பத்மா ஆச்சரியத்துடன் தன் மகளையே பார்த்தாள். பாரேன். இந்த காலத்து குட்டிகள! நமக்கெல்லாம் அந்த காலத்துல இது வந்தப்போ பயந்து, நடுங்கி, வெளியில வரதுக்கே வெக்கப்பட்டுகிட்டு.. இதுங்க என்னடான்னா.. கேர்ஃப்ரீ, வேர்ஃப்ரீன்னுக்கிட்டு.. ஊம் காலம் கெட்டுக்கிடக்குடா சாமி.. சரி, சரி. இவ சொல்றதும் சரிதான். பார்வதி வரட்டும்..
‘சரிடி, அவ வரட்டும். வாங்கி வரச்சொல்றன். நீ முதல்ல போய் மூலைல உக்கார். நீ பேசிக்கிட்டிருந்தேன்னா எனக்கு வேலை ஓடாது.’
மீனா சலித்துக்கொண்டே போய் உட்கார பத்மா அடுக்களைக்குள் நுழைந்து அடுப்பை மூட்டி வேலையை ரம்பித்தாள்.
**
மாலை அலுவலகத்திலிருந்து சற்று முன்னதாகவே வந்த மதன் குளித்து முடித்து பிள்ளைகளுடைய படுக்கையறைக்குள் நுழைந்தான். மீனா அதே இடத்தில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்ததைக் கண்டான். அருகில் சென்று தரையில் அமர்ந்தான். ‘ஏம்மா இங்கேயே உக்காந்துக்கிட்டிருக்கே.. அம்மா எங்கே?’
‘அம்மா கடைக்கு போயிருக்காங்கப்பா. தாத்தாவும் அம்மேவும் மாமாகூட நாளைக்கு வராங்களாம். அதான் சமையல் பண்றதுக்கு ஒன்னுமே இல்லை. நா போயிட்டு வாங்கிட்டு வந்திடறேன்னுட்டு போயிருக்காங்கப்பா.’
எதுக்கு இப்ப அவ ஊருக்கு ஃபோன் பண்ணா? காலைல படிச்சி, படிச்சி சொல்லியும் நான் சொன்னத கேக்காம ஊருக்கு ஃபோன் பண்ணி சொல்லி.. அவங்க புறப்பட்டு வந்து.. என்ன பண்றது இவள? மதன் கஷ்டப்பட்டு கோபத்தை அடக்கிக்கொண்டு மீனாவை பார்த்தான். ‘நீ ஏதாச்சும் படிச்சியா?’
‘ஆமாப்பா படிச்சேன். நீங்க பிரிப்பேர் பண்ணி வச்சிருந்த கொஸ்ச்சின் பேப்பரையும் சால்வ் பண்ணி வச்சிருக்கேன். இந்தாங்க.’ என்றவள் தயக்கத்துடன் பின்னந்தலையை சொறிவதைப் பார்த்தான். அவனையுமறியாமல் புன்னகைத்தான்.
‘என்ன சொல்ல வரேன்னு புரியுது. சரி, சரி. ரெண்டு மூனு நாள் போட்டும்.’ என்றவன் மகளின் மடியிலிருந்த புத்தகத்தை மூடி கட்டிலில் வைத்தான். ‘படிச்சது போதும். ரெஸ்ட் எடு.’ பிறகு, பக்கத்தில் கட்டிலில் படுத்து உறங்கிக்கொண்டிருந்த வீனாவைப் பார்த்தான். ‘இவ வந்ததுலருந்து தூங்கிக்கிட்டேதான் இருக்காளா?’ என்றான். பிறகு திரும்பி மீனாவைப் பார்த்தான். ‘கீழ் வீட்லருந்தெல்லாம் ஆளுங்க வந்து உன்ன பாத்தாங்களாம்மா?’
மீனா தயக்கத்துடன் அவனையே பார்த்தாள். ‘ஆமாப்பா எல்லாரும் வந்தாங்கப்பா.’ என்று அவனிடம் உண்மையைச் சொன்னால் அவ்வளவுதான், அம்மா வந்ததும் கேப்பாங்க. அம்மா ஏன்டி சொன்னேன்னு கேட்டு பிரச்சினை பண்ணாலும் பண்ணுவாங்க. ஆனா நான் பொய் சொன்னேன்னு அப்பாவுக்கு தெரிஞ்சா.. அதுவும் பிரச்சினைதான்.
தன் கேள்விக்கு பதில் சொல்லாமல் தலை குனிந்துக்கொண்ட மீனாவையே பார்த்தான். அவளுடைய தலையை வருடிவிட்டு எழுந்து அடுக்களையை எட்டி பார்த்தான். எப்போதும்போலவே எல்லாம் தாறுமாறாக கிடந்தது. காலையில் சமைத்த நண்டு ஓடுகள் ஒரு பேப்பரில் அரைகுறையாக பொதியப்பட்டு மூலையில் கிடந்ததைப் பார்த்து முகத்தை சுளித்தான். ‘எருமை மாடு, எத்தனை தரம் சொன்னாலும் திருந்தவே மாட்டா.’ அக்கம்பக்கத்திலிருந்து வந்த பெண்கள் இதை பார்த்து என்ன நினைத்திருப்பார்கள் என்று நினைத்த மாத்திரத்திலேயே கோபம் உச்சிக்கேறியது.
அடுக்களைக் கதவை மூடிவிட்டு முன் அறைக்குச் சென்று வானொலி பெட்டியை முடுக்கிவிட்டான். முக்காலியில் கிடந்த அன்றைய செய்தித்தாளை எடுத்து காலையில் விட்டுப் போன பகுதிகளைப் படிக்க முயற்சி செய்தான். மனம் அதில் ஒட்டாமல் சற்று முன் மீனா கூறியதையே யோசித்துக் கொண்டிருந்தான்.
எத்தன தரம் படிச்சி, படிச்சி சொன்னேன்? கீழ யார்கிட்டயும் சொல்லாதேன்னு. சொல்லும்போது தலைய ஆட்டிட்டு கீழ் வீட்ல சொன்னது போறாதுன்னு ஊருக்கும் ஃபோன் பண்ணி சொல்லிருக்கான்னா இவளை என்ன பண்றது? எங்க போய் ஃபோன் பண்ணிருப்பா? கீழ் வீட்லருந்தா? இவ வீட்லருக்கற ஆளுங்க வந்தாங்கன்னு அம்மாவுக்கு தெரிஞ்சா ஏன்டா என்கிட்ட சொல்லலைன்னு கேட்டா என்ன பண்றது? சே.. ஊர்லருந்து வர்ற ஜனங்க என்னெல்லாம் பண்ணி கலாட்டா பண்ண போறதுங்களோ தெரியலையே..
நினைக்க, நினைக்க ஆத்திரம் ஆத்திரமாய் வந்தது மதனுக்கு. ‘வரட்டும் வச்சிக்கறேன்.’ என்று மனதுக்குள் கறுவினான். அதே சமயம், மீனாவை நினைத்தாலும் பாவமாக இருந்தது. பத்மாவ திட்ட போய் இவ டென்ஷனாயி ப்ளீடிங் ஜாஸ்தியான பிள்ளை பாவம் சோர்ந்து போயிருமே..
சரி வரட்டும். சாந்தமாவே பேசுவோம். என்ன சொல்றான்னு கேட்டுட்டு முடிவு பண்ணுவோம்.
பத்மாவின் காலடி ஓசை படிகளில் கேட்டது. மதன் செய்தித்தாள் படிப்பதில் மும்முரமானான்.
கடைசிப் படியில் கால்வைத்த பத்மா முன் அறையில் அமர்ந்திருந்த மதனின் தலையைப் பார்த்ததும் ஒரு நொடி தயங்கி நின்றாள். மனம் லேசாக கலவரம் அடைந்தாலும் இன்னைக்கி இந்த மனுஷன பார்த்து பயந்து நிக்காம நாம நெனச்சிக்கிட்டிருக்கறத சொல்லிரணும் என்ற முடிவுடன் அவன் முன் போய் நின்றாள்.
‘என்னங்க, இவ்வளவு சீக்கிரம் வந்துட்டீங்க?’
மதன் அவளை மேலும் கீழும் பார்த்தான். பரவாயில்லை. டிரஸ் கிஸ் எல்லாம் நல்லாத்தான் பண்ணியிருக்கா. அவள் கையில் பிதுங்கி வழிந்த பையைப் பார்த்தான். ஒன்றும் பேசாமல் தன் பார்வயை செய்தித்தாளுக்கு திருப்பினான்.
ஐயா ரொம்ப கோபமாயிருக்காக போலருக்கு. இந்த மீனா என்னத்தையெல்லாம் சொன்னாளோ. ஒரு வலுக்கட்டாயமான புன்னகையுடன், ‘காப்பி போட்டு கொண்டு வரேன், இருங்க.’என்று கூறிவிட்டு அறையை விட்டு வெளியேறி தாழ்வாரத்தில் இறங்கி அடுக்களையை நோக்கிச் சென்றவள் கதவுகள் மூடப்பட்டிருந்ததைப் பார்த்தாள். ‘நாம மூடலையே அவர்தான் அடுக்களைக்குள்ள நுழைஞ்சி பார்த்திருக்காக போலருக்கு.’ திறந்துக்கொண்டு நுழைந்தாள்.
கையிலிருந்த பையை வைத்துவிட்டு பரபரவென்று அடுத்த ஐந்து நிமிடத்தில் அடுக்களையை ஒழுங்கு படுத்தினாள். காப்பி போட்டு கோப்பையில் ஊற்றிக்கொண்டு முன் அறைக்கு செல்லும் வழியில் பிள்ளைகள் படுக்கையறைக்குள் எட்டிப் பார்த்தாள். தன்னை நிமிர்ந்து பார்த்த மீனாவைப் பார்த்து ‘ஏய், அப்பா என்ன கேட்டாங்க? நீ ஏதாச்சும் சொன்னியா?’ என்றாள்.
மீனா இல்லை என்பதுபோல் தலையை அசைத்தாள். ‘கீழ இருக்கறவங்க வந்தாங்களான்னு கேட்டாங்கம்மா. நா ஒன்னும் சொல்லலை. ஆனா அப்பாவுக்கு கோவம்னு நினைக்கிறேன். அப்பா எதாச்சும் சொன்னாங்கன்னா நீங்க பேசாம இருந்துருங்க. தாத்தா, அம்மே எல்லாம் வந்ததும் பாத்துக்கலாம்மா.’
பத்மா சரி, சரி என்பதுபோல் தலையை அசைத்துவிட்டு கையிலிருந்த காப்பி கோப்பையுடன் முன் அறைக்கு விரைந்தாள். ‘பிள்ளையாரப்பா நீதான் எனக்கு தைரியத்தை குடுக்கணும்’ என்று மனதுக்குள் பிரார்த்திக்கொண்டு மதனின் முன் போய் நின்று கோப்பையை நீட்டினாள்.
மதன் நிமிர்ந்து பார்த்தான். கோப்பையை வாங்கி குடித்து முடித்து முக்காலியில் வைத்துவிட்டு பத்மாவைப் பார்த்தான். எதிரிலிருந்த மேசைக்கருகில் இருந்த நாற்காலியைக் காண்பித்தான்.
‘அந்த சேரை இழுத்து போட்டு உக்கார். உங்கிட்ட கொஞ்சம் பேசணும்.’
பத்மா அமரும்வரை காத்திருந்தவன் அவளையே கூர்ந்து பார்த்துவிட்டு தொடர்ந்தான்: ‘நான் காலைல அவ்வளவு தூரம் சொல்லியும் கீழ் விட்லல்லாம் சொல்லி அசிங்கப் படுத்துனது போறாதுன்னு ஊருக்கு வேற ஃபோன் பண்ணி சொல்லிட்டியா? எங்கருந்து ஃபோன் பண்ணே, கீழ் வீட்லருந்தா?’
‘இல்லீங்க.’ என்று தயக்கத்துடன் கூறியவளைப் பார்த்தான். சரியான கல்லுளிமங்கி. செய்யறதையெல்லாம் பூனை மாதிரி செஞ்சிட்டு இப்ப ஒன்னும் தெரியாதமாதிரி முளிக்கறத பாரு.. சரி, சரி. கோபப்படாம பொறுமையா கேளு..
‘என்ன இல்லீங்க?’ அவனையுமறியாமல் குரலில் கோபம் கொப்புளித்தது.
இவர் முகத்த பார்த்தா நம்ம தைரியமெல்லாம் ஓடிப்போயிரும். பாக்கக்கூடாது, இவர் முகத்த கண்டிப்பா பாக்கக் கூடாது. பார்வையை சுவர் நோக்கித் திருப்பிக்கொண்டாள். ‘கீழ் வீட்லருந்து பண்ணலைன்னு சொன்னேன்.’
ஆச்சரியமாக இருந்தது மதனுக்கு. கீழ் வீட்ல இல்லன்னா, வேற எங்க போய் பண்ணிருப்பா? ‘பின்னே?’
‘தந்தியாபீஸ்ல போய் பண்ணேன். அப்பாதான் போன தடவ வந்தப்ப அங்கருந்து பண்ணலாமான்னு சொன்னாங்க.. அதான்..’
மதன் வியப்புடன் பத்மாவையே பார்த்தான். அதெல்லாம் கூட உனக்கு தெரியுமா? சரிதான்.. உன்ன இனி கட்டுப்படுத்தி வைக்கறது முடியாது போலருக்கு. சரி.. இப்ப என்ன பண்ணலாம். ஊருக்கு போன் பண்ணது முடிஞ்சிபோன விஷயம். மேல்கொண்டு இதப்பத்தி பேசி பிரயோசனமில்லை.
‘சரி.. ஊர்ல மாமா என்ன சொன்னாங்க?’
‘அப்பா, அம்மாவையும் எங்க மூத்த அண்ணாவையும் கூட்டிக்கிட்டு இன்னைக்கே பொறப்பட்டு வாராவளாம், தாய் மாமன் சீரோட. இங்கன வந்து உங்க கிட்ட பேசி சடங்குக்கு நாள் குறிச்சிட்டு சாதி சனத்துக்கெல்லாம் சொல்லிரலாம்னு சொன்னாக..’ கோபத்தால் மதனின் முகம் சிவந்து போவதைக் கண்ட பத்மா தான் சொல்லிக்கொண்டிருந்ததை பாதியிலேயே நிறுத்திவிட்டு அவன் முகத்தைப் பார்க்காமல் அறைக்கு வெளியே பார்த்தாள். துணி உலர்த்தும் கொடியில் அமர்ந்திருந்த இரண்டு குருவிகள் ஒன்றையொன்று உரசிக்கொண்டிருந்தன. பொதுவாகவே இத்தகையை காட்சிகளை ரசித்து பார்த்து சந்தோஷமடையும் பத்மா இன்று அவற்றைக் கண்டும் காணாததுபோல் இருந்தாள்.
தன் கோபத்தைக் கட்டுப்படுத்த முயன்று தோற்றுப் போன மதன் சட்டென்று எழுந்து அறையை விட்டு வெளியேறி தாழ்வாரத்தில் இறங்கி எதிரே தெரிந்த டிரைவ் இன் ரெஸ்டாரன்டில் வந்து போன கார்களையே பார்த்துக்கொண்டு நின்றான். அதீத கோபத்தில் அவனுடைய வலதுகை விரல்கள் நடுங்குவதை பார்த்து பயந்துபோனாள் பத்மா.
தொடரும்
7 comments:
மதன், இதுக்கெல்லாம் ஆத்திரப் படக்கூடாது. பொறுமையா எடுத்துச் சொல். பத்மாவுக்கு அவ செய்ய நினைக்குறது தப்புன்னு பதமா எடுத்துச் சொல்லு. பதறாத காரியம் சிதறாது. ஓ.கே.
வாங்க ராகவன், நன்றி.
என்ன ராகவன், நேரா மதன்கிட்டவே பேசி கதையின் க்ளைமாக்சையே மாத்திருவீங்க போலருக்கே.
வேணாம் ராகவன். அவர் என்ன செய்யறாரோ செய்யட்டும். அப்பத்தான் நல்லாருக்கும்.
மதன், ராகவன் சொல்றதயெல்லாம் கேக்காதீங்க.. அப்புறம் உங்க தனித்தன்மை போயிரும். ராகவன் ரொம்பவும் நல்லவர். அவர மாதிரியே எல்லாரலயும் குறிப்பா உங்களால இருக்க முடியாதுங்க.
இது நடந்து ஒரு 25 வருசம் இருக்காது?
காலம் மாறுச்சுன்னாலும் இப்பவும் சிலர் இந்தச் சடங்கையெல்லாம் ஊர்கூட்டிச் செய்யறாங்களே.
எங்கே ஆளுங்க மறந்துருவாங்களொன்னு அப்பப்ப தமிழ் சினிமா ஞாபகப்படுத்திக்கிட்டே இருக்கே.
வாங்க துளசி,
எங்கே ஆளுங்க மறந்துருவாங்களொன்னு அப்பப்ப தமிழ் சினிமா ஞாபகப்படுத்திக்கிட்டே இருக்கே. //
ரொம்ப சரிங்க. தமிழ் சமுதாயம் அப்புறம் எப்படி உருப்படும்? ஹூம். இப்படி பேசி பேசியே நம்ம வயசு போயிரும் போல.
ஆனா பாருங்க...சினிமால பாத்தே பல பேரு இத நிப்பாட்டீட்டாங்கன்னு நெனைக்கின்றேன்.
இருவத்தஞ்சு வயசு ஹீரோயினை மேடையில உக்கார வெச்சி.......வேண்டாம் இதுக்கு மேல நான் ஏதாவது சொல்லப் போக.........
வாங்க ராகவன்,
வேண்டாம் இதுக்கு மேல நான் ஏதாவது சொல்லப் போக.........
//
வேணாம் சொல்லாதீங்க. வம்பாயிரப் போகுது.
இந்த பழக்கம் போவதற்கு எத்தனை நாளானாலும் போனால் சரிதான்.
வாங்க புதுவை,
சாரிங்க. நான் ஒரு வாரமா லீவ்ல இருக்கேன். அதான் அடுத்த பதிவை போட முடியலை. இன்னும் இரண்டு நாள் பொறுத்துக்குங்க.
Post a Comment