13.12.05

அப்பா ஒரு ஹிட்லர்.. 5

பத்மா பதிலேதும் கூறாமல் அவனைக் கட்டிப் பிடித்துக்கொண்டாள். மதனும் அவளை அணைத்துக்கொண்டு மேசையின் மேல் தலைவைத்து உறங்கிக்கொண்டிருந்த மீனாவைப் பார்த்தான். பிறகு சுவர்க்கடிகாரத்தைப் பார்த்தான். மணி 9.15!

‘அட! என்னாச்சி எனக்கு? இப்படி நேரம் போறது தெரியாமயே தூங்கியிருக்கேன்!’ என்று தனக்குள் நினைத்துக்கொண்டு தன்னை அணைத்துக்கொண்டிருந்த பத்மாவின் தாடையில் கைவைத்து தன்னை நோக்கி உயர்த்தினான். ‘ஏய்.. பைத்தியம்.. பழச எதையாவது நினைச்சிக்கிட்டியா? சரி, போ..சாப்பாட எடுத்துவை.. நான் மீனாவ கூட்டிக்கிட்டு வரேன்.’

அவள் சென்றதும் தன் மகளை நெருங்கி, ‘ஏய் திருடி.. போதும் தூங்குனது.. அப்பா கிட்டருந்து இன்னைக்கி தப்பிச்சிட்டே.. நாளைக்கு பாக்கலாம். எழுந்திரு. சாப்டுட்டு தூங்கு..’

மீனா தூக்க கலக்கத்தில் பாதிக்கண்களுடன் மதனைப் பார்த்தாள். ‘எனக்கு தூக்கம் வருதுப்பா.. ப்ளீஸ்.. எனக்கு சாப்பாடு வேணாம்..’ என்று சிணுங்கினாள். அவன் கோபப்படாமல் இருக்கவே.. ‘அப்பா அப்படியே என்ன தூக்கிகிட்டு போங்கப்பா.. ப்ளீஸ்..’ என்று கெஞ்சினாள்.

மதனும் சிரித்துக்கொண்டு அவளை அப்படியே தன் இரு கைகளிலும் அள்ளிக்கொண்டு படுக்கையறையை நோக்கி நடந்தான்.

‘என்னங்க நீங்க? பதினஞ்சு வயசு ஆகப்போகுது.. அவதான் இன்னும் குழந்தையாட்டம் விளையாடறான்னா நிங்களும் அவ கூட சேந்துக்கிட்டு. நீங்க ஊர்ல இல்லாத நாள்லல்லாம் தூங்குடி, தூங்குடின்னு கெஞ்சினா கூட ராத்திரி பதினோரு மணி வரைக்கும் தூங்காம காமிக்ஸ் படிச்சிக்கிட்டிருப்பா. இன்னைக்கி என்ன? எல்லாம் நடிப்பு.’ என்ற பத்மாவைப் பார்த்து விஷமத்துடன் கண்ணடித்த மதன் மீனாவை கட்டிலில் கிடத்தி போர்வையை இழுத்து விட்டுவிட்டு பத்மாவை நெருங்கினான்.

அவனுடைய எண்ணத்தைப் புரிந்தும் புரியாதது போல் நடித்தாள் பத்மா.. ‘சரி, சரி. வாங்க. நீங்க சாப்டு முடிச்சீங்கன்னா நானும் பாத்திரத்தை சிங்க்ல போட்டுட்டு படுப்பேன். என்ன பாக்கறீங்க? அதெல்லாம் ஒன்னும் வேணாம். இன்னைக்கி அது... புரியுதில்ல? வந்து நல்ல பிள்ளையாட்டம் சாப்டுட்டு படுங்க. இந்த தடவை என்னமோ தெரியல. இடுப்பெல்லாம் பயங்கரமா வலிக்குது.’

மதன் பத்மாவை நெருங்கி அவளை அணைத்துக்கொண்டான். ‘சீ பைத்தியம். எனக்கு தெரியாதாக்கும்? காலண்டரைப் பாரு. இன்னைக்கி ரெட் இங்க்ல ரவுண்ட் பண்ணியிருக்கேன்ல..?’ என்றான் விஷமத்துடன்.

அதுவரை 'எதுக்கு காலண்டர்ல வட்டம் போட்டிருக்கு'ன்னு யோசித்து யோசித்து விளங்காத பத்மா கணவனைப் பார்த்து, ‘சீ உங்களுக்கு விவஸ்தையே இல்லீங்க. ரெண்டு நாளா மீனா காலண்டர பார்த்துட்டு ஏம்மா இன்னைக்கி, நாளைக்கி, நாளான்னைக்கின்னு மூனு நாளைக்கும் வட்டம் போட்டிருக்கு? யார் போட்டா? ஏதாவது விசேஷத்துக்கு போறோமாம்மா’ன்னு என்னை போட்டு குடைஞ்சி எடுத்துட்டா. உங்களுக்கு எதுக்குத்தான் கணக்கு வைக்கிறதுன்னு ஒரு வரைமுறையே இல்லையா? நாளைக்கு உங்க மக பெரிய மனுஷியானா அவளுக்கும் இப்படித்தான் சரியா வருதான்னு பார்த்துக்கிட்டே இருப்பீங்களா? நல்ல ஆளுங்க.. சரி சரி. பேசிக்கிட்டிருந்தா டைம் போய்கிட்டே இருக்கும். வாங்க, உக்காருங்க. இன்னைக்கி நைட்டுக்கு தனியா குழம்பு வைக்க முடியல.. பகலுக்கு வச்ச மீன் குழம்பும் அப்பளமும்தான். குழம்புலருக்கற மீனை வச்சிக்கிட்டு நல்ல பையனாட்டம் சாப்டு முடிங்க. ரசமும் இருக்கு.’

‘பைத்தியம். உன் கையால ரசம் வச்சாலும் போறும்டி. எடுத்து வச்சிட்டு நீயும் உக்கார். சாப்டதும் நான் பாத்திரத்த எல்லாம் எடுத்து வைக்கிறேன். நீ சாப்டதும் போய் படு. காலைல முடிஞ்சா எழுந்து சமை. இல்லன்னா நான் பண்ணிட்டு, பசங்கள ஸ்கூல்ல விட்டுட்டு போறேன். என்ன?’ என்ற மதனைப் பார்த்தாள் பத்மா.

இந்த மாதிரி ஆம்பிளை கிடைக்கறதுக்கு நான் என்ன புண்ணியம் பண்ணியிருப்பேன் என்று நினைத்த மாத்திரத்திலேயே கண்கள் குளமாக முகத்தை திருப்பிக் கொண்டு சேலையால் முகத்தைத் துடைத்தாள். ‘ஏய் எருமை.. எத்தன தடவை சொல்லியிருக்கேன். சேலையால துடைக்காத.. இந்தா இத வச்சி துடை..’ என்றவாறு தன் தோளில் கிடந்த பூத்துவாலையை எடுத்து கொடுத்தான்.

துவாலையால் முகத்தை அழுந்த துடைத்த பத்மா அவனைப் பார்த்து ‘இப்படி நீங்க எருமை, கழுதைன்னு ஒரு நாளைக்கு ஒரு தடவையாவது கூப்பிடலன்னா எனக்கு தூக்கமே வராதுங்க.’ என்றவாறு கலகலவென்று சிரிக்க மதன் பொய்கோபத்துடன் உறங்கிக் கொண்டிருந்த தன் பிள்ளைகளைப் பார்த்து ‘முளிச்சிக்க போவுதுங்கடி. என்னாச்சி உனக்கு இன்னைக்கி.’ என்றான்.

இருவரும் உண்டு முடித்ததும் பாத்திரங்களை எடுக்க முனைந்த மனைவியின் கைகளை தட்டி விட்டுவிட்டு, ‘நீ போய் படு. நான் எடுத்து வச்சிட்டு போய் படுக்கறேன். எனக்கு இப்போ தூக்கம் வராது போலருக்கு. அப்படியே கொஞ்ச நேரம் வெராந்தாவுல உக்காந்து ஆகாசத்த பாக்கப் போறேன், தூக்கம் வரவரைக்கும். நீ லைட்ட அனைச்சிட்டு படு.’

பாத்திரங்களை அடுக்களை சிங்கில் ஒழுங்காக வைத்து அருகில் பிளாஸ்டிக் பக்கெட்டிலிருந்த தண்ணீரை குவளையில் எடுத்து பாத்திரங்களின் மேல் சுற்றி ஊற்றிவிட்டு லைட்டை அனைத்தான். அடுக்களையை ஒட்டியிருந்த படுக்கையறையில் கட்டிலில் கிடந்த தன் மனைவியையும் இரு பிள்ளைகளையும் பார்த்துக்கொண்டு சிறிது நேரம் நின்றான். பிறகு லைட்டை அணைத்துவிட்டு முன் அறையை ஒட்டியிருந்த தன் படுக்கையறையை நோக்கி நடந்தான்.

மதன்-பத்மா ஜோடிக்கும் பிள்ளைகளுக்கும் என இரண்டு படுக்கையறைகள், வரவேற்பறை, அடுக்களை, உணவருந்த ஒரு சிறு அறையென அவ்வீடு கச்சிதமாக இருந்தது. டாய்லெட்டும், குளியலறையும் வெளியே வானம் பார்த்த தாழ்வாரத்தின் மூலையில் அமைந்திருந்தன. பத்மா 'அந்த மூன்று' நாட்களில் மட்டும் குழந்தைகளுடனேயே படுத்து உறங்குவாள். தேர்வு நேரங்களில் மீனா இரவில் கண்விழித்து படிக்கும் நாட்களிலும் பத்மா அவள் உறங்கும் வரை குழந்தைகளுடனேயே படுத்துக்கொண்டிருப்பாள். மற்ற நாட்களில் குழந்தைகள் இருவரும் உறங்கிய பிறகு எழுந்து கதவை லேசாக மூடிவிட்டு தங்கள் அறைக்குச் சென்று படுப்பது வழக்கம்.

அடுக்களையை ஒட்டியிருந்த படுக்கையறையிலிருந்து முன் அறைக்கும், மதனின் படுக்கையறைக்கும் செல்ல தாழ்வாரம் வழியாகத்தான் செல்ல வேண்டும்.

முன்னறையிலிருந்த சாய்வு நாற்காலியையும் ஒரு சிறிய முக்காலியையும் தாழ்வாரத்தில் எடுத்து இட்டு அமர்ந்த மதன் நாற்காலியில் சாய்ந்து கால்களை முக்காலியின் மேல் நீட்டிக்கொண்டு சிறிது நேரம் அமைதியாய் வானத்தை அண்ணாந்து பார்த்தான். வானம் தெளிவாய் நட்சத்திரங்கள் மின்ன பார்க்க மிகவும் அழகாய் தென்பட்டது. குளிர்ந்த காற்றின் மணத்தை தன் நெஞ்சு முழுக்க உள்ளிழுத்து சுவாசித்தான். மனசில் ஒரு இனம் புரியாத சந்தோஷம் எழுந்தது.

பத்து வருடங்களுக்கு முன் இந்த வீட்டில் இதே போர்ஷனில் மாத வாடகைக்குத்தான் வந்தான். அப்போது மீனாவுக்கு நான்கு வயது. வீனா இன்னமும் பிறக்கவில்லை. குடிவந்து இரண்டு வருடங்களுக்குப் பிறகு திடீரென ஒருநாள் அவன் அலுவலகத்திற்கு புறப்பட்டு கொண்டிருக்கும்போது வீட்டு உரிமையாளர் வந்தார். ‘சார், நான் இந்த வீட்டை வித்துரலாம்னு இருக்கேன். நீங்க ஒரு மாசத்துக்குள்ள வீட்டை காலி பண்ணிட்டீங்கன்னா வாங்கறவங்கள கூட்டிக்கிட்டு வந்து காட்றதுக்கு வசதியாயிருக்கும். அதுக்கு முன்னால கொஞ்சம் வீட்டை பெயிண்ட், கிய்ண்ட அடிச்சி பார்வையா மாத்தலாம்னு பார்க்கறேன்’ என்றார்.

‘சரி சார். பாக்கறேன்.’ என்று அலுவலகம் புறப்பட்டுச் சென்ற மதன் அன்று பகல் முழுவதும் வீட்டுக்காரர் கூறியதைப் பற்றி ஆலோசித்து ஒரு முடிவுக்கு வந்தான். அன்று மாலையே வீட்டுக்காரரை அவருடைய வீட்டில் போய் பார்த்தான்.

‘சார். நானே உங்க வீட்ட வாங்கிக்கறேன். விலைய சொல்லுங்க. ஒரு மூனு மாசம் டைம் குடுத்தீங்கன்னா பணத்தை முழுசா செட்டில் பண்ணிடரேன். நீங்க பெயின்ட்டிங்க் எல்லாம் ஒன்னும் செய்ய வேணாம். அப்படியே நான் வாங்கிக்கறேன்.’ என அவர் கூறிய விலை நியாயமாய் படவே பத்மாவிடம் வந்து தன் யோசனையை கூறினான்.

பத்மா உடனே தன் தந்தைக்கு கடிதம் எழுத அவர் தன் மூத்த மகனுடன் உடனே புறப்பட்டு வந்து நின்றார். அவர்கள் வந்த நோக்கத்தை அறிந்த மதனுக்கு தன் மனைவி மீது அசாத்திய கோபம் வந்தது. திருமணம் ஆனபின் முதன் முறையாக, தன் மாமனார் முன்னால் அவளை அடிக்கவே போய்விட்டான்.

‘ஐயோ நான் சும்மாத்தாங்க எழுதினேன். வீட்ட வாங்கறதுக்கு ஒரு நல்ல நாள் பார்த்து சொல்லுவாங்களேன்னுதான் எழுதினேன். அப்பா உடனே புறப்பட்டு வருவாங்கன்னு நான் நினைச்சேனா?’ என்றாள் பத்மா.

பிறகு அடுத்த ஒரு வாரம் பத்மாவின் தந்தை அங்கேயே தங்கியிருந்து மருமகனை தினமும் கெஞ்சி ‘சும்மா வேணாம் மாப்பிள்ளை. கடனாவே நினைச்சிக்குங்க’ என்றெல்லாம் சமாதானம் பேசி அவனை சம்மதிக்க வைத்து, முழுப்பணத்தையும் ஒரே தவணையில் செலுத்தி, வீட்டை தன் மருமகன் பேரில் கிரையம் செய்துவிட்டுத்தான் ஊர் போய் சேர்ந்தார்.

ஆரம்பத்தில் முசுடு, கோபக்காரன், தன் மகளுடைய வாழ்க்கை நாசமாக்கிருவான் என்றெல்லாம் நினைத்திருந்தவர்கள் மதன் தன் மகளை கண்கலங்காமல் மட்டுமல்ல மிகவும் சந்தோஷமாக வைத்திருக்கிறான் என்று நாளடைவில் கண்டுக்கொண்ட பத்மாவின் பெற்றோர் தங்கள் நன்றியை காட்டும் முகமாகத்தான் இதை செய்தார்கள் என்பதை பிறகு தன் மனைவி மூலமாக கேள்விப்பட்டான் மதன்.

பழைய நினைவுகளில் ஆழ்ந்து போயிருந்த மதன் தன் மேல் விழுந்த ஒன்றிரண்டு மழைத்தூரலால் நினைவுகள் கலைந்து எழுந்து திரும்பி சுவர்க்கடிகார்த்தைப் பார்த்தான். மணி நள்ளிரவைக் கடந்திருந்தது. வானத்தை அண்ணார்ந்து பார்த்தான். சற்று முன் களங்கமில்லாமலிருந்த வானம் கருத்த மழை மேகங்களுடன் பயமுறுத்தியது. தொடுவானத்தில் ஓரிரு மின்னல்கள் கீறலாய் வானத்தை மேலிருந்து கீழாக கிழித்தன.

நாற்காலியையும் முக்காலியையும் எடுத்து முன் அறையில் அவை இருந்த இடத்திலேயே வைத்தான்.

எடுத்ததை எடுத்த இடத்திலேயே வைக்கவேண்டும் என்பதில் எப்போதும் குறியாயிருப்பான் மதன்.

தொடரும்..

No comments: