வீனா அடுக்களைக்குள் நுழைந்து பத்மாவைக் காணாமல் தங்கள் படுக்கையறையை எட்டி பார்த்தாள். கண்களிரண்டும் வியப்பால் விரிய புது பட்டுப்பாவாடை, சட்டையுடன் நின்ற மீனாவைப் பார்த்தாள்.
‘ஏய் அக்கா. என்னாச்சி? புது சட்டை, புது பாவாடை! அம்மா, என்ன இன்னைக்கி? அக்காவோட பிறந்தநாளா? இல்லையே, பிப்ரவரிலதான வரும்?’ என்றவாறே மீனாவை நெருங்கி அவளுடைய முகத்தைத் தன் பக்கம் திருப்பினாள். ‘ஏய் என்னக்கா அம்மாவோட மஞ்சள எடுத்து நீ பூசிக்கிட்டிருக்கே?’
பத்மா அவளுடைய கைகளைத் தட்டிவிட்டாள். ‘ஏய் வீனாக்குட்டி. நீ இப்ப அக்காவை தொடக்கூடாது. தீட்டாயிரும். நீ போய் குளிச்சிட்டு ஸ்கூலுக்கு போற வழிய பாரு. அக்கா ஒரு ரெண்டு வாரத்துக்கு ஸ்கூலுக்கு வரமாட்டா.. நீ அப்பா கூடத்தான் போணும். லேட்டாக்குனே அப்புறம் அப்பாகிட்டருந்து ஒதத்தான் வாங்குவ.. வா.. காப்பிய தரேன். குடிச்சிட்டு போய் குளிச்சிட்டு ரெடியாவு. ஓடு.’
வீனா தன் தாயைப் பார்த்தாள். 'தீட்டா? அப்படீன்னா?'
பத்மா முறைத்தாள். 'ஊம்? உன் தலை. சும்மா கூடக்கூட கேள்வி கேட்டிட்டு இருக்காம காப்பிய குடிச்சிட்டு போய் குளிக்கற வழியப்பாரு. வாயாடி.'
சவரம் செய்துக்கொண்டிருந்த மதனுக்கு பத்மாவின் குரல் கேட்டும் ஒன்றும் மறுத்து பேசாமல் சவரம் செய்து முடித்து அடிபைப்பில் தனக்கும் வீனாவுக்கும் சேர்த்து இரண்டு வாளிகளில் நீரை நிரப்பி வீனாவின் வாளியை குளியலறையில் கொண்டு வைத்தான். ‘ஏய் வீனாகுட்டி வா. உன் தண்ணி ரெடி. சீக்கிரம் குளிச்சிட்டு வந்தேன்னாத்தான் தலை காயும். அப்புறம் ஈர தலையோட போய் ராத்திரியில இருமாதே.’ அடுக்களையில் இருந்து வேண்டா வெறுப்புடன் வெளியே வந்த வீனாவிடம் தன் கையிலிருந்த டவலை திணித்தான். ‘போ.. என்ன மசமசன்னு நிக்கறே.’ வீனா குளியலறைக்குள் சென்று கதவை சாத்திக்கொள்ள மதன் அடுக்களைக்குள் எட்டிப்பார்த்தான். ‘பத்மா, பலகாரத்த ரெடி பண்ணி முன் ரூம்ல வை. டைம் ஆச்சி.’
பிறகு பிள்ளைகளுடைய படுக்கையறைக்குள் நுழைந்து அறையில் ஒரு மூலையில் தரையில் குந்த வைத்து அமர்ந்திருந்த மகளை அணுகினான். பாசத்துடன் அவளுடைய தலையை வருடினான். நிமிர்ந்து பார்த்த மீனாவின் மஞ்சள் அப்பிய முகத்தைப் பார்த்ததும் சுர்ரென்று எழுந்த வந்த கோபத்தை அடக்கிக் கொண்டு அவளைத் தொட்டு தூக்கினான். ‘எதுக்கு மூலைல உக்காந்திருக்கே? என்றான்.
மீனா கலவரத்துடன் அவனைப் பார்த்தாள்; ‘அம்மாத்தான்பா சொன்னாங்க. கட்டில்ல, சேர்லல்லாம் நான் உக்காரக்கூடாதாம். என்னமோ தீட்டாம்ப்பா.’
மதன் தலையிலடித்துக்கொண்டான். மீனாவை பிடித்து கட்டிலில் அமர்த்தினான். ‘இங்க பார் மீனா. தீட்டு, கீட்டுன்னு அம்மா சொல்றதயெல்லாம் மைன்ட் பண்ணாத. இது ஒன்னும் பெரிய காரியமில்ல. You have attained puberty, that is all. அம்மா பேச்சை கேட்டுக்கிட்டு இனிமே இந்த மாதிரி முட்டாள்தனமான காரியத்தயெல்லாம் நீ செய்யக்கூடாது. புரியுதா? திஸ் ஈஸ் ஒன்லி எ த்ரீடே அஃபேர். சரி, இது முதல் தடவைங்கறதுனால யூ நீட் சம் ஹெல்த்தி ஃபுட். அப்புறம் ஒரு அஞ்சாறு நாளைக்கு கம்ப்ளீட் ரெஸ்ட். அதுக்குன்னு சும்மா உக்காந்திருக்கணும்னு இல்ல. அப்பா உன் புக்ஸ்லருந்து ப்ரிப்பேர் பண்ண க்வெஸ்ச்சின் பேப்பர்ச உன் ஸ்டடி டேபிள்ல வச்சிருக்கேன். அப்புறமா எடுத்து சால்வ் பண்ணி வைக்கணும், புரிஞ்சிதா?’ என்றான்.
மீனா, ‘சரிப்பா.’ என்றாள்.
மதன் பேசியதை அடுக்களைக்குள் இருந்தவாறு கேட்டுக்கொண்டிருந்த பத்மா வாயைத் திறந்தால் வீண் பிரச்சினை என்ற நினைப்புடன் தான் செய்து முடித்த பகல் உணவை வீனாவின் உணவு பாத்திரத்தில் வைத்து மூடி, குடிநீரை ப்ளாஸ்டிக் பேக்கில் ஊற்றினாள். பிறகு இரண்டு தட்டில் சுடச்சுட இட்லியும், மிளகு பொடியும், சட்னியும் வைத்து முன் அறைக்கு கொண்டுசென்று மேசையில் வைத்தாள். காலை நேரங்களில் முன் அறையில் வைத்து உணவருந்துவதுதான் மதனுடைய வழக்கம். அலுவலகத்துக்கு செல்லும் உடையுடன் பலகாரத்தை சாப்பிட்டுவிட்டு போவதற்கு அதுதான் வசதி என்று நினைப்பான். பிள்ளைகளும் பள்ளி சீருடையுடன்தான் மதனுடன் சேர்ந்து பலகாரம் உண்பார்கள்.
மதனும் வீனாவும் புறப்பட்டு செல்லும் வரையில் முன் அறையிலேயே அவர்களுடன் இருந்தாள் பத்மா. மதன் புறப்படும் நேரத்தில் தன் அறையிலிருந்த ‘உதிரி’ டப்பாவை எடுத்து வந்து பத்மாவிடம் நீட்டினான். ‘இதுலருக்கற பணத்துலருந்து மீனாவுக்கு இந்த ஒரு வாரத்துக்கு வேண்டிய எக்ஸ்ட்ரா சாப்பாட்டு செலவு பண்ணு. இன்னும் வேணும்னா காலியானதும் கேளு. புரியுதா? அக்கம்பக்கத்துல எல்லாம் போய் சொல்லி அவள ஒரு எக்ஸிபிஷனாக்கிராத. புரிஞ்சிதா? நான் ஆஃபீஸ்லருந்து வந்ததும் மேற்கொண்டு பேசிக்கலாம்.’
பத்மா அவன் கூறியதற்கெல்லாம், ‘சரிங்க, சரிங்க.’ என்று தலையாட்டினாள்.
‘சொல்லும்போது மட்டும் தலைய நல்லா ஆட்டு. அப்புறம் உன் இஷ்டத்துக்கு செய்யி..’ என்றவனை பார்க்காமல் தலையை குனிந்துக் கொண்டாள்.
மதனும், வீனாவும் படியிறங்கி சென்ற பிறகுதான் நிம்மதியடைந்தாள் பத்மா. ‘அப்பாடா.. போயாச்சி.. இப்ப என்ன பண்றது? கீழ யார்கிட்டயும் சொல்லக்கூடாதுன்னு சொல்லிட்டாரே.. வீட்டுக்கு ஃபோன் பண்ணனும்னா கீழ் வீட்லதான இருக்கு? வீட்டுக்கு ஒரு ஃபோனை எடுங்கன்னு எத்தனை மாரடிச்சாச்சி, கேட்டாத்தானே? நம்ம வீட்ல வாடகைக்கு இருக்கறவங்க வீட்லல்லாம் ஃபோன் இருக்கு. அங்க போயி அசடு வழிஞ்சிக்கிட்டு எப்படி கேக்கறது? அதுவும் ட்ரங்க் கால் போட்டுட்டு அது கிடைக்கறவரைக்கும் அங்கேயே உக்காந்தா அவ்வளவுதான். ‘என்னா வீட்டுக்காரம்மா? இங்க வந்து குந்திக்கினு உங்கூட்டுக்கு ஃபோன் பண்றே . என்னா வீட்ல ஏதாச்சும் விசேஷமா’ன்னு கேட்டா என்னத்த சொல்றது? என்று நினைத்தாள்.
சே.. அக்கம்பக்கத்துலருக்கற ஆளுங்கக் கிட்டக்கூட இப்ப சொல்லலைன்னா நாளைக்கி அம்மா வந்து நிப்பாங்களே..அப்ப தெரியாதா? என்ன நினைப்பாங்க நம்மளப் பத்தி? சரி கீழ் வீட்ல மட்டும் சொல்லிரலாம். அங்க சொன்னா போறாதா? அடுத்த நிமிஷமே சுத்து வட்டத்துல எல்லாருக்கும் தன்னால தெரிஞ்சிரப்போவுது.’
அவளுடைய தந்தை அவளுடைய வீட்டுக்கு வரும் சமயங்களில் அவளுடைய வீட்டுக்கருகில் இருந்த தந்தியலுவலகத்திற்குச் சென்று ஊருக்கு பேசிவிட்டு வருவதைக் கண்டிருக்கிறாள். ‘நம்ம வீட்டுல மாதிரி ட்ரங்க் புக் பண்ணிட்டு காத்திருக்க வேண்டாம்மா. அங்க என்னமோ எஸ்.டி.டின்னு புதுசா ஒரு வசதியிருக்காமே அதுல சட்டுன்னு உடனே கிடைச்சிருது. குரலும் தெளிவா சுத்தமா இருக்குது. நீ கூட நம்ம கடைக்கி பேசணும்னா அங்க போயி பேசேன். எதுக்கு கடுதாசியெல்லாம் போட்டுகிட்டு..’ என்பார்.
அதை நினைத்துப் பார்த்தாள் பத்மா. ‘பேசாம பக்கத்துலருக்கற தந்தியாபீஸ்ல போயி ஃபோன் பண்லாமா. அதுவரைக்கும் இவ தனியா இருப்பாளே..
‘அம்மா.. இங்க வாங்களேன்.’ என்ற மீனாவின் குரல் கேட்கவே உள்ளே ஒடினாள் பத்மா.
‘என்னடி.. என்ன.. எதுக்கு கூப்டே.. பயந்தே போய்ட்டேன்?’
பயத்துடன் தன்னையே பார்த்த மீனாவை கட்டிலிலிருந்து இறக்கி மீண்டும் மூலையில் உட்கார வைத்தாள்.
மீனா சினுங்கினாள். ‘என்னம்மா நீங்க? அப்பா எங்க வேணாலும் உக்காரலாம்னாரே.. நீங்க முன் ரூம்லருக்கற அப்பாவோட சேர கொண்டாங்க. எவ்வளவு நேரம் இப்பிடியே குந்த வச்சி உக்கார்றது? கால் வலிக்குதும்மா.. இடுப்பும் பயங்கரமா வலிக்குது..’
பத்மா தன் மகளையே பார்த்தாள். ‘ஏய் உங்கப்பாவுக்கு வேற வேலை இல்லடி. எதுக்கெடுத்தாலும் குதர்க்கமா பேசறத விட்டா வேற என்ன தெரியும் அவருக்கு? எங்க ஊர்லல்லாம் வீட்டுக்கு வெளிய குருத்து கட்டி உக்கார வச்சிருவாங்க. சடங்கு அன்னைக்கித்தான் வீட்டுக்குள்ளாறயே வரமுடியும். சரி, தாழ்வாரத்துல ஒரே தண்ணியா கிடக்கேன்னுதான் இங்க உக்கார வச்சிருக்கேன். பேசாம அப்படியே இரு. உங்க அம்மே வரட்டும். அப்புறம்தான் உனக்கு என்ன பண்ணனும்னு எனக்கே தெரியும். நீ பெட்ரூம் கதவ சாத்திக்கிட்டு உள்ளவே இரு. நான் பக்கத்துலருக்கற தந்தி ஆபீசுக்கு போய் தாத்தா கடைக்கு ஃபோன் பண்ணி சொல்லிட்டு ஒரே ஓட்டத்துல வந்திர்றேன். என்ன சரியா? வேலைக்காரி வந்தா அவ கிட்ட ஒன்னும் சொல்லாத. உடம்புக்கு முடியலன்னு மட்டும் சொல்லு. போய்ட்டு அம்மா வந்ததும் வான்னு சொல்லு, என்ன?’
மீனா சரிம்மா என்று தலையாட்டினாள். ‘அம்மா, நீங்க போம்போது அப்பா, டேபிள்ல வச்சிருக்கற கொஸ்ச்சின் பேப்பரையும் என் சைன்ஸ் புத்தகத்தையும் கொண்டு குடுத்துட்டு போங்கம்மா. அப்பா வந்து கொஸ்ச்சின் கேக்கும்போது சரியா சொல்லலைன்னா தலையில குட்டுவாங்க..’
பத்மா மகளை பாசத்துடன் பார்த்து அவளுடைய தலைமுடியை வருடியவாறே சிரித்தாள். ‘போடி இவளே. இந்த நேரத்துலல்லாம் ஒன்னும் படிக்க வேணாம். உங்கப்பா வந்தா நா சொல்லிக்கறேன். நான் ரேடியோவ போட்டுட்டு போறேன். பாட்டு போடுவான். கேட்டுக்கிட்டு இரு.. அதுக்கு முன்னால பலகாரம் சாப்டு.. ரெண்டு முட்டையும் அவிச்சி வச்சிருக்கேன், மிச்சம் வைக்காம சாப்டு. நான் போய் தாத்தா கடைக்கு ஃபோன் பண்ணிட்டு அப்டியே மார்க்கெட்டுக்கு போய்ட்டு வரேன். பயப்படாம இருக்கணும். என்ன?’
‘சரிம்மா.’ என்ற மீனா, அப்பாக்கிட்ட நா சொல்லிக்கறேங்கற அளவுக்கு அம்மாவுக்கு எப்படி தைரியம் வந்தது என்று நினைத்தாள்.
பத்மா இறங்கி சென்றதும் எழுந்து படுக்கையறையிலிருந்த அலமாரி கதவில் பொருத்தியிருந்த ஆளுயரக் கண்ணாடியில் தன்னைப் பார்த்தாள். முகத்தில் பூசியிருந்த மஞ்சள் சற்று அதிகமாகவே தெரிந்தது. சே! எல்லாம் இந்த அம்மாவால. என்ன அசிங்கமா இருக்கு? எதுக்குத்தான் இந்த அம்மா இத பூசிக்கிறாங்களோ? அப்பா அடிக்கடி சொல்றாமாதிரி அம்மா சரியான பட்டிக்காடுதான்.
மீனா பத்மாவைப் போல் நல்ல சிவப்பு. அதே வட்ட முகம். ‘அசப்புல அப்படியே உங்க அம்மாவ பாத்தா மாதிரியே இருக்குடி’ என்று அவளுடைய தோழிகள் பலரும் சொன்னதுண்டு. அவள் மதனைப் போலல்லாமல் எல்லோரிடமும் நன்றாக பழகுவாள். வாயாடி இல்லையென்றாலும் சாமர்த்தியமாக பேசுவதில் பலே கெட்டிக்காரி. பள்ளியில் பேச்சுப் போட்டி, கவிதைப் போட்டின்னு ஒன்று விடாமல் பங்கு கொண்டு கலக்குவாள். குறும்பாய் பேசுவதிலும் தேர்ந்தவள் என்பதால் பள்ளியில் தோழிகளுக்கு பஞ்சமே இல்லை.
தொடரும்..
பி.கு.: நான் அலுவல் விஷயமாக வெளியூர் செல்லவேண்டியிருப்பதால் அடுத்த பதிவு புதன் அல்லது வியாழன்தான். காத்திருக்கவும் :-))
4 comments:
சந்தோஷமாப் போயிட்டு வாங்க. கிறிஸ்மஸ் லீவும் எடுத்துக்குங்க.
நாங்க காத்திருப்போம். வேற எங்கெ போயிரப் போறோம்?
ஊருலே இருந்து வர்ற மகளையும் கேட்டதாகச் சொல்லுங்க.
நல்லபடியா ஊருக்குப் போயிட்டு வாங்க ஜோசப் சார்.
மத்தபடி கதையைப் பத்திச் சொல்லவே வேண்டாம். நல்லா சர்ர்ர்ர்ர்ர்ருன்னு டாப் கியருல போகுது.
லீவ் சாங்ஷன் பண்ணதுக்கு நன்றீங்க துளசி.
வந்துட்டேன். அடுத்த பதிவ போட்டுடறேன்.
நன்றி ராகவன்.
இப்பத்தான் வந்தேன். அடுத்த பதிவ போட்டுடறேன்.
டாப் கீர்ல போயி ஆக்ஸிடென்ட் ஆகாம இருந்தா சரிதான்.:0)
Post a Comment