11.4.07

சூரியன் 191

தன்னுடைய அறையிலிருந்து வெளியேறியதுமே ஹாலில் அமர்ந்திருந்த பெற்றோர் இருவரும் தன்னுடைய முகத்தை கூர்ந்து பார்த்ததை உணர்ந்த மைதிலி தன்னுடைய நாடகத்தை அரங்கேற்ற துவங்கினாள். 'எதுக்கு ரெண்டு பேரும் எம் மொகத்த பாக்கறேள்? நேத்து அப்பா செஞ்ச காரியத்துல நேக்கு கொஞ்சம் வருத்தம்தான். ஆனா ராத்திரி ரொம்ப நேரம் யோசிச்சி பாத்தேன். அப்பா நினைக்கறதுல தப்பில்லன்னு தோனிச்சி. அதுக்கப்புறம்தான் நிம்மதியா தூங்கினேன்.. அதான் எழுந்துக்க லேட்டாயிருச்சி..'

பட்டாபி குழப்பத்துடன் தன் மனைவியைப் பார்த்தார். 'என்னடி சொல்றா இவ?' என்பதுபோல்.

அதை கவனியாதவள் போல் கையில் துவாலையுடன் குளியலறையை நோக்கி நகர்ந்தாள் மைதிலி. போகிற போக்கில், 'அம்மா நா பல் தேய்ச்சி குளிச்சிட்டு வர்றதுக்குள்ள டிபனும் காபியும் ரெடி பண்ணிரு. மதிய சாப்பாட்ட வெளில பாத்துக்கறேன்.. இன்னைக்கி லஞ்ச் நேரத்துல ஆஃபீஸ்ல இருப்பனான்னு தெரியலை' என்றாள்.

அவள் குளியலறைக்குள் சென்று மறைந்ததும். 'என்னடி இது நாம ஒன்னு நினைச்சா.. இவ ஒன்னுமே நடக்காத மாதிரி பேசறா? ஏதாச்சும் டிராமா பண்றாளோ?' என்றார் பட்டாபி.

ஜானகி முகத்தை நொடித்தவாறு எழுந்து நின்றாள். 'ஒங்கக்கிட்டா இதான்னா ரோதனை. நீங்களா எதையாச்சும் நினைச்சுக்க வேண்டியது. அப்புறம் அவள டிராமா போடறான்னு சொல்ல வேண்டியது. நேக்கென்னவோ அவோ நம்மள புரிஞ்சுண்டான்னுதான் தோன்றது. நீங்க மேக்கொண்டு எதையாச்சும் சொல்லி பிரச்சினை பண்ணாதேள்.. நா அவளுக்கு வேண்டியத செய்யணும்..' என்றவாறு சமையலறையை நோக்கி நகர்ந்தவள் நின்று, 'நீங்க போயி செத்த பாலத்துக்கடியிலருக்கற கடையிலருந்து ரெண்டு கொத்தமல்லி கட்டு மட்டும் வாங்கிணுடு வாங்கோ. போங்கோ..' என்றாள்.

பட்டாபி அப்போதும் நம்பிக்கையில்லாமல் மைதிலியின் குளியலறையையே பார்த்தவாறு அமர்ந்திருக்க ஜானகி தங்களுடைய அறையிலிருந்த அவருடைய மேல் சட்டையை கொண்டு வந்து அவர் கையில் திணித்தாள். 'மசமசன்னு ஒக்காந்துருக்காம போய்ட்டு வாங்கோ.. அவசரமில்லை... மைதிலி ஆஃபீஸ் போற நேரத்துல நீங்க மறுபடியும் ஏதாவது பிரச்சினை பண்ண வேணாமேன்னுதான் ஒங்கள வெளில அனுப்பறேன்.. சாவகாசமாவே வாங்கோ..'

'ஹூம்.. எப்படியோ போங்கோ.. நேக்கென்னவோ...' என்று இழுத்தவாறு பட்டாபி குளியலறையை மீண்டும் பார்த்தார். 'மைதிலி நா வெளில போறேன்.. நீ சாயந்தரம் சீக்கிரமா வந்துரு.. ஒங்கிட்ட இன்னம் கொஞ்சம் பேச வேண்டியிருக்கு.' என்றார் உரக்க..

அடுத்த நொடியே உற்சாகத்துடன் பதில் வந்தது. 'சரிப்பா.. ஆறு மணிக்குள்ள ஆத்துல இருப்பேன்.. போறுமா?'

'பாத்தேளா.. நா சொல்லலை.. நீங்க நிம்மதியா போய்ட்டு வாங்கோ...' என்ற ஜானகியை முறைத்தார் பட்டாபி. அவருக்கு மைதிலியின் நடத்தையில் நம்பிக்கை வரவில்லையென்பது அவருடைய முகத்தில் தெளிவாகவே தெரிந்தது. இருந்தும் வேறு வழியில்லாமல் ஒரு நீண்ட பெருமூச்சுடன், 'ஈஸ்வரா நீதாம்பா பொறுப்பு...' என்ற முனுமுனுப்புடன் சட்டையை தலைவழியாய் அணிந்துக்கொண்டு வாசலை நோக்கி நடந்தார்.

****

'என்ன பூர்ணி.. ரெடியா.. shall we go?' என்றவாறு தன்னை நோக்கி வந்த மகளைப் பார்த்தார் மருத்துவர் சோமசுந்தரம். அவரையுமறியாமல் தன் மனைவியை அப்படியே உரித்து வைத்திருந்த மகளைப் பார்த்து அதிசயித்தார்.

அவருடைய பார்வையிலிருந்த வியப்பை கண்டுகொண்ட பூர்ணிமா, 'என்ன டாட்.. என்ன ஒருமாதிரி பாக்கீங்க? என்னடா பேண்ட், சர்ட்லருந்து சாரிக்கு மாறிட்டாளேன்னா?'

'அதுவுந்தான்.. என்ன திடீர்னு?' என்றார் சோமசுந்தரம் புன்னகையுடன்.. இதுவும் நல்லதுக்குத்தான் என்றது அவருடைய மனது. She looks more matured... சவுத் இந்தியாவுல இருக்கற டாப் பேங்க் ஒன்னுல போர்ட் மெம்பர்னா சும்மாவா?

'நீங்கதான டாட் சொன்னீங்க... போர்ட் மெம்பர் பொசிஷன் அவ்வளவு சீப்பானதில்லன்னு... அதான் ஒரு கெத்தா இருக்கட்டுமேன்னு... how do I look? Do I look like a honourable member of the Board?' என்றாள் சிரித்தவாறு.

சோமசுந்தரமும் அவளுடைய சிரிப்பில் கலந்துக்கொண்டார். 'Yes Madam.' என்றார் கேலியுடன்.. 'Shall we go? கீழ என் ரூமுக்கு ப்ரேக்ஃபாஸ்ட் கொண்டு வரச் சொல்லிருக்கேன். டோஸ்ட்டும் காப்பி மட்டுந்தான்... சாப்ட்டு கெளம்புனா சரியாருக்கும்.'

'Yes Dad..' என்றவாறு பூர்ணிமா முன்னால் செல்ல சோமசுந்தரம் தொடர்ந்தார். 'பூர்ணி ஒன்னு கேக்க மறந்துட்டேன்.. நம்ம டாக்டர்ஸ் மும்பை கெளம்பி போயிருப்பாங்க இல்ல?'

'ஆமா டாட்...நேத்து ராத்திரியே ஃபோன் பண்ணி சொல்லிட்டேன்... காலைல 7.50க்கு ஒரு ஃப்ளைட் இருக்கு... They must have landed now.. ஆஸ்ப்பிட்டல் போயி Mrs.Madhavanஐ பாத்ததும் எனக்கு ஃபோன் பண்ண சொல்லியிருக்கேன்... Don't worry dad.. everything has been taken care of.'

'பூர்ணிமாவா கொக்கா... Most capable young woman executive அவார்ட நேஷனல் லெவல்ல வாங்கணும்னா சும்மாவா?' என்றார் சோமசுந்தரம் லேசான கேலியுடன்.

அவருடைய குரலில் தொனித்த கேலியை பொருட்படுத்தாமல் நடந்தாள் பூர்ணிமா. இதான் Male Chauvinismகறது.. அதென்ன women executive? அப்பாவும் ஆம்பளதான என்று நினைத்தாள்...

அடுத்த அரைமணியில் காலை சிற்றுண்டியை முடித்துக்கொண்டு இருவரும் வாகனத்தில் ஏற அது பரபரப்பாயிருந்த மருத்துவ வளாகத்தை கடந்து விரைந்தது.

*****

'என்னய்யா... இன்னும் எத்தன நேரமாவும்?' என்றார் நாடார் ஓட்டுனரைப் பார்த்து.

ஓட்டுனர் ரியர் வ்யூ கண்ணாடியில் தெரிந்த பிம்பத்தை ஒருமுறை பார்த்துவிட்டு, 'டிராஃபிக் இல்லன்னா அரை மணி நேரத்துல போயிரலாம்யா.. ஆனா இன்னைக்கி பார்த்து டிராஃபிக் கொஞ்சம் ஜாஸ்தியாவே இருக்கே.. எப்படியும் முக்கால் மணி நேரமாயிரும் போலருக்கு. கொஞ்சம் நெருக்கி புடிச்சா ஒரு அஞ்சி பத்து நிமிசம் கொறைக்கலாம்யா..' என்றார் தயக்கத்துடன்.. 'அய்யா கொஞ்சம் கோவக்காரரு.. நீம்பாட்டுக்கு எதையாச்சும் ஒளறி வச்சிராத.. கேட்ட கேள்விக்கு மட்டுந்தால் பதில் சொல்லணும்.. என்ன வெளங்குதா?' என்று எச்சரித்துத்தான் அனுப்பியிருந்தார் டிராவல்ஸ் முதலாளி..

நாடார் பதிலளிக்காமல் சிரித்தார். 'நெருக்கல்லாம் வேணாம் தம்பி.. அவசரமில்லாம பத்திரமா கொண்டுபோய் ச்சேத்துரு அது போறும்.. அதுக்குள்ள நானும் ரெண்டு மூனு போன் போட்டுக்கறேன்... .. நா பேசறதுல கவனத்த வைக்காம நீ சாலையா பாத்து ஓட்டு.'

'சரிய்யா..' என்றவாறு வாகன ஓட்டுனர் சாலையில் கவனத்தை செலுத்த முதலில் யாரை அழைக்கலாம் என்றவாறு தன்னுடைய செல்ஃபோனை நோட்டம் விடலானார் நாடார். 'மொதல்ல அந்த ஃபிலிப் ஐயா என்ன பண்றார்னு பாப்பம்.'

எதிர்முனையில் மணியடித்துக்கொண்டே இருந்தது. 'டிரைவ் செஞ்சிக்கிட்டு இருப்பாரோ.. இருக்காதே.. டிரைவர்பய இருப்பானே...' என்ற யோசனையில் ஆழ்ந்தார்.. அடுத்த நொடியே, ஒருவேள வேணுக்குன்னே எடுக்காம இருப்பாரோ... இருக்கும். 'எதுக்கு எடுத்து இந்த மனுசன் கிட்ட எதையாச்சும் சொல்லி பளுவடியும் திட்டு வாங்கணுமான்னு நினைச்சிருப்பார்... அதுவும் சரிதானய்யா... நம்ம வாயுந்தான் சும்மா இருக்காதே... பாவம் ஆஃபீசுக்கு போற நேரத்துல அவர எதுக்கு பாவம் டென்ஷனாக்கிக்கிட்டு... மீட்டிங் முடிஞ்சதும் கூப்டுவோம்...'

அடுத்து சோமசுந்தரத்தின் எண்ணை பார்த்தார். வேணாம்... மீட்டிங்குல பாத்துக்குவம். இல்லன்னா எதையாச்சும் சொல்லி நம்ம மூட கெடுத்துப் போட்ருவான்.. கூடவே அந்த பொண்ணும் வந்தாலும் வரும்... எதுக்கு அதுக்கு முன்னால... சரி.. வேற யாரு... ஆங்.. செட்டியார்... அவர கூப்டுவோம்.. மீட்டிங்ல வச்சி ஒன்னும் பேச முடியாமப் போயிரும்... அடுத்த நொடியே எண்ணைத் தேடிபிடித்து டயல் செய்ய அடித்தவுடனே எடுத்தார் செட்டியார் தன்னுடைய ட்ரேட் மார்க் சிரிப்புடன்... 'அண்ணாச்சி எப்படி இருக்கீங்க?'

'என்னவோ இருக்கம்யா.. .கடவுள் புண்ணியத்துல.. நீங்க எப்படி இருக்கீங்க.. கெளம்பியாச்சா இல்ல வீட்லதானா?'

எதிர்முனையிலிருந்த பெருத்த சிரிப்பு. இந்த சிரிப்ப விட்டா வேற எதுவுமே தெரியாதாய்யா என்று முனுமுனுத்தார் நாடார். 'சிரிப்புக்கு என்னய்யா அர்த்தம்.. வீட்லதான் இருக்கேன்னா?'

'இல்லண்ணாச்சி.. கார்லதான் வந்துக்கிட்டிருக்கேன்... என்னமோ சவுண்ட் ப்ரூஃப் ஏசியாம்லே, வச்சிருக்கு. அதான் வெளி சத்தம் ஒன்னும் கேக்க மாட்டேங்குது..'

நாடார் சிரித்தார். 'ஒமக்கென்னய்யா... விட்டா சிட்டிக்குள்ளயே ப்ளேன்ல போவீரு.. காசுதான் மழையா கொட்டுதில்ல...'

'நீங்க வேற அண்ணாச்சி... எல்லா நம்ம கையிலயா இருக்கு... முப்பது வருசத்துக்கு முன்னால கையில ஒரு ஓட்ட சைக்கிளோட வந்து எறங்குன ஊரு... அது கெடக்கட்டும்.. இன்னைக்கி காலைல ஹிந்து பேப்பர பாத்தீங்களாண்ணாச்சி?'

'ஹிந்துவா... அட நீங்க வேற. நமக்கு தினத்தந்திதான்...அது சரி நீங்க என்னையிலருந்து ஹிந்து படிக்க ஆரம்பிச்சீங்க செட்டியாரே?'

எதிர்முனையில் மீண்டும் வெடிச் சிரிப்பு.. செல்ஃபோனை எட்டிப்பிடித்தார். 'காது சவ்வே கிளிஞ்சிரும் போலருக்கய்யா... என்னமாத்தான் சிரிக்கீறு? சொல்லும்.. அப்படியென்ன போட்டுருக்கான்?' என்றவர் ஓசைபடாமல் ஒரு ஊசியை செருகினார் 'மருமகன் படிச்சு சொன்னாராக்கும்.' என்னைய மாதிரி கைநாட்டுதானய்யா நீரும்.. இது மனதுக்குள் நினைத்துக்கொண்டது..

அடுத்த சில நொடிகளில் எதிர்முனையிலிருந்து வந்த செய்தி அவருடைய முகத்தை மேலும் கருப்பாக்க.. 'அப்படியா சொல்லியிருக்கான் லிங்கம்..? பயல விடப்படாதுய்யா.. விடப்படாதுய்யா...' என்றார் கடுப்புடன்..

thodarum..

4 comments:

siva gnanamji(#18100882083107547329) said...

நின்று நிதானிக்கும் நாடார்
இன்று தடுமாறுகிறாரே.........

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க ஜி!

நின்று நிதானிக்கும் நாடார்
இன்று தடுமாறுகிறாரே......... //

ஆனைக்கும் அடிசறுக்குங்கறது இதுதான் போலருக்கு...

அருண்மொழி said...

முதல் பாகம் 200 பதிவுகள் என்று சொன்னதாக ஞாபகம். அதற்குள் எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு ஏற்படுமா?

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க அருண்மொழி,

முதல் பாகம் 200 பதிவுகள் என்று சொன்னதாக ஞாபகம். அதற்குள் எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு ஏற்படுமா? //

இன்னும் ஒன்பது எப்பிசோட் இருக்குல்லெ.. பார்ப்போம்... தீர்க்கக் கூடியதை தீர்ப்போம்.. நம்மால முடியலன்னா வேறென்ன செய்றது. அடுத்த பாகத்துல தீர்த்துருவோம்:))