14.12.05

அப்பா ஒரு ஹிட்லர் .. 6

நாற்காலியையும் முக்காலியையும் எடுத்து முன் அறையில் அவை இருந்த இடத்திலேயே போட்டான். எடுத்ததை எடுத்த இடத்திலேயே வைக்கவேண்டும் என்பதில் எப்போதும் குறியாயிருப்பான் மதன்.

அப்படி பத்மாவோ குழந்தைகளோ நடந்துகொள்ளாவிட்டால் அவ்வளவுதான். கோபத்தில் வீட்டையே இரண்டாக்கிவிடுவான். பத்மாவோ அதற்கு நேர் எதிர். இந்த விஷயத்தில் மூத்தவள் மதனையும் இளையவள் தன் தாயையும் கொண்டிருந்தார்கள்.

‘கரண்ட் சட்டுன்னு போய்ட்டாக்கூட நமக்கு வேண்டியதை கரெக்டா எடுக்க முடியணும். அதான் குடும்ப பொம்பளைக்கு லட்சணம். ஆஃபீஸ்ல எங்கிட்ட ரெண்டு மாசம் ட்ரெய்னிங் எடுக்கற பசங்க கூட இந்த பழக்கத்த படிச்சிருவானுங்க. ஆனா உன்னைப் பாரு, பதினஞ்சி வருஷமா என்கூட குடித்தனம் பண்ணியும் இப்பவும் அப்படியேத்தான் இருக்கே. நானும் நாயே, பேயேன்னு திட்டிப் பார்த்துட்டேன். திருந்தினாத்தானே. இந்த விஷயத்துல நான் முழுசா தோத்துப் போனது உங்கிட்டதான்டி. உன்னை பாத்து வீனா குட்டியும் அதே மாதிரி பண்ணுது. மீனா மட்டுமாவது என்ன மாதிரி வந்தாளே.’ என்பான் சமயம் கிடைக்கும்போதெல்லாம்.

பத்மாவின் தாயாரும் அவளுடைய வீட்டிற்கு வரும்போதெல்லாம் தன் மகளைக் கண்டிப்பாள். ‘ஏன்டி, உனக்கு சூடு சுரணைங்கறதே கிடையாதா? மாப்பிள்ளைதான் பாவம் எத்தனை தடவை கிளிப்பிள்ளைக்கு சொல்றா மாதிரி சொல்லியிருப்பார். நானும் உன்னை மாதிரி பட்டிக்காட்டுலதானடி பொறந்து வளர்ந்தேன். மாப்பிள்ளை நம்ம வீட்டுல வச்சி உங்கிட்ட சொன்னதுலருந்து நம்ம வீடே மாறிப்போச்சேடி. நீயும் பார்த்தே இல்ல? நீ வீட்ல இருந்தப்போ இருந்தா மாதிரியா இருக்கு? நாங்கல்லாம் மாறிடலே? நீ மட்டும் ஏன்டி அப்படியே இருக்கே? பாருடி உம் மூத்த பொண்ண! அது இத்தனூண்டு இருந்துக்கிட்டு என்ன லட்சணமா அதுஞ் சாமான்களையெல்லாம் ஒழுங்கா வச்சி எடுக்குது! உன் வயத்துல பொறந்த பொண்ணான்னு ஆச்சரியமா இருக்கு. அவள பார்த்தாவது நீ திருந்தக்கூடாது? மனுஷியா பொறந்தா மாறணும்டி.’

அப்போதெல்லாம், ‘இனிமே அத்தான் சொல்றா மாதிரி நடந்துக்கணும். பாவம் அவங்களும் எத்தன தடவைத்தான் சொல்வாங்க.’ என்று தனக்குள்ளேயே கூறிக்கொள்வாள். அடுத்த நாள் விடியற்காலையிலேயே எழுந்து மதன் அடுக்களைக்குள் வருவதற்குள் எல்லாவற்றையும் சுத்தம் செய்துவிட்டு அவனிடம் காட்டுவாள். ‘பாருங்க. எப்படி வச்சிருக்கேன்னு.’ என்பாள்.

அவனும் சிரித்துக்கொண்டு அவளுடைய தலையில் செல்லமாய் குட்டுவான். ‘போடி லூசு. இன்னைக்கி சாய்ந்திரம் நான் வந்து பாக்கும்போது இதே மாதிரி வச்சிருந்தேன்னா நீ திருந்திட்டேன்னு ஒத்துக்கறேன்.’ என்று நக்கலடிப்பான்.

‘இல்லீங்க. இன்னைக்கி சாயங்காலமென்ன, நாளைக்கு வேணும்னாலும் பாருங்க, இப்படியேத்தான் இருக்கும்’ என்று பதிலளிப்பாள். மதனும் சிரித்துக்கொண்டே போவான்.

ஆனால் அன்று மாலையே பழைய குருடி, கதவை திறடி என்பதுபோல் அவன் திரும்பி வரும்போது காலையில் பார்த்த அடுக்களையா என்பதுபோல் தலைகீழாய் புரட்டி போட்டிருப்பாள் பத்மா. அவன் அடுக்களைக்குள் நுழைந்து ஒன்றும் பேசாமல் அடுப்பு மேடை, அலமாரிகள் எல்லாவற்றையும் பார்த்துவிட்டு அவளைப் பார்த்து தலையிலடித்துக்கொண்டு போவான்.

‘ஏன் நல்லாத்தானே இருக்கு. எதுக்கு தலையடிச்சிக்கிட்டு போறாங்கடி உங்கப்பா?’ என்பாள் பத்மா மீனாவிடம். மீனாவும் தன் தாயை சில வினாடிகள் விஷமத்துடன் பார்ப்பாள். பிறகு தன் வயிற்றைப் பிடித்துக்கொண்டு விழுந்து, விழுந்து சிரிப்பாள்.

பத்மா கோபத்துடன் ‘ஏய் என்ன கிண்டலா? கொன்னுருவேன்.’ என்று அவளை அடிக்க கை ஓங்குவாள். மீனா அவளுடைய கைகளில் அகப்படாமல் தள்ளி நின்றுகொண்டு மீண்டும் சிரிப்பாள். ‘நீங்க திருந்தவே மாட்டீங்கம்மா. கிச்சனையே தலை கீழா பொரட்டி போட்டுட்டு நல்லாத்தானே இருக்குன்னா சிரிப்பு வராம என்ன பண்ணும்?’

அப்போதும் தன்னைச் சுற்றி ஒரு நோட்டம் விடுவாள். அடுப்பு மேடையில் சிதறிக் கிடக்கும் பாத்திரங்களையும், மசாலா டப்பாக்களையும் பார்த்துவிட்டு, ‘போடி என்னால இவ்வளவுதான் முடியும். ஒத்த கையில கிடந்து மாரடிக்குது உனக்கும் உங்கப்பாவுக்கும் எங்க தெரியுது? அவரு ஜாலியா ஆஃபீஸ் போய்ட்டு வராரு. நீ ஸ்கூலுக்கு போய்ட்டு வரே. தனியா கிடந்து சாவறது நான்தானே. சொல்ல மாட்டே?’ என்பாள்.

மதன் முன் அறையிலிருந்து மறுகுரல் கொடுப்பான். ‘ஏய், சரி, நீ நாளையிலருந்து ஏதாவது வேலைக்கு போ. நான் வீட்டைப் பார்த்துக்கறேன். என்ன சரியா?’

பத்மாவும் ஏட்டிக்கு போட்டியாக, ‘ஏன்? உங்க வேலைய என்னால செய்ய முடியாதாக்கும்? பேனாவ பிடிச்சி நீட்டுன எடத்துலல்லாம் கையெழுத்து போட்டுட்டு தஸ் புஸ்சுன்னு இங்கிலீஷ்ல பேசிட்டு மாசம் ஒன்னாம் தேதியானா சம்பளத்த வாங்கிக்கிட்டு வந்துருவீங்க. என்னை மாதிரி தினம் இந்த அடுப்பை கட்டிக்கிட்டு மாரடிச்சி பாருங்க. ரேஷன்ல ரெண்டு லிட்டர் சீமெண்ணைத் தரான். அது எந்த மூலைக்கு வருது? ஈர விறக வச்சிக்கிட்டு ஊதி ஊதி என் மூச்சே நின்னுரும் போலருக்கு. உங்களுக்கு என்னடானா விளையாட்டா இருக்கு. இதுல உங்களுக்கும் உங்க மூத்த பொண்ணுக்கும் தினமும் மீனு, கருவாடு இல்லாம சாப்பாடு தொண்டையில இறங்காது. மார்க்கெட்டுக்கும் நான்தான ஓட வேண்டியிருக்கு. நீங்களா போறீங்க? என்னைக்காவது ஒருநா உங்கள அனுப்பினாலும் கண்ண மூடிக்கிட்டு அவன் என்ன அழுகிப்போனத குடுத்தாலும் அப்படியே வாங்கிக்கிட்டு வந்துருவீங்க. சரி நான் கேக்கறேன். என்னை மாதிரி உங்களால நாக்குக்கு ருசியா சமைக்க முடியுமா, சொல்லுங்க?’ என்பாள் படபடப்புடன்.

மதன் சரண்டராகிவிடுவான். ‘அம்மா தாயே. ஆளை விடு. ஒத்துக்கறேன். உன்னை மாதிரி நம்மால ருசியா சமைக்க முடியாதுதான். அதுல உன்னை மிஞ்ச எங்கம்மாவாலயும் முடியாது, உங்கம்மாலயும் முடியாது. ஒத்துக்கறேன். அந்த ஒன்னுக்காகத்தானே நீ என்ன அக்கிரமம் பண்ணாலும் சகிச்சிக்கிட்டு போறேன். நீ அடுக்களைய எப்படி வேணும்னாலும் வச்சிக்கோ. முன் அறைய மட்டும் குப்பையாக்காம இருந்தா சரி. ஏய் மீனா, வீனா, அப்பாவும் அம்மாவும் சண்டை போட்டுக்கிட்டா ஜாலியா பாத்துக்கிட்டே இருப்பீங்களே. வாங்கடி, புஸ்தகத்த எடுங்க. படிக்கலாம்.’ என்று அத்துடன் வாக்குவாதத்தை முடிவுக்கு கொண்டுவருவான்.

தன்னையுமறியாமல் மீண்டும் பழைய நினைவுகளுக்கு சென்று திரும்பிய மதன் தன் மனைவியையும் அவளுடைய ஒழுங்கீனத்தையும் நினைத்து பார்த்தான். அவனுடைய உதடுகள் புன்னகையில் விரிந்தன. முன் அறையிலும் தாழ்வாரத்திலும் எரிந்துக்கொண்டிருந்த விளக்குகளை அனைத்துவிட்டு படுக்கையில் விழுந்தான்.

***

மீனாவும் வீனாவும் அவர்களுடைய வீட்டிற்கு அருகிலேயே இருந்த சர்ச்பார்க் கான்வெண்டில்தான் படித்துக் கொண்டிருந்தார்கள். மதியம் 3.30 மணிக்கே பள்ளி முடிந்து விடும். இருவரும் தலையில் புத்தக பையை மாட்டிக்கொண்டு நண்பர்களுடன் பேசிக்கொண்டே நடந்து வீட்டை அடைவார்கள்.

அன்றும் அப்படித்தான். வீட்டு படியேறிக்கொண்டிருந்தபோது மீனா தன் தங்கையைப் பார்த்தாள்.

‘ஏய் வீனாக்குட்டி. இன்னைக்கி என்ன ஸ்பெஷல் சொல்லு?’

ஏற்கனவே புத்தகப் பையையும் சுமந்துக்கொண்டு படியேற முடியாமல் திணறிக்கொண்டிருந்தவள் எரிச்சலுடன், ‘என்னடி?’ என்றாள்.

மதன் இதைக் கேட்டிருந்தால் உடனே கன்னத்தில் ஒரு அறை விழும். ‘என்ன இது அஞ்சி வயசு பெரியவள பாத்து எடி, பிடிங்கற? கழுதை, இனிமே அக்கான்னு கூப்பிடாம பேசி பாரு.. வாயிலயே சூடு வைக்கச் சொல்றேன் அம்மாவ.’ என்பான்.

ஆனால் மதன் வீட்டில் இல்லாதபோதும் அவர்கள் இருவரும் தனியாக இருக்கும்போதும் மீனா அக்கா இல்லை மறுபடியும் எடி, பிடிதான். மீனாவும் இதை பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டாள். அவளுக்கு வீனா என்றால் அத்தனை பிரியம். அவளுக்கு வீனாக்குட்டி எது செய்தாலும் பிடிக்கும்.

தலையில் பளுவுடன் படியேற முடியாமல் சிரமப்படும் தங்கையிடமிருந்து அவளுடைய பையை வாங்கிக்கொண்டு, ‘ஏய் இன்னைக்கி ஒன்னாம் தேதி. மறந்துட்டியா?’ என்றாள்.

வீனாவின் கண்களில் திடீர் பிரகாசம். வாயெல்லாம் பல். ‘ஐ! ஆமா இல்ல? மறந்தே போய்ட்டேன்டி. இன்னைக்கி SKC இருக்கு.. ஹைய்யா.. ஜாலி’ சந்தோஷத்துடன் தலைப்பளுவும் குறையவே வீனா துள்ளலுடன் படிகளில் தாவியேறி ஒடினாள்.

அதென்ன SKC? மாதம் முதல் தேதி என்றால் மதன் சம்பளக் கவருடன் அலுவலகத்திலிருந்து வரும்போது வாங்கி வரும் Sweet, Karam, பாக்கெட்டுடன் வீட்டில் தயாரித்த ஸ்பெஷல் Coffeeயும் சேர்த்து அவர்கள் இருவருக்கும் ஒரு குட்டி விருந்தே கிடைக்கும்.

அரசு அலுவலகங்களில் பணிபுரிபவர்களிடையில் ஏறத்தாழ எல்லோரிடத்திலும் காணப்படுவதுதான் இந்த பழக்கம். சென்னையிலுள்ள மத்திய, மாநில அரசு அலுவலக வளாகத்தினுள் மாத முதல் தேதியன்று மாலை நான்கு மணிக்கே இனிப்பு மற்றும் கார (மிக்சர், பக்கோடா, சமோசா வகையறாக்கள்) பாக்கெட்டுகளில் விற்பவர்கள் கடைபரப்பிவிடுவார்கள்.

மதனுக்கு இதிலெல்லாம் விருப்பம் இல்லாவிட்டாலும் சம்பிரதாயம் என்று ஒரு இருக்கிறதே. எல்லோரும் வாங்கிக்கொண்டு செல்லும்போது இவன் மட்டும் ஒன்றும் வாங்காமல் போனால், ‘சரியான கருமிடா இவன்.’ என்று சக அதிகாரிகள் எங்கே தனக்கு பட்டம் கட்டி விடுவார்களோ என்ற பயமும் காரணமாயிருக்கலாம்.

ஆகவே தான் மாதத்தின் முதல்நாள் என்றாள் வீனாவுக்கு இரட்டிப்பு குஷி. அத்துடன் பத்மாவுக்கும் பிள்ளைகள் இருவருக்கும் மணக்க, மணக்க மல்லிப் பூவும் வாங்கிக்கொண்டு வருவான். ஒரு முழம் பூவை மொட்டைத் தலை முடியில் இரண்டு பக்கத்திலும் க்ளிப் குற்றி வைத்துக்கொண்டு அவள் போடும் ஆட்டம் சிடுமூஞ்சி மதனுடைய முகத்திலும் சிரிப்பை வரவழைத்துவிடும்.

சாதாரண நாட்களில் மாலையில் பிள்ளைகள் இருவரும் வீடு வந்து சேர்ந்தவுடன் ஒரு க்ளாஸ் கேழ்வரகு கஞ்சிதான். ‘ஐயே.. கஞ்சியா.. உவ்வே..’ என்று வீனா அருவருப்புடன் குடிக்க மாட்டேன் என்று அடம் பிடிப்பாள். பிறகு, ‘ஏய் வேணாம். அப்புறம் அப்பா வந்தா சொல்லிக் குடுத்துருவேன்.’ என்று பத்மா பயமுறுத்தியவுடன் வேண்டா வெறுப்பாய் குடித்து வைப்பாள். கேழ்வரகு கஞ்சி உடம்புக்கு அதுவும் சிறுபிள்ளைகளுக்கு நல்லதாம்! மதனுடைய நியதிகளுள் இதுவும் ஒன்று!

மாதத்தின் முதல் நாள் மதனுக்கு வேறொரு முக்கியமான வேலையும் உண்டு.

தொடரும்

No comments: