம். உன்னை மாதிரி ஜென்மங்கள திருத்தவே முடியாதுரீ. போ, மசமசன்னு நிக்காம ஒரு காப்பிய போட்டு கொண்டா, தலவலி மண்டைய பிளக்குது.’

‘இது திருமணம் நடந்த நாளிலிருந்து தினசரி கேக்கற பல்லவிதானே. ஆஃபீஸ்ல உங்க பாஸ் விட்ட டோசை வீட்ல வந்து என்கிட்ட விடாட்டி உங்களுக்கு தூக்கம் வராதே’ இது பத்மா தனக்குள்ளேயே கூறிக்கொள்ளும் தினசரி புலம்பல். அவள் புலம்பி முடித்திருக்க மாட்டாள். ‘ஏய் என்ன வாய்க்குள்ளேயே புலம்பற? போய் முதல்ல நான் சொன்னத செய்’னு குரல் வரும். ‘சை. இந்த வீட்ல மனசுக்குள்ள புலம்பிக்கறதுக்குக்கூட உரிமையில்லையே.’ பத்மா மறுபடியும் தனக்குள்ளேயே புலம்பியவாறு ஓரக்கண்ணால் எள்ளும் கொள்ளும் வெடிக்கும் தன் கணவனின் முகத்தை பார்த்துவிட்டு அவன் தன்னையே பார்ப்பது தெரிந்ததும் முகத்தைத் திருப்பிக்கொண்டு அடுக்களையில் தஞ்சம் புகுந்தாள்.

அடுக்களையில்தான் பத்மா தான் பாதுக்காப்பாய் இருப்பதுபோல் உணர்ந்தாள். அதாவது தன் கணவன் வீட்டில் இருக்கும்போது.

‘எல்லார் வீட்லயும் அடிக்கடி வெளியூருக்கு போய் வர கணவன்க இருக்கும்போது எனக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு ஆள் வந்து மாட்டுனாரு? சே!’ என்று மீண்டும் தனக்குள்ளேயே புலம்பிக்கொண்டு காப்பியை தயார் செய்து ஒருமுறைக்கு இரு முறை கப்பை கழுவி, சாசரில் வைத்து காப்பி அலம்பிவிடாமல் படு ஜாக்கிரைதையாக முன் அறைக்கு நடந்தாள். எப்போதாவது ஒரு துளி காப்பி சாசரில் சிந்திவிட்டால் அவ்வளவுதான். ‘ஏய் எருமை! இப்படி சாசர்லல்லாம் சிந்துரா மாதிரி கொண்டுவராதேன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன்? இப்ப பார், நான் கப்பை எடுத்து குடிக்கப் போறேன். கப்புக்கு அடியில ஒட்டிக்கிட்டுருக்கற காப்பி என் சட்டையில விழப்போவுது. ஏன்டி உனக்கு இந்த மாதிரி பேசிக் திங்ஸ்கூட தெரிய மாட்டேங்குது? படிச்சி என்ன பிரயோசனம்.’ என்று வீட்டில் யாராவது விருந்தாளி இருந்தாலும் திட்டி தீர்த்துவிடுவான் என்று அவளுக்கு தெரியும்.

மதன் குனிந்து தன்னுடைய காலணிவாரை (Shoe lace) அவிழ்த்துக்கொண்டே தன் அருகில் வந்து நின்ற பத்மாவின் சேலையையும் உள்பாவாடையையும் பார்த்து அருவருப்புடன் முகம் சுளித்துக்கொண்டு வேறு பக்கம் திரும்பிக்கொண்டான். இதைக் கவனித்துவிட்ட பத்மா ஓரடி பின்வாங்கி நின்றுக்கொண்டு அடுத்த திட்டுக்கு தயாரானாள்.

காலணிகளை கழற்றிவிட்டு நிமிர்ந்த மதன் பத்மாவை பார்த்து ‘என்ன’ என்பதுபோல் தன் அடர்ந்த புருவங்களை உயர்த்தினான். பத்மா தயக்கத்துடன், ‘காப்பி கேட்டீங்களே..’ என்று இழுத்தாள்.

மதன் எரிந்து விழுந்தான், ‘என் தலையில ஊத்து.’

பத்மா பதறிப்போய் பார்த்தாள். ‘இப்ப என்ன ஆச்சி, எதுக்கு இந்த கோபம்? காப்பி கேட்டீங்க, கொண்டு வந்தேன். அப்புறம் என்ன?’ நாக்கு துறுதுறுவென்று வந்தது. கேட்டுவிடலாம்தான். ஆனால் அதன் பின்விளைவுகளை நினைத்து வாய் மூடி மெளனியாய் நின்றாள். பத்மாவுக்கு தெரியும் அவன் என்ன பேசினாலும் எதிர் பேச்சு பேசாமல் நின்றால் ஓரிரு நிமிடத்தில் அவன் கோபம் அடங்கி சகஜ நிலைக்கு திரும்பிவிடுவான் என்று. இல்லையென்றால் விடிய விடிய ராமாயணம்தான். இதைமட்டும் நன்கு தெரிந்து வைத்திருந்தாள் பத்மா.

பிள்ளைகள் இருவரும் மிரண்டு போய் தங்கள் புத்தகங்களுக்குள்ளே முகத்தை புதைத்துக்கொண்டு அமர்ந்திருந்தார்கள். அப்பா இப்படி கத்துவது புதிதல்ல என்றாலும் ஒவ்வொரு முறையும் பயந்து நடுங்குவது அவர்களுக்கு வாடிக்கையாகிப் போனது.

மதன் சட்டையைக் கழற்றிக்கொண்டே தன் மனைவியைப் பார்த்தான். ‘ஏய் நான் டிரெஸ் மாத்திட்டு காப்பியை குடிச்சிக்கிறேன். போய் இந்த அசிங்கம் புடிச்ச சேலையையும், பாவாடையையும் மாத்து.. நீயும் உன் கோலமும். போடி, அப்புறம் ஆத்திரத்துல ஏதாவது சொல்லிரப்போறன்.’

தப்பித்தோம் பிழைத்தோம் என்று பத்மா காப்பி கப்பை மேசையில் வைத்துவிட்டு அடுக்களையை நோக்கி ஓடினாள். படுக்கையறையும் அடுக்களையும் பக்கத்தில், பக்கத்தில்தான்.

மதன் கழற்றிய உடைகளை வரவேற்பரையை ஒட்டியிருந்த தன் அறைக்கு சென்று தனித்தனி ஹாங்கரில் தொங்கவிட்டான். அவனுக்கு எல்லாம் சரியாக செய்ய வேண்டும். பேண்ட் தொங்கவிடும் ஹாங்கரில் சட்டையையோ அல்லது சட்டையையை தொங்கவிடவேண்டிய ஹாங்கரில் பேண்டையோ ஒரு நாளும் தொங்க விடமாட்டான். Perfectionist என்பார்களே அந்த ரகம். ஏன், அதை விட கொஞ்சம் கூடுதலாகவே என்று சொல்லலாம். மனைவியையும் குழந்தைகளையும் தன் அறைக்குள் விடவே மாட்டான். அந்த கதவில் மட்டும் ஒரு கோத்ரெஜின் ஆட்டோ லாக்கிங் சிஸ்டம் பொருத்தியிருந்ததால் அவன் வீட்டில் இல்லாத நேரத்தில் யாருமே அவனுடைய அறைக்குள் - அது யாராயிருந்தாலும், நுழைய முடியாது. மதனின் வயதான தாய் இரண்டு மாதத்தில் ஒருமுறை வரும்போதும் அவனுடைய அறையில் அவனுடைய அனுமதியில்லாமல் நுழைய முடியாது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். ‘சரியான கிராக்கு பய. என்ன பண்றது? என் வயித்துல இப்படி ஒருத்தன். விட்டுத்தள்ளு. சில சமயத்துல நீ இப்படி பயந்தாகொள்ளியா இருக்கறதுனாலத்தான் இவன் இப்படி ஓவரா ஆடுறான்னு தோணும்.’ என்பாள் அவள் தன் மருமகளிடம்.

பத்மாவோ 'அவரு அச்சு அசலா நீங்களேதான். அவர போயி சொல்றீங்க? நீங்க மட்டும் என்னவாம்? வீட்டுக்கு வந்த முதல் நாளே அடுப்படியில வச்சி வேலை வாங்குனவுக தானே. மறந்துருமாக்கும்' என்று பழையதை நினைத்து கண் கலங்குவாள்.

தன் அறையிலிருந்து வெளியே வந்த மதன் மேசையிலிருந்த காப்பியை எடுத்து படிந்திருந்த ஆடையை - சிறுவயதிலிருந்தே இந்த ஆடை, பாடையை கண்டாலே மதனுக்கு வெறுப்பு- விரல் நுனியால் கப் விளிம்பின்மேல் வழித்துவிட்டு காப்பியை குடித்துக்கொண்டே தன் பிள்ளைகள் இருவரும் படித்துக்கொண்டிருக்கும் புத்தகங்களைப் பார்த்தான். பிறகு எதிரே சுவரில் பொறுத்தப்பட்டிருந்த செல்ஃப் ஸ்டிக்கிங் போர்டில் ஒட்டப்பட்டிருந்த கால அட்டவணையைப் பார்த்தான்.

கோபம் சுர்ரென்று ஏறியது. குடித்துக்கொண்டிருந்த காப்பியை மேசயில் வைத்துவிட்டு குனிந்துக்கொண்டிருந்த இரண்டு தலைகளிலும் ‘நங்’கென்று குட்ட இருவரும் பதறிப்போய் கலங்கிய கண்களுடன் நிமிர்ந்து மூர்க்கத்தனத்துடன் நிற்கும் மதனைப் பார்த்து கோரசாக ‘என்னப்பா?’ என்றனர்.

‘ஏய் உண்மைய சொல்லுங்க. அப்பா வீட்டுக்குள்ள படியேறி வர்ற சத்தம் கேட்டுட்டுத்தானே கையில கிடைச்ச புத்தகத்த வச்சிக்கிட்டு உக்காந்திருக்கீங்க, உண்மையா இல்லையா?’

வீனா தன் தமக்கை, மீனாவை பார்க்க, மீனா கண்ணாலேயே ‘ஏய் மாட்டிக்கிட்டோம்டி’ என்றாள். வீனா ‘அப்பாவுக்கு எப்படிரீ தெரிஞ்சுது’ என்றாள் அவர்களுக்கே உரித்தான கண் பாஷையில். மீனா ‘போர்டை பார்’ என்றாள். வீனா போர்டையும் தன் முன்னால் இருந்த புத்தகத்தையும் பார்த்தாள்.

‘சாரிப்பா.’ என்றாள் தன் தந்தையை பார்த்து. ‘இவ தாம்பா.’ என்று தன் தமக்கையை காண்பித்தாள். ‘அடிப்பாவி நா என்னடி பண்ணேன்?’ என்று தனக்குள் நினைத்துக்கொண்ட மீனா ‘இந்த சிச்சுவேஷன எப்படி ரிடீம் பண்றேன், பார்’ என்றவாறு தன் தங்கையையும், தந்தையையும் மாறி மாறி பார்த்தாள்.

‘டாட், உங்க டைம் டேபிள்லருக்கற சப்ஜெக்ட்ஸ் ஏற்கனவே கவர் பண்ணியாச்சி. வீனாவ நானும் என்ன அவளும் கேள்வி-பதில் எல்லாம் கேட்டுக்கிட்டு டெஸ்ட் பண்ணியாச்சி. அதான் அடுத்த ஹவரோட சப்ஜெக்ட்சை எடுத்தோம்.’

மதனுக்கு தன் மூத்த மகள் சமயோசிதமாக பேசுகிறாள் என்று தெரியும். அவனையுமறியாமல் அவன் உதடுகளில் புன்னகை அரும்ப அதைக் கவனித்துவிட்ட வீனா ‘அப்பான்னா அப்பாத்தான்’ என்று வழிய மதன் வேண்டுமென்றே எரிந்து விழுந்தான். ‘ஏய் ரெண்டு கழுதைகளும் பொய் சொல்றீங்கன்னு நல்லா தெரியுது. குளிச்சிட்டு வந்து கேள்வி கேட்கும்போது முளிச்சீங்க. கொன்னுருவேன்.’

முற்றத்தில் கொடியில் கிடந்த டர்க்கி டவலின் மேல் கொழுவியிருந்த மெட்டல் க்ளிப்புகளை அகற்றி (இதுவும் ஒரு எழுதாத நியதி. கொடியில் துணிகளை உலர்த்தும்போது கண்டிப்பாய் ஒவ்வொரு துணிக்கும் இரண்டு க்ளிப்புகள் பொருத்த வேண்டும். இல்லையென்றால் அதற்கும் ஒரு திட்டு விழும்) டவலை இடுப்பில் சுற்றிக்கொண்டு முற்றத்தின் மூலையில் பொருத்துப்பட்டிருந்த அடி பைப்பிலிருந்து ஒரு பக்கெட் தண்ணீர் அடித்து நிறைத்துக்கொண்டு குளியலறைக்குள் நுழைந்தான். இதுவும் ஒரு நியதி. அவன் குளிப்பதற்கென்று கிணற்று நீரை அவனேதான் அடித்துக்கொள்வான். மழை,வெயில், குளிர் எதுவும் இந்த நியதியின் குறுக்கே வர முடியாது!

‘ஏய் அப்பா பாத்ரூமுக்குள்ள போய்ட்டாங்களான்னு பாரு.’ என்றாள் மீனா ரகசியக்குரலில். வீனா மெதுவாக எழுந்து நாக்கை கடித்துக்கொண்டு பூனை போல் ஒசைப்படாமல் வாசல் வரை சென்று மெல்ல எட்டிப் பார்த்தாள். குளியறையிலிருந்து பழைய பாடல் ஒன்று ஹம்மிங் ஓசையில் வெளிவருவதை கண்டவள், குதித்துக்கொண்டு தன் தமக்கையைப் பார்த்து தன் வலக்கை கட்டை விரலை உயர்த்தி காட்டினாள்.

‘அப்பாடா’ என்று புத்தகத்தை மூடிவைத்துவிட்டு நிமிர்ந்தாள் மீனா. அவளுக்குத் தெரியும் அப்பா வெளியே வர பத்து நிமிடம் ஆகும் என்று.

பத்மாவுக்கு தெரியுமோ தெரியாதோ பிள்ளைகள் இருவரும் தங்கள் தந்தையின் குணத்தை நன்றாக புரிந்து வைத்திருந்தார்கள். மதன் இல்லாத நேரத்தில் மீனா அப்படியே தன் தந்தையின் நடத்தையை இமிடேட் பண்ணி தன் தாயையும் தங்கையையும் சிரிக்க வைப்பாள்.

அப்பாவுக்கு எல்லாத்துக்கும் ஒரு குறிப்பிட்ட கால அளவு உண்டு என்று தெரிந்து வைத்துக்கொண்டு அதை மனப்பாடமாக காலையிலிருந்து இரவு படுக்கப் போகும் வரை வரிசை மாறாமல் Recite செய்வதில் அவள் படு சமர்த்து. எனக்கு போய் இப்படி ஒரு பிள்ளையா என்று வியந்து போவாள் பத்மா. தன்னால் மட்டும் இவளைப் போல் தன் கணவனை ஏன் புரிந்துகொள்ள முடியவில்லை என்று நினைப்பாள்.

மதன் காலையில் எழுந்ததும் பல் விளக்க, குளிக்க, டிஃபன் பண்ண, டிரெஸ் சேஞ்ச் செய்ய, ஷூ போட, வாட்ச், பெண், கைக்குட்டை இத்யாதி, இத்யாதி எடுத்துக்கொள்ள என ஒன்றொன்றுக்கும் ஒரு கால அளவை நிர்ணயித்து அதே முறையில் நாள் தவறாமல் செய்வான்.

இவ்வளவு ஏன், காலையில் அவன் வீட்டிலிருந்து இறங்கி விட்டால் காலை சரியாக மணி 9.00 என்றும் மாலையில் அவன் வீடு வந்து சேர்ந்தான் என்றால் மாலை சரியாக 6.15 நிமிடம் என்றும் அர்த்தம். அவனுடைய கீழ் வீட்டு போர்ஷனில் குடியிருந்த கல்லூரி மாணவி தீபா ‘மதன் அங்கிளைப் பார்த்துத்தான் நான் எங்க வீட்டு கடிகாரத்தையே கரெக்ட் பண்ணுவேன் தெரியுமா?’ என்று எல்லோரிடமும் சொல்லும் அளவுக்கு எல்லாவற்றிலும் மதன் அத்தனை இயந்திரத்தனமாய் நடந்துக்கொள்வான்.

பத்மா அவனுக்கு நேர் எதிர். இருவருக்கும் திருமணமாகி - அது ஒரு பெரிய கதை, பிறகு விலாவாரியாக பார்க்கலாம் - பதினைந்து ஆண்டுகளாகியும் அவனுடைய இந்த குணத்தை கொஞ்சமும் புரிந்துக்கொள்ளாமல் தினமும் குறைந்த பட்சம் ஐந்தாறு முறையாவது திட்டு வாங்குவாள்.

இரண்டு பெண் குழைந்தைகள். மூத்தவள் மீனா: வயது 14. இளையவள் வீனா: வயது 9. இரு குழந்தைகளுக்கிடையில் குறைந்த பட்சம் ஐந்து வருட இடைவெளி தேவை என்பது இந்திய அரசாங்கத்தின் நியதியல்லவா, அதனால்தான். இரண்டுக்குப் பிறகு வேண்டவே வேண்டாமே. பத்மாவை கேட்காமலே வீனா பிறந்ததும் கர்ப்பத்தடை பண்ணிருங்க டாக்டர் என்று மதன் உத்தரவிட அவனுக்கு மிகவும் நெருங்கிய நண்பரான மருத்துவர் வேறு வழியில்லாமல் செய்து முடித்துவிட்டுத்தான் பத்மாவிடம் தெரிவித்தார். விவரம் தெரிந்து பத்மாவின் தாயும், தந்தையும் சகோதரர்களும் பதறியபோது ‘உங்க வேலைய பாருங்க. இது எங்க குடும்ப விஷயம்.’ என அவன் போட்ட போட்டில் எல்லாரும் வாயை மூடிக்கொண்டனர்.

‘சரியான முள்ளு மூஞ்சிடி ஒம்புருசன். எப்படித்தான் அவங்கூட குடுத்தனத்த நடத்தி குட்டிச்சுவரா போறியோ தெரியல.’ என்று மருமகன் இல்லாதபோது பொருமுவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை பத்மாவின் பெற்றோருக்கு.

‘ஏய் அப்பா குளிச்சி முடிச்சாச்சி, போய அவ அவ இடத்துல உக்காந்துக்குங்க இல்லன்னா எனக்குத்தான் திட்டு விழும். போங்கடி.’ என்ற பத்மாவைப் பார்த்து ‘ஒவ்வெவ்வே’ என்று உதடுகளை சுழித்து அளவம் காட்டிவிட்டு தன் இருக்கையை நோக்கி ஓடினாள் வீனா. படித்துக்கொண்டிருந்த காமிக்ஸ் புத்தகத்தை மூடி பள்ளிப் பையில் வைத்துவிட்டு அவசர, அவசரமாக மதனின் அட்டவணைப்படி படிக்க வேண்டிய ஜியாகரபி புத்தகத்தை எடுத்து முன்னால் விரித்துக்கொண்டு படிக்க ஆரம்பித்தாள் மீனா.

தொடரும்

11 comments:

டிபிஆர்.ஜோசப் said...

இதென்னங்க பேர் யூஸ்லெஸ்சுன்னு!

கோச்சிக்காதீங்க. யூஸ்லெஸ்சுன்னு எதுவுமே இல்லே யூஸ்டு லெஸ்சுன்னு தான் இதுக்கு அர்த்தம்னு சொல்வார் எங்க ஜிஎம்.

நம்ம எல்லாரோட வாழ்க்கையிலும் நடக்கறத யதார்த்தமா, மிகைப்படுத்தாம சொல்லணுங்கறதுதான் என்னுடைய முக்கால்வாசி பதிவுகளோட நோக்கம். சில சமயங்களில என் எழுத்தில நளினமோ, காவியத்தனமோ,ஏன் இலக்கணமோ கூட இல்லாம போகலாம். ஆனா போலித்தனம் நிச்சயமா இருக்காது.

டிபிஆர்.ஜோசப் said...

உங்க தொடரும் வேலைய இதுலும் விட்மாட்டேங்கறீங்களே சார். இதுல எத்தன தொடரும் போடுவீங்க? ஆரம்பிச்சிருக்கிறத பார்த்தா மதனோட கல்யாணத்துல தொடங்கி (அதுவும் விலாவாரியா சொல்றேன்ன்னு சொல்றீங்க)எது வரைக்கும் போவிங்கன்னு சொல்லிருங்களேன். ஒரு பத்து பதிவு? இல்ல அதுக்கு மேலயா?

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க சம்பத்,

ஒரு பத்து பதிவு? இல்ல அதுக்கு மேலயா? //

உண்மைய சொல்லணும்னா எனக்கே தெரியலை. கதைச்சுருக்கத்தை வெளியிட்டா இத வச்சிக்கிட்டாய்யா எழுதறீங்கன்னு கேப்பீங்க.

ஒரு சின்ன குடும்பம். அவங்களோட தினசரி வாழ்க்கையில நடக்கற சம்பவங்களை வச்சி ரொம்ப வளவளன்னு போகாம எழுதணும்னு நினைச்சிருக்கேன். பாக்கலாம்.எல்லாருக்கும் புடிக்குமோ இல்லையோ. போகப்போகத்தான் பாக்கணும்.

G.Ragavan said...

நல்லாருக்கு ஜோசப் சார். நல்லா வந்திருக்கு. அதுல நண்டுகளை நல்லா ரசிக்க முடியுது. ஒவ்வொரு கதாபாத்திரமும் அவங்கவங்க எடத்துல இருந்து ஒழுங்கா இதுவரைக்கும் செஞ்சுக்கிட்டு இருக்காங்க. குறுநாவலுன்னு வேற சொல்லீட்டீங்க. அடுத்த பாகம் எப்போ? எப்போ?

Muthu said...

இது ஒரு வீபரித முயற்சியாக எனக்கு படுகிறது. எனிவே கன்டினியூ பண்ணுங்க. பாதில நிறுத்தாதீங்க..

பர்சனலா எனக்கு தொடர்கதைகள்ளா அவ்ளோ இன்ட்ரஸ்ட் இல்லை..மத்தவங்க எப்படின்னு தெரியல...(சம்பத் விதிவிலக்கு)

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க முத்து,

சம்பத் எனக்கு மிக நெருங்கிய நண்பர். நான் அநானிமஸ் பின்னூட்டங்களை தடுத்ததும் எனக்காகவே ப்ளாக்கர்ல போய் அவர் பெயரை பதிவு செய்துக்கொண்டு பின்னூட்டங்கள் இடுபவர். இப்போது வேறு சில பதிவுகளிலும் பின்னூட்டம் இடுகிறார். அவர் நான் என்ன எழுதினாலும் படிப்பார், ரசிப்பார், பின்னூட்டத்திலும் தொலைப்பேசியிலும் பாராட்டுவார், திட்டுவார், வேணும்பார், வேணாம்பார். ஒரு விசித்திரமான நண்பர். அண்ணாமலையும் அப்படித்தான்.

விபரீத முயற்சிங்கறீங்க, பாதியில நிறுத்திராதீங்கன்னும் சொல்றீங்க. எப்படியோ இது எனக்கு மிகவும் பிடித்த கரு. It will go till it ends on its own. இது ஓரிரு நிகழ்ச்சிகளைக் கொண்டு வடிக்கப்பட்டதல்ல.. ஒரு வாழ்க்கை.. ரொம்பவும் நீளாது. அதுமட்டும் உறுதி.

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க ராகவன்,

மதனும், பத்மாவும் சராசரி குடும்பங்களில் காணப்படும் நிஜ மனிதர்கள். நம் எல்லா குடும்பங்களிலும் தினசரி நடக்கும் சல்லாபங்கள், உரசல்கள், குழந்தைகளின் சேட்டைகள், அவர்களுக்கு கொடுக்கப்படும் சில்லறை தண்டனைகள், பாராட்டுகள் எல்லாத்தையும் மிகைப்படுத்தாம எழுதணும்னு ஆசை. ஆரம்பிச்சிருக்கேன்.. நல்லபடியா முடிக்கணும். பார்ப்போம்.

Muthu said...

வீபரித முயற்சின்னு சொன்னது உண்மைதான்.

நிறுத்தாதீங்கன்னு சொன்னது படைப்பு தனக்குரிய இடத்தை வரலாற்றில் தானே தேடிக்கொள்ளும்.ஆகவே ஏதோ ஒரு கட்டத்தில் இதற்கு போதிய வரவேற்பில்லை என்று பட்டால் அதற்காக மட்டும் கதையை நிறுத்தவேண்டாம. ஒரு கதை உங்கள் மூலமாக எழுதப்படவேண்டும் என்று இருந்தால் அது முழுமையாக நடைபெறவேண்டும்.அதனால் தான் எந்த காரணத்திற்காகவும் கதையை அவசரமாக 'கட்' செய்து முடிக்கவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

ஏற்கனவே ஒரு நாவலை எழுத முயன்ற ஒரு நண்பரை(வினையூக்கி) காணவில்லை சில நாட்களாக.

டிபிஆர்.ஜோசப் said...

உங்க எண்ணம் நியாயமானதுதான்.

ஆனா நான் 'ஜாதகத்தில் பாதகம்'னு ஒரு தொடர் எழுதினேன். முதல் இரண்டு பதிவுகளுக்கு அமோக ஆதரவு இருந்தது. அதுக்கப்புறம் கொஞ்சம் கொஞ்சமா ஆர்வம் குறைஞ்சி கடைசி நாலஞ்சி பதிவுகள அதிக பட்சம் ரெண்டோ, மூணோ பேர்தான் படிச்சிருப்பாங்க. அது மிகவும் இயற்கையான சமாச்சாரம்.

நம்ம வீட்டு குழந்தைங்கள பாருங்க. ஒரு பேப்பர் கிடைச்சா போறும். எடுத்து கிறுக்க ஆரம்பிச்சிருவாங்க.
அதுமாதிரிதான் நானும். கொஞ்ச வருஷத்துக்கு முன்னால கிறிஸ்துவ பத்திரிகைகளுக்கும் மட்டும்தான் கதை, கட்டுரை எழுதுவேன். சிலது பிரசுரம் ஆயிருக்கு. சிலது திரும்பி வந்திருக்கு. அப்புறம் ஆவி,குமுதம்னு அனுப்பினேன். ப்ராம்ப்டா திரும்பி வந்தது (செல்ஃப் அட்ரஸ்டு கவர் அனுப்பினதுனால திருப்பி அனுப்பிச்சிட்டாங்களோ என்னவோ). அப்புறம் அதே கதைகளை மின் சஞ்சிகைகளுக்கு அனுப்பினேன். காசா, பணமா சும்மாத்தானேன்னு எல்லாத்தையும் பிரசுரிச்சாங்க (திண்ணை, பதிவுகள், கீற்று). அப்புறம் திடீர்னு ஒரு நாள் கூகுள் சர்ச்சுல தமிழ்மணத்தைப் பற்றி படிச்சேன். ப்ளாக் தொடங்குனா என்னான்னு தோனிச்சி. தொடங்கிட்டேன். இது சும்மா கையில கிடைச்ச தாள் மாதிரி.ஏதோ கிறுக்கறேன். ஆதரவு கிடைக்குது, கிடைக்கலங்கற கவலையே இல்லாம எழுதணும். என்னுடைய எண்ணங்களுக்கு ஒரு வடிகால். அவ்வளவே. பெரிய எதிர்பார்ப்புகள் ஒன்னும் இல்லை.

Muthu said...

திரும்ப வரதுன்றது சாதாரணம் சார். பெரிய பெரிய எழுத்தாளர்களது கதையே திரும்ப வரும்கிற போது நம்பள்ளாம் என்ன?.

ஆனால் உங்கள் கதைகள ரொம்ப சுவாரசியமாகவே உள்ளன. நாவலை நீங்க கன்டினயூ பண்ணி இணையத்தில ரிகார்டு பண்ணி வையுங்க சார். பின்னால் என்னைக்கும் உங்கள் படைப்பின் பெயர் சொல்லும் அது..

நீங்கள் பெரிய எதிர்பார்ப்பு இல்லைன்னாலும் நீங்க அவசரப்பட்டு பாதிலையே கதையை முடிக்க கூடாது. அங்கங்கே உங்கள் அனுபவ முத்திரையை உங்களுக்கே உரிய பாணியில் அள்ளி தெளியுங்கள். வாழ்த்துக்கள்.

பகுத்தறிவாளன் said...

நல்லாயிருக்கு சாரே! அதிலும், //மதனுக்கு தன் மூத்த மகள் சமயோசிதமாக பேசுகிறாள் என்று தெரியும். அவனையுமறியாமல் அவன் உதடுகளில் புன்னகை அரும்ப அதைக் கவனித்துவிட்ட வீனா ‘அப்பான்னா அப்பாத்தான்’ என்று வழிய// இந்த இடம் ரொம்ப நல்லாயிருக்கு. என்னயறியாம இந்த இடத்தில நா கண்ணீர் தழும்பி சொல்ல வராத ஒருவித ஆனந்தத்துல சிரிச்சேன்னா பாத்துக்குங்களேன். அந்த "வழிய"ன்னு உள்ள வார்த்தய எடுத்துட்டு "கொஞ்ச"ன்னு போடுங்களேன்.