9.12.05

அப்பா ஒரு ஹிட்லர்! – 3

  • பதிவு 2

  • பதிவு 1


  • மதனிடமிருந்து புறப்பட்டு வருவதாக தந்தி வந்ததுமே அவனுடைய வீட்டிலிருந்த எல்லோரையும் பரபரப்பு தொற்றிக்கொண்டது. என்ன பிரச்சினை என்று தெரியாமல் ஆளாளுக்கு பேச ஆரம்பித்தனர்.

    வீட்டு மருமகள் இருவருக்குமே மதனை ஆரம்ப முதலே அவ்வளவாக பிடிக்காது. எப்போதும் சிடுசிடுவென இருப்பதும் வயது வித்தியாசம் பாராமல் கோபத்தில் எடுத்தோம் கவுத்தோம் என்று சகட்டுமேனிக்கு பேசிவிட்டு பிறகு வருத்தப்படுபவன் என்பதால் அவனிடமிருந்து தள்ளியே இருப்பார்கள்.

    மதனுடைய சகோதரர்களைப் பற்றி கேட்கவே வேண்டாம். அம்மாவுக்கு மதன் செல்லப் பிள்ளை. அதனால் அவன் என்ன செய்தாலும் அம்மா அவனைத் தட்டிக்கேட்காததால்தான் அவன் மனதில் பட்டதையெல்லாம் சொல்கிறான், செய்கிறான் என்று நினைத்தார்கள். ஆகவே தங்களுக்கு அமைந்த மனைவியரைவிட கோபக்காரியாக, ஆணவம் பிடித்தவளாக அவனுக்கு அமைந்து அவன் கண்ணில் விரல் விட்டு ட்டுபவளாக அமையவேண்டும் என்று ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் பூனையைப் போன்ற சாதுவான ஒரு பயந்தாகொள்ளியாக பத்மா அமைந்ததில் அவர்களுக்கு ஏக வருத்தம்.

    ஆனால் இப்போது உடனே புறப்பட்டு வருவதாய் மதனிடமிருந்து தந்தி வந்ததும் ‘ஆஹா ஏதோ பிரச்சினை போலருக்குது. ஹனிமூன் ட்ரிப்பை கேன்சல் பண்ணிட்டு புறப்பட்டு வராரு. பயலுக்கு வேணும்’ என்று இருவரும் உள்ளூர சந்தோஷப்பட்டாலும் வெளியே, அதுவும் தங்களுடைய தாயாரின் முன்னால் அதைக் காட்டிக்கொள்ளாமல், ‘என்னமோ பிரச்சினை போலருக்குமா? இவன் ஏதாவது கோபத்துல பிரச்சினை பண்ணியிருப்பானோ? நான் உடனே புறப்பட்டு போய் பார்த்துட்டு வரட்டுமா’ என்றான் சுந்தரம்.

    ‘டேய் அதெல்லாம் ஒன்னு வேணாம்டா.’ என்று சிடுசிடுத்தாள் அலர்மேல் அம்மாள். அவளுக்கு, தன் மூத்த பிள்ளைகள் இருவருக்கும் மதனைக் கண்டாலே ஆகாது என்று நன்றாய் தெரியும். ‘ அங்க பெருசா ஒரு பிரச்சினையும் இருக்காது. இருந்தாலும் நீங்க வேற போய் பிரச்சினையை பெரிசாக்கி விடாம இருந்தா சரி. டேய் சங்கர், நீ போய் மதனோட ஃப்ரெண்டு ஒருத்தன் கார் கொண்டு வரேன்னு சொன்னானே அவனை ஃபோன்ல கூப்டு மதன் நாளைக்கு வரான்னு சொல்லி ஸ்டேஷனுக்கு வருவானான்னு கேளு. போ.’

    ‘என்கிட்ட அந்த ஆளோட ஃபோன் நம்பர் இல்லியேம்மா’ என்று நழுவப் பார்த்த தன் இரண்டாவது மகனைப் பார்த்து முறைத்தாள் அலர்மேல் அம்மாள். ‘டேய் பொய் சொல்லாதே. கல்யாண வீட்ல வச்சி மதன் உங்கிட்ட ஃபோன் நம்பர சொன்னத நான் என் காதால கேட்டேன். போடா போய் எங்க வச்சேன்னு தேடிப்பாரு. கூடப்பிறந்தவன்களாடா நீங்க? உதவி பண்ணுங்கடான்னா ஒருத்தனும் வரமாட்டான். கோள் சொல்றதுக்கும் புரணி பன்றதுக்கும் கூப்பிடறதுக்கு முன்னால வந்து நிப்பான்ங்க.’ என்றவள் தன் மருமகள் இருவரையும் பார்த்தாள். இருவருக்கும் மாமியார் நம்மைத்தான் மறைமுகமாக சொல்கிறாள் என்று தெரிந்தது. ஒருவர் மற்றவரைப் பார்த்து கண் சாடையால் ‘பார்த்தியா இந்த கிழவிக்குருக்கற திமிர?’ என்றனர்.

    மருமகள்கள் இருவருமே தமிழகரசு ஊழியர்கள். அதுவும் ஒரே அலுவலகம். மூத்தவன் சுந்தரத்தை திருமணம் செய்த சுந்தரி வேலை பார்த்த அதே அலுவலகத்தில் வேலை செய்த நளினியை தன் கொழுந்தனுக்கு சிபாரிசு செய்தவளே அவள்தான். இருவரும் நெருங்கிய தோழிகள் என்பது அலர்மேல் அம்மாளுக்கே திருமணத்திற்குப் பிறகுதான் தெரிந்தது. நளினி வீட்டிற்கு வந்த நாளிலிருந்தே இருவரும் கூட்டணியமைத்து குடும்பத்தில் கலகம் செய்ய ஆரம்பித்தனர்.

    மூத்தவன் சுந்தரம் தன் தந்தை மரித்தபோது விட்டுச் சென்ற ஆட்டொமொபைல் உதிரி பாகங்கள் மொத்த விற்பனை வியாபாரத்தை ஏற்று நடத்திவந்தான். அவன் பொறுப்பேற்று ஐந்து வருடங்கள் ஆகியும் வியாபாரம் அவனுடைய தந்தை மரித்தபோது இருந்த அதே நிலையில்தான் இருந்தது. ‘நீ எங்கடா, வாரத்துல பாதிநாள் மதியானத்துக்கு மேலதான் வீட்டுலருந்தே புறப்பட்டு போறே. எப்ப வந்தாலும் கடையில முதலாளி இருக்கலைன்னா எந்த வாடிக்கைக்காரன் கடைக்கு வருவான்? உங்கப்பா பொழுது விடிஞ்சலது இருந்து பொழுது சாய்ற வரைக்கும் கடையில இருந்தாரு. இல்லன்னா ஆளுக்கு ஒரு பெட்ரூமுன்னு போட்டு இவ்வளவு பெரிய வீட்ட கட்டியிருப்பாராடா? நீயும் அதேமாதிரி கடைய பார்த்திருந்தேனா இந்த கடை மட்டுமில்ல நம்ம வீடும் எங்கயோ போயிருக்கும். இப்படியே போனா உருப்பட்டாப்லத்தான். நான் சொல்றது இப்ப உனக்கு தெரியாதுடா. ரெண்டு மூனு புள்ளக்குட்டிங்க பொறந்து அது வளர்ந்து கல்யாணத்துக்கு நிக்கும்போது தெரியும்.’

    சுந்தரமோ தன் தாயின் அறிவுரையை வெறும் புலம்பலாகவே எடுத்துக்கொண்டு உதாசீனப்படுத்துவான். சாயந்திரமானால் நண்பர்கள், பார்ட்டி என்று சுற்றிவிட்டு வீடு திரும்பும்போதே நள்ளிரவைத் தாண்டிவிடுது. இதுல எங்க காலங்கார்த்தால எழுந்து கடைக்கு போறது? அம்மாவுக்கு வேற வேலையில்ல. கடைக்கு வர்ற கஸ்டமர் வந்துக்கிட்டேத்தான் இருப்பான். இதென்ன பலசரக்கு கடையா டெய்லி வரதுக்கு? வண்டி ரிப்பேர் ஆனா வரான். எங்க போயிருவான்? கல்யாணம் முடிஞ்சி ரெண்டு வருஷம் கழிச்சி இப்பத்தான் ஒன்னு பொறந்திருக்கு. அதுவும் ஆம்பிளை. பொண்ணு பொறக்கட்டும் பாத்துக்கலாம் என்ற நினைப்பு அவனுக்கு.

    அதற்கடுத்த சங்கரலிங்கம் பி.காம் பட்டதாரி. எம்.பி.ஏ படிக்கலாம் என்று நினைத்திருந்த நேரத்தில்தான் யாரும் எதிர்பாராமல் 'நெஞ்சு லேசா வலிக்குதுடி'என்ற முனகலுடன் சோபாவில் சாய்ந்த அவனுடைய தந்தை மருத்துவர் வருவதற்குள் மரணமடைந்தார். 'என்னால உன் மேல் படிப்புக்கு பணம் தரமுடியாதுரா. நீ வேணும்னா ரெண்டு வருஷம் வேலை செஞ்சிட்டு அப்புறம் படிச்சிக்கோ' என்று மூத்தவன் கை விரிக்க. பப்ளிக் சர்வீஸ் கமிஷன் எழுதி அதிர்ஷ்டவசமாய் முதல் பட்டியலில் அவன் பெயர் வந்து தமிழக அரசில் உயர்கல்வி இலாகாவில் வேலை கிடைத்தது.

    வீட்டில் கடைக்குட்டி மதனகாமராஜன். சிறுவயது முதலே படிப்பில் படு சுட்டி. தன் தாயாருக்கு செல்லப்பிள்ளை வேறு. அவன் பள்ளி இறுதி தேர்வில் மாகாணத்திலேயே முதலாவதாக வந்தபோது அவனுடைய தாயாரும் தந்தையும் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. நீ, நான் என்று போட்டி போட்டுக்கொண்டு வந்த கல்லூரிகளில் சென்னையிலேயே மிகவும் பேர் பெற்ற கிறீஸ்துவ கல்லூரி ஒன்றில் சேர்ந்து இளைநிலை பட்டதாரி வகுப்பில் முதலாம் ஆண்டு படித்துக்கொண்டிருக்கையில்தான் அவனுடைய தந்தை எதிர்ப்பாராமல் மரணமடைய சங்கரலிங்கத்தின் மேற்படிப்புக்கு பணமில்லை என்று கையை விரித்த சுந்தரம் மதனுடைய படிப்பைத் தொடரவும் அதே பதிலைத்தான் சொன்னான். ஆனால் அலர்மேல் அம்மாள் ஊரில் தன் பேரிலிருந்த ஐந்து ஏக்கர் விளை நிலத்தை விற்று மதனை முதுகலைப் பட்டம் பெறவைத்தாள்.

    அவளுடைய இந்த செயல் மூத்த சகோதரர்களை ஆத்திரமடைய செய்யவே இருவரும் அன்று முதல் மதனை ஒரு பொது எதிரியாகவே கருதினர்.

    மதன் முதுகலைப்பட்டப் படிப்பிலும் சென்னைப் பல்கலைக் கழகத்திலேயே முதல் மாணவனாக தேர்ச்சி பெற்றதுடன் ஐந்து தங்கப் பதக்கங்களையும் பெற்றதும் 'பாத்தீங்களாடா எம்புள்ளைய?'என மிகவும் பூரித்திப்போனாள் அவனுடைய தாயார்.

    இதைக் காண பொறுக்காமல் மூத்த சகோதரர்கள் இருவரும் பொறாமையால் வெந்து அவனை மனசுக்குள்ளேயே சபித்தனர்.

    மூத்த மருமகளாய் நுழைந்த சுந்தரியும் வீட்டிற்குள் காலடி வைத்த நாளிலிருந்தே, அதாவது முதலிரவு முடிந்த நேரத்திலிருந்து, மதனை விரோதியாய் பாவிக்க துவங்கினாள். எல்லாம் முதலிரவில் சுந்தரத்தின் பயிற்சி. நாமெல்லாம் தலையணை மந்திரத்தை மனைவிதான் ஓதுவாள் என்று கேள்விப் பட்டிருக்கிறோம். இங்கே சுந்தரம் தன்னுடைய குடும்ப ஹிஸ்டரி முழுவதையும் முதலிரவிலேயே தன் புது மனைவியின் காதில் ஓத அவளும் அன்று முதலே சிலம்பெடுத்து ஆடத்துவங்கினாள்.

    மதன் தன்னுடைய கல்லூரி படிப்பிலேயே குறியாயிருந்ததால் வீட்டில் நடப்பது எதிலும் குறிப்பாக தன் இரு மூத்த சகோதரர்கள் சம்பந்தப்பட்ட எந்த விஷயத்திலும் தலையிட மாட்டான். அவனுடைய இந்த குணம் ‘சரியான தலைக்கணம் பிடிச்சவன்’ என்ற பட்டத்தையே அவனுக்கு பெற்றுக்கொடுத்தது.

    மேலும், மதனுக்கு சிறுவயது முதலே அசாத்திய கோபம் வரும். கோபம் எந்த நேரத்தில் வரும் என்றே யாராலும் கணிக்க முடியாது. கோபம் வந்துவிட்டால் எதிரில் இருப்பவர் யாராயிருந்தாலும் மனதில் தோன்றுவதை படார் என்று போட்டு உடைக்கும் அவனுடைய சுபாவம் குடும்பத்தில் அவனைத் தனிமரமாக நிற்க வைத்தது.

    ‘டேய் இது உனக்கு நல்லதில்லடா. உன் கூடப் பிறந்தவன்களுக்கே உன்னை கொஞ்சமும் புடிக்கமாட்டேங்குதே, நாளைக்கு படிச்சி முடிச்சி வேலைக்கி போற எடத்துல இப்படி நடந்துக்கிட்டா யார்றா உன்னை வேலைக்கி வச்சிக்குவா? கோபம் வரும்போது ‘பிள்ளையாரப்பா பிள்ளையாரப்பா’ன்னு பத்து தடவை சொல்லு. கோபம் தானா பறந்துபோகும்.’ என்று அறிவுரை கூறும் தன்னை கொஞ்சமும் சட்டை செய்யாமல் செல்லும் தன் மகனைப் பார்த்து பெருமூச்சு விடுவதைத் தவிர ஒன்றும் செய்ய முடியவில்லை அந்த தாயால்.

    ‘எல்லாம் நீங்க குடுக்கற எடம்மா. சின்ன வயசுலருந்தே அவன் இப்படித்தான் அட்டூழியம் பண்ணிக்கிட்டிருக்கான். அப்பல்லாம் நீங்களும் அப்பாவும் எம்புள்ள படார், படார்னு எப்படி பேசறான் பார், பின்னால இவன் பெரிய அரசியல்வாதியா வருவான், வக்கீலா வருவான்னு பீத்திக்கிட்டிருந்துட்டு இப்ப வருத்தப்பட்டு என்ன பண்றது? படிப்புல பெரிசா ரேங்க் வாங்கி என்ன பிரயோசனம்? இவன் குணத்துக்கு எவனும் வேலைக்கி வச்சிக்கிர மாட்டான். அப்படியே வச்சிக்கிட்டாலும் ரெண்டே நாளைல வீட்டுக்கு அனுப்பிருவான். அப்பவாவது இவனுக்கு புத்தி வருதான்னு பார்ப்பம். அப்ப புத்தி வந்தாலும் பிரயோசனம் இருக்காது. இத சொன்னா உனக்கும் உன் பெஞ்சாதிக்கும் பொறாமைம்பீங்க. எப்படியோ போங்க.’

    இதுதான் சந்தர்ப்பம் என்று உபதேசம் செய்யும் தன் மூத்த மகனை பார்க்கும்போதெல்லாம் இவன் சொல்றமாதிரியே நடந்தா என்ன செய்வது என்று மாய்ந்து போவாள் அலர்மேல் அம்மாள்.

    ஆனால் எப்படி எதுவும் நடக்காமல் படித்து முடித்து முதல் முறையாய் சென்ற நேர்காணலிலேயே தேர்வு பெற்று மத்திய வருமான வரித்துறையில் இளநிலை அதிகாரியாக கிடைத்த வேலையை கடந்த ஐந்து வருடங்கள் காப்பாற்றியதுடன் முதல் மூன்று வருடத்திலேயே அடுத்த நிலைக்கு பதவி உயர்வும் பெற்றான் மதன்.

    அப்போதுதான் வந்தது பத்மாவின் புகைப்படமும் ஜாதகமும். புகைப்படத்திலிருந்த பெண்ணும் பிடித்து இருவருடைய ஜாதகமும் அம்சமாய் பொருந்த மதனின் கரம் பற்றி கடைசி மருமகளாய் வீட்டிற்குள் நுழைந்தாள் பத்மா!


    தொடரும்.

    9 comments:

    G.Ragavan said...

    மதனுடைய வாழ்க்கைல இவ்வளவு இருக்கா....இன்னும் என்னவெல்லாம் வரப் போகுதோ.........பொறுத்திருந்து பாப்போம்.

    டிபிஆர்.ஜோசப் said...

    மதனை வெறும் கதாபாத்திரமாக கருதாமல் ஒரு முழு மனுஷனாக வடிக்கவேண்டும் என்பதுதான் என் ஆவல்.

    இனி வரும் பதிவுகளில் அவனுடைய முழு பரிமாணத்தையும் காண்பிக்க முயற்சி செய்வேன்.

    இடையில போரடிச்சாலும் தொடர்ந்து படிச்சி உங்க கருத்துகளை எழுதுங்க ராகவன்.

    பத்மா அர்விந்த் said...

    I can understand Mathan as I have seen people like him!!
    a good write up with lots of patience. You already have lots of characters in the story.

    தங்ஸ் said...

    Etha muthalla padikarathunnu(En Kathaiyulagam or Ennulagam) thinamum oru periya porraattam...rendu naala 'En Kathaiyulagam' thaan first choice..

    Sorry for not writing in tamil fonts..

    யாத்ரீகன் said...

    70'ஸ்ல வந்த கருப்பு வெள்ளைப்படங்கள் மாதிரியே இருக்கே....

    ஆனா ரொம்ப நாளாச்சு இப்படி ஒரு கதை படிச்சு.. பயங்கர பொருமை உங்களுக்கு,.. பின்னே இவ்ளோ விவரிச்சு எழுதியிருக்கீங்க... :-)

    -
    செந்தில்/Senthil

    டிபிஆர்.ஜோசப் said...

    நன்றி தங்கம்.
    எப்பவுமே நிஜத்தை விட கற்பனைக்குத்தான் மவுசு அதிகம்.

    நிஜம் சில சமயங்களில் கசக்கும். கற்பனை அப்படியல்ல..

    நானும் அப்படித்தான். தமிழ்மணத்தில் பதிவாகும் கதை, கவிதைகளைத்தான் முதலில் படிப்பேன்.

    டிபிஆர்.ஜோசப் said...

    70'ஸ்ல வந்த கருப்பு வெள்ளைப்படங்கள் மாதிரியே இருக்கே....//

    அன்னைக்கி கறுப்பு வெள்ளை படங்களிலிருந்த கதை இப்போது கலரில் காணாமல் போய்விட்டதே..

    டிபிஆர்.ஜோசப் said...

    தேன்துளி,

    I can understand Mathan as I have seen people like him!! //

    I don't know in which meaning you made this observation. My Mathan is a very nice person, like the jackfruit. He is rough outside but sweet inside.

    பத்மா அர்விந்த் said...

    Thats what I meant!!