6.12.05

எல்லாம் முடிஞ்சி போச்சிப்பா - 2

ஆஃபீஸ் டைம்ல மொபைல்ல பேசறதுக்கு என்னைய மாதிரி Freshersஐ எங்க கம்பெனியில விட மாட்டாங்க. லஞ்ச் டைம்ல மட்டும்தான் பேசலாம்.

லஞ்ச் டைம்ல வெளிய வந்ததுமே மொபைல்ல இருந்த மிஸ்டு கால் பட்டியல்ல அப்பாவோட நம்பர் திருப்பி, திருப்பி இருக்கவே வேண்டா வெறுப்பா கூப்பிட்டேன்.

எடுத்தவுடனே, ‘டேய் ரமேஷ். முழுசா ஒரு வருஷத்துக்கப்புறம் அப்பாவ பாக்கறமேன்னு ஒரு ஆதங்கம் இருக்க வேணாம்? போன்ல கூப்பிட்டாக்கூட எடுக்க மாட்டேங்குற? நல்ல பிள்ளைங்கடா.. நான் உன்னை எப்படா பாக்கலாம்னு தவிச்சிக்கிட்டிருக்கேன். இப்ப எங்க இருக்க? நான் சொல்ற எடத்துக்கு வரமுடியுமா?’

“நான் உன்னை எப்படா பாக்கலாம்னு தவிச்சிக்கிட்டிருக்கேன்.” என்ன போலித்தனமான பேச்சு!

இருந்தாலும் அப்பாவாச்சே. கட் பண்ணா அப்புறம் அதுவே பிரச்சினையாயிரும். ‘டாட், நான் லஞ்ச் டைம்ல வெளிய வந்திருக்கேன். ஆஃபீஸ் டைம்ல மொபைல் ஆஃப் பண்ணித்தான் வச்சிருக்கணும். கம்பெனி ரூல்ஸ். அப்புறம், டாட்! எனக்கு எட்டு மணிக்கு முன்னால ஆஃபீஸ்லருந்து இறங்க முடியாது. உங்க பேங்க் மாதிரி லீவு, பர்மிஷன் எல்லாம் முதல் ஆறு மாசத்துக்கு கிடைக்காது.. நீங்க நாளைக்கு காலைல ரூமுக்கு வாங்களேன்.’

எதிர்பக்கத்திலிருந்து புஸ், புஸ்சுன்னு மூச்சு காத்து மட்டும்தான் வந்துது. கோபமாயிருக்கார்னு அர்த்தம். அதுக்கு நான் என்ன செய்ய முடியும்? கைக்கடிகாரம், ‘டேய் இன்னும் இருபது நிமிஷம்தான் இருக்குன்னு சொல்லுது. அப்புறம் லன்ச்சும் கோவிந்தாத்தான்.’

‘டாட்?’

‘போற போக்குல பாத்தா உன்ன பாக்கறதுக்கே அப்பாயின்ட்மெண்ட் வாங்கணும் போலருக்கு? சரி ராத்திரி ரூமுக்கு எப்ப வருவே? இன்னைக்கே உன்னை பாக்கணும். அதான் கேக்கறேன்.’

ஏன் நாளைக்கே மும்பைக்கு பறக்க போறீங்களாக்கும்? மனதில்தான் நினைத்துக்கொள்ள முடியும்! ‘எட்டேகால், எட்டறைக்குள்ள வந்துருவேன் டாட். அட்ரஸ் தெரியுமில்ல?

‘தெரியும். என் ஃப்ரெண்ட் பாத்துக் குடுத்ததுதானே?’

‘ஆமா டாட்.’

‘கூட வேற யாராவது ரூம்ல இருக்கான்களா?’

‘இல்ல டாட். நான் மட்டும்தான்.’

‘சரி, சாப்பிட போயிறாத. இன்னைக்கி ராத்திரி ரெண்டு பேரும் சேர்ந்தே சாப்பிடலாம். ஒரு ஹாப்பி நியூஸ் இருக்கு. ட்ரீட் என்னோடது. சரியா?’

‘சரிப்பா.’ உங்களுக்கு வேணும்னா அது ட்ரீட்டா இருக்கலாம் டாட். எனக்கு அப்படியிருக்கான்னு பாப்போம். தன்னிச்சையா ரெஸ்பான்ட் பண்ண மனசை அடக்கி வைச்சிட்டு ‘வச்சிடறேன். லஞ்ச் முடிச்சிட்டு இன்னும் பத்து நிமிஷத்துல உள்ள இருக்கணும்.’ என்று அப்பா மீண்டும் பதில் சொல்றதுக்குள்ள கட் பண்ணிட்டு பேருக்கு ஒரு சாண்ட்விச்சை ஆர்டர் பண்ணி பெப்சியோட சேர்த்து விழுங்கிட்டு ஆஃபீசுக்கு திரும்பினேன். ஆனா மனசு வேலையில ஒட்டாம அப்பாவையே சுத்தி, சுத்தி வந்துக்கிட்டிருந்துது.

**

நான் ரூமுக்கு முன்னால என் யமாஹாவ நிறுத்தி லாக் பண்ணிட்டு லாட்ஜ் லாபிக்குள்ள நுழைஞ்சதுமே அப்பாவ பாத்துட்டேன். நல்ல வேளை, கூட அந்த ரெண்டு பேரும் வரலை.

‘வாங்க டாட்.’ என்றேன் எந்த உணர்ச்சியுமில்லாமல்.

உடனே கண்டுபிடிச்சிட்டார். ‘என்னடா ரமேஷ் ரொம்ப டல்லாருக்கே? வேலை ரொம்ப கஷ்டமாயிருந்தா சொல்லு, வேற இடத்துல பாக்கலாம்.’

என்னப்பா ரொம்ப பாசமா பேசறீங்க? மனசுக்குள் நினைச்சிக்கிட்டேன். ‘அதெல்லாம் ஒன்னுமில்ல டாட். வாங்க ரூமுக்கு போலாம்.’

‘வேண்டாம் ரமேஷ். நான் பேங்க் கார்லதான் வந்திருக்கேன். இப்படியே டிரைவின் வரைக்கும் போய்ட்டு வந்துரலாம். அங்கதான் கார்லருந்து பேசிக்கிட்டே சாப்ட முடியும். நீ வேணும்னா போய் டிரஸ் சேஞ்ச் பண்ணிக்கிட்டு வா. நான் லாபியிலயே இருக்கேன். என்ன சொல்ற?’ என்ற அப்பாவை ஏறிட்டு பார்க்காமல், ‘சரிப்பா.. ஒன் செக்கண்ட்.’ என்று நாலுகால் தாவலாய் படியேறினேன்.

அப்பா கிட்ட நாமளா இந்த விஷயத்த எடுக்கக்கூடாது. அவரா சொல்றாரான்னு முதல்ல பாப்போம். கடைசி வரைக்கும் சொல்லலைனா அப்புறம் பாத்துக்கலாம். அவரா சொன்னா தப்பிச்சார்.. இல்லே.. வச்சுக்கறேன். கடகடன்னு ஜீன்ஸ், டீசர்ட்டுக்கு மாறிக்கிட்டு இறங்கி வந்தேன்.

ஹோட்டலுக்குள்ள நுழையற வரை அப்பா பேசவேயில்லை. நானும் அவரை பாக்கறதை தவிர்க்கறதுக்காகவே வெளியில அசுரத்தனமான வேகத்துல தலை தெறிக்கிறா மாதிரி போய்க்கிட்டிருந்த வண்டிகள பார்த்துக்கிட்டிருந்தேன். அப்படியென்னத்தான் அவசரமோ எல்லாருக்கும்!

‘என்ன ரமேஷ், எப்படியிருக்கே? ஏன் ஒன்னும் பேச மாட்டேங்குற?’

சட்டென்று குரல் வந்த திசையை பாத்தேன். அப்பா என்னை பாக்காம வெளியில பாத்துக்கிட்டேயிருந்தார்.

‘அதெல்லாம் ஒன்னுமில்ல டாட்.’

‘நான் ஃபோன்ல சொன்ன சந்தோஷமான நியூஸ் என்னன்னுகூட ஒனக்கு கேக்க தோனலையேன்னு நினைச்சா உன்னை பத்தி கவலையா இருக்கு ரமேஷ். அப்பா பிள்ளைங்கற உறவு இன்னமும் நமக்குள்ள இருக்குன்னு நான் நினைக்கிறேன். நீ அப்படி நினைக்கலியோன்னு தோனுது. என்ன ரமேஷ்?’

கார் டிரைவின்னுக்குள்ள நுழைஞ்சிருச்சி. இந்த ஹோட்டல பத்தி கேள்விபட்டிருந்தாலும் இப்பத்தான் முதல் தடவையா வரேன். அப்பா டிரைவரை பார்த்தார் ‘நீ போய் சாப்ட்டுட்டு வா ஆறுமுகம். நான் என் பையன் கிட்ட பேசி முடிக்க எப்படியும் ஒரு அரை மணியாகும்னு நினைக்கிறேன். அவசரப்படாம மெதுவாவே வா. உன் மொபைல்ல மிஸ்டு கால் குடுக்கறப்போ வந்தா போறும். என்னய்யா?’

வண்டியிலிருந்து பதறிக்கொண்டு இறங்கிய டிரைவர் எங்கள் இருவரையும் பார்க்காமல் நிலத்தையே பார்த்துக்கொண்டு பவ்யத்துடன் ‘சரி சார்’ என்று கூறிவிட்டு போய்விட்டான். நான் பதில் சொல்லாமல் அவன் போவதையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

அப்பா-மகன் உறவு! அதப்பத்தி இவருக்கென்ன தெரியும்?

‘என்ன ரமேஷ் சைலண்டாயிட்டே? நான் சொன்னது சரிதானே?’

‘தெரியலை டாட்’ என் குரலிலிருந்த வெறுப்பு கூட அவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

‘என்னடா பதில் இது? சரி போட்டும். அப்பாவுக்கு டி.ஜி.எம் ப்ரோமோஷனாயி சென்னை L.H.Oவிலேயே போஸ்ட்டிங் யிருக்கு. இனிமே அப்பா அடுத்த ரெண்டு, மூனு வருஷத்துக்கு இங்கதான்.’

சட்டென்று திரும்பி அவரைப் பார்த்தேன். இது சந்தோஷமான நீயூசா? இல்ல ஷாக்கான நியுசா? எப்படி ரியாக்ட் பண்றதுன்னு தெரியாம ஒரு நிமிஷம்.. ‘ஓ! அதுக்குத்தான் நேத்தைக்கி செலப்ரேஷனா?’ கேக்கலாம்னுதான் தோனுது.. கேட்டு என்ன செய்ய?

‘கன்கிராட்ஸ் டாட்.’ என்றேன்.

‘என்னடா அவ்வளவுதானா? வாட் ஹேப்பண்ட் ரமேஷ்? ஆர் யு ஓகே?’ அப்பாவோட குரல்ல எரிச்சலின் ரேகை..

‘நத்திங் டாட். நீங்க சொல்லுங்க.’

‘சரி. அதுக்கு முன்னால ஃபுட் ஆர்டர் பண்ணிரலாம். என்ன சாப்பிடறே? முதல்ல ஒரு ஸ்வீட். அப்புறம் ஏதாவது லைட்டா டிஃபன். சாயந்திரம் ஆஃபீஸ்ல குடுத்த ட்ரீட்டே இன்னும் நெஞ்சில கரிச்சிக்கிட்டிருக்கு.’

சாப்பாடா டாட் முக்கியம்? ‘நீங்க ஆர்டர் பண்ணுங்க டாட். ஸ்வீட் வேண்டாம். ஐ ஆம் நாட் ஃபீலிங் வெல்.’

அப்பா சட்டுனு என் நெற்றியில் கை வைக்க ஒரு நிமிஷம் ஆடிப்போயிட்டேன். என்னப்பா பாசம் திடீர்னு பொங்கிக்கிட்டு வருது? என் கிட்டருந்து என்னத்த எதிர்பார்க்கறீங்க? மனசு கிடந்து அரற்றுது! கேக்கத்தான் முடியல.

அவரோட கையை மெதுவா தள்ளிவிடறேன். ‘ஒன்னுமில்ல டாட். லேசா தலைவலி. காப்பி குடிச்சா சரியாயிடும். இங்க காப்பி நல்லாருக்கும்னு கேள்விப்பட்டிருக்கேன். எனக்கு ரெண்டு காப்பி சொல்லுங்க.’

அப்பா சிரிக்கிறார். ‘இங்க காப்பி மட்டுமில்ல ரமேஷ். அசல் தேங்கா சட்னி. முன்னாலல்லாம் இந்த ஹோட்டல் ஒரிஜினல் தேங்கா சட்னிக்கு ரொம்ப ஃபேமஸ். அதுக்காகவே பிராம்மண கூட்டம் இங்க சனி, ஞாயிறுல அலமோதும். இப்பவும் பாரேன் அவங்க கார்ங்கதான் அடச்சிக்கிட்டு நிக்குது.’

இதெல்லாம் தெரிஞ்சி வச்சிருக்கீங்க. புள்ளையோட மனச புரிஞ்சிக்கலையே டாட்.

‘ரமேஷ்.’

அப்பாவோட குரலில் சட்டென்று ஏற்பட்ட மாற்றம் என்னை அவர் பக்கம் திரும்ப வச்சது.என்ன, பாவமன்னிப்பா?

‘ஹ¤ம்?’

‘உனக்கு அப்பாக்கூடவே வந்து இருக்க விருப்பமா, இல்ல இப்ப போலவே ரூம்ல...’

வான்னு சொல்றாரா, வேண்டாம்னு சொல்றாரா?

‘நீங்க என்ன முடிவு பண்ணாலும் ஒகே டாட்.’ இதுவரைக்கும் என் வாழ்க்கைல நடந்த எல்லாத்தையும் நீங்கதானெ டாட் டிசைட் பண்ணியிருக்கீங்க. அரற்றுற மனசை அடக்கினேன்.

‘இல்ல, உனக்கும் ஒரு ஆசை இருக்கும்ல.. அதான் கேட்டேன். நீ என்கூட வந்து இருக்கணும்னு நான் கட்டாயப் படுத்த மாட்டேன். நீ தோளுக்கு மேல வளர்ந்த பையன். உனக்குன்னு சில டேஸ்ட்டெல்லாம் இருக்கும். என்ன சொல்ற? நான் நினைக்கறது சரிதானே?’

அப்பாவை திரும்பி ஒரு பார்வைப் பாக்கறேன். எனக்குன்னு சில டேஸ்ட்டா?. உங்களுக்கு இருக்கற மாதிரியா? யாருப்பா அந்த ரெண்டு பேரும்? சீக்கிரம் சொல்லிருங்களேன்.. நானா அத கேட்டா ரசாபாசாமாயிரும். இன்னும் பத்து எண்றதுக்குள்ள நீங்களா சொல்லலே? ஒன்னு, ரெண்டு.. மூனு..

‘என்ன ரமேஷ், பதிலையே காணோம்? உன் சைலன்ஸ எப்படி எடுக்கட்டும்?’

நாலு, அஞ்சி, ஆறு, ஏழு..

‘டேய் என்னாச்சி? வெளியே என்னத்த பாத்துக்கிட்டிருக்கே? வாட்ஸ் ராங் வித் யூ? என்னை பார்த்து பேசு ரமேஷ்.’

என் முகத்தைப் பிடிச்சி தன் பக்கம் திருப்புன அப்பாவையே பார்த்தேன். எட்டு, ஒன்பது.. பத்து..

‘நேத்து உங்கள் சினிமா தியேட்டர் வாசல்ல பாத்தேன்ப்பா!’ வாய்லருந்து வார்த்தைகள் என்னையுமறியாம வந்து விழுந்தன.. இப்படி அப்ரப்டா கேக்கணும்னு நான் நினைக்கலே..

சட்டென்று அப்பாவோட முகம் இருண்டு போயிருச்சி. உதடுகள் துடிக்க அப்பா பேச முடியாம தடுமாருறது காருக்குள்ளருக்கற மெல்லிய வெளிச்சத்துலயும் தெரியுது.. என்னை நேருக்கு நேர் பாக்க முடியாத கோழைத்தனம்.. சர்வர் வந்து கார் கதவுகளில் பலகையைப் பொருத்திவிட்டு வைத்துவிட்டுப் போன தண்ணீர் நிமிஷ நேரத்துல காலியாவுது.. நடுங்கும் கைகளிலிருந்த தண்ணீர் தளும்பி மடியில கொட்டுது..

அப்பாவால பேச முடியாதுன்னு தெரியும்.

என்னை பாக்கற பார்வையில தெளிவு இல்லை.. கண்டிப்பா குற்ற உணர்வு இல்லை.. இவன்கிட்ட போயி மாட்டிக்கிட்டமேங்கற ஒரு ஏமாற்றம்தான் தெரிஞ்சுது..

எதுக்கு போய் இதையெல்லாம் கேட்டுக்கிட்டு... தேவையா? பிடிக்கலைன்னுட்டு விலகி போயிட்டா போறாதா?.. என்னையே நான் திட்டிக்கிட்டேன்.

‘ரமேஷ்.. எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை.. சந்தர்ப்ப சூழ்நிலை.. ஒரு தப்ப பண்ணிட்டு அத சரி செய்ய முடியாம..’

‘இது எப்ப நடந்துது டாட்?’ எதுக்குடா இதையெல்லாம் கிளறிக்கிட்டு? விடுறாங்கற மனசை ஒரு தட்டு தட்டி அடக்குறேன்.

‘எதுக்கு கேக்கறே?’

‘இல்ல, அந்தம்மா கூட இருந்த பொண்ணுக்கு எப்படியும் பதினெட்டு வயசு இருக்கும்..’

அப்பாவால ஒன்னும் பேசமுடியலை..

‘அதாவது, நீங்க ஹைதராபாத்ல இருக்கும்போது இது நடந்திருக்கணும். சரியா டாட்?’ டேய் நீ வக்கீலுக்கு படிச்சிருக்கலாம்டாங்குது என் மனசு.

பதிலில்லை.

‘நீங்க பாட்டியோட சாவுக்கு வந்திருக்கும்போது அவங்களோட ‘டெத் பெட்டுல’ உங்க கிட்ட சொன்னது நினைவிருக்கா டாட்?’

பதிலில்லை.

‘டேய், இப்பத்தான் ரமேஷ் வளந்து ஆளாயிட்டானே.. இன்னும் ஏன்டா நீ தனி மரமா நிக்கறே? வயசான காலத்துல உனக்கு ஏதாவது வந்திருச்சின்னா உன்ன பாக்கறதுக்காவது ஒரு பொண்ணு வேணுமேடா? நாப்பது, நாப்பத்தஞ்சி வயசுதானே ஆவுது.. ராஜாவாட்டம் இருக்கியேடா.. நீ நினைச்சா பொண்ணா கிடைக்காது?ன்னு கேட்டாங்க. அதுக்கு நீங்க என்ன சொன்னீங்க டாட். அதுவாச்சும் நினைவிருக்கா?’

திரும்பி அவரை பாக்கறேன். இறுகிய மூஞ்சோட அப்பா வெளியிலயே பாத்துக்கிட்டிருக்கார்.

‘என்னம்மா நீங்க? தோளுக்கு மேல வளந்து நிக்கற பையன் இருக்கறப்போ எனக்கெதுக்குமா வேற ஆளு? ரமேஷ¤க்கு ஒரு பொண்ணை பாத்து கல்யாணம் பண்ணி வச்சிட்டா வரப்போற மருமக என்ன பாத்துக்க மாட்டாளான்னு வாய் கூசாம சாகப்போற அந்த ஆத்மாவ பொய் சொல்லி ஏமாத்தினீங்களே, உங்களுக்கு எப்படிப்பா மனசு வந்துது?’

அப்பா விசும்புற சத்தம் லேசா.. உடம்பு குலுங்கறது தெரியுது.. அழுவராறா என்ன? எதுக்கு? மாட்டிக்கிட்டதுக்கா? இல்ல பாட்டிய ஏமாத்துனதுக்கா?

நான் தீர்மானமா பேசறேன். ‘இனி உங்களுக்கும் எனக்கும் இடையில எதுவுமே இல்ல டாட். இதோ நீங்க ஆர்டர் பண்ண டிபன்தான் உங்க கூட நான் கடைசியா சாப்பிட்ட சாப்பாடு. இந்த வரைக்கும் என்ன வளர்த்து, படிக்க வச்சி ஆளானதுக்கு உங்க கிட்ட என்னைக்கும் எனக்கு நன்றி இருக்கும். அவ்வளவுதான். மத்தபடி நமக்குள்ள எல்லாமே முடிஞ்சி போயிருச்சி. நான் கார் கதவைத் திறந்துக்கிட்டு இறங்கி திரும்பி பாக்காம போகப்போறேன்.. உங்கள விட்டு, உங்க வாழ்க்கைய விட்டு, உங்க மனைவி, மகள விட்டு... இந்த பந்தத்த விட்டு..’

என் பக்கமா நீள்ற அவர் கையை தட்டிவிட்டுட்டு கதவை திறந்துக்கிட்டு இறங்கி நடக்கறேன்..

அப்பா கார்லருந்து இறங்காம சிலையாட்டமா உக்காந்திருக்கார்..

டிரைவர் தூரத்துலருந்து பார்த்துட்டு காரை நோக்கி ஓடறார். மிஸ்டு கால் கிடைச்சிருக்குமோ என்னவோ?

முற்றும்

7 comments:

Gnaniyar @ நிலவு நண்பன் said...

இது நிஜக்கதையா நண்பரே..

மனதை மிகவும் உருக்கி விட்டது..

நிஜக்கதையாக இருந்தால் இரகசியங்களையெல்லாம் வெளியிடவேண்டாமோ என்று தோன்றுகிறது

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க நிலவு நண்பன். முதல் முறையா பின்னூட்டம் இட்டிருக்கீங்க. நன்றி. உங்க புனைப் பேர் சூப்பரா இருக்குங்க.

இது நிச்சயமா நிஜக்கதையில்லை. முழுக்க முழுக்க என் கற்பனைதான். நம்புங்க!

G.Ragavan said...

ஜோசப் சார், அந்த அப்பா அதைச் செய்யலைன்னு நீங்க சொல்வீங்கன்னு எதிர் பார்த்தேன். ஆனால் அவரு அதைச் செஞ்சிருக்காருன்னு முடிச்சிருக்கீங்க. ம்ம்ம்ம்....சரி. இப்ப இந்தப் பையன் அப்பா மேல எதுக்குக் கோவப் படுறான். அவனுக்குத் தெரியாம ஒருத்திய வெச்சிருந்ததுக்கா? இல்லை அந்தப் பொண்ணைக் கல்யாணம் பண்ணாம வெச்சிருந்ததுக்கா?

டிபிஆர்.ஜோசப் said...

மருமக என்ன பாத்துக்க மாட்டாளான்னு வாய் கூசாம சாகப்போற அந்த ஆத்மாவ பொய் சொல்லி ஏமாத்தினீங்களே, உங்களுக்கு எப்படிப்பா மனசு வந்துது?’//

ராகவன், அந்த மகன் அப்பா தன்கிட்டருந்து இத்தனை வருஷமா இந்த உண்மையை மறைச்சிட்டாரேன்னு கூட வருத்தப்படலை ஆனா தன் பாட்டியை சாகப் போற நேரத்துல கூட பொய் சொல்லி ஏமாத்திட்டாரேன்னு கோபப்படறான். சாதாரணமா யார் கிட்ட எப்படி நடந்தாலும் ஒரு உயிர் இந்த உலகத்த விட்டு போற நேரத்துல அத சமாதானமா அனுப்பி வைக்கத்தான் விரும்புவாங்க. அதுக்காகத்தாண்டா பாட்டிக்கிட்ட இந்த உண்மைய மறைச்சேன்னு அப்பா மகன் கேட்டப்போ சொல்லியிருக்கலாம். ஆனா குத்த உணர்வால பேச முடியாம நிக்கிறார். ப்ப, அப்பா வேணும்னுதான் தன் சுயநலத்துக்காக பாட்டிய மரணப்படுக்கைல கூட ஏமாத்தியிருக்கார்ங்கற கோபம்தான் மகனுக்கு. அந்த சூழ்நிலையில யாருக்கும் அந்த கோபம் வரும்னு நினைச்சேன்.

சரியான முடிவாத்தான் இருக்கணும்னு இல்ல. ஒவ்வொருத்தர் கண்ணோட்டத்துல வேறுபடலாம்.

டிபிஆர்.ஜோசப் said...

உண்மைதான். பாட்டியை ஏமாத்திட்டீங்களேப்பான்னுதான் மகன் சொல்றாரே தவிர என்னை ஏமாத்திட்டீங்கன்னு சொல்லலை இல்லையா? ஒரு வேளை இந்த கோபம் தாற்காலிகமா இருக்கலாம். ஆனா அப்பாவ பாருங்க! போனா போடாங்கறா மாதிரி இறங்கி போயி தடுக்காம மகன் ஹோட்டலை விட்டு வெளியே போறதுக்குள்ளேயே டிரைவருக்கு மிஸ்ட் கால் குடுக்கறாரே? அது எதை காட்டுது.. அவன் போட்டும் நாம நம்ம வழிய பாத்துக்கிட்டு போலாம்னுதானே..

பெத்த மனம் பித்து பிள்ளை மனம் கல்லுன்னு சொல்வாங்களே அதுல பெத்த மனம்னு சொல்றது தாய்க்கு மட்டும்தான் போல.

Dr.Srishiv said...

அன்பின் ஜோசப் சார்
வணக்கம், வாழிய நலம், ஒரு அருமையான கதை கொடுத்திருக்கின்றீர்கள். ஒரு மகனின் அந்த உணர்வுகளை எப்படி அப்படியே வடித்தீர்கள் என்றுதான் புரியவில்லை, இதில் அந்த கடைசிப்பகுதியான துரோகம் தவிர்த்து, பிள்ளையை உதாசீனம் செய்யும், தன் பணி மட்டுமே கண்ணாயிருக்கும் பல தகப்பன்களை எனக்குத்தெரியும்...அசத்தல் சார், இன்னும் எழுதுங்கள்.வாழ்க வளமுடன்,
அன்புடன்,
ஸ்ரீஷிவ்...

டிபிஆர்.ஜோசப் said...

பிள்ளையை உதாசீனம் செய்யும், தன் பணி மட்டுமே கண்ணாயிருக்கும் பல தகப்பன்களை எனக்குத்தெரியும்...//



பிள்ளைங்க மேல உயிரையே வச்சிட்டு அவங்கள பிரிஞ்சி இருக்க முடியாம தவிக்கற தகப்பன்களையும் நான் பார்த்திருக்கிறேன். அதை வைத்தும் ஒரு கதை பண்ண வேண்டும் என்றும் ஆவல். நேரம் கிடைக்கும்போது எழுதுகிறேன்.

உங்கள் கருத்துக்கு நன்றி Srishiv.