29.3.07

சூரியன் 188

சுந்தரலிங்கம் தன் கண்களை நம்பமுடியாமல் பத்திரிகையையே பார்த்தவாறு அமர்ந்திருந்தார். எதிரே டீப்பாயிலிருந்த காப்பி ஆறி அவலாகிப்போயிருந்தது.

எப்படி இந்தாளால இப்படியெல்லாம் சிந்திக்க முடியுது? என்னன்னு சொல்றது?

'என்னங்க காலங்கார்த்தால அப்படியென்ன யோசனையில ஒக்காந்திருக்கீங்க? காப்பிய வச்சிட்டுப் போயி பத்து நிமிஷத்துக்கு மேலாச்சிதே? அப்படியே இருக்கு?' என்றவாறு ஹாலுக்குள் நுழைந்த கனகா தான் பேசுவதை கேளாததுபோல் அமர்ந்திருந்த தன் கணவருடைய தோளை தொட்டாள். 'ஏங்க இப்படி பித்துப் பிடிச்சா மாதிரி ஒக்காந்துருக்கீங்க? அப்படியென்ன பேப்பர்ல?"

திடுக்கிட்டு நிமிர்ந்த சுந்தரலிங்கம் குழப்பத்துடன் தன் மனைவியைப் பார்த்தார். 'எ...என்ன கேட்டே?'

கனகா சிரித்தாள். 'நல்ல ஆளுதான் போங்க.. பேப்பர்ல அப்படியென்ன போட்டிருக்கு? இப்படி பேயறைஞ்சா மாதிரி ஒக்காந்துருக்கீங்க?'

'இந்தா நீயே படி.. நேத்தைக்கி அந்த சேது சொன்னதையெல்லாம் நா சொன்னா மாதிரி போட வச்சிருக்கான். இத மட்டும் அந்த சோமசுந்தரமோ இல்ல நாடாரோ பார்த்தா நா தொலைஞ்சேன்.. என்ன மனுஷனோ.. எப்படித்தான் இப்படியெல்லாம் யோசிக்க முடியுதோ தெரியல.. எல்லாம் என் புத்திய செருப்பால அடிச்சிக்கணும்.. இந்தாள நம்பி ப்ரெஸ் மீட்ல போய் ஒக்காந்தேன் பார்.. என்னெ சொல்லணும்..'

கனகா அன்றையை ஹிந்து நாளிதழில் வெளியாகியிருந்த செய்தியை எழுத்துக்கூட்டி படித்து முடிக்கும்வரை பொறுமையுடன் அமர்ந்திருக்க முடியாமல் எழுந்து ஹாலின் குறுக்கும் நெடுக்கும் நடந்தார் சுந்தரலிங்கம்.

'இது ஒங்களுக்கு வேணுங்க.. அந்தாள பத்தி தெரிஞ்சிருந்தும் அவர் கூட துணை போனீங்கல்லே... பேசாம ராஜிநாமா பண்ணிட்டு வந்துருங்க. இனியும் அங்க வேலை செய்யணும்னு நினைச்சீங்க.. அவ்வளவுதான் ஒங்கள மதிக்கறதுக்கு ஒரு நாதி இருக்காது... சொல்லிட்டேன்.. இப்பவே நான் மாப்பிள்ளைய கூப்ட்டு நம்ம பொண்ணோட ஒடனே வரச்சொல்லப் போறேன்.. இன்னைக்கி நீங்க ஆஃபீசுக்கு போவேணாம்.. எல்லாருமா ஒக்காந்து பேசி ஒரு முடிவுக்கு வரணும்.. என்ன சொல்றீங்க?'

சுந்தரலிங்கம் அதிர்ச்சியுடன், 'ஏய் என்ன நீ, என்னென்னமோ சொல்றே? இதுல மாப்பிள்ளைக்கி என்ன ரோல் இருக்கு? நா செஞ்ச முட்டாத்தனத்த அவர்கிட்ட வேற சொல்லணுமாக்கும்?' என்றவாறு தன் மனைவியின் அருகில் அமர்ந்தார்.

'நாம எதுக்குங்க சொல்லணும்? அதான் பேப்பர்லயே வந்துருச்சே.. நாம கூப்டாட்டாலும் இன்னும் கொஞ்ச நேரத்துல மாப்பிள்ளையே கூப்ட போறார் பாருங்க. என்ன பேசறோம் ஏது பேசறோம்னு யோசிச்சி பேசணும்.. எடுத்தோம் கவுத்தோம்னு எதையாச்சும் பேசிட்டு.. இன்னைக்கி மட்டும் நீங்க ஆஃபீசுக்கு போனீங்க.. ஒவ்வொருத்தரும் ஒங்கள போட்டு தொளச்சி எடுக்கப் போறாங்க..'

சுந்தரலிங்கம் ஆதரவுடன் தன் மனைவியின் கரங்களைப் பற்றினார். 'ஏய்.. இங்க பார்.. நீ வேற டென்ஷனாகாத.. அப்புறம் மூச்சு வாங்கப் போவுது.. போய் கொஞ்ச நேரம் படு.. சமையல அப்புறம் பாத்துக்கலாம்...'

ஆனால் கனகா செல்வதாயில்லை.

'கனகு, நடந்தது நடந்திருச்சி.. இப்ப நீ டென்ஷனாயி என்னாவப்போவுது.. நான் இப்படி பேசியிருக்க மாட்டேன்னு பேங்க்ல எல்லாருக்கும் தெரியும். அங்க இருந்த சுபோத்தும் மத்த ஜூனியர் ஆஃபீசர்சும் இதுக்கு சாட்சி... மீட்டிங் முடிஞ்சதுக்கப்புறம் சேதுதான் ரிப்போர்ட்டர்ஸ்ங்கக் கிட்ட பேசிட்டிருந்தார். நா மீட்டிங் முடிஞ்சதும் ஃபிலிப்ப தேடிக்கிட்டு போய்ட்டேன்.. அப்பத்தான் தெரிஞ்சது அவர் புறப்பட்டு போய்ட்டார்னு.. என்ன, டைரக்டர்ஸ்தான் தப்பா நெனச்சிருப்பாங்க.. அவங்கள அப்புறமாத்தான் டீல் பண்ணணும்..'

கனகா சலிப்புடன் தன் கணவரைப் பார்த்தாள். 'எதுக்குங்க? நீங்க போய் அவங்கக்கிட்ட சொல்றதால ஒன்னும் பெரிசா நடந்துரப்போறதில்ல.. போறும்.. நீங்க இனிமேலும் சம்பாதிச்சிதான் ஆவணுங்கறதில்ல.. பேசாம ரிசைன் பண்ணிட்டு வந்துருங்க.. ஊர்ல போயி செட்டிலாயிருவோம்.. நீங்க தர்மகர்த்தாவாருக்கற கோயில மேனேஜ் பண்ணிக்கிட்டு இருந்தா போறாதாக்கும்.. எதுக்கு கண்டவங்க கால்லயும் போயி விழணும் இந்த வயசுல?'

சுந்தரலிங்கம் யோசனையில் ஆழ்ந்தார். 'இவ சொல்றதுலயும் நியாயம் இருக்கத்தான் செய்யிது.. எதுக்கு நாம போய் மறுபடியும் அந்த குட்டையில விழுந்து... மாதவன் எப்படியும் திரும்பிவர கொஞ்ச நாள் ஆவும் போலருக்கு.. ஒருவேளை சேதுவ ஆக்டிங் சேர்மனா போட்டுட்டா அப்புறம் அங்க நீடிக்கறதுல எந்தவித அர்த்தமும் இல்ல.. ஃபிலிப் ஒரு பாவம்.. அவரும் ஒருவேளை வேலை வேணாம்னு விட்டுட்டு பொண்ணோட போயி செட்டிலாயிரலாம்னு டிசைட் பண்ணிட்டார்னா அப்புறம் நாம மட்டும் அங்கருந்து என்னத்த பண்றது? போறும்... விட்டுருவோம்...'

'என்னங்க.. யோசிக்கிறீங்க.. பேசாம ரிசிக்னேஷன் லெட்டர் எழுதி குடுத்துட்டு வந்துருங்க.. அதுக்குக் கூட நேரா போணும்னு இல்ல.. குரியர்ல அனுப்பிருவம்.. என்ன சொல்றீங்க?'

சுந்தரலிங்கம் பதிலளிக்காமல் எழுந்து நின்றார். 'சரி பார்ப்பம்.. நீ போய் முடிஞ்சா பலார வேலைய பாரு.. நா குளிச்சிட்டு வரேன்.. அந்த பேப்பர என் ப்ரீஃப் கேஸ்ல வை..'

குளியலறையை நோக்கி சென்ற தன் கணவனையே சிறிது நேரம் பார்த்தவாறு அமர்ந்திருந்த கனகா மெள்ள எழுந்து நாளிதழை அவருடைய கைப்பெட்டியில் வைத்துவிட்டு சமையலறையை நோக்கி நடந்தாள்.

********

'என்ன டாட்.. என்னதான் போட்டுருக்கு? ரொம்ப கோபமாருக்கா மாதிரி தெரியுது?' என்றவாறு தன் தந்தையைப் பார்த்தாள் பூர்ணிமா.

சோமசுந்தரம் பதில் பேசாமல் தன் கையிலிருந்த ஆங்கில நாளிதழை அவளிடம் கொடுத்தார். 'என்ன அக்கிரம் பாரு. ஒரு சீனியர் எக்ஸ்யூட்டிவ் பேசறா மாதிரியா பேசியிருக்கார் அந்த சுந்தரலிங்கம்? It's really a shame.. அவர் இப்படி பேசுவார்னு நா கனவுலயும் நினைக்கல.. அந்த சேதுதான் இப்படின்னு பார்த்தா இவருமா? என்னால நம்பவே முடியல.'

பூர்ணிமா பதிலளிக்காமல் செய்தித்தாளைப் படிப்பதில் மும்முரமானாள்...

'-----------Bank's CGM Mr.Sudaralingam replied that there was nothing wrong in engaging private recovery agents to recover bad debts. He said that there were some industrialists who believed that they could hoodwink the Bank by citing imaginary losses in their business. He said that the Bank would not hesitate to use strong arm methods to recover its dues from such borrowers in future....'

'.... to another question Mr.Sundaralingam, who was till recently the acting chairman of the Bank said that the incumbent Chairman had already taken a decision not to take part in Govt sponsored schemes, especially those sponsored by the State Government, as the Government Agencies had not extended any support in recovery of such loans in the past.'

' He declared that the Board had already accepted the resignation of Dr.Somasundaram, one of its senior directors, as the Board felt that his continued presence in the Board might tarnish the image of the Bank..'

பூர்ணிமா மேலே படிக்க விரும்பாமல் நாளிதழை டீப்பாயில் எறிந்தாள். 'என்னப்பா இது.. இவரையா ஆக்டிங் சேர்மனா போட்டிருந்தீங்க.. இவ்வளவு இம்மெச்சூர்டா இருக்கார்.. ஒங்களப்பத்தி சொன்னது போட்டும்.. ஆனா அதெப்படி டெட்ச ரிக்கவர் பண்றதுக்கு ஸ்ட்ராங் மெத்தட்ச யூஸ் பண்ணுவோம்னு சொல்றது? அதுவும் ரீசெண்டா வந்த சுப்ரீம் கோர்ட் ஜட்ஜ்மெண்டுக்குப்புறமும்? போறாததுக்கு கவர்ன்மெண்ட் ஸ்பான்சர்ட் லெண்டிங் பண்ணமாட்டோம்னு வேற சொல்லியிருக்கார். அதுவும் பப்ளிக்கா.. சேச்சே... இந்த மாதிரி எக்ஸ்யூட்டிவ்ஸ் இருக்கற பேங்க் போர்ட்லயா என்ன இருக்க சொல்றீங்க.. ஃபர்ஸ்ட் டேவே இந்த மாதிரி எக்ஸ்க்யூட்டிவ்ஸ்கிட்டருந்து ரிசிக்னேஷன் வாங்கிட்டுத்தான் மறுவேல பாப்பேன்.. They just don't deserve to be in their position.'

சோமசுந்தரம் புன்னகையுடன் தன் மகளைப் பார்த்தார். 'இப்ப தெரியுதா டாடி எவ்வளவு கஷ்டப்பட்டுருக்கேன்னு...' என்றவர் மீண்டும் யோசனையில் ஆழ்ந்தார். 'ஆனா எனக்கென்னவோ இப்பவும் டவுட்டாத்தான் இருக்கு.. இது நிச்சயமா சுந்தரலிங்கம் சொல்லியிருப்பாரான்னு.. அதுவும் இந்த மாதிரி ப்ரெஸ் மீட்ல...We all know him for several years.. He is known for simplicity.. He never talks much.. I just can't believe that he could have made such bold and irresponsible statements... I very much doubt it...'

பூர்ணிமா கோபத்துடன் தன் தந்தையைப் பார்த்தாள். 'என்னப்பா சொல்றீங்க? அதான் ப்ளாக் அண்ட் வய்ட்ல இருக்கே.. பேப்பர்ல.. இதுக்கு மேல என்ன வேணும்? He simply has to go... இன்னைக்கி எம்.சி மீட்டிங்ல இதப்பத்தியும் பேசறதாருந்தா நா வரேன்.. இல்லன்னா நீங்க மட்டும் போங்க..'

'ஏய்.. ஏய்.. Don't get excited.. பேசலாம்... இந்த விஷயம் நாடாருக்கு மட்டும் தெரிஞ்சிது... நல்லவேளையா மனுசனுக்கு தமிழத்தவிர வேற ஒன்னும் தெரியாது... இது தமிழ் பேப்பர்ல வந்துருக்காதுன்னு நினைக்கேன்.. தினமணி போட்டா உண்டு... பாப்பம்... நீ போய் குளிச்சிட்டு ரெடியாவு.. போற வழியில பேசலாம்.. நா குளிச்சிட்டு வரேன்...'

தொடரும்..

2 comments:

siva gnanamji(#18100882083107547329) said...

சொ.செ.சூ வைத்துக் கொண்டார் சேது

தனவேல்சாமி துணை புரிவார்

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க ஜி!

சொ.செ.சூ வைத்துக் கொண்டார் சேது

தனவேல்சாமி துணை புரிவார் //

இது சூவா இல்ல ஆவா?

எப்படியோ.. அவர் மாட்டிக்கிட்டா சரி..