அந்த நேரத்திலும் தாம்பரம் பேருந்து நிலையம் பரபரப்புடன் இருந்தது.. தன் முன்னே நின்ற கூலிப்படை தலைவனையும் சற்று தள்ளி நின்றிருந்த அவனுடைய சகாக்களையும் பார்த்தார் ரத்தினவேலு. நல்லவேளையாக எவனும் தன்னையும் இந்த கும்பலையும் சேர்த்து பார்த்து நினைவில் வைத்துக்கொள்ள வாய்ப்பில்லை என்று நினைத்தார். 'எலேய் ஏளுமல.. நா ச்சொன்னது பூராவும் வெளங்கிருச்சில்ல... பெறவு நான் போனதும் எதையாச்சும் செஞ்சி கொளப்பிர மாட்டீயளே...?'
'மாட்டம்யா.. அதான் நீங்க வண்டி நம்பர கொடுத்திட்டியளே... வீட்டு வெலாசமும் இருக்கு... பெறவென்ன.. எனக்குந்தான் அந்த அய்யாவ தெரியும்லே.. நா பாத்துக்கிடறேன்.. நீங்க மவராசனா போய்ட்டு வாங்க.. முடிச்சிப் போட்டுட்டு ஃபோன் போடறேன்..' என்றான்.
ரத்தினவேலு திடுக்கிட்டு அவனைப் பார்த்தார். 'எலேய்.. இதுலயே கொளப்பமா? நா இத்தன நேரம் என்னத்த சொன்னேன், நீ என்ன பேசற? நா நேத்து ஒங்கிட்ட குடுத்த போன் நம்பர எங்கனயாச்சும் எளுதி வச்சிருக்கியால்லே... இருந்தா கிளிச்சி போட்டுரு.. இனி போன் ஒன்னும் போடவேணாம். வேலைய முடிச்சதும் ஒங்கூட வந்த ஆளுங்கள அங்கனருந்தே அவனவன் ஊருக்கு அனுப்பிச்சிட்டு நீயும் கெளம்பி ஊர் போய் சேந்துரு.. நா ரெண்டு நா கழிச்சி ஊர் வந்து சேந்துருவேன்.. அங்க வச்சி பாத்துக்குவம்.. நீம்பாட்டுக்கு எனக்கு போன் போடறேன்னு போயி வம்புல மாட்டி விட்டுறாதல்லே.. என்ன வெளங்குதா.. இந்தா இத இப்பத்தைக்கி வச்சிக்க.. பெறவு வேல முடிஞ்சதும் பாத்துக்குவம்...' கையோடு கொண்டு வந்திருந்த மஞ்சள் நிற பையை அவன் கையில் திணித்துவிட்டு மீண்டும் சாலையைக் கடந்து ரயில் நிலையத்திற்குள் நுழைந்து கண்ணிமைக்கும் நேரத்தில் கூட்டத்தோடு கூட்டமாய் கலந்து கரைந்துபோக உதட்டை சுளித்துக்கொண்டு தன் சகாக்களை நோக்கி நடந்தான் ஏழுமலை கையிலிருந்த விலாசத்தைப் படித்தவாறு...
*****
வரவேற்பறையிலிருந்த சோபாவில் அமர்ந்து அன்றைய செய்தித்தாளை வாசித்துக்கொண்டிருந்த நளினி திரும்பி தனக்கருகில் அமர்ந்திருந்த நந்தக்குமாரைப் பார்த்தாள். 'நந்து இவ்விட நோக்கு.' என்றாள் அதிர்ச்சியுடன்..
நந்தக்குமார் அவள் காட்டிய செய்தியையும் அருகிலிருந்த புகைப்படங்களையும் பார்த்தான். 'எந்தான.. என்ன போட்டுருக்கு... நம்ம மாதவன் சார் ஃபோட்டாவா இது?'
'அதில்ல நந்து... நம்ம சுந்தரலிங்கம் சார் சொன்னத படிச்சி பாரேன்... நிச்சயமா இது பிரச்சினையிலதான் போய் முடியப் போவுது.. என்னல்லாம் சொல்லியிருக்கார் பார்..' செய்தித்தாளை நந்துவிடம் நீட்டியவள் திரும்பி வந்தனாவின் படுக்கையறையைப் பார்த்தாள். நல்லவேளையாக அது மூடியிருந்தது.
செய்தியை வாசித்து முடித்த நந்தக்குமார் நளினியை பார்த்தான். 'எதுக்கு நம்ம சிஜிஎம் திடீர்னு இப்படியொரு இண்டர்வ்யூ குடுத்துருக்கார். அதுவும் ரிக்கவரி விஷயத்துல சுப்ரீம் கோர்ட் ஜட்ஜ்மெண்ட் வந்துருக்கற சமயத்துல இது தேவைதானா? எனக்கென்னவோ இது நம்ம ஈ.டியோட வேலையாத்தான் இருக்கும்னு தோனுது..' என்றவன் சட்டென்று திரும்பி வந்தனாவின் படுக்கையறையைப் பார்த்தான். 'ஏய்.. இது நம்ம மேடத்துக்கு தெரிய வேணாம்...' என்றான் குரலை இறக்கி.
'அதெல்லாம் நா பாத்துக்கறேன்.. டாக்டர் சொல்லியிருக்கறதால மாதிரி மேடம் இப்பல்லாம் நியூஸ் பேப்பரப்பத்தி கேக்கறதில்ல.. ஆனா எத்தன நாளைக்கி இது முடியும்?' என்ற நளினி நந்துவை நெருங்கி, 'நந்து நம்ம மாணிக்கம் சாரப் பத்தி ஏதும் நியூஸ்ல வரலையே.. கொலை கேசுன்னா பேப்பர்ல வராம இருக்குமா என்ன?' என்றாள்.
நந்து தோள்களைக் குலுக்கியவாறு எழுந்து நின்றான். 'அதெல்லாம் லோக்கல் பேப்பர்லதான் வரும்.. ஹிண்டுலல்லாம் வராது.. நா ஒன்னு பண்றேன்... குளிச்சிட்டு யூனியன் ஆஃபீஸ் வரைக்கும் போய்ட்டு வரேன்.. முரளிய பாத்து பேசிட்டு வரேன்.. அப்படியே பல்லாவரம் ப்ராஞ்ச் ஜோவையும் பாத்துட்டு வரேன்.. அப்பத்தான் ரெண்டு விஷயமும் தெரியும்...'
நளினியும் எழுந்து நின்றாள். 'இதான் சாக்குன்னு முரளி ஆஃபீஸ்ல போயி ஒக்காந்துராதீங்க.. அப்புறம் நா இங்க டென்ஷன்ல எதையாவது மேடத்துக்கிட்ட ஒளறிருவேன்.. போய் குளிச்சிட்டு வாங்க.. டிஃபன் பண்ணி வைக்கறேன்.. மேடம் வெளியில வர்றதுக்குள்ள நீங்க கெளம்பி போனாத்தான் நல்லது. இல்லன்னா தேவையில்லாம அவங்கக்கிட்ட பொய் சொல்லணும்..'
'சரி... சரி... அஞ்சே மினிட்டு.. தான் ரெடியாக்கும் மும்பு வந்நேக்காம்..' என்றவாறு டவலுடன் நந்து குளியலறையை நோக்கி நகர நளினி சமையல்கட்டை நோக்கி விரைந்தாள்
****
புறப்பட தயாராகி வாசலை அடைந்த சிலுவை மாணிக்கம் நாடார் போர்ட்டிக்கோவில் கைகளை பிசைந்துக்கொண்டு நின்ற வாகன ஓட்டுனர் மந்திரசாமியைப் பார்த்தார்.
ஏதோ பிரச்சினை என்பது புரிந்தது. 'என்னலே கைய கட்டிக்கிட்டு நிக்கே.. வண்டி எங்க?'
'அய்யா அதுல கொஞ்சம் பிரச்சினைய்யா' என்றான் மந்திரசாமி தரையை பார்த்தவாறு.
'அதான் ஒம் மூஞ்சிய பாத்தால தெரியுதே... என்ன பிரச்சினை.. அதச் சொல்லு...'
'ஸ்டார்ட் ஆக மாட்டேங்குதுய்யா.. நம்ம ஒர்க் ஷாப்புக்கு போன் போட்டுருக்கேன்.. நம்ம வண்டிய பாக்கற மெக்கானிக் வந்ததும் அனுப்பறேன்னு....'
'நாசமா போச்சு..' என்று எரிந்து விழுந்த நாடார் தன் எதிரில் நின்ற ஓட்டுனரை எரித்துவிடுவதுபோல் பார்த்தார். 'ஏம்லே ஒங்கிட்ட எத்தன தரம் படிச்சு, படிச்சு சொல்லிருக்கேன்... இந்த மாதிரி கடைசி நேரத்துல வந்து கைய பிசைஞ்சிக்கிட்டு நிக்காதேன்னு... கூறுகெட்ட பய... சரில்லே.. வேற ஏதாச்சும் ஏற்பாடு செஞ்சிருக்கியா இல்ல... நா பொடிநடையா போக வேண்டியதுதானா?'
சட்டென்று பிரகாசமான மந்திரசாமி, 'நம்ம டிராவல்ச கூப்ட்டு சொல்லிட்டன்யா.. இன்னும் அஞ்சே நிமிசத்துல வண்டி வந்துரும்.. நீங்க போனதும் நா வண்டிய சரிப்பண்ணி ராசக்காவ கூட்டிக்கிட்டு வந்துடறேன்..' என்றான்..
இவனை என்ன செய்தால் தகும் என்ற யோசனையுடன் பார்த்த நாடார் இருந்தாலும் பய புத்திசாலித்தனமா வேறொரு வண்டிய ஏற்பாடு பண்ணிட்டானே.. விட்டுருவோம்.. காலைல இவன்கிட்ட டென்ஷனடிச்சி என்ன செய்யிறது?
முதலாளியின் முகத்தில் தெரிந்த பாவனையை வைத்தே அவருடைய மனநிலையை கண்டுகொள்வதில் சமர்த்தன் மந்திரசாமி.. அப்பாடா இப்போதைக்கு தப்பிச்சோம் என்ற நிம்மதியுடன் வீட்டின் பின்புறத்தை நோக்கி மெள்ள நகர்ந்தான்.
'தொற அங்க எங்கிட்டு போறாப்பல?' என்ற நாடாரின் குரல் கேட்டு திரும்பியவன் என்னடாயிது பழுவடியும் முருங்கை மரம் ஏர்றாப்பல இருக்கே என்று நினைத்தான்..
'இல்லய்யா... என்னால ஏதும் ச்செய்ய முடியுதான்னு...'
நாடார் கேலியுடன் சிரித்தார். 'எது? நீ... எலேய் இந்த சிலுவைக்கே பூ சுத்தறியாலே... ஒன்னெ எனக்கு தெரியாது? வண்டிக்கு பெட்ரோல் போடறத தவிர வேற என்னம்லே தெரியும் ஒனக்கு? விட்டாப் போறும்னு ஓடப்பாக்க.. அதானலே?'
இந்த மனுசனுக்கு ஒடம்பெல்லாம் மூள போலருக்கு... இப்ப என்ன சொன்னாலும் அடி விழும்... பேசாம நிப்போம்.. என்று மனதுக்குள் நினைத்தவாறு நின்ற இடத்திலேயே நின்றான்...
அவனுடைய நல்ல நேரம் டிராவல்சிலிருந்து கார் வந்து வாசலில் நிற்க பரபரப்புடன் கேட்டைத் திறந்து 'சீக்கிரம் உள்ள வாரும்யா... எத்தன நேரந்தான் அய்யா காத்துக் கிடப்பாக?' என்றான் உரக்க போர்ட்டிக்கோவில் நின்ற நாடாருக்கு கேட்க வேண்டுமே என்பதற்காக.
'எலேய்.. ரொம்பத்தான் டிராமா போடாத... போயி ராசிய கூப்டு... ஒம் மூஞ்சில முளிச்சிட்டு போனா போற காரியம் உருப்பட்டாப்பலதான்..'
'இதோ போய்ட்டேன்யா.' என்றவாறு போர்ட்டிக்கோவுக்குள் நுழையாமல் வீட்டைச் சுற்றிக்கொண்டு பின்வாசல் வழியாக ஹாலுக்குள் நுழைந்து சமையலறையில் தன் தாயுடன் நின்றிருந்த ராசம்மாளை நெருங்கினான். 'அக்கா அய்யா கூப்பிடறாங்க.'
'என்ன கார் ரிப்பேர் விசயத்த சொல்லிட்டியா?' என்றவாறு ராசம்மாள் கையிலிருந்த பாத்திரத்தை மேடையில் வைத்துவிட்டு அவனை பிந்தொடர்ந்து போர்ட்டிக்கோவில் நின்றிருந்த தன் தந்தையை நெருங்கினாள். 'நாந்தாம்பா ஒங்களுக்கு வேற கார ஏற்பாடு பண்ண சொன்னேன்.. நீங்க போங்க.. நா நம்ம கார் ரெடியானதும் அதுல ஆஃபீஸ் போய்க்கறேன்.. அதுக்கு முன்னால எனக்கு நம்ம வக்கீல் அங்கிள் ஆஃபீஸ் வரைக்கும் போணும்..'
நாடார் திரும்பி மந்திரசாமியைப் பார்த்தார். 'எலேய் என்னமோ நீதான் டிராவல்ஸ் காருக்கு ஏற்பாடு செஞ்சா மாதிரி சொன்னே... அதான என்னடான்னு பார்த்தேன்.. நம்ம மந்திரம் வெளங்கிருவான் போலருக்கேன்னு... சரி.. சரி.. கார் ரெடியானதும் ராசிய கொண்டு விட்டுட்டு எனக்கு ஃபோன் போடு.. எனக்கு இன்னைக்கி நெறைய எடம் போக வேண்டியிருக்கு... நம்ம வண்டியில போறா மாதிரி வராதுல்லே... என்ன வெளங்குதா?' மந்திரசாமி தலையை அசைக்க, 'என்னத்த வெளங்கிச்சோ போ... சொல்றப்ப மண்டைய மண்டைய ஆட்டு.. அப்புறம் கோட்டைய விட்டுட்டு நில்லு... இதே பொளப்பா போச்சிது ஒனக்கு..' என்றவர் தன் மகளைப் பார்த்தார். 'நீ நம்ம ஆஃபீசுக்கு போய் எறங்குனதும் வண்டிய நம்ம டாக்டரோட பங்களாவுக்கு அனுப்பிரும்மா... ஒனக்கு வேணும்னா டிராவல்சுக்கு போன் போட்டு வேற வண்டிய வரவச்சிக்கிரு, என்ன?'
'சரிப்பா.. நா பாத்துக்கறேன்.. நீங்க போங்க..'
நாடார் ஏறிக்கொள்ள வாகனம் ரிவர்ஸ் எடுத்து கேட்டைத் தாண்டி சாலையில் இறங்கியது...
அவர் வாகனம் தெருமுனையைக் கடந்து ஈ.சி.ஆர். சாலையை நோக்கி விரைய ஏழுமலை மற்றும் அவனுடைய சகாக்களை தாங்கிய ஆட்டோ இரண்டும் அவர் குடியிருந்த சாலைக்குள் நுழைந்தன.. 'இந்த ரோடுதாங்க.. வீட்டு நம்பர சொல்லுங்க..'
ஏழுமலையின் சகாக்களுள் ஒருவன் அவனைப் பார்த்தான். 'வேணாம்யா இங்கனயே எறக்கிருங்க.. நாங்க பாத்து போய்க்கறோம்.' என்றவாறு இறங்கிய ஏழுமலையை தொடர்ந்து சகாக்கள் நால்வரும் இறங்கிக்கொள்ள 'இவனுங்கள பாக்கற பார்வையே சரியில்லையே' என்ற எண்ணத்துடன் மீண்டும் ஒருமுறை ஐவரையும் பார்த்தார் ஆட்டோ ஓட்டுனர்களுள் ஒருவர். 'என்னடே... இவனுங்கள பாத்தா.. ஏதோ வில்லங்கம் புடிச்ச பயலுவ மாதிரி தெரியல?' என்றான் தன் சகாவிடம். 'என்னமும் செஞ்சிட்டு போட்டும்.. நமக்கென்ன வந்தது.. கேட்டதுக்கு மேலயே குடுத்துட்டானுவ போய்க்கிட்டேயிருப்போம்..வா..'
தொடரும்...
2 comments:
இன்று போனஸ்
செவ்வாய் சூரியன்
ஆச்சரியம்
நன்றி
கார் மாறிடுச்ச்சு........
வாங்க ஜி!
இந்த வாரம் வெள்ளி, சனி ஊரில் இருக்கமாட்டேன்... அதான்.. :))
Post a Comment