26.4.07

சூரியன் 194

வீட்டிலிருந்து புறப்பட்டு செம்பூர் கார்டனை நெருங்கிய மைதிலி சாலையில் இடதுபுறத்திலிருந்த மருத்துவர் ராஜகோபாலனின் மருத்துவமனையைப் பார்த்தாள். This is where my life took a turn for the worse என்று நினைத்தாள். அவளையுமறியாமல் ராஜகோபாலனின் மீது கோபம் எழுந்தது. அவரை சந்தித்து சூடாக நாலு கேள்விகளைக் கேட்டாலென்ன என்று நினைத்தாள். அடுத்த நொடியே அவர மட்டும் சொல்லி என்ன பிரயோசனம்? என்ன என்று தோன்றியது. நேற்று மட்டும் தன்னை சீனியில் வீட்டின் முன்னிருந்து காரில் கடத்தி வரவில்லையென்றால் எப்படியாவது அவள் அவனை சந்தித்திருப்பாள்...

செம்பூர் கார்டன் சந்திப்பிலிருந்த போக்குவரத்து சிக்னல் சிகப்பிலிருந்து பச்சைக்கு மாறியும் அவள் பழைய நினைவுகளில் ஆழ்ந்திருக்க நாலாபுறமும் காத்திருந்த வாகனங்கள் அலறத் துவங்கின. திடுக்கிட்டு மீண்ட மைதிலி அவசர, அவசரமாய் வாகனத்தைக் கிளப்பிக்கொண்டு சிக்னலைக் கடந்து சயான் செல்லும் திசையில் திரும்பினாள்.

இப்ப என்ன செய்யலாம்னு ப்ளான்? என்றது உள்மனசு. மொதல்ல சீனிக்கி என்னாச்சின்னு கண்டுபிடிக்கணும். அதுக்கு என்ன வழி... அவன்கிட்ட செல்ஃபோன் இருக்காது. வீட்டுக்கு ஃபோன் பண்ணா ஒருவேளை சரோஜா ஆன்டியோ இல்ல அங்கிளோ எடுத்தா என்னன்னு பேசறது? இது எல்லாத்துக்கும் நீதாண்டிம்மா காரணம்னு சொல்லிட்டா?

இத்தனை குழப்பங்களுடன் மேலே செல்வதா அல்லது எங்காவது அமர்ந்து யோசிப்பதா என்று அவள் தடுமாறிக்கொண்டிருக்க அவளுடைய செல்பேசி ஒலித்தது. கழுத்திலிருந்து மாலையாய் தொங்கிக்கொண்டிருந்த செல்பேசியை எடுத்து யாரென விளங்காமல் 'ஹலோ' என்றாள் தயக்கத்துடன்...

'மைதிலி நாந்தா வத்ஸ்... எங்கருக்கே?'

'வத்சலா நீங்களா? Thankyou so much for calling me.. நா இப்ப சயான் போய்க்கிட்டிருக்கேன்...ஒன் செக்கண்ட்... வண்டிய பார்க் பண்ணிட்டு கூப்பிடறேன்..' உடனே சாலையோரத்தில் ஒதுங்க முடியாதபடி அவளுக்கு இடமும் வலமும் வாகனங்கள் பறந்துக்கொண்டிருந்தன. அவைகளை சமாளித்து இடது புறம் ஒதுங்கி வாகனத்தை நிறுத்தவே பத்து நிமிடங்களுக்கு மேல் எடுத்தது.

அதற்குள் பொறுமையிழந்து வத்ஸ்லா மீண்டும் அழைக்க, 'சாரி வத்ஸ்... இங்க பயங்கர டிராஃபிக்... நானும் சீனியப் பத்தித்தான் நினைச்சிக்கிட்டிருக்கேன்.. யார கூப்பிடறதுங்கறது தெரியாம தடுமாறிக்கிட்டிருக்கேன்... நல்லவேளையா ஒங்க ஃபோன் வந்துது..' என்றவள் சீனி எப்படியிருக்கான்... சொல்லுங்களேன்...' என்றாள் தொடர்ந்து படபடப்புடன்.

வத்சலா அடுத்த சில நொடிகளில் நடந்தவற்றையெல்லாம் மளமளவென்று கூறிமுடித்து மருத்துவமனையின் விலாசத்தையும் கூறினாள். இறுதியில், 'நீ ஒடனே இங்க பொறப்பட்டு வா மைதிலி... சீனி ஒன்னெ பாத்தே ஆகணும்னு டென்ஷன் பண்றான்... அம்மா இருக்கற நிலையில எனக்கு எப்படி அவனெ சமாளிக்கறதுன்னே தெரியல.. ஒடனே வாயேன் ப்ளீஸ்... Don't worry about Dad.. வச்சிடறேன்...' என்றவாறு இணைப்பைத் துண்டிக்க மலைத்துப் போய் சில நொடிகள் நடந்ததற்கு தானும் ஒரு முக்கிய காரணம்தானே என்ற குற்றவுணர்வு மேலோங்க சாலையென்றும் பாராமல் முகத்தை மூடிக்கொண்டு அழுதாள்...

செத்துக்கிடந்தாலும் கவலைப்படாமல் தன்வழியில் சென்றுக்கொண்டிருக்கும் மும்பைவாசிகள் மைதிலியின் அழுகையைப் பொருட்படுத்தாமல் அவரவர் வழியில் செல்ல அடுத்த சில நொடிகளில் சுதாரித்துக்கொண்டு வாகனத்தில் ஏறி அமர்ந்து வத்சலா சொன்ன மருத்துவமனையை நோக்கி விரைந்தாள்.

*******

தனபால்சாமி எஸ்.பியின் வாகனம் அலுவலகத்திற்குள் நுழைந்தால் காலை சரியாக ஒன்பது மணி என்று அர்த்தம்.

வாகனம் அவருடைய அலுவலக வாசலில் சென்று நின்றதும் இறங்கி மிடுக்குடன் அவர் முன்செல்ல அவருடைய வாகனத்தில் இருந்த பத்திரிகைகளையும் கோப்புகளையும் எடுத்துக்கொண்டு அவர் பின்னே ஓடினார் அவருடைய பிரத்தியேக காவலர். அய்யா நடக்கும் நடையிலிருந்தே அவர் எந்த மூடுல இருக்கார்னு சொல்லிருவேன் என்று தன்னுடைய நண்பர்களிடம் பெருமையடித்துக்கொள்ளும் அவருக்கு அன்று அய்யா படு டென்ஷனுடன் இருப்பது தெரிந்தது.

எல்லா இந்த பாளாப்போன பாம்ப் ப்ளாஸ்ட்தான் காரணம்.. எங்கயோ என்னமோ வெடிக்குதுன்னா ரெண்டாயிரம் மைலுக்கப்புறம் இருக்கற எங்கள ஏன்யா டென்ஷனாக்குறீங்க? இப்பப் பார் காலைல வந்து எறங்குனதுமே இவ்வளவு டென்ஷன்லா இருந்தார்னா.. இன்னும் போகப்போக என்ன ஆகுமோ தெரியலையே... இன்னிக்கி நம்ம கதி அதோகதிதான் போலருக்கு... யார் தலையெல்லாம் உருளப் போகுதோ...

தனபால்சாமி மேசையை சுற்றிக்கொண்டு சென்று இருக்கையில் அமர்ந்ததுமே தன் காவலரைப் பார்த்தார். தன்னுடைய உதவி அதிகாரியின் பெயரைக் குறிப்பிட்டு, 'மணி இருக்காரான்னு பார்யா. இருந்தா ஒடனெ வரச்சொல்லு... க்விக்.' என்றார். 'வந்துட்டார்யா... இதோ வரச் சொல்றேன்.' என்றவாறு சென்ற காவலர் அடுத்த சில நொடிகளில் திரும்பிவந்து, 'அய்யா அவர் இப்பத்தான் எங்கருந்தோ ஃபோன் வந்து ஜீப்ப எடுத்துக்கிட்டு போயிருக்காராம்... எங்கன்னு சொல்லலையாம்யா...' என்றவாறு தலைகுனிந்து நிற்க எரிந்து விழுந்தார் எஸ்.பி.

'என்னய்யா பண்றீங்க எல்லாரும்? அவர் எங்க போனாலும் கேக்கணும்னு சொல்லியிருக்கேனில்லே... அவர் அசிஸ்டெண்ட்ஸ் யாரும் இருக்காங்களா பார்...'

'இருக்காங்கய்யா.. ஆனா எஸ்.ஐ அய்யா போன் வந்ததுமே பரபரப்பா கெளம்பி போனாராம்யா.. அதான் டைப்பிஸ்ட் அம்மாவுக்கு கேக்கணும்னு தோனல... கேட்டா எங்க கோச்சிக்குவாரோன்னாருக்கும்...' என்றவர் எஸ்.பியின் முறைப்பதைப் பார்த்ததும் நிறுத்திக்கொண்டார்.. 'மன்னிச்சிருங்கய்யா..'

'எதுக்கெடுத்தாலும் இந்த ஒரு வார்த்தைய சொல்லிருங்க... போயி... வயர்லெஸ் இல்லன்னா செல் ஃபோன எடுத்துக்கிட்டு போயிருக்காரான்னு பாத்துட்டு அவர என்னெ ஒடனே கூப்பிடச் சொல்லுங்க... போங்க... அடுத்த அஞ்சு நிமிசத்துல அவர் ஃபோன் மட்டும் வரல.... இருக்கு ஒங்க எல்லாருக்கும்...'

போச்சிரா.. எங்கயோ இடி இடிச்சா எங்கயோ மழை பெய்யுங்கறா மாதிரி அந்த அய்யா செஞ்ச தப்புக்கு எனக்கு இடியா... என்னடா பொளப்பு இது என்று நொந்துக்கொண்டு காவலர் வெளியேற இருக்கையிலிருந்து எழுந்து அறையின் குறுக்கும் நெடுக்கும் நடந்தார் எஸ்.பி... அந்தாளு ஆஃபீசுக்கு கெளம்பறதுக்குள்ள போங்கன்னு படிச்சி படிச்சி சொல்லியிருந்தேனே.. ஒருவேளை அங்கதான் போயிருப்பாரோ... என்று நினைத்தவர் அடுத்த நொடியே முந்தைய நாள் அவர் கூறியதை நினைத்துப் பார்த்தார்... அதான் அந்த ஏரியா எஸ்.ஐய பாத்துக்க சொல்லலாம்னு சொன்னாரே...

மேசைமீதிருந்த அவருடைய செல்பேசி ஒலிப்பதைக் கேட்டதும் விரைந்துச் சென்று திரையைப் பார்த்தார். அவர்தான். எடுத்தவுடன் 'சொல்லுங்க... அந்த பேங்க் ஈ.டி கேஸ் என்னாச்சி..?' என்று உறுமினார்.

'சார்... அந்த விஷயத்த காலைலயே ஏரியா எஸ்.ஐகிட்ட சொல்லிட்டேன் சார்... சர்ச் வாரண்டையும் நம்ம ஆஃபீஸ் ஏட் வழியா குடுத்தனுப்பியாச்சி.. இன்னும் கொஞ்ச நேரத்துல அவர் அங்க போயிருவார்... நான் நீங்க வந்ததுமே சொல்லணும்னுதான் இருந்தேன்.. அதுக்குள்ள இங்க ஒரு லேபர் ப்ராப்ளம்... --------------- பேங்க் ஸ்டாஃப் யூனியன் லீடர யாரோ ரவுடிங்க இன்னைக்கி காலைல அடிச்சி காயப்படுத்திட்டாங்களாம்.. வொர்க்கர்ஸ் திடீர்னு அவங்க யூனியன் ஆஃபீஸ் முன்னால கூடி சாலை மறியல்ல எறங்கிட்டாங்க... கூட்டம் பெரிசா இருக்கு, யாராச்சும் போய் ஹெல்ப் பண்ணுங்கன்னு கமிஷனர் ஆஃபீஸ்லருந்து ஃபோன் வந்துது... அதான் ஒடனே கெளம்பி ஓடியாந்தேன்...'

தனபால்சாமிக்கு அவருடைய உதவியாளர் கூறிய வங்கியின் பெயரைக்கேட்டதும் எங்கோ பொறிதட்டியது... இதுக்கும் அந்தாளுக்கும் ஏதாச்சும் சம்பந்தம் இருக்குமோ... அப்படி மட்டும் இருந்தா சர்ச் பண்ணதோட நிக்காம.. உள்ளவே தூக்கி போட்டுரலாமே... 'அடிபட்ட ஆள் இப்ப எப்படி இருக்கானாம்... விசாரிச்சீங்களா?'

'இல்ல சார்.. நா இப்பத்தான் வந்து சேர்ந்தேன்.. ஆளாளுக்கு ஒன்னு சொல்லிக்கிட்டிருக்காங்க... விசாரிச்சிட்டு இன்னும் அஞ்சே நிமிசத்துல ஒங்கள கூப்பிடறேன் சார்..' என்றவாறு இணைப்பைத் துண்டிக்க எஸ்.பி... 'யூஸ்லெஸ் ஆளுங்க.. எத விசாரிக்கணுமோ அத விசாரிக்க மாட்டானுங்க...' என்றவர் அறையில் தன்னுடைய காவலர் நிற்பதை அப்போதுதான் கவனித்தார். 'என்னய்யா.. ஒட்டு கேக்கறீயா? தொலச்சிருவேன்... ஃபோன் பேசறப்போ ரூமுக்குள்ள வாரதன்னு எத்தன தரம் சொல்லிருக்கேன்... போ... போய் சூடா ஒரு காப்பி வாங்கிட்டு வா... ஒடு....' என்று விரட்ட... பதறியடித்தவாறு ஓடிய காவலரைப் பார்த்தவாறு நின்றிருந்தார்..

தொடரும்..

2 comments:

siva gnanamji(#18100882083107547329) said...

ரெஷன்ல நிறையப் போடப்போறோம்னு அரசு சொல்லுது..

நீங்க இன்னைய கோட்டாவையே
குறைச்சிட்டீங்க

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க ஜி!

ரெஷன்ல நிறையப் போடப்போறோம்னு அரசு சொல்லுது..
//

ஆனா அது புளுத்துப் போன அரிசியாமே.. 'அம்மா' செல்றாங்களே.

நீங்க இன்னைய கோட்டாவையே
குறைச்சிட்டீங்க //

சாதாரணமா வேர்ட்ல நாலு பேஜ்தான் நம்ம கோட்டா.. இன்னைக்கிம் அப்படித்தான்..

எப்பிசோட் கொஞ்சம் ஃபாஸ்டா போறதால அப்படித் தோணுதோ:))))