அலுவலகத்திலிருந்து கொண்டு வந்திருந்த ஆவணங்களின் நகல்களை உணவு மேசையில் விரித்து வைத்துவிட்டு தனக்கென கொண்டு வந்திருந்த சூடான காப்பி கோப்பையுடன் தன் பின்னால் நின்றுக்கொண்டிருந்த தன் மனைவி மஞ்சுவைப் பார்த்தான் ரவி பிரபாகர்.
‘என்ன ரவி வந்தவுடனேயே ஆரம்பிச்சிட்டீங்க போலருக்கு?’ புன்னகயுடன் தன் கையிலிருந்த காப்பி கோப்பைகளுள் ஒன்றை அவனிடம் கொடுத்துவிட்டு அவனெதிரில் அமர்ந்தாள் மஞ்சு.
‘ஆமா மஞ்சு இப்பவே ஸ்டார்ட் பண்ணாதான் அடுத்த வீட்டு வக்கீல் அங்கிள் ராத்திரி வர்றதுக்குள்ள இதையெல்லாம் டேட் வாரியா சார்ட் பண்ணி முடிக்க முடியும். எங்க ஹெட் ஆஃபீஸ்லருக்கற ஆளுங்க சார்ஜஸ்ச ஃப்ரேம் பண்றதுல கில்லாடிங்க. ஏன் நானே எத்தனெ இன்க்வயரிஸ் நடத்தியிருக்கேன்? அதனால அவங்க சார்ஜ் ஷீட்ல எந்த ஆர்டர்ல சார்ஜஸ வரிசைப் படுத்தியிருக்காங்களோ அதே ஆர்டர்ல நம்ம எக்சிபிட்சையும் ப்ரெசண்ட் பண்ணணும்.. ஒவ்வொரு சார்ஜையும் கவுண்டர் (Counter) பண்றதுக்கு என்னெல்லாம் எவிடென்ஸ சப்மிட் பண்ணணும்னு இப்பவே லிஸ்ட் பண்ணி அதே ஆர்டர்ல நம்மகிட்டருக்கற எவிடென்ச அரேஞ்ச் பண்ணணும்.. ஒனக்கு இப்ப ஏதாச்சும் அர்ஜெண்டா வேலையிருக்கா? இல்லன்னா நீயும் ஒக்காரு.. ஒரு ரெண்டு மணி நேரத்துல அரேஞ்ச் பண்ணி முடிச்சிட்டு என் லேப் டாப்ல ப்ரீஃபா ஒரு சப்மிஷன் ரெடி பண்ணி வச்சிரலாம்னு நினைக்கேன். என்ன சொல்றே?’
மஞ்சு அவன் குரலில் இருந்த பிசினஸ் லைக் பாணியை வெகுவாக ரசித்தாள். இந்த ரவியைத்தான் அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்த அழகான ஆண்மைத்தனமான உருவத்திலும் முகத்திலும் மட்டும் மயங்கியா இவனை பார்த்த மாத்திரத்திலேயே கணவனாக ஏற்றுக்கொள்ள சம்மதித்தாள்? இந்த இரண்டுக்கும் பின்னால் அவளைக் கவர்ந்திழுத்தது அந்த மூளைதானே.. பார்த்த மாத்திரத்திலேயே தன்னைக் கவர்ந்திழுத்த அந்த அறிவு செறிந்த கூர்மையான பார்வை, முதிர்ச்சி மிகுந்த அவனுடைய பேச்சு.. அதற்கு பின்னால் லேசாக தொனித்த ஆணவம், தனக்கு எல்லாம் தெரியும் என்று என்பதை உணர்த்திய அந்த சற்றே அதிகப்படியான தன்னம்பிக்கை.. அதுவும் ஒருவகையில் அவனுடைய ஆண்மைத்தனத்தைக் கூட்டியதாகத்தான் நினைத்தாள்.. அதாலும்தான் அவள் ஈர்க்கப்பட்டாள்.. ஆனால் அதுவே அவனுக்கு சறுக்கு பாறையாக அமைந்துவிடும் என்று அவள் நினைத்தாளா என்ன?
‘ஏய் என்ன யோசிச்சிக்கிட்டு ஒக்காந்திருக்கே.. ஆர் யூ ஃப்ரீ ர் நாட்?’
மஞ்சு திடுக்கிட்டு, ‘எ...என்ன சொன்னீங்க?’ என்றாள் ஒன்றும் விளங்காமல்..
ரவி மெலிதாக புன்னகைத்தான். ‘என்ன ஏதாச்சும் ஃப்ளாஷ் பேக்கா.. நல்லதா இருக்காதே.. நான் ஒனக்கு சந்தோஷத்த குடுத்த நாட்கள் ஒன்னோ ரெண்டோ..’
மஞ்சு அவசர, அவசரமாக தலையை அசைத்தாள்.. ‘சேச்சே.. என்ன ரவி நீங்க? சரி நீங்க என்ன கேட்டீங்க? நா ஃப்ரீயான்னா? ஆமா இப்ப ஃப்ரீதான்.. சொல்லுங்க என்ன பண்ணணும்?’
ரவி தன்னை நோக்கி அவள் நீட்டிய இரு கரங்களையும் பற்றினான்.. ‘அதிருக்கட்டும் மஞ்சு.. இப்ப சொல்லு.. நீ திரும்பி வரணும்னு எடுத்த முடிவு ஒனக்கு சந்தோஷத்த குடுத்துருக்கா? Do you think I deserve a woman like you.. ஹ¥ம்?’
மஞ்சுவின் கண்கள் அவளையும் அறியாமல் கலங்கிப்போனது. தன் கரங்களைப் பற்றியிருந்த ரவியின் கரங்களின் மேல் கவிந்துக்கொண்டாள்..
அடுத்த சில நிமிடங்கள் அந்த அறையிலிருந்த கனத்த மவுனம் அவர்கள் இருவரையுமே பாரமாய் அழுத்தியது.
சிறிது நேரத்தில் சுதாரித்துக் கொண்டு தலை நிமிர்ந்த மஞ்சு, ‘தயவு செஞ்சி இந்த மாதிரி இனி பேசாதீங்க ரவி. நான் பிரிஞ்சி போகணும்னு மனசார நினைச்சதே இல்லை. அன்னைக்கி இருந்த மன நிலையில அப்படி செய்யணும்னு தோனிச்சி. அவ்வளவுதான்.’ என்றாள். ‘இப்ப அதையெல்லாம் பேசி நம்ம சந்தோஷத்த கெடுத்துக்க வேணாம் ரவி.. நமக்கு முன்னாலருக்கற இந்த பிரச்சினைய மட்டும் பார்ப்போம். ராத்திரி வக்கீல் மாமா வர்றதுக்குள்ள நாம பிரீஃபா ஒரு ரிப்போர்ட் தயார் பண்ணணும்னு நீங்க தானே சொன்னீங்க? அதுக்கு நான் என்ன செய்யணும்.. சொல்லுங்க.’
ரவியும் அவள் கூறியதுதான் சரி என்று தீர்மானித்து தன் முன்னாலிருந்த ஆவணங்களில் ஒரு பகுதியை அவளிருந்த திசையில் தள்ளினான். ‘இந்த பேப்பர்ஸ நீ டேட் வாரியா சார்ட் பண்ணிக் குடு.. நா இத படிச்சி குறிப்பெடுக்கிறேன்.’
அடுத்த சில மணி நேரம் இருவரும் தங்கள் அலுவலில் மூழ்கிப்போயினர்..
***
மைதிலி சென்று வெகு நேரமாகியும் தான் அமர்ந்திருந்த இடத்திலேயே இருந்த சீனிவாசன் சோபாவின் விளிம்பிற்கு நகர்ந்து மெள்ள எழுந்து நிற்க முயன்று தோற்றுப் போய் மீண்டும் சோபாவில் விழ சமயலறையிலிருந்து அவனையே கவலையுடன் கவனித்துக்கொண்டிருந்த சிவகாமி மாமி ஓடிவந்தாள்.
‘டேய்.. டேய்.. என்ன பண்றே.. என்னெ கூப்ட்டா என்ன?’
சீனி எரிச்சலுடன் அவளுடைய கரங்களைத் தட்டிவிட்டான். ‘என்னெ விட்ருங்கோ மாமி.. எதுக்கு என்னெ சின்னை பிள்ளை மாதிரி ட்ரீட் பண்றீங்க? நீங்க போய் ஒங்க வேலைய பாருங்க. நா மேனேஜ் பண்ணிக்கறேன்.’
மாமி விடவில்லை. ‘டேய்.. நா ஒன்னும் அந்த பொண்ணு இல்லை.. நீ சொன்னதும் கோச்சிக்கறதுக்கு.. பேசாம வாயடிக்காம வா.. கொண்டு போய் ஒங்கப்பா ரூம்ல விடறேன்.. நீ இன்னும் ஒரு வாரத்துக்காச்சியும் மாடிக்கு போமுடியாது. சொல்றத கேளு.. வா..’ என்றவாறு அவனை வற்புறுத்தி அவனுடைய சங்கோஜத்தை பொருட்படுத்தாமல் அப்படியே கைத்தாங்கலாக மாதவனின் அறைக்குள் கொண்டு சென்று படுக்கையில் அமர்த்திவிட்டு, ‘மோர் சாதம் கலக்கி கொண்டாரேன்.. குடிச்சிட்டு படு..’ என்றாள்.
‘அதெல்லாம் ஒன்னும் வேணாம்.. பசியில்லை.. ராத்திரி பாக்கலாம்.’
மாமி அவன் கூறியதைப் பொருட்படுத்தாமல் அடுத்த சில நொடிகளிலேயே மோர் சாதத்துடன் வந்து நிற்க சீனி படுக்கையில் படுத்து கண்களை மூடிக்கொண்டு உறங்குவதுபோல் பாவனை செய்தான்.
‘இங்க பார் சீனி.. நீ இத்துனூண்டு இருந்தப்பலருந்து எனக்கு தெரியும்.. நீ எந்த நேரத்துல என்ன பண்ணுவே.. என்ன பேசுவேன்னு ஒங்கம்மாளவிட நேக்கு நன்னா தெரியும். மரியாதையா நீயா எழுந்து இத குடிச்சிட்டா.. நாம் பாட்டுக்கு போய் என் வேலைய பார்ப்பேன்.. இல்லன்னா இப்பவே ஒங்கம்மாவுக்கு ஃபோன் போட்டு நீ வந்து இவனெ கூட்டிண்டு போடிம்மான்னுருவேன்.. அப்புறம் நீ அந்த மைதிலிய சுத்தமா மறந்துர வேண்டியதுதான்.. சொல்லிட்டேன்..’
சீனிக்கு அவளுடைய வார்த்தைகளிலிருந்த வாஸ்தவம் புரிந்தாலும் எழுந்து அமராமல் கண்களை மட்டும் திறந்து மாமியைப் பார்த்தான். ‘மாமி நா ஒன்னு கேட்டா ஸ்ட்ரெய்டா பதில் சொல்வீங்களா?’
மாமி வியப்புடன் அவனைப் பார்த்தாள். பிறகு புன்னகையுடன், ‘அப்படி கேளு.. என்ன கேக்கப் போறே?’ என்றாள்..
‘என்னால மைதிலிக்கு ஏதாச்சும் நல்ல செய்ய முடியும்னு நீங்க நினைக்கிறீங்களா? உண்மைய சொல்லுங்க.’
மாமியின் முகம் சட்டென்று மாறிப்போனது. ‘எதுக்குடா இப்ப இந்த கேள்விய கேக்கறே? இது அந்த பொண்ணோட பழகுறதுக்கு முன்னாலல்லே தோனியிருக்கணும்?’
சீனி சோகத்துடன் தலையை அசைத்தான். ‘நீங்க சொல்றது சரிதான் மாமி.. எப்போ மைதிலி என்னெவிட அதிகம் படிச்சவள்னு எனக்கு தெரிஞ்சிதோ அப்பவே அவளோட ஃப்ரெண்ட்ஷிப்ப கட் பண்ணிருக்கணும்.. அம்மாவும், வத்சும் இத சொன்னப்பல்லாம் கோபப்பட்டிருக்கேனே தவிர அதுலருந்த உண்மைய நான் புரிஞ்சிக்கவேயில்ல மாமி.. இப்போ எனக்கு தோனுது.. அதுவும் மைதிலியோட அப்பா மைதிலிய எங்களுக்கு விட்டுக் கொடுத்துடேன் ஃபோன்ல கெஞ்சினப்போ.. ஒன்னால எம் பொண்ணுக்கு நல்ல வாழ்க்கைய அமைச்சிக்குடுக்க முடியாது சீனின்னு அந்த அங்கிள் எங்கிட்ட சொன்னப்போ.. அவர் சொன்னது நெஜம்தான் மாமி.. I am a waste.. misfit.. மைதிலிக்கு என்னால நல்லதா எதையுமே செய்ய முடியாது மாமி...’ மேலே தொடர முடியாமல் குரல் நடுங்க.. உதடுகளைக் கடித்து துக்கத்தை விழுங்க அவன் படும் பாட்டை பார்த்துக்கொண்டு நிற்க முடியாமல் சிவகாமி மாமி பொங்கி வந்த அழுகையை அடக்க முயன்று தோற்றுப்போய் அறையை விட்டு வெளியேறி வாசலில் சற்று நேரம் நின்றாள்..
சற்று நேரத்தில் சுதாரித்துக்கொண்டு கண்களை அழுந்த துடைத்துக்கொண்டு கட்டிலிலிருந்து எழுந்து அமர்ந்த சீனிவாசன், ‘மாமி..’ என்றான்.. ‘அம்மாவுக்கு உடனே ஃபோன் செஞ்சி வரச் சொல்லுங்களேன்.. நான் உடனே சென்னைக்கு போயிரலாம்னு பாக்கேன்.’
அறை வாசலில் நின்றிருந்த மாமி அறைக்குள் நுழைந்து அவனை நெருங்கினாள். ‘எதுக்குடா சீனி அவசரப்படறே? மைதிலியோட அப்பா என்ன சொன்னா என்ன, மைதிலிதானே நோக்கு முக்கியம்? அவளாண்ட ஒரு வார்த்த சொல்லிக்காம நீ புறப்பட்டு போறது நல்லாருக்காடா? நீ செய்யறது சரின்னே வச்சிக்கோ.. அவள கூப்ட்டு சொல்லிட்டு போறதுதான மொற? ஒங்கம்மாவ கூப்ட்டு வேணும்னா யோசன கேளு.. ஆனா திடுதிடுப்புன்னு இந்த மாதிரி முடிவு எடுக்காத.. ஒங் கொணம் தெரிஞ்சித்தான் சொல்றேன்.. ஒன்னால அவள மறந்துட்டு இருந்துர முடியாதுன்னு நேக்குத்தாண்டா தெரியும்..’
சீனிவாசன் என்ன பதில் பேசுவதென மவுனமாய் அமர்ந்திருக்க சிவகாமி மாமி அவனை நெருங்க அவனுடைய முடியை பாசத்துடன் கோதிவிட்டாள். ‘டேய் சீனி.. என்ன முடிவெடுக்கணும்னு ஆற அமர யோசிக்கலாம்.. நீ முதல்ல சாப்பிட்டுட்டு கொஞ்ச நேரம் தூங்கு. நா மைதிலிய ஃபோன்ல கூப்ட்ட சாயந்தரமா ஆத்துப் பக்கம் வாடிம்மான்னு சொல்றேன்.. அவ வரட்டும்.. நீங்க ரெண்டு பேருமா ஒக்காந்து பேசி ஒரு முடிவுக்கு வாங்கோ.. இப்ப சாப்டு.. நா குடிக்க ஜலம் கொண்டாரேன்..’
அடுத்த நொடியில் கையில் குளிர்ந்த நீருடன் மாமி திரும்பி வர தன் முன்னே இருந்த மேர் கரைசலைக் குடித்துவிட்டு ஆயாசத்துடன் படுக்கையில் சாய்ந்தான் சீனிவாசன்..
அவனையே சற்று நேரம் பார்த்துக்கொண்டு நின்ற மாமி ஒரு நீண்ட பெருமூச்சுடன் சமையற்கட்டை நோக்கி செல்லும் வழியில் ஹாலில் தொலைப்பேசி ஸ்டாண்டில் இருந்த தொலைப்பேசி குறிப்பேட்டில் இருந்த மைதிலியின் செல் ஃபோனுக்கு டயல் செய்து காத்திருந்தாள்..
தொடரும்..
2 comments:
வாங்க சார் வாங்க. 10 நாள் [5 வருஷமில்லே] இடைவெளிக்குப் பிறகு சூரியன் உதிச்சிருக்கு...சந்தோஷம்
enna sir romba gap vitutinga. I am eagerly waiting for your post
Post a Comment