5.12.05

எல்லாம் முடிஞ்சிப் போச்சிப்பா (சிறுகதை)

கையிலிருந்த சிகெரெட் கையை சுட்டதும்தான் கொஞ்ச முன்னால ஏற்பட்ட அதிர்ச்சியிலிருந்து மீண்டேன்.

நான் பார்த்த காட்சியே என்னைச் சுத்தி சுத்தி வந்துது. நம்பமுடியாம, அவங்க மூனுபேரும் போன திசையையே நேரம் போறது தெரியாம பார்த்துக்கிட்டிருந்தேன்.

அப்பாவா? கூட இருந்த அந்த இரண்டு பேரும், யாராயிருக்கும்? கைலருந்த அனுமதி சீட்டைப் பார்த்தேன். இதுக்கப்புறமும் உள்ள போனா சினிமாவை ரசிக்க முடியும்னு தோனாமல் அரைமனதுடன் கசக்கியெறிஞ்சேன்.

நான் வேலை கிடைச்சி சென்னை வந்து ரெண்டு மாசம் ஆவுது. ஃப்ரென்ட்ஸ் யாரும் இன்னும் சரியாக அமையாததால சனி, ஞாயிற்று கிழமைகள்ல இந்த மாதிரி சினிமா அரங்குகளை சுத்தி வர்றதைத் தவிர வேறு வழி தெரியலாமத்தான் இன்னைக்கிம் இந்த படத்த பாக்கலாம்னு வந்தேன். ப்ளாக்குல டிக்கட்டை வாங்கிக்கிட்டு ஒரு புகை பிடிச்சா என்னன்னு வாயில ஒரு சிகரெட்டை வச்சிக்கிட்டு நிமிர்ந்தப்பத்தான் அவங்க மூனுபேரும் காரில் இருந்து இறங்கி சிரிப்பும் கும்மாளமுமாய் அரங்குக்குள்ள போறத பார்க்கவேண்டி வந்தது.

அப்பாவா? என்னால் நம்ப முடியலை!

நேற்று இரவு அப்பாக்கிட்டருந்து தொலைபேசி வந்தப்போ ‘என்ன திடீர்னு?’ என்று நினைத்துக்கொண்டு ‘என்னப்பா? எங்கருந்து?’ என்றேன். ‘மும்பையிலருந்து. இன்னும் ரெண்டு நாள்ல ஆபீஸ் வேலையா சென்னைக்கு வரவேண்டியிருக்கு ரமேஷ். வேலைய முடிச்ச கையோட உன் ரூமுக்கு வரேன்னு சொல்லத்தான் கூப்டேன்.’ அப்பாவைப் பார்த்து முழுசா ஒரு வருஷம் ஆச்சி!. ‘சரிப்பா’ ன்னு சொன்னப்போ மனசுக்குள்ள சந்தோஷமாயிருந்திச்சி. நான் சம்பாதிக்க தொடங்கினதுக்கப்புறம் அப்பா என்னை பாக்க வராறு.. அசத்திரணும்னு மனசு துள்ளாட்டம் போட்டுச்சி..

ஆனா இப்போ?

என்ன செய்யலாம்? இந்த நேரத்துல, இந்த மனநிலையோட ரூமுக்கு போய் என்ன பண்றது? பீச்சுக்கு போனா என்ன? போயி, கடல் மணல்ல மல்லாக்க படுத்து வானத்த பார்த்துட்டு பழசையெல்லாம் நினைச்சி பாக்கலாம். நாளைக்கி அப்பா பார்க்க வரும்போது இதப்பத்தி பேசறாதா, வேணாமா? பேசினா என்ன பேசறதுன்னு நமக்குள்ளவே ஒரு ஒத்திகை பார்த்துக்கலாம். பசியெடுக்கும்போது ரூமுக்கு போலாம். நடக்க ஆரம்பிச்சேன்.

***

எங்கப்பாவுக்கு நான் ஒரே பிள்ளை. எங்கம்மா இறந்து போனப்போ எனக்கு மூனு வயசாம். எங்கப்பாவுக்கு இருபத்தாறு வயசாம். பாட்டி (எங்கப்பாவோட அம்மா) சொல்லி கேட்டிருக்கிறேன்.

அப்பா நல்லா செவப்பா, நல்லா உயரமா, சின்ன வயசு ஜெய்சங்கர் மாதிரி இருப்பாராம். அப்பாவ மறுபடியும் கல்யாணம் பண்ணிக்க சொல்லி பாட்டி ரொம்ப கட்டாயப்படுத்தினாங்களாம். ஆனா அப்பா ரமேஷ¤க்காகன்னு (நான்தாங்க) சொல்லி கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்னுட்டாராம்.

அதுக்காகவே எனக்கு அப்பாவ சின்ன வயசுலலல்லாம் பிடிக்கவே பிடிக்காது. ஏன் தெரியுமா? என் கிளாஸ்லருக்கற என்னோட எல்லா ஃப்ரென்ட்சுக்கும் அவங்க அம்மா தான் தெனமும் மதியான சாப்பாடு கொண்டு வந்து ஊட்டி விடுவாங்க. நான் மாத்திரம் டிபன் பாக்ஸ்லருக்கற ஆறி அவலாப் போன இட்லி, இல்லன்னா எலுமிச்ச சாதம், சாம்பார் சாதம் அப்படீன்னு எதையாவது ஒன்னை மிஷின் மாதிரி சாப்டுவேன்.

அப்பல்லாம் சாயந்திரம் வீட்டுக்கு வந்ததும் பாட்டிகிட்ட சண்டை போடுவேன். ‘பாட்டி, நீ அப்பாவுக்கு அம்மாதானே? எனக்கு மட்டும் ஏன் பாட்டி அம்மாவே இல்ல?’ பாட்டி, அப்படியே என்னை கட்டி புடிச்சி முத்தம் குடுத்து என் கன்னத்துல வழிஞ்சி ஓடுற கண்ணீரை துடைச்சி விடுவாங்க..

ராத்திரி அப்பா வந்தா சண்டை போடணும்னு அவரு வருவாரு, வருவாருன்னு காத்துக்கிட்டிருப்பேன். ஆனா அவரு வர்ற நேரத்துல ஒரு நாள் கூட நான் முளிச்சிக்கிட்டிருந்ததில்ல. அவரு எப்ப வருவாருன்னே தெரியாது. அழுத கண்ணோட நான் தூங்குனதுக்கப்புறம் பாட்டி என் முகத்த துடைச்சிவிட்டுட்டு போர்வையை சரியா போத்திவிட்டு போவாங்க. அரைகுறை தூக்கத்துல நான் அப்பப்போ பாத்திருக்கேன். ஆனா அவங்க போனதுக்கப்புறம் கண்ணை திறந்து வச்சிக்கிட்டு அம்மா இருந்தா எவ்வளவு நல்லாருக்கும்னு யோசிச்சிக்கிட்டே இருப்பேன். எப்ப தூங்குவேன்னே தெரியாது. காலையில அப்பா வந்து ‘டேய் ரமேஷ், ஸ்கூலுக்கு லேட்டாயிருச்சிடா’ன்னு எழுப்பும்போதுதான் தெரியும் விடிஞ்சிருச்சின்னு.

எங்கப்பா ஒரு பேங்க்ல வேலை செய்யறார்னு மட்டும்தான் அப்ப எனக்கு தெரியும். என்ன வேலைன்னெல்லாம் தெரியாது. நான் ஆறாவது பாஸ் பண்ணி ஏழாவது போறப்பன்னு நினைக்கிறேன். ஒரு நாள் அப்பா ஆஃபீஸ்லருந்து சீக்கிரமா வீட்டுக்கு வந்தாரு. கையில ஒரு ஸ்வீட் பாக்ஸ். ‘இந்தாடா ரமேஷ், அப்பாவுக்கு ஆஃபீசரா பிரமோஷன் ஆயிருச்சிடா’ன்னாரு. சந்தோஷமா இருந்திச்சி. ‘டேய் எங்கப்பா பெரிய ஆஃபீசர்டா’ன்னு அடுத்த நாள் ஸ்கூல்ல பாத்தவன் கிட்டல்லாம் சொல்லி பீத்திக்கிட்டேன். ஒருத்தனாவது மைண்ட் பண்ணாத்தானே.. ‘போடா, ரொம்ப பீத்திக்காதே’ன்னுட்டு போய்ட்டான்க. ‘போங்கடா பொறாமை புடிச்ச பசங்களா’ன்னு நானும் மனசுக்குள்ள சொல்லிக்கிட்டேன்.

ஒரு வாரம் கழிச்சி திடீர்னு அப்பா பாட்டிக்கிட்ட ‘அம்மா எனக்கு ஹைதராபாத்துக்கு டிரான்ஸ்ஃபர் ஆயிருச்சிம்மா’ன்னு சொன்னாரு. எனக்கு அப்ப ஒன்னும் விளங்கல. அடுத்த ரெண்டு வாரத்துல என்னையும் பாட்டியையும் விட்டுட்டு அப்பா கிளம்பி போயிட்டாரு. அன்னையிலருந்து நானும் பாட்டியும்தான். அப்பா அப்பப்ப வருவாரு. ரெண்டு, மூனு நாள் இருந்துட்டு போயிருவாரு. அவரு வீட்டுக்கு வரும்போதெல்லாம் எனக்கு ஸ்வீட், ட்ரெஸ்சுன்னு வாங்கிட்டு வருவாரு. அப்பா கூட இருக்கற அந்த ரெண்டு மூனு நாளும் ரொம்ப சந்தோஷமாயிருக்கும். அப்புறம் அப்பா அடுத்த தடவை வரப்போற நாளை நெனச்சி ஏங்குவேன்.

அப்பாவுக்கு ஒவ்வொரு மூனு வருஷத்துலயும் ஊர் ஊரா மாறிப்போற வேலையாயிருந்ததனால என்னையும் பாட்டியையும் கூட்டிக்கிட்டே போகலை. நான் +2 படிச்சிக்கிட்டிருந்தப்போ எழுபது வயசான பாட்டி ஒரு மார்கழி மாசத்துல அடிக்கிற குளிர் தாங்க முடியாம மூனு நாள் ஜுரத்துல செத்துப் போக நான் முற்றிலும் தனியாய் போய்ட்டேன். பாட்டி செத்துப்போற அன்னைக்கி முந்துன நாள்தான் அப்பா வந்தார். ஒருவாரம் கூட நிக்கலை.

அப்பா, அப்போ மும்பையில ஒரு பெரிய கிளையில மேலாளரா இருந்தார். தங்கறதுக்கு பங்களா சைஸ்ல பெரிய ஃப்ளாட், கார், டிரைவர்னு அதிகப்படியான வசதியோட இருந்தும் எனக்கு ஏனோ அவரோட போய் இருக்க பிடிக்கலை. அப்பாவும் பெருசா என்கூட வந்து இரேன்னு வற்புறுத்தல. ‘நான் காலேஜ் ஹாஸ்டல்லயே இருந்துக்கறேன்’ சொன்னவுடனேயே சரின்னு சொல்லி சேர்த்துட்டு அன்னைக்கே திருச்சியிலருந்து ஃப்ளைட்டை பிடிச்சி போயிட்டார். அதுக்கப்புறம் இந்த நாலு வருஷத்துல மாசத்துக்கு ஒரு தடவையோ ரெண்டு தடவையோ ஃபோன் பண்றதோட எங்க அப்பா- மகன் உறவு நின்னு போயிருச்சி!

அம்மாவும் இல்லாம அப்பாவும் இல்லாம பாட்டி கூடவே வளர்ந்ததுனாலயோ என்னவோ காலேஜ்ல என்னால நண்பர்களோடயும் ஃப்ரீயா பழக முடிஞ்சதில்லை. இப்போ பாட்டியும் போனதுக்கப்புறம்...

அதனால வெறி பிடிச்சாப்பல படிச்சேன்.

முதல் செமஸ்டர்லருந்து க்ளாஸ்ல மட்டுமில்ல கல்லூரியிலயே நான்தான் எப்பவும் முதல். திருச்சி RECல ஃபைனல் இயர் படிக்கும்போதே இந்தியாவுல நம்பர் ஒன் மென்பொருள் நிறுவனம் நடத்தின காம்பஸ் தேர்வில முதலாவதா வந்தேன். மாசம் ரூ.16,000/- சம்பளத்துல இளநிலை மென்பொருள் பொறியாளர் வேலை. ஃபைனல் செமஸ்டர் முடிஞ்சி ரிசல்ட் வர்றதுக்கு முன்னாலயே நியமன உத்தரவு வந்து, மூனு வருஷ பத்திரம் எழுதி கொடுத்துட்டு (இதுக்குதாண்டா Bonded Labourனு பேருன்னு என் ஃப்ரென்டு ஒருத்தன் கேலியா சொன்னான்.) வேலையில சேர்ந்து ரெண்டு மாசமாகுது.

வேலைக்கு சேரப் போறேன்னு அப்பாவுக்கு ஃபோன்ல சொன்னபோதுக்கூட பெரிசா சந்தோஷத்தை காட்டாம வெறுமனே மூனாம் மனுஷனைப் போல ‘கன்கிராட்ஸ்றா ரமேஷ். நான் சென்னையிலருக்கற என் ஃப்ரென்ட் கிட்ட சொல்லி உனக்கு ரூமுக்கு ஏற்பாடு பண்றேன். நீ சென்னையில போய் இறங்குனதும் இந்த நம்பருக்கு ஃபோன் பண்ணுன்னு ஒரு நம்பரை குடுத்தார். அதுக்கப்புறம் சென்னைக்கு வந்து இந்த ரெண்டு மாசத்துல நேத்தைக்குத்தான் அப்பாக்கிட்டருந்து ஃபோன் வந்தது. ஒரு வருஷமா பாக்காததுனால ஒரு சந்தோஷ எதிர்பார்ப்போட இருந்ததுக்கு பதிலா கிடைச்சது...

எத்தனை பெரிய ஷாக்!

தொடரும்

3 comments:

டிபிஆர்.ஜோசப் said...

இப்படி நீங்க கேப்பீங்கன்னு தெரியும்.

பழக்க தோஷம்தான். வேர்ட்ல ரெண்டு ரெண்டரை பக்கம் வந்தவுடனே கை தொடரும் போட்டுடுது. நாளைக்கு முடிஞ்சுரும்!

G.Ragavan said...

தொடர்கதை......ஜோசப் சார்....இதுதான் நீங்க அடுத்து எழுத இருந்த தொடரா? கதை எழுதுறதிலையும் உங்க முத்திரையைப் பதிக்கப் போறீங்களா! வாழ்த்துகள். அடுத்து என்னாகுதுன்னு பாக்குறேன்.

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க ராகவன்,

இதுக்கு முன்னால ஒரு இருபது சிறுகதைகள பதிஞ்சிருக்கேன். ஆர்க்கைவ்ஸ்ல இருக்கும்.

இப்ப எழுதறது தொடரில்லை.. மிஞ்சிப்போனா ரெண்டு இல்லன்னா மூனு பதிவு போகும். நீளமா இருந்தா படிக்கா மாட்டோங்களோன்னு நினைச்சி ஒரே பதிவுக்குள்ள எழுதறதுக்கு பதிலா தொடரும்னு போட்ருக்கேன்.

நான் இதுக்கு முன்னால எழுதுன சிறுகதைகள் திண்ணை, பதிவுகள், கீற்று போன்ற மின்சஞ்சிகைகள்ல வந்திருக்கு. அப்புறம்தான் ப்ளாக்குக்கு வந்தேன்.