28.12.05

அப்பா ஒரு ஹிட்லர் - 12

அதீத கோபத்தில் அவனுடைய வலதுகை விரல்கள் நடுங்குவதை பார்த்து பயந்துபோனாள் பத்மா.

சிறிது நேரம் ஒன்றும் பேசாமல் நின்ற மதன் முன் அறைக்கு திரும்பி சாய்வு நாற்காலியில் அமர்ந்தான். சுவற்றை பார்த்துக்கொண்டு பேச ஆரம்பித்தான்.

‘இங்க பார் பத்மா. மீனா இருக்கற இந்த நிலையில நான் கோபப்பட்டா அவளுக்கு உடம்புக்கு ஏதாவது ஆயிருமோன்னு பாக்கறேன். ஆனா நான் இனியும் கோபபபடாம இருக்கணும்னா நீ உடனே ஊருக்கு போன் போட்டு உங்க வீட்லருந்து யாரும் வரவேண்டாம்னு சொல்லிறனும். அடுத்த தடவை உங்கப்பா வியாபார விஷயமா வரும்போது வேணும்னா உங்கம்மாவையும் கூப்டுக்கிட்டு வரச்சொல்லு. மீனா பரீட்சைக்கு இன்னும் முழுசா ஒரு மாசம் கூட இல்லங்கறதும் ஒன்பதாவது படிக்கறவளுக்கு இந்த வருஷம் முக்கியமானதுங்கறதும் உனக்கு தெரிஞ்சிருக்கணும். இந்த நேரத்துல சடங்கு வைக்கறேன்னு ஊர்லருக்கறவங்களையெல்லாம் வரவச்சி கலாட்டா பண்ணிக்கிட்டிருக்க முடியாது. என்ன சொல்றே?’

பத்மாவுக்கு அவனை வெறித்துப் பார்த்துக்கொண்டு நிற்பதைத் தவிர வேறொன்றும் தோன்றவில்லை. என்ன சொல்றாங்க இவங்க? சடங்கு பண்றதப்போய் கலாட்டா, கிலாட்டாங்கறாங்க? இவங்க சொல்றத கேட்டு நான் போய் ஃபோன் பண்ணாமட்டும் வராம இருந்துறுவாங்களா, என்ன? இவங்ககிட்ட திட்டு வாங்கனது போறாதுன்னு அங்க அப்பா கிட்டயும் அம்மா கிட்டயும் திட்டு வாங்கணும். இவங்க திட்டறதுதான் எப்பவும் நடக்குதே. திட்டிட்டு போட்டும். அண்ணாவுக்கு கோபம் வந்தா அவ்வளவுதான், வீட்டையே ரெண்டாக்கிருவாங்க.

மதன் எரிச்சலுடன் பத்மாவையே பார்த்தான். ‘ஏய் என்ன ஒன்னும் பேசாம நிக்கற?’

பத்மா ஒரு முடிவுக்கு வந்தவளாய், ‘என்னால முடியாதுங்க.’ என்றாள்.

மதனுக்கு அவளுடைய குரலிலிருந்த உறுதி அடக்க முடியாத கோபத்தை உண்டாக்கியது. இருக்கையிலிருந்து எழுந்து நின்று அவளை எரித்துவிடுவதுபோல் பார்த்தான். ‘என்னத்தடீ முடியாதுங்கற?’

பத்மா அவனுடைய பார்வையிலிருந்த உக்கிரத்தை எதிர்கொள்ள முடியாமல் தலையைக் குனிந்துக்கொண்டாள். மெல்லிய குரலில், ‘ஊருக்கு ஃபோன் பண்ண முடியாதுன்னு சொன்னேன்.’ என்றாள். மேலே பேசமுடியாமல் குரல் நடுங்க புடவைத் தலைப்பால் முகத்தை மூடிக்கொண்டு அப்படியே தரையில் சரிந்து விம்மத் துவங்கினாள்.

அவளுடைய அழுகை மதனின் கோபத்தைத் தணிப்பதற்கு பதில் அதிகரிக்கவே செய்தது. முன் அறைக் கதவை மூடி தாளிட்டான். பிறகு இருக்கையில் அமர்ந்து பத்மா அழுகையை நிறுத்தும் வரை காத்திருந்தான்.

மதன் அறைக் கதவை மூடி தாளிடுவதை நிமிர்ந்த பத்மா கலவரத்துடன் அவனை பார்த்தாள். ‘எதுக்கிப்போ கதவை மூடுறீங்க? நீங்க சத்தம் போடறதுதான் இந்த வீட்லருக்கற எல்லாருக்கும் தெரிஞ்சதுதானே. மீனாவுக்கும்தான் கேக்கட்டுமே.. கேட்டுட்டு அழட்டும். பொம்பளையா பொறந்ததுக்கு என்ன மாதிரியே அதுங்களுக்கும் அழறத தவிர வேறென்ன தெரியும்? ஓ! ஒருவேளை திட்டறது போறாதுன்னு புதுசா அடிக்க வேற ஆரம்பிக்க போறீங்களா? செய்ங்க. ஆனா ஒன்னு,நீங்க என்னை அடிச்சாலும், கொலப்பண்ணாலும் சரி. நான் எங்க வீட்டுக்கு ஃபோன் பண்ணப்போறதில்ல.. வேணும்னா நீங்களே போய் பண்ணி எம் பெஞ்சாதிக்கு பைத்தியம் அதனால அவ பேச்ச கேட்டுக்கிட்டு ஓடி, கீடி வந்துராதீங்கன்னு சொல்லுங்க..’

திருமணமானதிலிருந்து தன்னை எதிர்த்துப் பேசி அறியாத பத்மாவைப் பார்த்து அதிர்ந்துபோய் சில நிமிடங்கள்வரை என்ன பேசுவதென புரியாமல் அமர்ந்திருந்தான் மதன். என்னாச்சி இவளுக்கு? அவளுடைய கோபமும், பேச்சும் ... உண்மையிலேயே புத்தி கித்தி பிரண்டு போயிருச்சா? அடிக்க கை ஓங்கறதுக்குள்ளயே அடிக்க போறீங்களான்னு கேக்கறாளே.. இந்த தைரியம் இவளுக்கு எங்கருந்து வந்தது?

தன் குடும்பத்தினரை விரோதித்துக்கொண்டு மதன் தனிக்குடித்தனம் வந்த புதிதில் பத்மாவின் பெற்றோருடன் அவளுடைய மூத்த சகோதரனும் வந்திருந்தார். திருமணத்தன்றே அவருடைய பட்டு வேட்டியும் பட்டு சட்டையும் கழுத்தில் பிரதானமாய் தொங்கிய வடச் சங்கிலியும் புலிநகமும் மதனை அருவருப்படைய செய்திருந்தது. அதே கோலத்தில்தான் பத்மாவின் வீட்டுக்கும் வந்திருந்தார். அடர்ந்து வளர்ந்திருந்த தலைமுடியுடன் அக்கால நடிகவேள் கோலத்தில் வந்து நின்றவரைக் கண்டதுமே உள்ளுக்குள் கொதித்துப்போன மதன், ‘ஏய் உங்கண்ணா என்ன பெரிய வில்லன்னு நினைப்பா. அவர் தல முடியும், துணிமனியும், சங்கிலியும்.. இங்க இருக்கற வரைக்குமாவது கோலத்த மாத்த சொல்லு.. பத்திக்கிட்டு வருது.. போடி போய் சொல்லு, எனக்கு இதெல்லாம் பிடிக்காதுன்னு..’ என்றான்.

பத்மா தயக்கத்துடன் அவனைப் பார்த்தாள் ‘அதெப்படிங்க? நான் போய் சொன்னா அண்ணா மட்டுமில்ல அம்மாவுக்கும் வருத்தப்படுவாங்க. ரெண்டு நாளைக்குத்தாங்க.. எனக்காக கொஞ்சம் பொறுத்துக்குங்களேன்.’

மதனுக்கு கோபம் அதிகரித்தது. ‘ஏய் நான் சொல்றத மரியாதையா போய் சொல்றதவிட்டுட்டு எங்கிட்ட வியாக்கியானமா பண்றே? நீயா சொல்றியா, இல்ல நான் சொல்லவா?’
மதனுடைய கோபத்தைப் பார்த்து மிரண்ட பத்மா தயங்கி, தயங்கி போய் தன் தந்தையிடம் அவன் சொன்னதைக் கூறினாள். அவரும், ‘சரிம்மா.. நான் மாணிக்கத்துக்கிட்ட சொல்றேன். அவன் குணம்தான் உனக்கு தெரியுமேம்மா.. தாம், தூம்னு குதிச்சாலும் குதிப்பான். அந்த நேரத்துல மாப்பிள்ளை வீட்ல இருந்தா நல்லாவா இருக்கும்? அதனால அவர் ஆஃபீசுக்கு புறப்பட்டு போவட்டும். சொல்றேன். நீ வயித்துப் பிள்ளக்காரி.. இதப் பத்தி கவலைப் படாமே உன் வேலைய பாரு.’ என அவளை சமாதானப் படுத்தியது இப்போது நினைவுக்கு வந்தது.

அவன் அலுவலகத்திற்கு புறப்பட்டு போனதும் என்ன நடந்ததோ தெரியவில்லை. அவன் வீடு திரும்பியபோது தன் மைத்துனரின் உடையும் நடையும் முற்றிலும் மாறியிருந்ததைப் பார்த்து சமாதானம் அடைந்தான்.

அன்று அவளுக்கு விருப்பமில்லாவிட்டாலும் தான் கூறியதை அப்படியே தன் தந்தையிடன் போய் கூறிய அந்த பத்மாவா இப்போது தன்னையே எதிர்த்து பேசுகிறாள்? இதை முற்றிலும் எதிர்பார்க்காத மதன் இதை இப்படியே விட்டால் நாளைக்கு இவள் என்ன வேண்டுமானாலும் செய்வாள் என்று நினைத்தான். தன்னுடைய கோபத்தை இவளுக்கு புரியவைப்பதுதான் ஒரே வழி என்ற முடிவுக்கு வந்தான். அதற்காக தேவைப்பட்டால் அவளை கை நீட்டி அடித்தாலும் தப்பில்லை என்றே நினைத்தான், அதனுடைய பின் விளைவுகளை பொருட்படுத்தாதவனாய்.

பத்மா தான் மறுத்துப் பேசியதும் மதன் கோபத்தின் உச்சிக்கே போய் தன்னை அடிக்கவும் தயங்கமாட்டான் என்று எதிர்பார்த்தாள்.ஆனால் இத்தனை நேரம் ஒன்றும் பேசாமல் அவன் சுவற்றையே பார்த்துக்கொண்டிருப்பதைக் கண்டு குழம்பினாள். மதனுடைய முகம் மெள்ள மெள்ள இருகி பாறையைப் போல் மாறுவதிலிருந்து அவன் தன் நிலையிலிருந்து மாறப் போவதில்லை என்பதை உணர்ந்தாள். வருவது வரட்டும் தானும் தன் நிலையிலிருந்து மாறப்போவதில்லை என்ற தீர்மானத்துடன் அவனைப் பார்த்தாள்.

‘என்ன ஒன்னும் சொல்லாம முளிக்கிறீங்க? போய் ஃபோன் பண்றதுதானே?’ என்றாள் குரலில் வெறுப்பு கொப்பளிக்க.

அவளுடைய பதில் கொதித்துக்கொண்டிருந்த மதனின் கோபத்தை மேலும் அதிகரிக்க என்ன செய்கிறோம் என்ற நினைவே இல்லாமல் பாய்ந்து சென்று பத்மாவின் தலைமுடியை இடது கையால் அள்ளிப்பிடித்து வலது கையால் கன்னத்தில் ஓங்கி அறைந்தான். ‘என்ன திமிர் இருந்தா என்கிட்டவே சவால் விடறே. இன்னும் அஞ்சி நிமிஷத்துல எழுந்துபோயி ஃபோன் பண்ணிட்டு வரலே இன்னையோட உன்ன தலை முழுகிருவேன் ஜாக்கிரதை. போ எழுந்து.’

'அது ஒன்னுதான் பாக்கி. தலைய முழுகிருங்க. நானும் என் பொண்ணுகளும் எங்கயாவது போய்க்கறோம். போறும். உங்க கிட்ட இத்தனை வருஷமா பேச்சு மட்டும்தான் கேட்டுக்கிட்டிருந்தேன். இப்ப கைநீட்டி அடிக்கவும் செஞ்சிட்டீங்க. இன்னும் தலை முழுகறது ஒன்னுதான் பாக்கி, அதையும் செஞ்சிருங்க.' என்று பிடிவாதத்துடன் கூவிய பத்மாவைப் பார்க்க, பார்க்க் அவனுடைய கோபம் அதிகரிக்கவே செய்தது.

அறைக் கதவைத் திறந்து பத்மாவின் பின்னங்கழுத்தில் கைவைத்து வெளியே தள்ளிக் கதவை சாத்தினான். 'போடி போ.. இன்னையோட உன்ன தலை முழுகியாச்சி. ஆனா என் பிள்ளைகள உன்கூட அனுப்புவேன்னு மட்டும் நினைக்காத. அது மட்டும் நடக்காது, சொல்லிட்டேன்.'

அறைக்கதவு மூடப்படும் ஓசை கேட்டு வந்து தன் தாயும் தந்தையும் அறைக்குள் பேசுவதை வெளியிலிருந்து கேட்டுக்கொண்டுதானிருந்த மீனாவின் காலடியில் பத்மா சென்று விழா அவள் பதறிப்போய் ‘அம்மா’ என்று அடிவயிற்றிலிருந்து கதறினாள்.

தன்னை கழுத்தைப் பிடித்து மதன் தள்ளுவான் என்பதை எதிர்பார்க்காத பத்மா தன் மேல் விழுந்த மகளைக் கட்டிப்பிடித்துக்கொண்டு அழலானாள். இருவருடைய கதறலையும் கேட்டு படுக்கையறையில் உறங்கிக்கொண்டிருந்த வீனாவும் திடுக்கிட்டு எழுந்து ஓடிவந்து தரையில் கிடந்து அழுதுக்கொண்டிருந்த தன் தாயையும் தமக்கையையும் கட்டிப்பிடித்துக்கொண்டு அழத்துவங்கினாள். கீழ்வீட்டில் குடியிருந்தவர்களும் அவர்களுடைய அழுகுரல் கேட்டு படியேறி ஓடி வர அடுத்த சில நிமிடங்களில் வீடு இரண்டுபட்டுப் போனது.

இதையெல்லாம் பார்த்தும் தன் கோபத்தின் மடத்தனத்தை உணராத மதன் வெளியே வந்து குடித்தனக்காரர்களைப் பார்த்து உரத்த குரலில் கூவினான். ‘யார் உங்கள இங்க வரச்சொன்னது? உடனே இறங்கி போகலே, இந்த நிமிஷமே வீட்ட காலி பண்ணிட்டு போக வேண்டியிருக்கும். சொல்லிட்டேன்.’

மதனுடைய கோபம் அவர்களுக்கு முன்பே பரிச்சயம்தான் என்றாலும் அவன் இந்த அளவுக்கு உக்கிரமத்துடன் நடந்துக்கொண்டு அவர்கள் பார்த்ததேயில்லை. நமக்கேன் வம்பு என்பதுபோல் அனைவரும் மறுநிமிடமே இறங்கி ஓட இதற்கெல்லாம் நீ தான் காரணம் என்பதுபோல் தன் மனைவியை வெறுப்புடன் பார்த்தான்.

‘ஏய், எழுந்திருங்கடி போறும். மூனு பேருமா சேர்ந்துக்கிட்டு ஏண்டி என் மானத்தை வாங்கறீங்க? ஏய் மீனா, வீனா நீங்க ரெண்டு பேரும் உங்க ரூமுக்கு போங்க. இங்க என்ன நடந்தாலும் வெளிய வரக்கூடாது. என்ன புரிஞ்சிதா?’

மீனாவும், வீனாவும் தன் தந்தையையே ஒரு நிமிடம் வெறுப்புடன் பார்த்தனர். பிறகு இருவரும் பத்மாவை பிடித்து தூக்கி கைத்தாங்கலாய் தங்கள் அறைக்கு அழைத்து சென்றனர்.

மதனுக்கு தன் கண்களையே நம்ப முடியாமல் மூவரையும் பார்த்தான். ‘இந்த ரெண்டு குட்டிகளுக்கும் என்ன தைரியம்? போங்கடின்னு சொன்னா அம்மாவையும் சேர்த்து கூட்டிக்கிட்டு போவுதுங்க? இப்ப என்ன பண்றது? சே.. நாம இந்த விஷயத்த ஹேண்டில் பண்ண விதத்துலதான் தப்பு போலருக்கே.. பத்மாவ மட்டுமில்லாம பிள்ளைகளையும் விரோதிச்சிட்டேன் போல தெரியுதே.. திட்டறதோட நிறுத்தியிருக்கலாம்.. கை நீட்டிருக்க வேணாம்.. கீழ் வீட்டுக்காரங்க அக்கம்பக்கத்துல எல்லாம் போய் சொல்லி.. சே.. நாளைக்கு பத்மா அம்மா, அப்பா வரும்போது சொன்னா ஏதாச்சும் பிரச்சினையாயிருமோ.. மாணிக்கம் ஏற்கனவே மூர்க்கன்.. இதுங்க மூனும் அழுத மூஞ்சோட அவன் முன்னால போய் நின்னு.. அவன் எப்படி ரியாக்ட் பண்ணுவான்னு சொல்ல முடியாதே. இப்ப அவங்க மூனுபேரும் வராம எப்படி தடுக்கறது?

சுவர்க் கடிகாரத்தைப் பார்த்தான். இனி ஊருக்கு ஃபோன் செய்தாலும் பயனில்லை. எல்லா ஏற்பாடுகளையும் செய்து முடித்து புறப்பட்டிருப்பார்கள். அப்படியே நேரமிருந்தாலும் யார் போய் ஃபோன் பண்றது? இத்தனைக்கப்புறம் பத்மா நிச்சயம் படியிறங்கி போய் செய்யமாட்டாள். நான் போய் என்னன்னு சொல்றது?

ஒன்றுக்கும் விடை கிடைக்காமல் குழம்பிப் போய் தன் இருக்கையில் சாய்ந்து அமர்ந்து கண்களை மூடினான்.

தொடரும்..

3 comments:

துளசி கோபால் said...

கோபம் 'சண்டாளம்'னு சும்மாவா சொல்லிவச்சிருக்காங்க.

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க துளசி,

ரொம்ப சரியா சொன்னீங்க. நிறைய குடும்பங்கள்ல அமைதி கெடறதுக்குக் காரணமே இந்த அநாவசிய கோபம்தான்.

G.Ragavan said...

// தன்னுடைய கோபத்தை இவளுக்கு புரியவைப்பதுதான் ஒரே வழி என்ற முடிவுக்கு வந்தான். அதற்காக தேவைப்பட்டால் அவளை கை நீட்டி அடித்தாலும் தப்பில்லை என்றே நினைத்தான், அதனுடைய பின் விளைவுகளை பொருட்படுத்தாதவனாய். //

ஒரு முறையற்ற செயலைச் செய்ய தன்னை நியாயப் படுத்திக் கொள்கிறான் மதன். இந்த ஒரு மதன் மட்டுமல்ல சமூகத்தில் பல மதன்கள் பல மட்டங்களில் இந்த முடிவை எடுக்கின்றார்கள். அதில் அவர்களுக்கு ஒரு ஆத்ம திருப்தி. இவர்களுக்கெல்லாம் அறிவு வந்து திருந்தட்டும். கருத்து வேறுபாட்டைக் களையும் நல்ல முறைமை அறியா மூடத்தனம் மதனுடையது.