16.12.05

அப்பா ஒரு ஹிட்லர்.. 8

பத்மா தினமும் மதன் எழுந்திருப்பதற்கு முன்னரே எழுந்து விடுவாள். அலாரமெல்லாம் தேவையிருந்ததில்லை.

வேலைக்காரி, மதன் அலுவலகத்திற்கு சென்ற பிறகுதான் வருவாள். அவள் வரும்வரை முந்தையநாள் இரவில் உபயோகித்த எச்சில் பாத்திரங்களை அப்படியே வைத்திருப்பது மதனுக்கு பிடிக்காது.

ஆகவே பத்மா ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து பரபரவென்று பாத்திரங்களை கழுவி எடுத்துவிடுவாள். பால்காரன் சரியாக ஐந்தரை மணிக்கு வந்து நிற்பான். அந்த நேரத்தில் படியிறங்கி ஓட வேண்டுமே என்று முந்தைய இரவே ஒரு பாத்திரத்தை கீழ்வீட்டில் கொடுத்து வைப்பாள்.

அன்றும் அப்படித்தான். பாத்திரங்களையெல்லாம் தாழ்வாரத்தில் அடிபைப்பின் அருகில் அமர்ந்து கழுவி கவிழ்த்துவிட்டு கீழிறங்கி போய் பாலை வாங்கி வந்தாள். ஸ்டவ்வில் சீமெண்ணை இருக்கிறதா என்று பார்த்தாள். காலை நேர காப்பி, பலகார வேலையெல்லாம் ஸ்டவ்வில்தான். மதன் சென்ற பிறகுதான் அடுப்பை மூட்டுவாள். அடுக்களையிலிருந்து புகை அடுக்களை சுவரில் இருந்த துவாரங்கள் வழியே தாழ்வாரம் சென்று மதன் அமர்ந்து செய்தித்தாள் படிக்கும் முன் அறைக்கும் போய்விட்டாலோ, அவ்வளவுதான். ருத்திர தாண்டவம் டிவிடுவான். மதனுக்கும் வீனாகுட்டிக்கும் புகை என்றாலே அலர்ஜி!

காப்பி போட்டு ஒரு டம்ளர் குடித்தாள். மீதமிருந்த காப்பியை மீண்டும் சுடவைத்தாள். மதனுக்கு காப்பி சுடச்சுட வேண்டும். ஆடை, கீடை படிந்திருக்கக் கூடாது. சூடு ஆறுவதற்கு முன்பே ஒரு கப்பில் காப்பியை ஊற்றி முன் அறைக்கு செல்ல அடுக்களையை விட்டு வெளியே வந்தாள். முன் அறைக்குச் செல்லும் வழியில் பிள்ளைகள் இருவரும் படுத்திருந்த அறையை எட்டிப் பார்த்தாள்.

வீனாகுட்டி கையையும் காலையும் விரித்துக்கொண்டு வாயை திறந்தவாறு ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதைக் கண்டாள். மீனாவை கட்டிலில் காணவில்லை. வியப்புடன் தாழ்வாரத்தில் இறங்கி குளியலறைக்கும் கழிப்பறைக்கும் பொதுவான மின் விளக்கு எரிவதைப் பார்த்தாள். எரிந்துக்கொண்டிருந்தது. ‘இந்த நேரத்துல பாத்ரூம்ல என்ன பண்றா?’ என்ற கேள்வியுடன் குளியலறையை நெருங்கி கதவை லேசாக தட்டினாள். ‘ஏய் மீனா. உள்ள நீயா?’

உள்ளிருந்து பதில் வரவில்லை. மீனா அழுவது போன்ற சப்தம் லேசாக கேட்டது. கையிலிருந்த காப்பி கோப்பையை சுவரை ஒட்டியிருந்த பித்தளை அண்டாவின் மீது வைத்துவிட்டு பதற்றத்துடன் குளியலறைக் கதவைத் திறந்து உள்ளே நுழைந்தாள். அங்கே மூலையில் மீனா குந்த வைத்து அமர்ந்து அழுது கொண்டிருந்தாள். பார்த்த மாத்திரத்தில் பத்மாவுக்கு புரிந்துவிட்டது! கண்கள் வியப்பாலும், சந்தோஷத்தாலும் விரிந்தன.

மீனா பெரிய மனுஷியாகி விட்டாள்!

அவளை நெருங்கி இரு கைகளையும் அவளுடைய கைகளுக்கிடையில் கொடுத்து தூக்கினாள். முகத்தை தன் சேலைத் தலைப்பால் துடைத்தாள். ‘சீ கழுதை’ என்று செல்லமாய் மகளுடைய தலையில் குட்டினாள். ‘நீ வயசுக்கு வந்துட்டேடி. பயப்படாதே. அம்மாவுக்கு மாசம் ஒருதரம் மூனு நாளைக்கு வருமே. அதான். இரு, வேற பாவாட, சட்ட எடுத்துக்கிட்டு வரேன்.’ என்றவள் குளியலறைக்கு வெளியே பித்தளை அண்டாவில் பிடித்துவைத்திருந்த தண்ணீரை தொட்டுப் பார்த்தாள். ‘ரொம்ப ஜில்லுன்னு இருக்கு. இரு, நான் புதுசா தண்ணி அடிச்சித் தரேன். அப்பா எழுந்துக்குறதுக்குள்ள குளிச்சிட்டு துணி மாத்திக்க. ஒரு மூனு, நாலு நாளைக்கு நீ ஸ்கூலுக்கு போமுடியாது. வீனாவ அப்பாகூடத்தான் அனுப்பணும்.’

அடிபைப்புக்கு சென்று அவள் ‘டபக், டபக்’கென்று அடிக்க, சப்தம் கேட்டு மதன் வெளியே வந்தான். சுர்ரென்று வந்த கோபத்துடன் மனைவியை நெருங்கினான். ‘ஏய்.. காலைல எதுக்கு இப்ப அடிக்கறே? காலைல பலார வேலைய பாக்காம இப்ப என்ன அவசரம்? போடி.. நான் இன்னைக்கி சீக்கிரம் போவணும்.’

பத்மா அடிப்பதை நிறுத்தாமல் அவனைப் பார்த்தாள். ‘இந்த மனுஷன் கிட்ட எப்படி சொல்றது? அதுக்கு வேற ஏதாவது குதர்க்கம் சொல்வானோ தெரியலையே?’ என்று ஓடியது அவளுடைய எண்ணங்கள்.

மதனுக்கு கோபம் தலைக்கேறியது. ‘என்னாச்சி இவளுக்கு? நான் சொல்ல, சொல்ல கேக்காம அடிச்சிக்கிட்டே இருக்கறத பாரு. ரொம்ப துளிர் விட்டுப்போச்சின்னு நினைக்கிறேன்.’ என்று நினைத்தான். ‘ஏய், என்ன நான் சொல்லிக்கிட்டே இருக்கேன். நீ அடிச்சிக்கிட்டே இருக்கே?’

பத்மா பக்கெட் நிறைந்ததும் அடிப்பதை நிறுத்தினாள். மதனைப் பார்த்தாள். ‘ஏங்க, இந்த பக்கெட்டை கொஞ்சம் பாத்ரூம்ல கொண்டு வைங்களேன்.’ என்றவள் சட்டென்று நினைவுக்கு வந்தவளாய் நாக்கை கடித்துக்கொண்டாள். பக்கெட்டை எடுக்க குணிந்தவன் கைகளை பிடித்து ஒதுக்கிவிட்டு தானே தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு குளியலறைக்குள் நுழைந்து உடனே கதவை மூடி தாளிட்டாள். ‘ஏய் சட்டுன்னு குளிச்சி முடி. ஷெல்ஃபுல நான் தேச்சிட்டு வச்சிருக்கற மஞ்சள் துண்டு இருக்கு பார். அத பக்கத்துலருக்கற செங்கல்ல தேய்ச்சி குளிச்சி முடிச்சதுக்கப்புறம் மூஞ்சில பூசிக்கோ. அம்மா தேய்க்கறத பாத்திருக்கே இல்லே. குளிச்சி முடிச்சிட்டு உள்ளருந்தே கூப்பிடு. என்ன?’

மதனுக்கு ஒன்றும் புரியவில்லை. பத்மாவின் பின்னால் குளியலறை வரை சென்றவன் அவள் பேச்சுக் குரல் கேட்டு மூடியிருந்த கதவை திறக்காமல் வெளியிலேயே நின்றான். ‘யார் கிட்ட பேசறா இவ? யார் உள்ள? அதுவும் கதவ தாள்ப்பாள் போட்டுக்கிட்டு’ என்று நினைத்தவன் ஒட்டியிருந்த பிள்ளைகளுடைய படுக்கையறையை எட்டி பார்த்தான். அங்கே மீனாவை மட்டும் காணவில்லை.

அவன் மீண்டும் குளியலறையைப் பார்த்தான். குளியலறைக் கதவைத் திறந்துக் கொண்டு வெளியே வந்த பத்மா அவனைப் பார்த்து புன்னகை செய்தாள்.

‘என்னடி, என்ன விஷயம். சொல்லேன்.?’ என்றவனைப் பார்த்தாள். ‘நம்ம மீனா பெரிய மனுஷியாய்ட்டாங்க.’ என்றாள் வெட்கத்துடன்.

மதன் அவளை விஷமத்துடன் பார்த்தான். ‘அதுக்கு நீயேன்டி இப்படி வெக்கப் படறே? பொண்ணு பெரிய மனுஷியாய்ட்டா, நீ இன்னும் சின்ன பொண்ணு மாதிரியே கோணங்கித்தனம் பண்ணு. சரி அதுக்கு என்ன இப்போ? எல்லா பொண்ணுங்களுக்கும் நடக்கறதுதானே.. சரி, சரி, போய் காப்பி போட்டு கொண்டுவா.. அவள ஒரு வாரத்துக்கு வீட்ல வச்சி கறியும் மீனும் ஆக்கிப்போடு. வீட்லருந்தே படிக்கட்டும். ஹாஃப் இயர்லி பரீட்சைக்கு இன்னும் ஒரு மாசம் கூட இல்ல. இன்னைக்கி என்ன கிழமை? புதன்.. அடுத்த வியாழக்கிழமை ஸ்கூலுக்கு போயிரணும், என்ன?’

அவன் பேசிக்கொண்டே போக பத்மா அதிர்ச்சியுடன் அவனையே பார்த்தாள். ‘என்ன சொல்றார் இவர்? பெரிய மனுஷியாய்ட்டாங்கறேன். என்னமோ அவளுக்கு சாதாரண ஜுரம் மாதிரி ஒரு வாரம் லீவு போட்டுட்டு ஸ்கூலுக்கு போணுங்கறார்? சடங்கு வைக்கணும், தாய் மாமன் சீர் கொண்டுவரணும், சாதி சனங்களையெல்லாம் கூப்பிடணும். அதுவும் என் வீட்டுல மீனாதான் மூத்த பொண்ணு. ‘மத்ததெல்லாம் ஆம்பிள்ளையா போயிருச்சிடி. உம்பொண்ணு பெரிய மனுஷியாயிட்டா ஒன்னுக்கு மூனு தாய் மாமன்க இருக்கானுங்க. சீர் செஞ்சி செமத்திரமாட்டான்க? குடுத்து வச்சவடி உம் பொண்ணுன்னு போனமாசம் வந்தப்பவே அம்மா சொல்லிட்டு போனாங்களே.. இந்த மனுஷன் என்னடான்னா அடுத்த வியாழக்கிழமையே ஸ்கூலுக்கு போணுமாமே.. எங்க போய் சொல்றது இந்த கூத்த?’

ஆனால் காலை நேரத்தில் அவனோட விவாதம் செய்தால் தான் நினைத்திருந்த எல்லா காரியமும் கெட்டுப்போகும் என்று நினைத்து வாயை மூடிக்கொண்டு அடுக்களைக்குள் நுழைந்து அவனுக்கும், வீனாகுட்டிக்கும் காப்பி, பலகாரம் செய்வதில் முனைந்தாள்.

மதனிடம் அவனுடைய காப்பி கோப்பையைக் கொடுத்துவிட்டு, குளியலறைக்கு வெளியே தான் சற்று முன் வைத்த காப்பியை கீழே ஊற்றிவிட்டு கோப்பையைக் கழுவி அடுக்களை அலமாரியில் கவிழ்த்தினாள். இன்னமும் உறங்கிக்கொண்டிருந்த வீனாவை எழுப்பி முன் அறையில் பேப்பர் படித்துக்கொண்டிருந்த மதனிடம் ஒப்படைத்தாள். ‘இன்னைக்கி மட்டும் இவளை நீங்க ஸ்கூலுக்கு ரெடி பண்ணுங்க. நான் மீனாவ பாக்கணும். அப்படியே நீங்க ஆஃபீசுக்கு போம்போது இவளை ஸ்கூல்ல போய் விட்டுருங்க. அதே மாதிரி திரும்பி நீங்கதான் கூட்டிக்கிட்டு வரணும்.’ பேசி முடித்து பரபரப்புடன் ஓடும் பத்மாவைப் பார்த்தான். அவனையுமறியாமல் அவன் உதடுகளில் புன்னகை பூத்தது. ‘பொண்ணு பெரிய மனுஷியாய்ட்டானதும் அம்மாவ கைல பிடிக்க முடியலையே.’

தூக்க கலக்கத்துடன் தன்னைப் பார்த்த வீனாவைப் பார்த்தான். ‘ஏய்.. தூங்கனது போறும். போய் பல்லைத் தேய்ச்சிட்டு நில்லு. அப்பா வந்து தண்ணியடிச்சி தரேன். குளிச்சிட்டு அரை மணியில ரெடியாயிரணும். அக்காக்கு உடம்பு சரியில்லை. நீ மட்டும்தான் இன்னைக்கி ஸ்கூலுக்கு. அப்பா ஸ்கூல்ல விட்டுட்டு போறேன். சாயந்திரம் ஆஃபீஸ் பியூன் மாரி அங்கிள் வருவாரு. அவர்கூட வந்துரு என்ன?’

வீனா, ‘மீனா போலனா.. நானும் போல, போப்பா.’ என்று சினுங்கினாள்.

மதன் சட்டென்று வந்த கோபத்துடன் ‘ஏய் போட்டன்னா?’ என்று கை ஓங்கினான். ‘வயசு ஒம்பதாச்சி. இன்னும் என்ன குழந்தையாட்டம்? ஓடு.. ஒரு அடி வைக்கறதுக்குள்ள ஓடிப்போய் பல்ல தேய்ச்சிட்டு நிக்கணும். போ.’

பிடிவாதத்துடன் நின்ற மகளை தோளில் கைவைத்து தள்ளிக்கொண்டே போய் தாழ்வாரத்தில் அடிபைப்புக்கு அருகிலிருந்த சுவர் அலமாரியிலிருந்து பேஸ்ட், பிரஷ்ஷை எடுத்து அவள் கையில் திணித்தான். ‘அப்பா அஞ்சு நிமிஷத்துல ஷேவ் பண்ணிட்டு வருவேன். அதுக்குள்ள பல்லு தேய்ச்சிட்டு காப்பிய குடிச்சிட்டு ரெடியா நிக்கணும். சரியா? இல்லன்னா ஒத தான். சொல்லிட்டேன். எனக்கு இன்னைக்கி ஆஃபீசுக்கு சீக்கிரம் போணும். உன்னால லேட்டாச்சி? கொன்னுருவேன். தேய் சீக்கிரம்.’

மதன் பேசிக்கொண்டே அவனுடைய அறைக்கு செல்ல அவன் மறைந்ததும் வீனா அடுக்களைக்குள் எட்டிப் பார்த்தாள். பத்மாவைக் காணாமல் குழப்பத்துடன் பரபரவென்று பல்லைத் தேய்த்து குவளையில் இருந்த தண்ணீரை எடுத்து கொப்புளித்தாள். கையில் சவர பிரஷ்ஷ¤டன் வெளியே வந்த மதன், ‘குட்.. போய் காப்பிய குடி. அப்பா ஷேவ் பண்ணிட்டு தண்ணிய அடிக்கறேன்.’ என்றவாறு தாழ்வாரத்து சுவரில் அடித்திருந்த ஆணியில் ஒரு சிறு முகம் பார்க்கும் கண்ணாடியை மாட்டி சவரம் செய்ய ஆரம்பித்தான்.

வீனா அடுக்களைக்குள் நுழைந்து பத்மாவைக் காணாமல் தங்கள் படுக்கையறையை எட்டி பார்த்தாள். கண்களிரண்டும் வியப்பால் விரிய புது பட்டுப்பாவாடை, சட்டையுடன் நின்ற மீனாவைப் பார்த்தாள்.


தொடரும்

7 comments:

டிபிஆர்.ஜோசப் said...

Thanks puddhuvai,

The story should end in another three or four episodes.

My next Novel might run in to several days.

It will start immediately after this.

Watch out!?

G.Ragavan said...

ஜோசப் சார். புதுவை சொன்னதை நானும் ஒத்துக்குறேன். இந்தக் கதையும் ஒரு நாவல்தான். எந்தச் சந்தேகமும் இல்லை.

பளிச்சென்று எழுதியிருக்கின்றீர்கள் சார். இத்தனை இயல்பான எழுத்து. அடடா! இப்படியெழுத எனக்கும் சொல்லித் தரக்கூடாதா? இதெல்லாம் அனுபவத்தில் வருவது என்றால் நான் காத்திருக்க வேண்டியதுதான்.

டிபிஆர்.ஜோசப் said...

என்ன ராகவன் லஞ்ச் டைமா? இங்கேயும்தான். அதான் உங்க பின்னூட்டம் google talkல பாப் ஆனதும் பதில் எழுத முடியுது.

என்னுடைய எழுத்து இயல்பா மட்டும்தான் இருக்குது ராகவன். ஆனா உங்க எழுத்துல படிக்கறவங்கள உங்க எழுத்தோட ஒன்றிக்க வைக்கிறதே. முக்கியமா திருச்செந்தூர் முருகனே வந்து பேசறாப்பல ஒரு பதிவு போட்டீங்களே.. எவ்வளவு அழகா இருந்தது? நீங்க நாவல் எழுதுனா நல்ல வரவேற்பு இருக்கும் ராகவன். பக்தி பதிவுகளுக்கிடையில ஒரு குட்டி நாவலும் எழுதுங்களேன்.

G.Ragavan said...

ஆமாம் ஜோசப் சார். லஞ்ச் டைம்தான். :-)

// நீங்க நாவல் எழுதுனா நல்ல வரவேற்பு இருக்கும் ராகவன். பக்தி பதிவுகளுக்கிடையில ஒரு குட்டி நாவலும் எழுதுங்களேன். //

நாவல்கள் எழுதக் கருக்கள் நிறைய இருக்கு சார். நேரமும் உழைப்பும் அதிகம் தேவைப்படுகின்றது. என்னுடைய கனவு நாவல் ஒன்று இருக்கின்றது. அது மிகப் பெரியது. அதற்கும் நேரம் தேவைப்படுகின்றது. அந்த நாவலை முடிப்பது என்பதே தமிழுக்கு நான் செய்யும் கைமாறு என்று கருதுகின்றேன்.

டிபிஆர்.ஜோசப் said...

சீக்கிரம், சீக்கிரமா எழுதுங்க ராகவன்.

ஆவலோடு காத்திருக்கிறேன்.

துளசி கோபால் said...

என்னங்க நாவல் கீவல்னு பேச்சு நடந்துக்கிட்டு இருக்கு.

ரெண்டுபேரும் சீக்கிரம் எழுதுங்க. படிக்க நான் ரெடி:-)))

G.Ragavan said...

// சீக்கிரம், சீக்கிரமா எழுதுங்க ராகவன்.

ஆவலோடு காத்திருக்கிறேன். //
முடிந்த வரையில் முயற்சிக்கிறேன் ஜோசப் சார்.

// என்னங்க நாவல் கீவல்னு பேச்சு நடந்துக்கிட்டு இருக்கு.

ரெண்டுபேரும் சீக்கிரம் எழுதுங்க. படிக்க நான் ரெடி:-))) //

டீச்சர். அதுக்கு நாளாகும் டீச்சர். ரொம்ப எழுதனும். :-) ஆனா கண்டிப்பா எழுதுவேன்.