மாதத்தின் முதல் நாள் மதனுக்கு வேறொரு முக்கியமான வேலையும் உண்டு.
அவனுடைய அறையில் ஒரே அளவிலான ஐந்தாறு பிளாஸ்டிக் டப்பாக்கள் இருக்கும். ஒவ்வொன்றின் தலையிலும், பால், கரண்ட், படிப்பு, ஞாயிறு, வாரநாள் மற்றும் உதிரி என்று ஒரு பேப்பரில் எழுதி ஒட்டி வைத்திருப்பான்.
சம்பளப் பணத்தை பிரித்து ஒவ்வொரு டப்பாவிலும் அதனதற்குரிய தொகையை வைத்துவிட்டு மீதமுள்ள தொகையை தன் அலமாரியில் வைத்து பூட்டிவிடுவான். அத்துடன் ‘சேமி’ என்ற டப்பாவும் இருக்கும். மாதக் கடைசியில் மற்ற டப்பாக்களில் இருக்கும் தொகையும் அலமாரியில் வைத்து பூட்டிய தொகையில் அவனுடைய கைச்செலவு போக மீதமிருந்தால் அதனுடன் சேர்த்து இந்த ‘சேமி’ டப்பாவுக்கு மாற்றப்படும். மூன்று, நான்கு மாதங்களுக்கு ஒரு முறை சேரும் தொகை வங்கி கணக்கில் போய் சேரும்!
பால், கரண்ட், படிப்பு, உதிரி என்றால் புரிகிறது. அதென்ன ஞாயிறு மற்றும் வாரநாள்?
வாரத்தில் ஒருநாள், அதாவது ஞாயிற்றுக் கிழமைகளில் ஆடு அல்லது கோழிக்கறி நிச்சயம் வாங்கவேண்டும். அப்புறம் முதல் மற்றும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் சினிமா. இந்த இரண்டு நாட்களிலும் சினிமாவுக்கு செல்லவில்லையென்றால் பத்மாவுக்கு தலை வெடித்துவிடும். சென்னையிலிருக்கும் எல்லா அரங்குகளிலும் ஓடுகின்ற சினிமாவையும் பார்த்துவிடலாமே என்ற எண்ணத்தில் மதனை திருமணம் புரிந்தவளுக்கென மதன் கொடுக்கும் ஆறுதல் பரிசு. அதற்காகும் செலவுக்கு தேவையான பணத்தை ஞாயிறு டப்பாக்களில்!
வார நாட்களில் எந்தெந்த நாளில் என்ன சமையல் செய்ய வேண்டும். அதற்கு எத்தனை செலவிடலாம் என்று முதல் தேதியே நிர்ணயிக்கப்பட்டு அதற்கு தேவையான தொகை வார நாள் டப்பாவில்!
இதுதான் சமையல் அட்டவணை! திங்கள் கிழமை: சாம்பார், செவ்வாய் மற்றும் வியாழன்: மீன் குழம்பு, புதன்: குருமா அல்லது வத்தக்குழம்பு, வெள்ளி:ரசம், சனி பத்மாவின் விருப்பம் மற்றும் வசதிக்கேற்ப..!
இந்த அட்டவணையை அடுக்களை சுவற்றில் ஒட்டி வைத்திருப்பான். பத்மாவுக்கு மறந்துவிடக்கூடாதே என்ற நினைப்பில்!
மதனுடன் தனிக்குடித்தனம் வந்த ஆரம்ப காலத்தில் அவனுடைய இந்த திட்டங்களைக் கண்டு வாயடைத்துப் போய் நிற்பாள் பத்மா. அவளுடைய வீட்டில் அம்மாதான் இதையெல்லாம் பார்த்துக்கொள்வாள். அன்றைக்கு என்ன சமைக்க வேண்டும் என்று தீர்மானிப்பதெல்லாம் அவளுக்கு நினைவு தெரிந்தவரை அம்மாதான். ‘அதுவும் எப்போ? மார்க்கெட்டுக்கு போனதுக்கப்புறம். அங்கே என்ன கிடைக்கிதோ அதுதான் அன்றைக்கு. இங்கன என்னாடான்னா? இதுக்குன்னு போய் வேல மெனக்கெட்டு சின்ன பிள்ளை கணக்கா.. டப்பா, டப்பாவா வச்சிக்கிட்டு..! ஐயோ, இந்த ஆம்பிள கூட என்னத்த குடும்பத்த நடத்தி எப்படி சீரழியப்போறேனோ தெரியலையே’ என்று புலம்புவாள்.
மீனாவின் முதல் வருட பிறந்தநாள் மற்றும் காதுகுத்து விசேஷத்துக்கு வந்திருந்த பத்மாவின் குடும்பத்தார் இதையெல்லாம் பார்த்துவிட்டு மலைத்துப் போய் நின்றனர்.
‘அடியே, என்னாடி இது? என்ன மனுஷன்டி இவன்? ஒரு பொம்பளைக்கி என்னத்த சமைக்கிறதுன்னு கூட முடிவெடுக்க முடியாம இதென்னடி கூத்து. நல்ல மாப்பிள்ளைய பாத்த போ..’ என்று பத்மாவின் பாட்டி தாடையில் இடித்துக்கொண்டு தன் மகனைப் பார்த்து நீட்டி முழக்கியபோது என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் விழித்தார் பத்மாவின் தந்தை.
அதோ, இதோ என்று பதினைந்து வருடங்கள்!
ஆரம்பத்தில் ‘இதென்ன சின்ன பிள்ளை விளையாட்டா இருக்கு’ என்று புலம்பிய பத்மா இப்போதெல்லாம் எல்லா மாதமும் தவறாமல் நடைபெறும் இச்சடங்கில் முழு ஈடுபாட்டுடன் கலந்துக்கொள்வாள்.
மதன் எல்லா டப்பாக்களிலும் இம்மாத தொகையை வைப்பதற்கு முன் டப்பாக்களை திறந்து மேசையின் மேல் ஒவ்வொன்றாக கவிழ்த்தான். ‘ஞாயிறு’ டப்பாவிலிருந்து சில ஐந்து ரூபாய் நோட்டுகளும் சில்லரைகளும் விழுந்து சிதறின. எண்ணிப்பார்த்தான். பதினைந்து ரூபாய் மற்றும் சில்லரை. கடந்த மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை மாலை மூன்று மணியிலிருந்து இரவு முடிய விடிய, விடிய நல்ல மழை. அதனால் சினிமா கட்டாகிப்போனது.
‘உதிரி’ டப்பாவில் சுளையாய் நாற்பது ரூபாய்! கடந்த மாதம் யாரும் நோய்வாய் படவில்லை. விருந்தாளிகள் வரவில்லை!
இரண்டு டப்பாக்களிலும் இருந்த தொகையை ‘சேமி’ டப்பாவுக்கு மாற்றிவிட்டு பத்மாவைப் பார்த்து புன்னகைத்தான். ‘நாம இந்த டப்பாவ கவுத்து நாலு மாசமாவுது. எவ்வளவு இருக்குன்னு எண்ணி பாத்துரலாமா?’
பத்மாவும் ஆவலுடன் ‘நாந்தான் எண்ணுவேன்’ என்று பரபரப்புடன்
டப்பாவை கவிழ்க்க அதிலிருந்து விழுந்து சிதறிய சில்லரை காசுகள் அறையின் நாலா திசையிலும் ஓடின.
‘கழுதை, கழுதை. எத்தனை தடவை சொன்னாலும் நீ திருந்தவே மாட்டேடி. எத எடுத்தாலும் அவசரம்தான். போ.. எல்லாத்தையும் பொறுக்கு.’ என்றான் மதன் பொய்க்கோபத்துடன்.
‘வெளக்குமாத்த எடுத்துக்கிட்டு வரேன், இருங்க’ என்ற அடுக்களைக்கு ஒட முயன்றவளை பிடித்து நிறுத்தி தலையில் செல்லமாய் குட்டினான்.
‘என்னங்க?’ என்றவளைப் பார்த்து முறைத்தான். ‘ஏன்டி லூசு. காசு பணத்த யாராவது விளக்குமாத்த வச்சி கூட்டுவாங்களா? நீதான கொட்டுன? குனிஞ்சி ஒவ்வொன்னா எடு.’
‘ஐயோ, ஐயோ. மூட நம்பிக்கை அது இதுன்னு லெக்சர் அடிப்பீங்க. காசுன்னதும் லட்சுமி வெளக்குமாத்தால பெருக்கக் கூடாதும்பீங்க. நீங்களும் உங்க நம்பிக்கையும்.’ தனக்குள்ளே முனகிக்கொண்டே அறையின் நாலாபுறத்திலும் சிதறிக்கிடந்து சில்லரைக் காசுகளை தேடி எடுத்தாள் பத்மா.
‘இந்தாங்க.’ என்று கைகளை நீட்டியவாறு நின்றவளைப் பார்த்து புன்னகைத்தான் மதன்.
‘இப்ப தெரியுதில்ல? சிதறிவிடறது சுலபம், சேக்குறது கஷ்டம்னு! இங்க பார். போன மூனு, நாலு மாசத்துல சிறுக சிறுக சேமிச்சது எவ்வளவு தெரியுமா, ஐநூறு ரூபாய்! இதையும் சேர்த்தா பாங்குல எவ்வளவு இருக்கும்னு நினைக்கறே. குத்து மதிப்பா சொல்லு?’
மதனின் தன் கையிலிருந்த பாங்க் பாஸ் புத்தகத்தை வாங்க நீட்டிய பத்மாவின் கையை தட்டிவிட்டான். ‘அதெல்லாம் தர மாட்டேன். நீ சொல்லு. எவ்வளவு இருக்கும்?’
பத்மா இரண்டு கருவிழிகளும் மேலே சொருகிக்கொள்ள விட்டத்தை பார்த்துக்கொண்டே சிறிது நேரம் நின்றாள். பிறகு கண்கள் இரண்டும் விரிய மதனைப் பார்த்தாள். ‘ஒரு ரெண்டாயிரம்? இல்ல, இல்ல.. அஞ்சாயிரம்..’ மதன் இல்லை என்பது போல தலையசைக்கவே, அப்ப பத்தாயிரமா?’ என்றாள்.
மதன் இல்லை என்று தலையசைத்துவிட்டு தன் கையிலிருந்த புத்தகத்தை அவளிடம் கொடுத்தான். பத்மாவின் கண்களும் உதடுகளும் சேர்ந்து விரிந்தன.
‘அடேங்கப்பா! பதினஞ்சாயிரமா? எப்படிங்க? போன மூனு, நாலு மாசத்துல இம்புட்டு பணத்த எப்படீங்க சேக்க முடியும்? பொய் சொல்லாதீங்க.’
மதன் சிரித்தான். ‘மக்கு, மக்கு. அத இப்படி கொண்டா. இந்த கணக்க தொடங்கி பன்னிரண்டு வருஷம் ஆவுது. உங்கப்பா இந்த வீட்டை வாங்கி குடுத்தாரே ஞாபகம் இருக்கா? அந்த மாசம் தொடங்குனது.’
பத்மா குழப்பத்துடன், ‘ஆமா’ என்றாள். ‘அதுக்கும் இதுக்கும் என்னங்க சம்பந்தம்?’
‘உங்கப்பாவுக்கு நாம் அந்த பணத்தை திருப்பித் தர வேணாமா? ஒரு லட்சம்னா சும்மாவா?’
பத்மாவுக்கு என்ன சொல்வதென்றே தெரியாமல் தன் கணவனையே பார்த்தாள். ‘இந்த மனுஷனுக்கு என்னத்த சொல்லி புரிய வைக்கிறது? இந்த பணத்த அப்பாவுக்கு திருப்பி குடுத்தா அவங்க என்ன நினைப்பாங்க?’ என்று தனக்குள்ளேயே பேசிக்கொண்டாள்.
‘ஏய் என்ன பதிலே சொல்லாம நிக்கறே? இந்த பதினஞ்சாயிரத்த உங்கப்பாவுக்கு இந்த மாசமே அனுப்பிடலாம்னு பாக்கறேன்.’
பத்மா சுவர்க்கடிகாரத்தைப் பார்த்தாள். ‘மணி இப்பவே பதினோரு மணியாயிருச்சி. இப்ப போயி இத இவர்கிட்ட பேசப்போயி.. அப்புறம் தூக்கத்துக்கு கோவிந்தா போடறாப்பல ஆயிரும். காலைல பார்த்துக்கலாம்.’ என்று தனக்குள் நினைத்துக் கொண்டாள் ‘சரிங்க. நீங்க சொன்னபடியே செய்யலாம். போய் படுங்க. நான் பிள்ளைங்க தூங்கிட்டாங்களான்னு பார்த்துட்டு லைட்டெல்லாம் அனைச்சிட்டு அஞ்சு நிமிஷத்துல வரேன்.’ விட்டால் போதும் என்பது போல் ஓடுபவளைப் பார்த்து புன்னைகத்தவாறே எழுந்த மதன் மேசையிலிருந்த டப்பாக்களை எல்லாம் மூடி முன் அறை மற்றும் தாழ்வாரத்தில் எரிந்துக் கொண்டிருந்த விளக்குகளை அனைத்துவிட்டு தன் அறைக்கு சென்றான்.
தொடரும்
6 comments:
அட! எவ்வளவு நேர்மையானவனாக இருக்கின்றான் மதன். நேர்மையும் நடுநிலைமையும் மிகவும் நல்ல பண்புகள்.
மதனிடமும் பாராட்ட வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன.
சமையல் அட்டவணை நல்லா இருக்கு. தினமும் என்ன சமைக்கலாமுன்னு யோசிக்கறது் ஒரு ரோதனை போங்க.
இங்கேயும் ஒரு தோழி வீட்டுலே இப்படி ஒரு திட்டம் இருக்கு. பொழுது விடிஞ்சவுடனே இன்னைக்கு என்னன்னு பார்த்து ஆக்கி வச்சுட்டா நிம்மதி.
எங்க அண்ணன் ஞாபகம் வருதுங்க.அவர் இப்படித்தான்
(ச்சின்ன டப்பாவெல்லாம் கிடையாது) எல்லாம் கணக்கா வச்சு செலவு செய்வார்.
வாங்க துளசி,
என்னுடைய ரெண்டாவது பொண்ணும் இன்றைய பதிவ படிச்சிட்டு ஃபோன்ல கூப்ட்டு அப்பா நம்ம அம்மாவுக்கும் இந்த மாதிரி டைம் டேபிள் போட்டு குடுங்கப்பா' அப்படீங்கறா?
பாருங்க நம்ம வீட்லயே என்ன சமைக்கிறதுங்கற ரோதனை. ஆனா இந்த திட்டமெல்லாம் கதையில படிக்கறதுக்கு நல்லாருக்கு. வீட்ல நடக்குமா என்ன?
நேர்மையும் நடுநிலைமையும் மிகவும் நல்ல பண்புகள்.//
சந்தேகமேயிலை ராகவன். ஆனா இந்த ஆளுங்களுக்கு இன்றைய சூழ்நிலையில என்ன பட்டம் கிடைக்கும்கறதுதான் கேள்வியே.
// சந்தேகமேயிலை ராகவன். ஆனா இந்த ஆளுங்களுக்கு இன்றைய சூழ்நிலையில என்ன பட்டம் கிடைக்கும்கறதுதான் கேள்வியே. //
கேணையன். கெட்டவன். இளிச்சவாயன். இன்னும் என்னென்னவெல்லாம் இருக்கோ...அத்தனையும் கிடைக்கும்.
நீங்க சொல்றது சரிதான் ராகவன்.
கேணையன், இளிச்சவாயன் சரி. ஆனா கெட்டவன்?
Post a Comment